“ஆமாமா… நீ பெரிய்ய்ய ஜமீன்தார் பரம்பரை போடி… பொறந்தவீட்டுல கஞ்சிக்கு வக்கில்லாம எங்கூட ஓடிவந்தவ தான நீ…”
அதற்கு மேல் கேட்க முடியாத அளவுக்கு வசவுகள் மாறி மாறி வந்து விழுந்து கொண்டிருந்தன. அந்த வீட்டிலிருந்த மூன்று குழந்தைகளும் ஆக்ரோஷமாய் சண்டை போட்டுக்கொண்டிருக்கும் அம்மாவையும் அப்பாவையும் பராக்கு பார்த்துக்கொண்டிருந்தார்கள். இது ஒன்றும் அவர்களுக்குப் புதுசு அல்ல. பொழுது விடிந்து பொழுது போனால் இதே அக்கப்போர்தான்.
பெற்றோரின் குரல் உயரத் தொடங்கியவுடன் மூவரும் ஒன்றும் பேசாமல் ஒரு மூலையில் உட்கார்ந்து கொள்வார்கள். சண்டைக்கான காரணம் பாவம், அந்தக் குழந்தைகளுக்குப் புரிய வாய்ப்பில்லை. சாதாரணமாக ஆரம்பிக்கும் உரையாடல் வாக்குவாதமாக மாறி, மற்றவர் குடும்பத்தை இழுக்கும் சண்டையில்தான் முடியும். கெட்ட வார்த்தைகள் சரளமாகப் புரண்டு விழும். இன்றும் அப்படித்தான்.
அதற்குமேல் பொறுக்க முடியாமல், மூத்தவள் சோலையம்மாள் தங்கைகளுக்கு கண்ணால் ‘சிக்னல்’ கொடுத்துவிட்டு வாசலுக்கு வர, பின்னாலேயே புத்தகப்பையை தூக்கிக்கொண்டு இரண்டு வாண்டுகளும் வந்தார்கள். “அவங்க பேசறதைக் கவனிக்காம புத்தகத்தைப் பார்த்து வீட்டுப்பாடம் எழுதுங்க” எனச்சொல்லி விட்டு தானும் ஒரு புத்தகத்தை எடுத்துப் பிரித்தாள். அரை மணி நேரத்திற்கு மேலாகி விட்டது. நேரம் செல்லச் செல்ல உள்ளிருந்து கூச்சல் அதிகமாகிக் கொண்டிருந்தது.
“அக்கா, நம்ம அம்மாவும் அப்பாவும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணதால தானே நம்ம தாத்தா பாட்டிலாம் நம்மகூட பேச மாட்டேங்கறாங்க?” – ஏழாம் வகுப்பு படிக்கும் தங்கை மல்லிகா.
“ஆமாம், நிறைய தடவை அம்மாவே சொல்லியிருக்காங்க இல்ல…?”
“சினிமால, லவ் பண்ணி கல்யாணம் பண்றவங்க எல்லாம் சந்தோஷமா இருக்காங்க இல்ல? இவங்க மட்டும் ஏன் தினமும் சண்டை போடறாங்க?”
“அதெல்லாம் சினிமால மட்டும்தான். நிஜத்துல சண்டைதான் போடுவாங்க, ஏன்னா… சினிமாவில சண்டை போடறதைக் காட்ட மாட்டாங்க” – பெரிய மனுஷி போல் சொன்னாள் எட்டாம் வகுப்பு படிக்கும் சோலையம்மாள்.
“நான்லாம் லவ்வே பண்ண மாட்டேன்ப்பா” என்றது அம்மா அப்பா சண்டையை ‘ஆ’ வென வாய் பார்த்துக்கொண்டிருந்த கடைசிக்குட்டி அஜிதா. நான்காம் வகுப்பு படிக்கும்போதே லவ் பற்றி பேசும் அளவுக்குத் தெளிவு வந்துவிட்டது.
“நானும்தான், எனக்கு கல்யாணமே வேணாம்ப்பா…” உடலைக் குலுக்கினாள் இவளுக்கு அடுத்த தங்கை மல்லிகா.
“ந்தா… லூசு மாதிரி பேசாம வீட்டுப்பாடத்தை எழுதுங்க…” தங்கைகளை அடக்கிவிட்டு புத்தகத்தைப் புரட்டியபடியே அரசல் புரசலாகக் கேட்டிருந்த அம்மா, அப்பாவின் காதல் கதையை நினைத்துப் பார்க்கிறாள்.
