“ஆரது? ஆரது  இந்நேரம் கதவ தட்டீனுக்கது?”என்று முன்கதவை ‘படார் படார்’ என்று யாரோ வேகமாகத் தட்டும் சத்தம் கேட்டு, அதட்டலாகக் குரல் கொடுத்துக் கொண்டே போனார்.

வெளியே இருந்த கூச்சலும் குழப்பமும்  அவ்வளவாக உள்ளே கேட்கவில்லை. உயரமான அந்த வீட்டுக்குள் தண்ணீர் வர வேண்டுமென்றால்‌ தெருவைப் புரட்டிக் கொண்டு வெள்ளம் வந்தாலே ஒழிய நடவாத காரியம்.

“ஐயோ, வூட்டுக்குள்ள தண்ணி வந்துனுக்கீதே , அல்லாரும் எந்தீங்களேன்…” என்ற ஹமீதும்மாவின் குரல் ஈனஸ்வரத்தில் ஒலித்ததைக் கேட்டு நடுச்சாமத்தில் எல்லாரும் பதறிப் போய் எழுந்தார்கள்.

குழந்தைகள் தவிர்த்து பெரியவர்கள் எல்லோரும் என்னவோ ஏதோவென்று புரியாமல் உள்கட்டு முத்தத்தில் மீண்டும் கூடினார்கள்.

‘போட்ட கூச்சலுக்கு உள்ளார வந்த தண்ணீ கம்மியாத்தான் இருக்கும் ‘ என்று முணுமுணுத்தவாறு படி இறங்கி வந்த மஃபாஹிராவுக்கு எரிச்சல் வந்தது.

முந்தைய நாள் இரவு ஆயிஷா சென்னை செல்வதற்கு எந்த எதிர்பார்ப்பும் காட்டாமல்  ஒத்துக் கொண்டபின், அவளிடம் பேச முயன்ற போது வேண்டுமென்றே இருவரும் பேசமுடியாதபடி இடையில் வந்து நின்று கொண்டு அந்த மனுசி புரிந்த எக்காளப் புன்னகையைப் பார்த்தவளுக்குப் பற்றிக் கொண்டு வந்தது.

ஆனால் அயிஷாவோ அவளிடம் பேச முயலவில்லை. யாரிடமும் எதுவும் சொல்லிக் கொள்ளக்கூட இல்லை. அவளிடம் காணப்பட்ட ஒருவிதமான அழுத்தமான அமைதிக்கு அர்த்தம் என்ன என்று புரிந்து கொள்ள அவகாசமும் கிடைக்கவில்லை.

தன் எதிர்ப்பு குரலுக்கும் மாமியின் கண்ணீருக்கும், மாமாவின் தோல்வியை ஒத்துக்கொண்ட அமைதிக்கும் இடையில் அவர் திட்டமிட்டபடி  ஆயிஷாவை கதீஜா மாமியுடன் சென்னைக்கு அனுப்பிய கையோடு கிளம்பிவிடுவார் என்று எதிர்பார்த்தவளுக்கு, ‘காக்கா கலங்கி நிக்கீறப்போ  வூட்ல எனக்கு இருப்பு கொள்ளாது. இங்கனயே ஒரு நாளஞ்சி நாளு இருந்துன்னு புறவு போறேன். இப்ப இன்னா அவசரம் ஊட்டுக்கு போவ , இந்த மழக்குள்ள. நீ இன்னாடி சொல்ற?’

என்று அவர் தங்கையையும்கூட இருக்க வைத்து விட்டார்.

அவர்கள் பிள்ளைகள் எல்லோரும் இரவோடு இரவாக காரில் கிளம்பி விட்டார்கள். அந்த களேபாரம்  அடங்கி ஒருவழியாக எல்லோரும் உறங்கச் சென்று ஒரு மணிநேரம்கூட ஆகியிருக்காது, மீண்டும் இப்போது பஞ்சாயத்தைக் கூட்டுகிறார் .

யாரையும் நிம்மதியாக இருக்க விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு காயாமொழியிலிருந்து மினிபஸ் பிடித்து வந்திருப்பார் போல.

“உங்கள் மாயிம்மாக்கு இதுவே சோலியாப் போச்சு , இப்ப எதுக்கு இப்படி நடுராத்திரில சலம்புதாங்கன்னு போய் கேளுங்க.”

“இன்னாச்சு மாயிம்மா ? ஏன் இப்புடிச் சத்தம் போட்டிய?”

“ஆரோ.. கதவ… தட்டி..தண்ணீ… ஊருல” என்று கோர்வையின்றி வார்த்தைகள் வந்து விழுந்தன. மணிக்கு முன்னூறு கிலோமீட்டர் வேகத்தில் பேசும் தன் மச்சி இப்படித் திக்பிரமை பிடித்தவள் போல் கதவைப் பார்த்தவாறு புலம்பிக் கொண்டிருந்ததைக் கண்ட மரியம்கூட அவ்வளவு நேரம் உறங்காமல் அழுது சிவந்த கண்களைத் துடைத்துக் கொண்டு,

“சத்த இங்கன உக்காரிங்க. ஏதாவது கனா கினா கண்டியளோ?” என்றவாறு  முன் அறையில் இருபுறமும் அமைந்திருந்த திண்ணைகளில் ஒன்றில் மகன் உதவியோடு கைத்தாங்கலாக அவரை அமர வைத்துவிட்டு விளக்கை போட்ட போது அந்தக் குண்டு பல்பின் மஞ்சள் ஒளியில் கதவைத் தாண்டி அலையலையாக உள்ளே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த தண்ணீர் அவரின் பதற்றத்தின் காரணத்தை விளக்கியது.

