நம் ஒவ்வொருவருக்குள்ளும் கொஞ்சம் லிலித் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்கிறார் டோரா லெவி மொசானென். பாலஸ்தீனத்தில் பிறந்து, ஈரானுக்குச் சென்று அங்கிருந்து வெளியேறி இறுதியாக அமெரிக்காவில் குடியேறியவர் டோரா. நான் விவாகரத்து செய்யப்போகிறேன் என்று ஒரு நாள் தன் பெற்றோரிடம் அவர் அறிவித்தபோது கட்டுப்பெட்டி பெர்ஷியப் பின்னணியைச் சேர்ந்த அவர்களால் அதை ஏற்கவே முடியவில்லை. இப்படியொரு முடிவு உனக்கு நேர வேண்டுமா என்று வருந்தினார்கள்.
டோராவுக்குப் புரியவில்லை. ஏன் இவர்கள் விவாகரத்தை வாழ்வின் முடிவாகக் காண்கிறார்கள்? நிச்சயம் என் கணவர் அப்படி கருதமாட்டார் என்னும்போது நான் மட்டும் ஏன் முடங்கிக் கிடக்கவேண்டும்? பெர்ஷிய சமூகம் மட்டுமல்ல உலகமேகூட ஒரு நிகழ்வு ஆணுக்கு நேரும்போது ஒரு மாதிரியும் பெண்ணுக்கு நேரும்போது வேறு மாதிரியும் பார்ப்பதையே வழக்கமாக வைத்திருக்கிறது. டோராவுக்கு இது துயரமளிக்கவில்லை, கோபத்தையே வரவழைத்தது. விரைவில் டோரா விவாகரத்தைக் கடந்துசென்றார்.
விரவும் அதை ஒரு திருப்புமுனை நிகழ்வாகவும் மாற்றிக்காட்டும் வகையில் நாவல்கள் எழுதத் தொடங்கினார். ஹாரம், செண்ட் ஆஃப் பட்டர்ஃபிளைஸ் என்று தொடங்கி அவர் எழுதிய புதினங்களில் பெண் கதாபாத்திரங்கள் கட்டுப்பாடுகளைப் புறக்கணிப்பவர்களாக, எல்லைகளை வீசியெறிபவர்களாக, அசாத்திய துணிச்சல்மிக்கவர்களாக இருந்தார்கள். எனக்குள் கொஞ்சம் லிலித் இருந்ததால்தான் இது சாத்தியமானது என்கிறார் டோரா. எனக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு பெண்ணுக்கும் லிலித் தேவை என்கிறார் அவர்.
மகாகவி என்று அழைக்கப்பட்டவரும் ஓவியருமான தாந்தே காப்ரியல் ரொசேட்டி 1867ம் ஆண்டு வரைந்த புகழ்பெற்ற ஓவியம் லேடி லிலித் (பொருள் 3). மயக்கும் அழகுடன் தனிமையில் அமர்ந்திருக்கும் லிலித்தை வரைந்து முடித்ததோடு ஒரு கவிதையும் எழுதி வைத்தார் தாந்தே. கொள்ளை அழகு லிலித் வலை விரித்தால் மயங்காத ஆண்களும் உண்டோ? அவள் பிடியில் சிக்கியவர்கள் மீண்டு வந்ததாக சரித்திரமும் உண்டோ? லிலித்தின் மின்னும் கேசத்தை உலகில் தோன்றிய முதல் தங்கம் என்று அழைக்கும் தாந்தே, சீறும் பாம்புடன் அதனை ஒப்பிடுகிறார்.
லிலித்தின் அழகு உங்களை வசீகரிக்கும், கவர்ந்திழுக்கும். மயங்கி அருகில் சென்றாலோ உங்கள் உயிரை அவள் பறித்துவிடுவாள்! எனவே, ஆண்களே எச்சரிக்கையாக இருங்கள்! தாந்தே சொல்ல வரும் செய்தி இதுதான். தாந்தே மட்டுமல்ல… எண்ணற்ற பலர் லிலித்தை ஓர் அழகிய ஆபத்தாகவே கண்டனர். ஒரு சூனியக்காரியாக, வஞ்சிப்பவளாக, நாகப் பாம்பாக, நயவஞ்சகியாக, சுருக்கமாகச் சொன்னால் மரணமாக லிலித்தை அவர்கள் அடையாளப்படுத்தினர்.
