கைநிறைய சான்றிதழ்களுடன் நகலாக்கியை உயிர்ப்பித்து ஒவ்வொரு சான்றிதழையும் மூன்று நகல்களாகப் பெருக்கிக்கொண்டிருந்தாள் ஜெயா. ஒன்று நகலாகும்போது மற்றொன்றைப் படித்துப் பார்த்தாள். மொத்த வேலையும் முடிந்ததும் கடையின் முகப்பில் நின்று கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் அத்தனையையும் அடுக்கிக்கொடுத்து, “மொத்தமா நூத்தம்பத்திரெண்டு, நூத்தம்பது கொடுங்க போதும்”, என்றாள்.

கைப்பைக்குள் பணம் தேடிக்கொண்டிருந்தவளிடம், “நீங்க என்ன படிச்சிருக்கீங்க?”, என்று கேட்டாள் ஜெயா.

அவள் அவளைப் பார்த்துச் சிரித்தாள். பதிலேதும் அளிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டாள்.

“அவளைப் பார்த்தாலே தெரியுது திமிரு புடிச்சவன்னு, அவள்ட கேக்குறா பாரு!” பேப்பர்களை அடுக்கிக்கொண்டே சரண்யா முணுமுணுத்தாள்.

“நெறையா படிச்சிருக்காடி… அதான் என்னா படிப்புன்னு கேட்டுக்கலாம்னு கேட்டேன்.”

“கேட்டு! நீ படிச்சி கிழிப்பியா?”, சரண்யா விடைத்தாள்.

“தெரியாம கேட்டுப்புட்டேன்டி ஆயா! ஆள உட்றி ஆத்தா”, ஜெயா கும்பிட்டாள்.

“கும்புடை முடிச்சிட்டு டேபிளைத் தொடை, அண்ணன் வர நேரம், வாங்கிக் கட்டிக்காத!”, ஜெயாவை முடுக்கினாள் சரண்யா.

மிதவேகத்தில் வந்து தன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி கடைக்குள் புகுந்தான் தீபன்.

“ராகவன் வந்து பணம் ஏதும் கொடுத்தாரா?”, யாரையும் குறிப்பிட்டுப் பார்க்காமல் தன் கைப்பேசியைச் சோதித்துக்கொண்டே கேட்டான்.

“ஆமாண்ணே… மூவாயிரம் கொடுத்தாரு, உங்க டேபிள் ட்ராவுல வச்சிருக்கேன் பாருங்கண்ணே”, சரண்யா சொன்னாள்.

“மீனாவுக்குப் பதிலா வேற ஒரு பொண்ணைக் கூப்டு வரேன்னு சொன்னியே?”, ஜெயாவைப் பார்த்துக் கேட்டான்.

“ஆமாண்ணே, வந்துடுவா அந்தப் பொண்ணு வர நேரந்தான்” ,ஜெயா குரலைக் குறைத்தாள்.

“மொதோ நாளே இந்த லட்சணத்துல வேலைக்கு வந்தா நல்லாத்தான் இருக்கும். அந்த மீனாவும் ஒரு வாரந்தான் வந்துச்சி அப்புறம் எவனோடவோ ஓடிருச்சின்னு சொன்ன, இதையாச்சும் ஒழுங்கா புடி”, என்றபடியே வேறொரு வேலையாய் வெளியேறினான் தீபன்.

அவன் வலப்பக்கம் சென்றான்; இடப்பக்கத்திலிருந்து வெள்ளை நிற சுடிதாரில் சாதனா வந்தாள்.

“ஏன்டி இதான் நீ வேலைக்கு வார லட்சணமா?”, ஜெயா கத்தினாள்.

“நீதானடி பத்து மணிக்கு வர சொன்ன!”, சாதனா விழிகளை உருட்டினாள்.

“ஆமா பத்துன்னா பத்துக்குத்தான் வருவா ஆபிசரம்மா”, சரண்யா உதட்டைச் சுழித்தாள்.

“அந்தண்ணன் சரியான முசுடுடி, சீக்கிரம் உள்ள வா”, ஜெயா சாதனாவைச் சேர்த்துக்கொண்டாள்.

செராக்ஸ் எந்திரங்களைக் கையாளும் முறைகளைச் சொல்லிக் கொடுத்தாள் ஜெயா. “இந்தப் பச்சை பொத்தான் இருக்குல்ல…?” ஜெயா ஆரம்பித்தாள்.

“அது ஆன் பட்டன்டி. அதை ஏன் பச்சைன்னு சொல்ற அதுலதான் எழுதிருக்குல்ல!”, சாதனா திருத்தினாள்.

குனிந்து சொல்லிக்கொண்டிருந்த ஜெயா நிமிர்ந்தாள். “ஓகோ படிச்சத் திமிரோ”, நெஞ்சை உயர்த்தினாள் ஜெயா.

“அடியே அதெல்லாம் இல்லடி சும்மா சொன்னேன் அவ்ளோதான்”, சாதனா பணிந்தாள்.

“இங்க பாரு அந்த அண்ணனுக்குப் பொம்பள புள்ளைக சத்தமா பேசுனாலே புடிக்காது, நீ இவ்ளோ வெவரமால்லாம் நடந்துக்காத, தொரத்தி உட்ருவான். கொஞ்சம் மண்டை சூடு புடிச்சவன், மத்தபடி நல்ல மனுசன். ஆறு வருசமா இங்க இருக்கேன் தப்பா கிப்பா பேச மாட்டான். ஒழுங்கா பொத்திக்கிட்டு வேலையப் பாரு”, சரண்யா முடித்தாள்.

பெட்டிகளில் வந்திருந்த காகிதக் கட்டுகளைக் கணக்கு பார்த்துக் கீழே அமர்ந்து அடுக்கிக் கொண்டிருந்தனர் சரண்யாவும் ஜெயாவும்.

சிறுவன் ஒருவனுக்கு செராக்ஸ் போட்டுவிட்டு அவனிடமிருந்து ஐந்து ரூபாயைப் பெற்று சாதனா நகர்கையில், தீபன் நின்றான்.

“உங்களுக்கு என்ன வேணும்?” என்றாள் அவனைப் பார்த்து.

பேண்ட் பாக்கெட்டுகளில் இரண்டு கைகளையும் சொருகிக்கொண்டு அழுத்தமாக நின்றான் தீபன். எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனைத் தன் புருவங்களை அடுத்தடுத்தாய் இரு முறை உயர்த்தி என்ன என்பது போல் இடுப்பில் கைகளை வைத்து சாதனாவும் அழுத்தமாய் நின்றாள்.

“ஏய் ஜெயா, யாரிந்த மெண்டலு?”, தீபன் கூச்சலிட்டான்.