அதற்குள் குடிக்க தண்ணீர் எடுத்துக் கொண்டுவந்திருந்த அவர் சின்ன மச்சி, “இந்த லாத்தா, தண்ணீய குடி” என்று கொடுத்தபோது அவருக்கும் புரிந்து ஓர் அர்த்தமுள்ள பார்வையை மச்சியின் பக்கம் வீசிவிட்டு தன் லாத்தாவைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். ஆனால் அது எதுவும் அவர் காதில் விழுந்ததாக்த் தோன்றவில்லை.

“ஒரு வருஷம் பூராவும் பெய்ய வேண்டிய மழ இப்படி ஒரே நாளா பெஞ்சி தள்ளினா இன்னாவும்? தண்ணீ போக்கெடம் இல்லாம உள்ளாரதான் வரும். நம்மூட்டுக்குள்ளயே தண்ணீ வந்துனுக்கிதே , பள்ளமாக்கிற வூட்டு சனம்லாம் இன்னா பண்ணுதோ தெரிலயே…”

“பட்டறைய போய் ஒரு எட்டு பாத்துன்னு வந்துரவா, வாப்பா?” என்று பரபரத்தவனைத் தன் வழக்கமான அமைதியோடு, “வேணாம் சம்சு, காலீல போய் பாத்துக்கலாம். வேறாரும் சனத்துக்கு வூட்டுக்குள்ள தண்ணீ வந்து போக்கெடம் இல்லாம இருந்துச்சுனா. நம்மூட்டுக்கு கூட்டீனுவா. வூட்ல கீழ எடத்த ஒதுக்கி குடுத்துறலாம்” என்று தன் தந்தையின் தயாள குணத்தைக் கொண்டிருந்தவருக்கு, தங்கை போலல்லாமல் குடும்பத்தையும் தாண்டி ஊராரின் நிலை குறித்து கவலை தொனித்தது குரலில்.

முன்கதவைத் திறந்தவன் ஒருநொடி ஸ்தம்பித்து நின்றான். ஊரே வெள்ளக் காடாக இருந்தது. அவர்கள் வீடு போல் யு.பி.எஸில் விளக்கு எரிந்து கொண்டிருந்த ஐந்தாறு வீட்டு வெளிச்சத்தில் ஆங்காங்கே பதற்றமாகப் பலர் தண்ணீருக்குள் ஓடிக் கொண்டிருந்தது தெரிந்தது. அதில் யாராவது எச்சரிக்கை செய்ய கதவை தட்டியிருக்கக் கூடும்.

பெரிதாக இருந்த அவர்கள் வீட்டுக்குத் திண்ணையிலும் சிலர் குந்தியிருந்தார்கள் ‌. அவர்களில் அநேகம் பேர் வயதானவர்களும் பெண்களும் அவர்களிடம் குளிருக்கு ஒண்டிய இல்லாதப்பட்ட வீட்டுக்கு குழந்தைகளும்தான். அதைக் கண்டவன், “வூட்டுக்குள்ள வாங்க” என்று சொல்லவும், முதலில் தயங்கியவர்கள் பின் அவன் வற்புறுத்தலின் பேரில் உள்ளே வந்தார்கள்.

அவர்களுக்காகத் துடைக்க உலர்ந்த துணிகளையும் , மாற்ற உடுப்புகளும், படுக்கத் தேவையான ஏற்பாடுகளை மஃபாஹிரா பம்பரமாகச் சுழன்று செய்யத் தொடங்கினாள்.

அவர்களுக்குச் சூடாகச் சாயா தயாரிக்கும் பணியையும், குழந்தைகளுக்கு பிஸ்கட், பால் போன்றவற்றை ஏற்பாடுகள் செய்யும் பணியையும் மரியமும் ஃபாத்திமாவும் ஏற்றுக் கொண்டு சமையலறைக்கு விரைந்தார்கள்.

அதுவரை செயலற்று அமர்ந்திருந்த ஹமீதும்மா சுயநினைவு வந்தவராக, தன்னைச் சுற்றி நிகழ்பவற்றைப் பார்த்து விட்டுச் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு, தன் மகளை வெளியூருக்கு அனுப்பியபோதுகூட அமைதி காத்த  காக்காவின் முகத்தில்கூட கசப்புணர்வு அப்பட்டமாகத் தெரிந்தது.

(தொடரும்)

படைப்பாளர்:

பொ. அனிதா பாலகிருஷ்ணன் 

பல் மருத்துவரான இவருக்குச் சிறுவயது முதல் தன் எண்ணங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைதளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகள் பெற்று வருகிறார்.  இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர். தன் அனுபவங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக, ஒளிப்படங்களாக வலைத்தளங்களில் பதிந்து வருவதோடு சிறுகதைகளும் கதைகளும் எழுதி வருகிறார்.