அப்பா ராசுவுக்கும் அம்மா அன்னத்தாய்க்கும் இங்கிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மற்றொரு கிராமம்தான் சொந்த ஊர். ராசுவுக்கு சின்ன வயதிலேயே படிப்பு சுத்தமாக வரவில்லை. ஒன்பதாம் வகுப்புவரை தக்கி முக்கி ஆசிரியர்கள் தள்ளிவிட்டார்கள். அதன்பிறகு படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு ஊர் சுற்றத் தொடங்கியவனை பள்ளிக்கு வரவைக்க ஆசிரியர்கள் முயற்சி செய்தும் பலனில்லை. அவ்வப்போது ஏதாவது வேலைக்குப் போவதும் நண்பர்களுடன் சுற்றுவதுமாக அவன் பொழுது போனது. அதனால் சின்ன வயதிலேயே கெட்ட பழக்கங்கள் அனைத்தும் அட்டையாய் ஒட்டிக்கொண்டது.
அன்னத்தாய் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, ராசு அவள் படித்த பள்ளிக்கு அருகில் ஒரு தீப்பெட்டி ஆபிசில் கொஞ்சநாள் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். அந்த சமயத்தில் இருவரும் அவ்வப்போது பார்க்க, பேச என இருந்த பழக்கம் காதலாக மாறியது. அந்தச் சின்னஞ்சிறு கிராமத்தில் வெவ்வேறு சாதியைச் சேர்ந்த இவர்களின் பழக்கம் வெளியே தெரிந்து பிரச்சினையானது. பழைய தமிழ் சினிமாக்களைப் பார்த்துவிட்டு, அதுபோல ஒருநாள் இருவரும் வீட்டை விட்டு ஓடிப்போனார்கள்.
ஆனால் சினிமாவில் ஓடிப்போவதுடன் சுபம் போடுவது போல இல்லை யதார்த்த வாழ்க்கை. தினசரி சாப்பாட்டுக்கே கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. ஆளுக்கொரு வேலையைப் பார்த்துக்கொண்டு தங்கள் காதல் வாழ்க்கையைத்(?) தொடர்ந்தாலும், ‘தொட்டுக்கோ…தொடைச்சிக்கோ’ என்றுதான் இன்றுவரை குடும்பத்தை ஓட்டமுடிகிறது. பசிக்கு முன்னால் பறந்து போன பத்தில் காதலும் போனது. அடுத்தடுத்து மூன்று குழந்தைகளால், பொருளாதாரத் தேவை அதிகரித்தபோது இருவருக்குள்ளும் முட்டலும் மோதலும் அதிகரித்தது.
பதினைந்து வயதில் ராசுவுடன் வாழ வந்து, 20 வயதுக்குள் மூன்று பெண் குழந்தைகளுக்குத் தாயாகிய அன்னத்தாய்க்கு முப்பது வயதுக்குள் வாழ்க்கை சலிப்படையத் தொடங்கி விட்டது. நசநசவென்ற வேலைகள், பணப்பற்றாக்குறை, அவளாகத் தேடிக்கொண்ட எல்லா கெட்ட பழக்கங்களுடன் கூடிய பொறுப்பற்ற கணவன், வளர்ந்து விட்ட மூன்று பெண்குழந்தைகளின் பாரம் என எந்தப்பக்கமும் சந்தோஷமில்லாத இயந்திரத்தனமான வாழ்க்கை கழுத்தை நெரிப்பதைப் போல இருந்தது.
ராசுவுக்கோ, இருபது வயதில் நண்பர்களிடம் கெத்து காட்டுவதற்காக காதலித்ததும், ஓடிப்போனதும் ஜாலியாகத்தான் இருந்தது. ஆனால் அதற்குப்பிறகு ‘நொய் நொய்’ என காசுக்காக நச்சரிக்கும் மனைவி, தினமும் வேலைக்குப் போயே ஆக வேண்டிய கட்டாயம், அப்படியே போனாலும் பணப்போதாமை, காலுக்குள்ளும் கைக்குள்ளும் பிள்ளைகள், நண்பர்களுடன் ஊர் சுற்ற முடியாத எரிச்சல் என வாழ்க்கை நரகம்போல் தோன்றியது. இயல்பிலேயே இருவருக்குமே பொறுப்புணர்ச்சியோ, குடும்பம், குழந்தைகள் என்ற அக்கறையோ துளியும் கிடையாது என்பதால், வாழ்க்கை விரைவில் சலிப்படையத் துவங்கிவிட்டது. இருவர் மனமும் ஏதோ ஒரு விடுதலையை எதிர்பார்த்தது.
