அடர் வண்ணத்தில் லிப்ஸ்டிக் அணிந்து வந்தார் என்பதற்காக பெண் டபேதார் ஒருவரை சென்னை மாநகராட்சி நிர்வாகம் பணியிட மாற்றம் செய்திருக்கிறது. இன்னொரு அரசு அலுவலகத்தில், ‘ஸ்லீவ்லெஸ் ஆடை அணிந்து அலுவலகத்துக்கு வரவேண்டாம்’ என அலுவலர் ஒருவர் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்.

இந்த சட்டங்கள் எல்லாம் எங்கே இருக்கின்றன? அரசு வழிகாட்டல் எங்கே? நடைமுறை என்ன என்பது நாம் கட்டாயம் ஆராய்ந்து தெளியவேண்டியது.

2000ஆம் ஆண்டு ரயில்வேத் துறையில் நான் பணியில் சேர்ந்தபோது, வணிக எழுத்தருக்கு சீருடை நீல வண்ண சேலையும், வெள்ளை நிற சட்டையும். அப்போது எனக்கு வயது 18. சேலை அணியத் தெரியாது. அதைவிடக் கொடூரம் நான் முதல் பணி செய்ய பணிக்கப்பட்ட இடம் ஒரு சரக்கு நிலையம். அங்கு மைல் கணக்கில் கால்கள் வலிக்க வலிக்க, ‘டாக்'(dock) என சொல்லப்படும் நீண்ட நடைமேடைகளில் நடக்கவேண்டும். சரக்கு ஏற்றப்படும், இறக்கப்படும் பெட்டிகளில் ஏறி, இறங்கி பணிகள் சரியாக நடக்கின்றனவா என்று கவனிக்கவேண்டும். சரியாகக் கவனிக்கவில்லை என்றால், ஒரு மூட்டை சர்க்கரை காணவில்லை என்றாலும், ஆயிரக்கணக்கில் வரும் கிளெய்முக்கு மொத்த ஆண்டு ஊதியத்தையும் தெண்டம் அழவேண்டும். அதனால் கண்கொத்திப் பாம்பாக அடிக்கடி பெட்டிகளில் ஏறி, இறங்கி கவனிக்கவேண்டும். நெல், யூரியா, சிமின்ட், கரி என வரும் பொருள்களை சரிபார்க்க இந்த நடைமேடைகளில் ஏறி, ஆஃப்சைடு (ரயில்பாதைக்கு மறுபுறமும் கண்காணிக்க வேண்டும்) செல்ல வேண்டும்.

அதற்குக் குறைந்தது மூன்று – நான்கு அடி ஆழமுள்ள இருப்புப் பாதைக்குள் குதித்து இறங்கவேண்டும், மீண்டும் ஏறவேண்டும். என்னுடன் பணியாற்றிய பெண்கள் அக்கம்பக்கம் பார்த்துவிட்டு சட்டென்று குதித்து இறங்கிவிடுவார்கள்; ஒருவர் மற்றவர் கையைப் பற்றி ஏறுவார்கள். அது ஒரு டீம்-ஒர்க் போல… இணைந்தே யார்டுக்கு(yard) நடப்பார்கள். நானோ எங்குமே தனியே சென்று பழக்கப்பட்டுவிட்டதால், அவர்கள் துணையை எதிர்பார்ப்பது இல்லை. எனக்கு சேலை எவ்விதத்திலும் உதவவில்லை. ஆனால் கேரளாவில் வேலை செய்த என்னுடன் படித்த தோழிகள் அதே நீல வண்ண சுடிதார், வெள்ளை துப்பட்டா அணிந்து சென்றதை கவனித்துக்கொண்டுதான் இருந்தேன். என்ன செய்வது, நான் எப்படி சுடிதார் அணிந்து வேலைக்குச் செல்வது என்று குழப்பம்.

ஒரு வழியாக என் நேரடி உயர் அதிகாரியான சரக்கு நிலையக் கண்காணிப்பாளரிடம் கேட்டேன்.

