இந்த உலகத்தை நாம் அனைவரும் விதவிதமாக நேசிக்கிறோம். நாடாக, ஊராக, மலையாக அருவியாக… இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அதில் சொல்லத் தெரியாத நிறைவிருக்கிறது.

இதன் தொடர்ச்சி எங்கு போய் நிற்கிறது என்றால், ‘உலகத்தில் உள்ள எல்லாமும் எனக்கே சொந்தம்; இவையனைத்தும் எனக்காக படைக்கப்பட்டவை. இவற்றால் நான் மகிழ்வுருவேன். இவற்றினை நான் கட்டியாள்வேன். அனைத்தும் என் கட்டுப்பாட்டில் வரவேண்டும், நான் எப்படி வேண்டுமானாலும் இயற்கையை பயன்படுத்திக் கொள்வேன்’, என்பதில் வந்து நிற்கிறது. இதுதான் மனிதர்களின் பொது சிந்தனையாக இருக்கிறது. ‘நான் வளர்க்கும் பூச்செடியில் பூக்கும் பூ எனக்கே சொந்தம்’ என்னும் சின்ன உணர்வு, உலகத்துக்கும் நமக்குமான உறவாக விரிந்து விடுகிறது.

ஆனால் உண்மைதான் என்ன? உலகில் எல்லாம் மனிதர்களுக்காகத்தான் படைக்கப்பட்டதா? பூக்கும் பூக்களும் கனிகளும் மலையும் அருவியும் மனிதர்களுக்காக மட்டுந்தான் என்று நம்புகிறோமா?

ஆம் என்று உங்களுக்குள் ஒரு பதில் வருகின்றது என்றால் இயற்கையை நீங்கள் உற்று கவனிக்கவில்லை என்று பொருள். தெரியவில்லை என்பது உங்கள் பதில் என்றால், ‘Journey to the centre of the earth’ – உலகின் மையத்துக்கு பயணப்பட தயாராகிவிட்டீர்கள் என்று பொருள். வாருங்கள் ஒரு எழுத்துவழி உலகச்சுற்றுலாவுக்கு…

உலகம் மட்டுமே உயிருள்ளது என்று சொல்லிக் கொள்கிறோம் அல்லவா?

உயிர் என்றால் என்ன?

எது தன்னளவில் இருந்து வளர்ந்து பெரிதாகின்றதோ, எது தன்னைப்போன்ற ஓர் உயிரினத்தை உருவாக்கும் திறன் பெற்றதோ, அதுவே உயிர்ப்பொருள் என்கிறது அறிவியியல்.

ஏதோ ஒரு புள்ளியில் உயிர் இல்லாத வெறும் கரிம மூலக்கூறுகளில் இருந்து தானே வளர்க்கூடிய ஒன்று உருவாகி, அது தன்னைப் போன்ற பிரதிகளை உருவாக்கியபோது உலகம் உயிர்பெற்றது எனலாம். அதுவரை பூமி ஒரு வேதியற்கோள் மட்டுமே.

அப்படி ஒற்றை உருவாக உருவான உயிர் ஒன்றுதான் என்று பல்லாயிரக்கணக்கான வகையில் விலங்குகளாகவும் தாவரங்களாகவும் பூஞ்சைகளாகவும் பாக்டீரியாக்களாகவும் பிரிந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவை எல்லாவற்றிற்கும் அடிப்படைச் சரடு ஒன்றுதான்.

அப்படி இருக்க, இத்தனை வகைகளிலான உயிர்கள் எப்படி தங்களுக்கான இடத்தினை பூமிக்குள் பிடித்திருக்கும்? இந்த பூவுலகில் எப்படி தங்களை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும்? இத்தனை உயிர்களையும் தாண்டி மனித இனம் (பெண்/ஆண்/ பால் புதுமையினர்) எப்படி பெரும் அறிவாளியாகி, எல்லா இடங்களிலும் பரவியது?

எல்லாவற்றையும் யோசிக்க யோசிக்க, இந்த உலகம் மிக பிரமிப்பானதாக தோன்றும். உற்று நோக்குவதன் மூலம் நாம் இயற்கையை அத்தனை புரிந்து கொள்ளலாம். அதனை விரும்ப நமக்கு பெரிய காரணங்களே தேவையில்லை. நாம் அதன் உரிமையாளர் அல்ல, அதன் ஒரு பகுதி என்று தெரிந்தாலே போதும்.

