“Once I moved about like the wind. Now I surrender to you, and that is all.” – Geronimo (The great Apache Leader)
“ஒரு காலத்தில் நான் காற்றைப்போல அலைந்துதிரிந்தேன். இப்போது உங்களிடம் சரணடைகிறேன்; அவ்வளவுதான்.” – ஜெரோனிமோ (மாபெரும் அப்பாச்சித் தலைவர்)

அந்நிலத்தின் பெயர் அப்பச்சேரியா; அதன் பரப்பளவும், உயர்ந்த செந்நிறச் செங்குத்து மலைக்கூட்டங்களும் பார்ப்பவர்களைப் பிரமிக்கச் செய்யும். சல்லாத்துணியாகப் படரும் செம்புழுதியும், காலச்சித்திரத்தின் கடிகாரமாய்க் கரைந்து நிற்கும் சிகரங்களும் கனவுலகமாய்த் தோற்றமளிக்கும். அம்மாய நிலத்தின் ஒவ்வொரு பாறை இடுக்கிலும் ஆதிகுடிகளின் ஆத்மகீதத்தைக் காற்று கிசுகிசுத்துக் கொண்டிருக்கும். அத்தொன்ம நிலத்தில், முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ச்சியாக நிகழ்ந்த ‘அப்பாச்சி போர்கள்’ (Apache Wars) வெறும் இரு எல்லைகளுக்கு இடையிலான அதிகார மோதல் மட்டுமல்ல; அது ஓர் ஆதிக்குடியின் மூச்சுக்காற்றை, நிலவுரிமையை, மரபின் ஆன்மாவைத் தக்கவைத்துக்கொள்ளக் குருதியால் எழுதப்பட்ட வரலாற்றுப் பேரிலக்கியம்.

அப்பாச்சி பூர்வகுடிகளின் பூர்வீக நிலமான ‘அப்பச்சேரியா’ இன்றைய டெக்சாஸ் (Texas), நியூ மெக்ஸிகோ (New Mexico), அரிசோனா (Arizona), மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த சியாரா மாட்ரே (Sierra Madre ) பகுதிகளை உள்ளடக்கிய மிகப்பெரும் பகுதியாகும். கரடுமுரடான மலைக்காடுகளும் தகிக்கும் நீள்பாலைவனமும் வானை முட்டும் சிகரங்களும் கிடுகிடு பள்ளத்தாக்குகளும் அதில் மேயும் ஆயிரக்கணக்கான காட்டெருமைகளும் அப்பாச்சி பூர்வகுடிகளுக்கு இயற்கை அள்ளித் தந்த அற்புதங்கள்.
அப்பாச்சிகளுக்கு நிலம் என்பது வெறும் மண்ணல்ல, மாண்புடைய தாய்; தன் மக்களுக்கு வாரி வழங்கும் வற்றாத ஊற்று. அவர்களின் ஆன்மீக நம்பிக்கையின்படி நதிக்கும், மலைக்கும், மடுவிற்கும், மரத்திற்கும் உயிராற்றல் உண்டெனக் கருதினர். கருங்கடல் ஒன்று இடம்பெயர்வது போலக் காலநிலைக்கேற்ப நகரும் காட்டெருமைக் கூட்டத்துடன் கட்டுண்ட இப்பழங்குடியினர், அவைகளைப் பின்தொடர்ந்து செல்லும் நாடோடிகளாக வாழ்ந்து வந்தனர். பல்வேறு இனக்குழுக்களாக வாழ்ந்த இவர்கள், யாருக்கும் கட்டுக்கடங்காத காற்றுப் போலச் சுற்றித் திரிந்தனர். வேறுபட்ட கலாச்சாரக் கூறுகள் இருந்தாலும், பிற அப்பாச்சி இனக்குழுக்களுடன் (Bands) இணக்கமாக வாழ்ந்து வந்தனர்.
