நல்லதம்பி 1949ஆம் ஆண்டு, NSK பிலிம்ஸ் தயாரித்து வெளியிட்ட திரைப்படம். 1985 ஆம் ஆண்டும் இதே பெயரில் ஒரு திரைப்படம் வெளிவந்திருக்கிறது. இரண்டு கதைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அந்தத் திரைப்படத்தில் நாயகி, நாயகனிடம் பெயர் கேட்கும் போது, அருகில் இருந்த சுவரில் ஒட்டப்பட்டிருந்த 1949 நல்லதம்பி திரைப்படத்தின் சுவரொட்டியைப் பார்த்து, தன் பெயர் நல்லதம்பி என்கிறார். அவ்வை சண்முகம் சாலையைப் பார்த்து அவ்வை சண்முகி எனக் கமல் சொல்வது போல. மற்றபடி எந்தத் தொடர்பும் இரு திரைப்படங்களுக்கும் இல்லை.
கதை, திரைக்கதையை எழுதியவர் அண்ணா. 1936 ஆம் ஆண்டு வெளியான ‘மிஸ்டர் டீட்ஸ் கோஸ் டு டவுன்’ என்கிற திரைப்படத்தைப் பார்த்து, அதைத்தழுவி ஒரு கதை எழுதித் தருமாறு அண்ணாவிடம் கலைவாணர் சொல்ல, அண்ணாவும் எழுதியிருக்கிறார். திரைப்படம் 1949, பிப்ரவரி, 4 இந்தத் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இதுதான் அண்ணாவின் முதல் திரைப்படம். திரைப்படத்தில் வசனம் அறிஞர் அண்ணா எனப் போடுகிறார்கள்.
பாடல்களை உடுமலை நாராயண கவி மற்றும் KP காமாட்சி இருவரும் எழுதியுள்ளார்கள். 1936இல் வெளிவந்த சந்திரமோகனா திரைப்படத்தில் இருந்தே உடுமலை நாராயண கவி பாடல்கள் இயற்றி வந்தாலும், நல்லதம்பி இவருக்குப் பெரும் புகழைத் தந்த திரைப்படம். 2008இல் ஆண்டு, உடுமலை நாராயண கவியின் அஞ்சல் தலையை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.
ஐயா KP காமாட்சி இந்தத் திரைப்படத்தில் பாடல்கள் எழுதியது மட்டுமல்லாமல், இந்திரனாக நடிக்கவும் செய்திருக்கிறார். சி.ஆர்.சுப்பராமன் இசை அமைத்திருக்கிறார். திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி அருகில் உள்ள சிந்தாமணி என்னும் ஊரில் ஒரு தெலுங்கு குடும்பத்தில் பிறந்த இவர் (Chinthamani Ramasamyiyer Subburaman), 28 வயதில் இறந்திருக்கிறார். அதற்குள் ஏறக்குறைய ஐம்பது திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார்.
கிருஷ்ணன்-பஞ்சு இரட்டையர் இயக்கி இருக்கிறார்கள். 1944 இல் பூம்பாவைத் திரைப்படத்தை கிருஷ்ணன்-பஞ்சு இணைந்து இயக்கி இருந்தாலும் இப்படம் அவர்களுக்குப் பெரும் புகழைத் தந்தது.
இந்தத் திரைப்படத்திற்கு எடிட்டராக பீம்சிங் இருந்திருக்கிறார். பிற்காலத்தில் ‘ப’ வரிசைப் படங்களை இயக்கிக் குவித்த இவர், எடிட்டராக இருந்திருக்கிறார் என்பதே எனக்குப் புதிய தகவல்தான்.
கலைவாணர் N S கிருஷ்ணன் T A மதுரம் எனப் போட்டுவிட்டுதான் P பானுமதி எனப் போடுகிறார்கள். அதைப் பார்க்கும் போது பி. யூ. சின்னப்பா, தியாகராஜ பாகவதர் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துக் கொண்டிருந்த பானுமதி, இதற்கெல்லாம் எப்படிச் சம்மதித்தார் என வியப்பாகத்தான் இருந்தது. சினிமாவின் அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்தவர் பானுமதி என்று சொன்னால் மிகையில்லை. 2013இல் சினிமா நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடியபோது பானுமதியைச் சிறப்பிக்கும் விதமாக இந்திய அரசு அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது என்பது கூடுதல் தகவல்.
