எங்கள் விருப்பத்திற்கு எதிராக

ஸர்மிளா ஸெய்யித்

1970-களில் பெண்கள் இயக்கங்களுக்கு முன்னர், பாலியல் வன்புணர்வுக் குற்றங்கள் நிகழும்போது ஆணின் அவலநிலையைப் புரிந்துகொள்வதற்கே கவனம் செலுத்தப்பட்டது. பெரும்பாலான கோட்பாட்டாளர்கள் பாலியல் வன்புணர்வு ஒரு வக்கிரம் என்றும், பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், நடத்தை பலவீனமான தந்தை உருவம், சமூகமயமாக்கலின் விளைவு என்றே பரிந்துரைத்தார்கள். பாலியல் வன்புணர்வுகளில் ஈடுபடும் ஆண்கள் பாலியல், ஆக்கிரமிப்புத் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்த முடியாத நபர்கள் போன்ற படத்தை வரையவே முற்பட்டனர். 

நான்கு தசாப்த காலங்களுக்கும்  மேலாகப் பெண்ணியவாதிகள், மார்க்சிஸ்டுகள், பிற கோட்பாட்டாளர்களின் பாலியல் வன்முறை பற்றிய கருத்துக்கள் தொடர்ந்து மாறிவந்திருக்கின்றன. எனினும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை எந்தவொரு முறையான வழியிலும் இவர்கள் கையாளவில்லை. 

Against our will நூலுடன் சூசன் பிரவுன்மில்லர், நியூயார்க், அக்டோபர் 18, 1975

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வுகளைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்டிருந்த அமைதியின் சுவர்களை உடைத்தவர் சூசன் பிரவுன்மில்லர். இவர் 1975-ல் எழுதிய ‘எங்கள் விருப்பத்திற்கு எதிராக’ (Against our will), என்ற புத்தகம் பாலியல் வல்லுறவுகள், துஷ்பிரயோகங்கள் பற்றிய பொதுக் கண்ணோட்டங்களையும் அணுகுமுறைகளையும் மாற்றியமைத்தது. அமெரிக்காவில் இந்தப் புத்தகம் வெளிவந்த காலத்தில் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்களின் முறைப்பாடுகளை எடுத்து விசாரிப்பதற்கு பொலிஸ் திணைக்களங்களோ, பிரிவுகளோ நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கவில்லை.  மருத்துவமனைகளில் பாதிப்பை பரிசோதனை செய்வதற்கு, ஆலோசகர்களையோ அல்லது சான்றுகளை சேகரிப்பதற்குரிய நடைமுறைகளோ இருக்கவில்லை.

ஒரு பெண்ணின் பாலியல் குற்றச்சாட்டை இழிவுபடுத்த அவரது கடந்த கால நடத்தையைப் பாதுகாப்பு மூலமாகப் பயன்படுத்தக்கூடிய  காலத்தில், பிரவுன்மில்லரின் புத்தகம் சட்டங்கள், பொது அணுகுமுறைகள் இரண்டையும் மட்டும் மாற்றியமைக்கவில்லை.  பெண்களின் உடல் சுயாட்சியைக் குறைத்து மதிப்பிடும் ஒரு கலாச்சாரத்தை மாற்றுவதற்கான பெருமுயற்சியின் ஒரு பகுதியாகவும் கவனப்படுத்தப்பட்டது. பாலியல் பலாத்கார எதிர்ப்பு ஆர்வலர்கள் நெருக்கடி மையங்கள், அவசர அழைப்பு ஹாட்லைன்கள், தற்காப்பு வகுப்புகள், பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பிப்பிழைப்பவர்களுக்கு பிற வகையான ஆதரவை உருவாக்க சூசன் பிரவுன்மில்லரின் ‘எங்கள் விருப்பத்திற்கு எதிராக’ புத்தகம் துணைபுரிந்தது. 