“சார், சேலை கட்டிக்கிட்டு டாக்ல போக கஷ்டமா இருக்கு. எனக்கு பழக்கம் இல்ல. அதான் சுடிதார் போடலாமான்னு…”

“அதுக்கு? சேலை கட்டி பழகிக்கம்மா. இந்த செல்வராணி மேடத்தைப் பாரு… அம்பது வயசுக்கு மேல. அவுங்கள்லாம் சேலை கட்டிட்டு ஏறி இறங்கி வேலை பார்க்கலியா?”

“அவுங்க பண்ணட்டும் சார். நான் ஏன் பண்ணனும்? என்னால ஆபீசுக்கு சேலை கட்ட முடியாது. மத்த டிவிஷன்ல எல்லாம் லேடீஸ் சுடிதார் போடுறாங்க தானே? அந்த கலர்ல டிரெஸ் இருக்கணும் அவ்வளவுதான? அது சேலையா இருந்தா என்ன? சுடிதாரா இருந்தா என்ன?”

சட்டென முகத்தை தூக்கி வைத்துக் கொண்டார்.

“உனக்கெல்லாம் சொல்லிப் புரிய வைக்க முடியாது. நீ போய் டி சி எம் (Divisional Commercial Manager – அவருடைய மேலதிகாரி) கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு வா. உன் இஷ்டத்துக்கு எல்லாம் இங்க டிரெஸ் பண்ண முடியாது. இது கவர்மென்ட் ஆபீஸ், புரியுதா?”

அவர் சொன்ன தொனியா அல்லது தோரணையா… எது என்னை கோபப் படுத்தியது என்று இன்னும் புரியவில்லை. அடுத்த ஓய்வு நாளான வெள்ளிக்கிழமை அன்று காலை நேரே வணிக மேலாளர் அலுவலகத்துக்குச் சென்றுவிட்டேன். ஒரு மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகு அவரை சந்திக்க முடிந்தது. வழக்கம்போல் நிற்கவைத்தே பேசினார். கடைநிலை ஊழியர்களை உட்கார வைத்துப் பேசக்கூடாது என்பது எல்லாம் ‘பிரிட்டிஷ் ராஜ்’ தந்த எழுதப்படாத விதி. அதைப் பிறகு விரிவாக சொல்கிறேன். என் சூழலை விளக்கியதும் அந்த அதிகாரி, “சுடிதார் போட பெர்மிஷன் வேணும் அப்டின்னு லெட்டர் ஒண்ணு எழுதிக் குடுத்துட்டுப் போங்க. அதோட காபியை உங்க ஆஃபீஸ்ல குடுங்க” என்றார். வெளியே வந்து ஐந்தே நிமிடத்தில் கடிதம் எழுதிக் கொடுக்க, அதில் பச்சை மையில் அவர் கையெழுத்திட்டுத் தந்தார். “Permitted to wear Salwar kameez” என்று அதில் இருந்ததாக நினைவு.

ரயில்வேத் துறையின் Conduct rules – ஒழுக்க விதிகள் அவர்கள் சொல்லும் சீருடையை அணிய வேண்டும் என்று சொல்கிறதே ஒழிய, அதை எந்த வடிவில் அணியலாம் எனச் சொல்லவில்லை. அதனால் அனுமதி எளிதாகக் கிடைத்தது. முதன்முதலில் திருச்சி கோட்டத்தில் சுடிதார் அணிந்துகொண்டு அலுவலகம் சென்ற நபராக நான் இருந்தேன் எனலாம். அந்தக் கடிதம் தந்த விடுதலை உணர்வை அதன்பின் 17 ஆண்டுகள் அனுபவித்தேன். எனக்குப் பிறகு பணியில் சேர்ந்த பல இளம் பெண்கள் சுடிதார் அணிந்து வரத்தொடங்கினர். அவர்களை யாரும் எதுவும் கேட்டதாகத் தெரியவில்லை. இப்படியான முதல் கல்லை யார் எறிவது என்பதே அரசுக் கட்டமைப்பில் பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது.

