“In the council was a woman who took a part in the deliberations of this council, as well as upon all important occasions. On the interpreter being questioned why they permitted a woman to take so responsible a part in their councils, he replied that some women were wiser than some men and that they had not done anything for years without the council of this ancient, grave woman, who spoke much in this council.” Thomas Chalkley (a minister of the London Society of Quakers 1706).
“அனைத்து முக்கிய சந்தர்ப்பங்களிலும், மன்றத்தின் ஆலோசனைகளிலும் பங்குவகித்த பெண்மணியொருவர் இருந்தார். இவ்வளவு முக்கியமான பங்கினை வகிக்க பெண்ணொருவரை ஏன் அவர்கள் அனுமதித்தார்கள் என்று மொழிபெயர்ப்பாளரிடம் கேள்வி எழுப்பியபோது, சில பெண்கள் ஆண்களைவிட புத்திசாலிகளாக இருக்கிறார்கள் என்றும், இந்த மூத்த, மதிப்புமிக்க பெண்ணின் ஆலோசனையில்லாமல் அவர்கள் கடந்த பல ஆண்டுகளாக எந்தவொரு காரியத்தையும் செய்ததில்லை என்றும் அவர் பதிலளித்தார். அந்தப் பெண் இந்த மன்றத்தில் நிறையப் பேசினார்.”- தாமஸ் சாக்லே (1706-ஆம் ஆண்டில் லண்டன் குவேக்கர் சங்கத்திலிருந்து வருகை தந்த மறைபரப்பாளர்).
கிழக்குக் கடற்கரையோரத்துக் காற்றில் கலந்து நின்ற காதற்ற குரல், மெல்லத் தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்தது. பவ்ஹாட்டான் (Powhatan) மக்களின் நில இழப்புகளும், வாம்பனோக் (Wampanoag) சமூகம் சந்தித்த போர்களின் தழும்புகளும், இரொக்வய் (Iroquois) கூட்டமைப்பின் சிதைவுகளும், பெனாப்ஸ்காட் (Penobscot) மக்களின் அமைதியிழந்த காடுகளும், செரோக்கிகளின் கண்ணீர்த்தட காயங்களும் இன்னும் ஆறவில்லை. அதற்குள் அமெரிக்கப் புரட்சிப் போருக்குப் பிந்தைய மேற்கு நோக்கிய விரிவாக்கம் (Westward Expansion) புதியதொரு பேரழிவை நோக்கிப் பூர்வகுடிகளைத் தள்ளத்தொடங்கியது. கடந்து வந்த பாதையின் கண்ணீர்க் கதைகளையும் குருதிப்புனல்களையும் அப்பலேச்சியன் (Appalachian) மலையின் காலடியில் கிடந்து அசை போடத்தொடங்கியது அதே காதற்ற குரல்.
1500கள் வரை இந்நிலப்பரப்பின் வேட்டை நிலங்களும், வனப்புமிக்க இயற்கையும் தாளகதியோடு இயங்கிக்கொண்டிருந்தன. பூர்வகுடிகளின் வாழ்க்கை, வேளாண்மை, வேட்டை, நாடோடி நகர்வுகள், வழிபாட்டுச் சடங்குகள், கைவினைப் படைப்புகள் எனச் சீரான நதியோட்டமாக இருந்தது. உணவிற்கான உரசல்கள், உட்பகை, அவற்றை நிர்வகித்தல், வலிமைக்கான கூட்டமைப்புகள், அரசியல் எனப் பூர்வகுடி மக்களின் வாழ்க்கை இயல்பாக இருந்தது. ஆனால், ஐரோப்பியரின் வருகைக்குப் பின்னர், அது தடம்புரளத் தொடங்கியது.
