உறவுகள் 6

நம்மைச் சுற்றி எத்தனையோ உறவுகள் இருக்கின்றன. அவர்களில் பல பேர் வியக்க வைப்பார்கள். நான் ஆச்சர்யப்பட்டு வியந்த பெண்களில் ஒருவர்தான் தேவிகா அக்கா. ஒரு காலத்தில் மாமா என்ற உறவுக்கு இருந்த மரியாதையும் பக்தியும் வியப்புக்குரியது. தமக்கைகளின் வாழ்வில் நிகழும் நல்லதை அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்த்து வைக்கவும் தமக்கையின் குடும்பத்தில் நிகழும் எல்லா விஷயத்திலும் முடிவெடுக்கும் நிலையிலும் தாய்மாமன்கள் இருந்தார்கள்.

என் அப்பாவின் தாய்மாமா நடராஜன். காரப்பட்டில் வசித்துவந்தார். அவர் வீட்டு மருமகள் தான் தேவிகா. நடராஜ் தாத்தாவின் மகன் கருணாகரனுக்குப் பெண் பார்க்கச் செல்லும்போது தேவிகா படித்துக்கொண்டிருந்தார். மாப்பிள்ளை வீட்டினர் சென்ற போதும் படிப்பகத்தில் தான் இருந்துள்ளார். அதனால் பெண்ணை அழைத்து வர மாப்பிள்ளையை தான் அனுப்பி இருக்கிறார்கள். ”பொண்ணு பிடிச்சிருக்கா?” என்று உறவுக்காரர்கள் கேட்டதற்கு, ”நான் பெண்ணைப் பார்க்கவில்லை” என்றார் மாமா.

“சைக்கிளில் உட்காரவைத்து பெண்ணை நீதானே அழைச்சிட்டு வந்தே! பொண்ணைப் பார்க்கலைனு சொன்னா எப்படிப்பா?” என்று உறவுகள் கலாய்ததோடு நில்லாமல், ”வர்ற வழியில சைக்கிளை நிறுத்தி, பொண்ணை இறக்கிப் பேசிட்டு வந்திருக்கலாமே” என்று கேட்டுச் சிரித்துக்கொண்டார்கள். ஏதோ பெரிய அளவில் சலுகைகள் கொடுத்துவிட்டோம் என்ற நினைப்பு அவர்களுக்கு. அன்றைய காலக்கட்டத்தில் அப்படிப் பேசியது சுவாரஸ்யமானதுதான்.

எங்கள் வீட்டில் அப்பா, அம்மா வெளியூர் சென்றுவிட்டால் பெரியம்மா வீட்டில்தான் உணவு. பெரியம்மா வீட்டில் ஊருக்குச் சென்றுவிட்டாலும் அப்படியே. அப்பா, அம்மா பெரியம்மா, பெரியப்பா சகிதம் ஏழு நாட்கள் சுற்றுலா செல்வதாக முடிவெடுத்தார்கள். நடுநிலைப் பள்ளியில் படிக்கிற நம்மிடம் தான் சமையலறையின் ராஜாங்கம் ஒப்படைக்கப்பட்டது. அந்தச் சமயத்தில்தான் கருணாகரன் மாமாவுக்கும் தேவிகா அக்காவுக்கும் திருமணம் முடிந்து விருந்துக்கு எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்கள். நம் வீட்டுப் பெற்றோர்கள் சுற்றுலாவில் இருந்து திரும்ப வரும் வரை, எங்களுக்குத் துணையாக இருப்பதற்காக தேவிகா அக்காவை எங்கள் வீட்டில் தங்க வைத்துவிட்டுச் சென்றுவிட்டார் மாமா.

