1963 – 1965 


1963 சுவாமி விவேகானந்தா – பிறப்பு நூற்றாண்டு விழாவின் பொருட்டு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.

சுவாமி விவேகானந்தா கொல்கத்தாவில் பிறந்தார். அவர் தத்துவஞானி ராமகிருஷ்ணாவின் சீடராக இருந்தார்.

முதல் உலக மதப் பாராளுமன்றத்தில் (1893) விவேகானந்தா, உரை நிகழ்த்தினார். பிறகு, அவர் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் பல பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் செய்தார்.

அமெரிக்காவிற்கான தனது இரண்டாவது சுற்றுப்பயணத்தில், வடக்கு கலிபோர்னியாவில் வேதாந்தா சங்கத்தை நிறுவினார். சான் பிரான்சிஸ்கோ நகர மையத்தில் அரங்குகள், ஓக்லண்ட், அலமேடா மற்றும் கோல்டன் கேட் ஹால், ஓக்லண்ட் யூனிடேரியன் தேவாலயம் ஆகியவற்றில் அவர் சொற்பொழிவு ஆற்றினார்.

அவருக்கு 39 வயதாக இருந்தபோது, ​​ஜூலை 4, 1902 அன்று கொல்கத்தாவிற்கு அருகிலுள்ள பேலூரில் இறந்தார்.

“தி லைட்: சுவாமி விவேகானந்தர்” என்ற திரைப்படம் அவரது 150வது பிறந்தநாள் வெளியானது..

2. 1963-ம் ஆண்டு, காளிதாசர் (Kalidas) இயற்றிய சாகுந்தலம் நாடகம்  குறித்து அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. 


3. 1963 -ம் ஆண்டு, பசியிலிருந்து விடுதலை (Freedom from Hunger) – FAO சின்னத்தை நோக்கிக் கைகளை நீட்டும் படத்துடன் இந்தியா வெளியிட்டது. 

4. 1963-ம் ஆண்டு, செஞ்சிலுவைச் சங்க நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, ஹென்றி டுனான்ட் (Henri Dunant) படத்துடன் அஞ்சல்தலை ஒன்றை இந்தியா வெளியிட்டது. 

5. 1963-ம் ஆண்டு, பாதுகாப்பு தொடர்பான இரு அஞ்சல் தலைகளை இந்தியா வெளியிட்டது. 

  1. பீரங்கி மற்றும் ஹெலிகாப்டர் Artillery & Helicopter

2. சென்ட்ரி மற்றும் பாராசூட்டிஸ்டுகள் Sentry & Parachutists

6. 1963-ம் ஆண்டு, தாதாபாய் நௌரோஜியின் ஐம்பதாவது நினைவு நாளை முன்னிட்டு, அவரது படம் பொறித்த அஞ்சல் தலையை இந்தியா வெளியிட்டது. 

தாதாபாய் நௌரோஜி, மும்பையில் ஒரு ஏழை பார்சி குடும்பத்தில் பிறந்தார். பம்பாயில் உள்ள எல்பின்ஸ்டோன் கல்லூரியின் (Elphinstone Institute) முதல் இந்தியப் பேராசிரியர் இவர்தான். 1857-ம் ஆண்டு இந்தியக் கலகத்திற்குப் பிறகு (சிப்பாய்/சிப்பாய் கிளர்ச்சி), அவர் காலனித்துவ ஆட்சிக்கு எதிராகப் பணியாற்றத் தொடங்கினார். பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினரான முதல் ஆசியர் இவர்தான். மும்பையில் இவர் பெயரில் சாலையும் அந்த சாலையோரத்தில் அவரது சிலையும் இருக்கிறது.

7. 1963-ம் ஆண்டு, அன்னி பெசன்ட் அம்மையாரின் படம் பொறித்த அஞ்சல் தலையை இந்தியா வெளியிட்டது.

அன்னி பெசன்ட் லண்டனில் ஒரு ஐரிஷ் குடும்பத்தில் பிறந்தார். சிகாகோவில் நடந்த உலக மத மாநாட்டில் தியாசாபிகல் சொசைட்டியின் சார்பாகக் கலந்து கொண்டார். அவர் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக பணி புரிந்தார். 

8. 1963-ம் ஆண்டு, வனவிலங்கு பாதுகாப்பு (Wildlife Preservation) அஞ்சல் தலைகளை இந்தியா வெளியிட்டது.

