கோபத்தை ‘Divide & Rule’ செய்யலாம். எதற்கு யார் மேல் ஏன் கோபமோ அதை அதற்கு அவர் மேல் அந்தளவு எப்படி நேர்மறையாகக் காண்பிக்க வேண்டுமோ அப்படிக் காட்டுதல் நலம். இது நல்ல பின்விளைவைத் தரும்.

ரியாக்ட், ரெஸ்பாண்ட் (React & Respond) என்பார்கள். ஒரு சூழலுக்கோ மனிதருக்கோ உடனடியாக எதிர்வினையாற்றாமல், யோசித்து, பொறுமையாக, பொறுப்பாக நடந்துகொள்வது. இது நிகழ்வில் சம்பந்தப்பட்ட எல்லாருடைய நலனையும் சிந்தித்து செயல்படுவதாக அமைய வாய்ப்பளிக்கும்.

சின்னச் சின்ன உத்திகள் உண்டு. கோபம் வந்த இடத்தில் இருந்து உடனடியாகச் சென்று விடுவது; உடனே நம் முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பது.

அழுதுகொண்டிருக்கும் ஒரு குழந்தை முன்பு கண்ணாடியைக் காட்டினால் அது ‘டக்’கென்று அழுகையை நிறுத்தி வேடிக்கைப் பார்க்கத் தொடங்கி விடும். கண்ணாடி பார்ப்பது என்பது, எந்தத் தீவிர எதிர்மறை உணர்விலிருந்தும் விடுபட வைக்கும் எளிய வழிமுறை.

வீடுகளின் முன், கடையின் மேல்புறம் கண்ணாடியை வைத்திருப்பார்கள். ‘கண் படாமலிருக்க’ என்று சொல்வார்கள். ஆனால், உண்மையில், யாருடைய எந்த விதமான எதிர்மறை உணர்ச்சியும் தம்மைத் தாக்கிவிடாமல், உடனடியாக அந்த எதிர்மறை உணர்ச்சி தன்னைத்தானே நேர்மறையாக்கிக்கொள்ள உதவுவதற்காகத்தான் வைத்திருப்பார்கள்.

கண்ணாடி என்பது மனிதர்கள் கண்டுபிடித்ததிலேயே உன்னதமான ஒன்று. ஒரு பெரிய ஆலையில் வேலை முடிந்ததற்கான மணி அடித்ததும் ஊழியர்கள் இடித்துக்கொண்டு அடித்துப் பிடித்து ஓடுவது தினசரி வழக்கமாயிருந்தது. அதன் முதலாளி இதைப் பற்றித் தன் நண்பரிடம் கூற, அவர் ஒரு யோசனை கூறினார். அதன்படி, ஆலை வாயிலில் ஒரு பெரிய கண்ணாடி வைக்கப்பட்டது.

அதுநாள் வரை அடித்து இடித்துக்கொண்டு ஓடிய ஊழியர்கள் தனது செயலின் அழகின்மையைக் கண்ணாடியில் கண்டு, அன்றிலிருந்து வரிசையில் செல்லத் தொடங்கினார்கள்.

இது உளவியல்; அர்த்தம் புரியாமல் கெட்ட வார்த்தைகள் சொல்வது, கைச் சப்புவது போன்ற கெட்டப் பழக்கம் உள்ள குழந்தைகள் முன் அவர்கள் செய்வதைப் போன்றே செய்தால், அவர்கள் அதை விட்டுவிடுவார்கள்.

அதைத்தான் இந்தக் கண்ணாடித் தத்துவமும் செய்கிறது. கோபத்தில் நெரிந்த புருவமும் சிவந்த முகமும் கூச்சமற்று விரிந்த வாயும் பற்களும் கண்ணாடி முன் செல்கையில், சட்டெனத் தன்னுணர்வு பெற்று தன்னியல்புக்குத் திரும்புகின்றன.

இயல்பில் மனிதர்கள் எல்லாருமே அன்பிற்கு ஏங்குபவர்கள்; அன்பானவர்கள். ஆனால், அவர்களுக்குத் தமது வாழ்வில் கிடைத்த மற்றும் கிடைக்காததன் ஏக்கம் கோபம் தன்னிரக்கம் ஏமாற்றம் வெறுப்பு எல்லாமே எங்கிருந்து வருகிறது என்று பார்த்தால், தனது வாழ்வை மற்றவர்களின் வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்ப்பதால்தான்.

ஆனால், நிஜத்தில் ஒவ்வொரு மனிதருமே ஒப்பீடற்ற தனித்துவமானவர்கள். உங்களைப் போல நீங்கள் ஒருவர்தான் இந்த வாழ்வில் இருக்கிறீர்கள்; ஒவ்வொரு மனிதருமே தனித்துவம் வாய்ந்தவர்கள் எனும்போது எப்படி ஒப்பிட முடியும்? வேண்டுமானால் ஒன்றே ஒன்றுதான் செய்ய இயலும். நேற்றைய உங்களோடு இன்றைய உங்களை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம். அப்போதுகூட சூழல் வேறாகத்தான் இருக்கும்.
ஒப்பீடு இல்லாமல் ஆன உடனேயே, அதன் காரணமாக ஒவ்வொருவருக்கும் இருந்த பெரும்பாலான துன்பங்கள் குறைந்து விடும்.

வீடு சூழல் எப்படி இருக்க வேண்டும்?

