ஒற்றை மாடிக் கட்டிடம். முன்புறத்தில் சிவப்பு நிற ஸ்விஃப்ட் கார், பூந்தொட்டிகள், கிரில் கேட் வெளியேவும், பெரிய மரக்கதவு உள்ளேயும் இருந்தன. அந்த நீண்ட முகப்பு அறையிலிருந்த கூடை ஊஞ்சலில் ஆடியபடி இருந்தாள், ஓர் இளம்பெண்.
“நான் அம்மாகிட்ட கேட்டுப் பாக்குறேன் விஜி.”
அதே சமயம், அறையிலிருந்து ஊஞ்சலின் முன்னே வந்து நின்றாள் அவளின் அம்மா தேவி. பச்சையும் வெள்ளையும் கலந்து காட்டன் புடவையை நேர்த்தியாக உடுத்தி இருந்தார். ஆனால் ஒப்பனை, பொட்டு என்று எதுவும் இல்லை.
“என்னம்மா, இன்னும் நீ கிளம்பலையா?”
அவர் முறைத்தார்.
“நான் அப்புறம் பேசுறேன்” என்று தீபிகா அழைப்பைத் துண்டித்தாள்.
“என் வாட்சை நேத்து நீ கட்டிட்டுப் போனியா?” எரிச்சலுடன் வந்தது, அவரின் குரல்.
“அது… ஆமா,” என்று தலையில் கை வைத்துக் கொண்ட தீபிகா, “இதோ இப்பவே எடுத்துத் தர்றேன்,” என்று தன்னுடைய அறைக்கு ஓடினாள்.
‘எங்கே போட்டோம்… எங்கே போட்டோம்னு ஞாபகம் இல்லையே”
“கிடைச்சுதாடி?” வெளியே இருந்து தேவி சத்தமிட்டார்.
“தேடிட்டு இருக்கேன்மா,” தீபிகா தன்னுடைய அறையைப் புரட்டிப் போட்டாள்.
“வாட்ச் கிடைக்கலன்னா அவ்வளவுதான், நான் செத்தேன்,” என்று புலம்ப, அந்த வாட்ச் அவள் கழற்றிய உடைகளின் அடியில் கிடந்ததைப் பார்த்தாள்.
‘அப்பாடா…!’
“ம்மா… கிடைச்சிடுச்சு” என்று அதனை எடுத்துக்கொண்டு வர, “எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? என் வாட்சைக் கட்டிட்டுப் போனா பத்திரமா திருப்பி கொண்டுவந்து என் டிராயரில் வைன்னு!” என்றபடி, தான் அணிந்திருந்த பச்சை நிற காட்டன் புடவைக்குப் பொருத்தமான அந்தக் கைக்கடிகாரத்தைக் கட்டினார்.
அளவான ஒப்பனைகளைச் செய்து முடித்து, கண்ணாடியின் முன்பு நின்றார். முன்முடியில் ஆங்காங்கே நரைமுடிகள் எட்டிப் பார்த்தன. வயதாகிவிட்டதுதான். வசீகரமும் குறைந்துவிட்டது. ஆனால், மிடுக்கும் கம்பீரமும் அப்படியே இருந்தது. முக்கியமாக, கைக்கடிகாரம் அந்த மிடுக்கை இன்னும் தூக்கிக் காட்டியது.
தேவிக்குக் கைக்கடிகாரங்கள் மீது அலாதியான பிரியம். பார்த்துப் பார்த்து பல வண்ணங்களிலும் வகைகளிலும் சேகரித்து வைத்திருக்கிறார். தங்கம், வைரம், ப்ளேட்டினம் என்று எதையும் விட்டு வைக்கவில்லை.
தோடு, வளையல் எல்லாவற்றையும் விட உடைக்குப் பொருத்தமான கைக்கடிகாரத்தைக் கட்டிக்கொள்வதற்குதான் அவர் அதிக முக்கியத்துவம் தருவார். அதன் பிறகுதான் அவரின் அலங்காரம் முழுமையடையும்.
‘ஏன்மா வாட்ச் மேல் உனக்கு இவ்வளவு பைத்தியம்?’ என்று மகள் உட்பட பலரும் அவளிடம் காரணம் கேட்டிருக்கின்றனர்.