பதறி எழுந்த சரண்யாவின் மடியிலிருந்து சரிந்த காகிதங்கள் மின் விசிறியின் சுழற்சிக்கு இசைந்து நான்கு திசைக்காய்ப் பறந்தன. ஒரு ஆள் மட்டுமே நுழைய முடியும் இடுப்பு வரை இருக்கும் அந்த மரக்கதவைத் திறந்து விட்டாள் சரண்யா.

“அண்ணன் அவளுக்கு உங்களைத் தெரியல அதான்…”, இழுத்தாள் ஜெயா.

“வேலையை மட்டும் பாக்க சொல்லு ஜாடையெல்லாம் கடைத்தெருவுக்கு சரி வராது.பொம்பளைப் புள்ளயா அடக்கமா இருந்துக்க சொல்லு”, சிடுசிடுத்தான் தீபன்.

தான் என்ன செய்துவிட்டோம் இவ்வளவு இரைச்சலுக்கு எனப் புரியாதவளாய் அவன் பார்வையிலிருந்து விலகிச சென்றாள் சாதனா.

தீபன் கடைக்கு வந்து செல்லும் நேரம் குறைவுதான் என்றாலும் அனைத்தையும் கண்காணித்து வைத்திருப்பான். மறுநாள் கணக்கு நோட்டின் கணக்குகள் புது முறையாய்க் குறிக்கப்பட்டிருந்தன. எழுத்துக்களும் இயந்திரத்தால் பதிந்தவை போல் இருந்தன. விசாரித்ததில் அது சாதனாவினுடையது எனத் தெரிய வந்தது. சொல்ல வேண்டுமே என்பதற்காய் இரண்டு குறைகளைச் சொல்லி வைத்தான்.

ஒரு முறை கைப்பேசியை விட்டுவிட்டு வண்டிவரை சென்றவனின் பின்னே ஓடி, “அண்ணே போனை மறந்துட்டீங்க” என்று கொடுத்து விட்டு முகத்திற்கு நேராய்ச் சிரித்தவளை எதிர்வாங்கவே முடியவில்லை அவனால். கைப்பேசியை மட்டும் வாங்கிக் கொண்டான்.

இப்பொழுதெல்லாம் அவன் கடையில் இருக்கும் நேரம் அதிகரித்திருந்தது. அதிலும் அந்திக்கான அந்த நான்கு மணியை அவன் தவற விடுவதே இல்லை. மாலை நேர புத்துணர்ச்சிக்காய்ப் பக்கத்து வீட்டில் முகம் கழுவித் திரும்பும் சாதனாவின் முகத்தில் நீரின் மினுமினுப்பு அவளை இரு மடங்காய்ப் பிரதியிட்டுக் காட்டும். சுடிதாரின் துப்பட்டாவைக் கொண்டு துடைத்துக் கொண்டே வரும்போது அவளின் நிறம் சற்று தாழ்ந்து மீளும். புருவங்களில் கோர்த்து நிற்கும் நீர் கரும்புல்லின் நுனிபனியாய்க் கவிழ்ந்திருக்கும்.

முகத்தைத் துடைத்துக்கொண்டே அவன் பார்வையை உறிஞ்சிக் கொள்வாள் சாதனா. அவனின் வாசம் அவன் இல்லாத நேரங்களிலும் அவளுக்கு வீசும். அவன் குரலில், தான் குளிர்வதை ஆடைகளின் பிசுபிசுப்பில் உணர்ந்து கொள்வாள். அவனின் உயரமும் மணமும் அவளின் ஏதோ ஓர் நினைவின் அடர்காட்டில் அரற்றி மீட்கும். அவனின் ஆசை அதிகரிக்கையில் தனித்தோர் காட்டில் சருகுகளின் படுக்கையில் அவன் அவளை மூர்க்கமாய்ப் புணர்வதாய் காட்சிகள் தோன்றி அவளை அனலாக்கும்.

அன்றொரு நாள், ஒருவர் மட்டுமே செல்ல முடியும் அவ்வழியைப் பாதி மறைத்துக் கொண்டு எதையோ எழுதிக்கொண்டிருந்த சாதனாவைக் கடந்து சென்றான் தீபன். சாதனாவின் பின்னணி மொத்தமும் அவனை உரசின. திடுக்கிட்டு நகர்ந்தவள், அவனைக் கண்டதும் குனிந்து கொண்டாள்.

சரண்யாவிடமும் ஜெயாவிடமும் இது பற்றிச் சொல்ல அவள் விரும்பவில்லை. இப்பொழுதெல்லாம் அவனை அண்ணன் என சாதனா அழைக்காததை சரண்யா கவனித்திருந்தாள்.

அசல்களை அப்படியே நகல்களாக்கும் வெள்ளைக் காகிதங்கள் தூய அமைதியில் அடங்கிக்கிடந்தன. எதுவுமே இல்லை என்ற நிலையிலும் களங்கம் இல்லாத அந்தத் தாள்கள் கம்பீரமாய் உறங்கின. கட்டுகளை எடுக்கக் குனிந்த சாதனா அனிச்சையாய் முன் கழுத்தில் கை வைத்துக் கொண்டாள். பின்னர் தலையை உயர்த்தி அவன் பார்க்கிறானா எனப் பார்த்துக் கொண்டாள். தீபன் தன் பார்வையை அப்போதுதான் வேறு பக்கம் திருப்பினான்.

காகிதக் கட்டுக்களை அவன் மேசையில் வைத்து விட்டு, ” இந்த ஆறு கட்டும் புதுசா கணக்குல ஏத்த வேண்டியது”, என்றாள் சாதனா.

கணக்கு நோட்டில் குறிப்புகளை எழுதிவிட்டுக் கட்டுகளின் மேல் இருந்த அவளின் கைகளை அழுத்திப் பிடித்தான் தீபன். அவன் பிடித்தவுடன் புது மண்பானையிலிருந்து கசியும் நீர்போல் அவள் உள்ளங்கையில் நீர் மொட்டுக்கள் பூத்தன. அவர்களின் கைகள் சந்தித்துக் கொண்டதைக் கண்களுக்குக் கடத்தாமல் தவிர்த்துக் கொண்டனர். ஒரு கட்டத்தில் அவனை சாதனா கவனித்தாள்.

Photo by ian dooley on Unsplash

எந்தச் சலனமுமின்றி மறுகையில் தன் செல்போனைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவளின் கைகளைக் கையகப்படுத்தியிருப்பது போன்ற தொனி எதுவும் அவனிடமில்லை. மெல்ல அவளின் கட்டை விரலைத் தன் கட்டை விரலோடுக் குவித்தான் பின் வருடினான். அவன் பிடியிலிருந்து வெளியேறும்படியான எந்த முயற்சியும் அவளிடமில்லை. அவன் கைகளுக்குள் முழுதாய் அவளிருந்தாள். விரல்களை இடுக்கின்றிக் கட்டினான். அவளின் உள்ளங்கையைப் படுக்க வைத்து அவனின் ரேகைகள் படரத் தொடங்கின.

