ஆற்றல் மிக்க பெண் தெய்வம் மனித குலத்தின் வரலாற்றிலும், ஒவ்வொரு தனிப்பட்ட பெண்ணின் வரலாற்றிலும் வெளிப்படுகின்ற பெண் இனத்தின் அவதாரமே. – எரிக் நியூமேன்

பெண் எதற்காக விசேஷமான நபராக மாறினாள் என்கிற கேள்விக்கு உலக வரலாற்றில் பெண்கள் புத்தகத்தில் உள்ளது. ‘சந்திரனின் பிறைகளோடு இணைந்த அவளுடைய மாதவிடாயும், அவளுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தாத, அதே நேரத்தில் குணப்படுத்த முடியாதவாறு ரத்தத்தை வெளிப்படுத்தி வந்த புதிரும்தான் பெண்ணை விசேஷமான நபராக மாற்றியது’ என்கிறார்கள்.

இப்படி மாதவிடாய் பற்றிப் புனிதமானது, தெய்வீகமானது என்று விதவிதமான வரலாற்று சார்ந்த தொகுப்புகள் நம்மிடம் வரையறை செய்கின்றன. ஆனால், உண்மையில் யதார்த்த வாழ்க்கையில் ஒரு பெண்ணுக்கு விசேஷமான நாட்களில் மாதவிடாய் வந்தால், நிம்மதியாக இருக்க முடியுமா என்று கேட்டுப் பாருங்கள். எத்தனை வீடுகளில் விசேஷமான நாளில் பீரியட்ஸ் ஆகக் கூடாது என்றும், அது வீட்டுக்குத் தரித்திரம் என்றும் தொடர்ந்து அவளுடைய அம்மாவால், பாட்டியால், சித்தியால் பதிய வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

2023இல் இப்படியா என்று ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடையாதீர்கள். ஒரு சம்பவம், அந்த வீட்டில் கணவர் மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர் மட்டுமே பெண்ணாக இருந்து விசேஷ நாட்களில் பூஜை செய்வார். கணவரோ மாலை போடுவதில் இருந்து பூஜை புனஸ்காரம் செய்வது வரை அத்தனை சுத்தம் பத்தமாக மொத்த வீடே இருந்தே ஆக வேண்டும் என்று மிகக் கண்டிப்புடன் இருப்பார்.

ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பிப்ரவரி வரை பல கோயில், திருவிழா சார்ந்த நிகழ்வுகள் பெரும்பாலும் நடக்கின்றன. இதில் ஒரு பெண் மட்டும் வீட்டில் இருக்கும் போது சமைப்பதில் இருந்து பூஜை செய்வது வரை அவரே அனைத்தும் செய்ய வேண்டும். அதனால் பீரியட்ஸ் என்றாலே மூஞ்சியைச் சுழிக்கும் நபர்களே அதிகமாக இருக்கிறார்கள்.

அதனால் அந்தம்மாவும் தொடர்ந்து பல வருடங்களாக டாக்டரிடம் கேட்காமல், மெடிக்கல் ஷாப்பில் போய் பீரியட்ஸ் தள்ளிப்போக மாத்திரை வாங்கிச் சாப்பிட்டுள்ளார். சில வருடங்களுக்கு முன் வயிறு வலிக்குது என்றும், அதற்கும் பெயின் கில்லர் மாத்திரைகளை வாங்கிச் சாப்பிட்டு இருக்கிறார். பெரும்பாலும் அவர் குடுபம்பத்தினரைத் தவிர வேறு யாரிடமும் பேசத் தயங்குபவராக இருந்திருக்கிறார். அதனால் தன் உடலில் ஏற்படும் பிரச்னைகளை யாரிடமும் தெரிவிக்காமலேயே இருந்தார். கணவருக்கும் மகனுக்கும் எந்த வித்தியாசமும் கண்டுபிடிக்க முடியாமல், அவரவர் உலகிற்குள் வாழ்ந்து இருக்கின்றனர். கடைசியில் அந்த அம்மாவிற்கு கர்ப்பப்பையில் பரவிய புற்றுநோய் எல்லாப் பகுதிகளிலும் பரவி இறந்தும் விட்டார்.

பெண்ணின் உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெஸ்டிரான் என்கிற இரண்டு ஹார்மோன்கள்தாம் மாதவிடாய் சுழற்சிக்கு அடிப்படையானவை. மேலே சொன்ன ஹார்மோன்களை ஒரு சில நாட்கள் செயல்படாமல் இருக்க வைக்கதான் இந்த மாத்திரை பயன்படுகிறது. அவை உடலின் சுழற்சியை மாற்றியமைக்கவில்லை, முற்றிலும் பாதிப்படைய வைக்கிறது. இதன் வீரியம் புரியாமல் பெண்களும் ஏதோ நல்லது செய்யத்தான் இந்த உடல் இருக்கிறது என்று தத்துவம் பேசிக்கொண்டு மிட்டாய்கள் போல் விதம் விதமான மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.

