வினோத்ராஜ் இந்தத் தமிழ் சமூகத்தின் மனசாட்சிக்குக் கொடுத்திருப்பது பொளேரென்ற ஒரு அடியும், மன உளைச்சலும். 

‘100 ரூபாய் கொடுத்து படம் பார்ப்பேன். படத்தில் எல்லா உணர்வுகளும் கொடுத்து, ஒரு பிரச்னையை கொடுத்து, என் மனதுக்குகந்த ஒரு தீர்ப்பையும் கொடுத்துவிட்டால், நீதியை நிலைநாட்டிய மனநிறைவில் வெளியேறிவிடுவேன்’ என்ற மனப்பான்மையின் வாலில் சரவெடி கட்டி பத்தவைத்திருக்கிறார். 

“நீ சாதி வெறியன் தானே? இந்தியாவிலேயே அகமணமுறை நிறைந்த நைச்சியநச்சு பரவியிருக்கும் தமிழ்நாட்டின் அங்கம் தானே? பெண்களை விதம்விதமாக அடிமைப்படுத்தி வைத்திருக்கிறவன் தானே? இன்னொருத்தனை விரும்பும் பெண்ணைத் தெரிந்தே கல்யாணம் செய்து, மனைவியாக அவளை பாலியல் வல்லுறவு செய்துவிட்டால், திருமணம் என்ற பந்தத்தை காப்பாற்றிக் கொள்ளலாம் என்று நினைக்கிறவன் தானே? காதலித்தால் ஆணவக்கொலை செய்வதை அமைதியாகக் கடக்கிறவன் தானே? உனக்கென்ன நீதியை நிலைநாட்டிய மனப்பான்மை வேண்டியிருக்கிறது? மன உளைச்சலில் திரி” என்று ஒரு படம் எடுத்து சாதி வெறியர்கள் முகத்தில் விட்டெறிந்திருக்கிறார்.

இதில் இரு நண்பர்கள் வருவார்கள். விடிந்ததும் ஊரில் இருந்து கிளம்பிய பயணத்தில், போகும் வழியிலே தன் குழந்தையோடு சேர்ந்து வேலை பார்த்துக்கொண்டு இருக்கும் ஒருவரிடம் வழி கேட்பார்கள்.

“ஒயின்ஷாப்புக்கு வழிசொல்லத்தான் இங்க உட்காந்திருக்கமா? கிளம்புங்கடா” என்பார். இருவரும் அதிர்ச்சியாகி விடுவார்கள். கொஞ்சநேரம் அவர்களின் முகங்கள் அந்த அதிர்ச்சியிலேயே காட்டப்படும்.

“எவனக்கேட்டாலும் வழி சொல்லுவாய்ங்க, இவனுக்கு என்னாவாம், சுத்த கிறுக்கா இருப்பான் போல” என்று புலம்புவார்கள். 

படத்தில் கிளைமாக்ஸ் இல்லை என்று கேட்பவர்களுக்கும் இயக்குனருக்குமான உரையாடல் இது என்றுதான் இந்தக் காட்சியை நான் பார்க்கிறேன். 

படம் முழுவதும், ஒரு காட்சியும் தேவையில்லாத காட்சி இல்லை, தேவையான ஒரு காட்சியும் இல்லாமல் இல்லை. 

இந்தப் பயணத்துக்குமுன் 15 நாள்கள் அந்தப் பெண்ணை அடி நொறுக்கியிருப்பதை ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருப்பார்கள், காட்சிகள் தேவை இல்லை. காதலன் யார், என்ன ஜாதி? தேவையில்லை. அவனாவது இவளுக்கு சுதந்திரம் தருபவனா இல்லை, இவர்களைப் போன்றவன் தானா? தேவையில்லை. ஒரு பெண் காதலிப்பது ஒன்றே போதும் அவளை எதுவும் செய்ய! 

ஆணுக்கும் பெண்ணுக்குமான வேறுபாட்டை மனதில் உறுத்தல் இல்லாது தினமும் கடந்து பழகியவர்கள்தான், “என்னடா எல்லாத்தையும் காட்டுறீங்க?” என்று புலம்புகிறார்கள். 