சென்னை மாநகராட்சி சம்பவத்தில், மேயர் பிரியா அவர்கள் பெயரால் அவரது தனிச் செயலர் அனுப்பிய மெமோவில், அலுவலகத்துக்கு பணி நேரத்தில் மாதவி (சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதார் இவர்) வரவில்லை என்பதும், சீனியர்கள் ஆணைப்படி நடந்துகொள்ளவில்லை என்பதுமாக இரண்டு குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளன. இதில் முதலாவது குற்றச்சாட்டுக்கு மாதவி, தனக்குக் கால் வலி என்பதால் ஒரு நாள் அரை மணி நேரம் அலுவலகத்துக்குக் காலதாமதமாக வந்ததை ஒப்புக்கொண்டார். ஆனால் இரண்டாவது குற்றச்சாட்டுக்கு, ‘நீங்கள் என்னை லிப்ஸ்டிக் போடவேண்டாம் என்று சொன்னீர்கள், அதை மீறி நான் லிப்ஸ்டிக் போட்டேன். அப்படி லிப்ஸ்டிக் போடக்கூடாது என்று எந்த அரசாணையில் உள்ளது?’ என்று சான்று கேட்டு பதில் கடிதம் அனுப்பினார். இங்குதான் அரசு அதிகாரம் விழித்து எழுந்தது. இந்த பதில் கடிதம் கிடைத்த அரை மணி நேரத்தில், ‘தண்ணி இல்லாத காட்டுக்கு’ – மணலிக்கு மாதவி மாற்றப்பட்டார்.

இதில் ‘மற்ற மாநகராட்சி அதிகாரிடளுடன் பேசக்கூடாது’, ‘மற்ற துறை அலுவலகங்களுக்குப் போகக்கூடாது’ போன்ற கட்டுப்பாடுகளும் அவர் மேல் விதிக்கப்பட்டுள்ளன என்பதை தன் பதில் கடிதத்தில் சுட்டி, அவற்றை மனித உரிமை மீறல்கள் என்று குறிப்பிடுகிறார்.

இதே சம்பவம் கெடுவாய்ப்பாய் என் பணி வாழ்க்கையிலும் நடந்தது. முக்கிய சந்திப்பு ஒன்றில் பணி செய்துகொண்டிருந்த காலம் அது. டிக்கெட் கொடுக்குமிடத்தில் இடைவிடாத பணி இருக்கும். அங்குள்ள பெண்கள் பெரும்பாலும் ‘டீ குடிக்க’ பிற ஆண்களைப் போல வெளியே செல்வதில்லை. கையில் பிளாஸ்க் கொண்டு வந்து அலுவலகத்திலேயே ஒரு ஓரத்தில் நின்று கொண்டோ, உட்கார்ந்து கொண்டோ அவசர அவசரமாக வீட்டிலிருந்து கொண்டுவந்த ஆறிப் போன டீயைக் குடித்துவிட்டு மீண்டும் வேலையில் ஆழ்ந்துவிடுவதுண்டு. ஆண்களோ, செட் சேர்ந்து கொண்டு பணி நேரத்தில் டீ குடிக்க அரை மணி நேரம் போவதென்ன, சனிக்கிழமை ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போய் மிளகு வடை வாங்கிக் கொண்டு அதை அதிகாரி அலுவலகத்தில் கொண்டு சென்று கொடுப்பதென்ன… எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் செய்வார்கள். இத்தனைக்கும் அலுவலக நேரத்தில் அலுவல் இடத்தை விட்டு வெளியே செல்வது, பணியில் தண்டனைக்குரிய குற்றம் (conduct rules).

