என் பயணப்பசிக்கு முதலில் வெல்கம் டிரிங்க்ஸ்
‘என்னை மீட்டெடுக்கும் தனிப் பயணங்களை (solo travel) நான் என்றும் விரும்புகிறேன்’ என்று நூலாசிரியர் தன் பயணக்காதலை முதலில் கூறி, நம்மை பூட்டானுக்கு மனத்தினுள் தனிப்பயணம் மேற்கொள்ளவைக்கிறார். நேரில் இதுபோன்று தனிப்பயணம் செய்யமுடியாத என் போன்ற நடுத்தர, மரபார்ந்த குடும்பப் பெண்களுக்கு இந்த மாதிரியான புத்தகங்கள் வரப்பிரசாதங்கள் என்பேன்.

இந்த உணர்வை அப்படியே நூலாசிரியர் தன் வார்த்தைகளில் கடத்தியுள்ளார். பெரும்பாலும் நம் பயணங்கள் ‘மாயாண்டி குடும்பத்தார்’ படம்போல் குடும்ப திருவிழாக்களாகவே முடிந்துவிடுகின்றன. காலை ஐந்து மணிமுதல் இரவு உறங்கும்வரை சமையற்கட்டு, வீட்டுப்பராமரிப்பு என்றே குடும்பப் பெண்களின் வாழ்க்கை முடிந்துவிடுகிறது என்று சராசரிப் பெண்களின் குமுறலைக் கூறுகிறார்.
நான் எப்போதும் இரவு 9 மணிக்குமேல் ஒரு மணி நேரமாவது தினம்தோறும் பயணக் காணொளிகள் பார்ப்பது வழக்கம். ஒவ்வொரு நாட்டின் வரலாறு, அரசியல், சூழல், கலாச்சாரத்தை அறிந்துகொள்ளும் ஆசை எனக்கு எப்போதும் உண்டு. இந்த நூலிலும் என் இந்த ஆசைக்கு நூலாசிரியர் தன் பயண அனுபவங்களை பழச்சாறாக்கித் தந்துள்ளார்.
கலாச்சார காட்சிவெளி எனும் பூட்டான்

பாரோ நகரின் சேச்சு திருவிழாவின் போது நடத்தப்படும் சாம் முகமூடி நடனங்கள் மற்றும் அவற்றின் சிறப்பம்சங்கள் (கிழக்கு பூட்டானின் ஒரு கிராமம் UNESCO intangible cultural heritage list – humanityஇல் சேர்க்கப்பட்ட குறிப்பு), கோ & பெலோ பாரம்பரிய பூட்டானிய உடைகள் பற்றி எழுதியிருக்கிறார். யாக் சவுரிமுடியைப்பற்றி சொல்லவந்த நூலாசிரியர், ஒன்றிரண்டு இலக்கியத் தரவுகள் கொடுத்து, அங்கங்கே சீனியாய்த் தெளித்துள்ளார். அத்துடன் தும்சே லக்காங்கின் (Buddhist temple) சுவரோவிய சிறப்பம்சங்கள், தங்க்கா ஓவியங்கள், இவர் கண்ட பல்வேறு லக்காங்குகள், அவற்றில் அழகுமிளிரும் பெளத்தத் துறவிகளின் வெண்கலச் சிலைகள், அவற்றின் பின்னணி, ஆணியே இன்றி கட்டப்பட்ட டஷிச்சோ சாங் கோட்டை என ஆச்சரியங்கள் நீள்கின்றன.

