• வயது வித்தியாசம் அதிகம் இருக்கக் கூடாது.

தன் வயதுக்குப் பொருத்தமான, கம்பீரமான, நாகரிக தோற்றத்துடன் கூடிய கணவனை ஒரு பெண் விரும்புவதில் என்ன தவறு இருக்கிறது? கிழவர்களுக்குப் பெண்களை / குழந்தைகளைத் திருமணம் செய்து கொடுக்கும்போது அதை ஆமோதித்து கண்ணையும் கருத்தையும் பூட்டிவிட்டு சகஜமாகக் கடந்துபோன நம் சமூகத்துக்கு இது சற்று அதிகமாகவே அதிர்ச்சியாகத்தானே இருக்கும்? 

இதில் என்ன புதிய சிக்கல் உருவாகிவிட்டது என்றால், பெண்கள் சீக்கிரமே திருமணத்துக்குத் தயாராகிவிடுகிறார்கள். ஆண்கள் படித்து, ஒரு கணிசமான வருமானம் ஈட்டி, வீடு வாகனங்களுடன் ‘Well Settled’ என்கிற நிலையை எட்ட, குறைந்தது முப்பது வயதாவது ஆகிவிடுகிறது. அப்பொழுது குறைந்த வயது வித்தியாசம் என்பது ஆண்களுக்குப் பெரும் சிக்கலாகிப் போகிறது. என்ன செய்ய, கடந்த தலைமுறை முதிர்கன்னிகளைப் பற்றி கவலைப் படாத சமூகம், இதை மட்டும் கேள்வி கேட்பதில் எந்த அறமும் இல்லையே!

  • அதிகம் படித்திருக்க வேண்டும். நல்ல வருமானம் இருக்க வேண்டும். சொந்த வீடு, வாகனம் இருக்க வேண்டும். சுருக்கமாக, நல்ல பொருளாதாரப் பின்புலம் இருக்க வேண்டும்.

இதையெல்லாம் பெண்கள் எதிர்பார்ப்பது குற்றமா? முந்தைய தலைமுறை வரை, பணம் படைத்தவர்கள் எல்லோருமே தங்கள் பெண்களுக்கு இப்படிப்பட்ட வரன்களைத்தானே தேடித் தேடி திருமணம் செய்து கொடுத்திருப்பார்கள்? இன்று மட்டும் ஏன் இப்படி ஒரு குற்றச்சாட்டு எழுகிறது என்று நாம் யோசிக்கிறோமா?

 முன்பெல்லாம், கல்வி பெறாத, நல்ல சம்பாத்தியம் இல்லாத, தங்களை மேம்படுத்திக்கொள்ளச் சற்றும் முயலாத ஆண்களுக்கெல்லாம் சுலபமாகப் பெண்கள் கிடைத்தனர். ஆனால் இன்றைய பெண்கள் சற்று சுதாரித்துவிட்டார்கள். தங்கள் நிலையையும் உயர்த்திக்கொண்டிருக்கிறார்கள். வாய்க்கும் கைக்கும் எட்டாத ஒரு வாழ்க்கையை யாராவது விரும்பி தேர்ந்தெடுப்பார்களா?  

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பெண்கள் இங்கே உண்டு, ஆனால் அவர்கள் ஏழைப் பெண்கள் இல்லை. எல்லோருக்குமே சுய சம்பாத்தியம் இருக்கிறது. தங்கள் திருமணச் செலவுகளுக்கு தாங்களே உழைத்து பணம் சேர்க்கிறார்கள். இப்படித்தான் ஓர் ஆணைத் தேர்ந்தெடுப்பார்கள். அதற்கு ஏற்றார்போல ஆண்கள் தங்களை ‘Upgrade’ செய்துகொண்டுதான் ஆகவேண்டும்.

  • மாமனார், மாமியார், நாத்தனார் போன்ற உறவுகளைச் சுமையாகக் கருதி, வரன்களுக்கு அந்த உறவுகள் இருக்கவே கூடாது என்கிறார்கள்.

