இந்தப் பகுதி ‘புகழ்பெற்ற சவுர் புரட்சி’யின் முதல் பதினெட்டு மாதங்களில் கவனம் செலுத்துகிறது. அதாவது ஏப்ரல் 27, 1978 முதல் அக்டோபர் 1979 வரையான காலப்பகுதி. ’மக்களின் விருப்பத்திலான புரட்சி’ என்ற பெயரில் மார்க்சியத் தோழர்கள் ராணுவ ஆக்கிரமிப்பு அரசை நிறுவிய ஏப்ரல் 27 , 1978 முதல் அந்தப் புரட்சியின் தந்தையாக இருந்த நூர் முஹம்மது தாரகி அவரின் சீடரும் வாரிசுமான ஹபிசுல்லா அமீனினால் அக்டோர் 1979இல் படுகொலை செய்யப்பட்டது வரையான காலப்பகுதி.
ஆப்கானிஸ்தானில் மார்க்சியப் புரட்சியின் தோல்வியைப் புரிந்துகொள்வதற்காக எடுக்கப்படும் அணுகுமுறை இந்தக் காலத்தில் மற்ற ஆய்வாளர்கள் அல்லது அணுகுமுறைகளிலிருந்து இரண்டு கூறுகளில் வேறுபடுகின்றது.
முதலாவது ஆட்சியை எவ்வாறு சித்தரிப்பது என்பதோடு தொடர்புடையது. பொதுவான முறையில் தூரத்திலிருந்து ஆட்சியை வகைப்படுத்த முயற்சிப்பதைவிட, அதன் தலைவர்கள் தங்களை எப்படிக் கருதினார்கள் என்பதை நிறுவ குறிப்பிட்ட காலப்பகுதியில் ஆப்கான் செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட, ஆப்கானிஸ்தான் அரச வானொலியில் ஒளிபரப்பப்பட்ட அரசாங்கத்தின் சொந்த அறிக்கைகளைப் பயன்படுத்தியும், அத்துடன் மக்கள், எதிரிகள், ஆப்கான் வரலாற்றில் அவர்களின் இடம் என்பவற்றிலும் கவனம் செலுத்தப்படுகின்றது. இந்த அணுகுமுறைக்கு ஏற்ப, காலவரிசையில் மட்டுமல்ல, கருப்பொருளிலும் புரட்சியின் தன்மை, தலைவரின் ஆளுமை, கட்சி பற்றிய மக்களின் சித்தரிப்பிலும், ஆட்சியின் எதிரிகளின் சித்தரிப்பு போன்ற விஷயங்களிலும் கவனிப்பு செலுத்தப்படுகின்றது.
இந்தப் பகுப்பாய்வு அணுகுமுறையின் இரண்டாவது கூறு, ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்திய பாரம்பரிய நிர்வாகக் கருத்துகளிலிருந்து ஆட்சியைப் புரிந்துகொள்ள முயல்வதாக உள்ளது.
அவதானங்களின்படி, இந்தப் பதினெட்டு மாதங்கள் புரட்சியை இன்னும் வெல்வதற்கான முக்கியமான வரலாற்று தருணமாக அமைந்திருக்கக் வேண்டியது. ஆனால், புரட்சியின் ’தந்தை’யும், புரட்சியின் புலப்படும் சின்னமுமாக விளங்கிய தாரகியின் படுகொலை அதன் சூழ்ச்சி முகத்தைக் காண்பித்தது. சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்கப்பட்ட நாடாக மாற்றிய இரண்டு மாதங்களுக்குள் அது பெரும் அழிவை நோக்கி நகர்ந்தது. ஆப்கானிஸ்தான் நாட்டைத் துன்பத்தின் இருண்ட தளத்திற்குள் தள்ளிய காலப்பகுதியின் துவக்கம் இதுவே. இன்றுவரை சுமார் அரை நூற்றாண்டுகள் (43 ஆண்டுகள்) காலமாக சீர் செய்ய முடியாத ஆழமான காயத்தை உருவாக்கிய மிக முக்கியமான இந்த வரலாற்று நிகழ்வையும் காலத்தையும் இருட்டடிப்புச் செய்துவிட்டு, ஆப்கானிஸ்தான் வரலாற்றைப் பார்ப்பது முடியாத விடயம்.