வீடு என்பது விடுதலையான இடம். அது அதன் உறுப்பினர்கள் அனைவருக்கும் மகிழ்வைத் தருவதாக இருக்க வேண்டும். சிறியவர், பெரியவர், அதிகம் சம்பாதிப்பவர், குறைவாகச் சம்பாதிப்பவர், அதிக வேலைகள் செய்பவர், ஆதிக்கமானவர் என்கிற எந்தப் பாகுபாடுகளுமற்று, அனைவருக்கும் நிம்மதியையும் மன நிறைவையும் மகிழ்வையும் தருவதாக வீடு இருக்க வேண்டும். ஒருவரே பயன் பெறுபவராக இல்லாமல், ஒருவரே எல்லா வேலைகளையும் செய்பவராக ஆக்காமல், பொறுப்புகளைப் பகிர்ந்து செய்கிற சூழலை உருவாக்க வேண்டும். வேலையும் ஓய்வும் மகிழ்வும் எல்லாருக்குமானதாக இருக்கிறதா என்பதை அடிக்கடி உறுதி செய்ய வேண்டும். முக்கியமாக, வீட்டு உறுப்பினர்கள் அனைவருக்குள்ளும் பயமற்ற, மனம் திறந்த உரையாடல் நிகழ வேண்டும்.

குடும்பம் மகிழ்வாக இருப்பதற்கு என்னென்ன செய்யலாம்?

* வீட்டில் எப்போதும் இனிமையான இசையை ஒலிக்கச் செய்யலாம்.

* தினமும் ஒருவேளை உணவை அனைவரும் சேர்ந்து அமர்ந்து உண்ணலாம். வாரம் ஒருமுறை அனைவரும் அவரவருக்கான வேலைகளை மாற்றிக்கொள்ளலாம். ஒருநாள் பிக்னிக் சென்று வரலாம்.

‘ரோல்’ மாற்றி விளையாடலாம்; அம்மா ரோலை அப்பாவும் அப்பா ரோலை குழந்தைகளும் குழந்தைகளுடையதை அம்மாவும் ஏற்று நடிக்கலாம். இதில் யாரும் யாரையும் குற்றம் சொல்லாமல், அவரவர் பிழைகள் தாமே வெளிப்பட்டு, ஒருவருக்கு மற்றவரிடமிருந்து என்ன தேவை என்பதும் இயல்பாகத் தெரிவிக்கப்பட்டுவிடும். முழுநிலா நாளில் மொட்டைமாடியில் நிலாச் சாப்பாடு சாப்பிட்டபடி அனைவரும் குடும்ப வரலாற்றைப் பேசலாம்; மகளுக்கு ஏற்படும் பிரச்னை, மகனுக்கு ஏற்படுகிறதா? ஒரே பிரச்னை எப்படி ஒவ்வொருவருக்கும் வேறாக மாறுகிறது? அப்பாவுக்கு ஏற்பட்ட பிரச்னை, தாத்தாவுக்கு ஏற்பட்டதா? அதன் தீர்வாக அவர் என்ன செய்தார்? அதே பிரச்னையை பாட்டி எவ்வாறு கையாண்டார்? இப்படி…

ஒரு வேலையின் சலிப்பு; ஒரே மாதிரியாக செய்வதன் சலிப்பு; அதை ஆர்வமூட்டுவதாக எப்படிச் செய்யலாம் என விவாதிக்கலாம். உதாரணமாக ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு ஒரே பாதையில் செல்லாமல், எத்தனை பாதைகள் உண்டோ எல்லாவற்றிலும் பயணித்துப் பார்க்கலாம்.

பணிச்சூழல் காரணமாக ஒருவர் தனக்குப் பிடிக்காத வேலையை செய்ய நேர்ந்தால், பொதுச் சூழல் காரணமாகப் பிடிக்காத உறவினர்களிடம் பணிந்து போக நின்றால், தமக்குப் பிடித்த விஷயங்களை அதைவிடப் பத்து மடங்கு செய்து மனநிறைவு கொள்ளலாம்.

வலது கையால் செய்யும் வேலைகளை இடது கையாலும் செய்து பார்க்கலாம்; இது ஒருவகையில் நமது மூளையை (இடது மூளை, வலது மூளை) படைப்பாற்றலுடன் செயலாற்ற வைக்கும்.

தற்காப்பு கலை பயின்றவர்கள், விளையாட்டு வீரர்கள், ஆடல் கலை பயின்றவர்களிடம் உள்ள தன்னம்பிக்கையான ஆளுமைக்கு இது ஒரு முக்கிய காரணமாகும். அவர்கள் உடலின் வலது இடது இரு புறங்களையும் சமமாகப் பயன்படுத்தும் வல்லமை கொண்டவர்கள்.

மேலும் கைகளுக்கும் மூளைக்கும் உள்ள தொடர்பு மிக நெருங்கியது. மூளை கட்டளையிடாமலே செயல்படும் அநிச்சை செயல்பாட்டில் கைகள் முக்கியப் பங்கு வகிப்பன. ஒரு கொசு மூக்கருகில் வந்தால், சட்டென கை தானறியாமல் வீசி, விரட்டும்.

இடது கையால் செய்வதற்கு வேறெதுவும் இல்லை எனில், வரைவதையோ எழுதுவதையோ செய்து பார்க்கலாம்.

இவையெல்லாம் தின வாழ்வை உற்சாகமாக ஆக்க வழிவகை செய்யும்.


(தொடரும்)

படைப்பாளர்:

பிருந்தா சேது

சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர். ஹெர்ஸ்டோரீஸில் இவர் எழுதிய ’கேளடா மானிடவா’ என்ற தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றது. புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது.