நோன்புக் கஞ்சி வாங்கி வருவதும் புதுத்துணி எடுத்துத் தைக்கக் கொடுப்பதும் தரும் குதூகலத்தைப் போலவே, நினைக்கும்போதே மனதில் மலர்ச்சியையும் முகத்தில் சிரிப்பையும் தரும் இன்னொரு உற்சாகமும் உண்டு நோன்பில். அதுதான் கம்சு ஓதுவது.

அதாவது 20ஆம் நோன்புக்கு மேல் அந்தந்தத் தெரு ஓதப்பள்ளியில் (அப்போது மதரஸா என்று சொல்லும் பழக்கம் வந்திருக்கவில்லை. குர்ஆன் ஓதச் சொல்லித்தரும் பள்ளிக்கூடம். அதனால் அது ஓதப்பள்ளிக்கூடம் ) ஓதும் மாணவர்கள் எல்லாம் சேர்ந்து அந்தத் தெருவிலுள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் போய்ப் பாட்டுப் பாடுவோம். பாடி முடித்ததும் வீட்டில் உள்ளவர்கள் பணம் தருவார்கள். இப்படி எல்லா வீடுகளிலும் வசூல் செய்த தொகையை (மிகச் சொற்பத் தொகைதான்!) எங்களுக்கு ஓதச் சொல்லித் தரும் ஆலிம்ஸாவுக்குக் (ஆலிம் சாகிப் – இமாம்) கொடுத்துவிடுவோம்.

கம்சு ஓதப் போகும் நாங்கள் எல்லாருமே சின்னஞ்சிறுமிகள்தான். ஒரு தாவணியையும் போட்டு, முக்காட்டையும் இழுத்து விட்டுக்கொள்ள வேண்டியது. நாகூர் ஹனிபா பாட்டுப் புத்தகம் நான்கைந்தை, நான்கைந்து பேருக்கு ஒரு புத்தகம் என வைத்துக்கொள்ள வேண்டியது. அப்புறம் ரொம்பப் பெருமையாக, உற்சாகத்தோடு கிளம்ப வேண்டியதுதான் கம்சுக்கு.

அந்தக்கால நாகூர் ஹனிபா பாடல்களான ‘மக்கத்து மலரே மாணிக்கச் சுடரே யாரசூலல்லாஹ்,’ ‘ ஓதுவோம் வாருங்கள்,’ ‘ ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்,’ ‘தீனோரே நியாயமா மாறலாமா,’ ‘ இருலோகம் போற்றும் இறைத்தூதராம்’ முதலான அவருடைய இனிமையும் கம்பீரமுமான பாடல்களை எல்லாம் நாங்கள் எங்களுக்கே உரிய இனிமையில் பாடுவோம். அதாவது பாடுவதாக நினைத்துக் கொள்வோம். பாட்டுப் புத்தகத்து மேலே நாலைந்தாகக் கூடிக் கவிழ்ந்த தலைகளுக்கிடையிலிருந்து எங்களுக்கு வாயில் என்ன வார்த்தை வருகிறதோ அதுதான் பாட்டு. எப்படி இழுக்கிறோமோ அதுதான் ராகம்!

அதோடு எங்கள் ஆலிம்சாவும் ஒரு சில பாட்டுக்கள் சொல்லித் தந்ததுண்டு.
தொழுகை உனக்குப் பாரமா
தொழுதால் என்ன பாவமா
முஸ்லிம் என்றால் போதுமா
முறையாய்ப் பேணி நடக்க வேணும் தெரியுமா

இந்தப் பாட்டையும் ‘மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்குக் கிளை பாரமா’ என்ற பாட்டு ராகத்தில் சேர்த்துப் பாடுவோம்.

நாங்கள் பாடும் அழகில் வீட்டில் இருக்கிறவர்கள் “பாவம் பிள்ளைலுவோ தொண்டத்தண்ணி வத்த கத்துதுவோ. போதும் பிள்ளையோ. இந்தாங்கொ இத வாங்கிட்டு பிஸ்மி சொல்லி போய்ட்டுவாங்கோ”, என எங்களை அனுப்புவதிலேயே குறியாக இருப்பார்கள்.

