கோடை விடுமுறை தொடங்க இருக்கிறது. கொளுத்தும் வெயிலை சமாளிக்க பழைய சோறு, நீர்மோர், இளநீர், வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி என குளுமையைத் தேடத் தொடங்கிவிட்டோம். பள்ளி, கல்லூரி செல்கிற பிள்ளைகள் உள்ள வீடுகளில், அம்மாக்களின் கைபேசி அலார்ம் சிறிது காலத்துக்கு நிறுத்திவைக்கப்படும் என்பதே பெரிய நிம்மதி. சமையலறைக்குள் நுழைவதே எரிச்சலூட்டுகிறது. காலை காபியோ டீயோ போடுவதற்குள் குளித்ததுபோல் வியர்த்துவிடுகிறது.
உணவு மாற்றத்தை உடல் விரும்புவதுபோலவே மனமும் சிறிய இடமாற்றத்தையும் சூழல் மாற்றத்தையும் விரும்புவது இயல்புதானே?
ஆண்கள் வெளியூர் சென்றிருக்கிறீர்களா? இது என்ன கேள்வி? வெளியூர் செல்லாமல் யாராவது இருப்பார்களா எனத் தோன்றலாம். ஆனால் இருக்கிறார்கள்.
அதே ஊரில் பிறந்து, அதே ஊரில் மணம் முடிந்து, அதே ஊரின் இரண்டு தெருக்களுக்குள் மட்டுமே சுழன்று வருகிற பெண்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர்களுக்குக் குறைந்தபட்சம் அடுத்த ஊரையாவது காட்ட வேண்டியது குடும்பத்தை நிர்வகிக்கிற ஆண்களின் கடமையல்லவா?
அலுவலகப் பயணமாக அருகே இருக்கிற வெளியூருக்கேனும் ஆண்கள் சென்றிருக்க வாய்ப்பு உள்ளது. போகிற வேலை திட்டமிட்டதைவிட முன்கூட்டியே முடிந்துவிட்டால், அங்கே அருகில் இருக்கிற கடற்கரைக்கோ ஷாப்பிங் மாலுக்கோ சென்று சற்றே இளைப்பாறிவிட்டு வருகிறீர்கள்தானே?
பரவலாக ஆண்கள் பலரிடமும் ஒரு பழக்கம் இருக்கிறது. திருமணத்துக்கு முன்புவரை பார்க்க வேண்டிய அத்தனை சுற்றுலாத் தளங்களையும் சுற்றிப்பார்த்துவிடுகிறீர்கள். ஊட்டியோ, கொடைக்கானலோ, ஏற்காடோ, ஏலகிரியோ, வால்பாறையோ, கோவாவோ, உங்களால் செல்ல முடிந்த இடங்கள் அனைத்தையும் ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்துவிடுகிறீர்கள். பெண்களாகிய நாங்கள், கடிகார முற்களைப்போல் வட்டத்துக்குள் சுழல்வதற்கே பழக்கப்படுத்தப்பட்டு இருக்கிறோம். பெண்கள் பலருக்கும் வெளி உலகுக்கான வெளியே இணையேற்புக்குப் பின்புதான் கிடைக்கிறது. இந்த காலத்து ஐ.டி பெண்களைக் கழித்து ஏனைய பணியிலுள்ள பலருமே இன்னும் சுற்றுலாவுக்காக வெளிமாவட்டத்தைக்கூட தாண்டாதவர்களாகவே வளர்க்கப்பட்டு இருக்கிறோம்.
குடும்பமாக வெளியூர் செல்லலாம் எனும்போது “ஊட்டியில ஒண்ணுமே இல்ல”, “ஏற்காடு சும்மா காஞ்சு தான் இருக்கு” போன்ற கருத்துகளை உங்களோடே வைத்துக்கொள்ளுங்கள். அந்த ‘வெறும்’ இடங்களைத்தானே இளமையில் நீங்கள் விரும்பி விரும்பிப் பார்த்தீர்கள். அதே இடத்தை உங்களோடு வாழ்பவரும் சுற்றிப் பார்க்க வேண்டும்தானே? ஆண்களுக்கு இருபதுகளில் கிடைக்கிற வாய்ப்பு, பெண்கள் பலருக்கும் முப்பதுகளிலும் அதற்குப் பின்புமே கிடைக்கிறது. இடங்களை வெறும் இடங்களாகப் பார்க்காமல் அங்கே யாரோடு செல்கிறோம், யாரெல்லாம் நம்முடன் இருக்கிறார்கள் என மனிதர்களோடு தொடர்புபடுத்திப் பாருங்கள். அப்போது சலித்த இடங்களும் பிடித்துப்போகும்.
