1

“ஏ ராதா… ஏ ரம்யா…” ஆச்சி ராகமாய் கூப்பிட்டாள் இருவரையும்.

“கருக்கலாகிட்டு இன்னும் என்ன வெளாட்டு வேண்டிக்கெடக்கு?”, கடைசி வீட்டை ஒருக்கண் பார்த்துக் கொண்டே மீண்டும் கூப்பிட்டாள், அந்த முதியவள். ஓடி வந்த பிள்ளைகளைக் கடிந்துக்கொண்டே உள்ளே அழைத்துக் கொண்டு தெருவாசல் கம்பிக் கதவை சாத்தினாள்.

“ஒருமட்டம் சொன்னா ஓர்மைல நிக்கா ரெண்டு பேத்துக்கும்?”, ஆச்சி ஏன் ஏசுகிறாள் எனப் புரிந்துக் கொண்ட ராதாவும் ரம்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு கம்பிக் கதவு வழியாக மெதுவாக கடைசி வீட்டை எட்டிப்பார்த்தனர். எதிர்வரிசையில் மூன்றாவது வீடாக இருக்கும் கடைசி வீட்டு வாசலுக்கு அப்போது தான்  வந்தாள் சந்திரா. இருவரும் ஆச்சிக்குப் பின்னால் ஒளிந்துக் கொண்டு பார்த்தார்கள். குளத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சந்திரா தெருவை நோக்கித் திரும்புகையில் ஆச்சியும் சட்டென உள்பக்கமாய் திரும்பி முறைத்தாள் இருவரையும்.

“அங்க என்ன பார்வை வேண்டிக்கிடக்கு? போங்க உள்ள. உங்க அம்மை வரட்டும் சொல்லுதனா இல்லியா பாருங்க”

இரண்டு பொடிசுகளும் கால் கையைக்கூட கழுவாமல் உள்ளே ஓடினார்கள்.

“இனிமே சாயந்திரம் வெளியே போங்க சொல்லுதேன்” என்றாள் ஆச்சி.

பாலை ஆற்றி இரண்டு தம்ளரில் ஊத்திக்கொண்டிருந்த ஆச்சியின் மடியில் அமர்ந்த ரம்யா மெதுவாகக் கேட்டாள்.

“நிஜமா பேய் இருக்காச்சி?”

“இன்னா பாத்தேல்லா! கண்ணு முன்னாடி அங்கன வந்து உட்காந்தா பாத்தேல்லா?”

“ஆனா சந்திராக்கா நல்லாத்தானே இருக்கா? நேத்து என்னப்பாத்து சிரிச்சா”

“நீ எங்க அங்கனப் போன? ஆரு சொன்னா நல்லாருக்கான்னு? குளத்துக்குள்ள எப்படி வெறிச்சிப் பார்த்தா பாத்தியா? ஆருட்டயோ பேசுதாப்லா பாத்துக்கிட்டே நிக்கா அந்தானைக்கு. அவ்வோ வீட்டுப் பக்கம் போக்கூடாதுன்னு சொன்னேனா இல்லையா?”

“பேய் அவ உடம்புல இருந்தா அவா யாருகிட்ட ஆச்சி பேசுதா?”

“நீ அங்கன போனியாக்கும்? நீ இப்படி பேய் பிடிச்ச பிள்ள வீட்டுக் கிட்ட போவாத… அவ உடம்புல இருக்க பேய் உன்னைய என்னமாது செஞ்சுப்போடும்”

“சரிச்சி, சந்திராக்கா சன்னல் வழியாதான் பார்த்து சிரிச்சா… வண்டிக்கார தாத்தா வந்ததும் போய்ட்டா”

“ம்ம்ம் என்னமோ போ, அவ அம்மையும் கோயிலுக்கு கூட்டுப் போவத்தான் பாக்கா. அது வருவனான்னு நிக்கு என்ன செய்வா பாவம்.”

“ஏச்சி மணி சொன்னான் சந்திராக்கா எப்பயும் கொளத்தப் பாத்துக்கிட்டுத்தான் இருப்பா, வேற ஒன்னும் செய்ய மாட்டா நம்மளன்னான்”.

“மணிக்கு அஞ்சாறு தெரியும் பாரு. சந்திரா ஆத்தாக்கு கூறு இருக்கா பாரு… உள்ள அடைச்சி வைக்காம இப்படி வெளில உடுதா சந்திராள, ஆட்க நடமாட வேண்டாமா?”

“கிட்டப் போனா என்ன செய்வா?” என ரம்யா கேட்ட நொடியில், ‘அய்யோ எம்மா’ என்ற அலறல் சத்தம் கேட்டு ஆச்சி வெளியே ஓடினாள். இருவரையும் உள்ளேயே இருக்கச் சொல்லிவிட்டுப் போனாள்.