எஸ். வி. சகஸ்ரநாமம், வி. கே. ராமசாமி, DV நாராயண சாமி, புளி மூட்டை ராமசாமி காக்கா ராதாகிருஷ்ணன், V S ராகவன், M N ராஜம், T K காந்தா, S R ஜானகி போன்றோர் நடித்துள்ளனர்.
கதை மிகவும் எளிமையானதுதான்.
சொப்பனபுரி ஜமீன்தாரின் மகள் புஷ்பா (பானுமதி) கல்லூரி மாணவி. அவரது அப்பாவிற்கு உடல்நலமில்லை என முதலில் தகவல் அவருக்குச் சொல்கிறார்கள். அவர் கல்லூரி ஆண்டு விழா நாடகம் முடிந்து வருவதாகப் பதில் தகவல் சொல்கிறார். நாடகம் (அன்டோனியோ கிளியோபாட்ரா) முடியும்போது தந்தியே வருகிறது, ‘அப்பா சீரியஸ்’ என்று. இவரும் விரைகிறார்.
வந்து பார்த்தால், அப்பா தன் மகள் புஷ்பாவுக்கும் கிராமத்தில் இருக்கும் தனது சகோதரி மகன் நல்லதம்பிக்கும் ஜமீன் உரிமையை உயில் எழுதி வைத்திருக்கிறார். இருவரும் திருமணம் செய்துகொள்ள அவர் விரும்புவதாகவும் கூடவே எழுதுகிறார். ஜமீனிலேயே அவருடன் இருக்கும் உறவினரும் மானேஜருமான பூபதி, “முழுவதையும் புஷ்பாவிற்கு எழுதி வையுங்கள்; யாரோ ஒருவனிடம் சேவகம் செய்ய முடியாது” என்கிறார். ஆனால், தந்தை ஒப்புக்கொள்ளவில்லை. சிறிது நேரத்தில் இறந்தும்விடுகிறார்.
ஜமீன் அதிகாரிகள், ஜமீன்தாரின் அக்கா மகன் நல்லதம்பியை மூன்று மாதம் தேடி, ஒருவழியாக ஒரு கிராமத்தில் கண்டுபிடித்து, அவரை அழைத்துச் செல்ல வருகிறார்கள். நல்லதம்பி கிராமத்தில் வேளாண் தொழில் செய்பவர். கூடவே, புரட்சிகரமான பரப்புரைகள் செய்கிறார். சீர்திருத்த கருத்துகள் கொண்ட நாடகங்கள் போடுகிறார். அவரது தங்கை வைத்தியம் பார்க்கும் பெண். இப்படியாக இயல்பாக அவரது அறிமுகக் காட்சி அமைகிறது.
பாட்டு, கூத்து என இருக்கும் நல்லதம்பி, ஊரில் மிராசுதாரரின் மகளான ராணியைக் காதலிக்கிறார். ராணி பொதுத்தொண்டு செய்ய வேண்டும் என்பதற்காகச் செவிலியராகப் பணிபுரிபவர்; அத்தோடு கூத்து நாடகம் போன்றவையும் நடத்துபவர்.
ரயிலில் நல்லதம்பியையும் அவரது தோழரையும் ஜமீன் ஆள்கள் அழைத்துச் செல்கிறார்கள். செல்லும் வழியில் தூரத்தில் ஸ்கூட்டர் போன்ற ஒரு காரில் செல்லும் ராணியைக் கண்ட நல்லதம்பி, இறங்கி அவருடன் சென்று விடுகிறார். தனது தந்தை பணம் மட்டுமா ஐம்பது மூட்டை அரிசியை வீட்டில் வைத்திருக்கிறார் என்கிறார் ராணி. அதனால் அந்த அரிசிக்கு என ஒரு திட்டம் தீட்டுகிறார் நல்லதம்பி. தேசிங்கு ராஜா ஒரு புதையலை விட்டுச் சென்றதாகவும், அன்னதானம் கொடுத்தால், புதையல் குறித்த தகடு வைத்திருக்கும் மன்னரின் வாரிசு வர வாய்ப்பு இருப்பதாகவும் கதைவிடுகிறார்.