பின்னே? நோன்பு காலத்தில் அவர்களை ஓய்வெடுக்கவும் விடாமல், 10 – 20 பேர் சேர்ந்து அந்தக் கத்து கத்தினால் அவங்களுந்தான் என்ன செய்வார்கள்? பெத்தாக்கள் (ம்மா வாப்பாவைப் பெற்ற பாட்டிகள் சொந்தக்காரப் பாட்டிகள் எனில் உறவு முறைக்கேற்ப மூமா வாப்புமா எனக் கூப்பிடுவோம். சொந்தமல்லாத பாட்டிகளுக்குப் ‘பெத்தா’ என்பது பொதுப்பெயர். பெற்றவள் பெத்தவள் – பெத்தா) இருக்கிற வீடு எனில், அவர்கள் பாவப்பட்டுக் கொஞ்சம் எங்கள் பாட்டைக் கேட்டு ரசித்து, எங்களை உற்சாகப்படுத்துவார்கள்.

அப்பொழுதெல்லாம் இந்த சர்பத் எல்லா வீடுகளிலும் கரைப்பதில்லை. அதெல்லாம் வெகுசில வீடுகளில் மட்டுமே கிடைக்கும். அப்படி வீடுகளுக்குப் போனால் எங்களுக்கெல்லாம் கூடுதல் உற்சாகம். இன்னும் நன்றாகக் கத்திவிட்டு அவர்கள் தரும் சர்பத்தை வாங்கி மடக் மடக் என்று குடித்துவிட்டு வருவோம். கலகலவெனத் திரியும் கபடறியாப் பிள்ளைப் பருவம்தானே!

அன்றைய ஏரல் ஊரின் சிறுவர்களின் கொண்டாட்டத்தைச் சொல்லும்போது அவர்களின் பெற்றோர்களின் வாழ்நிலையையும் சொல்ல வேண்டுமல்லவா? ஏரல் முஸ்லிம்களில் சிலருக்கு மட்டும் ஏரலைச் சுற்றியுள்ள சிறுத்தொண்டநல்லூர், தெக்காடு, ஆறுமுகமங்கலம், இராஜபதி போன்ற கிராமங்களில் விவசாய நிலம் தோட்டம் முதலியவை இருந்தன அன்று. நிலத்தைப் பெரும்பாலும் குத்தகைக்கு விடும் பழக்கம் இருந்தது. காலப்போக்கில் இன்று விரல்விட்டு எண்ணக்கூடிய ஓரிரு முஸ்லிம் குடும்பத்தினர் தவிர வேறு எவரும் ஏரலில் விவசாய நிலம் உடையவராக இல்லை.

கொழும்பிலும் கண்டியிலும் சிறு கடைகள் உணவு விடுதிகள் நடத்துபவர்கள், அங்கிருந்து இங்கும் இங்கிருந்து அங்கும் பொருட்களைக் கொண்டு சென்று விற்பவர்கள் எனக் கணிசமான பேருக்கு இலங்கையோடு வியாபாரத் தொடர்புகள் இருந்தன. அப்படியிருந்தவர்களில் சிலர் மட்டுமே எதிர்காலச் சேமிப்பு முதலீடு என அக்கறை கொண்டிருந்தனர். மிகப் பெரும்பாலானோருக்கு அங்கு சம்பாதிக்க வேண்டியது; இங்கு வந்து செலவழித்துவிட வேண்டியது என்ற நிலைதான்.

