மகன் வருகைக்காக வீட்டு வாசலுக்கும் மாடி பால்கனிக்குமாக நடந்த சகாயமேரிக்கு மனம் அலைக்கழிந்தது.

”மழ வேற பெஞ்சுட்டு கெடக்கு , இந்தப் பயல இன்னும் காணோமே” என்று எண்ணுக்குத் தொடர்பு கொண்ட போது கரகரவென்று மறுமுனையில் பேசும் குரலே கேட்கவில்லை.

இரண்டு முறை முயற்சி செய்துவிட்டுப் பின், வரட்டும் என்று காத்திருந்தார். மகள் எண்ணுக்கும் அதே நிலை. ஆனால் அவள் ரயிலில் ஏறிவிட்டதாக வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்.

 ”இந்தப் பொண்ணுங்களுக்கு இருக்க பொறுப்பு சுட்டுப் போட்டாலும் பசங்களுக்கு ஒரு நாளும் வராது போல” என்று முணுமுணுத்துக் கொண்டே சமையலறையை ஒட்டினாற் போல் இருந்த அந்தப் பதினாறுக்குப் பத்து அறையைப் பார்த்தார்.

வழக்கமாக அதன் ஓர் ஓரத்தில் இருந்த அலமாரி நிறைந்திருந்த புத்தகங்களும் அருகிலிருந்த துணிமணிகளும் இல்லாதது அவரையும் மீறிக் கொண்டு ஓர் ஏக்கப் பெருமூச்சை வரவழைத்தது.

பிள்ளைகள் தன் சிறகை விரித்துப் பறக்கவே ஆசைப்படுகிறார்கள். அவர்கள் வளர்ச்சி பெற்றோருக்கு மகிழ்ச்சியையே அளிக்கிறது.

ஆனால் இந்த வெறுமை?

இந்த இன்மை ?

அதை என்ன செய்வது?

மகள் சொல்வது போல் வயதாகிவிட்டதுதான். முன் போல் ஓடியாடி வேலை செய்ய முடியவில்லைதான். ஆனால் அதற்காகப் பழகிய ஊர், வேலை எல்லாத்தையும் விட்டுட்டுப் போய் சென்னையில் சம்மணம் போட்டுக்கிட்டு இருந்தால் ஆச்சா என்று ஒரு நேரம் தோன்றும்.

மற்றொரு நேரம் அதான் ஓடி ஓடி இத்தன வருஷமா தேஞ்சாச்சு, பொண்ணும் தலையெடுத்தாச்சு , அவ சொன்னது போல அவ வேலை செய்யும் இடத்துக்குப் பக்கத்திலயே ஒரு வாடகை வீட்டைப் பார்த்து அவளுக்குப் பொங்கிப் போட்டுக்கிட்டு வீட்டு வேலய செஞ்சிகிட்டு அக்கடான்னு இருக்கலாமேன்னு தோணும்.

இந்தப் பய படிப்பு முடியுற வரைக்கும் நமக்கு யோசிக்க நேரம் இருக்கு. கடைசி காலத்தில் உயில் எழுதும் நேரத்தில் குடும்பச் சொத்து தன் காலத்துக்குப் பின், தன் மருமகளுக்கும் அவள் பிள்ளைகளுக்கும் மட்டுமே என்று எழுதி வைத்துவிட்டார் மாமனார்.

மகனுக்கோ அவர் தனக்குத் தெரியாமல் கட்டி நடத்தி வந்த குடும்பத்துக்கோ அதில் எந்த உரிமையும் இல்லை என்று தீர்மானமாக எழுதி வைத்திருந்தார்.

அதுவரை ஊரில் பெரிய மனிதனாக நாட்டாமை பண்ணிக் கொண்டிருந்தவர், தான் பார்த்து கட்டிவைத்த தன் ஒரே மகனின் கல்யாணம் சோடை போனதை ஏற்றுக் கொள்ள முடியாத கோபத்திலும் அவமானத்திலும் செய்த காரியம்.

எவ்வளவோ மறுத்தும் அவள் கையில் திணித்து விட்டுச் சென்ற ஒரு வாரத்திலே மனிதர் உயிரை விட்டுப் பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது.