இந்த இலட்சணத்தில் ராசு வேலை செய்யும் ஃபயர் ஆபிசில் யாரையோ ‘வைச்சிக்கிட்டு இருக்கான்’ என்று அன்னத்தாய்க்கு சந்தேகம். தீப்பெட்டி ஆபிசுக்கு லாரியில் லோடு ஏத்த வரும் கண்ணனிடம் அன்னத்தாய், ‘இளித்து இளித்து பேசுகிறாள்’ என்று ராசுவுக்கும் சந்தேகம். இதெல்லாம் குழந்தைகளுக்குமுன் அவர்கள் போடும் சண்டையில் சரளமாய் வரும் வார்த்தைகள். ‘வைச்சிக்கிட்டு’ன்னா என்ன என்று முதலில் சோலையம்மாவுக்குப் புரியவே இல்லை. நாள்கள் செல்லச்செல்ல அவள் அறிவுக்கு ஏற்றாற்போல அரைகுறையாகப் புரிந்து கொண்டாள்.
சந்தேகம் என்ற பேய் வாழ்க்கைக்குள் நுழைந்த போதே, ‘காதல்’ என்ற பெயரில் அவர்களுக்குள் இருந்த ஈர்ப்பு காணாமல் போனது. இருவரும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தான்தோன்றித்தனமாக வாழ்க்கையை எதிர்கொண்டனர். வாரக்கடைசியில் வாங்கும் சம்பளத்தை, ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் கறி, மீன், தம், ‘தண்ணி’, சினிமா என இருவரும் அவரவர் விருப்பப்படி தாம் தூம் என செலவளித்து விடுவார்கள். உழைத்த காசை உருப்படியாய் பயன்படுத்தும் பக்குவம் இருவருக்குமே இல்லை. போன வருட தீபாவளி போனசில் ராசு ‘டச்சு போன்’ வாங்க, பங்குனிப் பொங்கல் போனசில் சோலையம்மாள் அதைவிட பெரிதாக ஒரு அலைபேசி வாங்கினாள். அதிலிருந்து சாப்பாடு, தூக்கம் பற்றிய சிந்தனையில்லாமல் அந்தச் சின்னக்கருவிக்குள் மூழ்கிப்போனாள். கணவனுடன் சண்டையிட்டால் பாதி நாட்கள் சமைப்பதுமில்லை. வேலைக்கும் போவதில்லை. பிள்ளைகளைப் பற்றிய எந்தக் கவலையுமில்லாமல் கட்டிலில் நாள் முழுக்கக் குப்புறப் படுத்துக் கிடப்பாள்.
சோலையம்மாள்தான் பட்டினியோடு தங்கைகளைக் கிளப்பிக் கொண்டு பள்ளிக்கு ஓடுவாள். பொறுப்பற்ற பெற்றோர்களுக்கு இடையில் சிக்கிக்கொண்ட இதுபோன்ற குழந்தைகளை சத்துணவுதான் வயிற்றை நிரப்பிக் காப்பாற்றுகிறது. சாப்பாட்டைப்பற்றி நினைக்கும்போதே கூடப்படிக்கும் ராசாத்தியின் நினைவு வருகிறது.
ஒருநாள் மதிய இடைவேளையில் கொளுத்தும் வெயிலில் ராசாத்தியின் அம்மாவும் அப்பாவும் மூன்று கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் மிதித்து ‘வேகு வேகு’வென வந்தார்கள். “சத்துணவு சாப்பிட்டுட்டியா ராசாத்தி? நல்ல வேளை இன்னும் சாப்பிடலியே, அதை வைச்சிட்டு இதைச் சாப்பிடு”, என ஒரு தூக்குச் சட்டியைக் கொடுத்தார்கள். “ஒரு காதுகுத்து வீட்டுக்குப் போனோம். உன்னை விட்டுட்டு நாங்க மட்டும் எப்படி மனசாறச் சாப்பிடுறது? அதுவும் பிரியாணியை? அவங்களும் பிள்ளைக்கு சாப்பாடு கொண்டு போங்கனு சொல்லிட்டாங்க, அதான் வெயிலைப் பார்க்காம ஒரு அழுத்து அழுத்திட்டு ஓடி வந்தோம்”,தொப்பல் தொப்பலாக நனைந்த உடையுடன் மூச்சிரைக்க நின்ற ராசாத்தியின் அம்மாவும் அப்பாவும் சோலையம்மாளின் கண்களுக்கு அதிசயமாய் தெரிந்தார்கள்.
