இன்றைய முப்பது மற்றும் நாற்பது வயதுப்பெண்கள், டிஜிட்டல் சமூகத்தின் மாற்றத்தையும் அவர்கள் வளர்ந்த விதத்தின் நம்பிக்கைகளின் தன்மையையும் விடமுடியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர். ‘நான் படித்த படிப்பிற்கு ஏற்ற பணியை மேற்கொள்ளவா, இல்லையென்றால் என் கனவுக்காக உழைக்கவா?’ என அவர்கள் மனதுக்குள் நடக்கும் பெரிய போராட்டத்தின் நடுவே சோர்வடைகிறார்கள்.

இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் ஜோதிகா மற்றும் திரிஷாவின் புகைப்படங்கள் தற்போது அந்தப்பெண்களுக்கு உத்வேகமாக, நல்ல மலர்ச்சியைக் கொடுப்பதாக இருக்கின்றன. பலரும் அவர்களின் வசீகரத்தை ஆத்மார்த்தமாக உள்வாங்கி, நிறைவாக உணர்வதை வெளிப்படையாகச் சொல்கின்றனர். இந்த இரண்டு பெண்களின் போட்டோக்களை இன்றைய ட்ரெண்டாக எடுத்து எல்லாரும் பகிர்ந்து மகிழ்கிறார்கள் என்றால், அதற்கு மிக முக்கிய காரணம் அவர்களின் முகத்தில் தெளிவாகத் தெரியும் மனநிறைவு. அவர்களின் முகம் காட்டும் சந்தோசத்தில் ஒரு தேஜஸ் தானாக ஜொலிக்கிறது. இதைப் பார்க்கும் அத்தனை பேருக்கும் ஒருவித புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது.

சமகால அரசியல் நிகழ்வுகளில் இருந்து மீடியாவில் நடக்கும் சண்டைகள் வரை, நம்பிக்கையற்ற சூழலையும் சமூகம் சார்ந்த பல நெருக்கடியான நிகழ்வுகளையும் பதட்டத்துடன் காண நேர்கிறது. அதனால் பலரும் சோர்வடைவதை வெளிப்படையாக சொல்லவும் செய்கிறார்கள். ‘எப்படித்தான் இந்த நாட்களை கடந்து செல்ல போகப் போகிறோம்?’ என்கிற விரக்திதான் மிஞ்சி நிற்கிறது.

இதிலிருந்து எப்படி மீள்வது என்ற தேடல் இருக்கும்போது, சினிமா போன்ற மிகப்பெரிய ஊடகம் கொடுக்கும் நம்பிக்கையும் சந்தோஷமும் முகத்தில் தெறிக்கும் மழைச் சாரல் போல், மற்றவர்கள் மீதும் அந்த வாசனையையும் குளிர்ச்சியையும் தெளித்துவிட்டு செல்கிறது. அது மனதளவில் சமூகத்திற்கு ஒருவித ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கித் தருகிறது.

இந்த வெற்றி எப்படி சாத்தியமாகிறது?

எல்லோருக்கும் மனதுக்குள் தங்களைப்பற்றி ஒரு அழகான, கம்பீரமான பிம்பம் கண்டிப்பாக இருக்கும். அதற்கான சுயவளர்ச்சியைக் கொண்டு வரத்தான் நிறைய படிக்க வேண்டும் என்றும் அதற்கு தங்களை தயார்படுத்துகிறோம் என்றும் பல வளரிளம்பருவத்தினர் சொல்வதைக் கேட்கிறோம். ஆனால் காலப் போக்கில் பார்த்தால், வீட்டுக்காக, அம்மாவுக்காக, அப்பாவுக்காக, குடும்ப கவுரவுத்துக்காக என்று வேலையில் சேர்ந்து, அவர்கள் சம்பாதித்த பணத்தை சொத்து மற்றும் நகை வாங்கவும் வீட்டில் உள்ளவர்களை கவனித்துக்கொள்வதும் மட்டுமே தங்கள் கடமை என பழக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து சலிப்படைகிறார்கள்.

