கடைசி பனியுகம் முடிவுக்கு வந்துகொண்டிருந்தபோது மனித குலம் ஒரு மாபெரும் சவாலைச் சந்திக்க நேர்ந்தது. திரும்பும் திசையெல்லாம் பனிப் பாலைவனம் மட்டுமே பரவி கிடந்தது. கிளேசியர் எனப்படும் உறைபனிப் படலங்கள் நகர்ந்தும் இடம்பெயர்ந்தும் அச்சுறுத்திக் கொண்டிருந்தன. பிறகு அது உருகத் தொடங்கியபோது தண்ணீர் கடலை நோக்கி விரைந்தது. ஒரு கட்டத்தில் கடல் வழியத் தொடங்கியபோது மேய்ச்சல் நிலங்களும் வனப்பிரதேசங்களும் மூழ்க ஆரம்பித்தன.

இந்தக் காலகட்டத்தில் மட்டும் 30 உயிரினங்கள் அழிந்துபோயின என்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்த அழிவில் மனிதர்களுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. வழக்கமாக வேட்டையாடும் விலங்குகள் கிடைக்காத நிலையில் மனிதர்கள் வெவ்வேறு புதிய உயிரினங்களை கொன்று தின்னத் தொடங்கியதன் விளைவு தான் இது. வாழ்விடங்கள் அருகி வந்ததால் மனிதர்கள் நெருக்கியடித்து வாழத் தொடங்கினர். வரலாற்றில் முதல் முறையாக உணவுப் பஞ்சம் மிகப்பெரிய அளவில் தலைதூக்கியது. மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடி அழித்ததைப் போல இயற்கை மனிதர்களை வேட்டையாடத் தொடங்கியது. இது நடந்தது சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு.

ஆனால், இயற்கையின் இந்த முயற்சி வெற்றிபெறவில்லை என்பதற்கு நாமெல்லாம் வாழும் உதாரணங்கள். இந்த வெற்றி எப்படிச் சாத்தியமானது? மருத்துவரும் பேராசிரியருமான அஜய் கன்சால் தனது சமீபத்திய நூலில் (தி எவல்யூஷன் ஆஃப் காட்ஸ்) இதனை விவாதித்துள்ளார். கிடைக்கும் மிருகங்களையெல்லாம் கொன்று தின்றுவிட்ட நிலையில் மேற்கொண்டு வேட்டையாட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட ஆண்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தபோது பெண்களே முன்வந்து உணவுப் பஞ்சத்துக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்தார்கள் என்கிறார் அஜய் கன்சால். எப்படி?

ஆண்களும் பெண்களுமாக கும்பல் கும்பலாக உணவு சேகரிக்க காட்டுப் பகுதிக்குச் செல்கின்றனர். நிறைய செடிகளும் கொடிகளும் மரங்களும் படர்ந்திருக்கின்றன என்றாலும், உண்பதற்கு ஏற்ற கனிகளோ காய்களோ கிடைக்கவில்லை. சோகமாக அவர்கள் ஒவ்வொரு நாளும் வீடு திரும்புகின்றனர். கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண் வீட்டிலேயே ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். ஒரு நாள் அவளுக்குக் குழந்தை பிறக்கிறது. படுத்த படுக்கையாக மாறிவிடும் அந்தப் பெண் தான் உண்டது போக மிச்சமுள்ள அல்லது உபயோகமற்ற உணவுப் பொருட்களை குப்பைமேட்டில் வீசியெறிகிறாள். மழை பெய்கிறது. குப்பையும் வளர்கிறது.

ஒரு மாத காலத்துக்குப் பிறகு அந்தப் பெண் உடல் வலு பெற்று தன் வீட்டைவிட்டு வெளியில் வருகிறாள். குப்பைமேட்டைப் பார்த்து ஆச்சரியப்படுகிறாள். அவள் இடுப்பு உயரத்துக்கு சோளங்கள் முளைத்து செழித்திருந்தன. குப்பையோடு குப்பையாக சோளங்களையும் அங்கே தூக்கியெறிந்தது அவள் நினைவுக்கு வருகிறது. உடனே அவள் கூவினாள். ‘யுரேகா! யுரேகா! ஒரு செடியை வளர்க்கும் முறையை நான் கண்டு பிடித்துவிட்டேன்!’