எனவே 1960களில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் சூழலால் அங்கே தொழிலைத் தொடர இயலாது போனவுடன், இங்கு அவரவர் தலைக்குமேலிருந்த கூரைகளைத் தவிர பலருக்கு சொல்லிக்கொள்ளும்படி எதுவுமில்லாது ஆயிற்று. கொழும்பிற்கு அப்போது இராமேஸ்வரத்திலிருந்து கப்பல் தோணிப் போக்குவரத்து இருந்ததால் இராமேஸ்வரம் தனுஷ்கோடியிலும் இங்குள்ள சிலருக்கு கடைகள் வியாபாரங்கள் இருந்தன. இலங்கை நிலைமைக்கும் தனுஷ்கோடி அழிவுக்கும் பின்னர் அவர்களின் தொழிலும் பறிபோனது. ஆக, வாழ்ந்து கெட்ட குடும்பங்கள் என்று சொல்லும்படியாகவே பல குடும்பங்கள் இருந்தன.

அன்று எங்கள் தெருவில் எண்ணி இரண்டு வீடுகளைத் தவிர மற்றவையெல்லாமே ஓலை வீடுகளும் மண்தரையும்தான். எளிமையான வாழ்வு பலருக்குத் தவிர்க்க இயலாத ஒன்றாகவே இருந்தது . அந்த எளிமையான வாழ்விலும்தான் எத்தனை எத்தனை உல்லாசத்தைக் கொண்டு வந்தன நோன்பும் பெருநாளும்!

நாளைக்கிப் பெருநாள்! நம்மளுக்கு நல்லது!

நோன்பெல்லாம் முடிந்து இப்போது பெருநாளும் வரப் போகிறது. ரம்ஸான் என எல்லோரும் சொல்லும் ஈகைத் திருநாளை ஊரில் பெருநாள் என்றே இப்போதும் குறிப்பிடுவோம்.

பெருநாளுக்கு முந்தின நாள் மாலையிலிருந்தே பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் நாகூர் ஹனிஃபா தன் கம்பீரக் குரலில் ‘தக்பீர் முழக்கம் கேட்டால் இனிக்கும் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்’ என முழங்கத் தொடங்கியிருப்பார். தெருக்களில் கட்டியிருக்கும் டியூப்லைட் வெளிச்சத்துக்குப் போட்டியாகப் பிள்ளைகளின் மத்தாப்பூ வெளிச்சம் பாய்ந்து கொண்டிருக்கும். கொஞ்சம் பெரிய பையன்கள் கூடி மூட்டாங்குழி போடுவதுமுண்டு.

அன்றிரவு உணவுக்குப் பின் தெருவிலுள்ள குமரிப்பெண்கள் அத்தனை பேரும் தெருவில் கூடி ஆசைதீர விளையாடித் தீர்ப்பார்கள் சாமம் வரை. அவர்களை வாய்பார்த்தபடி எங்கள் விளையாட்டில் மும்முரமாயிருப்போம் சிறுமிகளான நாங்கள். இப்படி வளையாலும் நகையாலும் கலகலக்கும் பெருநாளிரவு.

பெருநாள் என்றாலே எல்லாருக்கும் நினைவு வருவது பிரியாணிதான். வீடுகளிலும் பெருநாளுக்கு இப்போதெல்லாம் பிரியாணிதான். ஆனால் பிரியாணி என்ன பிரியாணி? நெய்ச்சோறுகூட செய்யவேண்டிய கட்டாயமெல்லாம் இல்லாமல்தான் அன்று பெருநாள் கொண்டாடினோம் நாங்கள். சொல்லப் போனால் எங்கள் ஊரில் பிரியாணி பிரபலமடைந்ததே 80களின் பிற்பகுதியில்தான். அதுவரை விருந்தென்றால் சோறும் நெய்ச்சோறும்தான். பெருநாளன்று காலை உணவுக்கு இட்லி தோசை கறியாணம்தான் எல்லோர் வீடுகளிலும் . கூடவே தேங்காய்ப்பால் சீனி சேர்த்த ஜவ்வரிசிக் கஞ்சியும் சிலர் காய்ச்சுவதுண்டு. மதியத்துக்கு, சோறு கறியாணம் பருப்புக்கத்திரிக்காய்தான்.

