வரலாறில் மட்டுமே நாம் படித்து அறிந்து கொண்ட போர், இன்று நம் கண் முன்னே உலகின் பல பகுதிகளில் நடந்து கொண்டிருக்கிறது. அரசியல் காரணங்கள், தனி மனிதனின் சுய விருப்பு வெறுப்பு, பொருளாதார காரணி, இனம் மற்றும் இடம் சார்ந்த காரணி என இதற்குப் பல காரணங்கள் உள்ளன. சரி, உலக அளவில் அல்ல, நம்மை சுற்றி நாம் வாழும் இடங்களில் நடப்பது என்ன? அதே பிரச்னை தானே இங்கும்?
இந்த சண்டைக்கு எல்லாம் அடிப்படை காரணம் ஒன்றுதான். “நம்மில் யார் உயர்ந்தவர்?” இந்த எண்ணம் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் பெரும்பாலானவர்களிடம் இருக்கிறதே. குறிப்பாக இளைய சமூகப் பிள்ளைகளிடமும் இது தெரிந்தே விதைக்கப்படுகிறது. இந்த எண்ணத்தை நீக்கினால் ஒழிய, இந்த உயர்வு தாழ்வு பிரச்னைகளுக்கு தீர்வு என்பது கிடையாது.
படிப்பறிவு என்பது வெறுமனே மதிப்பெண் சார்ந்தது அல்ல. பகுத்தறிவோடு கூடிய படிப்புதானே உண்மையில் ஒரு மனிதனுக்கு தேவை. யார் என்ன சொன்னாலும் அதில் எது நியாயம்? எது அறம்? எது தேவை? என்பதை பகுத்தறிவது தானே கல்வி? இந்தக் கல்விதான் எல்லா பிரச்னைகளுக்குமான தீர்வு. இந்த பகுத்தறிவு பிள்ளைகளிடம் சென்றால்தான் அவர்களின் செயல்களில் அறத்தைக் காண இயலும்.
இதனை உணர்ந்திருந்த ஆசிரியர் ஒருவர், படிக்கவே கூடாது என்று நினைத்த மாணவர்களின் மனதை மாற்றி, படிப்பில் ஆர்வத்தை விதைத்து, சமூகத்தில் பொறுப்பானவர்களாக பகுத்தறிவோடு இருப்பவர்களாக அவர்களை மாற்றினார். யார் அவர்? என்ன செய்தார்?
1994 அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளி Woodrow Wilson High School, Long Beach. இந்தப் பள்ளியில் 150 மாணவர்களை கொண்ட ஒரு 9-ம் வகுப்பு. அந்த வகுப்பு மாணவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால், ஒவ்வொருவர் மீதும் குறைந்தபட்சம் ஒரு குற்ற வழக்கு இருக்கும். கொலை, போதைப் பொருள், வன்முறை, இனக்கலவரம் இது சார்ந்த ஏதோ ஒரு குற்றத்தை செய்திருப்பர். கிட்டத்தட்ட சிறுவர் சீர்திருத்த பள்ளியைப் போன்றதே அந்த வகுப்பு.
பெரும்பாலும் பல்வேறு இனங்களைச் சேர்ந்த மாணவர்கள் அவ்வகுப்பில் இருந்தனர். ஒவ்வொருவரும் அவரவர் இனக் குழுவோடுதான் பயணித்தனர். வகுப்பிற்குள் எப்போதும் ஒரே சண்டை அடிதடி தான். “என் இனம்தான் உயர்ந்தது”, என்பது போன்ற எண்ணம் எல்லா பிள்ளைகளிடமும் இயல்பாகவே இருந்தது, அல்லது அந்த எண்ணம் விதைக்கப்பட்டு இருந்தது.

படிப்பை முடித்து முதன் முதலில் அந்த வகுப்பின் ஆசிரியராக வருகிறார் எரின் குரூவல்(Erin Gruwell). யாரும் இவரை ஆசிரியராக மதிக்கவும் இல்லை, ஏற்றுக்கொள்ளவும் இல்லை. வகுப்பு நேரத்தில் ஒவ்வொருவரும் மற்ற இனக் குழுவைச் சேர்ந்தவர்களை கேலி செய்தும் கிண்டல் செய்தும் அடித்தும் துன்புறுத்துகின்றனர். ஒரே சண்டைதான். என்ன செய்வதென ஆசிரியருக்கு ஒன்றுமே புரியவில்லை.