நூர் முஹம்மது தாரகி ஆப்கானிஸ்தானின் புரட்சிகர கம்யூனிஸ்ட் அரசியல்வாதி. ஆங்கிலம், பஷ்டூன் இரண்டு மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற பத்திரிகையாளரும் எழுத்தாளரும். 1940களில் சோசலிச யதார்த்த பாணி நாவல்கள், சிறுகதைகளை எழுதினார். 1965இல் கால்க் (Khalq) என அழைக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் மக்கள் ஜனநாயகக் கட்சி (PDPA) கட்சியை ஸ்தாபித்தார். இக்கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கால்கிகள் (Khalqis) என அழைக்கப்பட்டார்கள். கால்க் (Khalq) என்ற உருதுமொழிச் சொல், பொதுவாக ’மக்கள்’ என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டாலும், நட்புடன் அணுகக்கூடிய மனிதர்கள், பூமியில் மிகவும் நெருக்கமாக வாழும் மனிதர்கள் / மக்கள் என்பதாயும் பொருள் கொள்ளக்கூடிய பிரயோகம்.
1965இல் கால்க் கட்சி வேட்பாளராக ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் தாரகி போட்டியிட்டார். எந்தவொரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை. 1966ஆம் ஆண்டில் வர்க்கப் போராட்டத்திற்காக வாதிடும் கட்சி செய்தித்தாள் ’கால்க்’ வெளியிட்டார். இது ஆறு வாரங்கள் ஆறு இதழ்கள் மட்டுமே வெளியாகின. அரசாங்கத்தின் தடை உத்தரவினால் அதனை மூட நேர்ந்தது. 1965 முதல் 1979 வரை மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளராகவும், 1978 முதல் 1979 வரை புரட்சிகர கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றினார். ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயகக் கட்சியின் (PDPA) ஸ்தாபக உறுப்பினராக இருந்தார்.
1975இல் பாஷ்டூன் அகாடமி வெளியிட்ட முதல் ஆங்கில-பாஷ்டூன் அகராதியைத் தொகுப்பதில் தாரகி மற்றவர்களுடன் பங்கேற்ற போதிலும், அவர் ஒரு வரலாற்றாசிரியரோ அல்லது சமூகவியலாளரோ அல்ல, ஆனால் ஒரு மரபுவழி மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட். அவர் கம்யூனிசத்தை எவ்வளவு அதிகமாக நம்பினாரோ அவ்வளவு அதிகமாகப் பிடிவாதமானவர். 1968இல் இங்கிலாந்தில் உயர்படிப்பு முடித்துவிட்டு ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பிய ஓர் ஆராய்ச்சியாளர் தனது ஆய்வறிக்கையைத் தாரகியிடம் விவரித்தபோது, அவர் இப்படிப் பதிலளித்தார், “ஏகாதிபத்தியத்தின் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு வேலையையும் நாங்கள் நிராகரிக்கிறோம்.”
நூற்றுக்கணக்கான படித்த மனிதர்கள் சோசலித்தின் மீது பற்றுக்கொள்வதற்கு தாரகி ஒரு காரணமாக இருந்தார். ’புகழ்பெற்ற சவுர் புரட்சி’ நிகழ்த்திய ஆட்சிக் கவிழ்ப்பினால் அச்சமடைந்திருந்த மக்களின் பீதியை எளிய வார்த்தைகளால் சீரமைத்துவிடவும், முன்னைய ஆட்சிகளை வீழ்த்தியவர்கள், தலைமறைவாக இருந்தவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் வீடு, உணவு, தொழில் போன்றவற்றை வழங்குவதன் மூலம் அவர்களின் குற்றவுணர்வுகளைக் களைந்து, கலகங்களைக் கட்டுப்படுத்தலாம் என்றும் தாரகி நம்பினார். மக்களின் விடுதலைக்காக உழைப்பதாக எவ்வளவு நம்பிக்கையளிக்க உழைத்தபோதும் அவர் நிராகரிக்கப்பட்டார்.