அட்டைப்பெட்டிகளுடன் வந்து கொண்டிருந்த சரண்யா ஜெயாவின் குரல்களைக் கேட்டு கையை மீட்டுக் கொண்டான் தீபன். சாதனாவின் கை அங்கேயே ஈரம்பரப்பிக் கிடந்தது.

“வந்து சொமையை வாங்குடி”, ஜெயா அரற்றினாள். பதறி ஓடி அவளுக்கு ஒரு கைகொடுத்தாள் சாதனா.

சாதனா மட்டுமே இருந்த கடைக்குள் தீபன் எப்போது வந்தான் என ஜெயாவுக்கும் சரண்யாவுக்கும் தெரியவில்லை.

அவர்கள் வந்த ஐந்து நிமிடங்களுக்கெல்லாம் தீபன் வெளியேறினான்.

ஜெயாவும் சரண்யாவும் சாடைகாட்டி சிரித்துக்கொண்டனர்.

பேருந்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தவள் தன் உள்ளங்கை நீர்த்துக் கொண்டே இருப்பதைப் பார்த்துச் சிவந்தாள். தன் கைதான் என்பதையும் மறந்து அதை நெஞ்சருகே அணைத்துக் கொண்டாள். அவனே அவள் மீது படர்வது போல் இருந்தது. அது அவன் தான் என தீர்க்கமானவளாய் அவனை அருகே இழுத்து முத்தமிட விழைந்தாள். உள்ளங்கை மணம் பரப்பி நெடி ஏறியது. அது மருத மரத்தின் சுகந்தம்.

அவள் வீட்டின் பின்னால் ஆற்றோரம் உயர்ந்திருக்கும் அம்மருதன் தான் சிறுமி சாதனாவின் உற்ற ஆறுதல். அதைக் கட்டிப் பிடிப்பதில் அவளின் வெற்று மார்பு சிராய்ப்பிலும் உச்சம் தொடும்.

அடுத்த நாள் பதினோர் மணியாகியும் சாதனா வந்திருக்கவில்லை. உள் நுழையும் போதே,”எங்க அது?”, எனக் கேட்டுக்கொண்டே தீபன் வந்தான்.

“தெர்லண்ணே ஒன்னும் சொல்லல”, ஜெயா கையைப் பிசைந்தாள்.

கைப்பேசியைப் பார்ப்பது கடை வீதியைப் பார்ப்பதுமாக உள்கொதியைக் வெளிக்காட்டாமல் அமர்ந்திருந்தான்.

நல்ல வேகத்தில் வந்த இரு சக்கர வாகனம் ஒன்று கடைக்கு முன் நின்றது. அது கிளப்பி வந்த புழுதி மொத்தத்தையும் கடைக்கு முன் விரித்தது. அதையோட்டி வந்தவனைக் கையசைத்து அனுப்பி விட்டு கடைக்குள் ஏறினாள் சாதனா.

தீபன் இருப்பான் என அவள் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் அது அவன் வழக்கமாக அங்கே இருக்கும் நேரமில்லை.

பரிபூரண அமைதிக்குக் காகிதங்களும் ஒத்துழைத்திருந்தன. ஜெயாவையும் சரண்யாவையும் பார்சல் எடுக்கும்படி அனுப்பி வைத்தான் தீபன்.
பார்சல் வந்திருக்க வாய்ப்பில்லை எனத் தெரிந்தும் இருவரும் கடையை விட்டுச் சென்றனர்.

“யாரவன்?”, நல்லதொரு குரலில் தீபன் கேட்டான்.

“பக்கத்து வீட்டு அண்ணன்”, சின்னதொரு குரலில் சாதனா சொன்னாள்.

“ஏன் பஸ்ச விட்டுட்டியா?”

“இல்ல அவங்க அம்மாவுக்கு திடீர்னு நெஞ்சு வலி. ராத்திரியே ஆசுபத்திரிக்கு கொண்டாந்துட்டோம். அதான் ஊட்டுக்குப் போய்ட்டு கெளம்பி வந்தேன்”.

“எவன் கூப்டாலும் போய்ட வேண்டியது!”, என்று சொல்லிவிட்டு வேகமாய் எழுந்து வண்டியை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

சரண்யாவும் ஜெயாவும் திரும்பியபோது சாதனாவின் கண்கள் மழை நனைத்த தென்னங்கீற்றுப் போல் ஊறி இருந்தன.

இரவு உணவு வேண்டாமெனப் படுத்தவளின் நெற்றியைத் தொட்டுப்பார்த்தாள் அம்மா. காய்ச்சல் ஏதும் இல்லையென உறுதி செய்து கொண்டு திண்ணையில் படுத்தாள். கடந்த சில வாரங்களாய் ஆடு திருடர்களின் அட்டகாசம் தாளாமல் இருந்தது. போன வெள்ளிக்கிழமைதான் மூன்று குட்டிகளைப் போட்டது தேனு. ஆடுகளுக்கும் மகளுக்கும் காவலாய் வெளிப்பக்கம் தாழிட்டு நிலைப்படியில் தலை வைத்துக் கண்ணயர்ந்தாள் அம்மா.

ஓடு குறைந்த இடுக்குகளின் வழி நிலவு இறங்கிக் கொண்டிருந்தது. அம்மா வெளியில் உறங்கத் தொடங்கியதும் கண்களைத் திறந்து கொண்டாள் சாதனா.

அவன் கேட்ட வார்த்தை காதுக்குள் நுழையாமல் நேரடியாய் அடி நெஞ்சுக்குள் சென்றதுதான் எப்படி என அவளுக்குப் புரியவில்லை. அவன் அப்படிக் கேட்ட அந்த நொடியிலேயே கண்கள் நொடிந்தன. வேறு எவன் அப்படிக் கேட்டிருந்தாலும் அவள் முன் இப்படி முழுதாய் வெளியேறியிருக்க முடியாது. அவனுக்காய் ஓடியிருந்த நாள் அது. அவனைக் காண வேண்டுமென ஓடிய நாள் அது. கண்களின் விளிம்புகளில் நிற்க முடியாமல் கனம் கனமாய்த் துளிகள் குதித்துக் கொண்டிருந்தன. தலையணையில் அவை விழும்போது எழுந்த சத்தம் அந்தத் துளிகளின் எடையை அவள் காதோரம் சொல்லிக் கொண்டே இருந்தன.