அன்று ஏதோ விசேஷம் என்று பள்ளி சத்துணவில் சாதத்துக்குப் பதிலாக சர்க்கரைப் பொங்கல் போட்டார்கள். அந்த இனிப்புச் சோறால் ருசியைக் கொடுக்க முடிந்ததே தவிர, பசியைப் போக்க முடியவில்லை. அதனால் மாலையில் பசியோடு வீட்டுக்கு வந்த குழந்தைகள் அடுக்களையைப் பார்க்க, சட்டி கவிழ்த்திக் கிடந்தது. அம்மா கையில் வழக்கம்போல செல்போன்.
“அம்மா இன்னிக்கும் சமைக்கலியா?”
“ஆமா உங்கப்பனுக்கு சோறு ஒண்ணுதான் குறைச்சல்…”
“அப்பாவுக்கு இல்ல, எங்களுக்கு?”
“நான் மட்டும்தான் உங்களைப் பெத்தனா? தினமும் நான்தான் ஒங்களுக்கு வடிச்சுக்கொட்டனுமா? அவனும்தானே பெத்தான்? அவன்ட்ட போய் சோறு, சோறுனு கேளுங்க. சனியங்களா…” ஆர்வமாக போனில் ரீல்ஸ் பார்த்துக்கொண்டிருந்தவள், திரும்பிப் பார்க்காமலே எரிச்சலோடு கத்தினாள்.
சோலையம்மாள், தங்கைகளைத் திரும்பிப் பார்த்தாள்.
“அக்கா பசிக்குது க்கா…” அஜிதாவின் கண்களில் தெரிந்த பசியைப்பார்க்க பாவமாக இருந்தது. இனி அம்மாவை நம்பிப் பயனில்லை. அப்பா வந்து முதலில் சண்டைபோட்டு, அதன் பிறகு சமாதானப் படுத்தும்வரை எழுந்திருக்க மாட்டாள்.
“சோறு ஆக்கி ஊறுகாயைப் பிரட்டி சாப்பிட்டுக்குவோமா?” என தங்கைகளைக் கேட்டாள். “சரி சரி” என தலையாட்டினார்கள். வீட்டில் கேஸ் அடுப்பெல்லாம் கிடையாது. சோலையம்மாள் தானே அடுப்பு பற்ற வைத்தாள். சோறு பொங்கும் சட்டியில் தண்ணீரைக் கொதிக்க வைத்து அரிசியைப் போட்டாள். தீயை ஊதி ஊதி எரிய வைக்க கஷ்டமாக இருந்தது. தான் சமைப்பதைப் பார்த்து, உதவிசெய்ய வந்து விடுவாளா என்ற நப்பாசையுடன் அம்மாவைத் திரும்பிப் பார்த்தாள். ம்ஹூம்….எழுந்து வருவதாக இல்லை.
தங்கைகள் இருவரும் புகையினால் கண்களைக் கசக்கிக் கொண்டே அக்காவுக்கு உதவியாக பருத்திமாரை (காய்ந்த பருத்திச்செடி) ஒடித்து ஒடித்து அடுப்புக்குள் தள்ளிக்கொண்டிருந்தார்கள். ஒருவழியாக அரிசி வெந்துவிட்டது. வடிப்பது மட்டும்தான் பாக்கி. அளவு தெரியாமல் தண்ணீர் நிறைய வைத்து விட்டதால் சோறு தண்ணீருக்குள் அடியில் மூழ்கிக் கிடந்தது. அடுப்புத்துணியைப் பிடித்துக்கொண்டு, பெரிய சட்டியைத் தூக்கி வடிக்க முயற்சி செய்தாள். கஷ்டப்பட்டு தம் கட்டி சட்டியைக் கவிழ்த்து விட்டாள். துணியை மீறி கை சுட, “ஸ்ஸ்ஸ்…” என கத்திக்கொண்டே சட்டியைத் தவறவிட, சட்டியிலிருந்த தண்ணீர் முழுவதும் பாவாடையில் பட்டு காலெல்லாம் ஓடியது. தொடை எரிந்து போனது போல காந்தியது. எரிச்சலில் “அய்யோ… அம்மா…” அலறினாள்.