1607-ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு முதல் நிரந்தரக் குடியிருப்பை (இன்றைய வெர்ஜினியா மாகாணம்) ஜேம்ஸ் நகரில் நிறுவியது. அதிலிருந்து 125 ஆண்டுகளில் 13 ஆங்கிலக் காலனிகள் உருவாகி நிலைத்துவிட்டன. அவர்கள் கையகப்படுத்திய நிலப்பரப்பின் அளவு பல்லாயிரக்கணக்கான சதுரமைல் பரப்பளவு கொண்டது. அதில் முன்பு வாழ்ந்து வந்த பழங்குடியினர் துப்பாக்கிகளால் துடைத்தெறியப்பட்டனர். நவீன ஆயுதங்களுடன், பூர்வகுடிகளை அடக்கி ஒடுக்க ஆங்கிலேய அரசு அடுத்தடுத்து அனுப்பிவைத்த படைபலமும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு முக்கியக் காரணியானது. அத்துடன், ‘அமைதி உடன்படிக்கை’ என்கிற பெயரில் அரங்கேறிய நாடகங்கள்தான் அதீத நில அபகரிப்பிற்கு அசைக்கமுடியாத மூளையாகச் செயல்பட்டன. ஆரம்பகால ஆக்கிரமிப்புகளைப் பழங்குடி மக்கள் வீரத்தால் எதிர்த்து வந்தனர். எல்லைக்கோடுகளைக் காப்பாற்றுவதிலேயே பெரும்பான்மையான பூர்வகுடி இனங்கள் சிதறுண்டுபோயின.
அவை ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு உயிரைமட்டும் தக்கவைத்துக்கொண்டு தங்களின் நிலம், வளம், மானம், வழிபாடு, வாழ்க்கைமுறை அனைத்தையும் இழந்து அவலத்தில் நின்றன. சொந்த மண்ணிலிருந்து கண்காணாத வறண்ட பகுதிகளில் அரசாங்க ஒதுக்கீட்டு நிலங்களில் ஒடுக்கப்பட்டன. இவ்வலி மிகுந்த வரலாற்றை வழிவழியாக கேட்டு வளர்ந்த அடுத்தடுத்த பூர்வகுடித் தலைமுறைத் தலைவர்கள் மாறுபட்டு சிந்திக்கத் தொடங்கினர். அத்தகு போர்க்குணமும், சீர்நெறியும் கொண்ட ஷானீ பூர்வகுடி (Shawnee) இனம் சிதறிய செந்நீர்க்கதை இது.
அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதியின் (Mid West) முகவரியாக பசுமையான மலைகள், அதையடுத்து கண்ணுக்கெட்டும் தூரம்வரை விரிந்த புல்வெளிப்பகுதி, அதில் கால நகர்வு அறியாது மேய்ந்து கொண்டிருக்கும் பசுக்கூட்டங்கள், வளமான பண்ணைகள் எனலாம். அதற்கு கரைகட்டி அழகு சேர்ப்பது வளைந்து நெளிந்து ஓடும் ஒஹையோ நதிப்பள்ளத்தாக்கு (Ohio River Valley). இன்றைய அமெரிக்காவின் ஒஹையோ (Ohio), கென்ட்டகி (Kentucky), இண்டியானா (Indiana) ஆகிய மாநிலங்கள் மத்திய மேற்கு (Midwest) பகுதியின் நுழைவாயில்கள். நாட்டின் வடக்கும் தெற்கும் கைகுலுக்கும் தடமும் அதுவே. பசியாற பசுமையும் வேட்டைக்கு விரிந்த காடுகளும் நிரம்பிய அப்பகுதியில் ஷானீ பூர்வகுடிகள் நதியோட்டத்துடன் நாடோடிகளாக சில காலமும் நிலைத்த இடத்தில் சில காலமும் வாழ்ந்து வந்தனர்.