சமீப காலமாக பெண்கள் பலரும் கோவில்களுக்கு மாலை போட்டு விரதமிருந்து வெளியூர் செல்வது அதிகரித்து வருவதைக் கவனிக்க முடிகிறது. வீட்டைத் தவிர வெளியே செல்ல வாய்ப்பு இல்லாத சூழலில், பக்தியெனும் சொல்லுக்குக் குடும்பங்கள் கொடுக்கிற மதிப்பு அதிகம். கோவில்களுக்குச் செல்ல வீட்டில் அனுமதி கிடைப்பதும் எளிது. இதனால், பயணிக்க ஆசைப்பட்டே இந்தச் சுழலுக்குள் சிக்கிக்கொள்ளும் பெண்கள் அதிகமாகி வருகின்றனர். வழக்கமான சுழற்சியிலிருந்து எல்லாருக்குமே ஒரு சிறிய மாற்றம் தேவைப்படுகிறது. அதனால் நீங்களாகவே உங்கள் இணையரை வெளியே அழைத்துச் செல்லுங்கள்.
வெளியூர்ப் பயணத்துக்கு எப்படித் திட்டமிடலாம் என்பதை உங்கள் இணையோடு அமர்ந்து பேசுங்கள். கிரெடிட் கார்ட் தொகை கூடுகிறது என்பதை நண்பர்களிடம் பகிர்கிறீர்கள். ஆனால் உங்களோடு வாழ்வையும் தாழ்வையும் தோளோடு தோள்நின்று பயணிக்க வந்திருக்கிற இணையரிடம், உள்ளதைப் பகிர்வதை கௌரவக் குறைவாக எண்ணிக்கொண்டு முழுச்சுமையையும் சுமக்கிறீர்கள். குடும்பத்தின் பொருளாதாரச் சூழலை ஒளிவு மறைவு இன்றி கனிவாகப் பேசுங்கள். இங்கே கனிவைக் குறிப்பிடக் காரணம் பல வீடுகளிலும் செலவுக் கணக்கைச் சொல்வதாக நினைத்து “இதுகூட கிடைக்காம எவ்ளோ பேர் இருக்காங்க தெரியுமா? உனக்கெல்லாம் இதோட அருமை எங்க தெரியப்போகுது?” என்பதில் முடிந்துவிடுகிறது.
நம் வீட்டில் நாம் மட்டுமே வருமானம் ஈட்டுகிற நபராக இருக்கிற சூழலில் நாம் சொல்கிற ஒவ்வொரு சொல்லிலும் கூடுதல் கவனம் அவசியம். ஒரே ஒரு தடித்த வார்த்தை, விலையுயர்ந்த பொருளையும் மதிப்பிழக்கச் செய்துவிடும். யாருக்காக அதை வாங்கினோமோ, அவரே அதனைப் பயன்படுத்த வாய்ப்பின்றியும் போகக்கூடும். கவனமாக இருப்போம்.
ஒருவழியாகப் பயணம் செய்யத் திட்டமிட்டாயிற்று. அடுத்தது துணிகளையும் பொருள்களையும் எடுத்துவைப்பது. இதெல்லாம் வேலையா? டிக்கெட் புக் செய்வது, தங்குமிடத்திற்கான ஏற்பாடு, உணவுச் செலவுகள் என திட்டமிட எவ்வளவோ இருக்கிறது என்றாலும் உண்மையிலேயே பயணப் பையை எடுத்து வைப்பது பெரிய வேலை தான். ஏனோ பெண்களின் கைகளுக்கு ஒதுக்கப்படுகிற வேலைகள் மலிவாகவே மதிப்பிடப்படுகின்றன. அதிக உடலுழைப்பைத் தந்து அது மதிக்கப்படாமல் போவது, அவள் செய்வதால் இருக்குமோ என்கிற கேள்வி எழாமல் இல்லை.
இங்கே ‘பெண்’ குறில் ‘ஆண்’ நெடில் போன்ற சொல்லாடல்களைப் பேசி அதில் மகிழ்வை அடைகிற போதாமை மனங்கள் இருக்கிறவரை, பெண் செய்கிற வேலைகள் மலிவானவையாகவே இருக்கும்.
ஒரு குடும்பத்தில் நான்கு நபர். மூன்று நாள் பயணம். என்னவெல்லாம் எடுத்து வைக்க வேண்டும்? அதில் ஒரு குழந்தையும் இருந்துவிட்டால், கூடுதலாக ஒரு பை எடுக்க வேண்டும்.