சாவகாசமாக திரும்பிப் பார்த்த அன்னத்தாய், “எருமை… எருமை… சோறு வடிக்கத்தெரியல முண்டம்” என திட்டி விட்டு வந்து, சட்டியை நிமிர்த்தி வைத்தாள். நல்லவேளை சாதம் கீழே கொட்ட வில்லை. ‘காலில் என்ன ஆச்சு’ என்றுகூட கேட்காமல், போனை எடுத்துக்கொண்டு வாசல் திண்ணையில் போய் உட்கார்ந்துகொண்ட அம்மாவையே சோலையம்மாள் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘அன்னத்தாய்’ என்பதன் பொருள் ‘சாப்பாடு கொடுக்கும் தெய்வம்’ என்று தமிழ் டீச்சர் ஒருமுறை சொன்னது ஏனோ அந்த நேரத்தில் நினைவுக்கு வந்து தொலைத்தது. அப்போதைக்கு தங்கைகளின் வயிற்றுப் பசியைப் போக்கி விட்டாலும், சோலையம்மாவின் காலில் புண் ஆற ஒரு மாதமாகியது.
நினைவுகளிலிருந்து மீண்டு, தலையை உதறிக்கொண்டு படிக்க முயற்சித்தாள் சோலையம்மாள். தள்ளாடிக்கொண்டே ராசு வீட்டு வாசலுக்கு வந்துவிட, அன்னத்தாய் சண்டையைத் தொடர, அந்த இடம் போர்க்களமானது.
“அந்தக் கண்ணன் கூட உனக்கு என்னடி பேச்சு? ஊரெல்லாம் உன்னப்பத்தி கேவலமா பேசறாங்க?”
“நீ அந்தப் பொம்பளகூட ஊர்மேயப்போற இல்ல? அதப் பத்தி யாரும் கேவலமாப் பேசலியா?”
தொடரும் அருவருப்பான பேச்சுகள். கேட்டுக்கேட்டு பிள்ளைகளுக்கும் மனது நிறைய கெட்ட வார்த்தைகள் பதிந்து போய் விட்டது. அம்மாவும் அப்பாவும் இப்படி தெருவில் வைத்து சண்டைபோடும் நாள்களில், சோலையம்மாளுக்கு பள்ளிக்குப் போகவே அசிங்கமாக இருக்கும். தெருவில் நடக்கும்போதே ஒவ்வொருத்தராக “என்னாடி… என்னா பிரச்சனை வீட்ல?வழக்கம் போலத்தானா?” என்று நக்கலாகக் கேட்டு சிரிப்பார்கள். சோலைம்மாளுக்கு அவமானமாக இருக்கும். கண்களில் நீர் மிதக்க, பதில் பேசாமல் தலைகுனிந்தபடியே நகர்ந்து விடுவாள்.
ஒருநாள் மதிய இடைவேளையில் பள்ளிக்கு எதிரே இருந்த ஆலமரத்தடியில் ஒரே கூட்டம், சோலையம்மாவும் ஆர்வமிகுதியால் ஓடினாள். நடுவில் கூடப்படிக்கும் அருண் உட்கார்ந்திருக்க, அவன் கையில் புது ஆன்ட்ராய்டு போன். சுற்றிலும் ஆணும் பெண்ணுமாய் பள்ளிப் பொடுசுகள். “இதுதான் வாட்சப். இதுல நாம் மெசேஜ் அனுப்பிக்கிடலாம், இது ஃபேஸ் புக். இதுல நாம் டான்ஸ் ஆடி, பாட்டுப்பாடி ரீல்ஸ் எல்லாம் போடலாம். வாட்சப் டிபில நம்மளோட ஃபோட்டோ வைச்சா, நம்ம நம்பர் யார்ட்டலாம் இருக்கோ அவங்க எல்லாரும் அதைப் பார்ப்பாங்க” விவரித்துக்கொண்டிருந்தான். அங்கிருந்த பெரும்பாலான குழந்தைகளுக்கு இதெல்லாம் தெரிந்திருந்தது.
