சலசலத்து ஓடிக் கொண்டிருந்த கோதாவரி நதியில் வண்ணக் கோலம் தீட்டிய பானையை அமிழ்த்தி நீர் முகர்ந்தாள் அகலிகை. அப்போது பளபளத்து ஓடிய நீர் அவளது அழகிய முகத்தைப் பிரதிபலித்தது. காதளவோடிய நீள்விழிகளில் பாலில் மிதக்கும் கருந்திராட்சைக் கண்கள். இருபுறமும் அடர்ந்து வளைந்த கண்ணிமை மயிர்கள், மூடித் திறக்கையில் சாமரம் வீசின. பிறை நெற்றி. எடுப்பான நாசி. அழகான சிவந்த இதழ்கள். கருத்து சுருண்ட தலைமயிர் நீளமாக இடைவரை வழிந்தது.
கண்கொட்டாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். பார்க்கப் பார்க்க பரவசம். ‘இத்தனை அழகும் பாலைவன மழையாக, கடலில் எரியும் நிலவாக வீணாகிப் போகிறதே…’ என்று நினைக்கையில் அவளறியாமல் ‘ம்ஹூம்’ என நெடுமூச்செறிந்தாள். மனதைத் திருப்ப முகத்தைக் கழுவினாள். சில்லென்ற உணர்வு கொஞ்சம் மனக் கொதிப்பை அடக்கியது. நீர் நிரம்பிய பானையை கொடி இடையில் வைத்துக் கொண்டு ஒடிந்து விடுவது போல் அசைந்து நடந்தாள்.
பின்புறம் யாரோ தொடர்வது போல் இருந்தது. சட்டென்று திரும்பி நோக்க, அங்கே அந்நிய ஆடவன் ஒருவன் நின்றிருந்தான். உறுதியான உடற்கட்டும், வலிமையான தோள்களும், விரிந்த நெஞ்சுமாக, திண்ணென்று… யாரிவன்..? அவளை நோக்கி மயக்கும் புன்னகையை வீசியவாறே ஓரெட்டு எடுத்து வைத்தான். ரிஷிகளும் அவர்தம் பத்தினியரும் ரிஷிகுமாரர்களும் மாத்திரமே உலவும் அந்த வனத்தில் சூழ்நிலைக்குச் சற்றும் பொருந்தாத இந்தக் கட்டழகன் யாரோ என்று எண்ணமிட்டவாறே வேகமாக முன்னேறி இதர ரிஷிபத்தினிக் கூட்டத்தில் புகுந்து கொண்டாள் அகலிகை. மனம் படபடவென அடித்துக் கொண்டது.
ஆசிரமத்துக்குள் நுழைந்து பானையை இறக்கி வைத்து விட்டு காட்டில் பறித்து வந்த கனிகளைக் கழுவி துண்டங்களாக்கி சாப்பிடத் தயாராக வாழையிலையில் வைத்தாள். விடிகாலை எழுந்து நீராடி, பூஜை புனஸ்காரம் முடித்து பசியோடு வரும் கௌதமர் சாப்பிட்ட பிறகுதான் அகலிகை சாப்பிடுவாள். மதியம் வேக வைத்த காய்கறிகள், தினை, கம்பு முதலான சிறுதானிய சோறு அல்லது கஞ்சி போன்ற எளிமையான உணவு. இரவு மீண்டும் பழங்கள் என்று அவர்கள் உணவுப் பழக்கம் இருக்கும்.
அதிகாலையில் எழுந்து குளித்து கௌதமரின் வழிபாட்டுக்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்து, மலர்கள் பறித்து வந்து மாலையாகக் கட்டி உதவுவாள். அவரது காஷாயம், கௌபீனம் இவற்றை தினமும் துவைத்து உலர்த்துவாள். ஆசிரமத்தை தூய்மையாக வைத்துக் கொள்வாள். விருந்தினர் வந்தால் மனமும் முகமும் கோணாது உபசரிப்பாள். ஒழிந்த நேரத்தில் பானைகளில் ஓவியங்கள் தீட்டி அழகுபடுத்துவாள். இரவு கணவனின் பாதங்களைப் பிடித்து விட்டு உறங்க வைப்பாள். இவைதான் அகலிகையின் நித்தியப்படி கடமைகள். இவற்றிலிருந்து தவறுவதை கௌதமர் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்.