1. இந்தியக் காட்டெருது (Gaur) 

2. Lesser Panda

3. இந்திய யானை Indian Elephant

 4 வங்கப்புலி Bengal Tiger 

5 இந்திய சிங்கம் Indian Lion

9.1963 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வெளிவந்த அஞ்சல் தலை. 

10. ஐக்கிய நாடுகள் (United Nations) சபையின் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் ( Universal Declaration of Human Rights) 15வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அன்னா எலனோர் ரூஸ்வெல்ட் (Eleanor Roosevelt) இந்த அஞ்சல்தலை 1963-ம் ஆண்டு வெளிவந்தது.

எலனோர் ரூஸ்வெல்ட் அக்டோபர் 11, 1884 நியூயார்க்கில் பிறந்தவர். குடியரசுத் தலைவர்  தியோடர் ரூஸ்வெல்ட்டின் (Theodore Roosevelt) தம்பி மகள். பிராங்க்ளின் டெலானோ ரூஸ்வெல்ட் (Franklin Delano Roosevelt) இவரது தந்தையின் தூரத்து உறவினர். திருமண வாழ்க்கை என்பது மேடும் பள்ளமுமாக இருந்திருக்கிறது. . 

1933 முதல் 1945 வரை கணவர் பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் குடியரசுத் தலைவராக இருந்தார். இருவரும் மிக நீண்ட காலம் பணியாற்றிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் மற்றும் முதல் பெண்மணி என்ற பெருமை பெறுகிறார்கள். 1945 இல் கணவர் இறக்கிறார். 

1945 முதல் 1952 வரை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அமெரிக்கப் பிரதிநிதியாகப் பணியாற்றினார். மனித உரிமைகளுக்கான உரையை வடிவமைப்பதில் பெரும் பங்காற்றினார். 1948-ம் ஆண்டில் அந்தப் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்ட போது அனைவரும் அவருக்கு எழுந்து நின்று கைதட்டி இருக்கிறார்கள். குடியரசுத் தலைவர் ஹாரி எஸ். ட்ரூமன் (Harry S. Truman), அவரை “உலகின் முதல் பெண்மணி” என்று அழைத்திருக்கிறார், 

இந்தியாவின் விடுதலைக்கு, மனித உரிமைக்கு அவர் இடைவிடாது குரல் கொடுத்திருக்கிறார். எலினோர் ரூஸ்வெல்ட் 1952 இல் இந்தியாவிற்கு வந்திருக்கிறார். மருத்துவமனைகள், பள்ளிகள், மகளிர் அமைப்புகள், பல்கலைக்கழகங்கள் என பல்வேறு இடங்களுக்குச் சென்றிருக்கிறார். இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருக்கிறார். அவர் ‘India and the Awakening East’ நூலில் தனது அனுபவங்களை எழுதியிருக்கிறார். 

1964 

1. 26வது சர்வதேச ஓரியண்டலிஸ்ட் மாநாடு (26th International Orientalists Congres), புது டெல்லியில் ஜனவரி 4-10 1964 வரை நடைபெற்றது. அதன்பொருட்டு, கைவிளக்கு ஏந்திய காரிகை அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

2. 1964-ம் ஆண்டு, கோபபந்து தாஸ் அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.

உத்கல்மணி (ஒடிசாவின் ரத்தினம்) கோபபந்து தாஸ், ஒடிசாவின் பூரி நகரில் பிறந்தவர். சுதந்திரப் போராட்டத்திற்காகப் பல முறை சிறை சென்றவர். ஒடிசாவின் காந்தி என்று அழைக்கப் படுபவர். 

கோபபந்து தாஸ், பூரியில் ஒரு பள்ளியை நிறுவினார். அவரது பள்ளி அனைத்து சாதி சமய குழந்தைகளும் ஒன்றாக உட்கார, உணவு உண்ண வைத்தார். 
3. 1964-ம் ஆண்டு, புரந்தரதாசரின் 400வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.

புரந்தரதாசர் 15-ம் நூற்றாண்டில் கர்நாடகாவின் ஷிவமோகா (Shivamogga) பிறந்த ஒரு இசையமைப்பாளர். 

4. 1964-ம் ஆண்டு, சுபாஷ் சந்திர போஸ்ஸின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது படம் மற்றும் ஐஎன்ஏ சின்னம் கொண்ட அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.