சிரிகாஹுவா (Chiricahua), மெஸ்கலேரோ (Mescalero), மேற்கு அப்பாச்சி (Western Apache) மற்றும் ஹீ-கா-ரீலா (Jicarilla) முதலிய அப்பாச்சி இனக்குழுக்கள் மலைகளையும் பரந்துபட்ட பாலைவனங்களையும் பள்ளத்தாக்குகளையும் தங்களின் சொந்த பூமியாக ஆண்டு வந்தனர். கடினமான புவியியல் கூறுகளும், பல்வேறு பூர்வகுடிகளின் வாழ்விடமுமான ‘அப்பச்சேரியா’ நிலப்பரப்பு எப்போதும் பலதரப்பட்ட போட்டிகளுக்கும் சவால்களுக்கும் உட்பட்டதாகவே இருந்தது. அத்துடன் அங்கு வாழ்ந்த அப்பாச்சிகளுக்கு, வறட்சிக்காலங்களில் பிற குழுக்களின் ஆநிரைகளையும் வளங்களைக் கைப்பற்றுதலும் (Raids), தங்களின் இருப்பைத் தற்காத்துக் கொள்ளுதலும், எதிரிகளை எதிர்கொள்ளுதலும் வாழ்வின் ஓர் அங்கமாகவே இருந்தன.
ஆனால், அப்பாச்சி பூர்வகுடிகளை வெறும் போராளிகள் அல்லது கொள்ளையர்கள் (Raiders) என்று மட்டும் வரையறுத்து விட முடியாது; அவர்கள் வணிகம், அரசியல், ராஜதந்திரம் போன்றவற்றிலும் சிறந்தவர்களாகவே திகழ்ந்தனர். அனைத்திற்கும் மேற்பட்டு சவால்களை எதிர்கொண்டு அப்பழங்குடியினர் நிலைத்து நின்றனர். வீரதீர செயல்களாலும் தீர்க்கமான அறிவுத்திறனாலும் அப்பாச்சி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் அரசர்களைப்போல் கட்டளைகளால் செயல்படாமல், தங்கள் இனக்குழுவிற்கு உண்மையான வழிகாட்டிகளாகத் திகழ்ந்தனர். தாய்வழிச் சமூகமாகத் திகழ்ந்த இப்பூர்வக்குடி இனத்தில் பெண்களும் ஆண்களுக்கு நிகராக அதிகாரமும் ஆளுமையும் பெற்றிருந்தனர்.
பதினாறாம் நூற்றாண்டில், அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதிகளுக்கு முதன்முதலில் தங்கம் தேடி வருகை தந்தனர் ஐரோப்பியர்கள் (ஸ்பானியப் படையெடுப்பாளர்கள்/Conquistador). பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அப்பாச்சிகள் ஸ்பானியர்களின் ஆளுமையின்கீழ் இருந்த மெக்ஸிகோ நிலப்பரப்பிற்குள் ஊடுருவி வளங்களைக் கைப்பற்றத் தொடங்கினர் (Raids). இப்பெரும் அச்சுறுத்தலால் ஸ்பானிய அரசு, 1730-களில் இராணுவக் கோட்டைகளை நிறுவி அதிக அளவிலான படைகளைக் குவிக்கத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நடந்த கடுமையான மோதல்கள் 1770-களில் அதன் உச்சத்தைத் தொட்டன. பின்னரே, ஸ்பானியர்கள் அப்பழங்குடியினருக்குத் தேவையான உணவுப் பங்கீடுகளை (Rations) வழங்கி அமைதியை ஏற்படுத்தினர்.