 உண்மையில் இந்த உறவுகள் எப்படி இருந்துவந்திருக்கின்றன என்பதைப் பற்றி  சென்ற பதிவில் எழுதியிருந்தேன். இந்த உறவுகள் பற்றி இளைய தலைமுறைப் பெண்கள் மனதில் பதிந்திருக்கும் பயமும் ஒவ்வாமையும்தான் இத்தகைய மனநிலைக்குக் காரணம். நல்ல வசதிவாய்ப்புகளுடன் இருக்கும் ஆண்கள் கூட திருமணத்துக்குப் பெண்கள் கிடைக்காமல் அவதிப்படுவதற்கும் இதுதான் காரணம். சமீபத்தில் குமரி மாவட்டத்தில் மாமியாரின் வரதட்சணைக் கொடுமை தாங்க முடியாமல், பெற்றோருக்கு ஆடியோ அனுப்பி வைத்து விட்டு, திருமணமான 6 மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட ஸ்ருதியின் மரணம் நம்மை எந்தளவுக்கு உலுக்கிப்போட்டது? அந்த ஆடியோ இணைப்பு இங்கே

பிறந்த வீடும் வேண்டாம்… புகுந்த வீடும் வேண்டாம்… எனக்கென ஒரு வீடு வேண்டும் என ஒரு பெண் நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது?

கடந்த தலைமுறை வரை பெண்கள், தங்களைப் பெற்றவர்கள், உடன் பிறந்தவர்கள் என எல்லா உறவையும் உதறிவிட்டுத்தானே புகுந்த வீட்டில் வாழ வந்தனர். இதையே ஓர் ஆண் செய்வதில் என்ன சிக்கல்? இந்த இரண்டுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது?

ஆண்கள் அவர்களுடைய பெற்றோரைக் கவனிக்க வேண்டாமா என்று கேள்வி கேட்டால், பெண்கள் அவர்களுடைய பெற்றோரைக் கவனிக்க வேண்டாமா என்று பதில் கேள்வி கேட்கலாமல்லவா?

 வெளிநாடுகளில் வேலை செய்யும் பிள்ளைகளின் பெற்றோர்கள் பலர், இங்கே தனிமையான வாழ்கை வாழ்வதைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். ‘நீ நாடு கடந்து வேலைக்குப் போகாதே’ என யாரேனும் சொல்கிறார்களா? அது தங்கள் பிள்ளைகளின் வளமான வாழ்கையைக் கெடுக்கும் செயல் என்பதால்தானே அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கின்றனர்? இது தானாக நடக்கலாம், ஆனால் பெண்கள் கேட்டுப் பெறக்கூடாது, அப்படித்தானே?

முந்தைய தலைமுறையினரைப் போல எட்டுப் பத்துப் பிள்ளைகளை இப்பொழுது யாரும் பெற்றுக்கொள்வதில்லை. ஒன்று இரண்டுக்கு மேல் அரிதிலும் அரிது. அப்படியிருக்க, ஆண் பெண் இரு பாலருக்குமே வயது முதிர்ந்த அவரவர் பெற்றோர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது.

இருவருமாகச் சேர்ந்து எல்லோரையும் அரவணைத்துப் போக என்ன செய்யலாம் என்பதைப் பார்க்க வேண்டுமே தவிர, குறை கூறிப் பயனில்லை.

  • ஜாதீயப் பழக்கவழக்கங்களைப் பெண்கள் கடைப்பிடிக்க விரும்புவதில்லை. பூஜை, புனஸ்காரம், திவச தர்ப்பணங்கள் அனைத்தையும் செய்யப் பெண்கள் ஆண்களுக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர்.

 நான் இந்தக் கட்டுரைத் தொகுப்பின் தொடக்கத்திலிருந்து சொல்லி வருவதுபோல, ஒவ்வொன்றுக்கும் பின்னால் இருக்கும் காரண காரியங்கள் எதையும் ஆராய்ந்து உணர்ந்து, முழுமையான புரிதலுடன் யாரும் தங்கள் மறுப்புகளைப் பதிவுசெய்வதில்லை.

மாறாக, சடங்கு சம்பிரதாயங்களை முழுமையாக கடைப்பிடிக்கும்பொழுது பெண்கள் அதிக உடல் உழைப்பைக் கொட்டிக்கொடுக்க வேண்டியதாக இருக்கிறது. அவர்களுடைய ஆரோக்கியம் கெடுகிறது. நேரம் அதிகம் விரயமாவதில் தங்களுக்குப் பிடித்த எதையும் முழு ஈடுபாட்டுடன் செய்ய இயலாமல் போகிறது. அதாவது, இது முழுக்க முழுக்க நடைமுறைச் சிக்கலை மையமாகக் கொண்டதாக இருக்கிறது. அதனாலேயே பெண்கள் இவற்றிலிருந்தெல்லாம் தப்பித்துக்கொள்ளக் கூடுமானவரை அதிக முன்னெச்சரிக்கையுடன் தங்கள் மறுப்பைத் தெளிவாகச் சொல்லிவிடுகின்றனர்.