நேதாஜி (தலைவர்) சுபாஷ் சந்திர போஸ், ஒடிசாவின் கட்டாக்கில் ஒரு வங்காள குடும்பத்தில் பிறந்தார். அவரது விடுதலைப் போராட்ட நடவடிக்கைகள், அவரைச் சிறைக்கு இட்டுச் சென்றன. ஜனவரி 1941, அவர் தனது கொல்கத்தா இல்லத்திலிருந்து தப்பித்து ஏப்ரல் மாதம் ஜெர்மனியை அடைந்தார். அங்கிருந்து, நீர்மூழ்கிக் கப்பல் மூலம் பயணம் செய்து, மே 1943இல் டோக்கியோவை அடைந்தார்.

அங்கு ஏற்கனவே ராஷ் பிஹாரி போஸ், ஐஎன்ஏ (இந்தியத் தேசிய ராணுவம்) என ஒன்றை உருவாக்கி வைத்திருந்தார். சுபாஷ் சந்திர போஸ் அதைப் பயன்படுத்திக் கொண்டார். புதிய இவரது ஐஎன்ஏவில் 40,000 வீரர்கள் இருந்தனர். பல தமிழர்கள் இருந்தனர். எங்கள் ஊரிலிருந்து கூட எனக்குத் தெரிந்து இருதயம், அப்பாவு என இருவர் இருந்தனர். ஐஎன்ஏவில் லட்சுமி தலைமையிலான ஜான்சி ராணி ரெஜிமென்ட் என்ற பெண்கள் பிரிவு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  ஐ.என்.ஏ ரங்கூன் கோஹிமா மற்றும் இம்பால் வரை வந்தது. 

ஆகஸ்ட் 1945 இல் ஜப்பான் சரணடைவதாக அறிவித்த பிறகு, போஸ் ஒரு விமான விபத்தில் இறந்தார் எனத் தெரிகிறது. ஆனாலும் இன்றும் விடையே இல்லா கேள்வியாகவே அவரது இறப்பு உள்ளது.

5. 1964-ம் ஆண்டு, கவிக்குயில் சரோஜினி அவர்களின்  85வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது படம் கொண்ட அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.

கவிக்குயில் சரோஜினி நாயுடு, (இந்தியாவின் நைட்டிங்கேல்) தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் ஒரு வங்காள குடும்பத்தில் பிறந்தார். கவிதைகள் பல எழுதினார். 1905இல் வங்காளத்தின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். ‘இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் தூதர்’ (The Ambassador of Hindu-Muslim Unity) என்ற தலைப்பில் முகமது அலி ஜின்னாவின் வாழ்க்கை வரலாற்றை அவர் எழுதினார். உத்தரப் பிரதேசத்தின் ஆளுநர் ஆனார். இவரே ஒரு இந்திய மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர். 

6. 1964-ம் ஆண்டு, கஸ்தூரிபாய் காந்தியின்  20வது நினைவு நாளை முன்னிட்டு, அவரது படம் கொண்ட அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.

கஸ்தூரிபாய் குஜராத்தின் போர்பந்தரில் பிறந்தார். தனது கணவர் காந்தியுடன் இணைந்து, தென்னாப்பிரிக்காவில் அரசியலிலும் இந்தியச் சுதந்திர இயக்கத்திலும் ஈடுபட்டார். பெண்களுக்குச் சுகாதாரம், கல்வி எனப் பலவற்றைக் கற்றுக் கொடுத்தார்.

1942 -ம் ஆண்டில், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதற்காகக் காந்தியுடன் சேர்ந்து கைது செய்யப்பட்டு புனேவில் உள்ள ஆகா கான் அரண்மனையில் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் நோய்வாய்ப்பட்டு இறந்தார்.

7. 1964-ம் ஆண்டு, டாக்டர்.டபிள்யூ.எம்.ஹாஃப்கின் (Dr.W.M.Haffkine) அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.

டபிள்யூ.எம்.ஹாஃப்கின் ரஷ்யப் பேரரசின் கெர்சன் கவர்னரேட்டில் உள்ள ஒடெசாவில் ( Odessa, Kherson Governorate, Russian Empire) ஒரு யூத குடும்பத்தில் பிறந்த நோய் எதிர்ப்பு நிபுணர் (Immunologist). காலரா மற்றும் புபோனிக் பிளேக்கிற்கு எதிராகத் தடுப்பூசிகளை உருவாக்கிப் பயன்படுத்திய முதல் நுண்ணுயிரியலாளர்.