“பிடிக்கும்! பிடிக்காததுக்கு எல்லாம் ஏதாவது ஒரு காரணமும் கதையும் இருந்தே ஆகணுமா?” என்றாலும், அவர் ஆழ்மனதில் ஒரு பிம்பம் இருந்தது.
‘உன்னை ஒன்று கேட்பேன், உண்மை சொல்ல வேண்டும்’ என்ற பாடலில் நடிகை சரோஜாதேவி கையிலிருந்த செவ்வக வடிவ வாட்ச்.
ஆனால், வீட்டில் அம்மா, சித்தி என யாரும் வாட்ச் அணிந்து அவள் கண்டதில்லை. அதனாலேயே அவளுக்குக் கைக்கடிகாரங்கள் மீது இந்தளவு ஈர்ப்பு ஏற்பட்டிருக்கக்கூடும்.
பத்தாவது தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றதும், அப்பாவிடம் பரிசாகக் கைக்கடிகாரம் கேட்டாள். அவரும் வாங்கித் தந்தார். ஆனால், அது வட்ட வடிவமாக இருந்தது.
வேறு வழியில்லாமல் அதனைக் கட்டிக்கொண்டிருந்தாள். பிறகு, கல்லூரி சேர்ந்த போது மீண்டும் கைக்கடிகாரம் கேட்டாள்.
“ஏற்கனவே இருக்குல்ல… எதுக்கு இன்னொண்ணு?” என்றார் அப்பா.
அப்போது, கைக்கடிகாரத்தின் மீதிருந்த காதல் வெறியாகவே மாறிவிட்டது. அதன் பின், அவளின் முதல் சம்பளத்தில் பல வண்ணங்களில் ஒரு பெட்டி நிறைய வாட்ச் வாங்கிக்கொண்டாள். பின்னர் அதுவே தொடர்கதையானது.
தற்போது தேவி ஒரு வங்கியின் மேலாளர் பணியில் இருக்கிறார். தோள்பையை மாட்டிக்கொண்டு அவர் வாசலுக்கு நடக்க, “அம்மா, உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்று பின்தொடர்ந்தாள் தீபிகா.
“கிளம்பும்போது உனக்கு எல்லாம் ஞாபகத்துக்கு வருமாடி? சரி, சரி சீக்கிரம் சொல்லு.”
“விஜி ஈவினிங் ஷோ போகலாமானு கேட்டான்.”
“செமஸ்டர் லீவு கொடுத்திருக்கிறது படிக்கிறதுக்கு. ஊர் சுத்த இல்லை. ஒழுங்கா வீட்டில இருந்து படி. அப்புறம், சாரதா வர நேரம் பார்த்து நீ பாட்டுக்கு கதவைப் பூட்டிட்டுத் தூங்கிடாத. அப்புறம் எல்லா வேலையும் நீதான் செய்யணும். சொல்லிட்டேன்,” என்று பரபரப்புடன் சொல்லிவிட்டு காரில் ஏறிக் கொண்டார்.
முன் கண்ணாடியின் வழியாகத் துவண்டு போயிருந்த மகளின் முகத்தைப் பார்த்தார்.
‘ம்… ஒரு தடவை பெர்மிஷன் தந்தால் இதுவே தொடர்கதையாகிவிடும்,’ என்று யோசித்தவர், காரை இயக்கிக் கிளம்பிவிட்டார்.
ரேடியோவில் ஒரு ஆண் குரல் வளவளத்தது. சேனலை மாற்றிவிட்டு நிமிர்ந்த சமயத்தில்தான், அந்தக் கண்ணீர் அஞ்சலி போஸ்டரைக் கவனித்தார்.
‘தயாளன்’ என்ற பெயருடன் மறைந்த தேதியும் நேரமும் போட்டிருந்தது. காரை நிறுத்திவிட்டார்.
‘தயாவா தயாவா?’ இரண்டு மூன்று முறை அந்தப் படத்தை உற்று நோக்கினார். அது தயாவேதான்!
‘பாஸ்’ பட்டனை அழுத்தியது போல அவரின் உலகம் அப்படியே நின்றுவிட்டது.
‘என்ன செய்வது?’ என்று ஒன்றும் புரியவில்லை. பார்த்தும் பார்க்காதது போலக் கடந்துப் போக முடியவில்லை.
