பொதுவாக, பார்வை உள்ள சிலர் இரத்தத்தைப் பார்த்தாலே மயங்கிவிடுவார்கள். ஆனால், பார்வை அற்ற ஒருவரால் ஒரு பெரிய விபத்து நடந்த இடத்தைக்கூடச் சாதாரணமாகக் கடந்து செல்ல முடியும். ஏனென்றால், அந்த விபத்தின் பாதிப்புகளை அவர்களால் பார்க்க முடியாது. ஆனால், ஒரு எழுத்தாளர் நினைத்தால், ஒரு விபத்து நடந்த இடம் எப்படி இருக்கும், அந்த விபத்தினால் பாதிக்கப்பட்டவரின் நிலை என்ன என்பதைத் துல்லியமாக எங்களையும் உணர வைக்க முடியும்.

அந்த வகையில், பார்வையற்றவர்களின் வாழ்க்கையில் புத்தகங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. பாடநூல்கள் முதல் பாலியல் கல்வி வரை உலகைப் புரிந்துகொள்ள உதவும் கருவிகளாக எங்களுக்குப் புத்தகங்கள்தான் உள்ளன.

உதாரணத்திற்கு, கல்கி பொன்னியின் செல்வனில் ஆடிபெருக்கு நிகழ்வை மிக அழகாக வர்ணித்திருப்பார். மக்கள் கூடும் திருவிழாக்களும் கொண்டாட்டங்களும் எப்படி இருக்கும் என்பதை நான் அறிந்துகொண்டது அந்த வர்ணனையின் வழியாகத்தான். இன்னும் சொல்லப்போனால், திருவிழா என்றாலே அப்படித்தான் இருக்கும் என்று என் மூளையில் பதிவாகிவிட்டது.

அதேபோல, எழுத்தாளர் இமையம் எழுதிய ஒரு நாவலில், முதல் சில பக்கங்களுக்குச் சுடுகாட்டில் நடக்கும் ஈமச்சடங்குகளைப் பற்றி நுட்பமாக விவரித்திருப்பார். சுடுகாட்டுச் சடங்குகளை எல்லாம் அந்த நாவலின் வழியாகவே நான் அறிந்துகொண்டேன்.

இது அல்லாது, எங்களால் புரிந்துகொள்ளவே இயலாத சில முகபாவனைகள் – புருவத்தை ஏற்றி முறைப்பது, முகத்தைச் சுளிப்பது, கண்களாலேயே பேசிக்கொள்வது, ஏன்? காதலர்களுக்குள் பரிமாறிக்கொள்ளப்படும் சாதாரண இதழ் முத்தம் பற்றிக் கூட எனக்குச் சொல்லிக்கொடுத்தது புத்தகங்கள்தான்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், எங்களின் உலகமே புத்தகங்களால் கட்டமைக்கப்பட்டதுதான்.

ஒரு பார்வை உள்ள நபரின் வாழ்வில் புத்தகங்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தைவிடப் பல லட்சம் மடங்கு அதிகத் தாக்கத்தையும், மாற்றத்தையும் எங்கள் வாழ்வில் புத்தகங்கள் ஏற்படுத்துகின்றன.

அப்படியான புத்தகங்களைத்தான் நாங்கள் வாசிக்க முடியாத வகையில் இந்தச் சமூகம் எங்களிடமிருந்து விலக்கி வைத்திருக்கிறது.

தொழில்நுட்பம் வளராத காலத்தில் பிரெய்லி புத்தகங்களையே நாங்கள் நம்பியிருக்க வேண்டியிருந்தது. தற்போது, செல்பேசி மூலமாகவே படிக்கும் அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

ஸ்கிரீன் ரீடரின் உதவியுடன் கிண்டில், பிரதிலிபி போன்ற செயலிகளிலும், பிற இணையதளங்களிலும் புத்தகங்களை எளிதாக எங்களால் வாசிக்க முடிகிறது. ஆனாலும், பெரும்பாலான புத்தகங்கள் மின்னூல்களாக வெளிவராததால், எங்களால் அவற்றைப் படிக்க முடிவதில்லை. பொது நூலகங்களில் பிரெய்லி புத்தகங்கள் ஓரளவு இருந்தாலும், அவற்றின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. தமிழ்நாட்டின் மொத்தப் பார்வையற்றவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, நூலகங்களில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு.