விரைவில் பெண்கள் தங்கள் குடியிருப்புக்கு அருகிலுள்ள பகுதிகளில் செடிகளை வளர்க்கத் தொடங்கினார்கள். உண்பதற்கு ஏற்ற தானியங்களை அவர்கள் பரிசோதனை முறையில் கண்டுபிடித்து விதைக்கத் தொடங்கினார்கள். ஆண்கள் வேட்டையில் பொழுதைக் கழித்த நேரங்களில் பெண்கள் இயற்கையை ஆழ்ந்து கற்கத் தொடங்கினர். குழு உறுப்பினர்களின், குழந்தைகளின் உணவுத் தேவையை நிறைவேற்றும் பொறுப்பையே பெண்கள் ஏற்றிருந்தனர் என்பதால், உணவுப் பஞ்சத்தைப் போக்கும் வழியை ஆராய ஆண்களைக் காட்டிலும் பெண்களே தீவிரமாக இருந்தனர்.

இயற்கையின் மர்மத்தை அவர்களாலேயே நுணுக்கமாகப் புரிந்துகொள்ள முடிந்தது. இது வெறுமனே கற்பனைக் கதை அல்ல. சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அநேகமாக அனைவரும் காட்டுணவை மையமாகக் கொண்டே வாழ்ந்ததற்கும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அனைவரும் விவசாயிகளாக மாறியதற்கும் ஆதாரங்கள் உள்ளன என்கிறார் டாக்டர் மார்க் நான் கொஹேன். இந்தப் புரட்சிகரமான மாற்றத்தை நிகழ்த்தியவர்கள் பெண்கள். செடி, கொடிகளை வளர்ப்பதில் பெண்களின் பங்கு தீர்மானகரமானது என்கிறார் அறிஞர் மிர்சியா எலியாத். இவர் மட்டுமல்ல… பெண்களே விவசாயத்தின் முன்னோடிகள் என்பதைப் பல ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

பெரும்பாலும் ஒரு விபத்து போலவே விவசாயம் நிகழ்ந்திருக்க வேண்டும். குழந்தை பிறப்பின்போது பெண்கள் நகர முடியாத நிலையில் இருந்ததால், செடிகளின் வளர்ச்சியை நிதானமாகவும் உன்னிப்பாகவும் ஓரிடத்தில் இருந்தபடி அவர்களால் ஆராய முடிந்தது. இதனால் வாழ்க்கை முறையிலேயே கூட அடிப்படை மாற்றங்கள் நிகழ்ந்தன. குழந்தை பிறப்பு, குழந்தை வளர்ப்பு இரண்டுக்கும் நிரந்தரக் குடியிருப்பு அவசியமாக இருந்ததால், நாடோடி வாழ்க்கை முறையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. மனிதர்கள் நிரந்தரக் குடியிருப்புகளை நாடத் தொடங்கினார்கள். இந்த மாற்றம் விவசாய வளர்ச்சியை அதிகப்படுத்தியது. நிலையாக ஓரிடத்தில் குவிந்த குழுக்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு அருகில் பயிரிடத் தொடங்கினார்கள். ஒரு சில இடங்களில் அல்ல… உலகின் தொன்மையான நாகரிகங்கள் பலவற்றிலும் இந்த வழக்கமே நிலவியது என்கிறார்கள் தொல்லியல் ஆய்வாளர்கள். மனித குலத்தை பஞ்சத்திலிருந்தும் அழிவிலிருந்தும் மீட்டெடுத்த பெண்களை அப்போதைய சமூகம் கடவுளாகவே ஏற்று, மதித்துக் கொண்டாடியது. மெக்சிகோவின் மையப் பகுதியில் 15 முதல் 16ம் நூற்றாண்டு வரை உயிர்த்திருந்த ஆஸ்டெக் நாகரிகத்தில் பல பெண் கடவுள்கள் இடம்பெற்றிருந்தனர்.