‘எடுத்து இருப்பாங்களா?’

காரை இயக்கி, தயாவின் வீடிருக்கும் சந்தில் கொண்டு வந்து நிறுத்தினார். பந்தல் போட்டிருந்தது. மேளச்சத்தம் கேட்டது.
காரைவிட்டு இறங்கி, அங்கிருந்த கூட்டத்தைக் கடந்து உள்ளே நடந்தார். யாரையும் அவர் கவனிக்கவில்லை.
வாசலின் முன்னே ஐஸ் பெட்டி கிடத்தப்பட்டிருந்தது. மாலைகூட வாங்கி வரவில்லை. ஏதோ ஒரு பதற்றத்தில் அவசரமாகக் கிளம்பி வந்துவிட்டார்.
“தயா…”
ஐஸ் பெட்டி அருகே தயாவின் மனைவி வீங்கிச் சிவந்திருந்த அந்த விழிகளுடன் அவரைப் பார்த்தார்.
‘எத்தனை பெரிய முட்டாள்தனத்தைச் செய்துவிட்டோம்?’ என்று அப்போதுதான் உரைத்தது. முன்னேறிச் செல்ல முடியாமல் கால்கள் அப்படியே நின்றுவிட்டன.
ஐஸ்பெட்டிக்குள் பார்க்கவில்லை. உடனடியாகத் திரும்பி காரை நோக்கி நடந்தார். முதுகுப்புறத்தின் வழியாகப் பல பார்வைகள் அவரைக் கிழித்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது.
காரில் வந்து அமர்ந்து மூச்சு வாங்கிக்கொண்டார். பாட்டிலிலிருந்த தண்ணீரைப் பருகினார். ரிவர்ஸ் கியர் போட்டுப் பின்னே நகர்த்தியவர், நேராக அலுவலகம் வந்துவிட்டார்.
‘ஒரே ஒரு அடி முன்னே எடுத்து வைத்திருந்தால் முகத்தைப் பார்த்திருக்கலாம். யார் அவளை என்ன செய்திருக்க முடியும்? அன்றும் செய்யவில்லை. இன்றும் செய்யவில்லை’
வேலையில் கவனம் செலுத்த முயன்றார். முடியவில்லை. மைக்ரேன் வந்துவிட்டது. அனுமதி கேட்டுவிட்டு வீட்டிற்குத் திரும்பினார். மழை கொட்டோ கொட்டு என்று கொட்டிக்கொண்டிருந்தது.
“என்னம்மா சீக்கிரம் வந்துட்ட?”
“தலைவலி… முடியல. அதான்!”
“காபி போட்டுத் தரவா?”
“நான் குளிச்சிட்டு வந்துடுறேன்.”
தண்ணீரில் நனைந்ததும், அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீரெல்லாம் மடை திறந்த வெள்ளமாகக் கொட்டியது. கொஞ்சம் மனம் சமன்பட்டது.
காபியுடன் வந்து நின்றாள் தீபிகா. “ஏம்மா, தலைவலின்னு சொல்லிட்டு தலையில் தண்ணி ஊத்தியிருக்க?”
“ஃப்ரெண்ட் டெத்துக்குப் போயிட்டு வந்தேன்,”
“அது வேறயா? சரி, இரு நான் ஹேர் டிரையர் எடுத்துட்டு வரேன்,” என்ற அவள் திரும்பி வந்து தேவியின் முடியைப் பிரித்துக் காயப்போட்டுக்கொண்டே,“யாருமா ஃப்ரெண்ட்? ரொம்ப க்ளோஸா?” என்று கேட்டாள்.
“ரொம்ப க்ளோஸ் எல்லாம் இல்லை, தெரிஞ்சவங்க அவ்வளவுதான்.”
“நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்களா?”
“எனக்கே தலைவலிக்குது, நீ வேற ஏன்டி?”
“சரி ஓகே, நான் எதுவும் பேசல, நீ ரெஸ்ட் எடு,” என்றுவிட்டு தீபிகா நகர, “படத்துக்குப் போகலையா?” என்று கேட்டார்.
“போக வேணாம்னு நீதானே சொன்ன?”
“சரி சரி, பார்த்துப் பத்திரமா போயிட்டு வா.”
“நிஜமாவா?”
“போயிட்டு வா.”