இப்பகுதிகளைச் சேர்ந்த ஷானீ பூர்வகுடிகளும் (shawnee) இத்தகைய இடப்பெயர்வுகளால் பல இனக்குழுக்களாக பிரியநேர்ந்தது. வடக்கில் இலினாய் (Illinois), கிழக்கில் சவுத் கரோலினா (South Carolina), வெர்ஜினியா (Virginia), மேரிலாண்ட் (Maryland), தெற்கில் டென்னிஸி (Tennessee), அலபாமா (Alabama), ஜார்ஜியா (Georgia) என பரந்துபட்ட நிலப்பரப்புகளில் ஷானீ பூர்வகுடிகள் சிதறிக்கிடந்தார்கள். அனைத்து அலைக்கழிப்புகளையும் தாக்குப்பிடித்து இப்பூர்வகுடிகள் 1600ஆம் ஆண்டுவாக்கிலிருந்து ஒஹையோ நதிப் பள்ளத்தாக்குப் பகுதிகளான ஒஹையோ, கென்ட்டகி, பென்சில்வேனியா (Pennsylvania), வெஸ்ட் விர்ஜினியா (West Virginia), இண்டியானா போன்ற பகுதிகளில் தங்களது வரலாற்றுத் தடங்களைப் பதித்து வாழ்ந்துவருகிறார்கள்.
ஆங்கிலேயர்கள் இந்நிலத்தில் நிரந்தரமாகக் குடியேறி ஏறத்தாழ 150 ஆண்டுகள் ஆகியிருந்த காலகட்டமது. பூர்வகுடிகளின் இளம் வீரத்தலைவர்கள் ஆங்கிலேயர்கள் எவ்வாறு தந்திரமாக தங்கள் நிலங்களை அபகரிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளத்தொடங்கினர். அதில் ஷானீ இனத்தலைவர் டெக்கும்செ (Tecumseh) மிக முக்கியமானவராவார். டெக்கும்செ அரசியல் ரீதியாக ஒரு மாபெரும் தாக்கத்தை பூர்வகுடிகளிடையே உண்டாக்கினார். டெக்கும்சேவின் சகோதரரான டென்ஸ்க்வாடவா (Tenskwatawa – The Prophet – தி பராஃபட்) தம் மக்களிடம் ஆன்மீக எழுச்சியை உருவாக்கினார்.

டெக்கும்செ மிக இளம் வயதில் பூர்வகுடி-ஐரோப்பிய போரில் தந்தையை இழந்தார். தாயும் உறவுகளும் பல திசைகளில் சிதறிப்போயினர். அவரின் வளர்பருவத்தில் வன்முறையான போர்களே அன்றாடக் காட்சிகளாயின. அமைதியற்ற பூர்வகுடிகளின் வாழ்க்கைநிலை அவரை ஆழமாகச் சிந்திக்கவைத்தது; சிக்கல்களின் மூலத்தை அறியத்தூண்டியது. ஆங்கிலேயர்களின் ‘உடன்படிக்கைகள்’ வெறும் ஏமாற்று வேலைகள் என்றும், அவையே பூர்வகுடிகளை அழிக்கும் நச்சுவிதைகள் என அடையாளம் கண்டார்.
ஆங்கிலேயர்களும் அமெரிக்கர்களும் தாங்கள் கையெழுத்திட்ட எந்தவொரு உடன்படிக்கையையும் தங்களின் நிலப்பசி தீரும்வரைமட்டுமே மதித்தனர். ஆங்கிலக் குடியேறி மக்கள், தங்கள் எல்லைக்கோடுகளைத் தாண்டும்போது, அரசாங்கம் ‘எல்லைக்கோடு மீறப்பட்டுவிட்டது’ என்று ஒப்புக்கொள்வதில்லை. அதற்கு மாறாக, அடுத்த புதிய ஒப்பந்தத்தைத் திணித்து மேலும் பல நூறு சதுரமைல் நிலங்களை அபகரித்துக்கொள்வதை வழக்கமாக்கிக்கொண்டது. ஒடுக்கப்பட்டவர்களுக்காக ஓங்கிக் குரல் கொடுப்பவர்களை தீக்கிரையாக்குவதையும் வழக்கமாக்கிக்கொண்டது. எதிர்ப்பு எழுந்த பூர்வகுடி கிராமங்களை அடியோடு அழித்து சாம்பலாக்கியது.