விவசாயிகள் அவரை நிராகரித்தபோது சோவியத் ராணுவத்தால் ஒடுக்கும்படி கேட்கவும் அவர் தயங்கவில்லை.
’புகழ்பெற்ற சவுர் புரட்சி’க்கு இரக்கமற்ற முறையிலும் லட்சியத்திற்கு விரோதமான முறையிலும் பலியாக்கப்பட்ட அதிபர் முஹம்மது தாவூத் ஆட்சிக் கவிழ்ப்பின் பிளவை மாற்றுவதற்கான நேர்செய்வதற்கான வழிமுறைகளைக் கண்டடைவதில் உண்மையில் ஆப்கானிஸ்தான் நவீன சோசலிச அரசு தோல்வியடைந்தது.
இந்தக் காலகட்டத்தில், நவீன சோசலிச அரசின் படைகள் முக்கியமாக உளவுத்துறை, காவல் துறை, ராணுவம் அனைத்தும் பாரிய அளவில் குற்றங்களில் ஈடுபட்டன. ஆட்சி அமைத்து ஒரு வருடத்துக்குள் ஏகப்பட்ட பரவலான கலகங்களை நாடு சந்தித்தது. குறிப்பாக கிராமப்புற மக்கள், பழமைக் குடிகளிடமிருந்து அழுத்தமான எதிர்ப்புகள் கிளம்பின. சோசலிச அரசு அதன் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்கான மக்கள் ஆதரவு இல்லாததால் எழுச்சிகளை நசுக்கியது. அடக்கு முறைகளைப் பிரயோகித்தது.
இதனால் சோசலிச அரசுக்குள் பிளவுகள் உருவாகி ரத்தக்களரிக்கு வழியமைத்தது. ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயகக் கட்சி (PDPA) பிளவுபட்டது. ஒன்று கல்க் (Khalq), மற்றையது பர்ச்சம் (Parcham). கல்க் பிரிவு தொடர்ந்தும் அதிகாரத்திலிருந்தது. இதன் ஆதிக்கம் நூற்றுக்கணக்கானர்வர்களைத் தூக்கிலிட்டும், சிறையில் அடைத்தும் நாடு கடத்தியும் முன்னணி உறுப்பினர்களைச் சுத்தப்படுத்தியது. அனைத்து எதிர்ப்புகளை ஒடுக்குவதற்கும், ஆப்கான் சமூகத்தின் கட்டமைப்பை மாற்றுவதற்குமாக வடிவமைக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலுடன் இவர்கள் விரைந்து செயற்பட்டார்கள். ஆட்சியை எதிர்ப்பதாகச் சந்தேகிக்கப்பட்ட அனைவர் மீதும் கைதும் மரண தண்டனையும் பாய்ந்தன. முன்னாள் அரச அதிகாரிகள், மதத் தலைவர்கள், பழங்குடித் தலைவர்கள், ஆசிரியர்கள், அறிவு ஜீவிகள், அரசியல் ஆர்வலர்கள் எனப் பரவலான வெகுஜன கைதுகள் இடம்பெற்றன. கைது செய்யப்பட்டவர்களில் பெருந்தொகையானவர்கள் என்ன ஆனார்கள் என்ற எந்தத் தகவல்களும் இல்லை. அவர்களின் பெயர்கள் இன்று காணாமலாக்கப்பட்டோரின் பட்டியலில் மட்டுமே காண்பதற்கு உள்ளது. காபூலின் புறநகர் சிறைக்கு அருகில் மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. 2005இல் அந்த இடத்தில் சில மனித எச்சங்கள் கண்டறியப்பட்டதும் இங்கு கவனிப்புக்குரியது.