இது பொய் எனத் தெரிந்ததும் ராணியின் தந்தையால் விரட்டி அடிக்கப்படுகிறார். அதோடு, உங்கப்பன் சிங்கப்பூரில் குண்டு விழுந்து செத்துப் போய்ட்டான். நாங்கள் உன்னைத் தத்துதான் எடுத்தோம் எனச் சொல்லி ராணியை அவரது அப்பா (வளர்ப்புத் தந்தை) வெளியே அனுப்பிவிடுகிறார்.
அப்படி இப்படி என ஒருவழியாக நல்லதம்பி, ஜமீன் வந்துசேருகிறார். பட்டாபிஷேபமும் நடைபெறுகிறது.
நல்லதம்பி இருக்குமிடம் அறிந்த ராணி, ஜமீனில் வேலையில் சேருகிறார். புஷ்பாவிடம் மிகுதியாக இருக்கும் துணிமணி, செருப்பு போன்றவற்றை ஏழைகளுக்கு நல்லதம்பி வழங்குகிறார். ஜமீன் நிலங்களை கிராம மக்களுக்குப் பொதுவுடைமையாக்கி, கூட்டுறவு முறையை ஏற்பாடு செய்கிறார். புஷ்பா இதனை எதிர்த்து வழக்குத் தொடர்கிறார். நல்லதம்பிக்கு மனநிலை சரியில்லை என்பது புஷ்பா முதலானோரின் வாதம்.
தனது மனநிலை சரியாகத்தான் இருக்கிறது என்பதை நிரூபிக்க கிந்தனார் புராணம் என்னும் கதா காலாட்சேபத்தை நல்லதம்பி நடத்துகிறார். இவரின் தெளிந்த கொள்கைகளைக் கண்ட நீதிபதிகள், ‘இவர் மனநிலை பிறழ்ந்தவர் அல்லர்; திருமணம் என்பது காகிதத்தில் எழுதியதை நடைமுறைப்படுத்துவதல்ல அவரவர் விரும்புவது’ எனத் தீர்ப்பெழுதி முடிக்கிறார்கள். திரைப்படமும் நிறைவு பெறுகிறது.
பானுமதி கதாபாத்திரம் குறைக்கப்பட்டு, டி.ஏ. மதுரம் கதாபாத்திரத்தை கலைவாணர் உருவாக்கியிருக்கிறார். மேலும் கலைவாணர் பல மாற்றங்களைச் செய்யத் திரைப்படம் பரப்புரை போல ஆகிவிட்டது. அதனால், படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என அப்போது சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனாலும், அண்ணாவின் அரசியலுக்குத் துணைபோகும் விதமாகத்தான் கலைவாணரின் இடைச்செருகல்கள் அனைத்தும் உள்ளன என்பதையும் சேர்த்தேதான் பார்க்க வேண்டி இருக்கிறது. அந்த வகையில் அந்தக் கூட்டணிக்குக் கிடைத்த வெற்றி என்றே சொல்லத் தோன்றுகிறது.
சமூக, அரசியல் செய்திகள் படம் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. அன்றைய சமூகம் எப்படி இருந்தது என நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. மிராசுதார் ஐம்பது மூட்டை அரிசியை வீட்டில் வைத்திருக்கிறார் என வருகிறது. அரிசி அந்தக் காலத்தில் எவ்வளவு அரிய பொருளாக இருந்தது என்பதை இது சொல்கிறது.
ஜமீன்தார் இறந்ததும், அருகில் ஏடு படித்துக் கொண்டிருந்தவர்கள் ஏடுகளை மடித்து நூலை சுற்றிக் கட்டி கிளம்புகிறார்கள். அவர்கள் யார்? அந்த நடைமுறை என்ன எனத் தெரியவில்லை.
ஏழை நல்லதம்பி வீட்டில் கைராட்டை, பஜனை மடம், நூல்நிலையம், ராட்டை, கரும்பலகை அழகிய தண்ணீர் பானை எனப் பல பொருட்கள் இருக்கின்றன. கூடவே வேளாண் கருவிகளும் உள்ளன. இவை அந்தக் காலகட்ட புரட்சிகரமான இளைஞரின் குறியீடுகளாக இருந்து இருக்கலாம்.