அக்டோபர் 1896 இல், பம்பாயை புபோனிக் பிளேக் தாக்கியது. அரசாங்கம் ஹாஃப்கைனை உதவி கேட்டது. அவர் கிராண்ட் மருத்துவக் கல்லூரியில் உள்ள ஒரு தற்காலிக ஆய்வகத்தில் தடுப்பூசி உருவாக்கினார். ஜனவரி 10, 1897 அன்று தானே பரிசோதித்துக் கொண்டார். இந்த தடுப்பூசி 50 சதவீதம் வரை ஆபத்தைக் குறைத்ததாகக் கூறப்படுகிறது.

1925-ம் ஆண்டு மும்பையில் (பாரில்/Parel) உள்ள பிளேக் ஆய்வகம் ஹாஃப்கைன் நிறுவனம் எனப் பெயரிடப்பட்டது.

8. 1964-ம் ஆண்டு, ஜவஹர்லால் நேரு இறந்ததை முன்னிட்டு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.

ஜவஹர்லால் நேரு 1889 நவம்பர் 14 அன்று உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத்தில் ஒரு காஷ்மீர் குடும்பத்தில் பிறந்தார். ஜாலியன்வாலா பாக் படுகொலைக்குப் பிறகு அவர் விடுதலை இயக்கத்தில் ஈடுபடத் தொடங்கினார். பல முறை சிறை சென்றார். 

விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பிரதமரானார். 1964 மே 27 இறக்கும் வரை பதவியிலிருந்தார். 

9. 1964-ம் ஆண்டு, அசுதோஷ் முகர்ஜியின் (Ashutosh Mukherjee) நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.

அசுதோஷ் முகர்ஜி மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் பிறந்தார்.

பெங்கால் தொழில்நுட்ப நிறுவனம், கொல்கத்தா கணித சங்கம் மற்றும் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் அறிவியல் கல்லூரி ஆகியவற்றின் நிறுவினார். ஹஸ்ரா சட்டக் கல்லூரியை நிறுவுவதில் பெரும் முக்கிய பங்கு வகித்தார். பாரதிய ஜனதா கட்சியின் அடித்தளமான பாரதிய ஜன சங்கத்தை நிறுவிய ஷ்யாமா பிரசாத் முகர்ஜி இவரது மகன். 

10. 1964-ம் ஆண்டு, அரவிந்தரின் 92வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.

அரவிந்தர் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் பிறந்தார். வங்காளப் பிரிவினைக்குப் பிறகு, அவர் தேசியவாத இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரானார். அலிபூர் குண்டுவெடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்ட பின் பிரெஞ்சு இந்தியாவின் புதுச்சேரிக்கு வந்த அவர், அரசியலிலிருந்து விலகி ஆன்மீக ஆசிரியரானார். மிர்ரா அல்பாசாவுடன் (Mirra Alfassa), அவர் ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தை நிறுவினார். இன்று புதுச்சேரியின் ஒரு அடையாளமாக அது விளங்குகிறது.

11. 1964-ம் ஆண்டு, ராஜ ராம் மோகன் ராய் அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.

ராஜ ராம் மோகன் ராய், மேற்கு வங்காளத்தின் ஹூக்ளியில் பிறந்தவர். சதி என்னும் உடன்கட்டை ஏற்றுதல் முறையை ஒழிக்கப் பாடுபட்ட சமூக சீர்திருத்தவாதி.

12. 1964-ம் ஆண்டு, 6வது சர்வதேச தரப்படுத்தல் அமைப்பு பொதுச் சபை (International Organisation for Standardisation General Assembly), அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.

13. 1964-ம் ஆண்டு, ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் உருவம் பொறித்த நாணய அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.

14. 1964-ம் ஆண்டு, போப்பின் இந்திய வருகையை முன்னிட்டு, இந்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. இது இத்தாலி ஆர்டோனா கதீட்ரலில் இருக்கும் தோமையரின் திருவுருவம்  (Thomas the apostle  Statue, Ortona Cathedral, Italy). 

15. 1964-ம் ஆண்டு,  22வது சர்வதேச புவியியல் மாநாடு (International Geological Congress) அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

1965

1.1965-ம் ஆண்டு, ஜம்செட்ஜி டாடா அஞ்சல்தலையை இந்தியா வெளியிட்டது. இவர் டாடா குழுமத்தின் நிறுவனர்.

2. லாலா லஜ்பத் ராயின் நூற்றாண்டு விழாவினை அவரது படம் பொறித்த முன்னிட்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. 