அங்கே சந்திராவின் அம்மா கையைப்பிடித்துக்கொண்டு அழுத வண்ணம் “சந்திரா வந்திரு” என்று அரற்றிக்கொண்டே குளத்தை நோக்கி நடக்கலானாள்.

ஆச்சி கதவை திறந்துக்கொண்டு வெளியே இறங்க, பக்கத்து வீட்டு சித்திராம்மா பதறினாள். “பாருங்காச்சி அந்த பிள்ளைய, அவ அம்மா உள்ள கூப்பிட்டு இருக்கா… சட்ட பண்ணாம இருந்திருக்கா. கைய பிடிச்சு உள்ள கூப்புட்டதுக்கு,  அந்த பேய் பிடிச்ச பிள்ள கையக் கடிச்சிட்டு விறு விறுன்னு குளத்துக்குள்ள இறங்கிட்டா… அன்னா போறா பாருங்க. யாத்தா காத்து கெனக்கால்லா போறா”

“காத்து தானே அது, அப்படித்தானே போவும். அவ்வோ அப்பாவ எங்க. அய்யோ பாவம், இவ தனியா எங்கன புடிக்க முடியும். வண்டிக்காரர் வீட்ல இல்லையோ? சத்தம் கொடேன் கொஞ்சம்” என்றாள் ஆச்சி. இதற்குள்ளாக கணிசமான அளவில் கூட்டம் கூடியது தெருவில்.

சண்டியர் போல வண்டிக்காரர் வெளியே வந்தார். சட்டை அணியாத பரந்த மார்பும் பெரிய தொப்பையும் வெளுத்த முடியும் முறுக்கிய மீசையுமாக கனத்தக் குரலில் சத்தம் கொடுத்தார்.

“எலே எளவட்ட பயலுவளா, நிக்கியோ அப்படியே… போய் இழுத்தாங்கலே அவள” என்றார்.

“தாத்தோய் அவ மனுசியா இழுத்தார? பேய் லா… ஆரு போவா? நீரு போரும். வாழ்ந்து முடிச்ச கட்ட.  நாங்க உமக்கு பின்னாடியே வாரோம்”, என்றான் சித்ரா அண்ணன் முத்து.

“பேசாம வீட்டுக்கு போலே”, என அடக்கினாள் அவன் அம்மை.

“ப்பூ இம்புட்டுதானால உங்க வீரம். எத்தனை பேய அடக்கிருக்கேன் நான். சுடுக்காட்டுக்கு ஒத்தைல போய்ட்டு வந்துருவேன்… ஊருக்குள்ள கேளுடே என் வீரத்த. ஒரு பயலும் வேண்டாம்ல நானே இழுத்தாரேன்” எனக் குளத்தை நோக்கி திம் திம்மென நிலம் அதிர நடந்தார் வண்டிக்காரர்.

2

புதிதாகக் குடிவந்திருந்த சித்ரா அம்மா, ஆச்சியைப் பார்த்தாள்… அப்படியா என்பது போல. ஆச்சி நினைவுக்கூர்ந்து பேச ஆரம்பித்தாள்.

“அன்னைக்கு நல்ல அமாவாசை இருட்டு பாத்துக்க. அந்த குடிகாரப்பய சின்னச்சாமியக் காணோம். அவன் பொண்டாட்டி கனகா அவன் வீட்டுக்கு வரலனு ரோடு காடெல்லாம் தேடிக் காணாம, அவன் குடிச்சிட்டு வெட்டாங்கொளம் பக்கம் போனான்னு சொல்லக்கேட்டு ‘ஓ ராமா’ன்னு ஒரேக் கூப்பாடு. ஒருத்தரும் போய் கூட்டியாரக் கிளம்பல. அப்ப வண்டிக்காரர்தான் ‘நான் போய் பாத்தாரேன்’னு வண்டிய குளத்துக்குள்ள இறக்கிட்டு போனாரு. அப்பயும் தண்ணி இல்ல குளத்துல. ஆனா வெட்டாங்குளத்துல தண்ணி கெடந்தது, இந்த மூதி குடிச்சிட்டு வெட்டாங்கொளத்துக்குள்ள சாடிட்டானோன்னு அவன் பொண்டாட்டிக்குப் பயம். ஒரு நா பஸ்ல உழுந்துட்டான்லா நல்ல வேள சின்ன அடியோட தப்பிச்சான் அப்போ.

