பௌத்த வசுதாரா வழிபாட்டுக்கும், வரலட்சுமி விரதத்துக்கும் இடையேயுள்ள தொடர்பை கட்டுரை விளக்குகிறது. மதங்கள் ஒன்றிடமிருந்து மற்றது எப்படி உள்வாங்கி திளைத்திருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது இந்தக் கட்டுரை.

“வரலட்சுமி விரதம்…செல்வம் கொட்டும் லட்சுமி உங்களுக்கு எல்லா வரமும் அருளட்டும்”- தென்னாப்பிரிக்காவிலிருந்து இன்று காலை சுசீலா அம்மா அனுப்பிய செய்திக்குப் பிறகுதான் இன்று வரலட்சுமி நோன்பு என்று புரிந்தது. சமூக ஊடகங்களில் பெண்கள் மங்கலகரமாக மஞ்சள், குங்குமம், புதுப்பட்டு, கோலம், பூ என்று முகப்புப் படங்கலில் கலக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

வரலட்சுமி விரதம் என்றதுமே கணவரின் நீடித்த ஆயுள், வீட்டில் செல்வம் கொழிக்க என்று அதை பெண் தன் ‘குடும்பத்துக்காகவும்’, ‘கணவரின் நன்மைக்காகவும்’ செய்யும் ஒருத்தல் என்றே சமூகம் பெண்கள் மூளையில் பதிய வைத்திருக்கிறது. வரலட்சுமியை லட்சுமியின் ‘வரம்’ தரும் அவதாரமாக இந்து மதம் உருவகம் செய்திருக்கிறது. வழிபாட்டில் தங்கம், தங்க நிறப் பொருள்கள் பயன்படுத்துவதன் பின்னுள்ள கருத்துருவாக்கமும் செழுமையை முன்னிலைப்படுத்தியே.

பெண்ணை வளமைக்குரிய தெய்வமாக வழிபடுவது தமிழருக்குப் புதிதல்ல. புதிய கற்காலத்தில் ‘ஆந்த்ரோமோர்ஃப்’ என்று சொல்லக்கூடிய விசிறி வடிவக் கற்களை வளமையின் கூறியீடாக வணங்கி வந்திருக்கிறார்கள். உலகின் பல தொல் நாகரிகங்களிலும் இந்த வளமை-பெண் உருவகப்படுத்தல் உண்டு, வழிபாடுகளும் உண்டு. இந்த வளம் என்பதை மண்ணுடன், மழையுடன், செழிப்புடன் உருவகப்படுத்தி விரதம் இருக்கும் முறை பண்டைய பௌத்தத்திலும் இருந்திருக்கிறது.

வசுதாரா ஓவியம், பௌபா (நேபாள தாந்த்ரீக ஓவியம்)

இந்துக்களுக்கு வரலட்சுமி போல நேபாளத்து மண்ணின் மைந்தர்களான நேவார் பௌத்த மக்களுக்கு ‘பசுந்தரா விரதம்’. வசுந்தரா/வசுதாரா- வஜ்ராயண மற்றும் மகாயாண பௌத்தத்தில் பூமிதேவியாக, செல்வத்தின் அதிபதியாக, ஜம்பாலனின் மனைவியாகக் கொண்டாடப்படுகிறாள். அவளுக்கு விரதமிருந்தால், அறுவடை காலத்தில் செல்வமும், அடுத்த விதைப்புக்கு மழையும் தருவாள் என்றே நேவார் மக்கள் நம்புகிறார்கள்.

பண்டைய பௌத்த நூல்களான சந்தனமாலா உள்ளிட்டவை வசுந்தராவை வசுதாரா என்றே குறிக்கின்றன. ஒரிசாவின் ரத்னகிரி பகுதியில் பௌத்த விகாரத்தில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வுகளில், ஜம்பாலா (இந்து மத விஷ்ணுவுக்கு நிகராக சொல்லப்படும் பௌத்த கடவுள்) தலைக்குப் பின்னே உள்ள கல்வெட்டு ‘வசுதாரா’ என்றே சொல்கிறது. அதே கல்வெட்டின் ‘மந்திரம்’ வசுதாராவை ‘மகாவசுவ்ரித்தினிபத்தினி’ என்று குறிப்பிடுகிறது. இதற்கு சமஸ்கிருதத்தில் செல்வத்தை மழையாய்ப் பொழிபவள் என்று பொருள். வசு-தாரா என்றாலும் சமஸ்கிருதத்தில் அதே பொருள் தருகிறது.