லாலா லஜ்பத் ராய் பஞ்சாபின் துடிகேயில் பிறந்தார். அவர் பஞ்சாப் கேசரி (சிங்கம்) என்று அழைக்கப்பட்டார். இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்டார். இந்திய விடுதலைப் பரப்புரை செய்ய அமெரிக்காவிற்கு பயணம் செய்தார். நியூயார்க்கில் இந்திய ஹோம் ரூல் லீக் ஆஃப் அமெரிக்காவில் நிறுவினார். பெண்களுக்கான குலாப் தேவி மருத்துவமனையை (Gulab Devi Chest Hospital) ) நடத்த ஒரு அறக்கட்டளையை நிறுவினார். இப்போதும் இந்த மருத்துவமனை பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றாகும். சைமன் கமிஷனின் வருகையை எதிர்த்துப் போராடியபோது காவல்துறையினரின் தடியடியில் காயமடைந்து இறந்தார்.

3. 1965-ம் ஆண்டு, புது டில்லியில் நடைபெற்ற  20வது சர்வதேச வர்த்தக சபை காங்கிரஸ் (International Chamber of Commerce Congress) அஞ்சல்தலையை இந்தியா வெளியிட்டது. 

4. தேசிய கடல்சார் தினம் (National Maritime Day) ஏப்ரல் 5ம் நாள் கொண்டாடப்படுகிறது. அதன்பொருட்டு 1965-ம் ஆண்டு வெளியான அஞ்சல்தலை இது. ‘ஜல உஷா’ என்பது இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட முதல் கடல்சார் நீராவிக் கப்பல். இது விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் (Hindustan Shipyard Limited /HSL) கட்டி மார்ச் 14, 1948 அன்று தனது பயணத்தைத் தொடங்கிய கப்பல். 

5. 1965-ம் ஆண்டு, ஆபிரகாம் லிங்கன் இறந்து நூறு ஆண்டுகள் நிறைவுற்றதை நினைவு கூறும் விதமாக, அஞ்சல்தலையை இந்தியா வெளியிட்டது. 

ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர். இளமையில்,  சந்தை ஒன்றில் அடிமைகள் விற்பதைப் பார்த்த அவர், அந்தக் கொடுமைக்கு முடிவு காண விரும்பினார். குடியரசுத் தலைவரானபின் அதைச் செய்தும் காட்டினார். அதனால் ஏற்பட்ட உள்நாட்டுப் போரைச் சந்தித்தார். அதனால் உயிரும் துறந்தார்.

இன்றும் உலகின் சிறந்த தலைவர்களுள் ஒருவராக இருக்கிறார். அவர், மற்றும் அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவர், ஜார்ஜ் வாஷிங்டன் இருவரின் பிறந்த நாள்களை இணைத்து, பெப்ரவரி இரண்டாம் திங்கள், அமெரிக்கா பிரசிடெண்ட் டே எனக் கொண்டாடுகிறது. அவர்களின் ஐந்து டாலர் நோட்டில் லிங்கன் இடம்பெற்றிருக்கிறார். அவர் பெயரில் தெரு இல்லாத ஊரே இல்லை எண்ணுமளவுக்கு நாடு முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கிறார்.

6. சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் ( International Telecommunication Union ITU) நூற்றாண்டு விழாவின் பொருட்டு, 1965-ம் ஆண்டு, இந்தியா அஞ்சல் தலை ஒன்றை வெளியிட்டது. இது 1865, மே 17 அன்று பாரிசில் நிறுவப்பட்டது. இதன் தலைமையகம், ஜெனிவாவில் உள்ளது. 

7. 1965-ம் ஆண்டு, நேரு இறந்த முதலாம் ஆண்டின் நிறைவை நினைவு கூறும் விதமாக, அஞ்சல்தலையை இந்தியா வெளியிட்டது. 


8. 1965-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச ஒத்துழைப்பு ஆண்டாக (International Cooperation Year) அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டை நினைவுகூரும் வகையில் பல நாடுகள் கைகுலுக்கும் பொதுவான வடிவமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மாலை அணிவிக்கும் தபால் தலைகளை வெளியிட்டன. இந்தியாவும் வெளியிட்ட நாடுகளில் ஒன்று.