எடுத்துக்காட்டாக, சென்னையில் உள்ள புகழ்பெற்ற அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்கூட, சில ஆயிரக்கணக்கான பிரெய்லி, மின்புத்தகங்கள் மற்றும் ஆடியோ புத்தகங்கள் மட்டுமே உள்ளன. புதிதாக வெளிவரும் புத்தகங்கள் உடனடியாக மின்னூல் அல்லது ஆடியோ வடிவங்களுக்கு மாற்றப்படுவதில்லை.

இதன் காரணமாக, நாங்கள் சமீபத்தில் வெளியான புத்தகங்களைப் படிப்பதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டியுள்ளது. என் நீண்ட நாள் ஆசையே எனக்குப் பிடித்த எழுத்தாளரின் ஒரு புத்தகத்தையாவது வெளிவந்த அன்றே வாங்கி வாசித்துவிடவேண்டும் என்பதுதான்.

பாடப் புத்தகங்கள் உள்பட எந்த புத்தகமும், எங்களுக்கு எளிதில் கிடைப்பதில்லை. இந்த நிலை, ‘பொது இடங்கள் மற்றும் சேவைகள் அனைத்தும் மாற்றுத்திறனாளிகள் அணுகும் வண்ணம் இருக்கவேண்டும்’ என்று சொல்லும் சட்டத்திற்கே முரணாக உள்ளது.

அரசுத் தேர்வுக்கோ அல்லது போட்டித் தேர்வுக்கோ நாங்கள் படிக்க வேண்டியிருந்தால், அதற்கான புத்தகங்களும் எளிதாகக் கிடைப்பதில்லை. அவற்றைக் கடைகளில் வாங்கி, ஸ்கேன் செய்துதான் படிக்க வேண்டியுள்ளது. இதுபோன்ற சிரமங்கள், எங்களது கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளைப் பெருமளவில் பாதிக்கின்றன.

அதனால், அத்தகைய புத்தகங்களை ஸ்கேன் செய்து OCR தொழில்நுட்பத்தின் உதவியுடன் படிக்க வேண்டியுள்ளது. OCR என்றால், ஒரு அச்சுப் புத்தகத்தையோ, செய்தித்தாளையோ பார்வையற்றவர் படிக்க வேண்டுமென்றால், அதை OCR செயலி அல்லது கருவி மூலம் ஸ்கேன் செய்வார். அந்தச் செயலி, படத்திலுள்ள எழுத்துக்களை டிஜிட்டல் உரையாக மாற்றும். பின்னர், TTS (Text-to-Speech/screen reader) அதனை படித்துக் காட்டும்.

ஸ்கேன் செய்வதற்கென்றே நிறைய செயலிகள் இருக்கும்போது, அவற்றை பயன்படுத்துவது எளிதுதானே! என்று நீங்கள் நினைக்கலாம். விலை உயர்ந்த ஸ்கேனர்கள் மட்டுமே புத்தகங்களைத் தெளிவாகப் படம் எடுக்கும்.

ஒரு நல்ல ஸ்கேனர் வாங்க வேண்டுமென்றால், தோராயமாக ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவாகும். இந்தச் செலவு, வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும். மேலும், ஒரு புத்தகத்தை முழுமையாக ஸ்கேன் செய்து OCR வடிவில் மாற்றுவதற்கு, அதன் பக்கங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து சில மணிநேரங்கள் முதல் ஒரு முழு நாள் வரை ஆகும்.

 மேலும், தமிழ் போன்ற மொழிகளில் உள்ள எழுத்துருக்களை (stylised fonts) துல்லியமாக மாற்றுவது கடினம். இதனால் 50% முதல் 70% மட்டுமே சரியாக மாற்றப்படுகிறது. மீதமுள்ளவற்றை மனிதர்கள் சரிசெய்ய வேண்டியுள்ளது.

அனைவராலும் ஸ்கேனர் வாங்க இயலாதல்லவா? அதனால், ‘பார்வையற்றவன்’ என்ற புனைபெயரில் எழுதும் எழுத்தாளர் திரு. பொன். சக்திவேல், அவர்கள், புத்தகம் படிக்க விரும்பும் பார்வையற்றவர்கள், அச்சுப் புத்தகத்தை அவருக்கு அனுப்பினால், இலவசமாகவே அவற்றை OCR தொழில்நுட்பம் மூலம் மின்னூல்களாக மாற்றி வழங்கி வருகிறார்.