பிச்சாண்டார்கோயில் ரயில் நிலையத்தில் இருந்து சாப்பாடு வாங்க பக்கத்து உணவுக் கடை உள்ள சாலை வரை (அது கிடக்கும் 2 கிலோமீட்டர் தள்ளி) டூட்டி நேரத்தில் சென்றதற்காக ஆறு மாதம் increment கட் வாங்கிய ஆள் நான். காலை 6 மணிக்கு பணியில் உட்கார வேண்டும் என்றால் 4 மணிக்கே கிளம்பியாக வேண்டும். யார் எப்போது எப்படி நமக்கு அந்த நேரம் உணவு தயார் செய்து தருவார்கள் என்பதெல்லாம் நிர்வாகத்துக்குத் தேவையில்லாத பிரச்னை. அவர்களுக்கு, ‘நாங்கள் வந்த நேரம் நீ பணியில் இல்லை’ என்பதே. சோறு தின்னாமல் செத்தாலும் பரவாயில்லை, அதற்கான மாற்று ஏற்பாட்டை நிர்வாகம் செய்யவேண்டும் என்பதை எல்லாம் நினைப்பது இல்லை.

நானும் ஒரு கட்டத்தில் கடுப்பாகி ‘டீ குடிப்பதை’ செய்யத் தொடங்கினேன். பக்கத்து அலுவலகத்தில் பணியாற்றிய தோழர் ஒருவரும் அவ்வப்போது துணை வர, இது சர்ச்சையானது. அரை மணி நேரம் டீ குடிக்க ஒரு பெண் கிளம்பிப் போவதா? நேரடியாக கேட்கவும் முடியவில்லை. விஷயம் காதும் காதும் வைத்தாற்போல உயர் அதிகாரி காதுக்கு ‘போட்டுக் கொடுக்கப்பட்டது’. ‘Attend office’ வந்தது. அது ஒரு நூதன பிரிட்டிஷ் ராஜ் தந்திரம். எங்கோ வெளியூரில் பணி செய்யும் நபர்களுக்கு எல்லாம் இந்த ஆணை வரும். உங்கள் நேரடி உயரதிகாரி நூறு மைல் தொலைவில் இருந்தாலும் நீங்கள் வண்டி பிடித்து, அவர் அலுவலக வாசலில் காலை 10 மணிக்கெல்லாம் சீருடையில் வந்து ஆஜராகி, அங்குள்ள சேரிலோ ஸ்டூலிலோ அமர்ந்துகொள்ள வேண்டும். வருவோர் போவோரெல்லாம் உங்களை வினோதமாகப் பார்த்துச் செல்வார்கள். அதுதான் உங்கள் ‘தண்டனை’.

“என்ன அட்டெண்ட் ஆஃபீசா?” என்ற நேரடி விசாரிப்புகள் தொடங்கி, ‘அவ ஆபீஸ் நேரத்துல இவன் கூட டீ குடிக்கப் போயிருக்கா’ ‘டீ தான் குடிக்கப் போனாளா?’ என்பதான கட்டுக்கதைகள், வசைகள் உங்களுக்குப் பின்னால் பேசப்படும். மாலை 5 மணிக்கு சாவகாசமாக அதிகாரி உங்களைக் கூப்பிட்டு அனுப்பி, விசாரிப்பார். இந்திய ‘எடுபிடி’ பணியாள்களை தங்கள் அடிமைகளாக வைத்திருந்த ஆங்கிலேய ராஜின் அயோக்கியத்தனமான அதிகார அத்துமீறல்களில் இதுவும் ஒன்று. நானும் அன்று மாலை விசாரிக்கப்பட்டு, ‘இனிமேல் அலுவல் நேரத்தில் டீ குடிக்க வெளியே செல்லக்கூடாது’ என்று எச்சரித்து அனுப்பப்பட்டேன். ஆனால் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஆஞ்சனேயரைத் தரிசிக்கச் செல்லும் அலுவலக ஆண்களுக்கு இதனால் எந்த சிக்கலும் வரவில்லை. அவர்கள் கிட்னிக்கு ஒரு பிரச்னையும் இல்லை.