நாயகி குளியலைறையில் குளிப்பாள், அடுத்து குளிக்க வாசலில் நாயகனின் தங்கை குளியலறை வாசலில் காத்து நிற்பாள். ஒரு ஆணும், இரு சிறுவர்களும் ஒரே தொட்டியிலிருந்து திறந்தவெளியில் குளித்துக்கொண்டிருப்பார்கள். இப்படி ஆரம்பித்து படம் முழுவதும் இப்பேற்பட்ட ஒப்பீடுகள்தான்.

பெண்கள் சிறுநீர் கழிக்கவும், நாப்கின் மாத்தவும் காட்டுக்குள், பூச்சி பொட்டுகளே பரவாயில்லை என்று மறைவாகச் சென்று வர, ஆண்கள் நினைத்த இடத்திலெல்லாம் பேய்வதை முழு காட்சியாகவும், பிளாஸ்டிக் பை, காய்ந்த இலை மீது பேயும் சத்தமாகவும் கேட்டு, படம் பார்ப்பவர்களை எரிச்சலடைய வைப்பதை யுத்தியாகச் செய்கிறார் இயக்குநர். 

ஒரு பெண் சுயமாக முடிவெடுக்கும்போது அவளின் போக்கை மாற்ற ஒட்டுமொத்த ஆணினமும் உயிரைக்கொடுத்து உழைக்கும் என்பதை காட்டும் காட்சி ஆட்டோவைத்திருப்பும் காட்சி. அதற்கு நிகழ்சாட்சியாக நாயகி. அடுத்த காட்சியிலேயே அரைகிலோமீட்டர் தூரத்தில் விட்டுவந்த குலசாமி கற்கள் காட்டப்படுகின்றன. கற்களை அப்போது எண்ண அவகாசம் கிடைக்கிறது. ஏழு கற்கள், சப்த கன்னிகள் அவர்கள்தான் கடந்த கால சாட்சியங்கள்.

நாயகியின் கிளைமாக்ஸ் பாதியிலேயே வந்துவிட்டது. அவனோ முரடன், சாமியாரிடம் போயும் சரியாகவில்லை என்றால் அவளைக் கொன்றுவிடலாம் என்று இருப்பவன். இவளோ கொட்டுக்காளி, பிடிவாதத்தை மாற்றிக்கொள்ளப்போவதில்லை.

பாலமேடு நீர்தேக்கத்தில் துப்பட்டா இல்லாமல் இதே உடையில் தலைவிரித்து உலவும் தன்னை நாயகி பார்க்கிறாள், அவளுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கிறது. பயணமுடிவில் தன் கதி என்னவென்று அவளுக்குத் தெரிந்துவிடுகிறது. அந்த நீர்தேக்கத்தை தாண்டியதும்தான் அவள் கண்ணில் முதல் முதலில் கண்ணீர் சுரப்பதாக திரையில் காட்டப்படுகிறது. அந்த இடத்தில் சில பெண்களின் சேலைசாத்துகள் மரங்களில் காணப்படுகின்றன. அவை அந்த நீர்த்தேக்கத்தின் முந்தைய பயன்பாட்டை பறைசாற்றுகின்றன. 

“அவ திருந்தமாட்டா,வெட்டிக்கொல்லாம என்னய சமாதானப்படுத்துறீங்க” என்கிறான். “இன்னிக்கு சாமியார்ட்ட போயிட்டு வந்து அவந்தான் வேணும்னு கேட்டாள்னா கொன்னுறுவோம்”என்கிறான் நாயகனின் தகப்பன். அப்பிடி என்ன சடங்கு? 15 நாள் அடித்து நொறுக்கியது சொல்லப்பட்டுவிட்ட நிலையில், இது கடைசி முயற்சி. 

ஏற்கனவே உடலளவில் உலுக்கப்பட்டு சாமியாரிடம் கூட்டி வரப்படும் பெண்கள், அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் உறுத்தல் இல்லாமல் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள ஒரு வழியாக இதைத்தான் செய்கிறார்கள். “இத்தனை நாள் நீ தப்பு பண்ணல, மருந்து வச்சதாலதான் இப்பிடியெல்லாம் ஆச்சு” என்று சடங்கின் போது சொன்னால், இதை அந்தப் பெண் ஏற்று, அடங்கி வாழ வழி தரப்படுகிறது.

