“பசங்க பின்னாடியே திரியறியே; உனக்கு வெட்கமாயில்ல?”

அனிதா இப்படிக் கேட்டதும், அவளுக்குச் சட்டென்று கண்ணில் நீர்த் துளிர்த்தது. குரல் கம்மியது. வார்த்தைகள் வரவில்லை.

“சரி சரி உடனே அழுதுராத. என்ன சொல்லிட்டேன் இப்ப. அவனுங்க பசங்க. ஆபிஸ்லன்னா சரி பரவாயில்ல உன்னோட ஜூனியர்ஸ். இங்க டூர்லயும் அவனுங்களோடவே திரிஞ்சேன்னா, பாக்குறவங்க எல்லாரும் என்ன நினைப்பாங்க; உனக்கு இதெல்லாம் தெரியவே மாட்டேங்குது திலகா”

ஊட்டி சுற்றுலாவுக்கு சக அலுவலர்கள் அனைவரும் தத்தம் குடும்பத்தினருடன் வந்திருந்தார்கள். அனிதா தன் கணவன் மற்றும் மூன்று வயது குழந்தை அஞ்சு’வுடன் வந்திருந்தாள். திலகாவின் ஜுனியர்ஸ் நான்குபேரும் இன்னும் திருமணம் ஆகாதவர்கள். தனியே வந்திருந்தார்கள்.

குடும்பமாக வந்த எல்லாரும் குடும்பமாகச் சுற்றிக்கொண்டிருக்க, திலகா அந்தப் பசங்களுடன் பேசியபடி நடந்து வந்துகொண்டிருந்தாள். அதைப் பார்த்துதான் அனிதா இப்படிக் கேட்டாள்.

அவரவர், அவரவர் குடும்பத்துடன் அன்யோன்யமாக இருக்கட்டும் என்றுதானே, தான் இப்படித் தனியாக உள்ள பசங்களிடம் பேச வந்தது. அதற்கும் இப்படி அர்த்தமாகும் என்றால், தான் என்ன – தனித்து உலவுவதா. இவளுக்கு நிஜமாகவே புரியவில்லை.

அலுவலகத்தில் தோழி என்று பார்த்தால் இவளுக்கு அனிதாவைத் தவிர யாருமேயில்லை. எப்போதும் இவளுண்டு, இவள் வேலையுண்டு என்றுதான் இருப்பாள். அதற்காக ‘உம்மணாம்மூஞ்சி’ என்று அர்த்தமில்லை. அலுவலக சம்பந்தமாக என்றால் பேசுவாள். வீண் கதை, வெட்டிக்கதை பேசுவது கிடையாது.

அது அலுவலகத்தில், வேலைக்குச் சரி. இங்கு சுற்றுலாவில் அது ஏதோ போல இருந்தது.

அடுத்து பொட்டானிக்கல் கார்டன் போகையில் இவள் ஜூனியர் பசங்களுடன் போகாமல், அனிதா குடும்பத்துடன் இணைந்துகொண்டாள். அவர்கள் தடுக்கத் தடுக்க அனைவருக்கும்இவளே டிக்கெட் எடுத்தாள். அதற்கப்புறம் அவர்களோடு சென்ற எதற்கும் இவள் டிக்கெட் எடுப்பதை அவர்கள் தடுக்கவில்லை.

சத்யா மேமும் உடன் இணைந்துகொண்டார். அவர் இவள் வேலை சேர்வதற்கும் முன்பிருந்தே அனிதாவிற்கு நல்ல தோழி. சத்யா மேம் ஏழாவது படிக்கும் தனது மகனைக் கூட்டி வந்திருந்தார். அவரது கணவரால் வர முடியவில்லை. அலுவலக வேலை நெருக்கடியாம்.

முதன்முதலாக திலகா சென்னையில் இந்த அலுவலகத்தில் வேலைக்குச் சேர வந்திருந்தபோது, அனிதாதான் அவ்வளவு உதவினாள்.

திலகாவுக்கு சென்னையே புதிது. அலுவலகம் இன்னும் புதிது. மாமியார் வீடு, காஞ்சிபுரத்திற்கும் சென்னைக்கும் நடுவிலுள்ள ஒரு சிற்றூர். அங்கிருந்து தனிக் குடித்தனம் வந்தது, மாமியார் வீட்டிலிருந்து வெகு தொலைவு தாண்டி நகரத்திற்குள் இருக்கிற ஏரியா எனும்போது, அது இன்னும் புதியதாக இருந்தது. சென்னையின் ஒவ்வொரு ஏரியாவுமே தனித் தனி ஊர்கள் போல இருந்தன.