பாலியல் வல்லுறவு, பாலியல் துஷ்பிரயோகங்கள் ஓர் அதிகாரச் செயல் மட்டுமல்ல, வெகுஜன பயங்கரவாதமும், பெண் நடத்தைகளைக் கட்டுப்படுத்துவதும் என்று துணிந்து சொல்வதற்கு பெண்களாலேயே முடிந்தது. பாலியல் வல்லுறவை அதன் வரலாற்றோடு ஆராய்வதற்கும்,  பண்டைய பாபிலோனியர்களிடமிருந்து பழமையான பாலியல் வன்முறைச் சம்பவங்கள், நவீன சகாப்தத்தில் போர்க்கால பாலியல் வன்புணர்வு மரபுகள் பற்றியும் சூசன் பிரவுன்மில்லர் ‘எங்கள் விருப்பத்திற்கு எதிராக’ நூலில் அழுத்தமாக விவாதிக்கிறார்.  போரில் ஒரு தந்திரோபாயமாகவும், பிற வகையான அரசியல் மோதல்களாகவும் பாலியல் பலாத்காரம் உள்ளதை இனமுரண்பாட்டு வேறுபாடுகளுடன் கருத்தூன்றச் செய்கிறார்.  

ஒரு பெண் தன் கணவருக்குச் ‘சொந்தமானவள்’ என்றும், திருமணம் நிரந்தர ஒப்புதல் என்பதாகவும் புரிந்துகொள்ளப்பட்டிருந்த காலத்தில்,  திருமண  உறவில் நிகழும் பாலியல் வன்புணர்வைப் பற்றிப் பேசுவதற்கு யாருமே முன்வராத காலத்தில் சூசன் பிரவுன்மில்லர் தனது புத்தகத்தில் எழுதினார். அமெரிக்காவில்  நிறைவேற்றப்பட்ட முதல் திருமண பாலியல் வன்புணர்வுச் சட்டங்களைக் கொண்டுவர பிரவுன்மில்லரின் நுண்ணறிவு, பிற பெண்ணிய ஆர்வலர்களின் பணிகளுடன் சேர்ந்து உதவியது.

#MeToo பேரணி, லாஸ் ஏஞ்சல்ஸ், நவம்பர் 12, 2017

அபிவிருத்தியிலும் நாகரிக வளர்ச்சியிலும் முன்நிற்கும் அமெரிக்க நாடு எதிர்பாராத அதிர்வுகளையும் மாற்றங்களையும் ஒரு புத்தகத்தினால் சூசன் பிரவுன்மில்லர் ஏற்படுத்தி சரியாக முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதே நாட்டில் ‘மீ டூ இயக்கம்’ உருவானது. நானும் பாதிக்கப்பட்டேன் (#MeToo movement) எனும் இயக்கம் உலக அளவில், பணியிடங்களில் பெண்கள் தங்களுக்கு எதிராக நடந்த பாலியல் துன்புறுத்தல்கள், பாலியல் தாக்குதல்களை டுவிட்டர், முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் வெளியுலகிற்கு அம்பலப்படுத்துவதே இந்த இயக்கத்தின் நோக்கம். 

மீ டூ இயக்கத்தை அமெரிக்க நாட்டின் சமூக செயற்பாட்டாளர் தாரன புர்கே முதன்முதலில் 2006 இல் ‘Me Too’ எனும் சொற்றொடர் மூலம் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை சமூக ஊடகங்கள் மூலம் வெளிக்கொணர்ந்தார். உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்தியாவிலும் மீ டூ இயக்கத்தின் அதிர்வுகளை இன்றளவும் காணக்கூடியதாக உள்ளது. அதிகாரம் குவிந்திருக்கும் தளங்கள் அனைத்திலும் அரசியல், சினிமா, கல்லூரிகள், பணியிடங்கள் போன்ற எல்லா சமூக நிறுவனங்களிலும் உயரதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்புணர்வுகளும், பாலியல் தாக்குதல்களும் இடம்பெற்றதை மீ டூ இயக்கம் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது. பல அதிகாரிகளையும், அமைச்சர்களையும் ஓடிஒளியச் செய்த பதவி இழக்கச் செய்த இந்த மீ டூ இயக்கம் இதுவரை காலமும் இருள்கவிந்திருந்த பல பகுதிகளில் வெளிச்சம் பாய்ச்சியது. 