தான் பேசுவதையே காது கொடுத்து கேட்காத மாணவர்களை எப்படி சரி செய்வது என்கிற குழப்பம். அவர்கள் போக்கிலேயே போக வேண்டும் என, ஆடல் பாடல் என்று வகுப்பை நடத்திச் செல்கிறார். அதற்கும் அந்த மாணவர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனமும் கிண்டலும்தான் வருகிறது.
ஒரு நாள் ‘விளையாடலாமா?’ எனக் கேட்டவாறு வகுப்பிற்கு இடையில் பெரிய கோடு ஒன்று போடுகிறார். இந்த விளையாட்டின் பெயர் ‘லைன் கேம்’ என கிண்டலாகப் பேசுகிறார். பிள்ளைகள் அப்போதுதான் அவர் பேச்சை செவி சாய்த்துக் கேட்கின்றனர்.
“நான் உங்களை சில கேள்விகள் கேட்க போகிறேன். கேள்விக்கு பதில் ஆம் என்றால் கோட்டை நோக்கி நகருங்கள். இல்லையென்றால் அவ்விடத்திலேயே நில்லுங்கள்” என்கிறார் ஆசிரியர். ஒவ்வொரு கேள்விக்கும் இதுவே செயல்முறை என்றவாறு கேள்விகளை கேட்கத் தொடங்கினார்.
முதலில் அவர்களுக்கேற்ற இரண்டு, மூன்று விளையாட்டுத்தனமான கேள்விகள். அடுத்த கேள்வி,
*”யாரெல்லாம் போதைப் பொருள் பயன்படுத்துகிறீர்கள்?எங்கு கிடைக்கும் என யாருக்கெல்லாம் தெரியும்?”
அனைவரும் கோட்டின் முன் வந்து நிற்கின்றனர்.
“யாரெல்லாம் இனக்குழுவோடு சேர்ந்து கலவரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?”
80 சதவீத மாணவர்கள் கோட்டில் வந்து நின்றனர்.
*”யாருடைய இல்லங்களில் அல்லது நட்பு வட்டத்தில் இனக்கலவர பிரச்சனையால் ஒருவர் அல்லது இருவர் உயிர் துறந்துள்ளனர்?”
கிட்டத்தட்ட மொத்த வகுப்பும் கோட்டில் நிற்கிறது. இப்போதுதான் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர்.
“யாரேனும் 3 அல்லது 4 நபர்களுக்கு மேல் இழந்து இருக்கிறீர்களா?”
70 சதவீத மாணவர்கள் கோட்டிற்கு வருகின்றனர்.
எல்லோரும் அதிர்ச்சியடைகின்றனர். வெள்ளை இனத்தைச் சேர்ந்தவர்கள், ‘கறுப்பின மக்கள்தான் நம் உரிமைகளை பறிக்கின்றனர்’ என எண்ணினர். கறுப்பின மக்கள், ‘மற்ற இனத்தவர்கள் நம்மை அடிமைகளாக எண்ணுகின்றனர். நம்மை வாழ விடுவதில்லை’ என எண்ணினர்.
ஆனால் இப்போது அவர்களுக்கு ஒன்று புரிகிறது. ‘இழப்பு என்பது இருபுறமும் உள்ளது; என்னைப் போன்ற வலியை அவர்களும் அனுபவிக்கின்றனர். அவர்களுக்கும் கவலை உள்ளது, மற்றவர்களும் பாவம்’ என்கிற சிந்தனை தோன்றுகிறது. அவர்களுடைய கண்களில் அது தெரிகிறது.
இதை கவனித்த ஆசிரியரும், புரியாமல்தான் இவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள். யாரோ ஒருவர் திணிக்கும் கருத்துக்களை இவர்கள் உள்வாங்கி நடந்து கொள்கின்றனர் எனத் தெரிந்து கொண்டார். இந்த எண்ணத்தை மாற்ற வேண்டும் என முடிவு செய்தார்.