கால்ல விழாத குறையா அவ கும்புட்டு, கூத்தாடி நானும் வாரேன்யானு கிளம்புனா… அப்போ அவ புள்ளதாச்சில்லா. வேண்டாம் தாயின்னு இவர் ஒத்தைக்கு ஒத்த மனுசன் கிளம்புதாரு. இன்னா உன் மவன் சொன்னாப்ல அப்பயும் தெரு பயலுவ இறங்குனானுவோ அவ்வோ அவ்வோ வீட்டாளுக தலப்பிள்ள, தோஷம் இருக்கு, கடக்குட்டி, ஒத்த புள்ளனு ஒவ்வொரு காரணம் சொல்லி நிறுத்திட்டாவ. அமாவாசை வேறல்லா… நாய் ஊளை உடுது மணி பதினொன்னரை ஆவுது.”

ஆச்சி சொல்ல சொல்ல,  சித்ரா அம்மைக்க மூஞ்சில ஈயாடல உம் கூட கொட்டாம கேட்டுட்டுக்கிட்டு அப்படியே நின்னா..

மேல் வீட்டு லெட்சுமி சேந்துக்கிட்டு சொன்னா, “ஏ யப்பா மறக்க முடியுமா அத… எப்படி தூக்கிப் போட்டு கொண்டாந்தாரு சின்னச்சாமிய” என்றாள்.

ஆச்சி தொடர்ந்தாள். “ஒரு பயலும் வராண்டாம்னு, இன்னா போறார்லா இப்படித்தான் போனாரு அன்னைக்கு. ஒத்தைல வண்டிய கெட்டிட்டு போனவரு, வெட்டாங்கொளத்துல விளக்க வைச்சிக்கிட்டு தேடிருக்காரு எங்கனயும் காணோம். சின்னா சின்னானு கூப்பிட்டு பார்த்திருக்காரு, ஒரு அணக்கம் இல்ல. மாட்டு வண்டிய அங்கனயே நிப்பாட்டிட்டு கரையோரமா நடந்து சுடுகாட்டுக்கு போய்ட்டாரு. ஏம்னா குளத்துக்குள்ள எங்கனயும் இல்ல. சவம் செத்து கிடந்தாலும் தெரியாதே, வந்ததுக்கு வெட்டாங்கொளம் கடைசி வர பாத்துப்புடுவோம்னு போய்ட்டாரு. கருக்கல்ல குளத்துக்கு போவ நாம ஆள் தேடுதோம். அவர் அமாவாசை இருட்டுல குளத்த தாண்டி வெட்டாங்கொளம் தாண்டி சுடுகாட்டுக்குப் போய்ட்டாரு. அங்க இந்த எளவெடுத்தவன் கல்லறைல குடிச்சிட்டு படுத்து கிடந்திருக்கான். அவன எழுப்ப போயிருக்காரு,  ஒரே ஓலமாம்… ‘என்ன தொடாத, தொடாத’ ன்னு ஒரு பொம்பிள சத்தமாம். ‘சீ மூதி எட்டப்போ’ன்னுட்டு அவன தொட்டு எழுப்பி இருக்காரு.  

பேய்க்காத்து அடிக்காம்… லாந்தர் விளக்கு அணையல, கண்ணாடிக்கூண்டு இருக்கதுனால. நாய் வேற ஊள உடுதாம், மனசுக்குள்ள பயம் இல்லாமையா இருக்கும். இங்கனயா அவரு மக்கமாருவளுக்கு நிக்க முடில, அப்பன் தனியா போய்ருக்கானேன்னு… அவனுவ பொண்டாட்டியோ கண்ண உருட்டி போப்டாதுன்னு நிக்காளுவோ…” என்று பெருமூச்சு விட்டாள் ஆச்சி.

“பொறவு என்னாச்சி சொல்லுங்கச்சி”, என்றாள் சித்ராம்மா.

“என்னாவும், சின்னா எந்திக்கலனு ஒத்தக்கைல தூக்கி நிறுத்தி தோள்ளா வாங்கிக்கிட்டாரு… திரும்பி நடக்காராம் கெக்க கெக்கன்னு ஒரே சிரிப்பு சத்தமாம். கண்ணுக்கு முன்னாடி ஒரு பொம்பள விருட்டுனு போயிருக்கா. இவரு அசராமா அவன தோள்ள போட்டுக்கிட்டு நடக்காராம். கைல இருந்த விளக்க விருட்டுனு ஆரோ புடுங்கிட்டாவளாம். சுத்தியும் கும்மிருட்டு. ஒரு நிமிஷம் நிதானிச்சவரு, வந்த பாதைக்கே நடக்க ஆரம்பிச்சிட்டாரு. பின்னுக்கு பேச்சு கொடுத்துட்டே வாராளாம். திரும்பி பார்க்கலையாம் இவரு. இவர் நடக்க நடக்க கொலுசு சத்தம் சலங் சலங்குனு கேட்காம். இவர கண்ட மாடு ரெண்டும் இவருக்கு பின்னுக்கு வந்த ஆளப் பாத்துக் கலையுதுவளாம். குளத்துக்குள்ள கெடந்த நாய்வோ அப்படி குரைக்குவோ, இங்கன நிக்க எங்களுக்கு கேக்கு. ஒருத்தர் முகத்துலயும் ஈயாடல. அவரு பொண்டாட்டி தங்கம்மா அந்தால ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சிட்டா. அவருக்க மூத்த மவன் பொறுக்கமாட்டாம  பொண்டாட்டிய ஏசிப்போட்டு உள்ளப்போயி வேல்கம்பும் வெட்டருவாளுமா வெளிய வந்தான். சின்னவன் அந்தாக்குல ஒரு டார்ச் லைட்ட எடுத்துக்கிட்டு நாய அவுத்தான்”.