நிலவின் சரிவில் வானம் நுணுங்கி துகள் துகளாய்ச் சிதறிக் கொண்டிருந்தது. நிலவின் சில்லுகள் தேறுமா என மின்மினிகளை அடித்துத் துழாவிக்கொண்டிருந்தது இரவு. பத்துக்கு பத்தில் சம்மணமிட்டிருந்த அவ்வறை முழுதும் நிலவு படிந்து கிடந்தது. குளிரின் ஈரம் இறங்க இறங்க, இரவு நகர்ந்து கொண்டிருந்தது. அறையின் தென்மேற்கு மூலையில் கருவேல முள்களை சம உயரத்திற்கு வெட்டிக் கட்டி அடுக்கி வைத்திருந்தாள் அம்மா. ஒன்றன் மீதொன்றாய் அமர்ந்த அக்கட்டுகள் தரையிலிருந்து இரண்டடிக்கு வளர்ந்திருந்தன.

நிலவின் துண்டுகளைத் தேடி தேடி களைப்புற்ற மின்மினிகள் ஆங்காங்கே மயங்கி விழுந்தன. ஒரு கைப்பிடிக்கான மின்மினிகள் முட்கட்டுகளில் மயங்கின. இடுக்குகளைப் பிரகாசமாக்கி துயிலடைந்தன மின்மினிகள். சாதனாவிற்கு தூக்கம் இன்னும் பிடிபடவில்லை. அவனின் அச்சொற்கள் கட்டுண்டு கிடக்கும் அம்முட்கள் போல் இறுக்கப்பட்டுக் குத்தின.

மின்மினிகள் ஒன்று சேர்ந்து ஒரே இடத்தில் தூங்குவது போல் அவ்வொரு கட்டில் மட்டும் வெளிச்சம் அடர்த்தியாய் இருந்தது. வெளிச்சத்தின் வட்டம் பெரிதாகிக் கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் தீயென எழுந்தது. முட்கட்டுகள் தீப்பற்றிக் கொண்டதைக் கண்டு உடலெல்லாம் திகில் பரவ “ஓ”வெனக் கத்தினாள் சாதனா.

“அம்மா உள்ள ஓடியாம்மா முள்ளுக்கட்டு பத்திக்கிட்டு”, எனக் கத்தினாள் அவள். அம்மாவின் காதுகளை அது சேர்ந்ததாகத் தெரியவில்லை.

தன் குரல்வளையைத் தடவிக் கொடுத்தும் கூச்சலிட்டாள் அம்மா வரவே இல்லை. மொத்தக் கட்டுகளும் எரிந்து முடிந்தன. தீயின் முடிவில் எஞ்சும் புகைக்கு தீயைக் காட்டிலும் சற்று நீண்ட ஆயுள். இருளின் பின்னந்திரையில் மங்கிய வெள்ளையில் அப்புகை கசிந்து கொண்டிருந்தது. ஒருக்களித்து படுத்துக் கொண்டே புகை வரையும் ஊடுருவலைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சாதனா.

Photo by Toa Heftiba on Unsplash

மேல்நோக்கி எழும்பிக் கொண்டிருந்த அப்புகை வானைத் தொடும் பொருட்டு ஓட்டுக்கூரையின் ஓட்டைகளைத் தேடிக்கொண்டிருந்தது. புகையின் போக்கை ஊகித்தவளாய்த் திரும்பிப் படுத்தாள் சாதனா. அவளின் கொலுசு மணிகளும் அவளுடன் திரும்பின. “நானும் வருகிறேன்”, என அவை வாய்விட்டு சொல்வதுபோல் கொத்து மணிகளெனக் கூட்டமாய்ச் சிணுங்கின.

கொலுசு சத்தத்தைக் கேட்ட நொடியில் கூரையின் வரம்பில் நின்ற புகை நிதானித்தது. மேல் எழும்பவில்லை. ஆழ்ந்த சிந்தனையில் சிக்கிய பூனையைப் போல அசைவற்று நின்றது. “புகை முற்றிலுமாய்ச் சென்றிருக்குமா!” என சோதிப்பவளாய் மீண்டும் புகையின் பக்கம் திரும்பினாள் சாதனா. அறையின் நடுவில் மருத மரமொன்று நிற்பது போல் மொத்தப் புகையும் அவளின் முன் நின்றது.

கம்பீரமான நிலைப்பு அது. கூரைக்கு வெளியே கிளை விட்டிருக்கலாம் ஆனால் அறைக்குள் மொத்தமும் அடிமரம்தான். எழுந்து சென்றே அம்மாவை எழுப்பி விடலாம் என கைகளை ஊன்றி எழ முயன்றாள் சாதனா. கைகளை அசைக்கவே முடியவில்லை அவளால். அசைய முடியாத ஆத்திரத்தில் கால்களை உதைத்துக் கொண்டாள். கொலுசொலி மருதனின் உயரத்தைச் சற்றுக் குறைத்தது. தலையற்ற உடலென கிளையற்ற அம்மருதன் குனிந்து மெல்லச் சரிவது போல் இருந்தது அது அவளுக்கு.

கொலுசின் மூச்சை அடக்கிக் கொண்டாள் அவள். மரம் அசைவற்று நின்றது. அதன் கம்பீரத்தின் பட்டைகளில் காற்றுக் குமிழிகள் கொப்பளிக்கத் தொடங்கின. மொட்டை மரமாய்த் தன் உச்சியைக் கொண்டு கொலுசின் நடுக்கத்தை மோப்பமிட்டான் மருதன். தேடலின் பிடியில் தன்னை ஓர் ஆள் உயரமெனச் சுருக்கிக் கொண்டான். சாணித் தரையில் இரவின் சாரல் அப்பிக் கிடந்தது. தரைவரைச் சரிந்தவன் குளிரைத் தாளாது தறிகெட்டு அலைந்தான். இரையை உணர்ந்துவிட்ட பித்துற்ற பாம்பொன்றாய் தட்டுப்பட்டதிலெல்லாம் ஏறி இறங்கிக் கொண்டிருந்தான். தன் மொத்த உடலையும் கல்லென இறுக்கி வைத்திருந்தாள் சாதனா. இதுவே அவளின் கடைசி இரவெனவும் முடிவெடுத்துக் கண்களை முடிச்சிட்டு மூடிக்கொண்டாள்.