வீட்டில் உள்ளவர்கள் சொன்னதைக் கேட்டு செய்துவிட்டு தனக்கு எது வரும் எது வராது என்ற சுயபுரிதல் இல்லாமல், அடுத்தவர் பார்வையில் இருந்து தங்களுடைய வேலையை செய்பவர்களாக மாறி இருப்பார்கள். அவர்களிடம் அப்போது மனத்திருப்தி இருக்காது. தன் மீதே சுயசந்தேகம் மற்றும் ஒருவித தேடலுடன் எது தன்னுடைய வாய்ப்பு என்ற புரிதல் இல்லாமல், கிடைக்கின்ற எல்லா இடத்தையும் அரைகுறையாக நிரப்பிவிடுகிறார்கள்.

ஆனால் இத்தனை விஷயங்களைச் செய்தாலும் ஒருவித வெறுமை இருந்து கொண்டே இருக்கிறது என்றே அவர்களின் புலம்பல்கள் இருக்கும். தனக்கு என்ன செய்தால் ஒரு மனத்திருப்தி கிடைக்கும் என்ற அலைபாயும் கனவுகளுடன் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் நபராக முயற்சிக்கப் பார்க்கிறார்கள். ஆனால் யதார்த்த பொருளாதார சூழல், வீட்டின் நிர்ப்பந்தம் போன்றவை அவர்களின் தன்னம்பிக்கையை சிதைத்து, அவர்கள் வெளியே வருவதை பெரிய கேள்விக்குறியாக மாற்றுகின்றன. இந்த மாதிரியான ஆசைகள் தோன்றுவதும் மறுபடியும் காலச்சூழலில் புதைப்பதும் எளிய மனிதர்களின் வாழ்க்கை என்றே சொல்லிக் கடந்து விடுகிறோம்.

நம் கண்முன் நிற்கும் வெற்றியாளர்களைவிட ‘திருப்தியாளர்கள்’ மேலே சொன்ன அத்தனை கஷ்டங்களையும் கடந்து, புதிய நம்பிக்கைகளை ஏற்றுக் கொண்டு நமக்கு வாழ்ந்து காட்டுகிறார்கள்.

அதுவும் பெண்கள் என்றால் சம்பாதித்து நகை மற்றும் சொத்துசேர்த்தால் போதும் என்ற எண்ணமே நம் சமூகத்தின் பொது மனநிலையாக இருக்கிறது. அதை மீறி மனதிருப்தியுடன் ஒரு பெரிய வெற்றியைக் கொடுக்க வேண்டும் என்றால், அதற்கு முதலில் தன் மீது அதிகமான கவனம் செலுத்துபவர்களாக நாம் இருக்க வேண்டும்; தன்னை எங்கேயும் எந்தச் சூழ்நிலையிலும் தொலைத்து விடாதவர்களாக இருக்கவேண்டும் என்பதே அடிப்படைப் பயிற்சியாக இருக்கிறது.

எனக்குத் தெரிந்த அக்கா கல்யாணம் செய்த போன வீட்டில் அனைவருமே சைவமாக இருந்தார்கள். ஆனால் இந்த அக்காவுக்கு அசைவம் பிடிக்கும். அதனால் வாரத்தில் இரண்டு நாள்கள் அவருக்காக மட்டுமே கால் கிலோ மட்டன் அல்லது சிக்கன் அல்லது மீன் என்று எடுத்து தனியாக சமைத்து சாப்பிடுவார். சாப்பிடுற சாப்பாட்டில் ஆரம்பித்து தனக்கான நேரம் ஒதுக்குவதில் இருந்து ஒவ்வொரு தினத்தையும் அவருக்கான உலகில் திருப்தியாக இருக்க முயற்சி செய்வார். அதனால் தன்மீதும் தன்குடும்பத்தின் மீதும் சமூகத்தின் மீதும் தேவையில்லாத விஷயங்களை திணிக்கும் நேரமே தனக்கு இல்லை என்று சொல்லுவார். வெட்டிப் பிரச்சனைகள் எல்லாமே ஓரளவு தவிர்க்க முடிகிறது என்பார்.