ஆங்கிலேயரின் அடுத்த ஆயுதம், ‘பிரித்தாளும் சூழ்ச்சி’. ஷானீ மக்களோ, பிற பழங்குடியினரோ ஒரே தலைமையின் கீழ் வாழ்வதில்லை. அவர்களுக்குள் பல்வேறு இனக்குழுக்கள் இருந்தன. வெள்ளைக்காரர்கள் தங்களுக்குச் சாதகமான அல்லது பலவீனமான சிறிய தலைவர்களைத் தனித்தனியாக அழைத்து, லஞ்சம் அல்லது மதுவின் மூலம் உடன்படிக்கைகள் ஏற்படுத்திக்கொள்வதை தொடர்ச்சியான தந்திரமாக மேற்கொண்டனர். ‘ஒட்டுமொத்த பழங்குடி இனத்தின் பொது ஒப்புதல் இல்லாமல் ஒரு சில நபர்கள் போடும் உடன்படிக்கை ஒப்பந்தங்கள் ஒட்டுமொத்த இனத்தையும் கட்டுப்படுத்தாது’ என்ற நிலைபாட்டினை டெக்கும்செ வகுத்தார்.
“வானம், காற்று, பூமி இவை எப்படி யாருக்கும் சொந்தமில்லையோ, அதேபோல் இந்த நிலம் ஒட்டுமொத்தப் பூர்வகுடிகளுக்கும் பொதுவானது. ஒரு சில தனிநபர்கள் வந்து கையெழுத்திட்டுக் கொடுத்துவிட்டால் ஒட்டுமொத்தக் குலத்தின் தாய்நிலம் யாருக்கும் அடிமைப்பட்டுவிடாது” என்கிற டெக்கும்செவின் முழக்கம், அவரைப் போலவே புகழ்பெற்று விளங்கியது.

அமெரிக்க அரசாங்கத்துடன் தனித்தனியாக ஏற்படுத்திக்கொண்ட அமைதி உடன்படிக்கைகள் ஒவ்வொன்றும் உண்மையில் பூர்வகுடிகளின் ‘அடிமை சாசனங்கள்’ என்பது டெக்கும்செவிற்கு வெட்டவெளிச்சமானது. அதனால், சிதறிக்கிடந்த அத்தனை பழங்குடி இனங்களையும் ஒன்றிணைத்து ஒற்றைக் கூட்டமைப்பாக (Pan-Indian Alliance) மாற்றி இவ்வகை ஏமாற்று நாடகங்களை முற்றிலுமாக எதிர்க்கத்தொடங்கினார்.
ஆங்கிலேயர்களின் வஞ்சகமான சூழ்ச்சிகளாலும் நில அபகரிப்புகளாலும் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்ட பூர்வகுடிகள், தங்கள் தாயகத்தைப் பாதுகாக்கப் பிரெஞ்சுப்படையுடன் இணைந்து போராடத்தொடங்கினர். அதனால் ஆங்கிலேயர்கள் பெருமளவில் பாதிப்படைந்தனர். எனவே அவர்கள் பூர்வகுடிகளை சமாதானப்படுத்த முடிவெடுத்தனர். அப்பலேச்சியன் மலைக்கு மேற்கே புதிய குடியேற்றங்கள் உருவாக்கப்படாதென, ‘ஈஸ்டன் உடன்படிக்கை’ (The Treaty of Easton in 1758) மூலம் உறுதியளித்தனர். ஆனால் , ஆங்கிலேயக் குடியேறிகளின் மண்ணாசையைக் கட்டுப்படுத்தமுடியாமல், அரசாங்கம் அப்பலேச்சியன் மலைக்கு மேற்கேயுள்ள ஷானீ பூர்வகுடிகளின் நிலங்களை சூழ்ச்சியால் கைப்பற்றத்திட்டமிட்டது.