அலுவலகத்திற்கும் வீட்டிற்குமான பாதைகள், நகரத்தின் வேகம், எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் நிற்காமல் கடந்து சென்றுகொண்டே இருக்கிற மனிதர்கள் என எல்லாமே புதிராக இருந்தன. மீறி வழி கேட்டு அதற்கு பதிலைச் சொல்பவர்களும் கையை நேரே நீட்டி, ‘5 மினட்ஸ் வாக்’ என்பார்கள். அதை அப்படியே நம்பிவிடக் கூடாது. உண்மையில், அது நமக்கு அரை மணியைத் தாண்டும்.

அப்படிச் சூழல்களில், பேருந்து நிறுத்தங்கள், வழிகள் முதற்கொண்டு, அலுவலகத்தின் விதி முறைகளில் வழிகாட்டுவது வரை, அனிதா பேருதவி புரிந்தாள்.

எப்பவும் அனிதாவும் இவளும் சேர்ந்துதான் மதியவுணவு சாப்பிடுவார்கள். உணவைப் பகிர்ந்துகொள்வார்கள். சில சமயம் சத்யா மேமும் இவர்களோடு இணைந்துகொள்வார்.

அனிதா சொல்வாள் “சத்யா மேம், திலகா தந்தாள்னு வச்சுக்கங்களேன், விசத்தைக் கூடச் சாப்பிடலாம். அவ்ளோ ஸ்டெரில்டா இருக்கும்; டேஸ்டாவும் இருக்கும். அன்னிக்கு பாவக்காய் ப்ரை கொண்டு வந்திருந்தா. அவ்ளோ டேஸ்ட்டு. நான் வாழ்க்கையிலயே அன்னிக்குதான் மொதோ மொதோ பாவக்காய டேஸ்ட் பண்ணேன் தெரியுமா. இப்ப நெனச்சாக் கூட நாக்குல எச்சி ஊருது.

அப்புறம், சாம்பார் சாதத்துக்கு வெள்ளறிக்காய்த் தயிர்ப் பச்சடி கொண்டுவருவா பாருங்களேன். நான் கொண்டு வந்தததை அவகிட்ட தந்திட்டு, அப்படியே அவளுடையதை நான் எடுத்துக்குவேன். அவ்ளோ நல்லா செய்வாள். அதும் அவளோட சாம்பார். அட, அட.. தேன் மாதிரி இருக்கும்”.

அதைத்தான் இவள் கணவன் ‘மனுசன் திம்பானா இதை’ என்று தட்டை எகிறி அடிப்பான்.    இவளுக்கு கல்யாணமாகி மாமியார் வீடு வந்ததே ஒரு தீவில் விட்டதுபோல என்றால், தனிக்குடித்தனம் என்பது ஆட்கொல்லித் தீவில் விட்டதுபோல இருந்தது.

கணவன் எங்கு, யாரிடம், எதற்குப் பிரச்சினை என்றாலும் அதை இவளிடம்தான் காட்டுவான். எப்போது எதற்கு ஏன் அடி விழும் என்று தெரியாது. அவனது போதும், போதாமைகள், அறிவு அறிவின்மைகள் எல்லாவற்றிற்கும் இவள்தான் பலிகடா. எதற்கெடுத்தாலும் அடித்து உதைத்தான்.

ஒருமுறை அவன் இவளை வயிற்றில் உதை உதையென உதைத்ததில் ‘காப்பர் டி’ கழன்று வெளியே வந்துவிட்டது; இவளுக்கு யாரிடம் இதை என்னவென்று சொல்லி, உதவி கேட்பது என்று புரியாமல் குழப்பத்துடன் தயங்கித் தயங்கி அனிதாவிடம் சொன்னாள். அனிதா பதறிப் போனாள். அவளறிந்த மகப்பேறு மருத்துவரைப் பரிந்துரைத்தாள்.

மருத்துவர் இவளுடலைப் பரிசோதனை பண்ணியதும் அதிர்ந்துவிட்டார்.

‘இது போலீஸ் கேசும்மா. நான் பார்க்க மாட்டேன். உன் ஹஸ்பெண்ட்டை வரச் சொல்லு’.

இவள் அழுதாள்.

இவள் அழுகையைச் சகிக்காமல், முதலுதவி செய்து, மருந்து எழுதித் தந்தார்.

