குலேபகாவலி 1955-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.

Gul என்றால் பெர்சியன் மொழியில் மலர். Bakavali என்ற ஊரில் உள்ள மலர் என்பதே இத்தலைப்பில் விளக்கம். டி. ஆர். ராமண்ணா தயாரித்து இயக்கியிருக்கிறார். ஆயிரத்தொரு இரவுகள்  (‘Alf Leila Wah Leila’) என்ற அரேபிய நாட்டுப்புறக் கதையை அடிப்படையாகக் கொண்ட கதை.  இந்தக் கதை இந்தியாவில் பல முறை திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. முதல் திரைப்படப் பதிப்பு 1924-ம் ஆண்டு பம்பாயின் கோஹினூர் பிலிம்ஸ் மூலம் ஊமைப் படமாக உருவாக்கப்பட்டது. 1930-ம் ஆண்டு மீண்டும் ஊமைப் படமாக உருவாக்கப்பட்டது. பின்னர் 1932, 1947, 1956 மற்றும் 1963-ம் ஆண்டுகளில் இந்தியில் படங்கள் எடுக்கப்பட்டன.

தஞ்சை என். ராமையா தாஸ் திரைக்கதை மற்றும் பாடல்களை எழுதியிருக்கிறார். விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்திருக்கிறார்கள்.

எம்.ஜி.ராமச்சந்திரன் 

டி.ஆர்.ராஜகுமாரி, 

ராஜசுலோச்சனா 

ஜி.வரலட்சுமி 

ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் கே.ஏ.தங்கவேலு, சந்திரபாபு, ஈ.ஆர்.சகாதேவன், அ.கருணாநிதி, சாயிராம், ராமராஜன், நாராயணன், பழனிவேலு, சாண்டோ சின்னப்பர், I N மூர்த்தி, T K சம்பங்கி. சேதுபதி, R விஸ்வநாதன், வேணுகோபால், ஈ.வி.சரோஜா, பி சரோஜா, எஸ்.டி.சுப்புலட்சுமி, ஆதிலஷ்மி போன்றோர் நடித்துள்ளனர்.  

T M  சவுந்தரராஜன், திருச்சி லோகநாதன், A M ராஜா, N C கிருஷ்ணன், G K  வெங்கடேஷ், நாகூர் ஹனிபா,  லீலா, ஜிக்கி, ஜமுனா ராணி, ரத்னமாலா ஆகியோர் பின்னணி பாடியிருக்கிறார்கள். 

1953 ஆம் ஆண்டில் கலைஞரின் ‘நாம்’ திரைப்படத்தில் பலர் சேர்ந்து பாடிய ஒரு பாடலில் நாகூர் அனீபா இணைந்து பாடியிருக்கிறார். திரைப்படத்தின் இசையமைப்பாளர், C S ஜெயராமன் (கலைஞரின் இறந்துபோன முதல் மனைவியின் அண்ணன்). அது தான் அனீபா அவர்களுக்கு முதல் திரைப்படப் பாடல். இந்த குலேபகாவலி திரைப்படத்தின் முகப்புப் பாடல் (தொழுகைப் பாடல்)  நாகூர் அனீபா அவர்கள் பாடியிருக்கிறார்கள். 

அம்மா ஊரான வெளிப்பட்டிணத்தில் பிறந்து, அப்பாவின் ஊரான நாகூரில் வாழ்ந்து வந்த, அனீபா தனது ஊரான நாகூரைத் தனது பெயரின் முன்னொட்டாக வைத்துக் கொண்டார். திருவாரூரில், மாமா வீட்டிற்கு கோடை விடுமுறைக்குச் செல்லும் வழக்கம் கொண்டிருந்த அனிபா, அங்கு ஒரு நண்பரைப் பெற்றார். அவர்தான், கலைஞர். கலைஞர் 1924 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் 1925 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று பிறந்தவர். ஒரு தெருவிற்கும், ஏறக்குறைய சமவயது என்பதால், இறுதிவரை முனா கனா என்று தான், கலைஞரை அழைத்திருக்கிறார். பெரியார், பட்டுக்கோட்டை அழகிரியார், அண்ணா, கண்ணியமிகு காயிதே மில்லத் எனப் பல தலைவர்களின் அன்பைப் பெற்றவராக இருந்திருக்கிறார். நாகூரைத் தாண்டிப் பெரியார் போவதாக இருந்தால், தனது வாகனத்தில், சிறுவன் அனிபாவை ஏற்றிச் செல்வாராம். பாட வைப்பாராம். காசு கொடுப்பாராம். சிக்கனத்தை சிகரமான பெரியாரிடம் காசு பெறுவதென்பது அவ்வளவு எளிதானதல்ல.