குளிரிலிருந்து வெதுவெதுப்பில் மாறியதாய்க் கண்டுகொண்டபோது சாதனாவின் பாயை அடைந்திருந்தான் மருதன். சாணித் தரையிலிருந்து முன்னேறியவனுக்கு அது இதமாய் இருந்தது. பாய்க்கும் மேல் அம்மாவின் இரண்டு புடவைகளை விரித்திருந்தாள் சாதனா. பாயிலிருந்து புடவைகளை அடைந்திருந்தான் மருதன். அது மேலும் அவனை ஆற்றுப்படுத்தியிருந்தது. வேரிலும் உச்சியிலும் கூடுமானவற்றைக் குறைத்துக் கொண்டே வந்தவன் சாதனாவின் காலடியில் தலையை மட்டும் வைத்துக் கொண்டு மீதி உடலை குளிர் தரையில் போட்டுக் கொண்டான்.

காலடியில் கிடந்தவனுக்கு ஈரத்துடன் வினைபுரிந்த வெள்ளியின் நெடி வீசியது. காலோரம் பஞ்சென ஒன்று அணைவது அவளுக்குத் துல்லியமாய்த் தெரிந்தது. ஆனாலும் கண்களை அவள் திறக்கவே இல்லை. தன் உச்சியை அவள் உள்ளங்காலில் அணைத்தான் மருதன். அவளின் கால்களுக்குள் குளுமைக் கூடுதல் ஆக்கிரமிப்பில் இருந்தது. உள்ளங்காலில் வந்தணைந்த அச்சூட்டில் சிலிர்ப்பொன்று அவள் உச்சம் வரை சென்றது. மெல்லக் கிந்தினாள் தன் கால்களை. கொலுசு ஒலித்துவிட்டது. பதுவிசாய்க் கிடந்தவனை அவ்வொலி கிளர்த்திட்டு வளர்த்தது. ஆளென வடிந்தவன் அவள் கால்வழி முன்னேறினான். அறை முழுதும் மருதத்தின் வீச்சம்.

“நான் கத்துறது பக்கத்துத் தெரு வரைக்கும் கேட்டு அங்கேந்து ஓடியாருது மக்க, இவ என்னான்னா இன்னும் இழுத்துப் போத்திருக்கா”, பட்டை விறகுகளைப் படக்கென உடைத்து அடுப்பில் வைத்துக் கொண்டே அம்மா கத்திக் கொண்டிருந்தாள்.

அம்மாவின் குரல் வெகு தூரத்திலிருந்து கிளம்பி அவள் தலைமாட்டில் ‘டொக்’கென்ற டீக்குவளையில் முடிந்தது.

போர்வைக்குள்ளிருந்தே விடியலைக் கண்ணுற்றாள். சுயம் மீட்டவளாய் கால்களை உதறினாள். போர்வையை விலக்கி சட்டென எழுந்தமர்ந்தாள். தென்மேறகு மூலையை வெறித்தபடி தலைவிரி கோலமாய் உட்கார்ந்திருந்தாள். முட்கட்டுகள் வாடாமல் வதங்காமல் சரியக்கூட இல்லாமல் அங்கேயே இருந்தன. நேற்று இரவு எரிந்தவை உருக்குலையாமல் இருப்பது எப்படி என நிகழ்வுகளை மீட்டுக் கொண்டிருந்தாள்.

“சீக்கிரம் குளிச்சி கெளம்புடி மணி எட்டாவுது”, சோற்றை வடித்துக்கொண்டே அம்மா பரபரப்பாக்கினாள்.

தலைமுடியை அள்ளிக் கட்டிக்கொண்டு டீக்குவளையுடன் கிணற்றடி சென்றாள் சாதனா. முழங்கால் வரை பாவாடையை ஏற்றி இரு கால்களுக்குமிடையே சுருட்டித் திணித்துத் துணி துவைக்கும் கல்லில் உட்கார்ந்து கொண்டு மெல்ல உறிஞ்சினாள் டீயை.

“என்னாடி குத்த வச்சிருக்க காலைலயே கடைக்கிக் கெளம்பல? நேரமாச்சுடி!”, அம்மா வியப்பாய் நின்றாள்.

“நான் இனி அங்க போவல”, திரும்பிக்கொண்டாள் சாதனா.

“ஏன்டி… என்னாச்சி?”, அம்மா பதறினாள்.

“ஒன்னுமில்ல உன் வேலையப் பாரு. காலைலயே தொண்டையக் கிழிக்குற போ அந்தாண்ட”, சிடுசிடுத்தாள் சாதனா.

“ஒரு ஆத்தாக்காரி என்னா ஏதுன்னு பதற மாட்டாளா! நாளைக்கி நீ பெத்ததும் இந்த மாதிரி பேசும்போது என் வவுத்தெரிச்சல் புரியும் ஒனக்கு…”

மூன்று நாள்களுக்குப் பிறகு ஜெயாவும் சரண்யாவும் சாதனாவின் வீட்டிற்கு வந்தனர்.

“எட்டி வாயைத் தொறடி என்னதான் நடந்துச்சி?”, ஜெயா சாதனாவை உலுக்கினாள்.

“ஒன்னுமில்லங்குறேன்”, சாதனா தன்னை விடுவித்துக் கொண்டாள்.

“இங்க பாருடி சாதனா என்னமோ நடந்துருக்கு, ஒனக்கும் அந்த அண்ணனுக்கும் எடையில ஒன்னு ஓடுதுன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். அம்புட்டு மக்காடி நாங்க?”, ஜெயா வெடுக்கென்றாள்.

சாதனா நிமிரவே இல்லை. தரை மண்ணில் கோலம் போட்டுக் கலைத்தாள்.

“நீ அப்போ இனி கடைக்கு வர மாட்டியா?”, சரண்யா கேட்டாள்.

“ஆமா இனி நான் அங்க வரதா இல்ல”

“ஏன்டி எழவைக் கூட்ற? அப்டி என்னதான் நடந்துச்சி சொல்லித் தொலையேன்!”, ஜெயா வெடித்தாள்.

அதீத அமைதியில் இருந்த சாதனாவை அதற்கு மேல் வற்புறுத்தி அவர்களால் எதுவும் பெற இயலவில்லை. அவள் கொடுத்தனுப்பிய கொல்லைக் கத்திரிக்காய்களும் முருங்கைக்காய்களும் மட்டும் கைநிறைய இருந்தன.

“என்ன சொன்னுச்சி?”, மறுநாள் அவர்களுக்கு முன்னேயே கடைக்குள் இருந்த தீபன் கேட்டான்.

“ஒன்னுமே சொல்ல மாட்றாண்ணே. ஆனா இங்க இனி வர மாட்டாளாம்”, சரண்யா சொல்லி விட்டாள்.

கேட்ட உடனேயே எழுந்து விட்டான். நேரே வண்டி நோக்கிச் சென்றான். சாவி இல்லாததால் திரும்பி வந்தான்.

