இரவு பயணம் எப்போதும் போல் பயத்தை கொடுத்துக் கொண்டிருந்தது. பக்கத்து தெருவுக்கு பத்து மணிக்குப் பிறகு தனியே செல்ல பயப்படும் நான், சென்னையில் பத்து மணிக்கு வாடகைக் காரில் பயத்துடனும் பல்வேறு சிந்தனைகளுடனும் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தேன்.

சென்னை மத்திய இரயில் நிலையத்தில் இருந்து பெசன்ட் நகர் கடற்கரை செல்லும் அந்த வழிப்பாதையில் பல்வேறு மீனவ குடியிருப்புகளையும் அவர்கள் வாழ்க்கை சூழலையும் பார்த்து அதிசயித்துக் கொண்டே சென்றேன். அப்போதுதான் வலையிலிருந்து கொட்டிய மீன்களை எப்போது விற்று எப்போது தூங்குவார்களோ என்ற கவலை வாட்டியது.

ஒரு வழியாக பெசன்ட் நகர் கடற்கரையைச் சென்றடைந்ததும் தோழி ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டம். கேக் வெட்டி கொண்டாடினோம். இனிப்புடன் பயணம் இனிதே தொடங்கியது. பெசன்ட் நகர் கடற்கரையில் டச்சுகாரரின் நினைவிடமும் முதிய பெண்மணி காமாட்சியின் பங்களிப்பும் பணியும் சிலிர்க்க வைத்தது. எட்வார்டு எலியட் கடற்கரை என்ற பெயர் வந்த விதம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. எல்லா தகவல்களுமே புதியதாகவே இருந்தன எனக்கு. எல்லையம்மன் கோவிலைப் பற்றியும் பல்வேறு பகுதிகளில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டிருந்த பெண்களின் உழைப்பையும் குறித்து நிவேதிதா தோழர் பேசியது சிறப்பாக இருந்தது.

அங்கிருந்து மெரினா பீச் சென்றோம். அங்கே வைக்கப்பட்டுள்ள சிலைகள், அந்த கடற்கரை உருவான வரலாறு போன்றவை குறித்து பேசியதும், வழி நெடுக பெரும்பாலான  பெண்கள் பேருந்தில் நடனமாடி வந்ததும் சிறப்பாக இருந்தது. அதே போல் அவர்களது இரவு உலா குறித்த கருத்துகளும் பகிரப்பட்டது. அதுவும் மிக சிறப்பாக இருந்தது. வழி நெடுக பணி செய்யும்  பெண்களைக் காட்டி  அவர்களின் பணிகளைப் பார்வையிட சொன்னதும் வியப்பினை ஏற்படுத்தியது.

அங்கிருந்து கத்திபாரா பாலம் சென்றோம். அங்கே பெண்கள் கழிவறையின் வெளியே புகைப்பிடிக்காதீர் என்ற அறிவிப்பு. அங்கிருந்த பெண்கள் கூட்டமும் உழைக்கும் பெண்கள் கூட்டமும் வியப்பின் உச்சிக்கே என்னைக் கொண்டு சென்றது. இங்கே சித்ரா தோழர் பனிக்கூழ் வாங்கி கொடுத்தார்; பணம் கொடுக்கவில்லை. நிச்சயமாக வேறொரு நிகழ்வில் பார்க்கும் பொழுது கொடுத்து விடுகிறேன் தோழர்! அதோடு சில வித்தியாசமான உணவு வகைகளை சுவைத்தும் பார்த்தேன்.

குறிப்பாக கடற்கரை தொடங்கி கத்திப்பாரா, காசிமேடு என்று பல்வேறு பகுதிகளில் இசுலாமியப் பெண்கள் குடும்பத்துடன் கொண்டாட்டத்திலும் வேலையிலும் இருந்ததைக் குறிப்பிட வேண்டும் என்று நினைக்கிறேன்.

அடுத்ததாக காசிமேடு பகுதிக்கு சென்றோம். ‘காத்தடிக்குது காத்தடிக்குது காசிமேடு காத்தடிக்குது’ என்று பாடிக்கொண்டே சென்றேன்.  அதிகாலை 3 மணியளவில் அங்கு சென்றோம்.  அங்கே மீன் மார்க்கெட் காட்சி, அதனை பட்டப்பகலாகவே காட்டியது. பரப்பரப்பான வேலைகளையும் வியாபாரத்தையும் பிரமிப்புடன் பார்த்தேன். அங்கிருந்த பெண்கள், “சனிக்கிழமை இரவில் எப்போதும் தூக்கம் இருக்காது” என்றதும், “இரண்டு மணிக்கு சங்கு ஊத… ஏலம் தொடங்கும்” என்றதும், நாம் சாப்பிடும் சுவையான மீனுக்குப் பின்னால் இருக்கும் உழைப்பு மூச்சு முட்டச் செய்தது.