“பொறவு ஆச்சி” என்றவளை தவிர்த்துக் குளத்துக்குள் பார்த்தாள் ஆச்சி.  அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தது குளம்.

சந்திராவின் அப்பா சைக்கிளில் வந்தவர் கூட்டத்தைப் பார்த்து, “என்னாச்சு?” என்று பதறியபடி சைக்கிளை விட்டு இறங்கினார். விஷயம் அறிந்து குளத்தை நோக்கி ஓடினார்.

“பாவம் இந்த மனுசன் பொம்பளப்பிள்ளைய பெத்து வைச்சிக்கிட்டு அல்லாடுதாரு”

“பொறவு என்னாச்சு சொல்லுங்க ஆச்சி. மருமக்கமாருவோ ஒன்னும் சொல்லலியாங்கும்?”

“வண்டிக்காரரோட மூத்த மருமவ, ‘சோலி இல்ல உங்க அப்பாருக்கு’னு சொல்லிப்போட்டு  உள்ளாரப் போயிட்டா”.

 ஆச்சி சித்ரா அம்மையிடம் சொல்லிக்கொண்டு இருந்ததை எல்லா இளவட்டங்களும் வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தனர்.

“யாச்சி அப்புறம்” எனக் கேட்டான் முத்து.

“அதான் வந்துட்டாரே” என்றாள் ஆச்சி.

“இல்லச்சி நாயு கொலைச்சிது, மாடு மிரண்டுச்சி பொறவு?”

“ஆங்… அது அந்தால வண்டில தூக்கிப் போட்டு எட்டி வந்துட்டாரு”

“இவனுவ உள்ள இறங்க முன்ன வண்டிமாட்டு சத்தம் சல் சல்னு வந்துட்டு முன்ன”.

“கிங்கரன் கெனக்கா சின்னாவத் தூக்கியாந்து, இந்தா… இந்த திண்ணைல தான் கெடத்துனாரு. அவன் பொண்டாட்டிக்கு போன உசிரு திரும்ப வந்துச்சி, அவனுக்கு சுத்தமா ரேகையே இல்ல. வண்டிக்காரர் கையெல்லாம் ஒரே ரத்தக்காயம். முள்ளு கீச்சினாப்லயும் இருக்கு நகம் கீச்சுனாப்லயும் இருக்கு. என்னனு அவரும் சொல்லல ஒருத்தரும் கேட்கல”.

“மறுநா இவனுவோ நம்பாம காலங்காத்தால சுடுகாட்டுக்கு போனானுவோ… அங்கன தூக்குப்போட்டு செத்துப்போனால்லா பாலத்து வீட்டு ரத்னா? அவ சமாதிகிட்ட இவர் துண்டு கெடந்திருக்கு. தள்ளி லாந்தர் விளக்கு உடைஞ்சி அங்கொன்னும் இங்கொன்னுமா கெடக்காம். அம்புட்டு பயலுவளுக்கும் அள்ளு உட்டுட்டு.

யாத்தா கெழவன் பொய் சொல்லல, நெசமா சுடுகாட்டுக்குல்லா வந்திருக்காருன்னு தெறிச்சி ஓடியாந்தானுவ… சின்னா ஒரு வாரத்துக்கு எந்திக்கல. சவத்த மூதி எதோ பொம்பிளைய கண்டுதான் அந்தால மயங்கி கெடந்திருக்கான். அதுல காய்ச்ச வந்து அவன் பொழைச்சது மறுபொழப்பு” என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே வண்டிக்காரர், சந்திரா கையை அவர் துண்டால பின்னால் கட்டி இழுத்துக்கொண்டு தெருவுக்குள் நடந்து வந்தார். பின்னாடியே அவர் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் சந்திராவின் அம்மையும் அப்பனும் ஓடி வந்தார்கள்.