சிகோமெகோடல் சிற்பம், wikipedia

சிகோமெகோடல் அவர்களில் ஒருவர். ஊட்டச்சத்தின் தாய் என்னும் அடைமொழியுடன் இவர் அழைக்கப்பட்டார். சிகோமெகோடலை வழிபட்டால் அனைவருக்கும் சத்தான நல்ல உணவு கிடைக்கும் என்று ஆஸ்டெக் மக்கள் நம்பினர். சோளமே அவர்களுடைய பிரதான உணவாக இருந்தது என்பதால் தங்களுக்கு உணவு வழங்கும் கடவுளை அவர்கள் சோளத்தின் அவதாரமாகவே கண்டனர். நமக்குக் கிடைத்திருக்கும் உருவப் படங்களைப் பார்வையிட்டால் சோளங்களே சிகோமெகோடலின் காதுகளாக அமைந்திருப்பதைக் காணமுடிகிறது.

மாயன் நாகரிக மக்களுக்கும் சோளமே முக்கிய உணவு என்பதால், அவர்களுடைய கடவுளும் ஒரு பெண்ணாகவே இருக்கிறார். அவர்களுடைய 16ம் நூற்றாண்டு இதிகாசங்களை எடுத்துப் பார்த்தால் ஆண்கள் சோளங்களில் இருந்து உதித்தவர்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, ஆண்கள் பெண்களிடம் இருந்தே உருவாகிறார்கள். பெண்கள் சோளத்தின் குறியீடு என்பதால் மனிதர்கள் அனைவருமே சோளத்தின் குழந்தைகளே.

சிகோமெகோடலுக்குப் போட்டியாக செண்டியோல் என்னும் பெயரில் ஆஸ்டெக் மக்கள் ஓர் ஆண் கடவுளை உருவாக்கி வழிபட்டனர். அந்தக் கடவுளுக்கு ஒவ்வோராண்டும் ரத்த பலியெல்லாம் கொடுக்கப்பட்டது. ஆனால், பெண் சோளக் கடவுள்களுக்கு இணையாக ஆண்களால் புகழ்பெற முடியவில்லை. எண்ணிக்கையிலும்கூட ஆண் சோளக் கடவுள்கள் சொற்பமானவர்கள்தாம். சுனி என்னும் பழங்குடி அமெரிக்கர்களின் புராணத்தில் குறிப்பிடத்தக்கவர்கள், எட்டு சோளக் கன்னிகள்.

George Catlin, Green Corn Dance – Minatarrees, American, 1796 – 1872, 1861, oil on card mounted on paperboard, Paul Mellon Collection

இவர்கள் நம் கண்களுக்குத் தெரியமாட்டார்கள். ஆனால், இவர்களுடைய அழகான நடனத்தைக் காண முடியும். காற்றில் அசைந்தாடும் சோளக் கதிர்களை உன்னிப்பாகப் பார்த்தால் இந்த எட்டு கன்னிகளும் தென்படுவார்கள். காற்றின் அசைவுக்கேற்ப, சோளக் கதிர்களோடு சேர்ந்து இவர்கள் ஆடுவதை நீங்கள் காணலாம். பிறகு என்ன நடந்ததென்றால், அதே ஊரைச் சேர்ந்த இளம் கடவுள் ஒருவர் இந்த எட்டு பேர்மீதும் ஒரே நேரத்தில் காதல் வயப்பட்டார். இது தெரிந்ததும் கன்னிகள் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். அவர்கள் வெளியேறிவிட்டதால் நடனம் நின்றுவிட்டது.

நடனம் நின்றுவிட்டதால் சோளங்கள் விளையவில்லை. பஞ்சமும் பசியும் பெருகத் தொடங்கின. உடனே இளம் கடவுள் ஓடிச் சென்று கையில் காலில் விழுந்து எட்டு கன்னிகளையும் மீண்டும் அழைத்து வந்தார். பழையபடி சோளங்கள் விளையத் தொடங்கின. பயிர்கள் விளைவதற்குக் காரணம் டெமெட்டர் என்னும் பெண் தெய்வம்தான் என்பது பண்டைய கிரேக்கர்களின் நம்பிக்கை. அதனால் நன்றிக்கடன் செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அறுவடைக்குப் பிறகு தயாரிக்கப்படும் ரொட்டியில் முதலாவதை பயபக்தியுடன் டெமெட்டருக்குப் படைத்துவிடுவார்கள்.