லிலித் பற்றிய ஒரு குறிப்பு விவிலியம் பழைய ஏற்பாட்டில் உள்ள ஏசாயா என்னும் நூலில் (34:14) இடம்பெற்றுள்ளது. ஆந்தைகள் வாழும் இடம் என்று அழைக்கப்படும் ஒரு படு பயங்கரமான காட்டில் குள்ள நரிகள், கழுதைப்புலிகள் ஆகிய கொடூரமான விலங்குகளுடன் லிலித் என்னும் பெண் பேயும் குடியிருந்தது என்கிறது இந்தக் குறிப்பு. அந்தப் பெண் பேய் பறவை வடிவில் இருந்தது என்று சிலரும் விலங்கு போல் காட்சியளித்தது என்று வேறு சிலரும் சொல்கிறார்கள்.
இரண்டும் அல்ல, லிலித் ஒரு சூழ்ச்சிக்கார தேவதை என்பது மற்றவர்களின் கருத்து. இந்த லிலித்தின் வேலை என்ன? இரவில் உறங்கும் மனித உயிர்களை அழுத்திக் கொல்வது. குழந்தைகளைக் கவர்ந்துசென்று கொல்வது. ஆண்களை மயக்கி சாகடிப்பது. லிலித் பற்றிய விரிவான அறிமுகம் யூத இதிகாசப் பிரதிகளிலும் வேறு சில ஏற்கப்படாத பைபிள் பிரதிகளிலும் காணக்கிடைக்கின்றன.
நீ என்றென்றும் எனக்குக் கீழேதான் இருந்தாக வேண்டும் என்று வலியுறுத்தினான். நீயும் நானும் ஒரே கடவுளால் ஒன்றுபோல தூசியால் படைக்கப்பட்டோம் என்னும் நிலையில் நீ எப்படி என்னைவிட உயர்ந்தவன் ஆவாய் என்று எதிர் கேள்வி எழுப்பிய லிலித் ஆதாமுடன் உடன்பட மறுத்துவிட்டார். உடனே ஆதாம் பலாத்காரத்தைக் கொண்டு லிலித்தைத் தன் வயப்படுத்த முயன்றான். கோபமுற்ற லிலித் கடவுளின் பெயரை உச்சரித்தபடி காற்றில் பறந்து ஆதாமைவிட்டு வெளியேறினார்.
எனக்கு உதவியாக இருக்க வேண்டிய லிலித் என்னை விட்டு ஓடிவிட்டாள் என்று கடவுளிடம் புகாரிட்டான் ஆதாம். உடனே கடவுள் சில இறைத்தூதர்களை லிலித்திடம் அனுப்பி வைத்தார். மீண்டும் ஆதாமுடன் வந்து மகிழ்ச்சியாக இரு. உன்மூலம் அவன் தன் சந்ததியை விருத்தி செய்ய வேண்டும். எனவே உன் ஒத்துழைப்பு தேவை என்று தேவதூதர்கள் லிலித்திடம் இறைஞ்சினார்கள். மிரட்டியும் பார்த்தார்கள். லிலித் இறுதிவரை மசியவேயில்லை. கடவுள், இறைத்தூதர்கள், ஆதாம் அனைவரும் லிலித்திடம் தோற்றுப்போயினர்.