அடுத்து இந்த மாணவர்களுக்குள் இருக்கும் மற்றொரு பிரச்சனை கறுப்பினம், வெள்ளை இனம் என்ற நிறம் சார்ந்த மற்றும் உருவம் சார்ந்த வேறுபாடு. ஒரு சில மாணவர்கள் தங்கள் நிறத்தைத் தாழ்வு மனப்பான்மையுடனும், ஒரு சிலர் மேன்மையாகவும் கருதுகின்றனர். இதனை அவர்களுக்கு புரிய வைக்க Peanut game என்ற விளையாட்டை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர்.
அனைவரையும் சுற்றி நிற்க வைத்து ஒவ்வொருவர் கையிலும் தோலுடன் உள்ள ஒரு வேர்க்கடலையை தருகிறார். அந்தக் கடலையைப் பற்றி அவர்கள் முன்னால் வந்து உட்புறம், வெளிப்புறத் தோற்றம் இவற்றைப் பற்றிப் பேச வேண்டும்.
ஒவ்வொரு மாணவரும் வெளிப்புறத் தோற்றம் பற்றி இது நன்றாக இல்லை, மண்ணோடு உள்ளது, கறுப்பாக உள்ளது, சாம்பல் நிறமாக உள்ளது, இதன் வடிவம் சரியில்லை என்றெல்லாம் கூறுகின்றனர். ஆனால் உட்புற கடலையை எல்லோரும் சுவையாகவும் சத்தோடும் உள்ளது என்றனர்.
விளையாடும் போது ஒவ்வொருவர் முகத்திலும் சிறு தயக்கம் தெரிந்தது. இவர்களின் தயக்கத்தை அறிந்து ஆசிரியர் பேசினார்.
இந்த கடலை போன்றுதான் வெளிப்புறத்தில் உங்களின் நிறம், உருவம் இவற்றில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் மனதளவில் நீங்கள் அனைவரும் சமமானவர்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி திறமையும் நற்குணமும் உள்ளது. அதுதான் உங்கள் அடையாளம் என்கிறார்.
இந்த நிகழ்விற்குப் பிறகு அவ்வகுப்பில் யாரும் தன்னை மேன்மையாகவும் எண்ணியது இல்லை, தாழ்வாகவும் நினைக்கவில்லை. நிறம் மற்றும் உடல் சார்ந்த விமர்சனங்கள் அந்த வகுப்பில் அறவே இல்லை.

ஆசிரியர் மாணவர்களை அருங்காட்சியகத்துக்கு (Museum of Tolerance-Los angeles, California)அழைத்துச் சென்றார். அங்கு இரண்டாம் உலகப் போரின் கொடூரங்களை விளக்கும் படங்களை அவர்களுக்குக் காட்டி, அது பற்றி கூறுகிறார். ஒவ்வொரு துயர சம்பவத்தையும், அதனால் மக்கள் அடைந்த துன்பங்களையும் எடுத்துக்காட்டிப் பேசினார். இத்தனை துயரங்களுக்கும் காரணம் இனக் கலவரம்தான் என்பதை வலியுறுத்தினார்.
மாணவர்களுக்கு தாங்கள் செய்யும் தவறுகள் புரிந்தன. அவற்றின் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை உணர்ந்தனர்.
அடுத்து முக்கியமாக, உலகப்போர் சம்பந்தமான, அதில் உயிர் பிழைத்த அல்லது இறந்தவர்களின் புத்தகங்களைக் கொடுத்து படிக்க வைத்தார். The Wave Night, Anne Frank-A Diary of a Young girl, Zlata’s Diary இந்த புத்தகங்களில் இடம் பெற்ற, உயிருடனிருந்த மனிதர்களை நேரில் வரவழைத்து, போர் பற்றியும், இனக்கலவரம் பற்றியும் பேச வைத்தார்.
இப்படி தொடர்ச்சியாக இனக்கலவரத்தால் ஏற்பட்ட தீமைகளையும் அதன் கொடூரங்களையும் அறிந்த பிறகு, மாணவர்களின் மனதில் மாற்றம் ஏற்படுகிறது. உயர்ந்தவர் தாழ்ந்தவர் என நமக்குள் வேறுபாடு பார்ப்பது சரியல்ல, எல்லோரும் மனிதர்கள், சமமானவர்கள், எல்லோருக்கும் அவரவர் வாழ்க்கையை விருப்பப்படி வாழ உரிமை உண்டு என்பதை உணர்கின்றனர்.