மனக்குழப்பத்தில் சாவியை எங்கோ வைத்துவிட்டான். மேசையைப் புடம் போட்டுத் தேடிவிட்டான். எங்கும் அகப்படவில்லை சாவி. மூலையில் குவிந்திருந்த நோட்டுக்கட்டுகளைச் சரித்தான். அங்கும் இல்லை. சரிந்த நோட்டுக்களின் வழி வெள்ளைக் காகிதத்தின் நிறத்திலேயே மாதவிடாய்க்கான உறிஞ்சேடு ஒன்று தனியாய் வந்து விழுந்தது.

அதைப் பார்த்தவன் ” இந்தக் கருமத்தெல்லாம் இதுக்குள்ள யாரு வச்சது?”, என்று அலறினான்.

ஜெயா விரைந்தோடி அதைத் தூக்கி தாவணிக்குள் ஒளித்துக் கொண்டாள்.

மேசையின் இடுக்கில் சுவற்றோரம் சிக்கிக் கொண்டிருந்த கொத்தற்ற சாவியைக் கண்டுவிட்டாள் சரண்யா. உடன் அதையெடுத்து அவன் முகத்திற்கு நேரே நீட்டினாள்.

“அதை அந்த டேபிள் மேல வையி”, என்றான். அவளும் வைத்தாள். அவள் வைத்த நொடிக்கு அதைத் தூக்கிக் கொண்டு வெளியேறினான்.

“அந்த அண்ணந்தான் சாவியைக் கையில வாங்காதுல்லடி அப்றம் என்னாத்துக்கு நீட்டுற?”, ஜெயா சிடுசிடுத்தாள்.

“சாதனா அன்னைக்கிக் கொடுத்தப்ப வாங்குனாருடி”

“அவளும் நீயும் ஒன்னா? வேலையப் பாருடி”, இருவரும் தினசரிக்குள் நுழைந்தார்கள்.

அம்மாவை விட்டுத் தனியே தூங்குவதில்லை சாதனா. வீட்டின் தென்மேற்கு மூலையில் ஏதும் இல்லாமல் பார்த்துக் கொண்டாள். ஒவ்வொரு நாளின் அந்திக்கான நான்கு மணியில் தீபனின் புன்னகை தோன்றிவிடும் அவளுக்கு. தன்னை வற்புறுத்தி அக்காட்சிகளைக் கலைத்துக் கொள்வாள். ஊரைவிட்டு வெளியேறவே இல்லை அவள். அவளுடையது நகரத்திலிருந்து பத்து கிலோமீட்டருக்குள் அமைந்திருக்கும் சிறிய கிராமம். அத்தியாவசியங்கள் அனைத்தும் கிடைக்கும் என்றாலும் கல்விக்கும் மருத்துவத்திற்கும் நகருக்குள் வந்துதான் ஆக வேண்டும்.

பக்கத்து வீட்டு அண்ணனின் வற்புறுத்தலில் நகருக்குள் இருந்த ஒரு சிறிய மருத்துவமனையின் வரவேற்பு பிரிவில் பணிக்குச் சேர்ந்தாள். நல்ல பரபரப்பான வேலை. ஓய்வின்றி ஓடும் வாழ்வில் தொலைந்தவற்றைத் தேடும் பாடு இருப்பதில்லை.

தீபனை முற்றிலும் மறந்திருந்த சாயும் அந்திக்கான நான்கு மணியொன்றில்
தான் பணிபுரியும் மருத்துவமனைக்கு நேரே அவன் நிற்பதைக் கண்டுவிட்டாள். அது அவனேதான். சரியாக இவள் கண்ணில் படும்படியாக வண்டியை நிறுத்திவிட்டு அதில் அமர்ந்திருந்தான்.

வேலை முடித்து எப்போதும் இல்லாத வேகத்தில் அவ்விடம்விட்டு வெளியேறிக் கொண்டிருந்தாள். அவன் பின் தொடர்கிறானா என அவ்வப்போது உறுதி செய்து கொண்டாள். பேருந்துக்குச் செல்லும் வழியில் எப்படியும் அவளை நிறுத்துவது என்று அவள் எதிர்பார்க்காதபடியாய் அவளுக்கு எதிரே வந்து கொண்டிருந்தான். பின்னால் வருவான் என எதிர்பார்த்தவளுக்கு அது அதிர்ச்சியாய்த்தான் இருந்தது.

எது பற்றியும் சிந்தனையற்றவனாய் அவளின் நடைக்குக் குறுக்கே வண்டியை நிறுத்தினான்.

“நான் வர மாட்டேன்னு நெனச்சியா?”, ஆத்திரம் இருந்தது அவனுக்கு.

பதிலேதும் சொல்லவில்லை அவள்.

“ஒன்னைத்தான் கேக்குறேன். நான் வர மாட்டன்னு இருக்கியா?”

“நான் எதுக்கு அதெல்லாம் நெனைக்கனும். வழியை உடுங்க”, நகர்ந்தாள் சாதனா.

“ஒனகென்னாடி அவ்ளோ வீராப்பு!”, மீண்டும் மறைத்தான்.

வழியெல்லாம் நெருப்புத் துண்டுகாளாய் எரிந்தது அவளுக்கு. தன் வழியை மறைத்து நிற்கும் அவனைப் பிடிக்கவே இல்லை அவளுக்கு.

“சோத்துக்கு வழியில்லன்னாலும் ரோசத்துக்குக் கொறச்சல் இல்ல”, வார்த்தைகளை ஈட்டிகளாய் ஏற்றினான்.

அசைவற்று நின்ற அவளின் வழியில் இயலாமை வெம்பிக் கொண்டிருந்தது. அவனின் கழுத்தைக் கடித்துத் துப்பவேண்டும் போல் இருந்தது அவளுக்கு.

கிட்டிய இடுக்கின்வழி தன் மெல்லிய இடை நுழைத்துத் தப்பமுயன்றாள்.

கைகளைப் பிடித்துக் கொண்டான். “ஒன்னைப் பார்க்காம என்னால இருக்க முடிலடி”, அவன் குரலில் வலு வடிந்திருந்தது. அவன் கைகளை உதறி தீக்கங்குகளை மிதித்துக்கொண்டே வீடு சேர்ந்தாள்.

அம்மாவின் கதகதப்பில் இப்போதெல்லாம் ஆழ்ந்து தூங்குகிறாள் சாதனா. ஆட்டுக்குக் காவலாய் திண்ணையில் படுக்கும் அம்மாவின் பக்கத்திலேயே அவளும் தூங்க ஆரம்பித்தாள். “வயசுப்பொண்ணு ஊட்டுக்குள்ள படு”, என்ற அம்மாவின் பேச்சைப் போர்வைக்கு வெளியே தள்ளிவிட்டாள்.