இசைஞானி இளையராஜா முதன்முதலில் இசையமைத்து, இசைத்தட்டு வடிவம் பெற்ற பாடல் ஹனிபா பாடிய ‘தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு, எங்கள் திருநபியிடம் போய் சொல்லு, சலாம் சொல்லு’ பாடல் தான். 

இது அவரது நூற்றாண்டு ஆண்டு. நாகூர் தைக்கால் தெருவிற்கு ‘இசை முரசு நாகூர் ஈ.எம். ஹனிபா தெரு’ என்றும், சில்லடி கடற்கரைக்குச் செல்லும் சாலையில் புதுப்பிக்கப்படும் என்றும், சிறுவர் விளையாட்டுப் பூங்காவிற்கு ‘இசை முரசு நாகூர் ஈ.எம். ஹனிபா நூற்றாண்டு நினைவுப் பூங்கா’ என்றும் பெயரிட்டு அழைக்க, முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். ஏ.ஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட அவரின் குரலுடன் கூடிய பாடல் குறுந்தகட்டினையும் அவர் வெளியிட்டுள்ளார். 

ஈ.எம். ஹனிபா, திமுகவின் ஒரு அங்கம். திமுகவின்  போராட்டங்களில் சிறை சென்றவர். தமிழகச் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் பணியாற்றியவர். திமுகவின் பரப்புரைப் பாடகராக இருந்தவர். அவரின் “அண்ணா அழைக்கின்றார்” பாடலைக் கட்சி கடந்தும் கேட்கலாம். இஸ்லாமியப் பாடல்களின் முகவரியாகவே நம் நினைவில் தோன்றும் அவரின் ‘இறைவனிடம் கையேந்துங்கள்’ மதம் கடந்தும் கேட்கலாம். உன் மதமா என் மதமா பாடல் சமய நல்லிணக்கத்திற்கான ஆகச்சிறந்த பாடல்.

இந்தப்பாடல் கூட, அரேபிய இரவுகளைப் படமாக எடுத்திருந்தாலும் ‘இந்து முஸ்லீம் ஒற்றுமையோடு இன்புற வேண்டும் நாயகமே’ என உள்ளது சிறப்பு.

பாடியவர்கள் இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபா, எஸ்.சி.கிருஷ்ணன். 

ஜெயமே பெறவே ஜெகமே புகழவே 

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்

நாயகமே நபி நாயகமே 

நலமே அருள் நபி நாயகமே

நாடாளும் மன்னர் நீடூடி வாழ 

நலமே அருள் நபி நாயகமே

இணையில்லா எங்கள் பாதுஷா -பிறந்த 

இன்ப நாளிலே நாயகமே நபி நாயகமே

இந்து முஸ்லீம் ஒற்றுமையோடு 

இன்புற வேண்டும் நாயகமே

அறியாமை இருள் நீங்கி -இன்ப ஒளி 

அடைய வேண்டும் நபி நாயகமே

நாயகமே நபி நாயகமே

அன்பின் இதயமே காணிக்கை செய்தோம் 

ஆண்டவனே நாயகமே நபி நாயகமே….

இப்படிப் பாடல், நீண்ட வரிசையில் வரும் ஒட்டகங்கள் என அரேபிய வாசனையுடன் திரைப்படம் தொடங்குகிறது. 

அன்று மன்னருக்குப் பிறந்தநாள் எனப் பரிசுகள் குவிகின்றன. இன்னொருபுறம் ஒரு சிற்றூரில் ஒரு அம்மா ‘mind voice’ என உரக்கக் கடவுளை வேண்டுகிறார். தான் அதில் கலந்து கொள்ள இயலவில்லையே எனப் புலம்புகிறார். அதைக் கொண்டு, அவர் தான் மன்னரின் மனைவி; தான் தான் இளவரசன் என நமது நாயகன் தாசன் அறிந்து கொள்கிறார். இப்போதே மன்னரைப் போய்ப் பார்க்கிறேன் எனக் கொதிக்கிறார் தாசன். அம்மா மறுத்து அதற்கான காரணத்தைச் சொல்கிறார்.  