1821-ஆம் ஆண்டு மெக்ஸிகோ, ஸ்பெயினிடமிருந்து விடுதலை பெற்றது. அதன்பின் மெக்சிகன் படைகள் கோட்டைகளிலிருந்து பின்வாங்கியதாலும், உணவுப் பங்கீடுகள் நிறுத்தப்பட்டதாலும் அப்பாச்சிகளுடனான அமைதி நிலைகுலையத் தொடங்கியது. சிரிகாஹுவா அப்பாச்சிகள் மீண்டும் மெக்ஸிகோவிற்குள் தங்களின் தாக்குதல்களைத் தொடர்ந்தனர். இதன் விளைவாக, 1835-ஆம் ஆண்டு மெக்சிகன் அரசு அப்பாச்சி பூர்வகுடிகளின் மண்டையோட்டுத் தோலை அறுத்து வருபவர்களுக்கு (Scalp bounty) பரிசுத்தொகை அறிவித்தது.
இதனால் மெக்ஸிகோவுக்கும் அப்பாச்சிகளுக்கும் கடுமையான மோதல்கள் தொடர்ந்தவண்ணம் இருந்தன. இத்தகைய சூழலிலும் அப்பூர்வகுடிகள் வேட்டையாடுதல், மூலிகைகளைச் சேகரித்தல், அரிய தாவரங்களின் வேர்களைப் பிரித்தெடுத்தல் என நிலத்தின் வளங்களைச் சுரண்டாமல் பாதுகாக்கும் நன்மரபோடு வாழ்ந்து வந்தார்கள். ஆனால், ‘தெய்வீக ஆணை’ (Manifest Destiny) என்ற பெயரில் அமெரிக்கப் பேரரசின் விரிவாக்கம் 1846-ஆம் ஆண்டு மெக்ஸிகோவின் கட்டுப்பாட்டிலிருந்த அந்நிலத்தின் மீதும், அங்கு வாழ்ந்த பழங்குடி மக்களின் மீதும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. இரு வேறு பண்பாடுகளுக்கு இடையிலான கொடூரமான மோதல்களும் தொடங்கின.
மெக்சிகோவின் மண்டையோட்டுப் பரிசுமுறை (Scalp Bounty System), வளம் பறிப்பு போன்ற கொடூரமான மோதல்களால் அப்பாச்சி இனக்குழுக்கள் பல்லாண்டுகள் சொல்லொணாத் துயரங்களை அடைந்தனர். எனவே அப்பாச்சிகள் இப்போது அமெரிக்காவின் பக்கம் நிற்க முடிவெடுத்தனர். தொடக்கத்தில், மங்காஸ் கொலராடஸ் (Mangas Coloradas) போன்ற உன்னத அப்பாச்சித் தலைவர்கள் அமெரிக்கப் படைகள் மெக்சிகோவிற்குள் நுழைய தங்களின் நிலப்பகுதியில் பாதுகாப்பளித்து நேசக்கரம் நீட்டினர். அதற்கான அமைதி ஒப்பந்தம் ஒன்றும் அமெரிக்க அரசுடன் 1846-ஆம் ஆண்டு கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து பூர்வகுடிகள் தங்களின் நிலப்பரப்பிற்கும், தங்கள் சுய உரிமைகளுக்கும் மதிப்பளிக்கப்படும் என்று நம்பினர்.
1848-ஆம் ஆண்டு குவாடலூப் இடால்கோ ஒப்பந்தம் (The Treaty of Guadalupe Hidalgo) மூலம் அமெரிக்க-மெக்சிகோ போர் நிறைவடைந்தது. இதன் விளைவாக, இன்றைய கலிஃபோர்னியா, நெவாடா, யூட்டா, அரிசோனா, நியூ மெக்சிகோ மற்றும் கொலராடோவின் சில பகுதிகளை மெக்சிகோ அமெரிக்காவிற்கு விட்டுக் கொடுக்கும் நிலை ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, பூர்வகுடிகளின் தாக்குதல்கள் (Raids) புதிதாக உருவாக்கப்பட்ட அமெரிக்க-மெக்சிகோ சர்வதேச எல்லைப் பகுதியைத் தாண்டாமல் தடுத்து நிறுத்துவது அமெரிக்காவின் பொறுப்பானது.