புஷ்பாவிடம் மிகுதியாக இருக்கும் துணிமணி, செருப்பு போன்றவற்றை ஏழைகளுக்கு நல்லதம்பி வழங்குகிறார். கூடுதலாக ஒருவர் வாங்கி வைத்திருக்கிறார் என்றாலும், அவரின் அனுமதி இன்றி அவற்றை வேறு மக்களுக்கு அவர்கள் ஏழைகளாக இருந்தாலும் பட்டுவாடா செய்வது நேர்மையான செயலாகத் தெரியவில்லை.
ஜமீன்தாராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவரை மாலையுடன் புகைப்படம் எடுக்க முயன்ற போது, மாலையைக் கழற்றி வைத்துவிட்டு, துண்டு போட்டுக்கொள்வது என்பது எல்லாம் குறியீடாக அவர் புகுத்தியது போலவே தெரிகிறது. அனைவரும் துண்டு கழுத்தில் போடும் பண்பாடு என்பது, திராவிட கழகத்தின், சாதனையாக கருதப்பட்ட காலகட்டம் அது என்பதை இணைத்துப் பார்த்தால், காட்சியின் வலு புரிகிறது.
வழக்கமான சேலை/ பாவாடை தாவணி/ பாவாடை சட்டையில் பெண்கள் வருகிறார்கள். கிராம உழைக்கும் மக்கள் பலர் சட்டை இல்லாமல் இருக்கிறார்கள். அது ஆணானாலும் சரி பெண்ணானானாலும் சரி.
ராணி பழைய கால, நீளமான ஸ்கூட்டர் போல ஒரு வாகனத்தை ஓட்டுவதாக வருகிறது. Yeh Dosti Hum Nahi Todenge என்ற Sholay திரைப்பட ஸ்கூட்டர் போல் இது இல்லை. இருவர் அருகருகில் இருந்து பயணம் செய்வது போல இருக்கிறது. அதை கார் என ராணியின் அப்பா சொல்கிறார். ஸ்டியரிங் இருக்கிறது. பார்ப்பதற்கு, இப்போது குழந்தைகளுக்கு அமர்ந்து ஓட்டும் விதமாக கார் வாங்கி கொடுப்போம் அல்லவா அது போலவே இருக்கிறது.
நல்லதம்பி, ராணியின் அப்பாவிடமிருந்து தப்பி வரும்போது ஒரு சைக்கிளில் வருவார். அது, இப்போதைய லேடீஸ் சைக்கிள் போல வளைந்த கம்பியுடன் உள்ளது.
ராணி ஒரு தகரத்தை வீசும்போது, நல்லதம்பி, “இது ஜப்பான்காரன் கையில் கிடைத்திருந்தால், இதுவே ரயிலாகி இருக்கும்; ஒரு மோட்டார் ஆகி இருக்கும்; ஒன்றும் இல்லை என்றால் கூட ஒரு விளையாட்டு சாமான் ஆகியிருக்கும்” என்கிறார். ஜப்பான் குறித்த இந்த மதிப்பேடு அப்போதே இருந்திருக்கிறது என்பது தெரிய வருகிறது. அதாவது இரண்டாம் உலகப்போரில் சிக்கி சிரமப்பட்ட ஒரு நாடு, ஒரு சில ஆண்டுகளுக்குள் இந்தக் கருத்தைப் பிற நாடுகளில் விதைத்து இருக்கிறது என்றால், அதன் கட்டமைப்பு அவ்வளவு வலுவாக இருந்திருக்கிறது எனதான் எண்ணத் தோன்றுகிறது.
கம்பை ஓங்கி, “ஏதாவது பேசினால் இறுக்கிப்புடுவேன் இறுக்கி” என்கிறார் ராணியின் அப்பா. இப்போது கொன்று விடுவேன் எனச் சொல்லுவது போல அது சொல்லப்பட்டிருக்கிறது. அதுபோல மொகத்தடி என நுகத்தடியை ஒருவர் சொல்கிறார். இவை எல்லாம் வட்டார வழக்காக இருந்திருக்கலாம்.
“இதுதானே நல்லதம்பியின் கிரகம்” என கேட்டதற்கு,
“இதுதான் அவரது வீடு” என நல்லதம்பியின் தங்கை பதில் சொல்வது, “தமிழையும் இங்கிலீஷையும் கலந்து பேச மாட்டேன் உங்களை மாதிரி” என நாயகியிடம் நாயகன் சாடுவது எல்லாம், அப்போதைய தனித்தமிழ் குறித்த பார்வையை வெளிப்படுத்துகிறது.