டோரா விரும்பிய லிலித் இவர்தான். அவரைப் பொறுத்தவரை ஓர் ஆணின் கட்டுப்பாட்டுக்கு அடங்க மறுத்த முதல் பெண் லிலித். நான் உன்னைவிடப் புத்திசாலி என்று அறிவித்த முதல் உயிர் லிலித். சமமாகப் படைக்கப்பட்ட நாம் இருவரும் சமமாகவே வாழ்ந்தாக வேண்டும் என்று தர்க்கம் செய்த முதல் பெண் லிலித். ஒரு பெண், பெண் என்பதற்காகவே இரண்டாவது பாலினமாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதையும் ஒரு பெண் துணிச்சல்மிக்கவராகவும் வெளிப்படையானவராகவும் கலகக்காரராகவும் இருக்கமுடியும் என்பதையும் லிலித் உலகுக்குக் காட்டினார்.
அதனாலேயே லிலித் ஒரு பேயாக மாற்றப்பட்டார். லிலித்தை ஓர் அழகிய ஆபத்தாகவும் சீறும் பாம்பாகவும் உருவகப்படுத்தினார் தாந்தே. ஆதாமின் உதவியாளராக இருக்கவேண்டிய லிலித் ஆதாமைவிடவும் புத்திக்கூர்மை கொண்டவராகத் திகழ்ந்தது பலரை சங்கடப்படுத்தியது. நீயும் வேண்டாம் உன் ஏதேன் தோட்டமும் வேண்டாம் என்று ஆதாமை உதறித் தள்ளிய லிலித்தை ஆந்தைகளோடும் ஓநாய்களோடும் குள்ளநரிகளோடும் அவர்கள் தள்ளிவிட்டார்கள். ஆதாமுக்கும் கடவுளுக்கும் துரோகம் இழைத்த ஒரு பெண் நிச்சயம் பிசாசாகத்தானே இருக்க முடியும்?
ஆனால், இந்தக் கதைகள் நீண்டகாலத்துக்கு நிலைக்கவில்லை. லிலித் பற்றி கிரேக்க, லத்தீன் மற்றும் ஹீப்ரூ பதிவுகளையும் இதிகாசங்களையும் மறுவாசிப்பு செய்த பெண்ணியவாதிகள் ஓர் அசாதாரணமான பெண்ணை லிலித்திடம் தரிசித்தார்கள். லிலித் மீது வண்டி வண்டியாகப் படிந்திருந்த அவதூறுகளையும் கசடுகளையும் தீயப் பார்வைகளையும் அவர்கள் துடைத்து அழித்தார்கள்.
அதற்குப் பிறகு வெளிப்பட்ட லிலித் முற்றிலும் புதிய பெண்ணாக இருந்தார்.முதல் பெண் என்றல்ல, முதல் பெண்ணியவாதி என்று லிலித்தை அழைக்கவிரும்புகிறேன் என்கிறார் டோரா. மரபுகளையும் கட்டுப்பாடுகளையும் உடைத்தெறிந்துவிட்டு தன் போக்கில் முடிவுகள் எடுக்க விரும்பிய லிலித்திடம் இருந்து நான் நிறையவே கற்றுக்கொண்டேன் என்றும் அவர் குறிப்பிடுகிறார். ஆனால், நிச்சயம் தாந்தேவும் அவரைப் போற்றுபவர்களும் இதனை ஏற்கப்போவதில்லை. அதனாலென்ன? அனைவராலும் ஏற்கப்படுபவர் லிலித்தாக இருக்கமுடியாதல்லவா?
ஆதியாகமத்தில் இருந்து ஒன்பது காட்சிகளை எடுத்துக்கொண்டு அவற்றை மேற்கூரையில் வரைந்தார் மைக்கலாஞ்சலோ. அவற்றில் ஏவாளின் ஓவியம் (தி கிரியேஷன் ஆஃப் ஈவ்) புகழ்பெற்றது. உறங்கிக்கொண்டிருக்கும் ஆதாமிடம் இருந்து கடவுள் ஏவாளை உருவாக்கும் காட்சியை மைக்கலாஞ்சலோ படம் பிடித்திருந்தார். ஆதாம், ஏவாள் இருவருடன் முதல்முறையாக அவர்களைப் படைத்த கடவுளும் அந்த ஓவியத்தில் இடம்பெற்றுள்ளார்.