அமெரிக்க-மெக்சிகோ போர் முடிந்த காலகட்டத்தில், கலிஃபோர்னியாவின் தங்கவேட்டை முழுவீச்சில் தொடங்கியது. அமெரிக்காவின் சுரங்க முதலாளிகளும், இராணுவ முகாம்களும், குடியேறிகளும் அப்பாச்சிகளின் பூர்வீக நிலங்களுக்குள் அத்துமீறிப் படையெடுத்தனர். அதனால், அதுவரை நிலவிய அமைதி ஒப்பந்தம் முறியத் தொடங்கியது. இதன் விளைவாக அப்பாச்சிகளின் இறையாண்மையும் வாழ்வாதாரமும் பெரிய கேள்விக்குறியாயின. இந்த அத்துமீறல்களால் பூர்வகுடிகளின் குருதி கொதிக்கத் தொடங்கியது. அடுத்த வந்த நாற்பதாண்டு காலத்தை ‘அப்பச்சேரியா’ வரைபடம் குருதிக்கோலமாய் தீட்டிக்கொண்டது. அமெரிக்காவின் மேற்குப்பகுதி விரிவாக்கத்தில் வெள்ளையர்களை நீண்டகாலம் எதிர்த்துப் போராடிய பூர்வகுடி இனமாக அப்பாச்சிகளைத்தான் வரலாறு குறித்து வைத்துள்ளது.
1861-ஆம் ஆண்டு அரிசோனாவின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள ‘அப்பாச்சி கணவாய்’ (Apache Pass) அருகில் நடந்த ‘பாஸ்கம் விவகாரம்’ (Bascom Affair), அப்பாச்சிப் போர்த்தீக்கு முதல் பொறியாக அமைந்தது. அப்பகுதியிலிருந்த ஐரிஷ் குடியேறி ஒருவரின் பண்ணையிலிருந்து ஒரு சிறுவனும் கால்நடைகளும் அப்பாச்சி பூர்வகுடிகளால் கடத்தப்பட்டனர். அச்சிறுவனை மீட்கும் பொருட்டு, சிரிகாஹுவா (Chiricahua) அப்பாச்சி பழங்குடியினரின் தலைவரான கோச்சீஸை (Cochise), அமெரிக்க இராணுவத்தின் அனுபவமற்ற இளம் அதிகாரி லெப்டினன்ட் ஜார்ஜ் பாஸ்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, நயவஞ்சகமாகச் சிறைப்பிடிக்க முயன்றார்.
தன் கத்தியால் கூடாரத்தைக் கிழித்துக்கொண்டு கோச்சீஸ் தப்பியபோதிலும், அவரது உறவினர்கள் ராணுவத்தால் பிடிபட்டனர்; அதைத் தொடர்ந்து அவர்கள் தூக்கிலிடப்பட்டனர். இந்த வரலாற்றுப் பிழை பழங்குடி மக்களிடையே ஆறாத வடுக்களையும் பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அதுவரை அப்பகுதியில் அமைதித் தூதுவராக விளங்கிய கோச்சீஸும், அவரது மாமனாரான மாங்காஸ் கொலராடாஸும் (Mangas Coloradas) அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் பேரமைப்பை உருவாக்கினர். அமைதிக்கான அனைத்துக் கதவுகளும் அடைக்கப்பட்டன; கால் நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்த கொடூரமான போரை அவர்கள் தொடங்கினர்.


அப்பாச்சி தலைவர்களுள் மாங்காஸ் கொலராடாஸ் மிகப்பெரிய உருவமும், கூரிய மதிநுட்பமும் கொண்டவராகத் திகழ்ந்தார். அவர் அமைதியை விரும்பியபோதிலும், வெள்ளை குடியேற்றவாசிகளின் எல்லை மீறல்களால் ‘அப்பாச்சிக் கணவாய்ப் போர்’ (Battle of Apache Pass, 1862) தொடுக்கப்பட்டது. 1863-ஆம் ஆண்டில், அமைதிப் பேச்சுவார்த்தைக்காக வெள்ளைக்கொடியுடன் வந்த அவரை அமெரிக்க இராணுவம் தந்திரமாகக் கைது செய்து, கொடூரமான முறையில் சித்திரவதை செய்து படுகொலை செய்தது. அத்தலைவனின் படுகொலை அப்பாச்சி மக்களை மேலும் சீற்றமடையச் செய்தது.