இவர்களைப் போன்றவர்கள்தான் தங்களுக்கான சரியான வாய்ப்புக்காக காத்திருந்து அதில் முழுதாக தன்னை ஈடுபடுத்தி, அவர்கள் கனவு கண்ட அந்த இடத்திற்கும் அந்த வெற்றிக்கும் தகுதியான நபராக தங்களை மாற்றிக்கொள்கின்றனர்.

மேலே சொன்ன ரெண்டு பேரை எடுத்துக்கொண்டால், ஜோதிகா ‘குண்டான நடிகை’ என்றும் ‘ஓவர் ஆக்டிங்’ என்றும் பலரால் விமர்சிக்கப்பட்டவராக இருந்தார். திரிஷாவை எடுத்துக் கொண்டால் ‘டான்ஸ் ஆட வராது’, ‘நடிக்க வராது’, ‘அம்மாவின் பேச்சைக்கேட்டு செயல்படுபவர்’ என்று பலரால் விமர்சிக்கப்பட்டவராக இருந்தார். இவர்கள் ரெண்டு பேருமே தங்களுடைய பொருளாதாரத் தேவையை நிறைவேற்றிக்கொள்ள சினிமாவை வேலையாக எடுத்து அதில் வெற்றி பெற்றவர்கள் என்ற அளவில்தான் இருந்தார்கள். அதற்காக நிறைய படங்களில் நடித்து, பல தவறுகளைத் திருத்தி, சரியான இடத்திற்கு வரும்வரை தங்களை எந்த இடத்திலும் தொலைக்காமல் இருந்தவர்கள் என்பது தான் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கிறேன்.

பொதுவாக லைம்லைட்டில் வேலை பார்க்கும் பெண்களுக்கு திருமணம் நடந்ததும் துறைரீதியாக வாய்ப்புகள் இல்லை என்றும் காதல் கிசுகிசுக்களில் சிக்கினால் வாய்ப்புகள் குறைவாக கிடைக்கும் என்றும் மிகவும் நம்பக்கூடிய பொய்களாக மக்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இந்த நம்பக்கூடிய பொய்கள் எதுவும் தங்களை ஒன்றும் செய்யாது என்பதை இவர்கள் இருவரும் நமக்கு வாழ்ந்து காட்டுகின்றனர்.

முப்பத்தைந்து வயதுக்குப்பின் பெண்கள் தங்களுக்குக் கிடைக்கும் விடுதலையை யாருக்காகவும் இல்லாமல், தன் திறமையை நம்பி தெளிவாகப் பயன்படுத்துவார்கள். நட்பு, காதல், திருமணம், குழந்தை என்று எல்லாவற்றையும் ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து ஓவர் ரொமாண்டிசைஸ் எல்லாம் செய்து கொள்ளாமல், எது யதார்த்தம் என்ற புரிதலில் சில பெண்கள் தெளிவாக செயல்பட ஆரம்பிப்பார்கள். ‘உறவும் முக்கியம் தன்னுடைய கனவும் முக்கியம்’ எனத் தெளிவாக குடும்பத்தில், சமூகத்தில் சொல்லக்கூடிய நபர்களாக மாறி இருப்பார்கள். ‘ என் கனவை நனவாக்க குடும்ப உறவுகளும் நண்பர்களும் துணையாக இருங்க’, என்று கேட்பார்கள். சினிமாவில் வருவதுபோல ‘எல்லாமே நானே செய்வேன்’ என்று சொல்லாமல், எது எதற்கு உதவி தேவையோ அதை எல்லாம் கேட்டு, திட்டமிட்டு வேலை செய்யத் தொடங்குவார்கள்.