ராதாவும், ரம்யாவும் ஆச்சியிடம் அப்பினார்கள்.  “யாத்தா இதுவோ எப்பொ வெளில வந்ததுவோ” என்று நினைத்தாள் ஆச்சி.

“பிள்ளையோ உள்ளப் போங்க” என்றாள்.

“பயமா இருக்குச்சி” என்றான் ராதா.

ஆச்சிக்கு புரிந்தது, உள்நடையில் நின்று எல்லாக்கதையும் கேட்டு விட்டார்களென்று.  

தெருவில் சந்திரா திமிறி குதிக்க, முடியெல்லாம் காற்றில் பறக்க, பார்க்க பயங்கரமாக இருந்தது. வண்டிக்காரர் அசராமல் அவள் கையை பிடித்துக்கொண்டு, “யார் நீ? மரியாதைக்கு சொல்லிப்புடு” என்று அதட்டினார்.

ஓங்காரமாய் ஒரு சிரிப்பு சிரித்தாள்… எல்லாரும் துண்டைக் காணோம் துணியைக் காணோமென ஓடினார்கள்.

வண்டிக்காரர் சத்தம் கொடுத்தார். “ஆரும் வெளிய வரப்புடாது. இன்னைக்கு அவளா நானான்னு பாத்துப்புடுதேன், ஆருக்கிட்ட…”

“யம்மா ஒரு கயிர எடுத்தா…” என்று அவளை அவர்கள் வீட்டுக்குள் இழுத்துச் சென்றார். பேய் ஓட்டப்போகிறார் என்று புரிந்து எல்லோரும் உள்ளே சென்று கதவை அடைத்தார்கள். ராதா மெதுவாக, “மச்சிக்கு போய்ப் பாப்போமா? அவ்வோ வீட்டு முத்தம் தெரியும் மேல நின்னு பாத்தா” என்றாள்.

ரம்யா “ஆச்சி ஏசுவா உள்ள வா” என்று வீட்டிற்குள் நுழைந்தாள்.

இரவு வெகுநேரம் வரை சந்திராவின் கூக்குரலும் சிரிப்பும், வண்டிக்காரரின் அதட்டலும் கேட்டவண்ணம் இருந்தது. மாமாவை ஏனோ தார்சாவிலேயே படுக்கச் சொன்னாள் ஆச்சி.

அம்மாவோ ஆச்சி சொன்ன எந்தக் கதையையும் பெருசாக எடுக்கவில்லை. “அய்யோ பாவம் அந்தப் புள்ள” என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டாள்.  

3

மறுநாள் சந்திராவின் உடம்பில் புகுந்த பேயை வண்டிக்காரர் ஆணியடித்து ஓட்டி விட்டதாக ஊரே பேசியது. ஆச்சி அம்மையிடம் சொல்லிக்கொண்டிருந்தாள், “தலைல தேங்கா  உடைச்சி, அந்த பிள்ளைய அடிச்சி, பாடா படுத்தி கடைசில  புளியமரத்துல கொண்டில்லா எறக்கியிருக்காரு. யாரு ஆவியோ? எங்கன இருந்து புடிச்சிதோ தெரில”.

ராதாவிடம் ரம்யா கேட்டாள், “சந்திராக்கா தலைலயா ஆணி அடிச்சாங்க? வலிக்காதா?”

“என்னமோ தெரில மணிகண்டன கேட்டாச் சொல்லுவான், தாத்தா சொல்லிருப்பாரு, இல்லன்னா எப்படியும் ஒளிஞ்சு பார்த்திருப்பான்.”

“அதுக்கு வண்டிக்காரத் தாத்தாட்டயே கேட்ரலாம்ல?” என்றாள் ரம்யா.

“இப்பதான் பேய் போய்ட்டுல்லா, இனிமே அங்க வேப்பமுத்து பொறுக்கப்போலாம். அப்ப கேப்போம்”

தெருவில் நேரில் பார்த்தவர்களும் பார்க்காதவர்களும் விதவிதமாய் பேயோட்டப்பட்ட கதையைப் பேசினார்கள். கேட்பதற்கு சுவராசியமாய் எல்லாத் தெருக்களிலும் கதைகள் சுற்றின. செய்வினை கோளாறை எடுக்க வண்டிக்காரரை அழைக்க வந்தார்கள். அவர் அதையெல்லாம் செய்வதில்லை என மறுத்தனுப்பினார். தெருவில் அவர் மீதான மரியாதை கொஞ்சம் உயர்ந்தது. சந்திரா வீட்டார் கணிசமாக பணம் கொடுத்தார்கள் என்றும் கூறினார்கள்.

சந்திரா இப்பொழுது எப்படி இருக்கிறாள் என பார்க்க ஆர்வமாய் இருந்தார்கள் தெருவாசிகள்.