“ஆமாம் ஆமாம்” என தலையாட்டியபடியே தங்களுக்கு தெரிந்ததைப் பேசிக்கொண்டார்கள்.
“ப்ரியா, உன்னோட அம்மா வாட்சப் ல உன்னோட போட்டோ வைச்சிருந்தாங்க. அதுல நீ ரொம்ப அழகா இருந்த…” – பவித்ரா.
“ஆமாம், அது என்னோட பிறந்த நாள் அன்னிக்கு எடுத்த ஃபோட்டோ” – ப்ரியா.
“வாட்சப்ல நாம மாறி மாறி மெசேஜ் அனுப்பி பேசிக்கிடலாம், போட்டோகூட அனுப்பலாம் ஜாலியா இருக்கும்” – சுமதி.
“எங்க அக்கா இன்ஸ்டாகிராம்ல டான்ஸ்லாம் ஆடி வீடியோ போட்டு விட்டுச்சு, எங்க அம்மாவுக்குத் தெரிஞ்சி வெளக்கமாத்தால அடி பின்னிட்டாங்க” – சுரேஷ்.
“உனக்கு மட்டும் எப்படி அருண் இதெல்லாம் தெரியுது?” – சோலையம்மாள்.
“எங்க அண்ணன் ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் எல்லாத்துலயும் இருக்கான், அவன் தான் எனக்குச் சொல்லிக்கொடுத்தான்” – அருண்.
சோலையம்மாளுக்கு அவன் சொன்னது ஒன்றும் புரியவில்லை. என்றைக்காவது ஒருநாள் டீச்சரிடம் வீட்டுப்பாடம் கேட்க அம்மாவிடம் போனைக் கேட்டால்கூட, கொடுக்க மாட்டாள். “ஃபோனைத் தொட்ட… கையை ஒடைச்சிடுவேன்” என மிரட்டி வைத்திருப்பதால், இவளும் அதைத் தொடுவதேயில்லை.
“ப்ளீஸ் அருண், எங்களுக்கும் வாட்சப்ல ஃபோட்டோ, வீடியோ எப்படி அனுப்பறதுனு, டிபில நம்ம போட்டோ எப்படி வைக்கிறது எல்லாம் சொல்லிக்கொடுடா” – கார்த்தி
“சரி சரி எல்லாரும் அமைதியா உட்காருங்க. நான் சொல்லித்தாறேன்” – அருண் சொல்லச்சொல்ல, கவனமாய் கேட்டுக்கொண்ட சோலையம்மாளுக்கு, “ப்பூ… இவ்வளவு ஈசியா?” எனத் தோன்றியது.
மாலையில் வீட்டுக்குள் நுழையும்போதே ஃபோன் எங்கேயிருக்கிறது எனத் தேடினாள். அம்மா குளித்துக் கொண்டிருக்க, போன் சார்ஜில் கிடந்தது. அம்மா வருகிறாளா என பாத்ரூம் பக்கம் ஒரு முறை பார்த்துக்கொண்டாள். தண்ணீர் சத்தம் கேட்டது. தைரியமாக போனைக் கையில் எடுத்துப் பார்த்தாள். அம்மா ஃபோன்லாக் போடும் ‘ப’ வடிவம் தெரியும், அதைப்போட்டு உள்ளே போனாள். அருண் சொன்னதை மனதில் இருத்தி கவனித்துப் பார்த்தாள். வாட்சப் வடிவம் தெரிய அதைத் தொட்டாள். சூப்பர்… வாட்சப்புக்குள் போய் விட்டாள். நிறைய பேரிடமிருந்து அம்மாவுக்கு மெசேஜ் வந்திருந்தது.