பிள்ளைகளைப் படிக்க வைக்க அந்த நிலம்தான் உதவிற்று. பேசாமல் அங்கு சென்று அதை உழுது, பயிரிட்டுக் காலத்தை ஓட்டி விட்டால்தான் என்ன என்கிற எண்ணம் சமீப காலமாகத் தோன்றி வருகிறது.

ஆனால் பிள்ளைகளுக்குத் தேவையான நேரத்தில்கூட இல்லாமல் நிலத்தைக் கட்டிக் கொண்டு அழுது என்ன செய்வது என்று நினைத்த போது வாசலில் வண்டிச் சத்தம் கேட்டு மாடியின் வெளி முற்றத்தில் இருந்து கீழே எட்டிப் பார்த்தார். கீழ் வீட்டுக்கரப் பையனின் வண்டி.

அவனிடம் எப்படிக் கேட்பது என்று தயங்கியவாறே மாடியிலிருந்து யோசனையுடன் மெல்ல இறங்கி வந்தார். இழப்பின் வடு ஆறாத முகமாக வளர்ந்துவிட்ட தாடியும் வெட்டாத தலைமுடியுமாக சோகமே உருவாக வந்தவனைப் பார்த்து, “வாங்க தம்பி , கேள்விப்பட்டேன். என்னென்னவோ நடந்து போச்சு, ‘எல்லாம் ஆண்டவர் சித்தம்” என்கிற வார்த்தைகளை விழுங்கிக் கொண்டார்.

பத்து வயது குழந்தையை விபத்தில் காலனுக்கு வாரிக் கொடுத்துவிட்டு வந்திருந்தவனுக்கு எந்த வார்த்தையும் ஆறுதல் அளிக்கப் போவதில்லை என்கிற இங்கிதம் தெரியாதவர் இல்லை அவர்.

என்ன பதில் சொல்ல என்று தயங்கி நின்றவனின் கவனத்தைப் பின்னாடியே வந்த ஆம்புலன்ஸின் சத்தம் திசை திருப்பியது.

ஊரே அடித்து துரத்திய சமயத்தில் தனக்கு அடைக்கலம் கொடுத்த மனிதரின் கடைசிக் காலத்தில்கூட இருந்து தன்னால் ஆன ஒத்தாசைகளைச் செய்வது தன் கடமையல்லாவா?

இந்த நேரம் பார்த்தா இந்தப் பெண்ணுக்குச் சென்னையில் வேலை கிடைக்க வேண்டும்? பேசாமல் அதையெல்லாம் விட்டுவிட்டு இங்கு வந்துவிட சொல்லி விட்டால்தான் என்ன?

சிறுவயதில் இருந்தே அவளைப் பார்த்துக் கொண்டவருக்காக அதைச் செய்ய மாட்டாளா என்று யோசித்தவருக்கு என்னவோ உள்ளுக்குள் உறுத்திற்று.

பல காலமாக இருந்த சொல்ல முடியாத ஒருவித நெருடல். அதுவரை விளையாட்டு வேடிக்கை கூச்சல் கும்மாளம் என்று இருந்து ஈவிம்மா அமைதியாக மாறியது இங்கு வந்தபின்தான் என்று தோன்றிய எண்ணத்தை வழக்கம் போல் அது தன் அப்பாவைப் பிரிந்து இங்கு வந்ததால்தான் என்று மனதின் பின்னே இன்று தள்ள முடியாமல் ஏதோ ஒன்று தடுத்து நிறுத்தியது.

வந்த புதிதில் அவள் பள்ளித் தோழிகள் சிலர் வந்து விளையாடிச் செல்வதுண்டு . ஆனால் பின் அவர்களும் யாரும் வரவில்லை.

அதை நினைத்து அந்நேரத்திலே அந்தப் பிள்ளைங்க வந்து போனால்கூட இவளுக்கு நன்றாக இருக்குமே என்று  ஏமாற்றமடைந்த நினைவு நிழலாடியது. ஏன் வருவதை நிறுத்தினார்கள் என்று யோசித்து நியாபகப்படுத்திக் கொள்ள முயற்சி செய்தார்.

நினைவுகள் பழைய கறுப்பு வெள்ளை தெலைக்காட்சியில் வெட்டிச் சென்ற காட்சிகளாக இங்கொன்றும் அங்கொன்றுமாகத் தோன்றி மறைந்தன.