“நீ அழகா இருக்கற. படிச்சிருக்கற. வேலைக்குப் போய் சம்பாரிக்கிற. எதுக்கு இப்படிப்பட்ட மனுசனோட வாழ்ற?”

“….”

“குழந்தைக்காகவா? இப்படி சூழல்ல குழந்தை வளர்றது நல்லதுன்னு நினைக்கிறியா? நீ அடி வாங்கறதப் பாத்து, குழந்தை உன்னை மதிக்குமா? இல்ல, உன்னைப் பாவம் பாத்து, அதுவும் பயந்து நடுங்குமா? இது ரெண்டுமே குழந்தைக்கு நல்லதில்லையே”

“….”

“இப்படியே சகிச்சிக்கட்டிருந்தேன்னா, ஒருநாள் இல்ல ஒருநாள் உன்னைய கொலை பண்ணிடப் போறான். பாத்து”

கடைசியில், அந்த மருத்துவர் சொல்லியபடிதான் ஆயிற்று. இன்னொரு முறை சண்டையில் இவள் தலை உடைய, நல்ல வேளையாக வீட்டிற்குள்ளிருந்து வெளியே ஓடி வந்துவிட்டாள். உடனடியாக, பக்கத்துவீட்டார் பாதுகாப்பில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். வீட்டிற்குள்ளேயே இன்னும் கொஞ்ச நேரம் தாமதித்து இருந்திருந்தாள் என்றால் அடி வாங்கிச் செத்துதான் போயிருப்பாள். அக்கம் பக்கத்து வீட்டார் போலீஸில் புகார் தர,பிறகு அவள் கணவன், அந்த வீட்டுப் பக்கமே வருவதில்லை.

அடிவயிற்றில் எட்டி உதைத்து காப்பர்-டி கழன்று விழுந்த சம்பவத்திற்குப் பிறகு, இவளுக்கு மாதாந்திர உதிரப் போக்கில் கடுமையான மாற்றம் ஏற்பட்டது. எப்போது வேண்டுமானாலும் பீரியட்ஸ்’ வரும். வந்தால், பத்து பதினைந்து நாட்கள்  தொடர்ந்து கடுமையான உதிரப் போக்கு இருக்கும். ஒரு நாளைக்கு நான்கு, ஐந்து பேட் மாற்ற வேண்டி இருக்கும்.  முப்பத்து மூன்று வயதிலேயே ப்ரீ மெனோபாஸ் சிம்டம்ஸ்’ வரத் தொடங்கியது. தலை நரைத்து, முகம் ரத்த சோகையால் வெளிரத் தொடங்கிற்று.

இப்போது டூருக்கு வந்த இடத்திலும் பீரியட்ஸ் வந்துவிட்டது. நல்லவேளை பேட்’ எல்லாம் தயாராக எடுத்துவைத்திருந்தாள் என்பதால் பிரச்சினை இல்லை.

லுவலர்கள் அனைவரும், சென்னையிலிருந்து பேருந்தில் இரவெல்லாம் பயணித்து, விடிகாலை ஊட்டி வந்ததும் அவரவர் அறைகளுக்குச் சென்று லேசாய் ஒரு தூக்கத்தைப் போட்டு, வெளியே செல்லலாம் என்று திட்டம். மதியம்வரை எல்லாரும் சேர்ந்து சுற்றுவது, மதியத்திற்கு மேல் தனியாக அவரவர் வாங்க விரும்பும் பொருட்களை வாங்கப் போய்விட்டு, இரவு உணவிற்கு ஹோட்டலில் சந்திக்கலாம் என்றும் திட்டமிட்டிருந்தார்கள்.  

இவளுக்கும் சத்யா மேம் அவரது பையன்  மூவருக்கும் ஒரு அறை. அதற்குப் பக்கத்து அறை அனிதா குடும்பத்திற்கு. இவளும் சத்யா மேமும் அவர் பையனும் தயாராகி அனிதாவின் அறைக்குச் சென்றார்கள்.

எல்லாரும் கிளம்புவதற்கு இன்னும் நேரம் இருந்தது.

“அதுவரை செஸ் விளையாடலாமா, யாருக்கு விளையாடத் தெரியும்?”என்று அனிதாவின் கணவர் ரமேஷ் கேட்டார்.