”நானும் அமீனும் நகமும் சதையும் போன்றவர்கள்” என்று பல மேடைகளில் பரவலாகத் தோழமை பாராட்டிய ஹபிசுல்லா அமீனும் நூர் முஹம்மது தாரகியும் பிளவடைந்தார்கள். தாரகியை மிகச் சிறந்த சிந்தனையாளர் என்றும், ’கிழக்கின் மேதை’ என்றும் நம்பிய அமீன், தாரகியை மையமாகக் கொண்ட ஆளுமை வழிபாட்டு முறையை உருவாக்கியிருந்தார். கட்சிக் கூட்ட மேடைகளிலும் பொதுமேடைகளிலும் தனது உரைகளைத் தாரகியைச் சிலாகித்தே தொடங்கினார். இவற்றினால் தாரகியின் உண்மையான சீடர் என்றே அமீன் அழைக்கப்பட்டார்.
ஆட்சி அதிகாரம் இவர்களின் கைகளுக்கு வந்தபோது சில மாதங்கள்கூட இவர்களால் இணைந்து பயணிக்க முடியவில்லை. அமீனின் பரிந்துரைகளைத் தாரகி நிராகரிக்கும்போதெல்லாம் மனக்கசப்புகள் வளர்ந்தன. இவர்களுக்கிடையில் மோசமாக மாறிய உறவு, தேசிய ராணுவத்தின் கட்டுப்பாட்டைக் கையகப்படுத்தும் ஓர் அதிகாரப் போட்டியாகவும் மாறியது.
சோவியத்துகள் தாரகியை விரும்பினர், ஏனென்றால் அவர் சோவியத் யூனியனுடன் குறிப்பாக வெளிநாட்டு விவகாரங்களில் நெருங்கிய உறவை விரும்பினார். ஆப்கானிஸ்தான் சோவியத் கூட்டமைப்புக்குள் தள்ளப்படுவதை அமீன் ஆதரிக்கவில்லை. இதேபோல், சீரமைப்பு இல்லாத கொள்கையைப் பின்பற்றுவதைப் பொறுத்தவரை, சோவியத் கூட்டமைப்பின் தீவிர ஆதரவுடன் கியூபாவின் மாதிரியில் ஆப்கானிஸ்தானை இணைக்கக் கூடாது என்று தாரகி விரும்பினார், அதேசமயம் அமீன் சோவியத் கூட்டமைப்பிலிருந்து விலகி இருக்க விரும்பினார்.
அமீனின் உள்நாட்டு கொள்கையும் உராய்வை உருவாக்கியது. அமீன் அதிகாரத்தை ஏகபோகமாக்க முயன்றார். இதன் மூலம் தாரகியை மட்டுமல்ல, அவரது நெருங்கிய நண்பர்களையும் அந்நியப்படுத்தினார். இந்தச் சூழலில் சோவியத் ஆலோசகர்கள் வகித்த பங்கு மிக முக்கியமானது. சோவியத் ஆலோசகர்கள் தாரகியின் அறிவுறுத்தல்களின்படி மட்டுமே வேலை செய்தனர்.
சூழ்நிலைகள் இப்படி இருந்தபோதிலும், அமீனுக்கு இன்னும் தாரகி தேவைப்பட்டார். அமீன் அவரை மகிழ்விக்க ஆர்வமாக இருந்தார், ஆனால் அதே நேரத்தில் அவரிடமிருந்து அதிகாரத்தைப் பறிக்கவும் முயன்றார்.