‘எங்கள் விருப்பத்திற்கு எதிராக’ என்கின்ற புத்தகம், ‘நானும் பாதிக்கப்பட்டேன்’ என்றொரு இயக்கம். இரண்டுக்குமிடையிலான நெடிய மூன்று தசாப்தங்களுக்கும் மேலான காலம். பெண் உடல் அரசியல் ஒருபுறம் உடல்களைக் கட்டுப்படுத்தும் சக்தியையும், மறுபுறம் அத்தகைய சக்திகளுக்கு எதிரான எதிர்ப்பையும்  உள்ளடக்கி நிலைநிறுத்தவும் சவால் செய்யவும் தேர்ந்தெடுக்கக்கூடிய பல நூறு உதாரணங்களுக்கிடையில் இந்த இரண்டு செயற்பாடுகளும் அவ்வளவு தொடர்புகளை இயல்பாக்கி நிற்கின்றன. 

மேலைத்தேய பெண்ணிய வரலாற்றிலும், தெற்காசியப் பெண்கள் விடுதலை இயக்க வரலாற்றிலும் கவனப்படுத்துவதற்குப் பல பெண்கள், ஆளுமைகள், செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். சூசன் பிரவுன்மில்லர் எழுதிய ‘எங்கள் விருப்பத்திற்கு எதிராக’ புத்தகமும், சமூகச் செயற்பாட்டாளர் தாரன புர்கே ஆரம்பித்துவைத்த மீ டூ இயக்கமும் மிக முக்கியமான பாய்ச்சல்கள். வெவ்வேறு காலகட்டங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வுகள், துன்புறுத்தல்கள், தாக்குதல்களுக்கு எதிரான நீதியைக் கோருகின்றவை. இந்த நிலைகளை அமெரிக்க நாட்டுப் பெண்கள் மிக எளிதாக எட்டிப் பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை. அத்துடன் இவ்விரண்டு செயற்பாடுகளின்போதான காலமும் அரசியல் பின்னணியும் கவனிக்கத்தக்கவை. தங்களுக்கு நேர்ந்த அநீதியை, தன் உடல் மீது நிகழ்த்தப்பட்ட அத்துமீறலைப் பகிரங்கப்படுத்தக் கோருகின்ற மீ டூ இயக்கத்தின் தேவைப்பாடும் அதிகார வர்க்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரல்களில் பெண்களின் உடல்கள் கையாளப்பட்டதைப் பேசும் ‘எங்கள் விருப்பத்திற்கு எதிராக’வும் இணையும் புள்ளிகள் மிகப் பகிரங்கமானவை. 

அனைத்து பாலியல் வன்கொடுமைப் புகார்களையும் சட்ட, சட்ட அமலாக்க அமைப்புகள் சமமாகக் கருதுகின்றன. அடிமைத்தனத்தின் காலத்திலிருந்தே பாலியல் வன்கொடுமை நச்சு இனக் கூறுகளைக் கொண்டுள்ளது. அமெரிக்காவில், இது வெள்ளை மேலாதிக்க முறையை பராமரிப்பதில் ஒரு முக்கிய ஆயுதமாக இருந்தது. கறுப்பினப் பெண்களும் ஆண்களும் இதற்குப் பலியாகினார்கள். சட்ட அறிஞர் சூசன் எஸ்ட்ரிச் குறிப்பிடுவதைப் போல, “1930 இலும் 1967-க்கும் இடைப்பட்ட காலத்திலும் பாலியல் வன்புணர்வுக் குற்றத்திற்காகத் தூக்கிலிடப்பட்டவர்களில் 89 சதவிகிதம் பேர் கறுப்பின ஆண்கள்.”