இதே பிரிட்டிஷ் ராஜின் எச்சம்தான் ‘என்னிடம், எனக்குக் கீழே பணியாற்றும் பெண் அடர் வண்ணத்தில் லிப்ஸ்டிக் போடக்கூடாது’ என்று மேயரை பின்னால் பேசவைத்திருக்கிறது. இதில் வர்க்க வேறுபாடும் துல்லியமாக விளையாடுகிறது. மேயர் அணியும் லிப்ஸ்டிக்குகள், அதே அலுவலகத்தில் பணியாற்றும் இதர பெண் உயர் அதிகாரிகள் அணியும் லிப்ஸ்டிக்குகள் எந்நாளும் கேள்விக்கு உட்படுத்தப்படப்போவதே இல்லை. ‘நீ கடைநிலைப் பணியாள். உன் இடம் அது மட்டுமே. உனக்கு எதற்கு லிப்ஸ்டிக்?’ என்று கேட்கும் ஆணாதிக்க, ஆதிக்க வர்க்க மனோபாவம் அது.

கூடவே மேயர் பிரியா அவர்கள், ‘பெண்கள் தினத்தன்று நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் அவரது (மாதவி) தோற்றமும் நடிப்பும் விமர்சனத்துக்கு உள்ளானது, அதுவும் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது’ என்று சொல்கிறார். பெண்கள் தினத்தன்று நடந்த நிகழ்வில் அவர் ‘நடத்தை’ அவரது பணியை எந்த விதத்தில் பாதித்தது? அதை எப்படி அவரிடம் இவர் தெரிவிக்கலாம்? அது தனி மனித உரிமை மீறல் இல்லையா? கூடவே, ‘அவர் மாட் ஷேடு லிப்ஸ்டிக் அணிந்திருந்தது ‘உறுத்தலாக’ இருந்தது (striking – கவனத்தை ஈர்ப்பது). மேயரின் அலுவலகம் அமைச்சர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் அடிக்கடி வந்துபோகும் இடமாக இருப்பதால், அதை அணியவேண்டாம் என்று என் தனிச் செயலர் அவரிடம் சொல்லியிருக்கிறார். ஆனால் அதனால் எல்லாம் இடமாற்றம் செய்யப்படவில்லை’ என்றும் கூறியுள்ளார்.

ஆக, இதில் இரண்டு சிக்கல்கள் உள்ளன. ஒன்று – ஆண் ஒருவர், தனக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் உதட்டுச் சாய வண்ணத்தை மட்டுப்படுத்த வேண்டும் என்று அவரிடமே சொன்னது கட்டாயம் பணியிட அத்துமீறல் (workplace harassment), மற்றொன்று மேயர் அவர்களின் அலுவலகத்துக்கு வரும் அமைச்சர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் குறித்த மேயரின் ‘நம்பிக்கையற்ற’ பேச்சு. அவர்கள் வந்து போகும் இடத்தில் பெண் ஒருவர் இப்படி லிப்ஸ்டிக் போடுவதா என்று கேட்பது, அந்த ஆண்களை அவமதிக்கும் செயல், அவர்கள் மாண்பைக் கேள்விக்கு உட்படுத்துவது. இவற்றின் அடிப்படையில் நடந்திருப்பது மாதவிக்கு எதிரான பணியிட அத்துமீறல். அதற்கு மேயர் துணை போயிருக்கிறார் என்பது அப்பட்டமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மாதவி அறமற்ற முறையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது கண்டனத்துக்கு உரியது. மாநகராட்சி ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் தனியார் ஊழியர்கள் என்பதால் அவர்களுக்கென தனி தொழிற்சங்கம் இல்லாத சூழலில், உள்ளகக் கமிட்டியிடம் இது குறித்துப் புகார் தெரிவிக்க மாதவிக்கு முழு உரிமையும் உண்டு. ஆனால் அவருக்கு வழிகாட்டப் போவது யார் என்பதே கேள்வி.

இதே மேயர் வெளிநாட்டுப் பயண்த்தின்போது பேண்ட் சட்டை அணிந்துகொண்டிருந்தார் என்று இங்கே புயல் கிளம்பியபோது, அதில் அவருக்கு ஆதரவாக எழுதிய பெண்ணியலாளர்கள் இப்போது முகத்தை எங்கே கொண்டு வைப்பது என்பதுதான் புரியவில்லை! முன்னாள் எம் எல் ஏ ஒருவர் பொதுவெளியில் அவரின் அனுமதியின்றி கையைப் பற்றி அவரை கேமராவை நோக்கித் திருப்பியதும் சர்ச்சைக்குள்ளானது. மூத்த அமைச்சர் ஒருவருக்கு குடை பிடித்தார் என்றும் இவர்மேல் குற்றச்சாட்டு எழுந்தது. மாநகராட்சியிலும் இவரை ‘தென்றல் புயலானது’, ‘குழந்தைத்தனமானவர்’ என்றெல்லாம் ஆண் கவுன்சிலர்கள் வர்ணித்தது சர்ச்சையானது.