எவ்வாறாயினும், தாரகியால் மகிழ்ச்சியடைய முடியவில்லை. தாரகி அவரது விசுவாசமான சீடரின் கீழ் ஒரு தலைவராக பணியாற்ற விரும்பவில்லை. ’கூட்டுத் தலைமை, கூட்டு முடிவு’ என்ற கொள்கையில் தங்கள் நம்பிக்கையை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியிருந்தாலும் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி அடிப்படையிலான ஜனநாயகக் கோட்பாடுகளில் உள்ள வேறுபாடுகளைக் களைவது இவர்களைப் பொறுத்தளவில் சாத்தியமற்றதாகத் தோன்றியது. எவ்வாறாயினும், இதுவரை இவர்களின் போராட்டம் சொந்த வட்டத்திற்குள் மட்டுமே இருந்தது.
செப்டம்பர் 11 முதல் 14 வரை, இவ்விருவர் தலைமையிலான போட்டி குழுக்கள் ஒருவருக்கொருவர் எதிராகச் சதி செய்தன. சடுதியான பதவி நீக்கங்களும் பதவி அமர்வும் இடம்பெற்றன. விசுவாசிகள் தங்களுக்குள் சுட்டுக்கொண்டு மடிந்தார்கள். தாரகி ஒரு சமரசத்தை முன்மொழிந்தார். தாரகி கட்சியின் பொதுச் செயலாளர், புரட்சிகர கவுன்சிலின் தலைவர், ஆயுதப்படைகளின் தலைமை தளபதி அத்துடன் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு குழுவின் தலைவர். இருந்தும், அமீனின் சமரசமற்ற எதிரிகளாக மாறிய ஆண்களுடன் அவர் தன்னை சிக்கிக்கொள்ள அனுமதித்தார். ஓர் இணக்கமான பேச்சுவார்த்தைக்கென அமீனை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்தார் தாரகி. அரண்மனை நுழைவாயிலில் அமீன் பிற்பகல் ஐந்தரை மணிக்குச் சென்றார். அவர் இரண்டாவது மாடியின் நடைபாதையில் நுழைந்தபோது, ஜனாதிபதி காவலர்கள் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஆனால், அமீன் தப்பினார்.
தப்பித்து பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்திற்கு விரைந்து சென்ற அமீன், நிலைமையைக் கட்டுப்படுத்தி, தாரகி இருந்த ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட உத்தரவிட்டார். அமீனின் உத்தரவின் பேரில் தாரகி தடுத்து வைக்கப்பட்டார். அவசரமாக கூட்டப்பட்ட பொலிட்பீரோ கூட்டம் தாரகியின் இடத்திற்கு அமீனை நியமித்தது. அவரைக் கட்சியின் தலைவராகவும் மாநிலத்தின் தலைவராகவும் அறிவித்தது. அமீன் தனக்கு விசுவாசமான நபர்களின் புதிய அரசாங்கத்தை உருவாக்கினார்.
9 அக்டோபர், 1979 தாரகியின் மரணம் சம்பவித்தது. ஜனாதிபதி மாளிகையில் தடுப்புக் காவலில் இருந்த அவர் மூச்சுத் திணறி இறந்தார் என்ற சொல்லப்பட்டது. நாட்டின் தலைவராகவும் சிறந்த மேதையாகவும் கருதப்பட்ட மனிதரின் நல்லடக்கம் ரகசியமாக இரவில் நடந்தது.
தொடரும்…
கட்டுரையாளர்
ஸர்மிளா ஸெய்யித்
விதிவிலக்கான துணிச்சலான சமூக செயற்பாட்டாளர். சமூக அநீதிகள் குறித்து அச்சமற்று விமர்சிக்கக்கூடியவர், எழுத்தாளர், கவிஞர். சிறகு முளைத்த பெண் (கவிதை 2012), உம்மத் (2014 நாவல்), ஓவ்வா ( கவிதை 2015), பணிக்கர் பேத்தி (நாவல் 2019), உயிர்த்த ஞாயிறு (2021 அனுபவம்) ஆகியன இவரது நூல்கள்.