ஒரு வாரமாய் வெளியே வராத சந்திரா, எல்லோரும் பேசி ஓய்ந்து, ‘ஒலியும் ஒளியும்’ பார்த்துக் கொண்டிருந்த அந்த வெள்ளிக்கிழமையில் தெருவாசலுக்கு வந்தாள். அதிக நடமாட்டம் இல்லாத தெருவை வெறித்தவள், வழக்கம் போல குளத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

சைக்கிளில் வீட்டுக்கு வந்த முத்து, ஆளற்ற தெருவில் சந்திராவைப் பார்த்து சன்னமாய் பதறி சைக்கிளைப் பூட்டாமல் அப்படியே போட்டு விட்டு உள்ளே ஓடினான்.  மெலிதாக புன்னகைத்தாள் சந்திரா. பின் குளத்தை நோக்கித் திரும்பிக் கொண்டாள். வெளியே வந்த தாயிடம், “நீ போ நான் கொஞ்ச நேரத்துல வாரேன்” என்றாள். 

வண்டிக்காரர் பேய் ஓட்டி விட்டதாய் உத்திரவாதம் கொடுத்தாலும் யாருக்கும் பெரிதாக நம்பிக்கைப் படவில்லை,  சந்திராவிடம்  சகஜமாய் பேசுவதில்லை. சந்திரா வழக்கம் போல தெருவில் அமர்ந்து குளத்தை வெறித்துக் கொண்டுதான் இருப்பாள். ஆனால் அம்மை கூப்பிடும்போது முரண்டு செய்யாமல் உள்ளே போனாள். பிள்ளைகளைக் கண்டால் சிரிப்பாள், பயத்தில் எந்த பிள்ளைகளும் சிரிப்பதும் இல்லை, கிட்டப் போவதும் இல்லை. உள்ளூரில் எல்லாருக்கும் தெரியுமென்று சந்திராவின் தாய்மாமன் அசலூர் மாப்பிள்ளையை பார்த்துக் கொண்டு வந்தான். சந்திரா பிடிவாதமாக மறுத்து விட்டாள். தனக்கு பேய் பிடித்த கதை தெரிந்தால் எப்படி நடத்துவார்களோ எனக் கூறி தடுத்தாள்.

மூன்று வாரங்களுக்கு பின் சந்திராவை காணாமல் அவள் அம்மை தேடிக்கொண்டு குளத்துக்குப் போனாள். சந்திராவின் தங்கை வண்டிக்காரரை அழைக்க ஓடினாள். சந்திரா சாகவாசமாய் குளத்துக்குள் இருந்து நடந்து வந்துக்கொண்டிருந்தாள். “வெளியே போனேன்” என்றாள். தனியாக ஏன் போனாள் என்று கடிந்துக்கொண்ட அவள் அம்மை, பதட்டத்தோடேயே வீட்டை நோக்கி நடந்தாள்.

அன்று வேப்பமுத்து பொறுக்கிக் கொண்டிந்த ரம்யாவின்  சருவத்தாள் கிழிய, அத்தனை முத்துகளும் தரையில் சரிந்தன.  தனியாளாய் பொறுக்கி பாவாடையில் கட்டிக்கொண்டிருந்தாள். நிமிர்ந்து சந்திராக்கா வீட்டைப் பார்த்தவள், சந்திரா சன்னல் வழியாக தன்னைக் காண்பதை கண்டு குனிந்துக்கொண்டாள். சந்திராவோ ஒரு துணிப் பையை எடுத்துக் கொண்டு வந்து ரம்யாவிடம் கொடுத்தாள். பின் அவளும் சேர்ந்து முத்துகளை அள்ளிப் போட ஆரம்பித்தாள்.

ரம்யாவிற்கு ‘திக், திக்’கென்று இருந்தது. “எப்படி படிக்கிறே?” என கேட்டவளிடம் என்ன சொல்வதென்று யோசித்து, “நல்லா படிக்கறேங்க்கா” என்றவள், “நீங்க சரியாகிட்டீங்க்களாக்கா?” எனக் கேட்டாள்.

“எனக்கென்ன? நான் நல்லாத்தானே இருக்கேன்” .

ஒன்றும்  புரியாமல் என்ன சொல்வது என்ற குழப்பத்தோடு அவள் உச்சந்தலையைப் பார்க்க முயற்சித்தாள் ரம்யா.

“என்ன அப்படி பார்க்கறே?”

“இல்ல உங்க தலைல புண்ணு ஆறிட்டாக்கா?”

“ஓ அதுவா? வலிச்சது அப்புறம் ரெண்டு நாள்ள சரியாகிட்டு”

“ரத்தம் வரலையா?”