அதனால் காதல், திருமணம் போன்றவை எல்லாம் அவர்களின் சுயவளர்ச்சியைத் தடுக்காமல் எதற்கு எந்த நேரத்தில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் எதற்கு எந்த இடத்தில் அவர்களுக்கான நேரம் செலவழிக்க வேண்டும் என்பதும் மிக முக்கியமான அஜெண்டாவாக மாற்றி இருப்பார்கள். அதன்பின், எஞ்சிய நேரத்தில் தங்களுடைய வேலை சார்ந்து செயல்படுவது, அதை எப்படி மெருகேற்றவது, புதியவை கற்றுக் கொள்வது, ஒரு வேலையை செய்து முடிக்க கால அவகாசம் என எல்லாவற்றுக்கும் ஒரு திட்டம் வைத்துக் கொள்வார்கள்.

முதலில் அவர்கள் எதை எல்லாம் பார்த்து பயந்து, வியந்தார்களோ, அவை எல்லாமே ‘சாதாரணமானவை’ என நினைக்கும் மனநிலைக்கு வந்துவிடுகின்றனர். இந்த சுயதேடல் இருப்பவர்கள், அவர்கள் ஆசையாக கனவு கண்ட விஷயம் அவர்கள் வாழ்வில் வரும்போது அத்தனை தயக்கத்தையும் உடைத்துக்கொண்டு அதைச்செய்து முடிப்பார்கள். அது இயற்கையின்நியதியா அல்லது நம்பிக்கையின்நியதியா என்பதுதான் இது வரை புரியாத ஆச்சரியமாக இருக்கிறது.

அவர்களின் அந்த ஆசை, வரலாறு காணாத வெற்றியையும் ஒரு ஆத்மதிருப்தியையும் அவர்கள் கையில் திணித்து விடுகிறது. எல்லாவற்றையும் தன்னுடைய பார்வையில் இருந்து பார்க்கவும் பழகவும் ஆரம்பிக்கிறார்கள். அதில் அவர்களுடைய உழைப்பு, அறிவுத்திறன் மற்றும் ஈடுபாடு, துறைநாயகர்களாக நம்முன் அவர்களை நிறுத்திவிடுகிறது.

எழுத்தாளர் ஜெயமோகன் சொல்வது போல், ‘வேலை என்பதை காகிதப்பணமாக பார்த்த தலைமுறை நாம் இல்லை’, என்பதை முதலில் ஒத்துக்கொள்ள வேண்டும். வேலை என்பதில் ஆத்மதிருப்தியைத் தேடும் தலைமுறையாக நாம் மாறிவிட்டோம். அதனால்தான் இந்தக் கொண்டாட்டத்தை நாமும் கொண்டாடுகிறோம்.

ஒரு மனிதரின் நிறைவில் உள்ள தேடலுக்கு பதிலாக, இன்றைய ஜோதிகா மற்றும் திரிஷாவின் மகிழ்ச்சி, நமக்கான ஒவ்வொரு நாளையும் புத்துணர்வுமிக்க நாளாக நம் தலைமுறைக்கு கடத்தி இருக்கிறது என்றே நம்புகிறேன். இவர்களின் புகைப்படங்கள் தரும் நம்பிக்கை பல பெண்களுக்குக் கடத்தப்பட்டு, அவர்களிடமும் நம்பிக்கை துளிர்விட்டிருக்கிறது என்பதே இந்தக் கொண்டாட்டத்தின் சிறப்பு!

படைப்பாளர்

காயத்ரி மஹதி

காயத்ரி மஹதி மதுரையைச் சேர்ந்த மனநல ஆலோசகர். தனிப்பட்ட முறையில் கவுன்ஸலிங் செய்து வருகிறார். உளவியல் ரீதியாக குடி நோயாளிகள் மற்றும் குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக 2016ம் ஆண்டு ஈஸ்டர்ன் பூமிகா நிறுவனம் இவருக்கு “சிறந்த பெண்மணி” விருது வழங்கி கவுரவித்தது. உளவியல் ரீதியாக பள்ளிகளில விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக 2019ம் ஆண்டு நந்தவனம் நிறுவனம் “சிறந்த பெண்மணி” விருது அளித்தது. நாளிதழ்கள், செய்தித் தாள்களில் மனநலம் சார்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார்.