கிட்டத்தட்ட இரண்டு குடும்பங்களிலிருந்தும் பத்துப் பேருக்குக் காலை உணவில் ஆரம்பிக்கும் எங்கள் வேலை. டீ, காபி, பூஸ்ட் தேவைப்படுவோருக்குக் காலையிலேயே கலந்து கொடுத்துவிடுவோம். காலை சிற்றுண்டி இட்லியோ தோசையோ இல்லை கலந்த சாதமோ. தடபுடல் மதிய உணவு. எதை வேண்டுமானாலும் சமைத்து இதுதான் உணவு என்று சொல்வோம். பெரியம்மா வீட்டில் அண்ணனைத் தவிர மற்றவர்கள் நமக்கு சின்னதுகள் என்பதால் நாம் முன்மொழியும் கருத்துதான் அங்கே சட்டம்.

பாத்திரம் தேய்ப்பது, கிணற்றிலிருந்து குடிநீர் எடுத்துவருவது, வீட்டைக் கூட்டி சுத்தப்படுத்துவது என முழு நேரமும் நாங்கள் பிஸி. மாலை நேரத்தில் முல்லைப்பூ, பசும்பால் இவை இரண்டும் தனித்தனியாக வீட்டுக்கு வந்து கொடுத்துவிட்டு செல்வார்கள். பூவிற்கு அப்போதே பணம் கொடுத்து அனுப்புவோம். அதற்கொரு கணக்கும் எழுதி வைப்போம். அக்கா அழகாகப் பூக்களைத் தொடுப்பார். பூக்களை மொத்தமாக தொடுத்து முடித்த பின்பு பார்த்தால் சின்ன மாலையைப் போல இருக்கும். தொடுத்த பூக்களை பாலிதீன் பையில் வைத்து வீட்டின் பின்பக்கம் வைக்கப்படிருந்த பூந்தொட்டியில் வைத்துவிடுவோம். மறுநாள் காலையில் அந்தப் பூவை எடுத்துப் பார்க்க அத்தனை அழகாக இருக்கும். காகிதத்துக்கு மேலே பனித்துளியும் உள்ளே வேர்வை முத்துகளையும் சுமந்து மலர்ந்திருக்கும் பூவை கவரில் இருந்து வெளியே எடுத்தால் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும்.

பத்து நாட்கள் எங்கள் ராஜாங்கம் தான். அக்கா புதுமணப்பெண், கணவர் வீடு என்பதே அவருக்கு புதிய சூழல் என்ற நிலையில் கணவரின் மாமா வீட்டில் வந்து தங்கி எங்கள் வீட்டுப் பெண்ணாகவே மாறி எங்களில் ஒருவராக இருந்தார். எந்தவிதச் சொந்தமும் இல்லாமல் பெண் தேடும் படலத்தில் கண்டறியப்பட்டு, திருமணத்துக்கு முன்பு அறிமுகமில்லாத குடும்பத்துக்கு மருமகளாக வந்தவர் தேவிகா அக்கா. படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு திருமணம் செய்துகொண்டார். வயதோ, திருமணவாழ்க்கைப் பற்றிய புரிதலோகூட அவருக்கு இருந்திருக்காது. ஆனால், குடும்ப வாழ்க்கையை, மாமியார் வீட்டில் உள்ளவர்களை, அவர்களது உறவினர்களைத் தங்கள் குடும்பச் சொந்தங்களாகப் பாவித்து, அன்பைக் காட்ட, உறவைச் சீராட்டிக் கொண்டாட முடியும் என்பதை அவர் இப்போது வரை நிரூபித்து வருகிறார்.