9. 1953-ம் ஆண்டு நியூசிலாந்தைச் சேர்ந்த எட்மண்ட் ஹிலாரி மற்றும் ஷெர்பா டென்சிங் நோர்கே ஆகியோர் எவரெஸ்ட் சிகரத்தை முதன்முதலில் அடைந்தனர். அதன் பிறகு இந்திய எவரெஸ்ட் பயணக் குழுக்கள்  பல முயற்சிகளை மேற்கொண்டன. 1965-ம் ஆண்டு மே 20, 1965 அன்று எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தது. 1965-ம் ஆண்டு மே 20-ம் தேதி, லெப்டினன்ட் கர்னல் அவதார். எஸ். சீமா மற்றும் நவாங் கோம்பு ஷெர்பா (Lt Col Avatar. S. Cheema and Nawang Gombu Sherpa) ஆகியோர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து, அவ்வாறு செய்த முதல் இந்தியர்களாக ஆனார்கள். நவாங் கோம்பு ஷெர்பா 1963-ம் ஆண்டு ஒரு அமெரிக்கக் குழுவுடன் ஏறினார். இது அவரது இரண்டாவது முறை. 

இந்த சாதனை நிகழ்ந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக 1965-ம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப் பட்டது.

10. 1965-ம் ஆண்டு, கோவிந்த் வல்லப் பந்த் அஞ்சல்தலையை இந்தியா வெளியிட்டது. கோவிந்த் வல்லப் பந்த் (Govind Ballabh Pant) உத்தரகாண்டில் உள்ள அல்மோராவில் ஒரு மராத்திக் குடும்பத்தில் பிறந்தார். சுதந்திர இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்று பல முறை சிறையில் அடைக்கப்பட்டார்.

விடுதலை பெற்ற பின், உத்தரபிரதேசத்தின் முதல் முதலமைச்சரானார். பின்னர் அவர் நேருவின் அமைச்சரவையில் மத்திய உள்துறை அமைச்சரானார். 

11. 1965-ம் ஆண்டு, சர்தார் வல்லபாய் படேலின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு, அஞ்சல்தலையை இந்தியா வெளியிட்டது. 

சர்தார் படேல் குஜராத்தின் நாடியாத்தில் (Nadiad) பிறந்த விடுதலைப் போராட்ட வீரர். இந்தியா விடுதலை அடைந்த பிறகு, படேல் முதல் உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் ஆனார். அவரது பிறந்தநாளான அக்டோபர் 31, தேசிய ஒற்றுமை நாளாகக் கொண்டாடப்படுகிறது. 

12. 1965-ம் ஆண்டு, சித்தரஞ்சன் தாஸின் 95வது பிறந்தநாளை முன்னிட்டு, அஞ்சல்தலையை இந்தியா வெளியிட்டது.

சித்தரஞ்சன் தாஸ் வங்காளதேசத்தின் டாக்காவில் பிறந்தார். மோதிலால் நேருவுடன் சேர்ந்து அவர் ஸ்வராஜ்யா (சுயராஜ்யம்) கட்சியை உருவாக்கியவர். 1924-ம் அக்கட்சியின் சார்பாக தேர்தலில் நின்று, கொல்கோட்டாவின் மேயரானார்.

13. 1965-ம் ஆண்டு, கவிஞர் வித்யாபதி, அஞ்சல்தலையை இந்தியா வெளியிட்டது.

வித்யாபதி  பீகாரில் உள்ள மதுபானியில் பிறந்த 14-ம் நூற்றாண்டின் மைதிலி கவிஞர் ஆவார். மைதிலி கவிக் குயில் (Maithil Kavi Kokil) எனப் புகழப்படுகிறார். 

14. 1965-ம் ஆண்டு, இந்தியா வெளியிட்ட டிராம்பே பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) அஞ்சல்தலை இது. 

15. 1965-ம் ஆண்டு, இந்தியா வெளியிட்ட தேயிலை பறிக்கும் பெண்ணின் அஞ்சல்தலை இது. 

17. 1965-ம் ஆண்டு, இந்தியா வெளியிட்ட ரயில் அஞ்சல்தலை இது. 

17. 1965-ம் ஆண்டு லாவோஸ் நாட்டிற்கு உதவும் விதமாக 1964-ம் ஆண்டு வெளியான நேரு அஞ்சல் தலை overprint செய்யப்பட்டு வெளிவந்தது. 

லாவோஸ் வடக்கு வியட்நாமுக்கு அருகாமையில் இருந்ததால் வியட்நாம் போரின் போது, பெரிதும் பாதிக்கப்பட்டது. சர்வதேச மேற்பார்வை மற்றும் கட்டுப்பாட்டு ஆணையத்தின் (ICSC) தலைவராக, ஜெனீவா ஒப்பந்தங்களை செயல்படுத்துவதிலும், அமைதியைப் பேணுவதிலும் இந்தியா முக்கியப் பங்காற்றியது.

தொடரும்…

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறதுதற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.