“வரல…”

“ஆணி அடிச்சா ரத்தம் வராதாக்கா?” என கண்கள் விரியக் கேட்டாள் ரம்யா.

“ஆணியா..?” எனச் சிரித்த சந்திரா, “ஆணி மரத்துல தானே அடிச்சாரு? என் தலைல தேங்காய் உடைச்சாரு!”, என்றாள்.

“அப்போ உங்களுக்கு எல்லாமே ஞாபகம் இருக்கா அக்கா?”

“இல்லாம என்ன? என்ன இன்னமும் பேய பாத்தாப்லயே பாக்கே நீ?”

“அது வந்துக்கா… அன்னைக்கு நீங்க கத்தினது எல்லாம் பாத்து பயந்துட்டேன்”

“ம்ம்ம்ம்… எனக்கு ஒன்னுமில்ல ரம்யா. நான் உன்ன ஒன்னும் செய்ய மாட்டேன். பயப்படாதே சரியா?”

“சரிக்கா… பேய் நிஜமா இருக்காக்கா?” என்ற ரம்யாவின் கேள்விக்கு பதில் சொல்லுமுன் தொண்டையை செருமிக்கொண்டே வெளித்திண்ணைக்கு வந்தார் வண்டிக்காரர்.

ஒன்றும் பேசாமல் விடுவிடுவென வீட்டுக்குள் போய்விட்டாள் சந்திரா.

“தாத்தா இன்னைக்கு என்ன கதை சொல்வீங்க?” என அவரைக்கேட்டாள் ரம்யா.

சந்திரா போவதைப் பார்த்துக் கொண்டு நின்ற வண்டிக்காரர், துண்டை உதறிக் கொண்டே திண்ணையில் ஒரு காலை மடக்கி அமர்ந்தார்.

“எங்க உன் சேக்காளியோ எல்லாம்?”

“அவிய எல்லாம் இங்க வர பயந்துகிட்டு மரக்கடை தெருவுக்கு வேப்பமுத்து பொறக்க போய்ட்டாவோ”

“உனக்கு பயமா இல்லையா?”

“ம்ம்ம்ம்ஹூம்ம்ம்… இல்ல. சந்திராக்கா பேய தான் விரட்டிட்டீங்களே தாத்தா! இப்பக்கூட நல்லாதான் பேசிட்டு போனா சந்திராக்கா”.

“அப்பிடியா… சேரி சேரி… அப்படித்தான் தைரியமா இருக்கனும் என்ன?”

“சரி தாத்தா உங்களுக்கு பயமா இல்லையா?”

“எதுக்குளா பயப்படனும்?”

“சுடுகாட்டுக்குபோவ, பேய பார்க்க பயமா இல்லையா?”

வேப்பமரத்தில் இருந்த குருவிகளும், கிளிகளும் கீச்சிட்டுக்கொண்டே பறக்கும் வண்ணம் ‘ஹா ஹா ஹா’வென பெரிதாகச் சிரித்தார்.

“என்ன தாத்தா?”

“ஒன்னுமில்லே… பேய பாத்து ஏன் பயப்படனும்? மனுசனுக்குதான் பயப்படனும் பாத்துக்கோ. மனுசன் தான் பெரிய பேய். செத்தவன் தானே பேயா வாரான்? உயிரோட இருக்கும் போதுதான் எல்லாம் செய்வான். செத்தப்புறம் என்னத்த கிழிச்சிடப்போறான் சொல்லு?”

“அப்போ பேய் ஒன்னும் செய்யாதா தாத்தா?”

“அதெல்லாம் நம்ம தைரியமா இருந்தா ஒன்னுமே செய்யாது. அதுக்கு பயப்படலாம் வேண்டாம்”

“உங்கள பேய் மறிச்சுதாமே” என்று பயத்தோடு ரம்யா கேட்ட கேள்விக்கு, இன்னும் பெரிதாக சிரித்தார் அந்தக் கிழவன்.

“பேய், பிசாசு பத்தியெல்லாம் இன்னும் கொஞ்சம் வளந்தப்புறம் பேசுவோம் என்ன? இப்போ நான் வண்டி கெட்டனும். நாளைக்கு கதை சொல்லுதேன்…”

“தாத்தா நாளைக்கு நான் எல்லாத்தையும் கூட்டியாரேன், பேய்க்கதை சொல்வியளா?” என ஆர்வமாய் கேட்டாள் ரம்யா.

“பேய் கதை… ம்ம்ம் அது வேண்டாம். வேற கதை சொல்றேன்.”

“என்ன தாத்தா நீங்க, நீங்கதானே பேய பாத்தவரு! சொல்ல மாட்டியளா?”