தனது நித்தியப்படிக் கடமைகளை முடித்துக் கொண்டு, மாலை மயங்கத் தொடங்கும் வேளையில் தீபம் ஏற்றிவிட்டு வந்தாள்.
சமீப காலங்களாக அகலிகை இனம்புரியாத ஒரு உணர்வுக்கு ஆட்பட்டாள். அது அவளை ஏதோ செய்தது. மனம் எதையோ தேடியது. அது என்னவென்று தெரியாத கோபமும் அவளுள் எழுந்தது. தேகம் சிலிர்த்துக் கொண்டது. சொல்லவொண்ணா உணர்வு எழும்பியது. கைக்காரியங்கள் தடுமாறின. அடிவயிறு அவ்வப்போது பிசைந்தது. கௌதமர் அடிக்கடி அவளைக் கடிந்து கொள்ள நேர்ந்தது. பகிர்ந்து கொள்ளவும் ஆளின்றித் தவித்துப் போனாள். போதாக்குறைக்கு சில நாள்களாக எங்கு சென்றாலும் பின்தொடரும் அந்த இரண்டு விழிகள் வேறு. தலையைப் பிடித்துக் கொண்டு சுவரில் சாய்ந்து அமர்ந்தவள் அப்படியே உறங்கிப் போனாள்.
***
சேவல் கூவிய ஓசை கேட்டு கண்விழித்தார் கௌதமர். இரண்டு கைகளையும் தேய்த்து முகத்தைத் தடவிக் கொண்டு உள்ளங்கையை நோக்கி, “சிவசிவா..” என்றவாறே எழுந்தார். தண்டு, கமண்டலத்தை எடுத்துக் கொண்டு கோதாவரியை நோக்கிக் கிளம்பினார். அகலிகை கண்திறந்து அவர் போவதைப் பார்த்துவிட்டு, சிறிது நேரம் கழித்து எழுந்து கொள்ளலாம் என்று மீண்டும் கண்ணயர்ந்தாள்.
சில நிமிடங்களில் கதவு படாரென்று திறந்தது. உள்ளே நுழைந்தார் கௌதமர். உறங்குபவளை உறுத்து நோக்கினார். சன்னலின் வழி உள்நுழைந்த குளிர்காற்று அகலிகையின் மேனியெங்கும் படர்ந்தது. அனுமதியின்றி அவள் ஆடைகளைக் களைந்தது. உறக்கத்துக்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட நிலையில் ஊடாடினாள் அவள். என்ன இது? புதுவிதமான அனுபவமாக இருக்கிறதே! காற்றின் மென்விரல்கள் தீண்டியதில் வீணையின் உடல் முழுவதும் நரம்புகள் திடுமென அதிர்ந்தது. புதிய ராகங்கள் எழுந்தன. அண்டமெங்கும் பரவின. கண்களைத் திறக்க முயற்சி செய்தாள். இயலவில்லை. வலுக்கட்டாயமாக இமைகளைப் பிரித்தாள். புலனடக்கவியலாத நிலையில் இல்வாழ்வில் ஈடுபட்டு, ஆசை நிறைவுற்றதும் உதறிவிட்டு மீண்டும் தவம் செய்யத் தொடங்குவார்கள் ரிஷிகள். இன்று கௌதமருக்கும் அந்த நிலையா?
மீண்டும் விழிதிறந்து நோக்குகையில் ஒருகணம் அந்த முகம் தோன்றியது. ஆற்றங்கரையில் கண்ட அதே முகம். எதிர்க்க நினைத்து உயர்த்திய கரங்கள் தொய்ந்தன. கால்கள் திடீரென வலுவிழந்தன. முயக்க மயக்கம் எழவிடாது அழுத்தியது. இதுநாள் வரை இருந்த அந்த இனம் புரியாத உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியதை உணர்ந்தாள். அகலிகை கண்களை மூடிக் கொண்டாள்.