எல்லா உயிர்களும் ஒரே ஒரு துண்டு DNA அளவிலாவது ஒன்றாக இருக்கும். ஏன் என்றால் உயிரின் தொடக்கப்புள்ளி அதுதான். இந்த உலகில் உள்ள கோடான கோடி உயிர்களும் ஒன்றே. நமக்கும் உருளைக்கிழங்குக்கும் பொதுவான பண்புகள் இருக்கும். நமக்கும் எலிகளுக்கும் பொதுவான பண்புகள் இருக்கும்.

பணம் சேர்ந்தால் நாம் என்ன செய்வோம்? வங்கியில் இட்டு சேமிப்போம். உருளைக்கிழங்கு, தான் உருவாக்கும் சத்தினை(Glucose) என்ன செய்யும்? கிழங்காக சேர்த்துவைக்கும். நாம் பிள்ளை பெற்றால் பாலூட்டுவோம். எலி என்ன செய்யும்? அதுவும் குட்டிகளுக்கு பால் தரும். தனியாக இருந்தால் நாம் என்ன செய்வோம்? வருத்தப்படுவோம். ஏதேனும் ஒரு சோகப்பாடலை முணுமுணுப்போம். உலகின் மிகப்பெரிய உயிரினங்களான நீலத்திமிங்கலங்கள் தங்கள் கூட்டத்தை விட்டுத் தனியே பிரிந்தால், சோகமான ஒலிகளை எழுப்புகின்றன. அது மனிதக் காதுகளை எட்டுவதில்லை. ஆனால் ஒலி அலைகளை வைத்து அதன் அலைவரிசைகளை கவனித்தபோது அது பாடலைப்போல, ஒரே சீராக மீண்டும் மீண்டும் ஒலித்ததை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

 இதுபோல சொல்லிக்கொண்டே போகலாம். அனைத்து உயிரினங்களும் இங்கே தனியானவை அல்ல. ஒன்றோடொன்று ஏதோ ஒரு வகையில் இணைந்தவை. ஒன்றுக்கு ஒன்று உதவிக்கொள்பவை. அனைத்தின் கருப்பொருள்களும் அடிப்படையில் ஒன்றே.

ஆனால் அனைத்து உயிர்களும் தனித்துவமானவையும் கூட. ஒரே இனத்துக்குள்ளேயே நிறைய வேறுபாடுகளையும் நாம் காண்கிறோம். ஒருவருக்கு நீளமான முடி, என்றால் இன்னோருவருக்கு சுருட்டையான முடி. ஒருவருக்கு வெள்ளைத்தோல் என்றால் மற்றொருவருக்கு கருநிறத் தோல். ஆச்சரியமாக இந்த வேறுபாடுகளுக்குமே முன்னர் சொன்ன அதே கருப்பொருள்கள்தான் காரணம்.

சும்மா இல்லாமல் ஏன் இந்த ஒரே போன்ற கருப்பொருள்கள் சில இடத்தில் ஒரே போன்ற பண்புகளையும், வேறு சில இடத்தில் வேறு வேறான பண்புகளையும் தர வேண்டும்?

அங்குதான் இயற்கையின் பரிணாமம் ஆச்சரியமூட்டுவதாக இருக்கும். அவற்றில் சிலதை வரும் அத்தியாயங்களில் படித்து ரசிக்கலாம்.

மணி பிளாண்ட் சொல்லும் வாழ்க்கை ரகசியம்

மணிபிளாண்ட் என்னும் சின்ன கொடி வகை தாவரத்தை நாம் எல்லோரும் பார்த்திருப்போம். வாருங்கள் அதை சற்று உற்றுப்பார்ப்போம். தகவமைப்பு என்றொரு குணமிருக்கிறது. ‘ரோமில் ரோமனாக இரு’ என்னும் பழமொழிக்கு உரிய குணம் அது. இந்த மணிப்பிளாண்ட் அதற்கொரு சிறப்பான எடுத்துக்காட்டு.

வீட்டில் பாட்டிலில் கொஞ்சம் தண்ணீர் விட்டு இந்த தாவரத்தின் தண்டினைக் கிள்ளி வைத்துவிட்டால். அதுபாட்டிற்கு வளரும். வெளிச்சம் இருந்தால் சரி. இதே மணி பிளாண்டை தொட்டியில் மண் போட்டு வைத்தால் என்ன ஆகும்? நன்றாக செழிப்பாக வளரும். ஏராளமான இலைகளுடன் தளதளத்து வளரும். சரி அந்த தொட்டிக்கு உரமிட்டால்? ஆகா… ‘அடிச்சான்பாருடா அப்பாயிண்ட்மென்ட் ஆர்டரை’ என்று நல்ல வேகமாக, ‘நான் வளர்கிறேனே மம்மி’ என வளரும்.

