UNLEASH THE UNTOLD

அ வெண்ணிலா

தேவரடியார்கள் யார்-3

குலோத்துங்கச் சோழனின் மனைவி ஏழிசை வல்லபி தேவரடியாராக இருந்தவள். ஆய்குல இளவரசி முருகன்சேந்தியை, பாண்டிய நாட்டின் சிற்றரசன் ஒருவன் திருமணம் செய்து கொண்டு அவளுக்கு நிலதானம் செய்துள்ளான். முருகன்சேந்தி பார்த்திபசேகரபுரம் கோயிலின் தேவரடியாராக இருந்தவள். அவளை மணம் செய்து கொண்ட சிற்றரசன் யாதவ குலத்தைச் சேர்ந்தவன். சைவ சமயக் குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரர் மணம் செய்து கொண்டது பரவை நாச்சியார் என்ற திருவாரூர் பதியிலார் மரபில் வந்த தேவரடியாரை. கோழிக்கோட்டின் அரசனான குலசேகர ஆழ்வார் தன் மகள் நீலாதேவியை ஸ்ரீரங்கத்து இறைவனுக்குச் சேவை செய்வதற்காக நேர்ந்துவிட்டிருக்கிறார்.

நித்ய சுமங்கலிகள்

சைவக் கடவுள்களும், வைணவக் கடவுள்களும் நுண்கலைகளில் தேர்ந்தவர்கள். இசை வடிவானவர்கள். அவர்களுக்கு ஆடலும் பாடலும் இரு கண்கள். ஆன்மாவின் கீதங்கள். அவர்களே கதாநாயகர்களாகவும், கதை நாயகர்களாகவும் இருக்கும் விந்தை வேறெந்த மதத்திலும் இருந்ததில்லை.
கோயில்கள் செல்வ வளம் படைத்த மாபெரும் பண்பாட்டு கலைக் கூடங்களாக உருவாக்கப்பட்டன. ஆடலும் பாடலும், மனித உறவுகளுக்குள்ள கோபம், தாபம் உள்ள கடவுள்களின் இருப்பிடங்கள் நம் சமூகத்தின் தனித்த அடையாளங்கள். கோயில்களின் வாயிலாகத்தான் இசை, நாட்டியம், ஓவியம், கூத்து,சிற்பம் உள்ளிட்ட நம் கலைகள் வளர்ந்தன.

தேவரடியார்கள் யார்?

தேவரடியார் என்றாலும் கடவுளுக்கு சேவை செய்த உயரிய அர்ப்பணிப்புக் கொண்ட பெண்களைப் பற்றிய நினைவுதான் வரவேண்டும். அடியார் என்ற சொல் அடி என்ற வேர்ச் சொல்லில் இருந்து வந்ததாகும். அடி என்றால் பணிதல், தொழுதல் என்று பொருள்.