பல காலம் குழந்தையே இல்லாமல் இருந்ததால், இவரே மன்னருக்கு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வைக்கிறார்.அதன்பிறகு இருவருமே கருவுறுகிறார்கள். இப்போது இவரை வெளியேற்ற இளைய மனைவி திட்டமிடுகிறார். முதல் மனைவியின் மகனை மன்னர் பார்த்தால் அவருக்குக் கண் போய்விடும் எனச் சோதிடர் சொன்னதாக இரண்டாவது மனைவி புரளி கிளப்பி விட, இவர்கள் விரட்டப் பட்டிருக்கிறார்கள்.

நாடு, அனைத்து வளமும் கொண்டு நிறைவாக இருக்கிறது என்றாலும், காட்டு விலங்குகளால் மக்கள் துன்பப் படுகிறார்கள் என மக்கள் பிரதிநிதி சொல்ல, மன்னர் வேட்டையாட காட்டுப்பகுதிக்கு வருகிறார். 

அதே காட்டுப் பகுதியில் தான் முதல் மனைவியும் மகனும் இருக்கிறார்கள் என்பது இரண்டாவது மனைவிக்குத் தெரியும். அதனால், குடும்பத்தை மன்னர் சந்தித்து விடக்கூடாதென, தனது மூன்று மகன்களையும் அனுப்பி வைக்கிறார். 

மன்னர் புலியிடம் சிக்கிக் கொள்ள, காப்பாற்றுபவர் வேறு யாருமல்ல; நாயகன் தான். ஆனால் எதோ கண்ணில் விழுந்ததால், மன்னரின் பார்வை போய்விடுகிறது (இது நம் நாட்டுக் கதை இல்லை; அரேபிய இரவுகள் கதை. அரேபிய நாட்டிலும் சோதிடம் இருந்திருக்கிறது என்றால், பொய்ச்சோதிடம் கூட பலித்துமிருக்கிறது என்பது வியப்பு தான்). 

தாசன் எல்லையைத் தாண்டியதாகக் கைது செய்யப்பட, “நான் எல்லையைத் தாண்டவில்லை; அவர் தான் எங்கள் எல்லைக்குள் வந்தார்;  நான் பார்க்காதிருந்திருந்தால் மன்னர் உயிரையே இழந்திருப்பார்” எனத் தன் வாதத்தை வைக்கிறார், தாசன். ‘விஷச்செடியின் பால் கண்ணில் பட்டிருக்கலாம்; அதற்கு மருந்து தேடுங்கள்’ என மன்னரிடம் கூறுகிறார். பகாவலி நாட்டில் இருக்கும் குலே மலரைக் கொண்டு வந்து, அதன் சாற்றைக் கண்ணில் விட்டால், சரியாகும் வாய்ப்பு உண்டு என மருத்துவர் சொல்ல, அவர் புறப்படுகிறார். அவருக்குப் பதில் பிணையாக அவரது அம்மா சிறையிலடைக்கப் படுகிறார். 

இளைய ராணியின் மூன்று மகன்களும், தாங்கள் கண்டுபிடித்தால், தங்களுக்கு  நல்லது எனப் புறப்படுகிறார்கள். 

வழியில் குல்லாமு (சந்திரபாபு), தாசனுக்கு நண்பராகிறார்.  சூதாட்டம் மூலம், இளவரசர்கள், மன்னர்களை ஏமாற்றிப் பணம் பறித்து அவர்களை அடைமையாக்குகிறார், ல. பே (டி ஆர் ராஜகுமாரி) என்ற பெண். அப்படி ஏமாந்தவர்களில், தாசனின் அண்ணனும் (சிற்றன்னை மகன்) ஒருவர். அதனால் தாசன் சூதாட்டத்தில் கலந்து சூழ்ச்சியை முறியடிக்க முயலுகிறார். தாத்தா வேடம் பூண்டு வந்து வெற்றி கொள்கிறார். இந்தக் காலகட்டத்தில் தாசனின் அண்ணன்கள் அனைவரும் சிறைப்பட்டு விட்டனர். இதற்கெல்லாம் காரணம் சுக்குர் (தங்கவேலு) எனத் தெரியவருகிறது. லக்பேஷா (ல. பே,)  தாசன் இருவரும் காதலிக்கிறார்கள். 