ஒரு குடும்பத்து மருமகளாக வருபவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக மாறிவிட்டார் தேவிகா அக்கா. விசேஷ வீடுகளில் உறவுக்காரர்கள் அறை முழுவதும் நிரம்பியிருப்பார்கள். எல்லோரும் தேவிகா அக்காவைத் தெரிந்து வைத்திருப்பார்கள். அக்கா வசிக்கும் காரப்பட்டுக்குப் போகும்போது, சொந்தங்கள் அதிகம் இருந்தாலும் தேவிகா அக்கா வீட்டில் கை நனைக்காமல் யாரும் திரும்ப மாட்டார்கள். அவரது உபசரிப்பில் எவராக இருந்தாலும் கரைந்து போவார்கள். என்னோடு பழகும்போது கல்லூரி மாணவியாக மாறிவிடுவார். அம்மாவுடன் பேசுகையில் தோழியாக மாறிவிடுவார், என் பாட்டிக்கு இணையாக பாட்டியோடு அமர்ந்து அவர்கள் மொழியோடு கதைபேசுவார். அவரவருக்குத் தகுந்தாற்போல தன்னைச் செதுக்கிக்கொள்ளும் இவரை யாருக்குத்தான் பிடிக்காமல் போகும்!

வாஞ்சையான பேச்சுக்கும், அனுசரணையான அணுகுமுறைக்கும், செல்லமான கண்டிப்புக்கும் எங்கள் குடும்பமே கட்டுண்டு விடும். அவசர வேலையாக அக்கா ஊருக்கு வருபவர்கள், அவர்கள் வீட்டு வாசலில் காலை எடுத்து வைத்துவிட்டுதான் செல்வார்கள். ஊருக்கு வந்துவிட்டு எப்படி எங்கள் வீட்டுக்கு வராமல் சென்றீர்கள் என்று உரிமையோடு வாதாடுவார். அதைக் கேட்பவர்களுக்குத் தாங்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்று மிதப்பு தலைதூக்கத்தான் செய்யும்.

காதுகுத்து வீட்டில் காய்கறிகளை நறுக்கிச் சமையலில் இறங்கிவிடுவார். திருமண வீடுகளில் கோலம் போட்டுக்கொண்டிருப்பார். நிச்சயதார்த்தத்தில் பந்தியில் உணவு பரிமாறுவார். எல்லோருடனும் பிரியமாக இருப்பார். உபசரிப்பு, கவனிப்பு, அக்கறை போன்ற எந்தக் குணத்துக்கும் அவரிடம் பஞ்சமிருக்காது. அக்காவின் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுக்கும் குணத்தை எடுத்துரைக்கும் சம்பவங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

எல்லோரிடமும் பிரியமாக இருப்பது கதைகளில், தொலைக்காட்சி நாடங்களில் வரும் கதாநாயகிகளின் கதாபாத்திரத்துக்கு வேண்டுமானால் பொருந்தும். உண்மையில் அவ்வாறு சாத்தியமில்லை என்று எவரும் சொல்ல முடியாது. நிஜத்திலும் அப்படியான பெண்கள் நம்மோடு இருக்கிறார்கள். அன்பையும் சகிப்புதன்மையையும் ஆயுதமாகக் கொண்டவர்கள் அவர்கள்.

படைப்பாளர்:

வைதேகி பாலாஜி

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வைதேகி பாலாஜி பணியாற்றி வருகிறார். ஹெச்.டி.எஃப்.சி.குழுமத்தில் பேனல் அட்வகேட் பொறுப்பு வகிப்பவர். குடும்பநல சட்ட ஆலோசகரும் கூட. கடந்த 12 ஆண்டுகளாக திருப்பத்தூர், அகமதாபாத், சென்னை ஆகிய நீதிமன்றங்களில் வழக்கறிஞர் மற்றும் சட்ட ஆலோசகராகச் செயல்பட்டு வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரபல தமிழ் இதழ்களில் சட்ட விழிப்புணர்வுத் தொடர்கள் எழுதிவருகிறார். பெண்கள் அறிந்துகொள்ள வேண்டிய சட்டப்பிரிவுகள் பற்றிய பல கருத்தரங்குகளில் பங்கேற்றுவருகிறார். கவியரங்கம், பட்டிமன்றங்களிலும் தன் சொல்வன்மையால் சொக்கவைப்பவர்.