ரமேஷை அனிதாவுக்கு கல்லூரிக் காலத்திலிருந்தே பழக்கம். 2001இல் ட்வின்ஸ் டவர் சம்பவத்தின்போது, அமெரிக்காவிலிருந்து வெளியேறி இந்தியாவில் குடியேறிய இந்தியர்களில் அவரும் ஒருவர். பிறகு அனிதாவுக்கும் அவருக்கும் திருமணம். தனியே வெளிநாட்டில் இருந்தது, வாழ்வின் அநித்தியம் பற்றிய சிந்தனை என்று அவர் மிகத் தன்மையான மனிதராக இருந்தார். எல்லாரிடமும் சகஜமாகப் பழகக்கூடியவர்.

வேலைக்குப் போகிற மனைவிக்காக வீட்டு வேலைகளில் உதவுவது தொடங்கி நல்ல கணவனாகவும்,மகளைப் பொறுப்பாகப் பார்த்துக்கொள்கிற சிறந்த தந்தையும் கூட.

அனிதா சொல்லியிருக்கிறாள். அவளுடையது காதல் திருமணம். அவளுக்குச் சமைக்கத் தெரியாது. சமைக்கவே பிடிக்காது. அது ரமேஷுக்கு ஒரு பிரச்சினையே அல்ல. ‘செய்யப் பிடிச்சதைச் செய்; செய்யப் பிடிக்காததை என்கிட்ட விட்ரு; நான் பாத்துக்கறேன்’ என்பாராம். அவரே சமைப்பாராம்.

பிறகு அனிதா, தன் அம்மா அப்பாவுடன் ராசியானதும், அம்மா வீட்டின் அருகிலேயே குடிபோய்விட்டாள். அவள் அம்மாவே இவர்களுக்கும் சேர்த்து சமைத்துவிடுவார். குழந்தையையும் பார்த்துக்கொள்வார். அனிதா சொல்வாள் அவள் அப்பாவிற்கு சொற்ப சம்பளம்தான் என்பதால், தனது சம்பளம் வந்ததும் முதல் செலவு அவள் அம்மா வீட்டிற்கு மளிகை வாங்குவதும், அம்மாவின் சர்க்கரை நோய்க்கு மருந்து வாங்குவதும்தான் என்று.

ரமேஷ் நல்ல நகைச்சுவை உணர்வுடையவர்.

ஒருமுறை திலகா காய்ச்சலில் விழுந்தபோது, அனிதா மாலை அலுவலகம் முடிந்து இவள் வீட்டிற்கு ரமேஷுடன் வந்தாள். ‘ஏதாவது சாப்பிட்டியா’ என்று கேட்டு, டீ போட்டுத் தந்தாள்.

இவளுக்கிருந்த காய்ச்சலில் அதைக் குடித்தவுடன் வாந்தி எடுத்தாள்.

உடனே ரமேஷ்,

‘அனிதா, டீ போட்டுத் தந்து வாந்தியெடுக்காத ஒரே ஆள் நான்தான்’ என்று ஜோக்கடித்தார்.

இவளுக்குக் காய்ச்சலின் களைப்பும் மறந்து சிரிப்பு வந்துவிட்டது.

த்யா மேமுக்கு செஸ் விளையாடத் தெரியாது; அனிதாவுக்கு அந்த விளையாட்டில் துளி கூட விருப்பம் கிடையாது; சத்யா மேமின் பையனும் திலகாவும் ஓரணி; ரமேஷும் அஞ்சுவும் ஓரணி என விளையாண்டார்கள். உண்மையில், திலகாவும் ரமேஷும்தான் ஆட்டத்தை ஆடினார்கள். அவர் கல்லூரிக் காலத்தில் ஸ்டேட் சேம்பியனாம்.

திலகா சின்ன வயதில் விளையாட்டின் விருப்பத்தில் விளையாடியவள். போட்டிகளில் ஏதும் கலந்துகொண்டதில்லை. ஆனால், விளையாடக் கற்றுக்கொள்ளும்போது, கற்றுக்கொடுத்தவர், ‘27 ஸ்டெப்ஸ்’ என்கிற முறையில் கற்றுக்கொடுத்திருந்தார். அந்த 27 மூவ்களைப் பயின்று தேர்ந்தவர்களைத் தோற்கடிப்பது கடினம்.

ரமேஷ் முதலில் தான் ஸ்டேட் சேம்பியன் என்னும் பெருமையோடு ஆடத் தொடங்கியவர், திலகாவின் சிற்சில மூவ்களில் திகைக்கத் தொடங்கினார்.

ஆட்டம் முடியும் கட்டத்தில், அலுவலர்கள் எல்லாரும் வெளியே செல்லத் தயாராகி, ஆட்டத்தின் முடிவைக் காணக் காத்திருந்தனர். மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு, ஆட்டம் ‘ட்ரா’வில் முடிந்தது. எல்லோரும் மகிழ்ச்சியில் சந்தோஷக் கூச்சலிட்டனர்.