லக்பேஷா, மேலும் இரு சகோதரிகள் என மூன்று பேர் மன்னரின் பிள்ளைகள். அரசாட்சி மூத்த சகோதரி பகாபலியிடம் போகிறது. அவர் கடுமையாக நடந்து கொண்டதால், தங்கைகள் வெளியில் வருகிறார்கள். அவர்கள் இருவரும் கூட ஒரு நேரத்தில், பிரியும் சூழ்நிலை உருவாகிறது. 

தாசனும் லக்பேஷாவும் இப்போது மலரைத் தேடிப் போகிறார்கள். வழியில் காட்டுவாசிகளிடம் அகப்பட்டுக் கொள்கிறார்கள். அங்குத் தங்கை மெக்மூதா இருக்கிறார். அவர் இவர்களைக் காப்பாற்றுகிறார். இப்போது அனைவரும் இணைந்து ஒரு சத்திரத்தில் போய்த் தங்குகிறார்கள். இவர்களை சத்திரத்தில் ஒப்படைத்துவிட்டு, தாசனும், குலாமும் மலரைத் தேடிச் செல்கிறார்கள். 

அந்த நாட்டில் ஆண்கள் அனைவரும் பெண்களுக்கு அடிமை. தாசன், அரசி வைத்த வாள் போட்டி, அறிவுப்போட்டிகளில் வெல்கிறார். புலியை அடக்குகிறார். 

பூவும் கிடைக்கிறது. மூன்று சகோதரிகளும் இணைகிறார்கள்.  சிற்றன்னை மகன்கள், பூ இருந்த பெட்டியைத் திருடிக் கொண்டு வந்து மன்னரிடம் பெட்டியைக் கொடுக்கிறார்கள். உள்ளே பூ இல்லை. அவர்களின் சதித்திட்டம் அறிந்து, லக்பேஷா எடுத்து வைத்துக் கொண்டு வந்து கொடுக்கிறார். மன்னரின் கண்பார்வை வருகிறது. அனைவரும் இணைகிறார்கள். தாசன் சகோதரிகள் மூவரையும் மணக்கிறார். அரசராகிறார்.

அவர் செய்யும் தானமும் தருமமும் சுய விளம்பரத்திற்கா? எனக் கேட்பது முதல் பல இடங்களில் உரையாடல் சிறப்பாக இருக்கிறது. 

இறுதியில் நடக்கும் அறிவுக்கான தேர்வில், 

இன்பம் எங்கே இருக்கிறது- மக்களுக்குத் தொண்டு செய்வதில் 

அவனன்றி ஒரு அணுவும் அசையாது- அனுபவம் முந்தியது வேதம் பிந்தியது 

அப்படியென்றால்?

“ஆன்றோர்கள் முதுமொழியைக் கேட்டு முடிவுக்கு வரும் ஆஸ்திக பெரியோர்களுக்கு அவன் ஆண்டவன்; சிந்தித்துப் பார்த்துச் சீர்தூக்கிக் கொள்ளும் நாத்திகப் பெரியோர்களுக்கு அவன் ஒரு அறிவாளி. 

உலகத்தை வெறுத்தவன் ஞானி அல்ல; உலகத்தை உணர்ந்தவன் தான் ஞானி.

விதியை வெல்ல முடியும் மதியை வெல்ல முடியாது. ஒரே தவற்றைப் பணக்காரன் செய்தால் அவன் விதி என்கிறது; ஏழை செய்தால் அகம்பாவி என்கிறது.  விதி என்பது சந்தர்ப்பம் என்ற உருவில் சிலருக்கு உதவி செய்கிறது. சிலருக்குப் பாதகத்தைச் செய்கிறது. ஆகையால் அனுபவத்தால் கண்ட அறிவு தான் மதி. அந்த மதியால் வகுக்கப் பட்ட சட்டம் தான் விதி. அதனால் தான் அறிவுக்குக் கட்டுப்பட்ட விதியை வெல்ல முடியும்; மதியை வெல்ல முடியாது” என்றேன்.  

இப்படி இஸ்லாமியத் திரைக்கதை என்றாலும் நாத்திகம் தலைதூக்கியதைப் பார்க்கலாம். 

ஆடை அலங்காரத்தில் கூட பிறை நட்சத்திரம் எனச் சிரத்தை எடுத்துச் செய்திருக்கிறார்கள். விளக்குகள், அரங்கங்கள் என அனைத்தும் சிறப்பாக உள்ளன.