இதில் செல்வம் என்பதை நேவார் நேபாள மக்கள் பருவ மழையெனக் கொள்கிறார்கள். இயற்கையுடன் இயைந்து வாழும் வேளாண் மக்களான இவர்கள், ஒவ்வொரு ஆண்டும் வசுதாராவுக்கு விரதமிருந்து, நல்ல மழை பொழியவேண்டும் என்று வேண்டுகிறார்கள். ‘வசுதார தரணி’ என்ற பௌத்த நூல் ‘சுசந்திரன் கதை’யுடன் வசுதாராவை இணைக்கிறது.

மிகச் சாதாரணனாக சாக்கியமுனி புத்தரின் காலத்தில் வாழும் சுசந்திரன், சுய தேவைக்கு அதிகமாக உள்ள தன் செல்வத்தை வறியவர்களுக்கு வழங்கினான். ஆனால் ஒரு கட்டத்தில் அவனிடமிருந்த செல்வம், ஊதாரியான அவன் மகனால் குறையவே, புத்தரை நாடுகிறான். அவனுக்கு வசுதாரா தரணியை அறிமுகம் செய்யும் புத்தர், விரதமிருந்து அதைப் பெறச் சொல்கிறார். அவனும் அவ்வாறே செய்ய செல்வம் கொழிக்கிறது.

புத்தர் ஆசையைத் துறக்கச் சொன்னவர் அல்லவா? பின் எப்படி செல்வத்தைப் பெற ஆலோசனை சொன்னார்? ‘பலருக்கு நன்மை பயப்பதால்’, ‘பலருக்கும் இன்னல் தீர்வதால்’ வசுதாரா போதிசத்துவரை வணங்குவதில் தவறில்லை என்று புத்தர் சொல்கிறார். ஒவ்வொரு வசுதாரா விரதத்தின் போதும் இந்தக் கதை நேவாரி நேபாளிகளிடம் சொல்லப்படுகிறது. செல்வத்தை ஒருவன் தனக்குத் தானே பூட்டி வைப்பதற்கு இல்லாமல், பொது நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்ற மிக முக்கிய செய்தியை வசுதாரா விரதம் சொல்கிறது. இதில் ஆண் பெண் வேறுபாடு கிடையாது . இரு பாலரும் கடைபிடிக்கிறார்கள்.

பண்டைய இந்தியாவிலிருந்து திபெத், நேபாளம் சென்றுள்ள தாந்த்ரீக பௌத்த வழிபாட்டின் நீட்சி தான் இன்று நேபாளத்தில் செய்யப்படும் வசுதாரா விரதம். ஒவ்வொரு ஆண்டும் வங்க பாத்ரா மாதத்தில் 13ம் நாளில் இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது. வஜ்ராயண பௌத்தத்தை கடைபிடிப்பவர்கள் இந்த விரதத்தை வஜ்ராச்சாரியார்கள் முன்னிலையில் எடுத்துக் கொள்கிறார்கள். குழுக்களாக ‘குதி’ அமைப்புகள், அவற்றில் கணக்கு எழுதுபவர்கள் கட்டாயம் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். இதில் நேவார் மக்களின் ‘குதி’ (கோஷ்டி/கோதி) குறித்தும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

வஜ்ராச்சாரியார்

சமீபத்தில் இந்த ‘குதி’ முறையை ஒழிக்க நேபாள கம்யூனிச அரசு கொண்டு வந்த தீர்மானம் கடும் எதிர்ப்பை சந்தித்து, கிடப்பில் போடப்பட்டது. பண்டைய கூட்டு முதலாளித்துவம் தான் இந்த ‘குதி’ (Guthi). கூட்டாக வேளாண் நிலங்களை ஒவ்வொரு சமூகமும் நிர்வாகம் செய்கிறது. நேவார் குடும்பங்களில் ஒவ்வொருவருக்கும் குதியில் பங்குண்டு. இன்னார் இன்னது தான் செய்யவேண்டும் என்று கோட்பாடுகள் கிடையாது. எல்லோரும் எல்லாமும் செய்யவேண்டும் என்பதே குதியின் எழுதப்படாத விதி.

அவ்வாறு வேளாண்மை செய்ய தேவைப்படும் பணம், அதன் நிர்வாகத்தை செய்யும் குடும்பங்கள் கட்டாயம் வசுதாரா விரதம் இருத்தல் வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை இந்த விரதம் இருப்பவர்கள் அதன் பின் தான் பொதுப் பணத்தைக் கையாளமுடியும் என்ற நடைமுறை அங்குண்டு. பொதுப்பணத்தைக் கையாளுபவர்கள் அதை நேர்மையாகச் செய்யவேண்டும் என்ற தெளிவையும், அவர்களுக்கு செல்வம் வற்றாமல் கிடைக்கவேண்டும் என்ற ஆசியையும் இந்த விரதநடைமுறை தருகிறது.