“ரமேஷைத் தோற்கடிக்கவே முடியாது. நீ ட்ரா பண்ணிட்டியே. கெட்டிக்காரி” என்று அனிதா இவளைப் பாராட்டினாள்.

தியம் சாப்பிட்டவுடன் நேரம் ஆக ஆக, அனிதாவின் மகள் அஞ்சுவுக்கு தூக்கம் கண்ணைச் சுழற்றியது. காலையிலிருந்து அலைந்த அலைச்சல். ரமேஷ் அவளைத் தூங்க வைக்க ஹோட்டல் போவதாகவும், ஆபிஸில் எல்லாருடனும்தான் வந்திருப்பதால், கவலையில்லாமல் பார்க்க வேண்டியதெல்லாம் பார்த்துவிட்டு, வாங்க வேண்டியதை எல்லாம் வாங்கிவிட்டு வாருங்கள் என்று சொல்லிப் போனார். அஞ்சுவையும் தூக்கிக்கொண்டு நடப்பது, விழித்திருந்தாலுமே அவள் ஓடும் ஓட்டத்திற்கு அவளை மேய்ப்பது எல்லாம் கடினம் என்பதால், அனிதா அவர்கள் இருவரையும் ஹோட்டலுக்குப் போகச் சொல்லிவிட்டாள்.

ரியைச் சுற்றி நடந்துகொண்டிருக்கும்போது திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சரியான மழை. எல்லாரும் சாலையோர பஜ்ஜிக் கடைகளில் தஞ்சம் புகுந்தார்கள். சுடச் சுட பஜ்ஜி, கொதிக்கக் கொதிக்க டீ என ஊட்டி மழையின் குளிருக்கு இதமாக இருந்தது.

திலகாவுக்கு ‘பேட்’ முற்றிலும் நனைந்து போயிருந்ததை உணர முடிந்தது. காலை செஸ் விளையாடிய ஜோரில் அவசரத்திற்காக என்றுகூட இவளது கைப்பையில் பேட் எடுத்து வைக்க மறந்துவிட்டாள். மேலும், ஹோட்டலிலிருந்து அரை மணி தூரக் கடைகள்தான் என்பதால் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

ஹோட்டல் ரூம் சாவி சத்யா மேமிடம் இருந்தது. கேட்டாள். அவர் தன் பையில் தேடினார். இல்லை. பிறகு நினைவு வந்தவராக, “ம்.. பூட்டிட்டு அனிதா ரூமுக்கு வந்தமா… கிளம்பும்போது அனிதாகிட்ட கொடுத்தேன்” என்றார்.

அனிதா, “கொஞ்ச நேரம்தான். தெரியாத ஊர்ல நீ எதுக்குத் தனியா போற. எல்லாம் பக்கத்துப் பக்கத்து கடைதான். நாம வாங்க வேண்டியதெல்லாம் வாங்கிட்டு சேர்ந்தே போயிடலாம்” என்றாள்.

இவளுக்கும் அது சரியெனப்பட்டது. மழைக்கு வேறு சீக்கிரமே இருட்டத் தொடங்கிவிட்டது.

அனிதா கைத்தறி ஆடைகள் சிலவற்றை வாங்கினாள். அஞ்சுவிற்கு ஒரு சாப்பாட்டுப் பையும், அவளுக்குச் சில சங்கிலிகளும் வளையல்களும் வாங்கினாள். ரமேஷுக்கு ஒரு நல்ல ஸ்வெட்டரே இல்லை என்று சொல்லி, ‘அவர் நிறத்திற்கு இது எடுப்பாக இருக்கும்’ என்று ஒரு ஆப்பிள் சிவப்பு முழுக்கை ஸ்வெட்டர் எடுத்தாள். லெதர் செப்பல் நன்றாக இருக்கிறது, குறைந்த விலையிலும் இருக்கிறது என்று சொல்லி, இரண்டு ஜோடி செப்பல் வாங்கினாள்.

சத்யா மேம் மட்டும் அனிதாவுக்குச் சளைத்தவரா என்ன. அவர் அவரது பங்கிற்கு ஊட்டி வறுக்கியும், கேரட்டும், ஹோம் மேட் சாக்லேட்ஸ்-ம் வாங்கினார்.