பெண்களின் வரலாறும் தெய்வீகத் தன்மையும் உண்மையில் அவளது உடலை அவளுக்குப் பிடித்த மாதிரி பாதுகாக்கப்படாமல், சமூகம் கூறும் செயல்பாடுகளால், நடவடிக்கைகளால்தாம் அந்த உடலைப் பேணி பாதுகாக்கிறாள். பாதுகாப்பது என்பதைவிட சரணடைய வேண்டும் என்பதே பெண்ணின் உடலுக்குத் தேவையான மந்திரமாக இருக்கிறது.

வாசல் தெளித்து கோலம் போடுவது, சமையலறையைச் சுத்தம் செய்வது, ஊறுகாய் போட வேண்டுமென்றாலும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று அனைத்திலும் பெண்ணின் உடல் தூய்மையாக இருக்கும் போதே இந்த வேலைகளைச் செய்ய வேண்டும். தற்போது இவற்றில் பெரும்பாலான விஷயங்கள் மாறியிருந்தாலும், விசேஷ நாட்களில் பீரியட்ஸ் தள்ளிப்போவதைத்தான் பெண்கள் விரும்புகிறார்கள்.

இதில் சில வீடுகளில் உள்ள மூட நம்பிக்கைகள் எல்லாம் நம்மை ரொம்ப அதிர்ச்சியளிக்க வைக்கிறது. வீட்டைக் கூட்டினால் குப்பைகளை மூலையில் தள்ளி வைக்கக் கூடாதாம். அப்படித் தள்ளி வைத்தால், விசேஷ நாளில் பெண்களுக்கு பீரியட்ஸ் வந்து தள்ளி வைத்துவிடுமாம். பெண்களின் கைகளில் வைக்கோல் கட்டினால் பீரியட்ஸ் தள்ளிப் போகுமாம். அதிகாலையில் பொட்டுக்கடலை சாப்பிட்டால் தள்ளிப் போகுமாம், பீரியட்ஸ் ஆகும் முன் கல்உப்பு டப்பாவில் காசு போட்டால் தள்ளிப் போகுமாம்.

இப்படி விதம் விதமாகத் தன் உடம்புக்குள் மாதந்தோறும் நடக்கும் நிகழ்வுக்கு என்ன எல்லாம் செய்ய முடியுமோ, அதை எல்லாம் செய்து சாமி கும்பிட நினைக்கும் பெண்களின் நம்பிக்கையை எளிதாக மாற்ற முடியவில்லை என்பதே பயத்தைத் தருகிறது. செத்தாலும் சாவேன், ஆனால் வாழும் போது சுத்தம்பத்தமாக வாழ வேண்டும் என்பதே லட்சியமாக வைத்திருக்கும் பெண்களின் வாழ்வியலை என்ன செய்து மாற்றுவது என்பதுதான் தற்போதைய சவாலாக இருக்கிறது.

பள்ளிப் பருவத்தில் இருந்தே விழிப்புணர்வு செய்ய ஆரம்பித்து, கட்டுரைகள் எழுதி, திரைப்படங்களாக எடுத்து, நாடகங்கள் போட்டு, பாடல்கள் பாடி என்று மனிதனுக்குத் தெரிந்த அத்தனை கலைகள் மூலமும் பெண்ணின் உடலைப் பற்றியும் மாதவிடாய் பற்றியும் பேசிக் கொண்டு இருக்கிறோம். ஆனால், சில நேரம் அத்தனையும் மாற்றி வைத்து, முதலில் இருந்து விளையாடலாமா என்றே சில பெண்கள் நம் முன் நிற்கிறார்கள்.

மாதவிடாயை அறிவியலாகப் பார்க்கும் சமூகத்தை உருவாக்க வேண்டுமே தவிர, ஆன்மிகத்தைத் தடுக்கும் செயலாகப் பார்க்க வேண்டாம் என்றே தொடர்ந்து கூற வேண்டிய அவசியம் இன்றும் இருக்கிறது.

எரிக் நியூமேன் கூறியதுபோல் ஆற்றல் மிக்க பெண் தன்னுடைய தனித்துவத்தில் ஆரோக்கியத்தையும் அவசியம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதைத் தொடர்ந்து கூறுவோம்.

படைப்பாளர்:

காயத்ரி மஹதி

காயத்ரி மஹதி மதுரையைச் சேர்ந்த மனநல ஆலோசகர். தனிப்பட்ட முறையில் கவுன்ஸலிங் செய்து வருகிறார். உளவியல் ரீதியாக குடி நோயாளிகள் மற்றும் குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக 2016ம் ஆண்டு ஈஸ்டர்ன் பூமிகா நிறுவனம் இவருக்கு “சிறந்த பெண்மணி” விருது வழங்கி கவுரவித்தது. உளவியல் ரீதியாக பள்ளிகளில விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக 2019ம் ஆண்டு நந்தவனம் நிறுவனம் “சிறந்த பெண்மணி” விருது அளித்தது. நாளிதழ்கள், செய்தித் தாள்களில் மனநலம் சார்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார்.