சாமியார் உடல்ரீதியான அத்துமீறல் செய்யும்போது, பெண்ணின் மனதில் சுடச்சுட இருக்கும் பிரச்னைகளின் குமுறல் பின்னால் போய்விடுகிறது. அதிர்ச்சி வைத்தியம் மனதை ஆக்கிரமிக்கிறது. இந்த சடங்குக்கு உதவவேண்டியதே கட்டிய ஆணும் குடும்பமும்தான் என்பதே சாமியார் தொழிலின் வெற்றிக்கான சூத்திரம்.

பெண் அடங்கிவிட்டால்,

*சாமியார் மருந்து எடுத்தது உண்மை

*பெண் சுயமாக வழிமாறிப் போகவில்லை, மருந்து வைத்ததால்தான் இவ்வாறெல்லாம் ஆகிவிட்டது

*மனதாற சுயமாக அவள் அந்த வழிதவறிப்போகவில்லை ஆதலால் அவளை மன்னிக்கலாம்

*இதற்குப் பின்னும் மறுத்தால் பெண் கொல்லப்படுவாள்

இந்த ஏற்பாடு, மனம் மாற பெண்ணுக்கும், அவளை திருமணம் செய்ய ஆணுக்கும், பிறந்த புகுந்த வீட்டினரின் கௌரவத்துக்கும் என்று எல்லா தரப்பினரும் மனதை ஆற்றிக்கொள்ள வழிவகை தருகிறது.

பெண் இந்த இடம் வரை வரவே பெரும் மன உறுதி தேவை. ஏச்சு, பேச்சு, அடி உதை என்று அனைத்தையும் தாண்டிய பெண் இதையும் தாண்டி உறுதியாக இருந்தால், அந்தப்பெண் இந்த ஆணின் சமுதாயத்திற்கு தேவைப்படாதவள், கேடானவள், புற்றானவள். மற்ற பெண்கள் இவளைபார்த்து கெட்டுப்போகுமுன் இவளை இங்கிருந்து நீக்கிவிடவேண்டும். இதுதான் இந்த சமூகத்தின் நீதி.

இந்த சமூகம் ஆணுக்காக, ஆணால் கட்டப்படும் சமூகம்.

ஏன் இதில் பெண்களுக்கு பங்கே இல்லையா? இந்த படத்தில் வந்திருக்கும் பெண்களை எடுத்துக்கொள்வோம்