“தேங்க் யூ சோ மச் மா” என்றபடி அம்மாவின் கழுத்தை உற்சாகத்துடன் கட்டிக்கொள்ள, “அவசரப்பட்டு எந்தக் கமிட்மென்டும் கொடுத்துக்காத. முதல்ல பேசிப் பழகிப் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க,” என்றார்.
“ஐ நோம்மா.”
“யூ நெவர் ரியலி நோ சம் ஒன் ரைட் அவே. எல்லோருக்கும் பல முகங்கள் இருக்கும். நம்மகிட்ட காட்டுற முகம் அதுல ஒண்ணு. அவ்வளவுதான்.”
மகள் புரிந்தது போல தலையசைத்தாள்.
“சரி சரி, போயிட்டு வா,” என்றவர் தன் பையிலிருந்து பணத்தை மகளிடம் கொடுத்தார். ஃபோனை எடுத்து சார்ஜில் இணைத்துவிட்டு, பால்கனியிலிருந்த சாய்வு நாற்காலியில் சென்று அமர்ந்தார்.
சின்னச் சின்னதாகத் தூறல் சொட்டிக்கொண்டிருந்தது. கூடவே பழைய நினைவுகளும்…
அப்போதுதான் தேவிக்கு வங்கி வேலை கிடைத்திருந்தது. உடனடியாக உறவினர் ஒருவர் நண்பரின் மகன், நல்ல வசதியான குடும்பம், சொத்து எல்லாம் ஏகபோகமாக இருக்கிறது என்று சொல்லி அவளுக்குச் சம்பந்தம் ஒன்றை எடுத்து வந்தார்.
அவளிடம் பெரிதாகச் சம்மதமெல்லாம் கேட்கவில்லை. அவளும் பெரிதாக மறுப்பெல்லாம் தெரிவிக்கவில்லை. திருமணத்திற்குப் பிறகு வேலைக்குப் போவேன் என்று மட்டும் சொன்னாள். அவனும் சரி என்றான். அவளும் சம்மதித்தாள்.
தேதி, நேரமெல்லாம் பார்த்துத் திருமணம் முடித்துவிட்டனர். அவனோ ஆறு மாதத்தில் அலுவலக வேலை என்று வெளிநாட்டிற்குப் பறந்துவிட்டான். அவள் கர்ப்பமாக இருந்ததால், அவனுடன் செல்ல முடியவில்லை.
இதற்கிடையில் சீமந்தம், மகளின் பிறந்த நாள் என்று ஒன்றிரண்டு முறை வந்து போனான். இந்த நிலையில் வேலைக்கும் சென்றுக் கொண்டு, மகளைப் பார்த்துக் கொள்ள முடியாததால் அம்மாவை வீட்டில் தங்க வைத்துக் கொண்டாள். மறுபுறம் குழந்தயைச் சுட்டிக்காட்டி மாமியாரும் மாமனாரும் வேலையை விடச் சொல்லி நச்சரித்தனர்.
‘நீ எல்லாம் ஒரு நல்ல அம்மாவா?’ என்று வரும்போதெல்லாம் குத்திக்காட்டிப் பேசினர். அவள் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. அவளுக்கு அந்த வேலை பிடித்திருந்தது. ஒருவகையில் உடலளவிலும் மனதளவிலும் அவள் எதிர்கொள்கிற தனிமை உணர்வை அது போக்கியது. போக்கியது என்பதை விட மேலோட்டமாகக் கொஞ்சம் மறக்கடித்தது.
அதேநேரம் அவளின் இளமையின் தகிப்பை இட்டு நிரப்பிவிட எதனாலும் முடியவில்லை.
இரவுக்கும் பகலுக்கும் இடையில் நிகழும் ஒவ்வொரு நாளைய அவளின் உணர்வு போராட்டத்தின் தீர்வாக வந்தவன்தான் தயா. ரயில் சிநேகம். நட்பாகத்தான் தொடங்கியது. தொடர்ந்தது. சந்தர்ப்பம் வாய்க்கும் வரை…
தயாவின் மனைவிக்கு விஷயம் தெரிய, வெறும் வார்த்தையளவில் தெரிந்த அத்தனை கெட்ட வார்த்தைகளையும் அன்றுதான் அவள் காது குளிர கேட்டாள்.