ஆற்றங்கரை நோக்கிச் சென்ற கௌதமர் கோதாவரியை நெருங்கும் போது சட்டென்று நின்றார். ‘என்ன இது? துர் நிமித்தங்கள் தென்படுகின்றனவே! வானில் இன்னும் வெள்ளி தென்படவில்லை. பொழுது புலரும் அறிகுறியும் இல்லை. பாம்பு குறுக்கே நகருகிறது. பல்லி எங்கோ சத்தமிடுகிறது. தொலைவே ஆந்தை விடாது அலரும் சத்தம் என் செவியைப் பிளக்கிறது.’ கௌதமர் செவிகளைப் பொத்திக் கொண்டார். ‘என்னவோ தவறு நடக்கிறது.’ வீடு திரும்ப முடிவு செய்தார்.
சாத்திவிட்டு வந்திருந்த கதவு லேசாக ஒருக்களித்திருக்க, உள்ளிருந்து முயக்கப் பிதற்றல்கள் செவி தீண்டின. கௌதமரின் உடல் கோபத்தில் நடுக்கமுற்றது.
“யாரது..?” இடியாய் முழங்க, உள்ளே சட்டென்று நிசப்தம் நிலவியது.
அகலிகை எழுந்து அவசரமாய் ஆடைகளைச் சரிசெய்து கதவைத் திறந்தவள் குழப்பமுற்றாள். ‘வெளியேயும் ஒரு கௌதமரா.? யார் உண்மை?’ திகைத்தாள்.
அதற்குள் வந்தவன் பூனை போல் வெளியே நழுவ முயன்றான். அவளுக்கு உண்மை புரிந்து விட்டது. அவனைச் சுட்டெரிப்பது போல் பார்த்தாள்.
கமண்டல நீரைக் கையில் வார்த்து, “மாற்றான் மனைவியை மோகித்து தவறிழைத்த நீ, உடலெங்கும் மோகித்த அவயத்தோடே திரி. பார்ப்போரெல்லாம் உன்னை அவமதிக்கட்டும்.” நீரை விசிற, இந்திரன் உடலெங்கும் ஆயிரம் யோனிகள் தோன்றின.
அருவெறுத்து அழுதவன் மண்டியிட்டு மன்றாட, சற்றே மனமிரங்கி அவற்றை கண்களாக மாற்றிவிட்டு அகலிகையிடம் திரும்பினார்.
“கணவனின் தீண்டலுக்கும், மாற்றான் தீண்டலுக்கும் வேறுபாடு அறியாத நீயும் ஒரு பத்தினியா? கல்லாய்ச் சமைந்து போ. தசரதன் புதல்வன் ஸ்ரீராமன் கால்தூசி பட்டு விமோசனம் பெறு.” நீரை விசிற முயன்றார்.
அவள் கையை அசைத்து நீர்த்துளிகளை அப்படியே நிறுத்தியிருந்தாள். அவை உறைந்து நின்றிருந்தன.
“நிறுத்துங்கள். உங்களிடம் சற்று உரையாடலாமா? ஏனென்றால் மணமாகி வந்ததில் இருந்து நான் உங்களுக்கு வெறும் பணிப் பெண்ணாகத்தானே இருந்தேன்? தம்பதியினராய் நமக்குள் ஏதும் உரையாடல் நிகழ்ந்திருக்கிறதா என்ன?” கௌதமர் யோசித்தார்.
“முற்றும் துறந்த உங்களுக்கு மனைவி எதற்கு? உங்கள் புலனடக்கத்தைப் பரிசோதித்துப் பார்ப்பதற்கும் நீங்கள் தவம் செய்ய நான் உதவி செய்யவுமா? நான் என்ன பொம்மையா, நீங்கள் விளையாடித் தூக்கி வீச? எனக்கும் உணர்ச்சிகள் உண்டென்று எப்போதாவது நீங்கள் அறிந்தீர்களா? பசி, தாகம், உறக்கம், காமம் எல்லாம் எனக்கும் உண்டு”. அகலிகை மூச்சிரைக்கப் பேசினாள்.