அப்பா இல்லாத அவள் உயிர்த்தோழி சுமிதாவின் அம்மா திருட்டுப் பட்டம் கட்டப்பட்டு ஊரே கூடி அவமானப்படுத்தி அனுப்பிய ஒரு ஞாயிறு நினைவுகளின் ஓரத்தில்  நிழலாடியது.

மற்ற குழந்தைகளும் வருவது அதன் பின்னர் தான்  நின்றதா? சரியாக நியாபகம் இல்லை. பிள்ளைகளுக்காகப் பாடுபட்டு ஓடி ஓடி உழைத்து , ஊர் வாயில விழுந்து விடாமல் இருக்க முயன்ற காலம்.

வேறு எதுவும் பெரிதாக நினைவிலில்லை. பிள்ளைகளை வீட்டில் பத்திரமாக இருக்கிறார்கள் என்கிற ஒரு நிம்மதியே ஓடுவதை எளிதாக்கியது.

ஆனால் அன்று அவள் ஏன் ஈவியைப் பார்த்து அழுதாள்? அவள் மகள் தோழியைப் பிரிந்து செல்வதால் அழுதிருக்கலாம். அம்மா ஏன் அழுதாள்?

அவளுக்கு புரிந்ததாகவும் புரியாததாகவும் தோன்றியதாக எழுந்த ஒருவித உணர்வை அந்தத் தாயுள்ளம் கிரகிக்க முடியாமல் தவித்தது. ஆனாலும் ஏனோ ஒருவிதப் பதற்றம் மேலோங்கியது. வழக்கம் போல் அதை எவ்வளவு முயன்றும் தடுக்க முடியவில்லை.

அந்த எண்ணங்களை எல்லாம் புறம் தள்ளிவிட்டு உள்ளே கட்டிலில் கிடத்தப்பட்ட பெரியவரை எட்டிப் பார்த்தார். உறக்க மருந்துகளின் உதவியிலும் ஆழமற்ற உறக்கத்தில் ஏதேதோ உளறிக் கொண்டிருந்தார்.

காலையில் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து மாடி ஏறிய போது ஜான் அவன் நண்பன் குமாரின் ஆட்டோவில் வந்து இறங்கினான். அவரைப் பார்த்ததும்.

“நல்லா இருக்கீங்களாம்மா? ஈவ்லின் அக்கா மெட்ராஸ் கிளம்பிட்டாங்க போல?” என்று விசாரித்தான்.

“உங்க ஈவ்லின் அக்கா மெட்ராஸ் போறது இருக்கட்டும். நீ ஏன் வீட்டுப் பக்கம் வரதே இல்ல? இன்னைக்காவது வந்து சாப்புட்டு போயேன்ப்பா?” என்று உரிமையுடன் கேட்டார். அவன் சற்று தலையைச் சொரிந்த வாரே,

“இன்னொரு நாள் கண்டிப்பா வரேன்மா. நேரமாச்சு” என்று விடை பெற்றுக் கொண்டான். உள்ளே வந்து கேட்டைச் சாத்திய மகனிடம் அவன் அழைக்காததைக் குறித்து கண்டிப்புடனும், கீழ் வீட்டில் வந்திருப்பவர்களைக் குறித்து சொல்லிக் கொண்டே மாடி ஏறியவர் செவிகளில் உளறலாக வந்து விழுந்த வார்த்தைகள் அமிலமாக தாக்கின‌.

“ஐயோ… ஆண்டவரே… ஆண்டவரே… என் பிள்ளைகளைத் தண்டிக்காதீங்க… எனக்கு என்ன தண்டன வேணா குடுங்க… இனி நான்… எந்தக் குழந்தையையும் இனி… நான்…”

இடிந்து போனவராக வீட்டுக்குச் சென்றார். கோர்வையின்றி அதுவரை எழுந்த எண்ணங்கள் தானாக வரிசைபடுத்திக் கொண்டன.

(தொடரும்)

படைப்பாளர்:

பொ. அனிதா பாலகிருஷ்ணன் 

பல் மருத்துவரான இவருக்குச் சிறுவயது முதல் தன் எண்ணங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைதளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகள் பெற்று வருகிறார்.  இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர். தன் அனுபவங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக, ஒளிப்படங்களாக வலைத்தளங்களில் பதிந்து வருவதோடு சிறுகதைகளும் கதைகளும் எழுதி வருகிறார்.