  1. மீனா – இவள் பிடிவாதமானவள். எல்லாப்பெண்களையும் போல தான் வெறித்து பார்க்கப்படுவதை உள்ளுணர்வால் கண்டறிபவள். குலதெய்வம் கோவிலில் பாண்டி தன்னை பார்ப்பதை சிறு புருவநெறிப்புடன் உணர்ந்து பார்க்கிறாள். பாண்டி பார்ப்பதை பார்த்தும் தலை குனியவில்லை, வேறு பக்கம் பார்க்கவில்லை, எதிர்ப்பார்வை பார்க்கிறாள். அதைத்தாங்காமல் பாண்டி தலை குனிந்துவிட்டு, திடீரென்று தன் ஆதிக்கம் ஞாபகம் வந்தவனாக உள்ளே கோபத்தை ஏற்றி திரும்ப முறைத்தாலும் அதை கண்டுகொள்ளவில்லை. தூற்றப்படுவது எந்த சலனத்தையும் தரவில்லை, அடி எந்த மாற்றத்தையும் தரவில்லை. அவள் பேசும் ஒரே வசனம், “இங்கே அடிக்க மட்டும் செய்யல”. இது பூசாரியின் செயலை தூரமாக இருந்தே கண்டுபிடித்துவிட்ட தெளிவு. அப்படியும் பதற்றமடையவில்லை. இதைப் பார்க்கும் ஒவ்வொரு இன்றைய பெண்ணும் தன்னை அடையாளப்படுத்த முடியும் பாத்திரம்.
  2. சாந்தி – மீனாவின் அம்மா. 12வது முடித்து கல்யாணம் பண்ணவேண்டிய பெண்ணை, மருமகனிடம் பேசி கல்லூரி படிக்கவைத்த தாய். தன்னிடம் தன் பெண் இருக்குமட்டும் சிறகுகளை வளர்த்துவிடவேண்டும் என்ற கனவை மட்டும் கொண்டவள். இவளிடம் சிறகில்லை. ஆயுதமில்லை. தன் பெண்ணுக்கு ஆயுதம் தரவும் வக்கில்லை. பெண்ணின் கதி உணர்ந்து, தப்பித்துப்போ என்று வாய்ப்பு கொடுத்தும், போகாத கொட்டுக்காளிப் பொண்ணைப்பார்த்து மறுக மட்டுமே தெரிகிறது.
  3. முத்து – பாண்டியின் மூத்த தங்கை. போகுமிடத்தில் எல்லாம் “நேரமாச்சு வாங்க”, “எல்லாரும் நல்லா இருக்கனும்,” என்று சத்தம் போட்டு ஒரு பெண் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். சத்தம் தானே தவிர, சொல்லுவதெல்லாம் ஏற்கனவே எடுத்த முடிவுகளின் வழி எல்லாரையும் கொண்டு செல்லும் குரல் அது. ஆண்களுக்கு துணையாக நிற்கும். ‘கைய கால ஒடிச்சு கல்யாணம்’ பண்ணிக்கொள்ள பாண்டியை அறிவுறுத்தும். 
  4. ராணி- வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதிகாரமிருக்கும் ஆண் யாரோ அவனையே தன் முடிவுகளுக்குட்படுத்த முயற்சிக்கும். “வேற பொண்ணு பாக்குறேன்”, “இவ கூட நீ நல்லா வாழ்ந்திருவியா?” என்று பேசும். ஆண்களுக்கு உதவியான சில பல திறமைகளை வளர்த்துவைத்திருக்கும். அதைவைத்து அவ்வப்போது தன் அதிகாரத்தை திணிக்க முடிவதிலேயே திருப்தி அடைந்துவிடும். வண்டி வேணாம், ஆட்டோவில் வா என்று பாண்டியை கூப்பிடுவதில் உணரலாம்.
  5. செல்வி – ஒரு சீன் முன்னால்தான் பாட்டு பாடியதற்காக பாண்டி மீனாவை அடித்து, மறிக்க வந்த அத்தனை பேரையும் அடித்து, எல்லார் மரியாதையையும் கிழித்து நார் நாராய் தொங்கப்போட்டு வெறியாட்டம் ஆடியிருப்பான். அந்தப் பெரும்போரில் பங்குவகித்த அத்தனை தரப்பினரையும்  அடங்கி ஒடுங்கி நிற்கவைத்த ஒரு சக்தியை அன்பால் தன்வசப்படுத்தும் திறனை, ஒரு பெண் சிறு வயதிலேயே பெற்று விடுகிறாள் என்று காட்டிய சிறுமி, காளைக்கு சொந்தக்காரி.
  6. சாமியார் முன் குறையை சொல்லி நிற்கும் பெண்: இவளுக்கும் முத்துவுக்கும் நிறைய வித்தியாசமில்லை. முத்து பயணம் முழுவதும் பேசியதைத்தான் இவள் சாமியார் முன் பேசுகிறாள். இதுவே தன் கல்யாணத்திற்கு பின்னும் நிகழலாம் என்பதே பாண்டிக்கு உறைக்கிறது
  7. சாமியார் முன் ஆட்பட்டது போல நிற்கும் பெண்: எதற்கும் அசையவில்லை, என்ன வேண்டுமானாலும் செய்துகொள் என்று நிற்கும் பெண். அழுது ஆர்ப்பாட்டமோ, சத்தமோ எதுவும் இல்லை. பிணம் போலவே உணர்ச்சிகளின்றி நிற்கிறாள். கையை காலை ஒடித்து திருமணம் செய்தாலும், பிணத்துடன் வாழவேண்டி இருக்கும் என்பதையும் பாண்டி உணர்கிறானா இல்லையா என்று நம் மனதில் ஆற்றாமை எழுகிறது. 

இந்த ஏழு பெண்கள் தான் இந்த படத்தின் சப்தகன்னிகள். இவர்களும் ஒருவருக்கொருவர் ஆதரவு அளிக்காத அளவுக்கு சமூகம் இவர்களை பிரித்துத் தான் வைத்துள்ளது. (வாய்ப்புள்ளவர்கள் சப்த கன்னி தெய்வங்களின் கதையை வாசிக்கவும்)