 இந்த விஷயத்தில் பெண்களுக்கு உண்டாகியிருக்கும் தெளிவு, இன்னும் ஆண்களுக்கு ஏற்படவில்லை. இன்னும் பழமைவாதத்தைக் கட்டிக்கொண்டு அழுகிறார்கள். 

இதில் மாறவேண்டியவர்கள் யார்? இதற்காகவெல்லாம் பெண்களை மறுத்து, நித்திய பிரம்மசாரியாக வாழ்வதில் நஷ்டம் யாருக்கு?

ஆண்கள்தான் புரிந்து தெளிய வேண்டும்.

 பெண்களைப் பெற்றவர்கள், குறிப்பாகப் பெண்ணின் அம்மக்கள் பிள்ளைகளைப் பெற்றவர்களிடம் கொஞ்சம்கூட கனிவுடன் நடந்துகொள்வதில்லை என்பதே அடுத்ததாக முன்வைக்கப்படும் மிக முக்கியமான பிரச்னை. ஓரளவுக்கு அது உண்மையும் கூட.

பத்திரிகை, இணையதளம் அல்லது நேரடியாக இயங்கும் ஏதோ ஒரு ஜாதகப் பரிவர்த்தனை மையத்தில் பணம் செலுத்தித்தான், பெண்ணின் தகவல்களைப் பெறவேண்டும். அதில் நமக்குப் பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்து, அழைப்பு எண்ணைத் தொடர்புகொண்டு பேசினால், பெரும்பாலும் பெண்ணின் அம்மாக்கள்தான் இணைப்பில் வருவார்கள். ஆண்கள் பேசுவது அரிதினும் அரிது.

அதுவும் அவர்கள் பேசும் தோரணையே மிகக் கடுமையாக இருக்கும். ஏதோ யாசகம் கேட்டு கை ஏந்துவதுபோல, அசூயையாக நம்மை உணரவைப்பார்கள். குறைந்தபட்சம் பிள்ளையைப் பற்றிய தகவலைத் தெரிந்துகொள்ளக்கூட முனைப்பு காண்பிக்க மாட்டார்கள். ஏதோ போனால் போகிறது என்பதுபோல பேசி, அழைப்பைத் துண்டித்துவிடுவார்கள்.

 என் தம்பிக்குப் பெண் தேடும்போது நானே நேரடியாக இதை அனுபவித்திருக்கிறேன். ஒன்றல்ல இரண்டல்ல இதுபோல எக்கச்சக்க அனுபவம் எனக்கு உண்டு.

ஆனால் சில ஆண்டுகள் தொடர்ந்து கவனித்ததில், அந்தப் பெண்களில் சிலர் திருமணமே ஆகாமல், அவர்களைப் பற்றிய தகவல்கள் திரும்ப திரும்ப கண்களில் பட்டுக்கொண்டே இருக்கவும்தான் எனக்கு ஒன்று புரிந்தது, அந்த அம்மாக்கள் தாங்கள் பெற்ற மகள்களை பணம் காய்ச்சி மரமாக உபயோகப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள் என்பது…

இதை நான் உணர எனக்கு மற்றும் ஒரு சம்பவமும் காரணமாக அமைந்தது. என் தோழியின் தங்கையுடன் பணிபுரியும் ஒரு பார்ப்பன பெண்ணைப் பற்றியது அது. பெற்றவர்களுக்கு ஒரே பிள்ளை அவர். அதுதான் பிரச்னை.

 மாதம் கணிசமாகச் சம்பளம் வாங்கும் அந்தப் பெண்ணுக்கு இருபத்தெட்டு வயது கடந்தும் திருமணம் முடிந்தபாடில்லை. அவருடைய அம்மா, வரும் வரன்களை எல்லாம் ஏதாவது காரணம் சொல்லித் தட்டிக்கழித்துக் கொண்டே இருந்திருக்கிறார்.

 ஒரு நிலைக்கு மேல் சகிக்க இயலாமல், அந்தப் பெண் என் தோழியின் தங்கையிடம் தனது நிலையைச் சொல்லிப் புலம்பியிருக்கிறார். அந்தப் பெண்ணைப் பற்றி தங்கை மூலம் கேள்விப்பட்ட என் தோழி என் தம்பிக்கு அவரைப் பார்க்கலாமே என்றார். நானும் தம்பியின் தகவல்களைப் பகிர்ந்தேன். அடுத்தநாளே பொருத்தமில்லை எனப் பதில்வந்தது.

