எண்பது வருச தமிழ் சினிமாவுல இப்பவும் மாறாத ஒரு விசயம் இருக்குன்னா அது ஒரு பொண்ணு கல்யாணம் முடிஞ்சு மாப்பிள்ளை வீட்டுக்கு போகும்போது சொந்தக்காரங்க எல்லாம் சுத்தி நின்னு ஓன்னு ஒப்பாரி வைக்குற காட்சி தான். அதெல்லாம் வசந்த மாளிகை காலத்தில நடந்திருக்கலாம். ஆனா இப்போ எதார்த்தத்துல அப்படியா நடக்குது? ஆனாலும் ஏன் தமிழ் சினிமா இன்னும் அதையே போட்டு தொங்கிட்டு இருக்குன்னு தெரியல. உண்மையாவே அந்த பொண்ணுக்கு கல்யாணத்துல விருப்பம் இருந்தா ரொம்ப சந்தோசமாத்தான் கிளம்பி போகும்.

அதுலயும் சில பொண்ணுங்க இப்போ கல்யாணமே வேண்டாம்ன்னு தான் சொல்லிருப்பாங்க. ஆனா வீட்டுல இருக்குற கிழவி செத்துப்போறதுக்குள்ள உனக்கொரு கல்யாணம் பண்ணணும், அப்பா ரிட்டையர் ஆகுறதுக்குள்ள பண்ணணும், உனக்கு பண்ணாத்தான் அடுத்து தங்கச்சிக்கு பண்ணணும், அது இதுன்னு ஏதாச்சும் காரணம் சொல்லி அந்த பொண்ண புடிச்சு கல்யாணம் பண்ணி வெச்சிருப்பாங்க. வீட்ட விட்டு கிளம்பும் போது அந்த கிழவி மொத ஆளா ஓடி வந்து “அய்யோ, எங்கள எல்லாம் விட்டுட்டு போறயாடீ. என் செல்லமே”ன்னு கதறும். அப்படியே கிழவி கொறவளைய கடிச்சிடலாம்போல கோவம் வரும். ஆனா ஒண்ணு மட்டும் நிசம். துள்ளித் திரிந்து விளையாடின வீட்டை விட்டு வேற வீட்டுக்கு போறது பொண்ணுங்களுக்கு ஒரு அடக்க முடியாத சோகமாத்தான் இருக்கு.

ஆனா அதுக்காக அவங்க கிட்ட கண்டிப்பா எமோஷனை கொட்டியே ஆகணும்னு திணிக்குறது கொஞ்சம் அதிகப்படி. சந்தோசமா ‘பை பை’ சொல்லிட்டு கிளம்பினா அதை கேஷுவலா எடுத்துக்கலாமே. இவ என்ன அழவே இல்லன்னு அவ போன பின்னாடி பக்கத்து வீட்டு அக்கா அம்மா காதுல ஓதும். அது தான் கொடுமை. பொண்ணுங்களுக்கு அம்மா வீடு எப்பவுமே ஒரு கம்ஃபர்ட் ஜோன் தான். அத விட்டுட்டு போகணும்ங்கறது எப்பொழுதுமே ஒரு ஆற்றாமையா வெளிப்பட்டு விடும். அவ்வளவே!

நில்லுங்க… நான் ஏன் இப்போ இப்படி நீட்டி முழக்குறேன்னா, நான் அது மாதிரி ஒரு நாளின் இரவில் தான் இருக்கேன். இப்போ நான் அழுவணுமா வேணாமா? எனக்கு போலியா எல்லாம் அழுக வராதே. அழலேன்னா அம்மா ஏதாச்சும் நினைச்சுக்குமா? ஆயிரம் யோசனை. ஆபத்பாந்தவன் மாதிரி வாசல்ல டாக்சி வந்து நிற்குற சத்தம் கேட்டுச்சு. பிறந்த வீட்டை விட்டு மட்டும் அல்ல, பிறந்து வளர்ந்த நாட்டை விட்டு வேறு நாட்டிற்கு போகிறேன். ஆனா சினிமாவில வர்ற மாதிரி அழுவாச்சி சீன் எல்லாம் இங்க இல்ல. அம்மா கிட்ட பேசுறப்ப மட்டும் கொஞ்சம் எமோஷனலாக கண்ணு வேர்த்திருச்சு. “போயிட்டு வரேன்மா. நீ தைரியமா இருன்னு” சொல்லிட்டு வேகமாக பெட்டிய தூக்கிட்டு வந்து டிக்கில போட்டுட்டு சுற்றிலும் பார்த்தேன். ஒரு ஆள் இல்லயே?