இப்படி சாப்பிடவா..? இதை தவிர்த்து என்ன செய்ய..? இப்படிப் பல யோசனைகள் ஓடியது. அங்கிருந்த பெண்களிடம் பேசியது மனதுக்கு சற்றே ஆறுதல் அளித்தது. அவர்களின் உற்சாகமான பேச்சு என்னையும் உற்சாகம் கொள்ள செய்ததுடன், “டீ சாப்பிடும்மா இல்ல… வேற ஏதேனும் சாப்பிடுறியா?” என்று வாஞ்சையுடன் கேட்ட அவர்களின் பரிவு, கண்களைப் பனிக்கச் செய்தது.

இறுதியாக கோயம்பேடு மார்க்கெட். மார்க்கெட்டை ஒரு சுற்று சுற்றி முடித்து, அந்நேரம் சூடாக கிடைத்த கார பணியாரம் மற்றும் வெங்காய சட்னியையும் சாப்பிட்டது மறக்க முடியாத நிகழ்வு. என் வாழ்வு நிறைவடைந்தது போல் தோன்றியது. அதன் பிறகு ஒரு டீயும் சூடாக உளுந்து வடையும் சாப்பிட்டது நன்றாக இருந்தது. உழைக்கும் பெண்கள் சில்லென்ற அந்த தரையில் கிடைக்கும் நேரத்தில் உறங்கியதும், அவர்களோடு உறங்கிய குழந்தைகளும், பக்கத்திலே படுத்திருந்த நன்றியுள்ள நாய்களும் சேர்ந்த காட்சி படமெடுக்க தூண்டியபோதும் சரியாக வேலை செய்யாத என்னுடைய செல்பேசியில் படமெடுக்க முடியாமல் வருத்தமடைந்தேன்.

நிவேதிதா தோழர் அங்காங்கே கொடுத்த வரலாற்று செய்திகள் சிறப்பாக இருந்தன. எழுத்தாளர் கீதா இளங்கோவன் அவர்களை சந்தித்ததும், நிவேதிதா தோழருடன் இணைந்து வரலாற்று செய்திகள் மட்டுமல்லாமல் பல்வேறு கருத்துகளுக்கு வலு கூட்டியதும், சிறப்பான கருத்துகளை முன்வைத்ததும் எங்கள் அறிவுக் கண்ணை வெளிச்சத்துக்கு அழைத்து வந்ததுபோல் இருந்தது.

இதோடு இன்னும் பல தோழமைகளின் கருத்துகளும் அறிவில் பன்னீர் தெளித்தது. பெயர்கள் அதிகம் தெரியாதபோதும் அவர்களின் அன்பும் பண்பும் நெஞ்சை நெகிழவே செய்தது. யாரிடமும் சிறு முணுமுணுப்புகூட இல்லாமல் சிறப்பாக இருந்தது. இந்த நட்பு வட்டம் ஜெயிக்கும் நட்பு வட்டம் என்பது புரிவதுபோல் இருந்தது.

இத்தனை நேரமும் எமது வாகனத்திற்கு மேலாக இருந்தும் எங்களோடு சேர்ந்தும், இரவும் வானமும் எங்களை வாழ்த்தி வழி விட்டு வணங்கின. இரவு வெளிக்கு வாருங்கள், இருட்டுக்கு உங்கள் கண்களால் ஒளி கூட்டுங்கள். கள்ளம் கல்லறைக்குச் செல்லட்டும். வீரம் விளையட்டும். வானில் விளைந்த நட்சத்திர வயல்களாய் உங்கள் சாதனை முட்டட்டும் விண்ணை என்று வாழ்த்தத் தோன்றியது. கலைந்து செல்ல முற்படுகையிலே, சிறு தூறல்கள்  கொண்டு என்னை வாழ்த்தியது வானம்.

படைப்பாளர்

இந்துமதி

முனைவர் அ. இந்துமதி, உதவிப் பேராசிரியர் தனியார் கல்லூரி வேலூர் இலக்கிய ஆர்வலர். சிறார் நாடக செயற்பாட்டாளர்.