ஒருவர் மூன்று பெண்களைத் திருமணம் செய்வது மிகவும் இயல்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மூவரில் யாரை நாயகன் திருமணம் செய்வார் எனக் காத்திருந்த எனக்கு, மூவரையும் திருமணம் செய்கிறார் என்றதும், கொஞ்சம் ஏமாறமாகத்தான் இருந்தது. 

மெல்லிசை மன்னர்களின் இசையில் பாடல்கள் மிகவும் இனிமை. ‘மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ’  பாடல் கே.வி. மகாதேவன் கூண்டுக்கிளி திரைப்படத்திற்காக இசையமைத்தது. அத்திரைப்படத்தில் பயன்படுத்தப் படாததால் இத்திரைப்படத்தில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. 

தஞ்சை ராமையா தாஸ் எழுதிய பாடலைப் பாடியிருப்பவர்கள் சந்திரபாபு, ரத்தின மாலா 

பாராண்ட மன்னரெல்லாம் பதுங்கியிருந்த பூமியிலே – இந்த 

பச்சோந்தி கூட்டமெல்லாம் பகல் வேஷம் போடுதய்யா 

அச்சு நிமிர்ந்த வண்டி 

ஆளை குடைசாய்க்கும் வண்டி 

அநியாய வட்டியும் கேப்பாண்டி 

என் தங்கமே தங்கம் 

ஆறு மாத கடன்காரண்டி என் …தங்கம்

ஆமா சிங்கமே சிங்கம் 

யாருக்கும் அஞ்சாத வண்டி 

என் சிங்கமே சிங்கம் 

ஆலாட்டம் போட்டுக்கிட்டு, காளை போல துள்ளுதுங்கோ -அந்த வாலாட்டம் நம்மகிட்ட வேண்டாம்னு சொல்லிடுங்கோ 

ஹே போடா டங்கிரி டிங்கிரி டாவண்ணா 

நீ டாவு பண்ணாதே மூவண்ணா

டபாச்சாரி வேலை பண்ணாதே  

அஞ்சாறு பெண் பிறந்தா அரசனும் ஆண்டியடா -இதை 

அறியாம இனிமேல் -எங்கப்பா நீ 

அபிவிருத்தி செய்யாதே -இதை 

அவசியம் மறவாதே 

பப்பளப்பள பட்டுகளா 

அங்கு பறந்து போற சிட்டுகளா 

பளிங்கு போல குலுக்கிட்டு நடந்து 

பவுசைக் காட்டும் வெட்டுகளா?

நம்பவே நம்பாதீங்க இந்த உலகத்திலே 

நம்பி மோசம் போகாதீங்க 

பக்கா படிக்கு முக்கா படியா அளக்குறான் 

ஆமாம் குல்லாமு அந்த பாழாப்போறவன் 

நம்பளைக் கண்டு முறைக்கிறான்.

ஆமா குல்சாரு …

கண்ணில்லாத கபோதிய ஏய்க்கிறான்.

அந்த கட்டையிலே போவான் 

துட்டுகளையெல்லாம் ஒதுக்குறான் 

ஊரை வளைச்சி வளைச்சி உலையில் போட்டு பிழைக்குது ஒரு கூட்டம்  

உழைச்சவனை எய்ச்சு எய்ச்சு உப்புது ஒரு கூட்டம் -இங்க எல்லாத்துக்கும் இடம் கொடுக்கிற அல்லாவே 

நீயும் ஏமாத்திட்டா போட்டிடுவான் குல்லாவே 

ஆமாம் குல்லாமு ஆமாம் குல்சாரு 

P.லீலா, திருச்சி லோகநாதன் இணைந்து பாடிய பாடல் இது. 

வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே

என்னை வெற்றி பெற முடியாது நீர் கற்ற வித்தையும் செல்லாது

வீண் அகம்பாவத்தினாலே -என்னை 

அலட்சியம் செய்யாதே -இந்த 

ஜெகமே புகழும் யுவராஜனை 

மதியாமல் உளறாதே

எந்நாளும் ஆடவரை ஏளனமாய் எண்ணாதே

என்ன வேணும் துரையே 

இஷ்டம் போலே கேள் இனியே …

பன்னிரண்டு போட வேணும் 

பலித்தாலும்  ஜெயம் காணும்

ஈராறு பன்னிரண்டு ஏங்குதே உன் கண்ணிரண்டு

வீராப்பு பேசி வந்த பூரோப்பு ராஜாவை

வெட்டிடச் சொல்லு -மண் 

வெட்டிடச் சொல்லு

சூராதி சூரன் அங்கு சோம்பேறியாய் திரிந்தால்

கட்டிடச் சொல்லு -மரத்தில் 

கட்டிடச் சொல்லு

மதியை இழக்கிறார் மனப்பால் குடிக்கிறார்

தலை விதியால் கால கதியால் வந்து தனியே வாடுறார்

நிதியோடு வாழும் செல்வந்தர் யாவும் சதியால் பாபம் மாய்கிறார்

நினைவே வாழ்வின் கனவானதாலே நிலையே மாறி ஏங்குறார்

விதியால் கால கதியால் வந்து தனியே வாடுறார்

இப்பாடல் திருச்சி லோகநாதன், வெங்கடேஷ், லீலா பாடியது.

வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே

என்னை வெற்றி பெற முடியாது நீர் கற்ற வித்தையும் செல்லாது

என்ன வேணும் துரையே 

இஷ்டம் போலே கேள் இனியே ..

அன்னமே அபரஞ்சியே -என் 

ஆசையான கற்கண்டு

எண்ணம் போலவே வெற்றி காணவே 

போட வேணுமே ரெண்டு

வீணான ஆசையாலே வீழ்ச்சி பெற்ற மன்னவா

தான் என்ற கர்வங்கொண்டு தலை வணங்கும் மன்னவா

நெளிஞ்சு வளைஞ்ச அழகு ராஜா

நீ நெல்லு குத்தி ஆகனும் 

நேரத்தோடு 

குதிரைக்கெல்லாம் கொள்ளவிச்சுப் போடனும்

பியாரி ஆவோ ஹமாரா லட்டு தேரீ சலீங்கி நஹீ ஹட்டு 

மை பில்மே சதுரங் கேல்னே ஆயா ஹூம் மை ஆயா

ஐஸா ஹைதோ பைஸா ஹை கியா

சதுரங் கேலா ஆவோ பியாரே ஹை

ஓஹோ ஹோ ஹோ பியாரி ஆவோ ஹமாரா லட்டு

பந்தமுள்ள சுந்தராங்கி பகடை களிக்காந் வந்நூ ஞான்

சந்தமுள்ள ராஜன் ஞானே சொந்த மாக்கான் போகுன்னு

நாடுவிட்டு நாடு வந்நூ நசிச்சுப் போகாதே ராஜா

நஞ்நு போலுள்ள பகடைகளில் நாட்டம் கொள்ளாதே ராஜா

நருனி தலபுல சிருஷ்டி நடச்சு நுன்டென

பனி ஏமியுண்டு சர்வேஸ்வருனகு

கலநிஜம் பெருகனி கர்வாந்துடவு நீவு

பானிசத்வம் புலோ பருதுகுமையா

தஞ்சை ராமதாஸ் எழுதிய பாடலைப்  பாடியிருப்பவர் டி எம் சவுந்தரராஜன். 

மாய வலையில் வீழ்ந்து மதியை இழந்து தன்னை 

மறைந்தவர் பெரும் பாவி -மனமே 

காயாபுரி கோட்டையை கற்கோட்டையாய் எண்ணு 

கயவர்கள்வெறும் சாவி 

ஆணாய் பிறந்துலகில் மானாபிமானம் -இன்றி 

வாழ்பவன் பெரும் பாவி – மனமே 

தேனாகவே பேசும் மானார் குலத்தை நம்பி 

திரிந்தவன் வெறும் சாவி 

நேருக்கு நேரான ஆட்சி புரிந்திடும் 

நேர்மையான எங்கள் தேசமடி 

யாருக்கும் அஞ்சாத வெள்ளைத் தாடி- இந்த 

பேரைச் சொன்னாலே புரியுமடி 

வித்தார கள்ளியெல்லாம் விறகு வெட்ட போகையிலே 

கத்தாழ காட்டுக்குள்ளே கரடி வந்து துள்ளுதடி -வெள்ளை  

கரடி வந்து துள்ளுதடி -போடு 

பாஷாணம் குடிச்சவனும் பஞ்ச கோலம் ஆவணனும் 

காஷாய வேஷமெல்லாம் கண்ணுக்குள்ளே காணுதடி -போடு 

பாடலைப்  பாடியிருப்பவர் டி எம் சவுந்தரராஜன்.

கையைத் தொட்டதும் மெய்யை சிலிர்க்குதே 

காதலின் வேகம் தானா -அந்திக் 

காலத்தின்  யோகந்தானா?