தெருவே அமைதியா இருந்தது. நான் துபாய் போறேன்னு சொல்லி வழியனுப்ப நைட்டு ஒரு மணிக்கு எல்லாரும் முழிச்சுட்டா இருப்பாங்க? “அடச்சே இதே காலை நேரமா இருந்திருந்தா வீதியே வேடிக்கை பார்த்திருக்கும். ஏன் முக்கால்வாசி பிளைட் எல்லாம் ராத்திரியிலயே இருக்கு”ன்னு யோசிச்சுட்டே கார் சீட்டுல வந்து உக்காந்து, என் முதல் வெளிநாட்டு பயணத்தை என் காதல் ஹஸ்பெண்டோடு ஆரம்பிச்சேன்.
ஏர்போர்ட் போறதுக்குள்ள மனசுல பட்டாம்பூச்சி, விட்டில் பூச்சி, தும்பி பூச்சின்னு ஏராளமான பூச்சிக என் பர்மிசன் இல்லாமயே ரெக்க கட்டி பறந்துட்டு இருந்துச்சு.

‘அங்க போனதும் மொதல்ல சுடிதார் போடறத கட் பண்ணனும். எப்ப பாரு ஒரே மார்டன் டிரெஸ் தான். அப்புறம் முடிய நல்லா ஸ்டைலா வெட்டிக்கணும். ஜாலியா ஊர் சுத்தண்ணும். எல்லாரையும் போல அங்க போனதும் மறக்காம அந்த ஊரோட ரோடு , பில்டிங்ன்னு எல்லாத்தையும் போட்டோ எடுத்து பேஸ்புக்குல போட்டுடணும்.’

சரி போதும் போதும் லிஸ்ட்டு ரொம்ப பெருசா போய்கிட்டே இருக்குன்னு என்ன நானே கன்ட்ரோல் பண்ணிகிட்டேன். வீட்டுல இருந்து ஒரு பத்து பதினைஞ்சு நிமிசத்துல ஏர்போர்ட் போயிடலாம். அதுவும் ஒரு ஈ காக்கா கூட இல்லாத இந்த மிட்நைட்ல ஏர்போர்ட் போறதே ஒரு தனி சுகம் தான் போங்க. டாக்சில ஏதோ ஒரு இளையராஜா பாட்டு. ஆமா ஏன் இந்த டாக்சி டிரைவர்ங்க எல்லாரும் அதிகமா இளையராஜா பாட்டு கேக்குறாங்க? சரி அந்த ஆராய்ச்சி கிடக்கட்டும்.

துபாய்ல இளையராஜா பாட்டு கேக்க முடியுமா? அரபிக்காரங்க எல்லாம் என்ன பாட்டு கேப்பாங்க? அய்யோ ஏன் இப்படி கேள்வியா கேட்டுட்டு இருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்துல நாமே போய் தெரிஞ்சுக்கலாம். ஆளில்லாத ரோடு, ஷட்டர் போட்டு மூடியிருக்குற கடைகள், தெரு விளக்கோட வெளிச்சத்துல பனி இறங்குற காட்சி, தூரத்துல குலைக்குற நாயோட சத்தம், எதிர்ல வர்ற ஒண்ணு ரெண்டு வண்டி குடுக்குற ஹார்ன் சத்தம்ன்னு அந்த நடு ஜாமத்துல நான் பாக்குற எல்லாமே எனக்கு அழகா தெரிஞ்சது. வாங்க கொஞ்சம் எஞ்சாய் பண்ணுவோம்.