ஜமீன்தாரான நல்லதம்பி, ஐவர் வார வாரியம் என்றால் என்ன என கணக்கரிடம் கேட்கிறார். அவருக்கு மட்டுமல்ல எனக்குமே இது குறித்து தெரியவில்லை.
ஆபீஸ் பாய் எனச் சிறுவன் ஒருவன் நிற்கிறான். அவனைப் படிக்க போ என்கிறார் நல்லதம்பி. இப்படி, கல்வியின் தேவையைக் கதை சொல்கிறது.
கிராமக் கலைகளுக்கு உயிர் கொடுப்பது அநாகரிகமா என நல்லதம்பி கேட்கிறார். சிப்பி வைத்து பாட்டு, கொட்டாங்குச்சியில் மிருதங்கம் என, நாம் பார்த்திராத பழைய பல கருவிகளை 1. 30. 36 என்கிற நேரத்தில் காட்டுகிறார்கள்.
என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் இருவரும் பாடும் விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி என்கிற உடுமலை நாராயணகவியின் பாடல் இன்றும் பலரால் பேசப்படுகிறது.
விஞ்ஞானத்தை வளர்க்கப்போறேண்ட
பொஞ்சாதி புருஷன் இல்லாம
புள்ளயும் குட்டியும் பொறக்குறாப்புல
பள்ளிக்கூடத்துக்கு புள்ளைங்க போகாம
படிக்க கருவி பண்ணியும் வைக்கணும்…
பட்டனைத் தட்டிவிட்டா ரெண்டு தட்டிலே
இட்டிலியும் காப்பியும் நம்ம பக்கத்தில் வந்திடணும்
என அறிவியலைப் பேசிய அதே பாடல்
வீட்டு வேலை செஞ்ச பொம்மனாட்டிய பாரு
மேனாட்டு நாகரீகம் கொண்ட மேனியைப் பாரு
அவ காட்டுக்கு போவா களை எடுப்பா காரியம் பாப்பா
கஞ்சி குடிப்பா
இவ கார்ல போவா ஊரைச் சுத்துவா கண்ணாடி பாப்பா
காப்பி குடிப்பா
என நாகரிகமான பெண் குறித்த பார்வையுடன் முடிகிறது. “நாட்டுக்குச் சேவை செய்ய நாகரிக கோமாளி வந்தேனய்யா” எனவும் ஒரு பாடல் வருகிறது. நாகரிகம் என்பது சரியானது எனச் சொல்ல வருகிறார்களா, இல்லை தவறானது எனச் சொல்ல வருகிறார்களா? அல்லது ஆணின் நாகரிகம் மட்டும்தான் சேவை என்கிற பட்டியலில் வருமா எனவும் புரியவில்லை.
புஷ்பாவின் குதிரை சவாரி நேரத்தில், நல்லதம்பி புஷ்பாவைச் சந்திக்கிறார். பாண்ட், சட்டை போட்ட அவரைப் பட்டாளத்து காரியா எனக் கேட்கிறார். குதிரை ஏறியதும் சர்க்கஸ் காரி என்கிறார். கூடவே “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இதெல்லாம் இந்த அம்மா கிட்ட என்ன கெதி ஆகிறது?” என விமரிசனம் வேறு செய்கிறார்.
“ஜமீன்தாரணி எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? படிப்பு இருக்க வேண்டும், படோபகாரம் கூடாது; அடக்கம் இருக்க வேண்டும், அசடா இருக்கக் கூடாது; புத்தி கூர்மையா இருக்க வேண்டும், ஆனா போக்கிரித்தனம் கூடாது; அழகா இருக்க வேண்டும், ஆள் மயக்கியா இருக்கக் கூடாது” என அறிவுரை வேறு கூறுகிறார்.
இப்படிப் பெண்கள் குறித்த பார்வைத் திரைப்படம் முழுவதுமே விரவிக் கிடக்கிறது. இதற்கு முன் இப்படிப்பட்ட சொல்லாடல்களை நான் வேறு திரைப்படங்களில் பார்க்கவில்லை. அதனால், இவ்வாறு பேசும் நட்சத்திர நாயகர்களின் திரைப்படங்களுக்கு முன்னோடி என இந்தத் திரைப்படத்தைச் சொல்லலாம்.