அநுராகத்தின் யோகந்தானா?

தெய்வீக காதல் கனிந்திடும் தேகத்திலே ஒரு சக்தியுண்டு -அதைத் தேடி சித்தி பெற்று விட்டால்- இந்த 

லோகத்திலே பெரும் முக்தியுண்டு- அதைத் 

பழுத்த பழம் ஆசைப்பட்டு- சும்மா 

பாசாங்கு போடாதே வெட்கங் கெட்டு 

களைத்துப் போன காலத்திலே -இங்கே 

கல்யாண மாப்பிள்ளை போல வந்து 

பழுத்த பழம் தித்திக்கும்டி- இந்த 

பாழும் காயெல்லாம் புளிக்குமடி 

அழுத்தமாகப் பேசாதேடி- பெண்ணே 

அத்தனையும் இளம் ரத்தமடி 

குடுகுடு வயசிலே கும்மாளமா நீ போடுறே -சின்ன 

குழந்தை போலவே அங்கையும் இங்கேயும் ஓடுறே 

கடுகடுவெனவே பேசியே கேவலம் பண்ணாதே – அன்னக்காவடி சத்திரம் சாவடியாக எண்ணாதே 

திடுதிடுவெனவே வந்தது ஏன் இங்கு நில்லாதே 

நடுத்தெருவில் தள்ளியே கதவை சாத்துவேன் துள்ளாதே 

படபடவெனவே பகடையாடவே வந்தேனே! என் செய்தே

அனுபவித்த உடனே உன்னையும் திருமணம் செய்வேனே 

கட கட கிழவா நடக்காது இந்த வயதினிலே- என்னை 

யாரும் ஜெயிக்கவே முடியாது இந்த பகடையிலே  

ஜிக்கி பாடிய புகழ்பெற்ற பாடலிது 

நான் சொக்கா போட்ட நவாபு 

செல்லாது உங்க ஜவாபு 

நிக்கா புருஷன் போலே வந்து

ஏமாந்தும் என்ன வீராப்பு?

கண்டாலே மயங்கிடுவார்

கத்திரி மீசை ராஜாவே 

அண்டாவை விளக்கி விளக்கி

அசந்து போன கூஜாவே

சூராதி சூரர்களே வீராதி வீரர்களே 

சொல்லாமல் ஓடிப்போங்க

குல்லாப் போட்ட ராஜாவே!

சொக்கட்டான் ஆசையினாலே

சொக்கியே வீழ்ந்தவரே 

உள்ளதை நான் சொல்லப் போனால்

உங்களுக்கு ஏன் பொல்லாப்பு 

எட்டாத கனியை நம்பி

ஏங்கி ஏங்கி மயங்காதே

எந்நாளும் பெண்ணாசையால்

ஏமாந்தே அலையாதே 

ஜோரான ஆண்சிங்கம் போலே

துள்ளியே வந்தவரே

லோகத்திலே மாதர் முன்னே

சூரத்தனம் செல்லாது

ஜமுனா ராணி அவர்கள் பாடிய பாடல் இது. ஜமுனா ராணி, ஆந்திர மாநிலத்தைச் சார்ந்தவர். ஏழு வயதில் தியாகய்யா என்ற தெலுங்குத் திரைப்படத்தில் முதன் முதலில் பாடியிருக்கிறார். தமிழில் கல்யாணி என்ற திரைப்படத்தில் சக்சஸ் சக்சஸ், ஒன் டூ திரீ என இரு பாடல்களைப் பாடி அறிமுகியிருக்கிறாய். இதே ஆண்டு (1955) வெளிவந்த ‘வளையாபதி’ திரைப்படத்தின் ‘குலுங்கிடும் பூவிலெல்லாம்”  பாடலைப் பாடியிருக்கிறார். மிகவும் இனிமையான பாடல் அது. அத்திரைப்படம் இணையத்தில் இல்லை. 

6,000 பாடல்களுக்கும் மேல் பாடியிருக்கும் ஜமுனா ராணியை, ஆசையும் நேசமும் என்ற இந்தப் பாடல், புகழின் உச்சிக்கு எடுத்துச் சென்றது. இவருக்கும் பாடகி ஜிக்கி இருவருக்கு ம் இடையிலிருந்த நட்பு என்பது அவரது ஒவ்வொரு நேர்காணலிலும் வெளிப்படும். 