இறுதித் தீர்ப்பு, கிறிஸ்து, கன்னி மேரி ஆகிய சித்திரங்களையும் அவர் அடுத்தடுத்து தீட்டினார். இந்தப் பணி முடிவடைய நான்காண்டுகள் ஆயின(இந்த ஓவியங்களை இணையத்தில் காண்க). லிலித் வெளியேறிய பிறகு தனித்திருந்த ஆதாமுக்காக கடவுள் உருவாக்கிய இரண்டாவது பெண், ஏவாள். லிலித் போல அவள் இருக்கக்கூடாது என்பதே கடவுள், ஆதாம் இருவருடைய விருப்பமும். ஏவாள் அவர்களை ஏமாற்றவில்லை.
லிலித் போலன்றி, ஆதாமின் அரவணைப்பையும் அதிகாரத்தையும் அவள் ஏற்றுக்கொண்டாள். ஆனால், அதற்குப் பிறகு நடந்தது நமக்கெல்லாம் தெரியும். பாம்பு வடிவத்தில் வந்த சாத்தான் விலக்கப்பட்ட மரத்தையும் அதன் கனியையும் ஏவாளுக்கு அறிமுகம் செய்து வைத்தது. விலக்கப்பட்ட கனியைச் சுவைத்தால் ‘சாகவே சாவாய்’ என்று கடவுள் எச்சரித்திருந்தார். ஆனால், சாத்தானோ இதைப் புசித்தால் நீ ‘சாகவே சாவதில்லை’ என்று உறுதியளித்தது. ஏவாள் ஆப்பிளைத் தானும் உண்டதோடு ஆதாமுக்கும் கொடுத்து உண்ணச் செய்தாள்.
ஏவாள் மட்டும் கனியைப் புசித்திருந்தால் உலகில் பாவமும் அதன் விளைவாக மரணமும் பிரவேசித்திருக்காது. ஆதாம் கனியைப் புசித்ததால்தான் உலகில் பாவமும் மரணமும் பிரவேசித்ததாக வேதாகமம் கூறுகிறது. அந்த வகையில் ஆதாமைத் தாக்கிய முதல் நஞ்சு ஏவாள். சாத்தான் அளித்த கனி அல்ல, ஏவாளின் மீறுதலே முதல் பெரும் குற்றம். இரண்டாயிரம் ஆண்டுகளாக ஏவாளே பெண்ணின் அடையாளமாகத் திகழ்கிறாள்.
ஏவாளின் பாவத்தைப் பெண்கள் இன்னமும் சுமந்து கொண்டிருக்கிறார்கள் என்று பல கிறிஸ்தவ பாதிரிகள் குறிப்பிடுகின்றனர். மனித இனத்தின் ஆதி பிழையாக, ஒரு பெரும் சறுக்கலாக ஏவாள் அவர்களால் உருவகப்படுத்தப்படுகிறாள். மேற்குலக நாகரிகத்தின் ஆன்மாவில் ஏவாள் பற்றிய தவறான பிம்பம் அழுத்தமாகப் படிந்து கிடக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
உதாரணத்துக்கு, மேற்கு நாடுகளில் தேவாலயங்களுக்கு வெளியிலும் வீதிகளிலும் ஆதாம்- ஏவாள் நாடகங்கள் பல நூற்றாண்டுளாக அரங்கேற்றப்படுவது வழக்கம். ஏதேன் தோட்டத்திலிருந்து இருவரும் வெளியேற்றப்பட்ட நிகழ்வு வரும்போது, ஆதாம் கோபத்துடன் கடும்சொற்கள் பயன்படுத்தி ஏவாளை ஏசுவதும், அவளைக் கீழே பிடித்துத் தள்ளி, கேசத்தைப் பற்றித் தரதரவென்று இழுத்து வரும் காட்சியும் காண்பிக்கப்பட்டன.