வண்டி சிங்காநல்லூர் தாண்டி ஹோப்ஸ் பிரிட்ஜ் ஏறிட்டு இருந்துச்சு. நானெல்லாம் கோவையை தாண்டுவேன்னு நினைச்சு கூட பாத்ததில்ல. பிறந்தது, வளர்ந்தது, படிச்சது, வேலைக்கு போனதுன்னு எல்லாமே இங்க தான். பெர்சனலா அதுக்கு ஒரு காரணமும் இல்லைன்னாலும், எப்படி பொண்ணுங்களுக்கு அம்மா வீடு ஒரு கம்ஃபர்ட் ஜோனோ அது மாதிரி கோவை எனக்கு ஒரு கம்ஃபர்ட் ஜோனா இருந்துச்சு. எல்லாருக்குமே சொந்த ஊர் மேல எப்பவுமே ஒரு பாசம் ஒட்டிட்டு இருக்கும். எனக்கும் என்னோட ஊர் அப்படித்தான். இத தாண்டி போக மாட்டேன்னு யாருக்கும் சாமி சத்தியம் எல்லாம் செஞ்சு கொடுக்கல. ஜாலியா இந்த ஊரையே சுத்தி சுத்தி வந்துட்டு கிடந்தேன். இந்த ஹோப் காலேஜ் ரோடுல கூட நிறைய நினைவுகள் இருக்கு.

ஒரு நாள் காரணமே இல்லாம இந்த பஸ் ஸ்டேண்டுல இருந்து பி.எஸ்.ஜி காலேஜ் வரைக்கும் நடந்து போயிருக்கேன். ஏன்னு கேக்காதீங்க. அதான் காரணமே இல்லைன்னு சொல்லிட்டேன்ல? அது உலக தமிழ் மாநாடு முடிஞ்ச கொஞ்ச நாள் கழிச்சுன்னு நினைக்குறேன். புதுசா ரோடு போட்டு ரெண்டு பக்கமும் நடை பாதை வெச்சு செடிகள்லாம் நட்டு அந்த ரோடே பாக்க அவ்வளவு அழகா இருக்கும். அப்போ வந்த நியூஸ் பேப்பர் எல்லாமும், “ஆலை நகரமாக இருந்த கோவை இப்போ நல்ல சாலை நகரம்”னு டைமிங்க்ல ரைமிங்கா டைட்டில் போடுவானுங்க. அதுக்காகவே நடந்திருக்கேன். நம்புங்க, நிசமாத்தான்.

அப்புறம் இன்னோர் நாள் நானும் என் பிரண்டும் சேர்ந்து கொடிசியா வணிக வளாகத்துல நடந்த ஒரு பொங்கல் விழாக்கு போனோம். சும்மா வேடிக்கை பாத்துட்டு இருந்த எங்க கிட்ட ஒரு போலீஸ்காரர் வந்து, “இங்க என்னம்மா பண்றீங்க”ன்னு கேட்டார். நாங்களும் பதறிப்போய், “அய்யா நாங்க ஒண்ணும் பண்ணல. சும்மா வேடிக்கை தான் பாக்குறோம்”னு பம்மிக்கிட்டே பதில் சொன்னோம். “இல்லம்மா. டிராபிக் விழிப்புணர்வு கோலப்போட்டி நடத்துறோம் கலந்துக்குறீங்களா”ன்னு கேட்டார்.