வகுப்பில் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொள்கின்றனர். பள்ளிப் படிப்பை நிறைவு செய்யும்போது ஆசிரியரோடு சேர்ந்து “ஃப்ரீடம் ரைட்டர்ஸ்” என்கிற அறக்கட்டளையைத் தொடங்கினர். அதன் மூலம் தங்கள் பிரச்சனைகளையும் சரி செய்து கொண்டு, அவர்களைப் போலவே இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மற்ற மாணவர்கள் மற்றும் குழந்தைகள் அதிலிருந்து விடுபட உதவினர்.
இன்றளவும் இந்த அறக்கட்டளை இயங்குகிறது. அந்த 150 மாணவர்களும் தற்போது சமூகத்தில் நல்ல நிலையில் உள்ளனர். இந்த அறக்கட்டளையில் தன்னார்வலர்களாகவும் உள்ளனர். அதற்குப் பிறகு உலகம் முழுவதும் போரால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்குச் சென்று, மக்கள் மீண்டு வருவதற்கான உதவிகளையும் தன்னம்பிக்கையையும் தந்து கொண்டிருக்கின்றனர்.
‘எனக்கு படிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. கட்டாயத்தின் பெயரில் தான் பள்ளிக்கே வருகிறேன். என் இனத்து மக்களை காப்பதற்காக மட்டுமே பூமியில் இருக்கிறேன். என் இன மக்களுக்காக நான் உயிரையும் விடத் தயாராக உள்ளேன்’ என்கிற மனநிலையில் இருந்த, படிப்பில் சிறிதும் நாட்டமில்லாத 150 மாணவர்களின் இனவெறியை அகற்றி, படிப்பின் மீது ஆர்வத்தைக் கொண்டு வந்து, அவர்களை உயர்கல்வி வரை படிக்க வைத்தார் ஆசிரியர் எரின் குரூவல். இதுமட்டுமல்லாமல், அந்த மாணவர்களையும் சமூகப் பொறுப்பை ஏற்க வைத்தார்.
தற்போது இளைய தலைமுறைக்கும் வருங்கால தலைமுறைக்கும் நாம் கொண்டு சேர்க்க வேண்டியது இந்த அறிவைத்தான். உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஆதிக்க சாதி, ஒடுக்கப்பட்ட சாதி என எந்தப் பாகுபாடும் இல்லை, பாலினப் பாகுபாடும் இல்லை; எல்லோரும் சமமானவர்கள் என்பதை நம் பிள்ளைகளுக்கு கற்றுத் தர வேண்டும்.
சாதியப் பாகுபாட்டால் ஏற்படும் விளைவுகளை சுட்டிக்காட்ட வேண்டும். சிறு வயது முதலே சமத்துவத்தை வலியுறுத்தும் புத்தகங்களைக் குழந்தைகளிடம் கொண்டுச் சேர்க்க வேண்டும். சமத்துவம் பற்றிய உரைகளை அவர்களுக்குக் காட்ட வேண்டும். சமத்துவத்தை வலியுறுத்தும் நபர்களோடு பழகச் செய்ய வேண்டும். அதனை முன்னுறுத்திய தலைவர்களைப் பற்றி சொல்லித் தர வேண்டும்.
அடிப்படை எண்ணத்தில் மாற்றம் வந்தால் ஒழிய, இது போன்ற பாகுபாடுகளை சமூகத்தில் வேரறுக்க முடியாது.
படைப்பாளர்கள்

ஏ. மாலதி
கோவை, அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி) யில் , இணை பேராசிரியராகப் பணி புரிபவர். அரசு கலைக் கல்லூரிகள் மற்றும் அரசு பள்ளிகளில் உள்ள பதின் பருவ மாணவர்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு , மென் திறன் மேம்பாடு, கல்வியின் முக்கியத்துவம், சைபர் கிரைம் மற்றும் வாழ்க்கை திறன் மேம்பாடு உள்ளிட்ட பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இலவசமாக நடத்தி வருகிறார். சமூக செயற்பாட்டாளர், பெண்ணிய சிந்தனையாளர். சீர்திருத்தச் சிந்தனைகள் கொண்டவர்.

பி. பாலதிவ்யா
பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் கணினி அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். தற்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் தமிழ் மொழிக்கான Chat bot பயிற்சியாளராக உள்ளார். வாசிப்பதில் தீவிர ஆர்வம் உடையவர்.