அவரது வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு, வங்கிக் கடன் பெற்று அந்தப் பெண்ணின் அம்மா தனது பிறந்தவீட்டு உறவுகள் வசிக்கும் பகுதியில் வீடு ஒன்று வாங்கியிருப்பதாக அதன்பிறகுதான் அந்தப் பெண் தன் தோழியிடம் சொல்லியிருக்கிறார். எனவே தன் மகளுக்குத் திருமணம் செய்யும் எண்ணமே அந்த அம்மாவுக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை என்பது உறுதி.

இதேபோன்ற நடத்தையுள்ள ஆண் பிள்ளைகளைப் பெற்ற அம்மாக்களைப் பற்றியும் முன்பே எழுதியிருக்கிறேன். 

 நமது கதை, கவிதை, காப்பியங்கள் அனைத்திலும் அம்மா எனும் பிம்பம் மிகப் புனிதம் வாய்ந்ததுதானே?  இப்படிக்கூட ஓர் அம்மா இருப்பாரா என்று கூட தோன்றலாம்? உண்டு என்பதே கசப்பான உண்மை. 

பகிரங்கமாகவோ ரகசியமாகவோ தன் தேவைகளைத் தீர்த்துக் கொள்ள வாய்ப்புகள் அமையாத பெண், என்ன செய்வாள்? தன் மகனை வைத்தே தனது எல்லா Nonsexual தேவைகளையும் தீர்த்துக் கொள்வாள். பல இந்தியக் குடும்பங்களின் நிலை இதுதான். இந்த மனுஷனைக் கட்டிக்கிட்டு நான் என்ன சுகத்தைக் கண்டேன்? இந்த ஆள் சுத்த வேஸ்ட். நீயும் அப்படி இருந்துடாதேடா. அம்மா உன்னை நம்பித்தான் இருக்கேன். என் பிள்ளைதான் என்னைக் கரை சேர்க்கணும். என்று புலம்பி, அழுது வைத்தால் போதும். பையனுக்கு தாய் மேல் பாசம் பொத்துக்கொண்டு வந்துவிடும். ‘அம்மா கஷ்டப்படும் போது நான் மட்டும் எப்படி என் பொண்டாட்டியோடு தனியா ஹனிமூன் போறது?’ என்று அங்கேயும் அம்மாவை மடியில் கட்டிக் கொண்டு அழும் ஆண்களும் நம்மூரில் உண்டு.இந்த ஆடவர் குல திலகங்களுக்குத் தெரிவதே இல்லை இவர்கள் இப்படி அரும்பாடு பட்டு வீடு, வசதி, புடவை, நகை, உணவு, ஊருலா என்று ஆற்றுவது எல்லாம் ஒரு மகன் தன் தாய்க்குச் செலுத்தும் நன்றி அல்ல; ஒரு கணவன் கொண்டவளுக்குச் செய்யும் கடமை என்று.இப்படி, தன் ஆண் குழந்தையைக் கணவன் ஸ்தானத்துக்கு உயர்த்தி, அவன் மூலமாகத் தன் பவர் தேவைகளைத் தீர்த்துக் கொள்ளும் பெண்கள் இந்தியாவில் ஏராளம். காரணம் மறுமணம் செய்து கொள்ளும் சுதந்திரமோ, கள்ள உறவு வைத்துக்கொள்ளும் தைரியமோ, நம் பெண்களுக்குப் பெரும்பாலும் இருப்பதில்லை இதனால் தங்கள் மகனை வைத்து தங்கள் ஆட்டத்தை ஆடி முடிக்கப் பார்க்கின்றார்கள். சரி, மகனே பிறக்கவில்லை அல்லது, பிறந்ததும் உதவாக்கரையாகிவிட்டது என்றால், அடுத்து அந்தத் தாய் என்ன செய்வாள்? தனக்குப் பிறந்த மகளையே மகன் மாதிரி வளர்த்து, அந்தப் பெண்ணை ‘the man of the family’ என்கிற அந்தஸ்துக்கு உயர்த்தி ஒட்டுண்ணி மாதிரி மகளை உறிஞ்சி வாழ்வாள் தாய். மனநல மருத்துவர் ஷாலினி அவர்களின் ‘உயிர்மொழி’ நான்காவது அத்தியாயம் ‘பெண் இனத்தின் ‘பவர்’!’ தலைப்பிலிருந்து… 

பெரும்பாலும் நடுத்தட்டு, கீழ் நடுத்தட்டுப் பெண்கள் யாவரும், பிறந்த வீட்டினராலும் சரி, கட்டிய கணவனாலும் சரி வசதி வாய்ப்புடனான சுகமான ஒரு வாழ்கையைக் கனவில் கூட வாழ்ந்திருக்க இயலாது. திடீரென அடித்த ஜாக்பாட் போல, பெற்ற மகளின் மூலமாக அவை எல்லாமே சுலபமாகக் கிடைக்கவும், புத்தி பேதலித்துப் போகிறார்கள். சுயநலம் மட்டுமே மேலோங்கிப்போய், அறம் தவறிப் போய்விடுகிறார்கள்.