“ஸார் நாங்க கோலப்பொடியெல்லாம் கொண்டு வரல”ன்னு சொல்ல, அவரே கோலப்பொடியெல்லாம் கொடுத்து எங்களோட சேர்த்து ஒரு பத்து டீமை ரெடி பண்ணார். நானும் என் பிரண்டும் சேர்ந்து தீவிரமா இறங்கி சுடிதார் துப்பட்டாவ எல்லாம் இழுத்துக்கட்டிட்டு கோலம் போட்டு, மொத பரிசே வாங்கினோம். சிட்டி கமிஷனர் வந்து ஷீல்டு கொடுத்தார். ‘சும்மா நின்னுட்டு இருந்த எங்களுக்கு கோலப்பொடியும் கொடுத்து பரிசும் கொடுத்த அந்த போலீஸ் அண்ணா வாழ்க’ன்னு சொன்னதெல்லாம் ஞாபகம் வருதே… ஞாபகம் வருதே…

இப்படியே இருபத்தைஞ்சு வருசத்த எல்லாம் ரீவைண்டு பண்ண முடியாது. ஏன்னா ஏர்போர்ட் வந்துருச்சு. டொமெஸ்ட்டிக் பிளைட்ல நிறைய தடவ போயிருக்கேன். இருந்தாலும் இன்டெர்னேசனல் பிளைட் இதான் முதல் தடவைங்கறதால செம எக்ஸைட்மெண்டா இருந்துச்சு. டாக்சி விட்டு இறங்கி டிக்கியில வெச்சிருந்த ரெண்டு பொட்டிய தூக்கி டிராலில போட்டுட்டு உள்ள போனோம். எனக்கு ஒரு பெட்டி, என் ஹஸ்பெண்டுக்கு ஒரு பெட்டி. அவ்வளவுதான்.

நாலு சுடிதார், ஒரு ஜீன்ஸ் பேன்ட், ரெண்டு டாப்ஸ் , கொஞ்சம் மேக்கப் ஐட்டம்ஸ், ஒரு சானிட்டரி பேட் (அது ரொம்ப முக்கியம்), என்னோட சர்ட்டிபிகேட்ஸ் (அத எதுக்கு தூக்கிட்டு போனேன்னு எனக்கு இப்போ வரைக்கும் தெரியல), பக்கம் பக்கமா நாத்திகம் பேசினாலும் டிராவல்ன்னா மறக்காம எடுத்து வெச்சுக்குற மேரி மாதா சிலை, இவ்வளவு தான் என் பெட்டியில இருந்துச்சு. என்னைப் பொருத்த வரைக்கும் அப்போ எல்லாம் திருப்பூர் போறதும் துபாய் போறதும் ஒண்ணுதான். ஆனா இந்த அஞ்சு வருசத்துல இந்தியாவுக்கும் துபாய்க்கும் எத்தனை பண்டமாற்று நடந்திருக்குன்னு அப்புறமா விலாவாரியா சொல்றேன்.

கோவை ஏர்போட்ட பொருத்த வரைக்கும் டொமெஸ்ட்டிக் பிளைட்டுக்கும், இன்டெர்னேசனல் பிளைட்டுக்கும் பெரிய வித்தியாசம் எல்லாம் இல்ல. லெப்ட்ல போனா இன்டெர்னேசனல், ரைட்டுல போனா டொமெஸ்டிக் அவ்ளோதான். மத்தபடி எல்லாமே ஒண்ணுதான். ஏர்போர்டுக்குள்ள போயிட்டு பெட்டிய வெயிட் செக் பண்ணும் போது சார்ஜாவான்னு கேப்பாங்க. சிரிப்பா வரும். ஏன்னா அங்க வர்றதே ஒரே ஒரு இன்டெர்னேசனல் பிளைட்டு தான். ஆனாலும் கேப்பாங்க, நாமளும் ஆமான்னு பதில் சொல்லணும். அது தான் மரபு.