இந்தப்படத்தின் ஆண்கள் தனித்தனியாக குற்றம் குறைகள் நிறைந்த, பலவீனங்கள் நிறைந்தவர்களாகக் காட்டப்படுகின்றனர். “நம்ம போனாத்யான் நமக்கு வந்து நிப்யான்” என்று பேசி வரும் நண்பன், ஊரை விட்டு வெளியே வந்த உடனேயே அங்கே புதிதாக வந்திருக்கும் வீடுகளைப்பார்த்து ஆச்சரியப்படுகிறான். ஊரைவிட்டு வெளியேவே வந்திராதவர்கள், சரியான வேலை வெட்டி இல்லாதவர்கள், கண்முன் முன்னேறுபவர்களைப்பற்றியெல்லாம் மாய்ந்து மாய்ந்து பேசுபவர்கள், எத்தனை பேர் இவர்களைத்தாண்டி முன்னேறிப் போனாலும் அங்கேயே தேங்கி இருப்பவர்கள், தங்களைவிட அடுக்கில் உயர்ந்தவன் என்று ஏற்றுக்கொண்ட பாண்டியிடம் அடிவாங்கிவிட்டு அதை நேராகச் சொல்லாமல், அவன் உடமையென நினைக்கும் பெண்ணை, “ருசி கண்டிருப்பா, டாக்டர்கிட்ட கூட்டிப்போனா கன்னித்தன்மை இருக்கான்னு தெரிஞ்சிரும்” என்று பொரணி பேசுபவர்கள் என்று காட்டுகிறது. 

பாண்டியின் மாமா பொருளாதாரத்தில் பாண்டியின் குடும்பத்தைவிட கீழே இருந்து, இயலாமையால், தன் குடும்பத்தின் உரிமையை இன்னொரு குடும்பத்திற்கு தாரை வார்த்துவிட்டு, தன் கௌரவத்தை காப்பாற்ற அடுத்தவரை அண்டி வாழும், இயலாமையில் திரியும் நபர்.

பாண்டியின் தந்தை, தான் செய்த தாய்மாமன் சீருக்கு இன்னும் தன் மகன் வட்டி கட்டுவதாக சொல்லிக்காட்டுகிறார். இவர்தான் சாமியாரிடம் கூட்டிப்போகும் ஆள்.

இவர்கள் எல்லாமும் தனித்தனியாக பலவீனங்கள் நிறைந்தவர்கள், ஆனால் ஒன்று சேர்ந்தால் இவர்களுக்குள் இருக்கும் குற்றம் குறைகளை மறைத்து, மன்னித்து, சமாளித்து, சீர்செய்து, கோட்டையைப் போல நிற்பார்கள். பெண்களை பலவீனமடையச்செய்வது மட்டுமே ஒற்றை நோக்கம். சம்பந்தமேயில்லாத போலீஸ்கூட சலுகை செய்வார். எங்காவது பெண் முந்திப்போவதாய் கொஞ்சம் தெரிந்தாலும் அங்கே ஒரு புனித பிம்பத்தை உருவாக்கிவைத்து ஏற்றுக்கொள்வார்கள். தாய்மாமன் சீர் ஊர்வலம் காட்சி ஆரம்பிக்கும்போது ஒலிப்பெருக்கியில் இப்படி வரும், “தாய்மாமன் சேனைத்தொட்டு வச்சப்புறம்தான் பெத்த தாயே பால் குடுக்க முடியும்.” 

இவர்கள் வாழ்ந்து வரும் திருமண பந்தத்தில் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து, அதனால்தான் அதை எல்லாரையும் ஏற்றுக்கொள்ளச் சொல்கிறார்களா என்றால் இல்லை. 

  • பாண்டியின் நண்பனின் தந்தை சாமியாராக ஓடிப்போயிருப்பார்.
  • பாண்டியின் தங்கை கணவன் மூன்று நாளாய் போனை எடுத்திருக்க மாட்டான், யாரையும் தேடி அனுப்பாததிலிருந்து இதொன்றும் புதிதில்லை என்பது தெரியும். 
  • மீனாவின் தாய், தந்தை தங்கள் வாழ்க்கையை, தங்கள் ஒரே பெண்ணை அடுத்தவர்கள் கட்டுப்பாட்டில் விட்டதிலேயே ஓட்டை தெரியும். 
  • பாண்டியின் தங்கை அவன் மீனா மேல் அதிக ஈர்ப்பில் இருக்கிறான், இது நல்லதில்லை என்று பேசுவாள். 

இங்கே இவர்கள் கட்டமைத்த சமூகம்தான் முக்கியம்; தனிமனிதர்கள் முக்கியமில்லை, என்பதுதான் இவர்களின் உறவுநிலைகள். 

