சமீபத்தில் ஒரு பள்ளிக்குழந்தையை சந்திக்க நேர்ந்தது. காலை எழுந்ததும் சோபா அல்லது கட்டிலில் அமர்பவள், மாலைவரை அங்கிருந்து நகர்வதில்லை. வீட்டுப் பணிகள் எதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதும் இல்லை. வேலைப் பகிர்வு என்று எதிலும் தலைகாட்டுவதும் இல்லை. பெரியவர்கள் போல உட்கார்ந்த இடத்திலிருந்து தன் பெற்றோரை வேலை வாங்கியிருக்கிறாள். தனக்கு எல்லோரும் சேவை செய்ய வேண்டும் என்பதுபோல நடந்துகொண்டிருக்கிறாள்.
அம்மாவும் அப்பாவும் தனக்கு பணி செய்யவேண்டும் என்று எதிர்பாக்கிறாள். இந்த பொதுமுடக்க காலத்தில் இவ்வாறான ஒற்றைக் குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிகமாகி வருகிறது. ஒற்றைக் குழந்தைகள் வளர்ப்பில் என்னென்ன சிக்கல்கள் இருக்கின்றன? பார்ப்போம்…
இந்த 2K தம்பதிகள் பெரும்பாலோனோர் ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பலரும் முடிவு செய்து அப்படி வாழவும் பழகி விட்டார்கள். இப்படி முடிவு செய்ய மூன்று வகை காரணங்களை சொல்கிறார்கள்.
கருத்தியல் (Ideology): திருமணம் செய்வதற்கு முன் தம்பதிகள் பேசி, முன்பே முடிவு செய்து அதன் படி இருப்பார்கள். சிலர் படிப்பதற்காகவும், வேலையில் பதவி உயர்வுக்காகவும், வெளிநாடு செல்ல வேண்டும் என்றும் பல்வேறு தனிப்பட்ட காரணங்களுக்காக ஒரு குழந்தை போதும் என்று முடிவு எடுத்து இருப்பார்கள்.
உடல் சார் காரணங்கள் (Pathology ): திருமணம் செய்த பின்பு உடல் நலத்தில் ஏற்படும் பல்வேறு சிக்கல்கள்/காரணங்களால் ஒரு குழந்தையோடு நிறுத்தி இருப்பார்கள்.
உளவியல் (Psychology): உளவியல் ரீதியாக குழந்தையை வளர்க்கும் சூழல், வருமானம், அவர்களுடைய மனநிலை போன்ற காரணங்களால் ஒரு குழந்தையோடு நிறுத்தி விடுகிறார்கள். இம்மூன்று காரணங்களில் ஏதேனும் ஒன்றால்தான் இக்கால தம்பதிகள் ஒரு குழந்தையோடு நிறுத்தி விடுகின்றனர்.
என்றுமே முதல் கருவின் வளர்ச்சி மிகவேகமாக இருக்கும் என்று மருத்தவர்கள் சொல்வதுண்டு. அப்படி வேகமாக வளரும் கரு, வெளியே குழந்தையாக வரும்போது, அது தன்னைச் சுற்றிய உலகை அவதானிப்பதும் வேகமாகவே இருக்கும். குடும்பத்தில் பெரியவர்கள் சுற்றி இருக்கும் சூழலில் தனியே வளரும் குழந்தைக்கு ‘பெரியவர்களது’ உளவியல் தாக்கம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. அதனால் வயதுக்கு மீறி சில குழந்தைகள் மிகுந்த மன முதிர்ச்சியுடன் இருப்பார்கள். குழந்தைத்தனம் அறவே இல்லாமல் பெரியவர்கள் போல் அவர்கள் சிந்திப்பதற்கும், பேசுவதற்கும், நடந்து கொள்வதற்கும் இந்த சூழல் தான் காரணமாக இருக்கிறது.
அப்படி ஒற்றைக் குழந்தையாக வீட்டில் வளரும் குழந்தைகள் வழக்கமான சூழலில், பள்ளி, நண்பர்கள், சிறப்பு வகுப்புகள், ட்யூஷன் என்று பலவித காரணங்களால் வெளியே சென்று பலருடன் பழகி வர வாய்ப்புண்டு. ஆனால் தற்போது இந்த பொதுமுடக்க காலத்தில் அவர்கள் என்ன மாதிரியான சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதைக் கணிப்பதே பெற்றோருக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. பொதுவாக ஒற்றைக் குழந்தை வைத்திருக்கும் பெற்றோர், அந்தக் குழந்தையின் நண்பர்களை அடிக்கடி வீட்டுக்கு வர வைத்து ஒன்றாகப் பழகவிடுவார்கள். ஆனால் தற்போது யாரும், யார் வீட்டுக்கும் போக முடியாத சூழலில் வீடுகளுக்குள் முடங்கி இருக்கவேண்டியுள்ளது.
இதனால் இப்படி வளரும் ஒற்றைக் குழந்தைகள் மொபைலுக்கும், அளவுக்கு அதிகமாக உண்ணும் முறைக்கும் அடிமையாகி அவர்கள் உடலையும், மனதையும் பராமரிக்கத் தெரியாமல் குழம்பிப் போயிருக்கின்றனர்.
மூன்று வயது வரை, எந்தக் குழந்தையாக இருந்தாலும் தண்ணீர் எடுத்து தருவது, சாப்பாடு தட்டு எடுத்து தருவது என்று சிறு சிறு வேலைகள் செய்வார்கள். அதன் பின் வளரும் போது பெற்றோர் கொடுக்கும் அளவுக்கு அதிகமான செல்லத்தால், வீட்டில் எந்த வேலையும் செய்யமாட்டார்கள். அதனால் குழந்தைகள் பெற்றோரை அளவுக்கு அதிகமாக சார்ந்திருக்கும் சூழல் உருவாகிறது.
இதன் காரணமாக இந்த நாடடங்கு காலத்தில் ஒற்றைக் குழந்தைகள் பெற்றோருக்கு அதிகமாக வேலை வைத்து கொண்டும் இருக்கிறார்கள். விளையாடுகிறேன் என்று வீட்டிலுள்ள எல்லா பொருள்களையும் சிதறி வைப்பது, ஸ்னாக்ஸ் ஏதாவது வேண்டும் என்று அடிக்கடி கேட்பது, தூக்கம் இல்லாமல் டிவி, மொபைல் அதிகமாக பார்ப்பது என்று பெற்றோர் துணையுடன் நான்கு சுவர்களுக்குள் ஓராண்டுக்கும் மேலாக அவர்கள் இருக்க வேண்டியதாகிவிட்டது.
சில வளரிளம் குழந்தைகள் வீட்டில் ஒட்டுமொத்தமாக தனியே இருக்கப் பழகி விட்டனர். அதாவது யாருடனும் பேசாமல், அவர்களது தனி உலகில், கற்பனையில் வாழ ஆரம்பித்து விட்டனர். நண்பர்களோடு சரிவர பேசமுடியாமல், வேறு எந்தப் புது விஷயங்களையும் கற்றுக் கொள்ள முடியாமல் இப்படியாக தங்களது வெற்றி, தோல்வி எல்லாம் அவர்களுக்குள்ளேயே சிறைப்படுவது போல வாழ்கிறார்கள். அந்த Comfort Zone-ஐத் தாண்டி வெளியே வரவும் அவர்கள் தயாராக இல்லை. இவை எல்லாம் பெற்றோருக்கு மிகப்பெரிய பிரச்னையாக இப்போது உருவெடுத்திருக்கின்றன.
இவ்வாறான ஒற்றைக் குழந்தைகளை சரிசெய்வது மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஏனென்றால் பெரியவர்களோடு அதிகமாக இருப்பதால், பெரியவர்களை எப்படிக் கையாள வேண்டும் என்பது அவர்களுக்கு கட்டாயம் தெரியும். இதனால் பெற்றோருக்கும் பிள்ளைக்கும் இருக்கும் பிரச்னை என்பதைவிட, இது பெற்றோருக்கும், வளர்ந்தவருக்கும் உள்ள பிரச்னையாக மாறியிருக்கிறது.
இந்த சிக்கல்களை ஓரளவு தவிர்க்க, அவர்கள் மொபைல் ஸ்க்ரீன் டைம் வைத்து பயன்படுத்துமாறு சொல்ல வேண்டும். வீட்டில் சின்னச் சின்ன வேலை செய்தாலும், அவர்களைப் பாராட்ட வேண்டும். அவர்களுக்கு உடலை கட்டுக் கோப்பாக வைக்கும் எண்ணத்தை விதைக்க வேண்டும்.
பெற்றோரின் வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபடுத்த வேண்டும். தனியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்ற, நண்பர்களுடன் வீடியோ கால் பேச வைப்பது, புத்தகங்கள் வாசிக்க வைப்பது போன்றவற்றைச் செய்தல் நலம். வாசிப்பின் போது பலவித கதாபாத்திரங்கள் பற்றி அவர்களுடன் விவாதித்தால், வெற்றி, தோல்வி, கவலை, ஏக்கம் போன்ற உணர்வுகளை எந்த விதத்தில் கையாளவேண்டும் என்கிற சிந்தனை குழந்தைகளுக்கு உருவாகும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
இவை எல்லாம் செய்யும் போது, இனி வரும் காலங்களில் ஒற்றைப் பிள்ளையாக வளரும் குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு பெரிய சவாலாக இருக்கும் நடத்தை ( Behaviour) சிக்கல்களை, குழப்பங்களை மாற்ற பெற்றோருக்கு உதவியாக இருக்கும். அதனால் வீடுகளில் ஒற்றையாக வளரும் குழந்தைகளை கொஞ்சம் விழிப்புடன் வளர்த்தெடுக்க வேண்டிய அவசியம் பெற்றோருக்கு இருக்கிறது.
கதை சொல்வோம்…
***
தொடரின் முந்தைய பகுதி:
படைப்பு:
காயத்ரி மஹதி
காயத்ரி மஹதி மதுரையைச் சேர்ந்த மனநல ஆலோசகர். தனிப்பட்ட முறையில் கவுன்ஸலிங் செய்து வருகிறார். உளவியல் ரீதியாக குடி நோயாளிகள் மற்றும் குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக 2016ம் ஆண்டு ஈஸ்டர்ன் பூமிகா நிறுவனம் இவருக்கு “சிறந்த பெண்மணி” விருது வழங்கி கவுரவித்தது. உளவியல் ரீதியாக பள்ளிகளில விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக 2019ம் ஆண்டு நந்தவனம் நிறுவனம் “சிறந்த பெண்மணி” விருது அளித்தது. நாளிதழ்கள், செய்தித் தாள்களில் மனநலம் சார்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார்.