மழைக்கும் வசுதாராவுக்குமான தொடர்பு அவளது சிற்ப அடையாளங்களில் தெளிவாக சொல்லப்படுகிறது. பெரும்பாலும் வரலட்சுமியின் படிமவியல் அடையாளங்கள் போலவே தான் வசுதாராவும் தெரிகிறாள்.

தாமரையில் லலிதாசன நிலையில் வீற்றிருக்கிறாள், பொன் நிறத்தில் காணப்படுகிறாள், ஆறு கைகளில் வளமையைக் குறிக்கும் நெற்கதிர்கள் (தமிழக பெண் தெய்வங்களின் கைகளில் இதைக் காணலாம், ஆதிச்சநல்லூர் வளமைப்பெண் நெற்கதிர் அருகே தான் வனையப்பட்டிருக்கிறாள்), வலது கை ஒன்று வரத முத்திரையில் அபயமருள்வது போல, இடது கையில் தீர்த்தக் குடம் (பத்ரகடம்) இருக்கிறது. இதைத்தான் ‘காசு கொட்டும் குடமாக’ நவீன ஓவியங்கள் சித்தரிக்கின்றன. மற்ற கைகளில் புத்தரின் மூன்று ரத்தினங்கள், பிரக்ஞபரமிதை (ஞானத்தைக் குறிக்கும் பௌத்த நூல்) ஆகியவை உள்ளன.

மாறனை வெல்லும் புத்தர், வசுதாராவை மண்ணிலிருந்து வெளிவருமாறு கைகாட்டுவது போலத்தான் பல பௌத்த படிமவியல் குறியீடுகள் காட்டுகின்றன. அதைக் கொண்டு பூதேவியாகவும் வசுதாராவை பௌத்தர்கள் கொண்டாடுகிறார்கள். வசுதாராவின் காலடியில் தலைகீழாகக் கவிழ்ந்து கிடக்கும் நீர்க்குடம் ஒன்றும் காணப்படுகிறது. அசோகரின் ஸ்தூபியில் கூட இந்த ‘வர்சஸ்தலி’- தலைகீழ் நீர்க்குடம் காணப்படுவதால், இந்த நீர்க்குடம் வளமையை, மழையைக் குறிப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

வசுதாரா விரதம்

தீல விரதம், திரிதிய விரதம் என்றும் இந்த விரதத்தை நேவார்கள் அழைக்கிறார்கள். விரதத்தை முறிக்க அடுத்த நாள் வாழும் தெய்வம் வசிக்கும் ‘ குமரிக் கோயிலுக்கு’ செல்கிறார்கள். மாதவிடாய் வராத இளம் பெண்ணை நேபாள மன்னர் உள்ளிட்ட அத்தனை பேரும் அவளது உடலிலிருந்து முதல் சொட்டுக் குருதி வெளியேறும் வரை ‘கன்னிக் கடவுளாக’ வழிபடுகிறார்கள். இது பௌத்தம், இந்து மதம் இரண்டுக்கும் பொதுவான வழிபாடாக இருக்கிறது. இதை விரிவாக இன்னொரு நாள் பேசலாம்!

இவ்வாறு வேளாண்மைக்கு மழை வேண்டி வணங்கப்பட்ட வசுதாரா வழிபாடு நேபாளத்தில் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது. வரலட்சுமி நோன்பிலும் இதே வளமையின் பானை (கலசம்) உண்டு, அதை அலங்காரம் செய்து வணங்கி வழிபடுதல் உண்டு! எல்லா மதங்களும் நமக்கு சொல்வது ஒன்று தான். வளமை என்பது தனி நபரிடம் இருப்பதல்ல, ஒட்டு மொத்த சமூகத்திடம் உள்ளது; செல்வம் வேண்டி வழிபடும் முறையில், ஆணாதிக்க கூறுகள் எங்கிருந்தோ ஒட்டிக்கொண்டு ‘மாங்கல்ய பலன்’, மஞ்சள், குங்குமம் நிலைக்க என்று என்னென்ன காரணங்களோ மறுவி நம்மிடம் நிலைத்துவிட்டன. மழை வேண்டுவோம், செழிப்பு வேண்டுவோம், சமூகத்துக்கு ஏற்றம் வேண்டுவோம். இனிய வரலட்சுமி விரத வாழ்த்துகள்!

***

படைப்பாளரின் மற்ற கட்டுரைகள் வாசிக்க:

கட்டுரையாளர்:

நிவேதிதா லூயிஸ்

எழுத்தாளர், வரலாற்றாளர்.