“முக்காலமும் அறிந்த நீங்கள் கூவியது சேவல்தானா, பொழுது புலர்ந்து விட்டதா என்ற சிறிய விஷயத்தைக்கூட உணராது இருந்த காரணம் என்னவோ? என்னை மணக்கும் போது எனது விருப்பத்தை நீங்கள் கேட்டிருக்க வேண்டும். எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை. எனக்கென சுய அடையாளம் இல்லாமல் செய்தது உங்கள் குற்றம்.”
“மேலும், தவம் செய்யும் உமக்கு எதற்கு என்போல் பேரழகுப் பெண்?என் வாழ்வில் நானும் எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டாமா? அது என்ன ராமனின் கால் தூசி பட்டு சாபவிமோசனம் என்கிறீர்கள்? அவன் யார் எனக்கு விமோசனம் தர? ஆணின் கால்தூசிக்குக்கூட சமமானவள் அல்ல பெண் என்று நிறுவுவதன் மூலம் எதனைச் சாதிக்க நினைக்கிறீர்கள்? பெண்ணை இரண்டாம் பாலினமாக நிறுவும் உங்களைப் போன்ற மந்த மூளைக்காரர்களை உயிருடன் கழுவில் ஏற்ற வேண்டும்” அவள் முகம் கோபத்தில் சிவந்தது.
“உங்களுக்கு ஒன்று தெரியுமா? வந்தது இந்திரன் என்று அறிவேன்.” கௌதமரின் உடல் முழுவதும் பதறியது. அவள் சொன்னதை அவரால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
“பெண்ணுக்கு சூட்சும அறிவு உண்டு கௌதமரே. அவன் என்னைத் தீண்டிய இரண்டாவது நொடியே அது நீங்களல்ல என்று அறிந்து கொண்டேன். என் அறிவுக்கெட்டியது மனதுக்கு எட்டவில்லை. எனக்கும் தேவைகள் இருந்தன. என் விருப்பத்தோடே அவனுக்கு உடன்பட்டேன். அது என்ன அவன் உடல் முழுவதும் யோனிகளென்று சபித்திருக்கிறீர்கள்? ஏன் அது என்ன அவ்வளவு கேவலமான அவயமா? அதன்வழியேதான் நீங்களும் பிறந்திருக்கிறீர்கள் என்று மறவாதீர்கள்” அகலிகை நீண்ட கூந்தலை அள்ளி முடிந்து கொண்டாள்.
“பாதிக்கப்பட்ட பெண்ணையே மீண்டும் தண்டிப்பது காலம் தோறும் நடந்து கொண்டே இருக்கும் சாபக்கேடு. என் உடல், என் விருப்பம் அதைக் கேட்க யாருக்கும் உரிமை இல்லை.”
“பெண்ணைக் கேவலமாக எண்ணி, நடத்தும் உங்களுக்கு சாபம் கொடுக்க எந்தத் தகுதியும் இல்லை. நான் என் கனவுகளை ஒடித்து, உங்களை மணந்த அன்றே கல்லாய்ப் போய்விட்டேன். பெண்ணின் பலவீனத்தைப் பயன்படுத்தி அவளை உபயோகித்துக் கொண்டு, அவளுக்கு ஆபத்து வந்தவுடன் தான் மட்டும் தப்பிக்க எண்ணிய இந்திரனும் நீங்களும் வேண்டுமானால் கல்லாய்ச் சமையுங்கள்.” நீர்த்துளிகள் திரும்பி அவர்கள் மேல் சிதறின.
படைப்பாளர்

கனலி என்கிற சுப்பு
‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ , ’இளமை திரும்புதே’ ஆகிய நூல்களாக வெளிவந்திருக்கின்றன.