வலிமைமிக்க இரொக்வய் கூட்டமைப்பு அப்போது ஆங்கில அரசுடன் நேசநாடாக இருந்தது. அதைப் பயன்படுத்தி ஷானீக்களின் நிலங்கள் பெருமளவு அபகரிக்கப்பட்டன. இரொக்வய் கூட்டமைப்பு தனக்கு உரிமையில்லாத ஷானீ போன்ற பழங்குடியினரின் நிலங்களை ஆங்கிலேயர்களுக்குத் தாரை வார்த்துக்கொடுத்தது என்பதுதான் இங்கே வரலாற்றுத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. இதற்குத் துணைபோனது ‘முதலாம் போர்ட் ஸ்டான்விக் உடன்படிக்கை’ (Treaty of Fort Stanwix, 1768). இரொக்வய்கள் தங்களுக்குச் சொந்தமில்லாத நிலங்களை விற்றது பூர்வகுடிகளிடையே பெரும் கொந்தளிப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. இதனால் வடஅமெரிக்கப் பூர்வகுடிகள், குறிப்பாக ஷானீ (Shawnee) மக்கள், மாபெரும் துரோகத்தையும் இழப்பையும் சந்தித்தனர். இந்த ஒப்பந்தமே 1774-இல் நடைபெற்ற ‘டன்மோர் போர்’ (Dunmore’s War) மூளக் காரணமாக அமைந்தது.

அமெரிக்கப் புரட்சிக்குப்பின், அமெரிக்க ராணுவம் ஆங்கிலேய (இங்கிலாந்து) அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட இரொக்வய் கூட்டமைப்பை போரிட்டு ஒடுக்கியது. ஒருதலைப்பட்சமான ‘இரண்டாம் போர்ட் ஸ்டான்விக் உடன்படிக்கை’ (1784) (Treaty of Fort Stanwix, 1784) இராணுவ மிரட்டலோடு திணிக்கப்பட்டது. இதனால் இக்கூட்டமைப்பு தங்களின் நிலங்களுடன் ஷானீ போன்ற பூர்வகுடிகளின் நிலங்களையும் இழந்தது. தங்களின் அனுமதியின்றி நிலங்கள் பறிபோனதை எதிர்த்து ஷானீ மற்றும் மியாமி மக்கள் தீவிர ஆயுதப் போராட்டத்தைத்தொடங்கினர்.
அதைத் தொடர்ந்து, ‘ஃபோர்ட் மெக்கின்டாஷ்’ (1785), ‘மியாமி நதிக்கரை’ (1786) உடன்படிக்கைகளும் இராணுவ மிரட்டல் மூலம் பலவந்தமாகத் திணிக்கப்பட்டு நிலங்கள் பறிக்கப்பட்டன. தங்களின் ஒப்புதலின்றி தாயகம் பறிக்கப்பட்ட இந்தத் தொடர் வஞ்சகங்களே, பூர்வகுடிகள் ஒன்று திரண்டு ‘வடமேற்கு இந்தியப் போர்’ (Northwest Indian War, 1785–1795) தொடுப்பதற்கும், பிற்காலத்தில் டெக்கும்சே போன்ற மாபெரும் தலைவர்களின் எழுச்சிக்கும் நேரடி அடிப்படைக் காரணமாக அமைந்தன.