நன்றி : தினத்தந்தி

பெருநாளன்று காலையில் பெருநாள் தொழுகை எனும் சிறப்புத் தொழுகை நடைபெறும். ஆண்களுக்கு எப்போதும்போல பள்ளிவாசலில் நடக்கும். பெண்கள் தொழுகைக்காகத் தெருவில் தென்னங்கிடுகு கொண்டு பந்தல் போட்டிருப்பார்கள். நோன்புப் பெருநாளுக்கு பெண்கள் தொழுகைதான் முதலில் நடக்கும். இதுவே ஹஜ்ஜுப் பெருநாள் எனில் ஆண்களுக்கு முதலில். ஏனென்றால் ஆண்கள் தொழுது விட்டு வந்து குர்பான் கொடுக்க ஆயத்தமாக வேண்டுமல்லவா? ம்மாவுடனும் லாத்தாக்களுடனும் புதுத்துணி சரசரக்க பந்தலுக்குச் சென்று தொழுது வருவதே ஒரு செல்லம்தான். தொழுது முடித்ததும் அங்கு பந்தலில் கூடியிருக்கும் எல்லாப் பெண்களுமே ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்துக் கொண்டு ஸலாம் கொடுப்பது வழமை. எல்லாரும் எல்லாருக்கும் ஸலாம் கொடுத்து முடித்த பின்பே அவரவர் வீட்டுக்குக் கலைந்து செல்வோம்.

தொழுதுவிட்டு வந்தபிறகு ம்மா தரும் ‘பெருநாத்துட்டு’டன் தோழிகளுடன் சேர்ந்தால் இனி பொழுது சாயும் வரை துள்ளல்தான். முழங்கையில் வழிய வழிய குச்சிஐஸ் வாங்கிச் சாப்பிட்டு அலைவதும், புதிதாய்க் கட்டியுள்ள பாபி ரிப்பன் நன்றாய்த் தெரிய பின்னலை முன்னால் இழுத்துப் போட்டு அலட்டுவதும், ரப்பர் வளையல்களின் புது வாசனையை அடிக்கொருதரம் முகர்ந்து பார்த்துக் கிறங்கிப் போவதும், சவ்வு மிட்டாய்க்காரர் கட்டிவிட்ட வாட்ச்சை பிய்த்துப் பிய்த்துத் தின்பதுமாக இறக்கை கட்டிப் பறக்கும் அந்நாள்.

படம் நன்றி: மாலைமலர்

பக்கத்து வீட்டில் பையன்கள் வீட்டு முன்னால் பெஞ்சு போட்டு மண்பானையில் எலுமிச்சை சர்பத் கலக்கி வைக்க, விற்பனை ஜோராய் நடக்கும். நாங்களே கிளாஸ் கிளாஸாய் போகவர வாங்கிக் குடித்துவிடுவோம். அநேகமாய் ஒருகிளாஸ் ஐந்துபைசா என்று நினைவு.
ராட்டினக்காரர் இருநாள்கள் முன்னதாகவே வந்து ராட்டினம் போட்டிருப்பார். கையால் இழுத்துச் சுற்றும் உயரம் குறைந்த ராட்டினம்தான். இப்போது ‘ஜயன்ட் வீலில்’ சுற்றும் பரவசத்துக்கு சற்றும் குறைந்ததில்லை அதில் ஏறிச் சுற்றுவதும். பத்துபைசாவிற்குப் பத்து சுற்றுக்கள் சுற்றிய பின்னும் “அண்ணே அண்ணே இன்னுவொரு சுத்து” எனக் கெஞ்சி ஓசியில் ஒரு சுற்று சுற்றாமல் இறங்கியதில்லை ஒருதடவையும்.

அப்புறம் பெருநாளுக்கு மட்டுமே உரிய சிறப்பான ஊஞ்சல் வேறு. தெருவிலுள்ள ஒரு வேப்பமரக் கிளையில் கயிறு கட்டி கொஞ்சம் உயர்த்தியே ஊஞ்சல் போடப்பட்டிருக்கும். உந்துவதற்குக் கால் எட்டாது. ஒருத்தர் பின்னால் நின்று ‘ஆட்டிவிடணும்.’ ஆட்டி விடுவதென்றாலும் எண்ணிக்கைதான். இருபத்தஞ்சு தடவை முப்பது தடவை இப்படி. ஊஞ்சல் ஆட மிகவும் ஆசையிருந்தாலும் அது சிறுமிகளுக்கு எப்பவும் சரிப்பட்டு வந்ததில்லை. ஏனென்றால் எங்களின் லாத்தாமாரெல்லாம் அதை விட்டு அசைய மாட்டார்கள்.