இவை எல்லாமே ‘casual sexism’, ‘conditioning’. ‘எங்கள் ஆணுலகில் நீ சிக்கலின்றி நீடித்து இருக்கவேண்டும் என்றால், எங்கள் சட்டங்களே இங்கு செல்லும்’ என அவரை நிர்பந்தித்த ஆண் அதிகார வர்க்கத்தின் அதே பார்வையை, தனக்குக் கீழ் பணியாற்றும் பெண் ஊழியர் மேல் மேயர் செலுத்தியல் எவ்வித அதிர்ச்சியும் இல்லை. இது எதிர்பார்க்கப்பட்டதே. தனக்கு சொல்லப்பட்டதை அவர் செய்கிறார். ஆனால் அதைச் சரியென்று நாம் சொல்லமுடியாது. டபேதாரின் லிப்ஸ்டிக்கை விமர்சித்து அவர் பேசியது மிகவும் பிற்போக்கானது; கண்டிக்கப்படவேண்டியது.

சிந்தித்துப் பார்த்தால், என் 17 ஆண்டு கால ரயில்வே பணியில் ஒரு முறைகூட லிப்ஸ்டிக் அணிந்து அலுவலகம் சென்றது இல்லை. அத்தனை ஆண்டு காலமும் அலுவலகத்துக்கு நீல நிற சுடிதாரும் வெள்ளை துப்பட்டா சீருடையும்தான். ஒரு நாளும் ஆடை அணிந்து அலுவலகம் செல்லத் தயாரான பிறகு, நான் கண்ணாடியைப் பார்த்தது கிடையாது. பிடிக்காது. என் உடல் மற்றும் முகத்தின் மீதான, என் ஆளுமையின் மீதான ஒடுக்குமுறையாக அந்த ஆடையைப் பார்த்தேன் எனலாம். அந்த ஆடையில் என் முகத்தைப் பார்க்கவும், என் உடலை அந்த நீல நிற கோணிப்பைக்குள் பார்க்கவும் சகிக்காது. இதனாலேயே வெளியே எங்கே சென்றாலும் திருத்தமாக, மக்கள் மொழியில் சொல்வது என்றால், ஸ்டைலாக செல்வதை வழக்கமாக்கிக் கொண்டேன். “சர்ச்சுக்கு எதுக்கு லிப்ஸ்டிக்? எதுக்கு இந்த டிரஸ்?” என்று உறவினர்கள் கேட்டாலும், வழக்கம்போல எருமை மாடு மேல் மழை பெய்த கதைதான்.

வேலையை விட்ட நாள் முதலாய் லிப்ஸ்டிக் இல்லாமல் எங்கும் செல்வது இல்லை. அழகுற ஆடை அணியாமல் செல்வதும் இல்லை. என்னை ஒடுக்க நினைத்த ஆணாதிக்க சிந்தனைக்கான என் எதிர்வினை – என் ஆடை, லிப்ஸ்டிக்.