அதுமட்டுமின்றி, ‘விரல் மொழியர்’ நூல் திரட்டு என்ற பெயரில் ஒரு வாட்ஸ்அப் குழுமத்தையும் தொடங்கி, அதன் மூலம் அனைவரும் பணம் செலுத்தி, மொத்தமாகப் புத்தகங்களை வாங்கி, ஸ்கேன் செய்து பகிர்ந்துகொள்கின்றனர்.

‘புக் ஷேர்’ (Bookshare) என்பது பார்வையற்றவர்கள் மற்றும் அச்சிட்ட புத்தகங்களைப் படிக்க முடியாதவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய சர்வதேச மின்நூல் நூலகம் ஆகும். இதில், 10 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் வெவ்வேறு மொழிகளில் உள்ளன. இதன் மூலம், பிரெய்லி, ஆடியோ, மற்றும் பெரிய எழுத்துரு போன்ற பல்வேறு வடிவங்களில் புத்தகங்களை அணுகமுடியும்.

இந்தத் தளத்தில் உறுப்பினராகச் சேர்ந்தால், தேவையான புத்தகங்களைச் செல்பேசி, டேப்லெட் அல்லது கணினி போன்ற சாதனங்களில் பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இதன் மூலம், பார்வையற்ற மாணவர்கள் தங்களின் பாடநூல்கள் மற்றும் பிற புத்தகங்களை எளிதாகப் பெறுவதற்கான ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது.

பார்வையற்றவர்கள் இவ்வாறு செலவு செய்து படிப்பதற்குத் தயாராக இருந்தாலும், எழுத்தாளர்களும் பதிப்பகங்களும் எங்களை நுகர்வோராகக்கூடக் கருதுவதில்லை.

ஆடியோ புத்தகங்கள் வெளிவருகின்றனவே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அவை வெறும்  ஒரு சதவிகிதம் மட்டுமே. ஆடியோ புத்தகங்களுக்கென்றே சில செயலிகள் இருக்கின்றன. குக்கூ எஃப் எம், ஸ்டோரிடெல், ஆடிபிள், ஸ்பாட்டிஃபை, புஸ்தகா, பாக்கெட் எஃப் எம் போன்ற செயலிகள் இருந்தாலும் இவற்றில் தமிழ் நூல்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. அது மட்டுமல்லாமல் திரை வாசிப்பானின் (screen reader) உதவியுடன் எங்களுக்கு அணுகுவதற்கும் எளிதாக இல்லை. விகடன் குழுமம் ‘விகடன் பிளே’ என்ற ஒன்றை தொடங்கி, முக்கியமான புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை ஆடியோ வடிவில் வெளியிடுகின்றனர்.

பதிப்பாளர்களின் அனுமதி இல்லாமல் ஸ்கேன் செய்வது தவறு இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். இந்தியக் காப்புரிமைச் சட்டம் 1957, பிரிவு 52(1) (2b) மாற்றுத் திறனாளிகளுக்காகப் படைப்புகளை மின்னூல் போன்ற அணுகக்கூடிய வடிவங்களுக்கு மாற்றுவதை, சட்டப்பூர்வமான, நியாயமானப் பயன்பாடாக அங்கீகரிக்கிறது. எனவே தனிப்பட்டப் பயன்பாட்டிற்காகப் புத்தகங்களை மின்னூலாக மாற்றுவது சட்டவிரோதச் செயலல்ல.

2016-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டத்தின்படி, அனைத்துக் கண்டுபிடிப்புகளும் பார்வையற்றவர்கள் உள்பட, அனைத்து மாற்றுத்திறனாளிகளும் அணுகும் வகையில் இருக்கவேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆனால், இதை இங்குள்ள பல எழுத்தாளர்களும், பதிப்பகங்களும் கவனத்தில் கொள்வதில்லை.