அத்துடன் முடியவில்லை. தயாவின் மனைவி விட்ட மிச்ச சொச்சத்தை இவளின் குடும்பம் நிரப்பியது. மானாவாரியாகத் திட்டித் தீர்த்தனர். யாருக்குமே அவள் விளக்கம் கொடுக்கவில்லை.
மௌனம்… மௌனம்… என்று தீவிர மௌன விரதம் காத்தாள்.
வெளிநாட்டிலிருந்து கணவன் ராஜேஷ் வந்தான்.
உறவை முறித்துக் கொள்ளச் சொல்லி அவன் குடும்பத்தினர் அத்தனை பேரும் ஒரே போல ஓத, “நான் என் பொண்டாட்டிக்கிட்ட பேசணும், தனியா பேசணும்… நீங்க யாரும் இதுல தலையிட வேண்டாம்” என்று ஒரே வரியில் எல்லோரையும் அடக்கினான்.
பின்னர் தனி அறையில் அவளிடம், “என்ன நடந்ததுன்னு நீ சொல்லு” என்றான். இதை அவள் எதிர்பார்க்க்வில்லை.
எல்லோரையும் போல அவனும் திட்டுவான். கோபப்படுவான். மகளை அவளிடமிருந்து பிரித்து அழைத்துச் செல்ல முயல்வான். இப்படித்தான் அவள் கணித்து வைத்திருந்தாள். அதற்கு எல்லாம் எப்படி எதிர்வினையாற்ற வேண்டுமென்று கூட அவள் யோசித்து வைத்திருந்தாள்.
ஆனால், இந்தக் கேள்வி… அவள் இதற்குத் தயாராகவில்லை.
“உன்னைத்தான் கேட்குறேன்” அவன் குரல் அவளை உலுக்கவும், அவள் சுதாரித்துக் கொண்டாள்.
“டிரெயின்ல போகும்போது நாங்க ஒண்ணா போவோம், வருவோம்… அவ்வளவுதான்” என்ற அவளுக்கு அதற்கு மேல் எதுவும் சொல்ல விருப்பமில்லை.
அவனோ, “அவ்வளவுதானா? சரி விடு,” என்றான்.
அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அத்தனை கெட்ட வார்த்தைகளையும் விட அதிகமாக அவளைப் பாதித்தது, அவனின் அந்தச் ‘சரி விடு’தான்.
இதெல்லாம் யோசித்தபடியே தேவியின் கண்கள் சொருக, அதற்குள் அவர் ஃபோன் ஒலித்தது.
ராஜேஷ்தான். “இன்னைக்கு மீட்டிங் இருக்கு லேட்டாகும்… வர்றதுக்கு” என்றார்.
“ம்ம்ம் ஓகே” என்று மெலிதாகச் சொல்ல,
“என்னாச்சு, உன் குரல் ஒரு மாதிரி இருக்கு” என்று கேட்டார் .
“லேசா தலைவலி”
“மாத்திரை போட்டியா?”
“போடணும்”
“சரி போட்டுட்டு ரெஸ்ட் எடு” என்றவர் அழைப்பைத் துண்டிக்க போக, “ராஜ்” என்றார்.
“என்ன தேவி, சொல்லு”
“நான் ட்ரெயின்ல ஒருத்தரோட பிரண்டா பழகுனேனு சொன்னேல. தயா, அவரு… இறந்துட்டாரு”
“தெரியும். நானும் காலையில கிளம்பும்போது போஸ்டரை பார்த்தேன்… நீ போயிட்டு வந்தியா?” என, தேவிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
அவரே தொடர்ந்து, “போயிட்டு வந்திருக்க வேண்டியதுதானே” என்றார்.
“இல்ல நான் போனேன். ஆனா முகத்தைப் பார்க்கல, வந்துட்டேன்”
“ஏன் என்னாச்சு, ஏன் பார்க்கல? என்ன ஏதாவது பிரச்சனையா? யாராவது ஏதாவது சொன்னாங்களா?” என்று கேட்க, தேவி தயக்கத்துடன், “அன்னைக்கு நானும் தயாவும் வெறும் பிரண்டாதான் பழகினோம்னு நான் உங்ககிட்ட சொன்னது பொய்” என்றார்.
