அர்ச்சனா அந்த மின்னஞ்சலை மூன்றாவது முறையாகப் படித்தாள்.
‘Unfortunately, you have not been selected.’
அதற்குக் கீழே இருந்த வரிகளை அவளால் படிக்கவே முடியவில்லை.
பல இரவுகள் தூங்காமல் படித்து, தேர்வெழுதி, ஒரு வருடமாகக் காத்திருந்த வேலை. கடைசிச் சுற்று வரை சென்று, இறுதியில் ’நோ’ என்கிற பதிலோடு முடிந்து போனது.
அவள் லேப்டாப்பை மூடிவிட்டு அமைதியாக அமர்ந்தாள்.
சமையலறையிலிருந்து அம்மா கிண்டிக் கொண்டிருந்த கேசரியின் மணம் நாசியில் ஏறியது. வேலை கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையில் முடிவு தெரியும்முன்பே இனிப்புச் செய்ய ஆரம்பித்த அம்மாவின் நம்பிக்கையை உடைத்துவிட்டோமோ என்று குமைந்தாள்.
“செலக்ட் ஆயிட்டியா அர்ச்சூ?”
கேசரி மணத்தோடு அம்மாவின் குரல் கேட்டது.
“ப்ச்… இல்லைமா. வேலை கிடைக்கல.”
சில நொடிகள் அமைதி.
“பரவாயில்லை… விடு. அடுத்த தடவை—”
அம்மா முடிப்பதற்குள் அர்ச்சனாவின் குரல் உயர்ந்தது.
“எப்பவுமே இதுதான் நடக்குதுமா. எனக்கு ராசியே இல்ல…”
அவளது குரல் உடைந்தது. அம்மா அவளை அணைத்துக்கொண்டார்.
“விடும்மா… கொஞ்ச நேரம் அமைதியா இரு. அப்புறம் பாத்துக்கலாம்.”
“நான் முயற்சி பண்ணாத மாதிரி எல்லாரும் பேசுறாங்க… நான் ரொம்பச் சோர்ந்து போயிட்டேன்…”
அவள் அழுதபடியே அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டாள்.
அந்த இரவு முழுவதும் அவளால் தூங்க முடியவில்லை.
“என்னால முடியாது…”
“என்னோட வயசுல எல்லாரும் செட்டில் ஆயிட்டாங்க…” என்று தன்னைத்தானே குறை கூறிக்கொண்டே இருந்தாள்.
அடுத்த நாள் அறையைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, ஒரு பழைய நோட்புக்கிலிருந்து ஒரு காகிதம் கீழே விழுந்தது.
அது கல்லூரி நாட்களில் அவள் பங்கேற்று, வெற்றி பெறாத ஒரு போட்டிக்கான கருத்துப் படிவம். அதில் ஒரு நடுவர் எழுதியிருந்தார்:
’You speak well. Slow down your rush. You have potential.’
அவள் அந்த வரிகளைப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.
அந்தப் போட்டியில் தோற்றபோது அவள் மிகவும் அழுதாள். ஆனால் அதற்குப் பிறகுதான் மேடைப் பேச்சைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தாள்.
மேடையில் நம்பிக்கையுடன் பேசவும் ஆரம்பித்தாள்.
“அந்தத் தோல்வி இல்லனா… இந்தத் திறமை வந்திருக்குமா?”
அந்த எண்ணம் அவளைச் சற்று அமைதிப்படுத்தியது. மாலை, அவள் நண்பன் கார்த்திக் பார்க்க வந்தான்.
“தோல்வி வந்ததும்… நான் எதுக்குமே லாயக்கில்லாதவ மாதிரி எண்ணம் வருகுது கார்த்தி…”
கார்த்திக் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தான்.
“அர்ச்சனா… ஏதிலாச்சும் தோத்ததும், நம்மளையே நாம எடைபோட ஆரம்பிச்சிடுறோம்.”
அவள் அவனைப் பார்த்தாள்.
“ஆனா, கொஞ்சம் நேரம் கழிச்சு யோசிச்சுப் பார்த்தா… ‘என்ன தப்பு நடந்துச்சு’ன்னு புரியும்.”
அவன் சற்று இடைவெளிவிட்டுச் சொன்னான்.
“நீ தோத்துட்டேன்னு மட்டும் பார்க்காதே. அடுத்த தடவை வேற மாதிரி என்ன செய்யலாம்னு பாரு.”
அந்த வார்த்தைகள் அவள் நினைத்துக்கொண்டிருந்ததை வேறொரு கோணத்தில் பார்க்க வைத்தன.
அன்று இரவு, அவள் நிராகரிப்பு மெயிலைத் திறந்தாள். இந்த முறை அழவில்லை. நேர்முகத் தேர்வில் எங்கு தடுமாறினாள் என்று எழுத ஆரம்பித்தாள்.
ஒரு கேள்விக்குப் பதில் தெரிந்திருந்தும் அவசரத்தில் சரியாகச் சொல்லவில்லை. தன் அனுபவத்தைப் பற்றிப் பேசும்போது இருந்த நம்பிக்கை, தன்னைப் பற்றிக் கேட்டபோது குறைந்துவிட்டது. எதில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும் என்று பட்டியல் போட்டாள்.
எந்தக் கேள்விக்குச் சரியாக பதில் சொல்லவில்லை? எங்கே நம்பிக்கைக் குறைந்தது? எதை இன்னும் நன்றாகத் தயாரிக்க வேண்டும்? ஒவ்வொன்றாக எழுதிக்கொண்டே போனாள்.
முன்பு அந்த மெயில், அவளுக்கு ’முடிவு’ போல இருந்தது. இப்போது அது, ’பாடம்’ போலத் தோன்றியது.
அவள் பழைய மெயிலையும் புதிய நோட்ஸையும் அருகருகே வைத்துப் பார்த்தாள். கல்லூரியில் தோற்ற அந்தப் போட்டி. இன்றைக்கு அவளுக்கு ஒரு திறமையைத் தந்திருந்தது.
இன்றைய தோல்வி… நாளைக்கு என்ன தரப்போகிறது?
அன்று டையரியில் அவள் எழுதினாள்:
’வெற்றி என்னை மகிழ்ச்சிப்படுத்தியது.
தோல்வி என்னை மாற்றியது.’
சிறிது நேரம் அந்த வரிகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு லேப்டாப்பைத் திறந்தாள். அடுத்த வேலைக்கான தயாரிப்பைச் செய்ய ஆரம்பித்தாள்.
தோல்வி வந்தால் என்ன?
அது அங்கேயே முடிந்து போக வேண்டியதில்லையே!
(தொடரும்)
படைப்பாளர்:

யாமினி
வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.