அமெரிக்க நாட்டில் பாலியல் வன்கொடுமை என்பது ”எஜமானருக்கும் அடிமைக்கும் இடையிலான சமூக உறவுகளின் ஒரு முக்கிய பரிமாணம்” போல் காணப்பட்டது. இதில் வெள்ளை எஜமானர்கள் வழக்கமாக அடிமைப்படுத்தப்பட்ட கறுப்பினப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள்.  பாலியல் கொடுமைகள் ஆதிக்கத்தின், அடக்குமுறையின் ஆயுதமாகவும் அதன் ரகசிய குறிக்கோள் அடிமைப் பெண்களின் விருப்பத்தை எதிர்ப்பதும், அவர்களின் ஆண்களை இழிவுபடுத்துவதுமாக இருந்தது. கறுப்பினப் பெண்கள் நிறுவனமயமாக்கிய பாலியல் அடிமைத்தனத்தை ஒழிப்பதில் இருந்து தப்பிக்க நிகழ்த்திய போராட்டங்கள் நவீன வடிவத்தை எடுத்தது.  குழு வன்புணர்வு, உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் பிற பயங்கரவாத அமைப்புகளால் நிலைநிறுத்தப்பட்டு, கறுப்பு சமத்துவத்திற்கான இயக்கத்தைத் தடுக்கும் உந்துதலில் ஒரு கட்டுப்பாடற்ற அரசியல் ஆயுதமாக மாறியது.

‘தளர்வான பெண்கள்’ என்றும் பரத்தையர் எனவும் கருதப்பட்ட கறுப்பின பெண்களின் பாலியல் பலாத்காரம் பற்றிய கூக்குரல்கள் சட்டபூர்வமான தன்மையைக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்று கருதப்பட்டது.  பெரும்பாலும், வெள்ளை பெண்களின்’நல்லொழுக்க’த்தைப் பாதுகாக்கும் பெயரில் கறுப்பின ஆண்களை முறையாகக் கொன்ற அதே தெற்கு இனவாதிகள் கறுப்பின பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தனர். டேனியல் எல். மெகுவேர் தனது முக்கியமான புத்தகமான ‘அட் தி டார்க் எண்ட் ஆஃப் தி ஸ்ட்ரீட்’டில் காண்பிப்பது போல. 

பெண்கள் இயக்கத்தில் தீவிரமாகச் செயற்பட்ட பெண்ணியவாதிகள் பல தசாப்தங்களுக்கு முன்னர் பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பித்தவர்களைப் ”பேச வேண்டும்“ என வலியுறுத்தினர். ஆப்பிரிக்க அமெரிக்க பெண்களின் பொது ஆர்ப்பாட்டங்கள் உள்ளூர், தேசிய, சர்வதேச சீற்றத்தை அதிகரித்தன. மேலும் இன நீதிக்கும் மனித கௌரவத்திற்குமான மிகப்பாரிய அளவிலான பிரசாரங்களைத் தூண்டின.

குற்றம் சாட்டப்பட்ட 13-19 வயதுக்குட்பட்ட ஒன்பது இளம் கறுப்பின ஆண்கள்

1931 ஆம் ஆண்டு ‘கறுப்பின மனிதர் பாலியல் பலாத்காரம்’ ஸ்டீரியோடைப்பின் மிகவும் பிரபலமான எடுத்துக்காட்டுகளில் ஒன்று, அலபாமாவில் ஒரு சரக்கு ரயிலில் இரண்டு இளம் வெள்ளைப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பதின்மூன்று முதல் பத்தொன்பது வயதுக்குட்பட்ட ஒன்பது இளம் கறுப்பின ஆண்கள் சம்பந்தப்பட்ட வழக்கு.  இவர்களில் இளையவரான ராய் ரைட் தவிர மற்ற அனைவருமே அனைத்து வெள்ளை ஜூரிகளாலும் விரைவில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரான ரூபி பேட்ஸ் தானளித்த பாலியல் பலாத்காரம் குறித்த குற்றச்சாட்டைத் திரும்பப் பெற்றதோடு, ஒரு சாட்சியாகவும் தோன்றினார். வெள்ளைப் பெண்கள், கறுப்பின ஆண்களுடன் ரயிலில் சம்மதத்துடன் பாலுறவு கொண்டதாக வாதிட்டனர்.  நீதிமன்றப் போர்கள் தொடர்ந்தன. கம்யூனிஸ்ட் கட்சி அவர்கள் சார்பாக பல ஆண்டுகளாக பிரசாரம் செய்தது.  குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் தவிர அனைவரும் சிறையிலேயே கழித்தனர். குழுவின் கடைசிக் கைதியாக இருந்த ஆண்டி ரைட் 1950 வரை பரோலில் விடுவிக்கப்படவில்லை. இறுதியாக, நவம்பர் 21, 2013 அன்று இவர்கள் முதலில் கைது செய்யப்பட்ட எண்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இதுவரை மன்னிக்கப்படாத அல்லது அவர்களின் நம்பிக்கைகள் முழுவதும் கைவிடப்பட்ட மூன்று ஸ்காட்ஸ்போரோ சிறுவர்களுக்கு அலபாமா மன்னிப்பு – பரோல்ஸ் வாரியம் மரணதண்டனை மன்னிப்பு வழங்க ஒருமனதாக ஒப்புக்கொண்டது. 

தவறாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர்களுக்கு ஆதரவு திரட்டும் கூட்டத்துக்கான போஸ்டர், 1931

இந்த வரலாறு கடந்த காலத்தின் நினைவுச்சின்னம் அல்ல. குற்றஞ்சாட்டப்பட்டவரின் இனம் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகளின் விளைவுகளைத் தொடர்ந்து வலுவாகப் பாதிக்கிறது. தனது இனம் காரணமாகத் தவறான பாலியல் வன்புணர்வு வழக்குகளில் குற்றவாளிகளாகக் காட்டப்பட்டுக் கைதிகள் பலர் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்டனர். மற்றும் பலர் பல ஆண்டுகள் அல்லது பல தசாப்தங்களாக சிறையில் அடைக்கப்பட்டனர். 

அடிமைத்தனத்தின் ஆதிக்க வரலாறு காரணமாக மட்டுமல்லாமல், இனவெறி அமெரிக்காவிற்குச் சொந்தமானது. உண்மையில், புலம்பெயர்ந்த குழுக்களுக்கு எதிரான தொடர்ச்சியான பாகுபாடு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. பல லத்தீன் அமெரிக்கர்களையும் ஆசிய நாட்டவர்களையும் குறைந்த ஊதிய தொழிலாளர்களாக கட்டாயப்படுத்தியது.  2001 இல் “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” தொடங்கியதிலிருந்து அரேபியர்களும் முஸ்லிம்களும் அடக்குமுறைக்கு இலக்காகினர். இத்தகைய பிரசாரம் முஸ்லீம் ஆண்களை நம்பமுடியாத பயங்கரவாதிகளாகவும், முஸ்லீம் பெண்களை அவர்களின் விருப்பத்திற்குரியவர்களாகவும் அடிபணிந்த கூட்டாளிகளாகவும் சித்தரிப்பதில்  வெற்றிகரமான இடத்தைப் பிடித்தன. வன்முறைகளும் பெண் அடக்குமுறையும் இயல்பாகவே முன்கூட்டியே இருப்பதைப் போல ஒரே மாதிரியாகக் கருதப்படுகின்றன. இன, மத ஒடுக்குமுறை அனைத்தும் உலக அளவில் முதலாளித்துவத்தின் அவசியமான அம்சங்களாகும். இது அமெரிக்க எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. 

(எழுவோம்…)

திமிறி எழு கட்டுரைத் தொடரின் எங்கள் விருப்பத்திற்கு எதிராக – இரண்டாம் பகுதியை இங்கே படிக்கலாம்.

கட்டுரையாளர்:

ஸர்மிளா ஸெய்யித்
ஸர்மிளா  ஸெய்யித்,  ஒரு விதிவிலக்கான  துணிச்சலான சமூக செயற்பாட்டாளர்.  சமூக அநீதிகள் குறித்து அச்சமற்று விமர்சிக்கக்கூடியவர், எழுத்தாளர், கவிஞர். 
சிறகு முளைத்த பெண் (கவிதை 2012), 
உம்மத் (2014 நாவல்), 
ஓவ்வா ( கவிதை 2015), 
பணிக்கர் பேத்தி (நாவல் 2019), 
உயிர்த்த ஞாயிறு (2021 அனுபவம்) 
ஆகியன இவரது நூல்கள்.