பெருநாள் தொழுகைக்கு ஆண்கள் எல்லோரும் சென்றுவிடுவதால், அன்றுதான் குமரிப்பெண்கள் பகலில் தெருவில் அப்படி சுதந்திரமாக விளையாடித் திரிய முடியும். அந்த வாய்ப்பை அவர்கள் யாரும் தவற விடுவதில்லை. நல்ல வேகமாகவும் உயரமாகவும் சிறகு விரித்துப் பறப்பதைப்போல பாவாடை தாவணி விசிற அவர்கள் ஊஞ்சலாடுவதைப் பெரும்பாலும் எங்களால் வேடிக்கைதான் பார்க்கமுடியும். எங்களுக்கு ஊஞ்சல் கிடைக்க அவர்களெல்லாம் மனதுவைப்பதேயில்லை. அதோடு சரிதான் போகட்டும் என நாங்களும் வேறு விளையாட்டுகளுக்கு ஓடிவிடுவோம். சங்கித்கா(பாண்டி), என் தலைக்கு எண்ணெய் ஊத்து, ஜோடிப்புறா இப்படி எங்களுக்கு விளையாட்டுக்கா பஞ்சம்?

என் வாப்புமாவுக்கு ஒரு காலை மடக்க இயலாததால் காலை தாங்கித்தான் நடப்பார்கள். முட்டியிடவோ மண்டியிடவோ சம்மணம் போட்டு அமரவோ இயலாது. அதனால் எங்களுடன் தொழ வருவதில்லை. நாங்கள் தொழுதுவிட்டு வீட்டிற்கு வந்ததும், “ம்மா! ஆபு!” என ம்மாவைப் பெயர் சொல்லி அழைக்க, ம்மாவும் “மாமி” என அருகில் செல்ல இருவரும் ஸலாம் கொடுத்துக் கொள்வார்கள். பிறகுதான் வாப்புமா எங்களை உச்சி முகர்ந்து கொள்வதெல்லாம்… பல வருடங்கள் கழித்து எங்கள் வாப்புமா தவறிய அந்த வருடம் தொழுதுவிட்டு வந்த பின் ம்மாவுக்கு, ‘ஆபுன்னு குரலக் கேட்டு ஸலாம் கொடுக்காதது என்னண்டோ’ இருந்ததாம். ம்மா சொன்னார்கள்.

பின்னொரு நாளில் நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

தன் மருமகளும் பேத்திமார்களுமாகத் தொழுதுவிட்டு வந்து, வீட்டுக்கு வரும் உறவினருக்கெல்லாம் இனிக்க இனிக்க ரோஸ்மில்க் கரைத்துக் கொடுத்து வீடு துலங்க நடமாடிய என் மாமி இல்லாமல் வெறுமையுற்றிருந்த அந்த வருடப் பெருநாளை நானும் கடக்க வேண்டியிருந்தபோது…

படைப்பாளர்

ஜமீலா

54 வயதாகும் ஜமீலா, தூத்துக்குடி மாவட்டம் ஏரலைச் சேர்ந்தவர். சுற்றி நடக்கும் வாழ்வைக் கவனிப்பதில் ஆர்வம் கொண்டவர். கவனித்தவற்றையும் மனதில் படிந்தவற்றையும் அவ்வப்போது எழுதியும் பார்ப்பவர். ஹீனா பாத்திமாவின் முக்கிய கட்டுரை ஒன்றை அருஞ்சொல் இணைய இதழுக்காக மொழிபெயர்ப்பு செய்துள்ளார். தீக்கதிர் இதழிலும் இவருடைய மொழிபெயர்ப்பு கட்டுரைகள் சில வெளியாகியுள்ளன.