மொத்த கதையிலும் தெளிவாக ஆண்கள் ஒரு பக்கமும், பெண்கள், குழந்தைகள், விலங்குகள் ஒருபக்கமும் நிற்கிறார்கள். பெண்களைப் போலவே குழந்தைகள் எப்படி ஒரு பொருட்டில்லாமல் நடத்தப்படுகிறார்கள் என்பது அந்த சிறுவன் மூலம் காட்டப்படுகிறது. பலிக்கு சேவல், மாடு, தாய்மாமன் சீரில் பட்டாசுக்கு துள்ளிவிழும் ஆடு என்று எல்லா விலங்குகளுமே ஆண்களின் வாழ்க்கைக்கு ஊறுகாய்களாகத்தான் காட்டப்படுகின்றன.

முதல் காட்சியில் மீனாவுக்கு காய்ச்சலா என்று பார்ப்பதும் அடுத்த காட்சியில் சேவல் சுணங்கி இருக்கிறதா என்று பார்ப்பதும் எல்லாமே ஆணின் நோக்கம் அவன் நினைத்த வழி மட்டுமே நிறைவேற வேண்டும் என்பதால்தான். 

சாமியாரிடமிருந்து திரும்பி நடக்கும்போது மீனாவைப் பார்த்ததும் பாண்டி மனதில் பாரம் ஏறுவது போலவே, பின்னணியில் ஒரு மூதாட்டி தலைபாரம் சுமந்து செல்கிறார். மீனாவும், சேவலும் தங்களுடைய விதிக்காகக் காத்திருக்கிறார்கள்.

இறுதியாக பாண்டியின் கண்களில் கேமரா வைக்கப்படுகிறது. நாம் பாண்டியாகிறோம். நம்மைக்கூப்பிடுகிறார்கள். நாம் முடிவெடுக்க அழைக்கப்படுகிறோம். நாம் போகும்போது பாதையில் ஆணும் பெண்ணுமாய் இரு குழந்தைகள் சாமியார் இடத்திலிருந்து விலகி பள்ளிச்சீருடை போட்டு போய்க்கொண்டிருக்கிறார்கள். சாமியார் அடுத்த பூஜைக்கு தயாராகிக்கொண்டிருக்கிறார். அங்கே ஏற்கனவே மீனா உட்கார்ந்திருந்த இடத்தைப்பார்க்கிறோம், அங்கே அவள் இல்லை.  சாமியாரிடம் அழைத்துச்செல்லப்பட்டுவிட்டாள்.

நம்மை எல்லாரும் அழைக்கிறார்கள்! ஏன் நிற்கிறாய் என்று கேட்கிறார்கள். நாம் தயங்கி நிற்கிறோம் என்று தெரிந்து வேகமாய் நம்மிடம் வருகிறார்கள். சாமியார் தன் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கண்டிக்கிறார். “இம்புட்டுத்தூரம் வந்திட்டு என்னாச்சி இவனுக்கு?” என்று அப்பா வேகமாக வருகிறார். காலையில் இந்த கூட்டத்தில் இருக்கும் ஒவ்வொருவர் கிளம்பியதையும் பார்க்கவைக்கப்பட்டோமே, எல்லாம் வீணா என்றுகூட நினைவுக்கு வந்து தொலைகிறது. இப்போது நான் முடிவெடுக்க வேண்டும்! 

நாம் என்ன முடிவெடுக்கப்போகிறோம்?? 

ஒருவேளை சாமியார் வேண்டாமென்று முடிவெடுத்தால் சேவல் பிழைக்கும். ஆனால் மீனா பிழைப்பாளா என்பதுதான் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. பாண்டியால் அவ்வளவு தூரம் தாண்ட முடியுமா? நம்மால் அவ்வளவு தூரம் தாண்ட முடியுமா?

மீனாவிற்கு இணையான சேவலாகவோ, பிரியமான சிறுவன் கார்த்தியாகவோ இருந்து இந்த தமிழ்ச் சமூகத்துக்கு ஒரு மனஉளைச்சல் கொடுத்திருக்கிறார் வினோத். இது ஒரு கலைஞனின் பழிவாங்கல்!

படைப்பாளர்

காளி

இதே பெயரில் Twitter-ல் @The_69_Percent என்று இயங்கி வருகிறார். முச்சந்துமன்றம் என்ற பெயரில் உள்ள புத்தக வாசிப்பு குழுவின் உறுப்பினர்களில் ஒருவர்.