ஒருவேளை இதே தாவரத்தை மண்ணில் நட்டுவைத்தால்? அருகில் இருக்கும் மரங்களின் மீது மெல்ல ஏறும். அந்த மரங்களின் உள் அமைந்த உயிர்ப்பகுதியான ஜைலம் (xylum) பகுதியுடன் தன் தண்டின் நீட்சிகளை ஏற்படுத்திக்கொண்டு வாழத் தொடங்கிவிடும். இப்போது இதன் இலைகளைப் பார்க்க வேண்டும் நாம். உள்ளங்கையில் பாதி அளவு கூட இல்லாத இந்த தாவரத்தின் இலைகள் இரண்டு பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து உண்ணுமளவு பெரிதாக வளரும். இது மணி பிளாண்ட் என்றே பலராலும் கண்டறிய முடியாத அளவுக்கு உருமாற்றம் பெறும். அந்த அளவுக்கு தனது அடையாளத்தினையே மாற்றியிருக்கும். அதன் வேரினை வெட்டினாலும், அந்தக் கொடி வாடாது.  அது சார்ந்திருக்கும் மரத்திலிருந்து சத்துகளைப் பெற்று செழிப்பாக வளர்ந்தபடிதான் இருக்கும்.

மனிதர்களுக்கும் இது பொருந்தும். சிறிய இடம், போதுமான வாய்ப்புக்களின்மை, போதுமான வசதிகள் இன்மை இவையெல்லாம்  அவர்களின் வளர்ச்சிக்கு சவாலாக உள்ளன. போர்க்காலத்தில் உயிர் வாழ்தலே பெரிது என எண்ணுபவர், வாழ்வில் போதிய கல்வியறிவு, பணம், உடல்நலம் போன்றவற்றினை பெறும் காலத்தில், பெரும் வளர்ச்சியடைந்து செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் அளவு உயர முடிகிறது. இது இயற்கையில் எல்லா உயிர்களிடத்தும் காணப்படும் பண்பு. சூழலுக்குத் தக்கவாறு தன்னை தகவமைத்துக் கொள்ளும் உயிரினம் உலகில் நீண்டகாலம் சிறப்புற்று வாழும். இதைத்தான் டார்வின் தனது கொள்கைகளில் ஒன்றாகக் குறிப்பிடுகின்றார்.

டைனோசர்கள் காணமல் போனதன் மர்மம்

நம் அனைவருக்கும் ஃபான்டசி கதைகளில் ஆர்வமிருக்கும். விதவிதமான பிரம்மாண்ட உயிர்களை கற்பனையில் வடிவமைத்து மகிழ்வோம். ஆனால் பல கோடி வருடங்களுக்கு முன்னால் டைனோசர்கள் வாழ்ந்து வந்தன என்பது ஃபான்டசி மட்டுமல்ல, நிரூபிக்கப்பட்ட அறிவியியல் செய்தி. அவற்றின் எலும்புக்கூடுகளை நாம் காண்கிறோம். மிகப் பெரியதாக, மிக ஆற்றலுள்ளவையாக அவை இருந்திருக்கக்கூடும்.

பிறகெப்படி அவை இல்லாமல் போயிருக்கும்?

இதற்கு நிறைய விளக்கங்களை ஆய்வாளர்கள் அளிக்கிறார்கள். உலகில் அதிக தாவர விலங்கினங்கள் தோன்றாத காலத்தில் டைனோசர்களுக்கு போதிய உணவு இல்லாமல் இருந்திருக்கும் என்பது ஒரு கருதுகோள். பெரிய விண்கல் பூமியில் விழுந்தபோது அவை அழிந்திருக்கும் என்பது மற்றும் ஒரு கருதுகோள்.

மேற்படி விளக்கங்களைப் பார்த்தால், அவை மறுபடியும் பல்கிப் பெறுக இயற்கையில் வழி உள்ளது. கரப்பான் பூச்சி எத்தகைய இடர்பாட்டிலும் ஏன் அணுகுண்டு வெடிப்புக்குப் பிறகும்கூட வாழ்ந்த உயிரினம். மீளுருதல் (Succession) என்பது உயிர்களின் அடிப்படைப் பண்பு. ஆனால் ஏன் டைனோசர்கள் மீள இயலவில்லை என்பதற்கு ஒரு சுவாரசியமான கருதுகோள் இருக்கிறது.