பெரும்பாலும் காட்சி ஊடகங்கள் vamp – வில்லிகளை அடர் லிப்ஸ்டிக் அணிபவர்களாக, அதிகம் மேக்கப் செய்பவர்களாகக் காட்டுகின்றன. அடர் சிவப்பு லிப்ஸ்டிக் ‘பாலுணர்வு சமிக்ஞை’ என்று சொல்கிறார்கள் ஆய்வாளர்கள் அயன் ஸ்டீபன் மற்றும் ஏஞ்சலா மக்கீகன் (Red lips have been considered attractive in women in geographically and temporally diverse cultures, possibly because they mimic vasodilation associated with sexual arousal). ஆனால் இதற்கு கூடுதல் ஆய்வுகள் தேவை என்கிறார் மற்றொரு ஆய்வாளர் நிக்கோலஸ் கெகென். எடுத்துக்காட்டாக படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரம் அணிந்து வரும் அடர் சிவப்பு வண்ண லிப்ஸ்டிக்குக்கு நேர்மாறாக, நியூட் (nude) வண்ண லிப்ஸ்டிக்குகள் நாயகி சவுந்தரியாவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும். இங்கே நியூட் வண்ணங்கள் ‘நல்ல பெண்ணுக்கு’ என்பதும், அடர் வண்ணங்கள் ‘வில்லிக்கு’ என்பதும் பல்லாண்டு காலமாய் நமக்குள் ஊடுருவியிருக்கும் ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடே. ‘எனக்கு உரிமையான பெண் என் கண்ணுக்கு மட்டுமே அழகாக இருக்கவேண்டும்; மற்றவன் அவளை கையெடுத்துக் கும்பிட வேண்டும்’ என்ற சிந்தனை. ஆனால் அதே மாற்றான் மனைவி, மகள் என்றால், அடர் வண்ண லிப்ஸ்டிக் பாலியல் அழைப்பு, கோரிக்கை! நல்லா இருக்கு சார் உங்க நியாயம்!

பெண்கள் லிப்ஸ்டிக் அணிவது யாருக்காக என்ற மிக எளிய அடிப்படைக் கேள்வியை தங்களுக்குள் கேட்டுக் கொண்டாலே அதற்கான விடை கிடைத்துவிடும். ‘எனக்காக’, ‘நான் presentable ஆக என்னை காட்டிக் கொள்ள’, என்ற பதில்கள் உங்களிடம் இருந்தால், உங்களுக்குப் பிடித்த purple, black என என்ன வண்ண லிப்ஸ்டிக் என்றாலும், அதை நீங்கள் எவ்வித குற்ற உணர்வும் இன்றி அணிந்து செல்வீர்கள். அதுவே ‘என் வீட்டுக்காரருக்குப் பிடிக்கும்’, ‘இந்த வண்ணத்தைத்தான் அவர் அனுமதிப்பார்’, ‘என் கறுப்புத் தோலுக்கு அடர் வண்ணம் சரிவராது’ என்றெல்லாம் நீங்கள் நினைத்தால், நேரடியாகவோ, மறைமுகமாகவோ நீங்கள் ஆணாதிக்கத்துக்குப் பலி ஆகியிருக்கிறீர்கள் என்பதை உணருங்கள், தோழர்களே… லிப்ஸ்டிக்குக் கூட உங்களுக்குக் குற்றவுணர்ச்சியில் தள்ளும் சமூகத்தின் ‘கற்பை’, ‘மாண்பை’ கட்டிக்காத்து ஆகப்போவது என்ன தோழர்களே?

ஆக உங்கள் லிப்ஸ்டிக்கை அழிக்கச் சொல்லும் மனோபாவத்துக்குப் பின்னால் யாரெல்லாம் இருக்கிறார்கள், என்னவெல்லாம் இருக்கின்றன என்று பாருங்கள்…

  1. ஆங்கிலேய ஏகாதிபத்தியம்
  2. வர்க்க பேதம்
  3. பால் பேதம்; ஆணாதிக்கம்
  4. ஊடகக் கருத்தாக்கம்
  5. சமூகம் என்ன சொல்லும் (அ) அந்த நாலு பேர் என்ன சொல்வார்கள்?

இதை எல்லாம் தாண்டித்தான் நாம் வாழவேண்டும் என்றால், விடாப்பிடியாக தடித்தோலை வளர்த்துக்கொண்டு, சிவப்பு மேட் லிப்ஸ்டிக் அணிவோம். வாழ்வைக் கொண்டாடுவோம்!

படைப்பாளர்

நிவேதிதா லூயிஸ்

எழுத்தாளர், பெண்ணிய, சமூக வரலாற்றாளர், தொல்லியல் ஆர்வலர்.