NS கிருஷ்ணனின் கிந்தனார் புராணம் என்னும் கதாகாலேட்சபம் அப்போது பெரும் புகழ்பெற்றதாக இருந்திருக்கிறது. கலைவாணர், கவிஞர் உடுமலை நாராயணகவி இருவரும் இணைந்து எழுதிய இந்தக் கிந்தனார் புராணம், தியாகராஜ பாகவதரின் இல்லத் திறப்பு விழாவில்தான் முதன் முதலில் அரங்கேறியிருக்கியது. கலைஞர் கருணாநிதி, அவரது மைத்துனர், பாடகர் சி எஸ் ஜெயராமன் இருவருக்கும் ஒரே நாள் திருமணம் நடை பெற்றதாகவும். அன்று என் எஸ் கிருஷ்ணனின் கிந்தனார் கதாகாலேட்சபம் நடந்ததாகவும், இருவருமே பார்க்க முடியாத அளவிற்குக் கூட்டம் இருந்ததாகவும், கலைஞர் தனது நெஞ்சுக்கு நீதியில் குறிப்பிடுகிறார்.
இந்தக் கிந்தனார் புராணத்தைத்தான், திரைப்படத்தில் NSK இணைத்துள்ளார்.
அன்புதான் கடவுள். நீங்கள் எல்லாரும் என்னிடம் அன்பு கொண்டிருப்பதால்தானே இங்கு வந்தீருக்கிறீர்கள்? ஆகவே நான் செய்ய இருக்கும் காலட்சேபத்திலே குற்றம் இருப்பின் மன்னிக்கவும் எனதான் கிந்தனார் புராணத்தை அவர் தொடங்குகிறார்.
ஆதனூரிலே ஆதிதிராவிட வகுப்பிலே கிந்தன் பிறந்தார். அவருக்குப் பட்டணம் போய்ப் படிக்க ஆசை. அதற்கு நண்பர்களையும் கூப்பிடுகிறார். அவர்கள் வருவதாக இல்லை. குறைந்தபட்சம் அருகில் இருக்கும் திருப்பங்கூர் வரையாவது வாருங்கள். நம்மை எல்லாம் பட்டணத்திற்குக் கொண்டு சேர்க்கும் ரயில் வண்டியைப் பார்க்கலாம் எனச் சொல்ல, அவர்களும் சம்மதிக்க, அனைவரும் போகிறார்கள்.
ரயில் வண்டியைப் பார்த்து, “ஏ ரயிலே, எங்கள் நாட்டிலே எத்தனையோ பெரிய பெரிய தலைவர்களெல்லாம் ஒழிக்க முயன்று முடியாத தீண்டாமை என்னும் பெரிய கொடுமையை இந்தியாவுக்கு வந்த மறு நிமிடமே நீ ஒழித்துவிட்டாயே, சகல சாதியாரையும் ஒரே பெஞ்சில் உட்கார வைத்தது உன் மகிமையல்லவா?” என்கிறார். மேலும் “நீயும் ஆண்டவனும் ஒன்றுதான். ஆண்டவன் இருப்பவன், இல்லாதவன் இருவரையும் சமமாக நடத்துகிறார். நீயோ டிக்கெட் இருப்பவர்கள் இல்லாதவர் இருவரையுமே ஏற்றிச் செல்கிறாய்” என்கிறார்.
ஊரில் இருக்கும் வாத்தியார் வீட்டிற்குப் போய் கிந்தன், பட்டணம் போய் படிக்க உதவி கேட்கிறார். அவர் மறுத்து, “இங்கு உள்ள வேலையைப் பார்; இங்கேயே இருடா” எனச் சொல்லி அனுப்பிவிடுகிறார்.