சோப், பேஸ்ட், துண்டு, துணிகள் தொடங்கி அத்தனையையும் போகும் முன்பும் சென்று வந்த பின்பும் பராமரிப்பது உண்மையிலேயே பெரிய வேலை. அதற்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை. “இன்னும் கிளம்பலையா?” எனக் குரலையாவது உயர்த்தாமல் இருங்கள். போவது சுற்றுலா என்கிற மனமகிழ்வுக்குத்தான். நீங்களும் இணைந்து உதவினால் சீக்கிரம் கிளம்பிவிடலாம்தானே?
“என் வீட்ல அவ கிளம்பவே ஒருமணிநேரம் ஆகும்” என்கிறவர்கள், அவளோடு சேர்ந்து நீங்களும் கிளம்பும்போது உடனிருங்கள். இங்கே யாரும் விரும்பிப் பாரம் சுமக்கவில்லை. எந்த ஒரு பெண்ணும் இன்ஸ்டாகிராமில் காட்டப்படுவதுபோல் மணிக்கணக்கில் கண்ணாடிமுன் நின்று கிளம்புவதில்லை.
இரவு உணவுக்கு வெளியே செல்ல வேண்டும் என்றால் இரண்டு பாட்டில்களில் குடிநீர், குழந்தைக்கு மாற்று உடை, பால், பாட்டில், டம்ளர், துண்டு, டயாபர், இரண்டு விளையாட்டுப் பொருள்கள், பிஸ்கெட், படுக்க வைக்கத் தலையணை, சிறிய போர்வை, வழியில் நமக்குத் தின்பண்டம், கை கழுவ தண்ணீர் பாட்டில் எல்லாம் எடுக்க வேண்டும்.
இதற்கு மத்தியில் அவள் கூந்தல் சற்றே நீளமாக இருந்துவிட்டால் பின்னல் பின்ன வேண்டும். எப்போதுமே கிளம்ப நேரமாகிறது; பராமரிக்க சிரமமாக இருக்கிறது என நினைத்து முடியை வெட்டிக்கொள்ள நினைத்தாலோ, அதற்கு இருவீட்டார் சம்மதமும் கட்டாயம் வேண்டும். அவள் தலையில் வளர்கிற கூந்தலைத் திருத்திக்கொள்கிற சுதந்திரம்கூட அவளிடம் முழுமையாக இல்லை.
இப்படி ஒவ்வொரு முடிவையும் பிறர் எடுக்கிற சூழலில் வளர்க்கப்பட்ட பெண்ணை அவளது கட்டுகளிலிருந்து தளர்த்துவதும் இலகுவாக்குவதும் உங்கள் கடமை இல்லையா? பயணங்கள் அழைத்துச் சென்று இயற்கையெனும் அற்புதத்தையும் அவளுக்கு அறிமுகப்படுத்துவதும்தானே இணையாக உங்களது பொறுப்பு? தெளிந்த சிந்தனையும் பண்புமுள்ள ஆண்மனம் இதனைப் படிக்கும்போது ஆமோதித்துத் தலையசிக்கும்!
வெளியே அழைத்துச் செல்லும்போது வழக்கத்தைவிடவும் கூடுதல் பொறுமையோடு இருங்கள். எப்போதும் வீடுகளில் சற்றே குரல் உயர்த்திப் பழக்கப்பட்டவர்கள், நாம் பொது இடத்தில் இருக்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். சிறிய காரணங்களுக்காக எல்லாம் முகம் சுளிக்காதீர்கள். யாரும் திட்டமிட்டே தவறு செய்வதில்லை. கைமீறி நடக்கும் நிகழ்வுகளுக்கு அவரே தம் தவறினை உணர்ந்து வருந்துகிற சூழலில் மேலும் அதனை சொல்லிக்காட்ட வேண்டாம்.
ஆண்களுக்குப் பயணம் என்பது சென்று அடைகிற இடம்; பெண்களுக்குப் பயணம் என்பது செல்கிற வழியும் வழிநெடுக நிரம்பிவழிகிற நினைவுகளும்தான்.
ஒருமுறைக்கு இருமுறை காபி பருக நிறுத்தினால்தான் என்ன? அது நம் கார்தானே? மறுமுறை கேட்டால் நிறுத்துங்கள் பரவாயில்லை. ஏனெனில் பயணமும் வெளியிடமும் மனதை விசாலப்படுத்துமென்பது உண்மையல்லவா?
பயணிப்போம்.
படைப்பாளர்

பா. ப்ரீத்தி
தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழ்நாடு அரசின் தமிழ்ப் பாடநூல் குழுவில் நூலாசிரியராகப் பணியாற்றியுள்ளார். பேறுகாலம் குறித்த இவரது அனுபவப் பகிர்வை ‘பிங்க் நிற இரண்டாம் கோடு’ என்கிற புத்தகமாக பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.