ஒரு புத்தகம் நம்மை என்ன செய்யும்? ஒரு டைம் மெஷின் கிடைத்து, கடந்த காலத்திற்குச் சென்று சில பேரை நேரில் பார்த்தால் நன்றாக இருக்குமே என்று தோன்ற வைக்கும், படித்துக் கொண்டிருக்கும்போதே புத்தகத்தை மூடி வைத்து சில நிமிடங்கள் கண்ணீர் சிந்த வைக்கும், ஒரு பெண்ணைப் பற்றிப் படிக்கும்போது, ‘ஆ… இவர் போல ஒரு தோழி எனக்கு இருந்தால் நன்றாக இருக்குமே’ என்று தோன்ற வைக்கும். சில பெண்கள் பற்றிய குறிப்புகளைப் படிக்கும் போது கோபமும் ஆற்றாமையும் ஒன்றாகத் தோன்றும். இந்த அனைத்து உணர்வுகளையும் கலகப் புத்தகம் எனக்கு ஏற்படுத்தியது.

கலகப் புத்தகம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி காலத்தால், வரலாற்றால் மறக்க / மறைக்கப்பட்ட 25 அறிஞர்கள் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் கொண்ட தொகுப்பு நூல். இந்த நூலில் இடம்பெற்றுள்ள அனைவரும்

காலத்தால் அழியாப் புகழ் பெற்றிருக்க வேண்டிய, ஆனால் பெண் என்பதாலும், தங்கள் பாலியல் அல்லது காதல் துணையின் தேர்வுகளாலும் இருட்டடிப்பு செய்யப்பட்டவர்கள். இவற்றில் என்னை மிகவும் கவர்ந்த / பாதித்த சிலரைப் பற்றி இங்கு குறிப்பிடுகிறேன்.

ஹானா ஸ்னெல், கிராஸ் ட்ரெஸ்ஸர். இவர் தன் சுயப் பாதுகாப்பிற்காகவும் வேலைவாய்ப்பிற்காகவும் தன்னைவிட்டுச் சென்ற கணவனைத் தேடவும் ஆண் போன்று உடையணிந்து ஆங்கிலேயப் படையில் கப்பலில் மாலுமியாக வேலை செய்தார். கப்பலில் ஆண்களுக்கு நிகராகக் கடினமான வேலைகளில் 1700களிலேயே ஈடுபட்டார்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆலன் டூரிங் இரண்டாம் உலகப்போர் நேரத்தில், ஜெர்மனியின் ரகசியக் குறியீடுகளைக் கண்டுபிடித்து இங்கிலாந்து மீதான பல தாக்குதல்களை முறியடிக்க உதவினார். இதன் மூலம் பல உயிர்ச் சேதங்களைத் தடுக்க உதவியாக அமைந்ததோடு, உலகப்போர் முன்னதாகவே முடிய காரணமாக இருந்தார். தன்பாலின ஈர்ப்பாளராக அறியப்பட்ட டூரிங், அந்த ஒரே காரணத்திற்காக நாட்டின் மிகச்சிறந்த ஆய்வாளர், அறிவியலாளராக இருந்தபோதும், வேட்டையாடி கொல்லப்பட்ட வரலாறைப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.

அன்னா பிராய்ட், குழந்தை உளப்பகுப்பாய்வின் தாய் என்று அறியப்படுபவர், பல ஆராய்ச்சிகளையும் பல மொழிபெயர்ப்புகளும் செய்திருந்தாலும், ‘பிராய்டின் மகள்’ ஆகவே அறியப்படுகிறார். தந்தையை மிஞ்சிய திறமையிருந்தும் அவர் தந்தை அதனை அறிந்திருந்தும் தன் நிழலைத் தாண்டி வளரவிடாமல் பிராய்ட் அவர் ஆராய்ச்சிகளுக்கே அன்னாவைப் பயன்படுத்திக் கொண்டார்.

லிலியன் பிளாண்ட், 1909ஆம் ஆண்டு விமானத்தை வடிவமைத்து ஓட்டிய உலகின் முதல் பெண், அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர். அயர்லாந்து என்ற சிறிய நாட்டைச் சேர்ந்தவர் என்பதாலும் பெண் என்பதாலும் அவர் படைத்த வரலாறு மறக்கப்பட்டது.

லீஸ் மைட்னர், ஜெர்மனியின் மேடம் கியூரி. 48 முறை நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப் பட்டிருந்தாலும் பெண் என்பதாலும் யூதர் என்பதாலும் அவரது சாதனை வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டது.

மிலெவா மாரிட்ச், ஐன்ஸ்டீனைவிட அறிவாளி, ஐன்ஸ்டைனின் ஆராய்ச்சிகளில் அவருக்குப் பெரிதும் உதவியவர், ஆயினும் பெண் என்பதால் அவரது பங்களிப்புகள் புறந்தள்ளப்பட்டன. ஐன்ஸ்டைன் கல்லூரி வகுப்பு எடுக்க நோட்ஸ் எடுப்பது, அவரது கல்லூரி உரைக்கான குறிப்புகளைக் கைப்பட எழுதியது உள்ளிட்டவற்றைச் செய்தவர் மிலெவா.

ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் நாம் அனைவரும் அறிந்தது, ஸேண்ட்லர்ஸ் லிஸ்ட் நமக்கு தெரியுமா? ஐரீனா ஸேண்ட்லர் இரண்டாம் உலகப்போர் நேரத்தில் 2500 யூதக் குழந்தைகளைக் காப்பாற்றினார். இவரது வாழ்க்கை லைப் இன் எ ஜார் என்கிற பெயரில் திரைப்படமானது.

சாரா ஆன் பிரைட்டின் உலகின் முதல் புகைப்படம்; ‘டென் டேஸ் இன் அ மாட் ஹவுஸ்’ துப்பறியும் தொடருக்காக மனநிலை பாதிக்கப்பட்டவராக நடித்து, மனநல காப்பகங்களின் அவல நிலையை உலகுக்கு அறிய வைத்த உலகின் முதல் புலனாய்வு பெண் இதழியலாளர் நெல்லி பிளை; உலகத்தின் மிகச்சிறந்த மைக்காலஜிஸ்டாக வேண்டிய அறிவியல் ஆய்வாளர், ஆணாதிக்கத்தால் சிறார் எழுத்தாளராக மாறிய பீட்ரிக்ஸ் பாட்டர்; மதராஸின் முதல் திரையரங்கை நிறுவிய ப்ரீடா குளூக் ஷூல்ஸ்; டைட்டானிக் கப்பலின் நிஜ கதாநாயகியான பலரின் உயிரைக் காப்பாற்றிய மார்க்ரெட் டோபின் உள்ளிட்ட பலரின் மறைக்கப்பட்ட/மறக்கப்பட்ட வரலாறுகளின் தொகுப்பாக இந்நூலின் குறிப்புகள் உள்ளன. இவர்களின் வரலாறுகளை மேலும் தேடி ஆராய்ந்து அறிந்துகொள்ளும் ஆவலை இந்நூல் ஏற்படுத்துகிறது.

படைப்பாளர்:

சுகன்யா முரளிதரன். தனியார் துறையில் பணியாற்றுகிறார். சிறு வயதில் இருந்தே புத்தகம் வாசிக்கும் பழக்கம் உள்ளது. புனைவுகள், வரலாறு, உளவியல், பெண்ணியம், பயணம் சார்ந்த புத்தகங்கள் படிப்பது பிடிக்கும். எழுதுவதில் ஆர்வம் உள்ளது, முயற்சியும் பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார்.