“நாளைக்கு சாயந்திரம் ஆறு மணிக்கு சொல்லுதேன் பேய்க் கதை இல்ல, பறக்கும் பாம்பு கதை” என பூடகமாகச் சிரித்துவிட்டு மாட்டை அவிழ்க்கப் போனார்.

“தாத்தோய்… பச்ச பாம்பு தானே?”

“இல்ல இது வேற. நாளைக்கு சொல்லுதேன் மக்கா… இப்ப வரட்டா” என்று போய்விட்டார்.

மறுநாள் இன்னும் ஐந்தாறு, சிறுவர் சிறுமியரோடு காத்திருந்தாள் ரம்யா. வண்டிக்காரரின் தலையைப் பார்த்ததும் உற்சாகமாய் திண்ணைக்கு ஓடி வந்தார்கள். வாரத்தில் இருதினங்களாவது இப்படி தெரு பிள்ளைகளுக்கு கதைகளை சொல்லி வருபவர் வண்டிக்காரர்.

எல்லோரும் சொல்லி வைத்தது போல, “பேய் கதை சொல்லுங்க தாத்தா” என்றார்கள்.

“அடப்பிள்ளையளா, பேய்னு ஒன்னும் இல்ல. மனசு தான் பேய்”

“அப்போ நீங்க பேய் ஓட்டுனது சும்மாவா?” எனக் கேட்டான் ராதா.

“நான் சொன்னேன்லா மனசு தான் பேய், மனசுக்கு பேய் பிடிச்சா மந்திரிக்க தானே செய்யனும்?”

“நெசமாவா தாத்தா?” என எல்லோரும் வாய் பிளந்தார்கள்.

“ஆமா பின்ன? பேயும் இல்ல பிசாசும் இல்ல” என்றவர் அவர் வீட்டு ஆச்சி கூப்பிடவும், “சேரி இன்னைக்கு கதை சொன்னாப்ல தான்”, என்றார்.

“சாமி இருக்கா?” எனப்பட்டென ராதா கேட்டான்.

“சாமி, பேயி எல்லாம் நமக்குள்ளதான் இருக்கு. நம்ம மனசுக்குள்ள. நீ சாமியா இருக்கதும், பேயா மாறுததும் உன் கைல, அம்புட்டுத்தான்…” என்றவர், எழுந்து உள்ளே சென்றார்.

“ஏ ராதா… ஏ ரம்யா…” என ராகமாய் கூப்பிட்டாள் ஆச்சி.

இருவரும் பதறிக்கொண்டு ஓட, அம்மாவும் ஆச்சியும் சித்ராம்மாவுடன் உள்நடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. “உள்ள  போங்க”, என்றவள், “பேயுமில்ல, ஒன்னுமில்ல எல்லாம் மனநோயி” எனச் சொல்வது காதில் விழுந்தது.

மறுநாள் சீக்கிரமே விளையாட இறங்கினாள் ரம்யா. சந்திராக்கா அவர்கள் வீட்டு வாசலில் வழக்கம்போல அமர்ந்து  குளத்தையே பார்த்துக்கொண்டு இருந்தாள், சிரிப்பது போலவும் தோன்றியது.

ஆளற்ற குளத்தில் யாரைப் பார்த்து சிரிக்கிறாள் எனக் குழம்பி கூர்ந்து பார்த்தாள் ரம்யா. மறுகரையில் இருக்கும் பனைமரத்தை ஒட்டி ஒரு ஆள் நிற்பதுபோல தெரிந்தது ரம்யாவுக்கு.

முற்றும்.

படைப்பாளர்

ராணி கணேஷ்

ராணி கணேஷ் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து பப்புவா நியுகினியாவில் தற்போது வசித்து வருகிறார்.  பப்புவா நியு கினி தமிழ்சங்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர். பப்புவா நியுகினி இந்திய சங்கத்தின் துணைத்தலைவராவார். தமிழ்வெளி இலக்கிய இதழின் துணை ஆசிரியர்.

தமிழ் இலக்கியத்தில் தீராத ஆர்வம் கொண்ட இவர் தொடர்ந்து நூல்களை வாசிப்பதிலும் படைப்பு நுட்பங்களை, மொழியின் புதிய வண்ணங்களைக் கற்பதிலும்  உற்சாகமாக ஈடுபடுகிறார். தற்போது கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், திரை மற்றும் நூல் விமர்சனங்கள் என தொடர்ந்து இலக்கிய இதழ்களில் எழுதி வருகிறார். இவரது சிறுகதைகள் கிராமத்து மண்ணின் வாழ்வியலையும், தொலைந்துவிட்ட பால்யத்தின் நினைவுகளையும் மீட்டுருவாக்கம் செய்பவை.