தக்காண பீடபூமியின் எரிமலை வெடிப்பு உலகின் பல நிலப்பகுதிகளை கடும் தீயில் தள்ளியது ( பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நிலப்பகுதியின் அமைப்பு, இன்று இருப்பதைப்போல் இல்லை என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்). அவ்வாறு கடும் தீயில் பெரும்பாலான உயிரினங்கள் அழிந்தன. சிறு அளவிலான எலி போன்ற பாலூட்டி வகைகள் சில, பெரிய இறகுகளை உடைய பறக்கும் டைனோசர்கள் வகை, மிகப்பெரிய முதலை போன்ற ஒரு கடல் உயிரி இவைகள்தான் பிழைத்தன.

பெரிய இரண்டு வேட்டையாடிகளுக்கும் போதிய உணவில்லை. அதே சமயம் போதிய எதிரிகளும் இல்லை. ஆனால் சிறு எலி போன்ற பாலூட்டிக்கு எதிரி, வலுவான இவ்விரண்டு பெரு உயிரினங்கள்.  அதேபோல உணவும் வெகு தொலைவிற்குச் சென்று மரங்களின் கனிகள், கொட்டைகள் எனத் தேட வேண்டும். நம் கணக்குப்படி எலி போன்ற பாலூட்டிதானே அழிந்திருக்க வேண்டும்? ஏன் எனில் அதற்கே சவால்கள் அதிகமாக இருந்தன. நடந்ததோ முற்றிலும் மாறுபட்ட கதை.

 இந்தச் சிறு பாலூட்டிகள் குட்டியிடுபவை. பெரிய எதிரிகளிடமிருந்து குட்டிகளைக் காக்க அவற்றை பத்திரப்படுத்தின. வெகுவாகக் காத்தன. ஆனால் எதிரிகள் அற்ற இந்த இரு பெரு உயிரினங்களும் முட்டை இடுபவை. அவை முட்டைகளை இட்டுவிட்டு, இரைதேடப் போய்விடும். இந்தச் சிறு பாலூட்டிகள், முதன்முதலாக அந்த முட்டைகளை சுவைக்கத் தொடங்கின. அதிக ஊட்டச்சத்து மிகுந்த ஒரு உணவு பெரிய சண்டை எதுவும் இல்லாமல் கிடைக்க கிடைக்க, இவை ஆரோக்கியமாக பல்கிப்பெருகின. அதே நேரம் முட்டைகளை காக்கத்தெரியாத பெரிய இனங்கள் மெல்ல எண்ணிக்கையில் குறையத் தொடங்கின. சிறு பாலூட்டிகள் சுதந்திரமாக வெளியே நடமாடத் தொடங்கின. அவை பல்வேறு ரகமாக பரிணாம வளர்ச்சியடைந்து, வித விதமான ரகமான விலங்குகளாகப் பரவின. முட்டைகளை பாலூட்டிகள் உண்ணத் தொடங்கியதுதான் பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல் கல்.

ஊர்வனவற்றின் சகாப்தத்தினை பாலூட்டிகள் முடித்து வைத்து, தங்களுடைய சகாப்தத்தைத் தொடங்கின.

தகவமைப்பின் தோல்வி காரணமாக டைனோசர்கள் அழித்ததையும், தகவமைப்பின் வெற்றி (கிடைத்த முட்டைகளை உண்ணத் தொடங்கியது) காரணமாக பாலூட்டியினம் செழிப்புறத் தொடங்கியதையும், ஒரு மாபெரும் மாற்றத்துடன் விலங்குலகு உருவாக வழிகோலியதை நாம் புரிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட இரு எடுத்துக்காட்டுகளில் இருந்தும் உயிரினங்கள் தங்களுக்குள் ஒரு மறைமுகமான போட்டியில் இருப்பதை உணர முடியும். விலங்குகளுக்குள் போட்டி உண்டு. அப்போது தாவரங்களுக்குள் இல்லையா அந்த போட்டி? ஒவ்வொன்றாகத் தொடர்ந்து பார்ப்போம். இயற்கையின் முடிச்சுகளை படிப்படியாக அவிழ்ப்போம்.

படைப்பாளர்

ஷோபனா நாராயணண்

முதுகலை உயிர்வேதியியல் மற்றும் முதுகலை உயிரியல் படித்துள்ளார். அறிவியல் ஆர்வலர்.