1791இல் நடைபெற்ற செயிண்ட் க்ளேர் போரில் (St. Clair’s Defeat) பூர்வகுடிகள் அமெரிக்கப் படைகளைத் தோற்கடித்தனர். அப்போருக்கு ஆங்கிலேயப் படையின் மறைமுக உதவி கிடைத்தது. ஆனால், அப்போரில் அடைந்த தோல்வியைச் சரிகட்ட அமெரிக்க அரசு நவீன போர் யுக்திகளுடன் ‘ஃபாலன் டிம்பர்ஸ்’ (Battle of Fallen Timbers, 1794) போரில் பூர்வகுடிகளைத் தாக்கியது. போரின் உச்சக்கட்டத்தில் ஆங்கிலேய இராணுவம் பூர்வகுடிகளைக் கைவிட்டது; பூர்வகுடிகள் தோல்வியைத் தழுவினர். அமெரிக்கப் படை பூர்வகுடிகளின் கிராமங்கள், குளிர்காலச் சேமிப்பு தானியக் களஞ்சியங்கள், மக்காச்சோளத் தோட்டங்களை முற்றிலுமாகத் தீயிட்டு அழித்தது. அடுத்தடுத்த குளிர்காலத்தில் பூர்வகுடிகள் பட்டினியால் சாவதை உறுதி செய்யும் வகையில் இந்த அழித்தொழிப்பு நடவடிக்கைகள் அமைக்கப்பட்டன.
வேறு வழியின்றி பூர்வகுடிகள் ஒஹையோவின் பெரும்பகுதியை, ‘கிரீன்வில் உடன்படிக்கை’ (Treaty of Greenville, 1795) மூலம் அமெரிக்காவிடம் பறிகொடுத்தனர். அதைத் தொடர்ந்து, வில்லியம் ஹென்ரி ஹாரிசன் (William Henry Harrison) செய்த சூழ்ச்சி ஒப்பந்தங்களும், சாலைப் பணிகளுக்கான ஆக்கிரமிப்புகள் மூலமாக பழங்குடியினரின் மீதமிருந்த நிலங்களும் முற்றிலுமாகப் பறிக்கப்பட்டன.


டெக்கும்செவும் அவரது சகோதரரும் மதகுருவுமான டென்ஸ்கவாடாவும் (Tenskwatawa) பூர்வகுடிகளை ஒருங்கிணைக்க ஓஹியோ-இண்டியானா எல்லைப் பகுதியில் பராஃபெட்ஸ் டவுன் (Prophetstown) என்கிற ஆன்மீகம் சார்ந்த அரசியல் தலைநகரை உருவாக்கினர். தங்களது நிலங்களை மீட்கவும் வெள்ளையர்களை எதிர்க்கவும் பழங்குடி இனங்கள் அங்கு திரண்டதைக் கண்டு அஞ்சிய அமெரிக்கத் தளபதி வில்லியம் ஹென்ரி ஹாரிசன், 1811-ஆம் ஆண்டில் அப்பகுதியின்மீது திடீர்த் தாக்குதல் தொடுத்தார். டெக்கும்செ இல்லாத நேரத்தில் நடைபெற்ற திப்பிகானோ போரில் (Battle of Tippecanoe) அமெரிக்கப் படைகள் வெற்றி பெற்று, பராஃபெட்ஸ் டவுன் நகரத்தைத் தீயிட்டு எரித்தன. இந்தத் தோல்வியே ஷானீ கூட்டமைப்பின் எழுச்சிக்குப் பெரும் தடையாக அமைந்ததுடன், அவர்கள் தங்கள் நிலங்களை முழுமையாக இழக்கக் காரணமான திருப்புமுனையாகவும் மாறியது.


இறுதியாக, 1812 போருக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட ‘செயின்ட் மேரீஸ் உடன்படிக்கைகள்’ (Treaties of St. Mary’s, 1818) உள்ளிட்ட இறுதி ஒப்பந்தங்கள், ஷானீ மக்களை முற்றிலுமாக முடக்கியது. தங்களது பூர்வீக பூமியிலிருந்து பலவந்தமாக துரத்தப்பட்ட போதிலும், ஷானீ மக்கள் தங்களின் துடிப்பான கலாச்சார அடையாளங்களைத் தொடர்ந்து பேணி வருகின்றனர். பிரெட் டான்ஸ் (Bread Dance), கிரீன் கார்ன் திருவிழாக்கள் (Green Corn ceremonies), ஸ்டாம்ப் நடனங்கள் (stomp dances) போன்ற தங்களது பாரம்பரியச் சடங்குகளையும் அவர்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அவர்களின் கலாச்சார நடனங்களில் முழக்கப்படும் இசைக்கருவிகளும் குரல்களும் ஒலித்துக் கொண்டேதான் உள்ளன. அந்த உரிமை முழக்கம் என்றென்றும் அடங்காது!