நிலைப்படியில் தலை வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தவளுக்கு வயிற்றில் ஏதோ எரிச்சலூட்டியது. அந்தத் தொந்தரவு வயிற்றில்தான் என உணர்ந்த போது அவள் தலையை ஒரு கை வருடிக் கொண்டிருந்தது. அம்மாதான் என உறுதியாய் நம்பி மீண்டும் தூங்கத் துவங்கினாள். வருடிக் கொண்டிருந்த கையின் எடை கூடியது. அளவும் பெரிதானது. மரப்பட்டையின் சுகந்தம் தலைமுடியின் வேர்கள் வழியே அவளுக்கு மணந்தது. கண்விழித்துத் தலையை நிமிர்த்தினாள். கதவிடுக்கின் வழியே வீட்டின் உள்ளிருந்து மருதன் கசிந்திருந்தான்.

காலையில் கண்விழித்த அம்மாவின் பக்கத்தில் சாதனா இல்லை. வாரிமுடிந்து எழுந்து வீட்டிற்குள் நுழைய முனைந்த போது கதவு உள் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. வெகு நேரம் கதவைத் தட்டிய பிறகு சாதனா கதவைத் திறந்தாள். கால் கொலுசுகளைக் கையில் வைத்திருந்தாள்.

அடுத்த ஒரு மாத காலத்திற்கு தீபனின் தீ வார்த்தைகளும் இல்லை, மருதனின் விருந்தும் இல்லை. தான் உண்டு தன் வரவேற்பு பணி உண்டு என சாதனாவின் நாள்கள் போய்க்கொண்டிருந்தன. ஒரு ஞாயிற்றுக்கிழமை தீபன் சாதனாவின் வீட்டிற்கு வந்தான். அம்மா, அப்பா மற்றும் உறவினர்கள் என வண்டி நிறைய மனிதர்களுடன் வந்து சாதனா வீட்டின் மொத்தக் கொள்ளளவையும் மீறினான்.

சாதனாவின் அம்மாவிற்கு தலைகால் புரியவில்லை. தட்டு தாம்பூலம் எனக் கண்டபோதே கணித்து விட்டாள். பெரிய இடத்து சம்பந்தம், விரட்டிப் பிடித்தாலும் கிடைக்காது. மகளின் கையில் காபித் தட்டைக் கொடுக்கத் துடித்துக் கொண்டிருந்தாள். சாதனாவோ அள்ளி முடியாத கூந்தலுடன் அலட்சியமாய் நின்று கொண்டிருந்தாள்.

சாம்பல் நிற சட்டையும் கருப்பு நிற கால்சட்டையுமாக கூடுதல் வளர்த்தியாய்த் தெரிந்தான் தீபன். அவனை கவனித்தாள். அவனின் அந்தக் காட்சி அவளை ஈர்த்திருந்தது. அடுத்த கணம் அவனின் வாய்மொழியை நினைவு கூர்ந்தாள். அவன் வாய் ஒரு தீ வாரி. சுட்டுப் பொசுக்கி நாள்பட வேதனையை அளிக்கும் தீக்கிடங்கு அது என்று அவள் தீர்க்கமாய் நம்பினாள். அவன் ஊமையாய் இருந்திருந்தால்கூட அவனின் பக்கம் சாய்ந்திருப்பாள்.

“இருங்க பொண்ணை அலங்காரம் பண்ணிக் கூட்டியாறேன்”, அம்மா துடித்தாள்.

“அட அதெல்லாம் ஒன்னும் வேணாங்க. அதான் பார்த்துட்டோமே. அலங்காரத்துல என்ன இருக்கு! அதான் ஏற்கனவே எங்கப் புள்ளையத்தான் மயக்கியாச்சே”, தீபனின் அம்மா களைகட்டினாள்.

அதுவரை அடுக்களை ஓரமாய் நின்று கொண்டிருந்த சாதனா வெடுக்கென கொல்லைப்புறம் வெளியெறினாள்.

“பொண்ணை வாங்குறதுக்குள்ள ஒன் வாயைத் தொறக்காதக்கா”, தீபனின் மாமா சூழலைச் சமாளித்தார்.

சாதனாவின் அக்கம்பக்கத்தினரும் உள்ளூரில் இருந்த உறவினர்களும் அங்கு கூடிவிட்டனர். தீபனின் தோரணை எல்லோருக்கும் திருப்தி. சாதனாவுக்கு ஏற்ற மாப்பிள்ளையென மெச்சிக் கொண்டனர். நாம் கேட்டு மறுக்கவா போகிறார்கள் என்ற துணிவு தீபன் வீட்டாரின் பகட்டில் தெரிந்தது. திருமணத் தேதி குறிக்கும் வரைச் சென்றது பெரியோர் பேச்சு.

” எனக்கு இந்த மாப்பிள்ளையைப் புடிக்கல!”, நடுவீட்டில் வந்து நின்று உரக்கச் சொன்னாள் சாதனா.

தீபனின் கண்கள் கொதித்தன. எழுந்து அவள் தலைமுடியைப் பிடித்து கன்னம் மாற்றி கன்னம் அறைய வேண்டும் போல் இருந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

“ஏன் என்னா கொறைச்சலு என் புள்ளைக்கி! திமிரெடுத்தவ இவ வேணாமுடா தீபா நமக்கு”, தீபனின் அம்மா எழுந்தாள்.

காலில் விழாதக் குறையாக சாதனாவின் அம்மா அவளைச் சமாதானப்படுத்தினாள்.

“ஏன்பா வேணாங்குற…?”, தீபனின் மாமா கனிவாய்க் கேட்டார்.

“அவரு கொணம் எனக்கு ஒத்து வாராதுங்க”, சாதனா தெளிவாய்ச் சொன்னாள்.

“வாயை மூட்றி. பெரிய கொணத்தைப் பத்திப் பேச வந்துட்டா. ஒங்கொப்பன் என்னைப் படுத்தாத பாடா! குடிச்சே அல்பாயுசுல போய்ட்டான். தம்பி முகத்தைப் பார்த்தாலே தெரியுது அது குடும்பத்துக்கு ஏத்த மனுசன்.” சாதனாவின் அம்மா விடாப்பிடியாய்ச் சம்பந்தத்தைப் பிடித்தாள்.