அனிதா கடையை விட்டு பாதி தூரம் போய், வேறு கடையில் நிற்கையில், திரும்பவும் வறுக்கிக் கடைக்குச் சென்று, ‘ஊட்டி வறுக்கி, டீயில் முக்கிச் சாப்பிட நல்லாருக்கும்’ என்று வாங்கினாள்.

ஊட்டி கேரட் அவள் அம்மாவுக்குப் பிடிக்கும் என்று அதற்கொரு நடை போனார்கள்.

“திலகா, உனக்கு எதுவும் வாங்க வேண்டாமா?”

இவளுக்கு எப்படா ஹோட்டலுக்குப் போவோம் என்று மட்டும்தான் இருந்தது.

இரத்தம் காலோடு வடிவதுபோல உணர்வு. இவளுக்குச் சாதாரணமாக எப்போது பீரியட்ஸ் என்றாலும் கணுக்கால் தொடங்கி பாதம் முழுவதும் வலி பின்னியெடுக்கும். வலி என்றால் சாதாரண வலியில்லை. எலும்பெல்லாம் உடைந்து நொறுங்கியது போல வலிக்கும். இந்த உடம்பின் மொத்த எடையையும் தாங்க முடியாமல் கணுக்காலோடு பாதம் பிய்ந்து போகப் போவது போல வலிக்கும்.

இனி அடுத்து ஓரடி கூட எடுத்து வைக்க முடியாது என்கிற நிலையில் திலகா, அனிதாவிடம் கெஞ்சினாள்.

“அனிதா ப்ளீஸ், ரூம் சாவி குடு. நான் ஹோட்டலுக்குப் போறேன்”

“இரு இன்னும் கொஞ்சம்தான். ப்ளம்ஸ் பழம் மட்டும் வாங்கிட்டுப் போயிடலாம்”

“அனிதா… ப்…ளீஸ்”

“அய்ய, என்ன நீ சின்னப் பிள்ள அடம்புடிக்கிற மாதிரி அடம்புடிக்கிற. இரு தர்றேன்”

அனிதா சொன்னாளே ஒழிய சாவியைத் தரவில்லை.

ப்ளம்ஸ் பழத்திற்கு அப்புறம் பேரிக்காய்க்கு என்று இரு நடைகள்.

ஓரிடத்தில் இனியும் முடியாது என்று திலகா அசையாமல் நின்றுவிட்டாள்.

சரியென்று ஆட்டோ எடுத்தார்கள். கடைகளின் வெளிச்சம் தவிர வழி எங்கும் கருகும்மிருட்டு.

ஆட்டோவின் குலுங்கல்கள். அப்பாடா, ஒரு வழியாக ஹோட்டல் வந்து சேர்ந்ததும்தான் திலகாவுக்கு மூச்சு வந்தது.

ஹோட்டலுக்குள் சென்று, அறைக்கு அருகில் வரும்போது அவள் பின்னே வந்த அனிதா சொன்னாள்.

“ஆமா, அச்சச்சோ உன் ட்ரெஸ்லாம் கறையா இருக்கு திலகா”

இவளுக்குக் கண்ணீரே வந்துவிட்டது. அவளிடம் சாவியை வாங்கிக்கொண்டு வேக வேகமாகத் தன்னறைக்கு ஓடினாள்.

உடை மாற்றிக்கொண்டு, பாத்ரூமிலிருந்து வெளியே வருகையில், சத்யா மேமும் அனிதாவும் பேசிக்கொள்வது காதில் விழுந்தது.

“ஏ பாவம் அவள்….அப்பவே அவளப் போகச் சொல்லி, நீ சாவி தந்திருக்கலாம்ல” – சத்யா மேம்.

“ம்.. சாவி தந்திருந்தா.. ரமேஷோட வந்து செஸ் வெளையாடியிருப்பாள். ஏற்கெனவே ஹஸ்பெண்ட பிரிஞ்சிருக்கிறாள். அவளை எப்படி ரூமுக்குத் தனியா விட்றது” என்றாள் அனிதா.

ஃ ஃ ஃ

படைப்பாளர்

பிருந்தா சேது

சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர். ஹெர்ஸ்டோரீஸில் இவர் எழுதிய ’கேளடா மானிடவா’ என்ற தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றது. கேளடா மானிடவா, கடல், அருவி முதல் அயலி வரை, கதவு திறந்ததும் கடல், அப்புறம் என்பது எப்போதும் இல்லை, வாழ்க்கை வாழ்வதற்கே ஆகிய நூல்கள் ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடுகளாக வந்துள்ளன.