‘அம்மாவுக்குக்கூட இத்தனை ஃப்ரெண்ட்ஸா…?’ சோலையம்மாளுக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘தீப்பெட்டி ஆபிசில் கூட குரூப் உண்டுபோல…’ ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டே வந்தவள் love என்று பதிந்திருந்த எண்ணிற்குள் நுழைந்தாள். ஏதோ அசிங்கமான மெசேஜ். வாசிக்க வாசிக்க உடம்பு கூசியது. அதைத் தொடர்ந்து அசிங்கமான படங்கள். “அம்மாவா இது? யார் இந்த ஆள்? அய்யோ… இது அம்மா ஆபீசில் வேலைபார்க்கும் கண்ணன் டிரைவர் இல்ல..? ரெண்டு பேரும் சேர்ந்து நெருக்கமாக… ச்சீய்… அசிங்கம்…அம்மா ஏன் ட்ரெஸ் போடாம இப்படி அசிங்கமாக தன்னைத்தானே போட்டோ எடுத்து அனுப்பியிருக்கிறாள்? அதனால்தான் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை வருதோ?’ சோலையம்மாளுக்கு குழப்பமாக இருந்தது.
பாத்ரூம் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்க, டக்கென போனை வைத்து விட்டு நகர்ந்தாள். அதன்பிறகு அம்மாவைப் பார்க்கவே பிடிக்கவில்லை. அருவருப்பாக இருந்தது. அம்மாவுடன் பேச்சையே குறைத்துக்கொண்டாள். அவளாக ஏதும் கேட்டால்கூட, தலை குனிந்து கொண்டே “ம்ம்ம்…” “ஆமாம்…” “இல்ல…” என முடித்துக் கொள்வாள்.
வழக்கம்போல சண்டையும் சச்சரவுமாக நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. ஒருநாள் வேலைக்குப்போன அம்மா, திரும்பி வரவே இல்லை. அம்மா யார்கூடவோ ‘ஓடிப்போய்’ விட்டதாக தெருவில் எல்லாப் பெண்களும் கூடிக்கூடிப் பேசிக்கொண்டார்கள். “மூணு பச்சப் பிள்ளைகள, அதுவும் பொட்டைப் புள்ளைகளை விட்டுட்டு ஓடிப்போயிட்டாளே..? அப்படி ஒடம்பு சொகம் கேக்குதோ?” என கேவலமாகப் பேசினார்கள். சோலையம்மாளுக்கு அவமானமாக இருந்தது. பள்ளிக்குப் போனால் எல்லாரும் இதைத்தானே பேசுவார்கள் என வெட்கமாக இருந்தது. வீட்டை விட்டு வெளியேறாமல் முடங்கிக் கொண்டு, தங்கைகளை மட்டும் பள்ளிக்கு அனுப்பினாள். டீச்சர்கள் ஆள் விட்டு கூட்டி வரச்சொன்னபோதும், போக மறுத்துவிட்டாள். ஆனால் ராசு பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
அன்னத்தாய் ‘ஓடிப்போய்’ ஒரு வாரத்திற்குள் ராசு ஒரு பெண்ணை வீட்டிற்குக் கூட்டி வந்தான். “அவளுக்குத்தான் ஓடத் தெரியுமா? நான் ஆம்பள எத்தனை பேரை வேணா வைச்சிக்குவேன்”, என நண்பர்களிடம் சவடால் பேசினான். மொத்தத்தில் இருவருமே பிள்ளைகளைப்பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல், அவரவருக்குப் பிடித்த வாழ்க்கையைத் தேடிக்கொண்டனர்.
சோலையம்மாளுக்கு இருவர் செய்ததும் பிடிக்கவில்லை. எந்த நேரமும் ஏதோ குழப்பத்திலேயே இருந்தாள். உள்ளூருக்குள் வேலைக்குப்போக வெட்கப்பட்டுக்கொண்டு, பக்கத்து டவுனுக்கு தினமும் தீப்பெட்டி ஆபீஸ் வேலைக்குப் போகத் தொடங்கினாள். ஒருநாள் ஆபிசில் வேலை இல்லையென சீக்கிரமாக திரும்பி வந்த சோலையம்மாள், வீடு என்று இருக்கும் அந்த ஒற்றை அறைக்குள் அப்பாவும் அந்தப் பெண்ணும் நெருக்கமாக இருப்பதைப் பார்த்து இரண்டாம் முறையாக அதிர்ந்து போனாள்.