பூட்டானின் அரசியல் அறிமுகம்
டோச்சுலா கணவாயின் 108 சோர்டன்களும் (cemetery) அதன் வரலாற்றுப் பின்னணியும், குரு ரிஷிபோன்ஷே (பூட்டானை ஒருங்கிணைத்தவர்) கட்டிய புனாகா கோட்டை போன்றவற்றை விவரிக்கிறார். தெற்கு பூட்டானின் லோத்சாம்பா எனும் வந்தேறிகளின் நிலை மற்றும் அவர்களுக்கான கட்டாய உடை தடைச்சட்டம், மன்னராட்சியும் மக்களவையும் கலந்த அரசாட்சி, கல்வியறிவில் சிறந்த மருத்துவர்தான் பூட்டானின் பிரதமர் என்கிற செய்தி, ஆசிரியரின் ஊதியத்தைவிட குறைவான பிரதமரின் ஊதியம் என்றெல்லாம் வாசித்தபோது ஆச்சரியமடைந்தேன். ஜங்க்ஷி காகித ஆலையின் காகிதங்கள் அரசியல் காரணங்களுக்கு உபயோகிக்கும் செய்தி வியப்படையவைத்தது.
குடும்பங்களின் நம்பிக்கை
சங்கங்கா லக்காங்க் (மதுரைவீரன் போன்ற தாம்திரின் என்ற காவல்தெய்வ கோயில்) மற்றும் சிமி லக்காங்க்தான் பூட்டான் குழந்தைளின் பெயர்சூட்டுமிடம். கிட்டத்தட்ட நம் பண்பாடு போலவே அவர்கள் பண்பாடும் இருக்கிறதே என்று வாசித்து வியந்தேன்.
இந்தியா எனும் ‘பிக் பிரதர்‘
ஃபுண்ட்ஷோலிங்கிலிருந்து திம்பு செல்லும் நெருஞ்சாலை மற்றும் பிற சாலைகள் இந்திய அரசால் பராமரிக்கப்படுவதும், சுக்கா மற்றும் பல்வேறு நீர்மின்நிலையங்களில் இந்திய அரசின் முதன்மை நிதியுதவி இருப்பதும் எனக்கு புதுச்செய்தி.
பூட்டான் எனும் இயற்கை தேசம்
பாரோ சூ, வாங் சூ, மோ சூ, ஃபோ சூ போன்ற நதிகளின் ரம்மியமும் – லக்காங்குகளை அடைய கேண்டிலீவர் பாலம் வழி அவற்றை கடக்கும் அனுபவமும் கண்ணுக்குக் குளிர்ச்சி தருவன.

லம்பேல்ரி ரோடோடென்றான் மலர்த்திருவிழா, சாலையோர லாவண்டர் வண்ண காட்டு மலர்கள், ஹா பள்ளத்தாக்கு வழி சாலையைச் சூழந்த இயற்கை எழில், சைப்ரஸ், மக்நோலியா, பியர், ஆப்பிள், செர்ரி, சினார் மரங்கள், அருவிகளின் கரையில் இவர்கள் எடுத்துக்கொண்ட ஹாட்ஸ்டோன் பாத், மகாநந்தா வனவிலங்கு சரணாலயம், பூட்டானின் பூர்வகுடிகள் போல் எங்கும் நிறைந்திருந்த தெருநாய்கள் என பல விஷயங்களைப் பற்றி தகவல்கள் நூலில்.
சிம்ப்ளி பூட்டான் உயிர்காட்சியகத்தின் பூட்டானிய வாழ்வியலின் இயற்கையோடு இயைந்த காட்சிப்பொருள்கள்; ஜைகாவில் இருந்து பாக்தோக்ரா வழியில் நிறைந்திருந்த சமதள தேயிலைத்தோட்டங்கள், கேட்வே ஆஃப் பூட்டான் (அதன் அரசியல் பின்னணி), புத்த மதம் பரவும் முன்னிருந்த பானிசம் எனும் இயற்கை வழிபாடு; உலகின் கரியமில வாயு வெளியேற்றத்தை 3மடங்கு கம்மியாக வெளியிடும் நெகட்டிவ் கார்பன் ஃபூட் பிரிண்ட் கொண்டது பூட்டான் என்றெல்லாம் வாசித்தபோது விழிவிரித்துப்போனேன்.
ஆர்கானிக் உணவுகளின் தாயகம்
லெமன் டீ, சுஜா, தம் ஆலூ, வதக்கிய முட்டைகோஸ், வேகவைத்த செளசெள, இமா டாட்ஷி (சிவப்பு மிளகாய் சீஸ்கூட்டு), ஈசே எனும் இடித்த சட்னி, வதக்கிய ஆஸ்பராகஸ், வெண்டக்காய் சாஸ், சிவப்பரிசி சோறு, அரிசிக்கஞ்சி என்று பூட்டானிய இயற்கை உணவுப்பட்டியல் நீள்கிறது… குறிப்பாக பக்வீட் ரொட்டி செய்யப்பட்ட பாப்பரை என்கிற சிறுதானியத்தின் மருத்துவ குணங்களும் விரித்துரைத்துள்ளார்.
பூட்டானின் பெண்கள் எப்படி இருக்கிறார்கள்?!