ஒருநாள் ஹேட்ஸ் என்னும் பாதாளக் கடவுள் டெமெட்டரின் மகள் பெர்சிபோனைக் கடத்திச் சென்று தன் மனைவியாக்கிக் கொண்டுவிடுகிறார். கோபம் கொண்ட டெமெட்டர் உலகைச் சபிக்கிறார். செடி கொடிகள் பட்டுப்போகின்றன. நிலம் காய்ந்துவிடுகிறது. உடனே வான் கடவுளான ஜீயஸ் களத்தில் இறங்கி ஹேட்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்குகிறார். டெமெட்டரின் மகளைத் திருப்பியனுப்ப ஹேட்ஸ் சம்மதிக்கிறார் என்றாலும், ஒரு சிக்கல் முளைக்கிறது. பாதாள உலகில் இருந்தவரை பெர்சிபோன் அங்குள்ள உணவைத்தான் உண்டிருக்கிறார் என்பதால், அவர் அந்த உலகுக்கும் சொந்தமானவரும்கூட என்றாகிவிடுகிறது.

எனவே, ஓர் ஏற்பாடு செய்யப்படுகிறது. அதன்படி பெர்சிபோன் ஒவ்வோர் ஆண்டும் 4 மாதங்கள் மட்டும் கீழுலகுக்குச் சென்றுவிட வேண்டும். அவ்வாறு அவர் மறைந்துவிடும் வேளைகளில் எல்லாம் டெமெட்டர் வாடியிருப்பார். தானியங்களின் கடவுளான அவர் வாடினால் தானியங்களும் வாடிவிடும் அல்லவா? அதனால்தான் ஆண்டுதோறும் நான்கு மாதங்கள் விளைச்சல் இருப்பதில்லை. அது பனிக்காலம் என்றழைக்கப்பட்டது. தன் மகளுடன் டெமெட்டர் மகிழ்ந்திருக்கும் பொழுதுகள் வசந்த காலமாக செழித்தது.

அரிசி பிரதான உணவாக இருக்கும் இடங்களில் பெண்ணே அரிசியாகவும் கடவுளாகவும் திகழ்ந்தார். உதாரணம், இந்தோனேஷியர்கள். பெண்ணின் உடல்தான் அரிசிப் பயிரை உண்டாக்கியது என்பது அவர்கள் நம்பிக்கை. அறுவடைக்குப் பிறகு கடைசியாக எஞ்சியிருக்கும் கதிர்க் கட்டைக் கொண்டு ஒரு பெண் உருவம் அமைத்து அலங்காரம் செய்யும் வழக்கம் அவர்களுக்கு இருந்தது. பயிரைக் காப்பாற்றி, விளைச்சலைப் பெருக்கி எல்லோருக்கும் உணவு அளிக்கும்படி அரிசிக் கடவுளை அவர்கள் வேண்டிக் கொண்டனர்.

பண்டைய ஐரோப்பியர்களின் உணவு கோதுமையும் பார்லியும் என்பதால் அவர்கள் கோதுமை தாய், பார்லி தாய் இருவரையும் உருவாக்க வேண்டியிருந்தது. அவர்களுக்குப் படையலிட்டு வழிபட வேண்டியிருந்தது. மெசபடோமியர்களின் விளைச்சலுக்காக வழிபட்ட பெண் கடவுளின் பெயர் இஷ்தார். வான் கடவுளின் மகள் என்று இஷ்தாரை அவர்கள் நம்பினர். ரிக் வேதத்தில் காணப்படும் பிரித்வி என்னும் பெண் கடவுள் மண்ணின் வளத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

அன்னபூர்னேஸ்வரி உணவின் கடவுளாக இன்றும் வழிபடப்படுகிறார். இவரோடு, உணவுக்கும் விளைச்சலுக்கும் செழிப்புக்கும் மேலும் பல பெண் கடவுள்கள் இந்தியா முழுக்க உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு சமூகமும் தங்கள் உயிர் காக்கும் உணவைப் பெண் கடவுளாக உயர்த்தியதைப் பார்க்கும்போது, தொல்லியல் ஆய்வாளர்களும் மானுடவியலாளர்களும் ஏன் விவசாயத்தைக் கண்டுபிடித்தவர்கள் பெண்கள் என்று கூறுகிறார்கள் என்பது அழுத்தமாகப் புரியும். மேலே விவரிக்கப்பட்டுள்ள இதிகாசக் கதைகளில் காணப்படும் குறிப்புகள் பலவும் முக்கியமானவை. மனிதர்களுக்கு உயிரும் உணவும் அளித்தவர்கள் பெண்கள்.