அதுவும் ஒற்றைப் பிள்ளையைப் பெற்ற அம்மாக்களுக்குத் தங்கள் எதிர்காலத்தை குறித்த அச்சம் இருந்துகொண்டே இருக்கும் அல்லவா? ஒரு குறிப்பிட்ட வயது வரை பொருளாதார பிரச்னையால் போராடி, ஆசாபாசங்களை தொலைத்து சோர்ந்துபோயிருப்பர். வயோதிகத்தை நெருங்க, நெருங்க உழைத்துப் பிழைக்கவும் வழிவகை இருக்காது. பெண்களைத் திருமணம் செய்து அனுப்பிவிட்டால், அவர்களது வருமானத்தில் எந்தவித உரிமையும் கோர இயலாதல்லவா? சூழ்நிலை இப்படி இருக்கும்போது அவர்கள் என்னதான் செய்வார்கள்?

உத்தரவாதமான, பாதுகாப்புமிக்க ஒரு சூழல் உருவானாலே ஒழிய இவர்கள் தாங்கள் பெற்ற மகள்களை நிம்மதியாக வாழ விடமாட்டார்கள். தப்பித்தவறி ஏதோ ஒரு காரணத்தால் அந்தப் பெண்களுக்கு ஒரு திருமண வாழ்கை ஏற்பட்டுவிட்டாலும், அதில் தலையிட்டு, தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டத் தினம் தினம் எதாவது ஒரு குழப்பத்தை விளைவித்துக்கொண்டே இருப்பார்கள். மகள்கள்தான் இதையெல்லாம் புரிந்துகொண்டு, நன்மை தீமைகளை ஆராய்ந்து, தங்களுடைய நிம்மதியான வாழ்கையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

ஆண்களுக்கு நல்லமுறையில் திருமணம் முடிந்து, அவரவர் குலம் தழைக்கவேண்டும் என்றால், சுய சாதிப் பெண்களை மட்டுமே தேடிக்கொண்டிருப்பது கால விரயம்தான். இதற்கு ஜாதி மறுப்பு திருமணங்கள் மட்டுமே ஒரே தீர்வு. ஆனால் இந்த உண்மையை ஒப்புக்கொள்ளப் பலருக்கும் அதிகத் தயக்கமிருக்கிறது. பூனைக்கு யார் மணிகட்டுவது என்கிற நிலைதான். 

என் குடும்பத்தைப் பொருத்தவரை, நானும் என் இணையரும் முன்னெடுத்து என் தம்பிக்கு ஜாதி மறுப்புத் திருமணம் செய்திருக்கிறோம். நிறைவான அவர்களது வாழ்கையைப் பார்த்து, தயக்கம் விலகி, இதையே ஒரு முன்மாதிரியாகக் கொண்டு கடந்த இரண்டு வருடங்களில் எங்கள் உறவினர் / நண்பர்கள் வட்டத்தில் மேலும் சில ஜாதி மறுப்புத் திருமணங்களும் நடந்திருக்கின்றன. 

குழந்தை குட்டிகளுடன் அவர்களது மகிழ்ச்சியான வாழ்கையைப் பார்க்கும்போது மனதுக்கு அவ்வளவு நிறைவாக இருக்கிறது.

ஜாதி, மத, இன, மொழி, பாலின பாகுபாடுகளை கடந்து, மனித மனங்களின் சங்கமம் என்பது ஒரு அற்புதம்! அதுவே நிதரிசனமான உண்மையாகும். ஆரோக்கியமான அடுத்தடுத்த சந்ததிகளை உருவாக்குவது மட்டுமே இயற்கையின் நியதி. அதை விடுத்த போலி கற்பிதங்கள் அனைத்தும் மனித மனங்களில் விஷத்தை விதைத்து, அன்பைக் கொன்று, பகைமையை மட்டுமே வளர்க்கும், மானுட சமூகத்தின் வளமான வாழ்க்கைக்கு எதிராக நிற்கும் மிகப்பெரிய தடையாகும். அவற்றைத் தகர்த்து முன்னேறிச் செல்வதுதான் ஞானத்தின் உண்மையான மார்க்கம்.

 வாழ்வோம் அன்பு வளத்துடன்…

  • உள்ளிருந்து ஒரு குரல்