ஆண், பெண் பற்றிய கற்பிதங்களும் இந்தக் கதைகளில் இருந்தே கிளம்பின. ஆதாம் கடவுளுக்குக் கீழ்படிந்தவன். ஒழுக்கமானவன். ஏவாள் பலவீனமானவள். சாத்தானின் சொல்லை அப்படியே நம்பி ஏற்றவள். தானும் கெட்டு ஆதாமை யும் கெடுத்தவள். ஆதாம் வழி வந்த ஆண்கள் நல்லவர்களாகவும் ஏவாள் வழி வந்த பெண்கள் பலவீனமானவர்களாகவும் இருந்தனர். இந்தக் கருத்தை ஆண்களோடு சேர்த்து பெண்களும் பெருமளவில் ஏற்றுக்கொண்டிருந்தனர். இந்தப் பிம்பத்தை மாற்றும் முயற்சியில் பலர் ஏவாளைத் தீவிர மறுவாசிப்புக்கு உட்படுத்தினர்.
முதலில் ஆதாமையும் பிறகு ஏவாளையும் உருவாக்கியதன் மூலம் கடவுள் ஆணுக்கே முக்கியத்துவம் கொடுத்தார்; பெண் இரண்டாவது பாலினம் என்பதை உணர்த்தினார் என்று சிலர் வாதிட்டபோது அந்த வாதம் மறுக்கப்பட்டது. அப்படியானால் ஆணுக்கு முன்பே அவர் விலங்குகளைப் படைத்துவிட்டாரே! விலங்குகள் ஆண்களைவிட மேலானவையா? உண்மையில் கடவுள் முக்கியமானதைத்தான் கடைசியாகப் படைத்திருக்கிறார். முதலில் ஏவாள், அடுத்து ஆதாம், பிறகு விலங்குகள். இதுவே சரியான வரிசை என்னும் எதிர்வாதத்தை சிலர் முன்வைத்தனர்.
ஏவாளுக்கு களங்கத்தை ஏற்படுத்திய சாத்தான் யார்? பைபிள் சாத்தானை அவன் என்றே அழைக்கிறது. சாத்தான் பாம்பு உருவில் இருந்தாலும் நடந்தே வருகிறான். பின்னர் கடவுள் சாபமிட்ட பிறகு தரைக்குத் தாவி தவழ்ந்துபோகத் தொடங்குகிறான். ஆனால், பிற்காலத்து ஓவியர்கள் இந்தக் காட்சியை வரையும்போது ஒரு பெண்ணின் தலையை பாம்பின் உடலுடன் பொருத்தி அதையே ஒரு சாத்தானாகக் காட்சிப்படுத்தினர்.
மைக்கலாஞ்சலோ செய்ததும் அதைத்தான். சீறும் பாம்பும் சிரிக்கும் பெண்ணும் ஒன்று என்றே அவர்கள் நினைத்தனர். உண்மையில், அந்தப் பாம்பும் சாத்தானும் வேறு யாருமில்லை, லிலித்தான். லிலித்தை வரைந்த ஓவியர்கள் பலரும் அவர் உடலில் ஒரு பாம்பு பின்னிப் படர்ந்திருப்பதையும் சேர்த்தே வரைந்திருந்தனர். தி கமிங் ஆஃப் லிலித் என்னும் நூலை எழுதிய ஜுடித் பிளாஸ்கோ என்னும் பெண்ணிய ஆய்வாளரின் கற்பனை சுவாரஸ்யமானது. ஒரு நாள் தோட்டத்தில் ஏவாள் நொடிப்பொழுதில் ஒரு பெண்ணைச் சந்திக்கிறாள்.
தன்னைப் போலவே காட்சியளித்த அந்தப் பெண்ணைக் கண்டு திகைத்துப்போன அவள்ஆதாமிடம் விசாரிக்கிறாள். எச்சரிக்கையடைந்த ஆதாம், அது ஒரு பெண் பேய். அதன் பெயர் லிலித். அவளுடன் நீ சேராதே என்று அறிவுறுத்துகிறான். ஆனால், அதற்குள் ஏவாளின் மனம் சஞ்சலம் கொள்கிறது. சுதந்திரமாகச் சுற்றித் திரியும் லிலித் போல் தானில்லை என்பதையும் இந்தத் தோட்டம் தன்னைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது என்பதையும் அவள் புரிந்துகொள்கிறாள்.
