வந்தியத்தேவனின் வழித்தடத்தில் பூதத்தீவு
கோடிக்கரையிலிருந்து இலங்கை செல்ல வந்தியத்தேவனை அழைத்துச் செல்லும் பூங்குழலி முதலில் இறங்கும் இடமாகச் சொல்லப்படுகிறது பூதத்தீவு. இந்த இடத்தில்தான் வந்தியத்தேவனை கரையிலேயே நிறுத்திவிட்டு, பூங்குழலி மட்டும் பூதத்தீவிற்குள் சென்று ஊமை ராணியைச் சந்தித்து அருள்மொழிவர்மன் இருப்பிடம் கேட்டறிந்து, அதன்பிறகு வந்தியத்தேவனை நாகத்தீவில் இறக்கிவிடுகிறாள். பூதத்தீவு இலங்கையில் புத்தர் முதல் முதலாகக் கால்பதித்த இடமாக நம்பப்படுகிறது. இலங்கையில் மன்னர்களுக்கிடையே ஏற்பட்ட சர்ச்சையைத் தீர்க்க வந்த புத்தர் இங்குள்ள அரச மரத்தடியில் போதனை செய்ததாகவும், அதனால் முதலில் போதர் தீவு என்று அழைக்கப்பட்டு பின்னர் பூதத்தீவாக மருவியிருக்கிறது என்கிறார்கள்.