பொதுவாக, பார்வையற்றவர்கள் என்றால் உலகம் தெரியாதவர்கள் என்ற கருத்து இங்கு நிலவுகிறது. நாங்கள் சொற்கள் மற்றும் புத்தகங்கள் மூலமாகத்தான் இந்த உலகத்தைப் புரிந்துகொள்கிறோம். ஆனால், சில எழுத்தாளர்களும் பதிப்பகங்களும் எங்களுக்கு அதையும் மறுக்கிறார்கள். பெரும்பான்மையான தமிழ்ப் பதிப்பாளர்கள் தங்கள் படைப்புகளை அச்சுப் புத்தகங்களாக மட்டுமே வெளியிடுகிறார்கள். இது பார்வையற்ற சமூகத்தை வெளிப்படையாகப் புறக்கணிப்பதாகத்தானே அர்த்தம்?

மின்நூல்களாக வெளியிட்டால் புத்தகங்கள் திருடப்படுகின்றன என்று எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் புலம்புகிறார்கள். அச்சுப் புத்தகங்களை வெளியிட்டால் மட்டும் திருடமாட்டார்களா என்ன? நானும் பல அச்சுப் புத்தகங்களை PDF வடிவத்தில் திருட்டுத்தனமாகப் பகிரப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் எந்த வடிவில் வெளியிட்டாலும், படைப்புத் திருடர்களை ஒருபோதும் ஒழிக்க முடியாது.

எனவே, எழுத்தாளர்களே, பதிப்பாளர்களே ஒவ்வொரு படைப்பை வெளியிடும்போதும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை ஒதுக்கிவைத்துவிடுகிறோம் என்பதை மனதில்கொள்ளுங்கள். படைப்பு திருடர்களை பற்றி சிந்திப்பதை விடுத்து, நீங்கள் வாழும் இந்த உலகத்தில்தான் என்னை போன்ற பார்வையற்றவர்களும் வாழ்கிறார்கள் என்று கொஞ்சம் சிந்திக்கலாமே!

எங்களை வாசகர்களாகக் கருதாவிட்டாலும் நுகர்வோராகவேனும் கருதலாம்!

தமிழ்நாடு அரசுப் பாடநூல் நிறுவனம் இதுபோன்ற பார்வையற்றவர்களின் உதவிகாக அரசு உதவி பெறும் நூல்களை மின்னாக்கம் செய்தோ, ஆடியோ நூல்களாகவோ பார்வையற்றவர்களுக்கு கட்டணமின்றி அவர்களின் வலைத்தளத்தில் வாசிக்கத் தரலாம். இதற்கென தனி செயலியை உருவாக்கி, அதன்மூலம்கூட பார்வையற்றவர்கள் நூல்களை வாசிக்க வழிசெய்யலாம். பொது நூலகத்துறை வாங்கும் இதழ்கள், நூல்களை மின்னாக்கம் செய்தோ ஆடியோ வடிவிலோ பார்வையற்றவர்களுக்கு வழங்க முயற்சிக்கலாம். இதுபோன்ற புதிய தமிழ் நூல்கள், இதழ்கள் வரும்போது பார்வையற்றவர்கள் அவற்றை எப்படி அணுகுவது என பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் கலந்தாலோசித்து வழிவகை செய்யலாம். ABC – Associated Books Consortium போன்ற தனியார் தன்னார்வல அமைப்புகள், அவற்றுடன் இணைந்து செயல்படும் சென்னை பப்ளிஷிங் சர்வீசஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பாடநூல்களை பார்வையற்றோர் எளிதில் அணுவ உதவியிருக்கின்றன. அவர்களைப்போல தனியார் தொண்டு நிறுவனங்கள்கூட மாத, வார இதழ்கள், புதிய நூல்களை சிறு தொகை கட்டணமாக வாங்கிக்கொண்டு எங்களுக்கு வாசிக்க வழி செய்யலாம்.

வாசிப்பு எல்லோருக்குமான கனவு. உங்கள் கனவுகளில் எங்களுக்கும் கொஞ்சம் கடன் கொடுங்கள் என்று கேட்கிறோம், அவ்வளவே.

எங்கள் அன்றாட வாழ்க்கை குறித்து வேறு ஏதேனும் கேள்விகள் உங்களுக்கு இருக்கிறதா? தயங்காமல் மின்னஞ்சல் மூலம் கேளுங்கள் – strong@herstories.xyz என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு, ‘உணர்வுகளின் உலகம்’ என தலைப்பிட்டு எழுதுங்கள்!

தொடரும்…

படைப்பாளர்

பிருந்தா கதிர்

தீவிர வாசிப்பாளர், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். எழுதுவது மிகவும் பிடிக்கும்.