சிலுக்கா நன்னெரி (பெண் புத்த பிக்குணிகளின் மடம்), வீடுகளின் ஒரு பகுதியை ஹோம்ஸ்ட்டேவாக நிர்வகிக்கும் வீட்டுப்பெண்களும்;
ஒல்லியான தோற்றமும் முகம் நிறைய முதிர்வை தாண்டிய கிழவிகளின் சிரிப்பும்;
வுல்லன் நெய்யும் பெண்களும்;
கிரா எனும் பூட்டானிய உடை நெசவு செய்யும் சிறுதொழில் முனைவோர்களுமாக பெண்கள் பூட்டானில் கோலோச்சுகிறார்கள்!
விருந்தோம்பலில் முதிர்ந்த நாடு
இவர் தங்கியிருந்த பபேசா திம்பு ஹோம்ஸ்டேயில் தனக்கு உரிய உதவியும் , விருந்தோம்பலும் புரிந்த அதன் உரிமையாளர்தான் பூட்டான் பிரதமரின் தம்பி என்றறிந்தபோது மெய்சிலிர்த்தேன். தன் இதய நோய்க்கு வேலூர் சி எம் சி -இல் அறுவை சிகிச்சையுண்ட மற்றொறு ஹோம்ஸ்டே உரிமையாளர் தங்களை விருந்தோம்பிய விதம் மனதைக் கொள்ளைகொண்டது.
ஷாப்பிங் என்றால் கைவினைகள் தானா?!
குல்லாக்கள், யாக் மயிர்க்கோட்டுகள், யாக் தோல்கூடைகள், மூங்கில் கிண்ணங்கள், பலங் மரக்குடுவை, பர்ல் எனும் உணவு உண்ணும் டப்பாக்கள், திபெத்திய நகைகள் என்று இன்னும் நீள்கிறது வாங்கவேண்டிய பொருள்களின் பட்டியல்!
பயணவிரும்பிகளுக்கான நூலாசிரியரின் வழிகாட்டுதல்கள்
பெண்கள் தனிப்பயணம் செல்வதன் அவசியத்தையும், பெண்கள் குழு ஒரு தனிப்பயணம் செய்திட செய்யவேண்டிய பயணத் திட்டமிடல் பற்றியும் விரிவான தகவல்கள் இருக்கின்றன. பயணச்சீட்டு முன்பதிவு, கடவுச்சீட்டு, ஆடை மற்றும் இதர ஸ்மார்ட் பேக்கிங், வரவுசெலவு திட்டமிடல், மணி எக்ஸ்சேஞ்ச், சிம் கார்டு, டிஜிட்டல் பயண ஆப்கள் பற்றியான அத்தியாவசிய டிப்ஸ்களும் அள்ளி நிறைத்துள்ளார் நூலாசிரியர்.

என் தனிப்பட்ட வாசிப்பு அனுபவத்தில் ஏற்பட்ட சில தொய்வு பகுதிகள்
பூட்டான் டூரிஸ்ட் சைட்கள் தமிழில் மட்டும் இருப்பதற்கு பதிலாக அடைப்புக்குறிக்குள் ஆங்கிலத்திலும் இருந்திருந்தால் கூடுதலாக கூகுள் சேர்ச் செய்திட உதவியாக இருக்கும். நூலின் ஆரம்ப தலைப்புகள் பயண அனுபவத்தை தொடங்கும் முன்னரே முடிவடைந்த உணர்வு சற்று தொய்வு தந்தது.
முடிவுரை
என் ஆல்ட்டைம் ஃபேவரைட் ஹெர் ஸ்டோரிஸ் பப்ளிகேஷன்ஸ். வருடாவருடம் ஆரணி புத்தகத் திருவிழாவில் நான் தேடும் முதல் புக் லிஸ்ட் இவர்களுடையதுதான். இந்த முறையும் முதல் நாளே நான் புத்தக திருவிழா சென்றுவிட்டேன்.
ஹெர் ஸ்டோரிஸ் நூல்கள் எங்குமே காணவில்லை என்றதும் மனம் கனத்தது. நான் சென்று நிகழ்ச்சி நடத்துனரிடமே, “எனக்கு ஹெர் ஸ்டோரிஸ் புக்ஸ் வேண்டும். எங்குமே இல்லை”, என்றேன். “அம்மா வெயிட் வெயிட்… இன்னும் அட்டைப்பெட்டிகளில் இருந்து அடுக்கும் வேலை முடியவில்லை”, என்றார். “நான் பரவாயில்லை நீங்கள் ஹெர் ஸ்டோரிஸ் அட்டைப்பெட்டியை கொடுங்கள்; நான் நூல்களை அப்படியே தேர்வு செய்துகொள்வேன்” என்றபடி பெட்டிகளினுள் கைவிட்டு துழாவியெடுத்து இந்த முறையும் வாங்கிவிட்டேன். அப்படிக் கிடைத்த நூல்தான் இது.
எழுத்தாளர் எவ்வளவு அழகாக பூட்டானை அனுபவச்சாறாய் இந்த நூலில் தந்துள்ளார் என்பதற்கு என் போன்ற பயணவிரும்பிகளின் மனநிறைவே சாட்சி.
படைப்பாளர்

சிவநிறைச்செல்வி
ஆரணியைச் சேர்ந்த சிவநிறைச்செல்வி, வேளாண் துறையில் பட்டம் பெற்றவர். இயல்பிலேயே பயணங்களில் அபரிமித பற்றுக்கொண்டவர். குடிமைப்பணி தேர்வுக்கு தயார்செய்து வருகிறார்.