தொடர்ந்து ஒலிக்கும் …
பெட்டிச் செய்தி

கான்ஸ்டாக் (Cornstalk): ஷானீ இனத்தலைவர்
வெள்ளையர்களின் வஞ்சகமான நில அபகரிப்புகளையும் ஒப்பந்தங்களையும் எதிர்த்துப் போராடிய புகழ்பெற்ற ஷானீ தலைவர் கார்ன்ஸ்டாக் (கி.பி. 1720–1777), போர்களால் தன் இனம் அழியக்கூடாது என நினைத்து ‘கேம்ப் ஹோலி பேரவை'(Camp holy assembly -1774) சமாதான ஒப்பந்தத்தை மேற்கொண்டார். அமெரிக்கப் புரட்சிப்போரில் நடுநிலை வகிக்க முயன்றபோதிலும், 1777-இல் ஃபோர்ட் ரான்டோல்ப் கோட்டைக்குத் தூதுவராகச் சென்ற அவர், அமெரிக்க வீரர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவரது சோக மரணம் ஷானீகளிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி, டெக்கும்செ போன்றோரின் எழுச்சிக்கு வித்திட்டது.
படைப்பாளர்

ராஜி வாஞ்சி ( ராஜஶ்ரீ வாஞ்சிநாதன்)
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், ஹூஸ்டனில் வசிக்கும் ராஜி, கட்டுரையாளர், கவிஞர். இவரது ‘நீளிடைக் கங்குல்’ 2020ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறை வழங்கும் சிறந்த நூலுக்கான விருது வென்றுள்ளது. கவிஞர் அமிர்தகணேசனுடன் இணைந்து, ‘ஏன் விரட்டினீர்கள், எங்களை?’ என்கிற அமெரிக்கப் பூர்வகுடிகள் பற்றிய வரலாற்றுக் கவிதை மற்றும் கட்டுரைத் தொகுப்பை எழுதியுள்ளார். ‘குறிஞ்சி பூத்த வேலி’, ‘ஜன்னல் உரசும் வண்ணத்துப்பூச்சி’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். குழுவாக இணைந்து பல படைப்புகளைத் தந்துள்ளார். இவரது பல படைப்புகள் தொகுப்பு நூல்களில் வெளியாகியுள்ளன. இவரது ஹைக்கூ, சிவகாசி அய்யாநாடார் ஜானகிஅம்மாள் கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. வட அமெரிக்கப் பேரவையின் FeTNA கவியரங்கங்களில் இடம் பெற்றுள்ளார்; கவியரங்க ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். மகாகவி ஈரோடு தமிழன்பன் 80 விருது, Women Achievement Award 2022 for exemplary service to the community, வெளிநாடு வாழ் பெண் கல்பனா சாவ்லா விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளார்.
ஹூஸ்டன் பாரதி கலை மன்றத்தின் இலக்கிய இயக்குநராகப் பணியாற்றியவர், அதன் ‘தமிழ்ச்சாரல்’ இதழ் ஆசிரியராகவும் செயல்பட்டுள்ளார். ஹூஸ்டன் பாரதி கலைமன்றத்தின் ‘நாளைய பாரதி’ என்கிற வடஅமெரிக்க அளவிலான, அனைத்து வயதினருக்குமான இலக்கியப் பேச்சுப் போட்டியின் ஒருங்கிணைப்பாளராகவும், நிகழ்ச்சி வடிவமைப்பில் முக்கிய பங்கும் வகித்துவருகிறார். இவரின் படைப்புகள் பல இதழ்களில் வெளியாகியுள்ளன.