அப்பாவிடம் சென்றாலும், ‘காடுகரை உழுது பிழைப்பதுதான் கடவுள் நமக்கு அமைத்த அமைப்பு’ என்கிறார். கிந்தனோ படித்தால் தீண்டாமை போய்விடும் என்கிறார். அப்பாவும் சம்மதிக்க கிந்தன் பட்டணம் செல்கிறார். அங்கு ஹை ஸ்கூல் பிரின்சிபால் உதவியுடன் படித்துப் பள்ளிகளின் கண்காணிப்பாளர் பணி பெறுகிறார். ஊருக்கு வருகிறார். அங்கு அவரது வாத்தியார் ரயில் நிலையம் வந்து வரவேற்கிறார். கட்டித் தழுவிக்கொள்கிறார். இவ்வாறு தீண்டாமையைக், கல்வியினால் ஒழிக்க முடியும் எனக் கதை முடிகிறது.
நாட்டுக்குச் சேவை செய்ய நாகரிக கோமாளி வந்தேனய்யா என என்.எஸ். கிருஷ்ணன் இயற்றி பாடிய பாடல் ஒன்று வருகிறது.
அந்நியர்கள் நம்மையாண்ட அந்தக் காலம்
நம்மை நாமே ஆண்டு கொள்வதிந்தக் காலம்
மழை வருமென்றே மந்திரம் ஜெபிச்ச தந்தக் காலம்
மழையைப் பொழிய வைக்கவே யந்திரம் வந்தது இந்தக் காலம்
முதல் முதலாக நல்லவை யாவும் முயன்று முடிப்பது தமிழ்நாடு
பாட்டால் உணர்த்தி ஊட்டும் கவி பாரதி சேர் தமிழ்நாடு
உலகம் வியக்க சுதேச கப்பல் ஓட்டியதும் தமிழ் நாடு
திலகமெனப் புகழ் ஓங்கும் எங்கள் சிதம்பரம் பிள்ளை
செயல்புரிந்த தமிழ் நாடு
உலகில் முதலில் கள்ளை ஒழித்ததும் எம் தமிழ்நாடு
உத்தமர் காந்தியின் சொல்லை நன்றாய்
உணர்ந்து நடப்பதில் எமக்கீடில்லை
கள்ளை ஒழித்து கண்ணியம் பெற்றது எங்கள் நாடு.
முன்னொரு சமயம் அமெரிக்கா என்னும் நாட்டில் இந்த மதுவிலக்கு செய்து ஃபெய்லியர் ஆகிவிடவில்லையா?
குடிப்பது பாபம் என்று நினைக்கும் நாடு.
நாங்கள் வெற்றி பெறுவது நிச்சயம், நிச்சயம், நிச்சயம்.
அக்டோபர் 2-ம் தேதி வருவதற்கு முன்னே
என் கண்ணுக்குன்னை இரண்டாளாகத் தெரிஞ்சது பெண்ணே
சுருண்டு சுருண்டுதான் சும்மாப் படுப்பேன்
சுதிய விட்டுக் கூடப் பாட்டுகள் படிப்பேன்
வரண்ட காரவடை வாத்து முட்டை கரு
வாட்டைத் தின்ன வாய் நாத்தம் நீங்கி நான்
மனுஷனாகிப் போனேன் இப்ப நான் மனுஷனாகிப் போனேன்
இது பாடலின் சுருக்கம்தான். இந்தப் பாடல், பல சமூகக் கருத்துகளைச் சொல்லுகிறது. அமெரிக்காவில் மதுவிலக்கு இருந்ததும் பின் நீக்கப்பட்டதுமான வரலாறும் (1920 -1933), சென்னை மாகாணத்தின் அன்றைய முதல்வரான ஓமந்தூரார் மதுவிலக்கை அக்டோபர் 2,1948 இல் அதாவது, காந்தி இறந்த பின் வந்த அவரது முதல் பிறந்தநாளன்று அமல்படுத்தினார் என்கிற வரலாறும் இந்தப் பாடலின் மூலம் நமக்குத் தெரிய வருகிறது. இன்னமும் பல பாடல்களைத் திரைப்படத்தின் சீர்திருத்தக் கருத்துகளுக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
ஆனாலும், வறண்ட காரவடை, வாத்து முட்டை, கருவாட்டைத் தின்ன வாய் நாத்தம் நீங்கி நான் மனுஷனாகிப் போனேன் எனச் சொல்வது இடறலாக இருக்கிறது என்பதையும் சேர்த்தேதான் பார்க்க வேண்டி இருக்கிறது.
(தொடரும்)
படைப்பாளர்:
பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.