அப்புறமா நம்ம பாஸ்போர்ட், டிக்கெட் எல்லாம் காட்டி செக்இன் பண்ணணும். அங்க அட்டெண்டர்ஸ், ஆபீசர்ஸ் ன்னு எல்லாருமே தமிழ்ல தான் பேசுவாங்க. ஏதோ நாலு தமிழ் படம் பாத்துட்டு ஏர்போட்ல எல்லாரும் அப்படியே இங்கிலீஸ் கான்வென்ட் மாதிரி தஸ்ஸு புஸ்ஸு ன்னு பேசுவாங்கன்னு நினைச்சா அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது.

செக் இன்ல ‘வின்டோ சீட் கேளு, வின்டோ சீட் கேளு’ன்னு என் கணவர் காதோரமா கிகிசுத்தேன். மிட் நைட்டுல வின்டோ சீட்டுல என்னம்மா பாக்கப்போறேன்னு எனக்கு நோ சொல்லிட்டார். ஐ ஏம் வெரி சேட் யு நோ. அது என்னமோ தெரியல வின்டோ சீட்னா அப்படி ஒரு மோகம். ஏதோ லாட்டரி அடிச்ச மாதிரி தோணும். சரி ஏதோ ஒரு சீட்டு போனா போகட்டும்ன்னு விட்டுட்டேன். செக் இன் முடிச்சதும் அங்க இருக்குற சேர்ல போய் உக்காந்து அடுத்து வர இமிக்ரேசன்க்கு(immigration) என்ன என்ன பேசணும்ன்னு ஒரு தடவ மனசுக்குள்ள சொல்லிப்பாத்துட்டு இருந்தேன். ஆமா இங்கிலீஸ் விங்கிலீஸ் படம் நானும் தான பாத்திருக்கேன். என்ன ஸ்ரீதேவி மாதிரி பொடவை ஒண்ணு தான் கட்டல. இமிக்கிரேசன்ல எதுவும் சொதப்பிடக்கூடாது ஆண்டவான்னு பிரேயர் பண்ணிட்டு இருந்தேன்.

இமிக்ரேசன் எல்லாம் இங்க அவ்வளவு சிரமம் கிடையாதுன்னு என் வீட்டுக்காரர் சொல்லிருக்கார். ஆனாலும் நாமளா அனுபவிக்காம லேசுல நம்பிருவோமா என்ன? நான் முதல் முறையா அங்க போறதால மூன்று மாதம் மட்டும் தங்கும் சுற்றுலா விசா தான் எடுத்திருந்தார். சொல்ல மறந்துட்டேனே… எனக்கு கல்யாணம் முடிஞ்சு ரெண்டு நாள் தான் ஆகுது. மேரேஜ் சர்ட்டிபிகேட் இருந்தா தான் ரெசிடென்சி விசா வாங்க முடியும். அதுனால அங்க போய் அப்ளை பண்ணி வாங்கிக்கலாம்ன்னு கல்யாணம் முடிஞ்சதுமே கிளம்பிட்டோம்.

புதுசா கல்யாணம் ஆனவங்க கார்ல போகும் போது “just married” ன்னு போர்டு போட்டுப்பாங்கல்ல. இப்போ அதே மாதிரி நான் இந்த பிளேன்ல ஒரு போர்டு மாட்டிட்டு போனா எப்படி இருக்கும்ன்னு யோசிச்சு சிரிச்சுட்டு இருந்தேன். அதுக்குள்ள இமிக்ரேசன்ல எல்லாரையும் கூப்பிட்டு விட்டாங்க. ஒரு நிமிசம் பிரீயா கனவு காணவிடுறாங்களா….எல்லாரும் லைன்ல போய் நிக்க ஆரம்பிச்சாங்க. நானும் லைன்ல போய் கடைசியா நின்னுட்டேன்.

விசா கிடைச்சுதா இல்லையா? அடுத்த வாரம்…

கட்டுரையாளர்

சாந்தி சண்முகம்

கோவையைச் சேர்ந்த சாந்தி தற்போது துபாயில் வசித்து வருகிறார். கல்லூரியில் துணை விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். பயணங்களிலும், எழுதுவதிலும் ஈடுபாடு கொண்டவர்.