மற்றொரு நாள், மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஆப்பிளைப் பறிப்பதற்காக மேலே ஏறும் ஏவாள் தோட்டத்தின் மற்றொரு பகுதியில் சென்று விழுகிறாள். அங்கே லிலித் அவளுக்காகக் காத்திருக்கிறாள். முதலில் அஞ்சி, தயங்கிய ஏவாள் பிறகு இயல்பாக லிலித்திடம் உரையாடத் தொடங்குகிறாள். இருவரும் நட்புடன் கரங்களைப் பற்றிக்கொண்டு கதை பேசுகிறார்கள். சிரித்து மகிழ்கிறார்கள். லிலித்தை ஏன் ஆதாம் ஒரு சாத்தானாக நினைக்கிறான் என்பது ஏவாளுக்குப் புரிகிறது.
இதற்கிடையில் ஆதாம் தவிப்பில் ஆழ்ந்துபோகிறான். அடிக்கடி காணாமல் போகும் ஏவாளை நினைத்து அவன் மருண்டு போகிறான். மீண்டும் கடவுளிடம் ஓடிச்சென்று, (ஓர் ஆணின் மனம் இன்னொரு ஆணுக்குத்தானே தெரியும்?) ஏவாளை மீட்டுக்கொடுங்கள் என்று இறைஞ்சுகிறான். ஆனால், அந்தக் கடவுளுக்கும்கூட என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் குழப்பத்தில் உறைந்து போய்விடுகிறார்.
லிலித், ஏவாள் பற்றிய மேற்கூறிய மறுவாசிப்புகளை இறை நம்பிக்கையாளர்கள் சுலபத்தில் மறுத்துவிடுவார்கள். அவை பைபிளில் இல்லை என்னும் ஒற்றைக் காரணம் போதும் அவர்களுக்கு. ஆனால், ஒருவராலும் புறந்தள்ள முடியாத கடினமான கேள்விகளை அடக்கமான ஏவாள், அடங்க மறுத்த லிலித் இருவரும் கரம் கோர்த்தபடி நம்மைப் பார்த்து எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆதாமும் அவர் பிள்ளைகளும் பதில் சொல்லியே தீரவேண்டும்.
(வரலாறு புதிதாகும்!)
தொடரின் முந்தைய பகுதிகள் இங்கே:
கட்டுரையாளர்
மருதன்
எழுத்தாளர், வரலாற்றாளர். சே, ஹிட்லர், ஃபிடல் காஸ்ட்ரோ, திப்பு சுல்தான், மண்டேலா, மாவோ, ஸ்டாலின் ஆகிய உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியுள்ளார். இவரது ஹிட்லரின் வதைமுகாம்கள், முதல் உலகப் போர், இரண்டாம் உலகப்போர், ஷெர்லக் ஹோம்சால் தீர்க்க முடியாத புதிர், துப்பாக்கி மொழி, திபெத்- அசுரப் பிடியில் அழகுக்கொடி, ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன் ஆகிய நூல்கள் கவனம் ஈர்த்தவை. பிரபல தமிழ் இதழ்களில் தொடர்கள் எழுதிவருகிறார். இந்து தமிழ் திசை மாயா பஜார் குழந்தைகள் இணைப்பிதழுக்கும் கட்டுரைத் தொடர் எழுதி வருகிறார்.
பின்னிட்டார் மருதன். அருமை.
நன்றி!
Beautifully written ❤️👍 Women are often depicted wrong by all traditions. Bible contains many subtle messages which are misinterpreted by religious people in their own perceptions.Adam and Eve story as told by Book of Mirdad is totally different as the union of love and feminine wisdom were mainly focused . I have read stories of Lilith..
Loved this piece much❤️
Thanks a ton for the response, Bavani. Haven’t read the book, will do that soon!