உலகின் பெரும் பணக்கார இணையர்களில் ஒருவரான பில் கேட்ஸ், மற்றும் அவர் மனைவி மெலிண்டா கேட்ஸ் இருவரும் மனம் இசைந்து, தங்கள் 27 ஆண்டுகால திருமண உறவை விட்டு விடுதலை ஆகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லி இருக்கும் காரணம், “இதற்கு மேலும் நாங்கள் ஒன்றாக இணைந்து வளர்ச்சி அடைய முடியாது” என்பதே. இதற்கு பல எதிர் வினைகள், கிண்டல் பதிவுகள் வந்து கொண்டிருக்கின்றன.
- விவாகரத்து செய்பவர்களைக் கண்டு பரிதாபம் கொள்வதை விடுங்கள். அதை விட மோசமான திருமண உறவில் சிக்குண்டு கிடக்கும் உங்கள் தோழிகள், தோழர்களுக்காக பரிதாபம் கொள்ளுங்கள். (அது நீங்களாகக் கூட இருக்கலாம்!)
- நீங்கள் உங்கள் இணையுடன் நன்றாகவே வாழ்ந்தாலும், பிரியும் யாரையும் கண்டு பரிதாபம் கொள்வதை விடுங்கள். எந்த உறவும் வாழ்நாளின் இறுதிவரை நீடிக்கும் என்ற கற்பனையை விடுங்கள். முட்டாள்தனமான தேவதைக் கதைகளை நம்பாதீர்கள்.
- சமூகம் பற்றிய அச்சம் இல்லை என்றால் இன்று எத்தனை திருமணங்கள் நீடித்து இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? சமூக, குடும்ப, பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்படும் அச்சத்தால் மட்டுமே குடும்பம் என்ற அமைப்பு இன்று நீடித்து நிற்கிறது. அன்பு மற்றும் மகிழ்வால் நிலைத்திருக்கும் ஜோடிகள் எத்தனை பேர் என்று நினைக்கிறீர்கள்?
- அச்சம் ஒன்று மட்டுமே இன்றைய சூழலில் திருமணங்களை இணைத்துப் பிடிக்கிறது. குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய அச்சம், வீடில்லாமல் போகுமோ என்ற அச்சம், பெருமளவில் ஜீவனாம்சம் தரவேண்டுமோ என்ற அச்சம், வாழ்க்கைத் தரம் கீழிறங்கி விடுமோ என்ற அச்சம், தனியே வாழ நேரிடுமோ என்ற அச்சம், நோய்வாய்ப்பட்டால் நம்மை கவனிக்க யாரும் இல்லாமல் போகக் கூடும் என்ற அச்சம், பெற்றோர் என்ன சொல்வார்களோ என்ற அச்சம், சமூகம் என்ன சொல்லுமோ என்ற அச்சம்…
- பெற்றோர் பிரிந்து போனால் குழந்தைகள் வாழ்க்கை கேள்விக்குள்ளாகும் என்ற கூற்று சரியல்ல. பெரியோருக்கு தான் மண்டைக்குள் சிக்கலே தவிர, குழந்தைகளுக்கு அல்ல. மண உறவில் இருக்கும் பெற்றோரா, பிரிந்திருக்கும் பெற்றோரா யாரால் குழந்தைகளுக்கு சிக்கல் என்பதே கேள்வியல்ல. என்ன மாதிரியான பெற்றோர் அவர்கள் என்பதே இங்கே கேள்வி.
இந்தியா போன்ற நாடுகளில் விவாகரத்து பெறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நம் பரிதாபம் தேவையல்ல, நம் பெரும் மதிப்பும் மரியாதையும் தான் தேவை. ஏனென்றால் சிறு வயது முதலே அவர்களுக்குள் திணிக்கப்பட்டு இருக்கும் எல்லைகளை, உங்களையும் கட்டி வைத்திருக்கும் எல்லைகளை அவர்கள் உடைத்து வெளிவருகிறார்கள்.
திருமணத்தில் இருந்து விடுபட நினைக்கும், ஆனால் வெளிவர முடியாத பெண்களைக் கண்டு நான் தீர்ப்பிடுவதும் இல்லை, பரிதாபம் கொள்வதும் இல்லை. அவர்கள் தங்கள் பொன் விழாவைக் கொண்டாடும் போது அவர்களுடன் நானும் கொண்டாடுவேன் என்று எனக்குத் தெரியும். இந்த மன உறுதிக்கு நான் அவர்கள் மேல் மட்டற்ற மரியாதை வைத்திருக்கிறேன்; இப்படி வாழ்வது எளிதல்ல.
ஆனால் ஒரு விவாகரத்துக்கும் இதே அளவு முயற்சியும், துணிவும் தேவைப்படுகிறது. விவாகரத்துகளைக் கண்டு உச் கொட்டுவதை நிறுத்துவோம். திருமணமாகும் ஒரு இணையரை வாழ்த்துவது போல ஒத்த கருத்துடன் பிரியும் இணையரையும் வாழ்த்துவோம். ஏனென்றால் அவர்கள் ஒன்றாக சேர்ந்து இருந்ததை விட, இப்போது தனியே இன்னும் நிறைவான, தங்களுக்கு மகிழ்வான, அர்த்தம் பொதிந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவிருக்கிறார்கள். அதில் வேறு ஒருவருக்கும் இடம் இருக்கலாம்.
வாழ்த்துகள் பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா ஆன் ப்ரெஞ்ச்💐
Improved and translated from Karishma VP’s English post.
- நிவேதிதா லூயிஸ்