ஆனால் அவர்கள் இருவரும் அவளை சட்டை செய்யவே இல்லை. புதுமணத்தம்பதிகள் போல குழந்தைகளுக்கு முன்னாலேயே சேட்டையும் சல்லாபமுமாக சில்மிஷம் செய்து கொண்டு இருந்தார்கள். அதிலிருந்து சோலையம்மாளுக்கு வீட்டிற்கு வரவே பிடிக்காமல் போனது. 365 நாளும் ஆபிஸ் வைத்தால்கூட போகத் தயாராக இருந்தாள். பெற்றோர் இருவரும் சுயநலமிகளாக அவரவர் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து கொள்ள, மூன்று குழந்தைகளும் அநாதைகள் போலானார்கள்.
சோலையம்மாள் பக்கத்து ஊருக்கு வேலைக்குப் போய் இரண்டு வருடமாகி விட்டது. அவளும் இந்த புது வாழ்க்கைக்குப் பழகிக் கொண்டாள். நிறைய புதுத் தோழிகள் கிடைத்தார்கள். டவுனுக்கு ஏற்றபடி அவளது உடையும், அலங்காரமும் பேச்சும் மாறிவிட்டது. போன தீபாவளி போனசில் அவளும் தனக்கென புது ஃபோன் வாங்கிக் கொண்டாள். அவளுக்கும் இப்போது ஃபேஸ்புக், வாட்சப், இன்ஸ்டாகிராம் எல்லாம் அத்துப்படியாகி விட்டது. அம்மா, அப்பா பற்றியெல்லாம் பெரிதாக யோசிப்பதில்லை. தங்கைகளை மட்டும் நன்றாகப் பார்த்துக் கொள்வாள்.
நிறைய வடநாட்டு பையன்களும் அந்த ஆபிசில் வேலை பார்த்தார்கள். அவர்கள் பேசும் ஹிந்தி வார்த்தைகள்கூட அவளுக்கு இப்போது ஒன்றிரண்டு புரிய ஆரம்பித்து விட்டது. அதில் பாபு என்ற பையனுடன் சைகையில் பேசுவதும், சிரிப்பதும் அவனுக்காக சப்பாத்தி செய்து கொண்டுவருவதுமாக நட்பு பலப்பட்டுப்போனது. தொலைபேசி எண்கள் பரிமாறிக்கொண்டு குட்மார்னிங், குட்நைட் படம் அனுப்பிக்கொண்டார்கள். காலையில் வண்டியிலிருந்து இறங்கியதும் அவனைத்தான் கண்கள் தேடும்.
மறுநாள் ஆபிசில் அவனைப்பார்த்து வெட்கத்துடன் தலை குனிந்து கொண்டாள். அவள் மனநிலை அவனுக்குப் புரிந்து போனது. அதன்பிறகு தொடர்ச்சியாக ஆபாசப் படங்கள் வரத் தொடங்கின. சில நேரங்களில் மாலையில் கம்பெனி வண்டியில் ஏறாமல் ‘ஆஸ்பத்திரி போக வேண்டும்’ என பொய் சொல்லிவிட்டு, அவனுடன் தனிமையில் ஊர் சுற்றத் தொடங்கினாள். ஊருக்குள் வரும் கடைசி பஸ்ஸில் வீட்டுக்கு வரும் அவளைக் கேள்வி கேட்க அந்த வீட்டில் யாரும் இல்லை. தைரியமாக சுற்றிக்கொண்டிருந்தவள், ஒருநாள் காணாமல் போனாள். அவனும்தான்.
படைப்பாளர்
ரமாதேவி ரத்தினசாமி
எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். ‘அடுக்களை டூ ஐநா’ தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். அடுத்து, ‘இலங்கை – எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களையும், ‘என்ன செய்கிறது ஐநா – பெண் கல்வி த் தடைகள் உடைபடும் தருணங்கள்’ என்கிற கட்டுரைத் தொடர்களையும் நம் வலைதளத்தில் அழகாக எழுதியிருக்கிறார். இம்மூன்று தொடர்களும் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகங்களாகவும் வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன. ‘வியட்நாம் அனுபவங்கள் ‘என்கிற இவரது நான்காவது தொடர் நூலாக்கம் பெற்றுவருகிறது. இது தவிர ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகத்துக்காக ‘பிள்ளையாரும் 22 நண்பர்களும்’ என்ற இளையோர் நாவலையும் எழுதியுள்ளார். குட்டிப் பெண்களின் பெரிய கதைகள் இவர் எழுதும் ஐந்தாவது தொடர்.
‘பெற்றோர்கள் கவனத்திற்கு’