டெமெட்டர் மகிழ்ச்சியுடன் இருந்தால்தான் உலகம் செழிக்கும், அவர் வாடும் ஒவ்வொரு முறையும் உலகம் வாடுகிறது. இயற்கையோடு பெண்களே நெருக்கமாக இருக்கிறார்கள். இயற்கையைப் போல அவர்களும் புதிய உயிர்களை உருவாக்கு கிறார்கள். பிறப்புக்கும் வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் உலகம் அவர்களையே நம்பியிருக்கிறது. பெனோப்ஸ்காட் இந்தியர்கள் என்று அழைக்கப்படும் மற்றொரு அமெரிக்கப் பழங்குடி மக்களின் சோளக் கதை நெகிழ்ச்சி யூட்டக்கூடியது. பூமியில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் நிறைந்திருந்த வேளையில் பஞ்சம் ஏற்பட்டது.

வேட்டையாடுவதைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்பதால், ஆண்கள் களைத்துப் போயிருந்தனர். ஒரு விலங்குகூட உயிருடன் இல்லை. அப்போது பூமியின் முதல் தாய் அழத் தொடங்கினார். வீறிட்டு கதறும் தன் குழந்தைகளுக்கு உணவூட்ட முடியவில்லையே என்னும் துயரம் அவரை வாட்டியெடுத்தது. நிதானமிழந்த அந்தத் தாய் தன் கணவனை அழைத்து பின்வருமாறு வேண்டிக் கொண்டார்… ‘என்னைக் கொன்றுவிடுங்கள். என் குழந்தைகள் என் தங்க நிற தலைமயிரைப் பிடித்துக்கொண்டு தரதரவென்று என் உடலை இழுத்துச் செல்லட்டும். என் எலும்புக்கூட்டிலிருந்து சதையெல்லாம் பிரிந்து வரும் வரை என்னை அவர்கள் இழுத்துச் செல்லட்டும். பிறகு என் எலும்புகளை அவர்கள் புதைக்கட்டும். 7 மாதங்கள் கழித்து அவர்கள் திரும்பி வந்தால் எல்லாருக்கும் உணவு கிடைக்கும்…’

7 மாதங்கள் கழித்து அவர்கள் தாய் புதைக்கப்பட்ட இடத்தை அடைந்தார்கள். ஆச்சரியமூட்டும் வகையில் அங்கே சோளக் கதிர்கள் வளர்ந்திருந்தன. ஒரு சோளத்தை எடுத்து உரித்துப் பார்த்தார்கள். உள்ளே தங்க நிறத்தில் முதல் தாயின் கேசம் இருப்பதைக் கண்டனர். சோளத்தின் மென்மையான பகுதிகள் தாயின் சதையை ஒத்திருப்பதையும் கண்டார்கள். சோளத் தாய் அல்லது முதல் தாய் தன் வாக்கை நிறைவேற்றினார். தன் கணவனுக்கும் குழந்தைகளுக்கும் மட்டுமல்ல… அந்த ஊருக்கே அவர் பசியாற்றினார்.