சில நிமிடத்திற்கு ராஜேஷ் எதுவும் பேசவில்லை. அழைப்பைத் துண்டித்துவிட்டாரோ என்று பார்த்தார். இல்லை, இணைப்பில் இருந்தார்.
“ராஜ்”
“நீ சொன்னது பொய்யின்னு அன்னைக்கே எனக்குத் தெரியும்” என்று ராஜேஷ் கூறவும் தேவியின் குரல் உடைந்தது.
“தெரியுமா? தெரியும்னா, ஏன்… ஏன் எதுவுமே கேட்கல”
“நீ உண்மை சொல்லி இருந்தாதான் நான் எதாவது கேட்க வேண்டி வந்திருக்கும். நீ பொய் சொன்னதால எனக்கும் எதையும் கேட்க வேண்டிய தேவை ஏற்படல. சிம்பிளா சொல்லணும்னா, ஐ டோன்ட் வான்ட் டூ லூஸ் யூ” என்றார். தேவியின் கண்கள் கலங்கியது.
தொண்டையைச் செருமி கொண்டு, “தேங்க் யூ” என்றார்.
“நோ, தேங்க் யூ” என்று ராஜேஷ் அழுத்தமாகச் சொல்ல, கண்ணீர் துளிகளுடன் கூடிய ஒரு அழகான புன்னகை அவர் உதடுகளில் மிளிர்ந்தது.
“சரி, உங்களுக்கு மீட்டிங் லேட்டாகப் போகுது. நீங்க போங்க. நம்ம அப்புறம் பேசுவோம்”
“நான் மீட்டிங் கேன்சல் பண்ணிட்டு வீட்டுக்கு வரேன்”
“எதுக்கு?”
“இல்ல நீ அப்செட்டா இருக்கியே”
“நான் ஒன்னும் அவ்வளவு எல்லாம் அப்செட்டா இல்ல, ஐம் ஓகே… நீங்க உங்க வேலையைப் பாருங்க”
“உன்னவிட முக்கியமான வேலைனு எதுவுமில்ல, நம்ம டின்னர் போலாம்”
“ஆனா தீபிகா பிரண்டோட ஈவினிங் ஷோ போயிருக்கா”
“அப்போ நம்ம மட்டும் போவோம்” என்று நிறுத்தி, “போலாமா உனக்கு ஓகேவா?” என்று கேட்டார்.
“ம்ம்ம் போலாம்” என்றார். அந்த நொடியே தேவியின் மனம் காற்றைப் போல லேசாகிவிட்டது. மைக்ரேன் மாத்திரையே இல்லாமல் தலைவலி காணாமல் போனது.
ராஜேஷ் வருவதற்குள்ளாக உடைகளை மாற்றி ஒப்பனை செய்து கொண்டார். பின்னர் தன்னுடைய கைக்கடிகாரப் பெட்டியைத் திறந்தார்.
தங்க நிறத்தில் செவ்வக வடிவத்தில் மின்னிய அந்த வாட்சை எடுத்தார். அது தயா பரிசாகத் தந்தது. அவருக்கு மிகவும் பிடித்த வாட்ச். ஆனால், அதனை அணிந்து பல வருடங்களாகிவிட்டது.
அந்த வாட்சையே உற்றுப் பார்த்ததில் அதில் தயாவின் பிம்பம் தெரிவது போன்ற பிரமை ஏற்பட்டது. அதேசமயத்தில் ராஜேஷ் கார் வாயிலில் நுழையும் சத்தம் கேட்கவும், தேவி அதனைக் கையில் கட்டிக்கொண்டே வாசலுக்கு நடந்தார்.
படைப்பாளர்

மோனிஷா
தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தீவிர வாசிப்பாளர் மற்றும் எழுத்தாளர். இணையத்தில் 27 நாவல்களை இதுவரை எழுதியுள்ளார். அவற்றில் இருபது நாவல்கள், புத்தகங்களாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பெண்ணியம், சூழலியல் விழிப்புணர்வு இரண்டும் இவரது பெரும்பாலான நாவல்களின் மையக் கருத்தாக அமைந்துள்ளன. சிறார் எழுத்திலும் தற்போது ஈடுபட்டுள்ளார். இவரின் ‘ஒரே ஒரு காட்டில்’ சிறார் நூலை ஹெர் ஸ்டோரீஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.