தாகமும் சோகமும் தனித்திடும் காலமடா

தாபமும் கோபமும் காணும் நிதானமடா 

ஆசையும் என் நேசமும் 

இரத்தப் பாசத்தினால் ஏங்குவதைப் பாராயடா 

என் ஆவலும் நிறைவேறிடும்

என் ஆருயிரே நீ அருகில் வாராயாடா 

தாரகைச் சோலையிலே ஜாடை செய்யும் வெண்ணிலவே 

தயங்குவதேனோ மாறாது உன் கனவே 

மனம் போலே வாழ் நாளிலே -தேன்மலர் மேலே

தென்றலைப் போலே வாழ்ந்திடுவோம்

மானம் பிரதான மென்றே ஏங்கிடும் எழில் ரோஜா

மாயையினாலே மயங்குறானே மலைராஜா

காரணமே புரியாமலே கலங்குவதேனோ

கதறுவதேனோ கவலையும் ஏன்

இப்பாடலைப்  பாடியவர் T. M. சௌந்தரராஜன். “அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்’ இங்கே ஆண்களைப் பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்” என்ற சொற்றொடர் பெண்களைக் கேலி செய்யப் பயன்படுத்தப் பட்டது. பெரியவர்கள் ஹம் பண்ணுவதைப் பார்த்திருக்கிறேன். 

பகாவாலி நாட்டிலே பகாவலி ஆட்சியிலே 

நியாயமாய் வாழவும் வழியுமில்லே 

இது அநியாயம் அநியாயம் அநியாயம்

அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம் 

இங்கே ஆண்களைப் பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்

கனிவாகப் பேசும் பெண்கள் கையிலே

கத்தியும் ஈட்டியும் இருக்குது

கணவனைக் கண்டால் மனைவியரெல்லாம்

காளை போலவே மொறைக்குது

தனிமையாக ஒரு வாலிபன் இருந்தால் 

தர வேணும் பிரம்மச்சாரி வரி

தாலி கட்டியே குடும்பம் நடத்தினால்

அவனும் தரணும் சம்சார வரி 

இங்கு தடுக்கி விழுந்த வரி குனிந்து நிமிர்ந்தவரி

இட்டிவரி சட்னி வரி பட்னி வரி இதுபோல்

அர்த்தமே இல்லாத வரியை சுமத்தும்

பகவலி ராணி ஆட்சியிலே

ஆண்களும் வீணாய் ஏங்கி வாடுறார்

அடுப்பு வேலையாய் வீட்டினிலே

பொருத்தமே இல்லாத புதுப்புது முறைகளை

புகுத்துவதெல்லாம் நியாயமில்லே

எதிர்த்து கேட்கவும் நாதியில்லே

அவர் என்ன செய்தாலும் கேள்வியில்லே 

வாழப் பிறந்தவனை வாட்டி வதைக்க வந்த 

ஈட்டி உலகிலே கொடியை நாட்டுறார்

ஈட்டி முனையிலே கொடியை நாட்டுறார்

நிலை நாட்டுவது

ஜிக்கி பாடிய பாடல் 

கண்ணாலே பேசும் பெண்ணாலே  ஆண்கள்

தன்னாலே மயங்கும் காலமே -எந்நாளும் 

வீணில் காதல் வாழ்விலே 

கலை மான் தனியே வலை மேல் வீழ்ந்து 

கானில் ஏங்கும் கதை போல 

அலை மேல் சீறும் புயல் போல் மாறி 

நிலையே மாறும் மனம் போலெ 

மாயா உலகம் எனவே பேசி மதியே இழப்பான் சன்யாசி 

மலர் மேல் மேவும் மணம் போல் – வீசி 

மறைந்தே விடுவான் சுகவாசி.

AM ராஜா ஜிக்கி பாடிய பாடலிது. 

மயக்கும் மாலை பொழுதே நீ போ போ!

இனிக்கும் இன்ப இரவே நீ வா வா!

இன்னலை தீர்க்க வா

பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே

பசும் புல் படுக்க பாய் போடுமே

பாலூட்டும் நிலவு தேனூட்டுமே

பாடும் தென்றல் தாலாட்டுமே

புன்னை மலர்கள் அன்பினாலே

போடும் போர்வை தன்னாலே

கனியிதழ் காதல் பசி தீர்க்குமே

காண்போம் பேரின்பமே

வானிலும் ஏது வாழ்விது போலே

வசந்தமே இனி என்னாளும்

தொடரும்…

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறதுதற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.