அப்பனை இழந்த, வறுமைக்கு வளர்ந்த எல்லாப் பெண்களுக்குமான அறிவுரைகளோடு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

அனைவரும் போய் வருவதாகச் சொல்லி வெளியேறினர். வீட்டு வாசலிலிருந்து கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக வண்டியில் ஏறிக் கொண்டிருந்தது. வாசலில் இருந்த வேப்ப மரத்தடியில் நின்று கொண்டிருந்த தீபன் சாதனாவைச் சொடுக்குப் போட்டுக் கூப்பிட்டான்.
கண்டு கொள்ளாதது போல் வீட்டிற்குள் நுழையத் திரும்பியவளை அவள் அம்மா தடுத்தாள்.

“தம்பி கூப்டுதுல போடி போய் என்னான்னு கேட்டுட்டு வா”, அம்மா சொல்லி முடித்ததும் மீதியிருந்த சொந்தமும் அவளை அவனிடம் துரத்தின. அவன் முகம் பாராமல் அவனிடம் நின்றாள்.

“ஒனக்கு என்னப் பத்தி முழுசா தெர்ல அதான் இந்த சிலுப்பல் வேலையெல்லாம் பார்க்குற. எனக்கு பொண்ணு கொடுக்க நான் நீன்னு நிக்குறானுகடி. நான் ஒன்னும் ஒன்னைக் கட்டத் தவங்கெடக்கல…”

பிறகு எதற்கு இங்கே நிற்கிறாய் என்பது போல் அவனைப் பார்த்தாள்.
அவனிடம் அதற்கு வெளிப்படையான பதிலேதும் இல்லை. அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தான். அவன் தன்னை வெறிக்கிறான் என்பது அவளுக்குச் சங்கடமாக இருந்தது. உடலுக்குள் அவன் கண் ஊடுருவுவது போன்றதொரு உணர்வு. அவளின் தோLபட்டையில் அப்போதுதான் சுடிதாரைத் தாண்டி வெளிப்பட்ட உள்ளாடையை ஒதுக்கிக் கொடுத்தான். அவன் தொட்டதும் அவ்விடம் விட்டு வீட்டிற்குள் மறைந்தாள்.

சாதனாவின் வறுமையே மறைந்துபோகும் அளவுக்குத் திருமணம் நடந்தது. தீபன் ஒரே மகன்; நகருக்குள் நான்கு கடைகள் அவனுக்குச் சொந்தம். உட்கார்ந்தே தின்றாலும் இரண்டு தலைமுறைக்குத் தாங்கும் அளவுக்கான சொத்து. சோடிப் பொருத்தம் ஊரார் கண்களுக்கு இதமாய் இருந்தது. சரண்யாவும் ஜெயாவும் சாதனாவின் பக்கத்திலேயே இருந்தனர். சாதனாவின் முகத்தில் அப்பியிருந்த சோகம் அவர்கள் இருவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. “இந்தக் கல்யாணத்தில் இவளுக்கு என்ன வெறுப்பு இருக்கிறது!” என்றபடியான வியப்பு அது. அவளைக் கண்டு அவர்கள் இருவருக்கும் அந்தப் பொழுதில் பொறாமையாய்க் கூட இருந்தது.

சடங்குகள் முடிந்து தீபனுக்கும் சாதனாவிற்குமான அந்தத் தனி இரவு கிடைத்தது. அன்று காலையிலிருந்தே அவள் கொட்டிக் கொண்டிருந்த வெறுப்பு அவனைக் கிளறிக்கொண்டே இருந்தது.

“ஒனக்கென்னடி பெரிய ஒலக அழகின்னு நெனப்பா? என் பக்கத்துல நிக்குறப்போ புழு பூச்சி பக்கத்துல நிக்குற மாதிரி அருவருப்பாவே நிக்குற! காணாதவளைக் கண்ட மாதிரி ஒன் கால்ல உழுந்து கெடப்பேன்னு நெனச்சியா…?” ஆத்திரம் அவனைக் குழப்பி வைத்திருந்தது. அறைக்குள் நுழையும்வரை அவளை மறுக்கும் திட்டம் அவனிடம் இல்லை.

அவ்விரவிற்கென தவமிருந்தவன் அவன். காலை முதல் கைக்கருகே தட்டுப்பட்டுக் கொண்டிருந்த அவளின் செழிப்பைக் கூடுமானவரைக் கூடிவிடுவது என உடல் வளர்த்து வைத்திருந்தான். அவளின் கால் பிடித்தாவது அடையலாம் என்றாலும் துணுக்காய் ஒரு ஆணவம் அவனைத் தடுத்தது. மறுநாள் இரவில் நம்பிக்கை வைத்து தலையணைக்குள் முகம் பதுக்கிப் படுத்துக் கொண்டான்.

இருவருக்குள்ளும் ஏற்படாத சமரசத்தில் அவ்விரவு விழித்திருக்கும் வேலையை இழந்தது.

அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த தீபனின் காதில் கொலுசு மணிகள் விட்டு விட்டு ஒலிப்பது அரைகுறையாய்க் கேட்டது. கண்ணாடி வளையல்களின் குலுங்கலும் சேர்ந்து கொண்டது. மெல்ல எழுந்து கட்டிலை விட்டு சற்றுத் தள்ளி கீழே படுத்திருந்தவளை எட்டிப் பார்த்தேன்.

முழுவதும் மங்கிய அவ்விரவில் அவளின் பட்டுப்புடவையால் அவளைச் சுற்றி மெல்லிய ஜுவாலை ஒளிர்ந்தது. தனக்குள் எதையோ தீவிரமாய்த் தேடிக்கொண்டிருந்தவளின் கண்ணாடி வளையல்கள் மேலும் வேகமாய் மோதிக் கொண்டன. கால்களும் ஒத்துழைத்ததில் கொலுசுகளும் ஏறி இறங்கின.

அவனன்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் அவளைத் திகைப்பேறி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான். மருதன் பெருவிருந்தில் அவள் தன்னைத்தானே முகிழ்த்துக் கொண்டிருந்தாள்.

படைப்பாளரின் பிற படைப்பு:

படைப்பு

அருணா சிற்றரசு

ஆங்கிலமொழி ஆசிரியர் . அரசு உயர்நிலைப்பள்ளி எடகீழையூர், திருவாரூர் மாவட்டம். மன்னார்குடியைச் சேர்ந்தவர். 2012 ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்று அரசு பணி பெற்றவர். நாவல்கள் படிப்பதில் அதீத ஆர்வம் கொண்டவர். தமிழ் புதினங்கள் படித்து கருத்துக்களை தன் நடைக்கு வளைத்துக்கொள்பவர்.பாவ்லோ கோலோ , கொலம்பிய எழுத்தாளர் மார்க்கீஸ் மீது தீராக் காதல் கொண்டவர். தன்னுடைய யூட்யூப் சேனலில் மாணவர்களுகள் மற்றும் போட்டித் தேர்வாளர்களுக்கான காணொலிகளை வழங்கி வருகிறார்.