19ம் நூற்றாண்டில் அயர்லாந்தை உலுக்கியெடுத்த பஞ்சத்தைப் பற்றி அமண்டா எட்மண்ட் என்னும் பெண் கவிஞர் எழுதிய பாடலில் இருந்து சில வரிகள் இதோ…

‘நான் பசியாலும் குளிராலும் இறந்து கொண்டிருக்கிறேன் அம்மா, எனக்கு மூன்றே மூன்று சோள தானியங்கள் தா! என் அருகில் வா, அம்மா என்னைக் கட்டியணைத்துக்கொள் விரைந்து வா, என்னால் உன்னைக் காணமுடியவில்லை என் சுவாசம் கிட்டத்தட்ட நின்றுவிட்டது அம்மா! அன்பு அம்மா! நான் இறப்பதற்குள் மூன்று சோள தானியங்கள் தந்துவிடு!’ பஞ்சம், பசி, துயரம், மரணம் என்றதும் மனிதர்கள் தவிர்க்கவியலாதபடி இன்றும் ஒரு பெண்ணிடம்தான் இறைஞ்சுகிறார்கள். அமண்டா எட்மண்டுக்கு அந்தப் பெண் ஒரு தாயாக இருக்கிறார். மற்றவர்களுக்கு அவள் ஒரு துணை அல்லது சகோதரி அல்லது தோழி. இப்படி வெவ்வேறாக அழைப்பதற்குப் பதில் பண்டைய மனிதர்கள் சமயோசிதமாக ஒரே பெயரால் பெண்ணை அழைத்தனர்… கடவுள்!

தானியங்களின் கடவுளான அவர் வாடினால் தானியங்களும் வாடிவிடும் அல்லவா? அதனால்தான் ஆண்டுதோறும் நான்கு மாதங்கள் விளைச்சல் இருப்பதில்லை. அது பனிக்காலம் என்றழைக்கப்பட்டது. தன் மகளுடன் டெமெட்டர் மகிழ்ந்திருக்கும் பொழுதுகள் வசந்த காலமாக செழித்தது.

அன்னபூர்னேஸ்வரி, Indiamart

அன்னபூர்னேஸ்வரி உணவின் கடவுளாக இன்றும் வழிபடப்படுகிறார். இவரோடு, உணவுக்கும் விளைச்சலுக்கும் செழிப்புக்கும் மேலும் பல பெண் கடவுள்கள் இந்தியா முழுக்க உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு சமூகமும் தங்கள் உயிர் காக்கும் உணவைப் பெண் கடவுளாக உயர்த்தியதைப் பார்க்கும்போது, தொல்லியல் ஆய்வாளர்களும் மானுடவியலாளர்களும் ஏன் விவசாயத்தைக் கண்டுபிடித்தவர்கள் பெண்கள் என்று கூறுகிறார்கள் என்பது அழுத்தமாகப் புரியும்.

பூமியில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் நிறைந்திருந்த வேளையில் பஞ்சம் ஏற்பட்டது. வேட்டையாடு வதைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்பதால், ஆண்கள் களைத்துப் போயிருந்தனர். ஒரு விலங்குகூட உயிருடன் இல்லை. அப்போது பூமியின் முதல் தாய் அழத் தொடங்கினார். வீறிட்டு கதறும் தன் குழந்தைகளுக்கு உணவூட்ட முடியவில்லையே என்னும் துயரம் அவரை வாட்டியெடுத்தது.

மனித குலத்தை பஞ்சத்திலிருந்தும் அழிவிலிருந்தும் மீட்டெடுத்த பெண்களை அப்போதைய சமூகம் கடவுளாகவே ஏற்று, மதித்துக் கொண்டாடியது.

வரலாறு புதிதாகும்…

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு:

மருதன்

எழுத்தாளர், வரலாற்றாளர். சே, ஹிட்லர், ஃபிடல் காஸ்ட்ரோ, திப்பு சுல்தான், மண்டேலா, மாவோ, ஸ்டாலின் ஆகிய உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியுள்ளார். இவரது ஹிட்லரின் வதைமுகாம்கள், முதல் உலகப் போர், இரண்டாம் உலகப்போர், ஷெர்லக் ஹோம்சால் தீர்க்க முடியாத புதிர், துப்பாக்கி மொழி, திபெத்- அசுரப் பிடியில் அழகுக்கொடி, ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன் ஆகிய நூல்கள் கவனம் ஈர்த்தவை. பிரபல தமிழ் இதழ்களில் தொடர்கள் எழுதிவருகிறார். இந்து தமிழ் திசை மாயா பஜார் குழந்தைகள் இணைப்பிதழுக்கும் கட்டுரைத் தொடர் எழுதி வருகிறார்.