மாங்காஸ் கொலராடாஸுக்குப் பின் களமிறங்கிய விக்டோரியோ (Victorio), கொரில்லா போர்க்கலையில் இணையற்ற வீரராக விளங்கினார். அமெரிக்க, மெக்சிகோ கூட்டுப்படைகள் சூழ்ந்தபோதிலும் பாலைவனத்தின் ஒவ்வொரு பாறைச்சரிவையும் தனக்குச் சாதகமாக்கிப் போராடி 1880-ல் வீரமரணமடைந்தார். வில்லும் துப்பாக்கியும் ஏந்தி ஆண்களுக்கு நிகராகக் களமிறங்கிய அப்பாச்சி பெண்களின் தீரத்தை வரலாற்று ஆய்வாளர் ஈவ் பால் (Eve Ball) பதிவு செய்துள்ளார். விக்டோரியோவின் மறைவுக்குப் பிறகு, அப்பாச்சிப் போர்களின் இறுதிப் பாய்ச்சலையும் நீண்டகாலத் தற்காப்புப் போராட்டத்தையும் முன்னெடுத்தவர் அமெரிக்க அரசாங்கத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கியர் ஜெரோனிமோ. மெக்சிகோ தாக்குதலொன்றில் தனது மொத்த குடும்பத்தையும் இழந்த ஜெரோனிமோ, தனது ஆன்மீகப் பயணத்திலிருந்து ஆயுதப்பயணத்திற்குள் நுழைந்தார்.

அப்பாச்சிப் போர்களின் போக்கை மாற்றியமைக்க அமெரிக்கத் தளபதி ஜெனரல் ஜார்ஜ் க்ரூக் (General George Crook) களமிறக்கப்பட்டார். அப்பாச்சிகளை வீழ்த்த அப்பாச்சிகளால்தான் முடியும் என்பதை உணர்ந்த ஜெனரல் க்ரூக், பிற பிரிவு அப்பாச்சிகளைத் தன் இராணுவத்தின் ‘சாரணர்களாகவும்’ (Scouts), தடமறியும் வழிகாட்டிகளாகவும் (Trackers) சேர்த்துக்கொண்டார். இதனால் அப்பாச்சி மக்களால் “சாம்பல்நிற நரி” (Gray Fox) என்று அழைக்கப்பட்டார். களத்தில் இரக்கமற்ற எதிரியாகச் செயல்பட்டபோதிலும், அப்பாச்சி மக்களின் வீரத்தையும், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும் மதிக்கும் நேர்மை ஜெனரல் க்ரூக்கிடம் இருந்தது. 1883-ஆம் ஆண்டில் சியரா மாட்ரெ மலைகளில் ஜெரோனிமோவை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திச் சரணடையச் செய்யும் அளவுக்கு வெற்றிகண்டார்; இருப்பினும் அமெரிக்காவின் நெருக்குதலால் அவரது முயற்சிகள் தோல்வியடைந்தன.

1886-ஆம் ஆண்டு அப்பாச்சிப் போர்களின் இறுதி அத்தியாயத்தை எழுதியது. ஜெனரல் நெல்சன் மைல்ஸின் (General Nelson Miles) 5,000-க்கும் மேற்பட்ட படைவீரர்கள், நவீனத் தொலைத்தொடர்புக் கருவிகள் (Heliographs) சூழ, 67 வயதான ஜெரோனிமோவையும் அவரது குழுவையும் துரத்தினார்கள். இக்குழுவில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர். தொடர் ஓட்டம், பசி, தாகம், குடும்பத்தினரின் எதிர்காலம் குறித்த கவலை ஆகியவை ஜெரோனிமோவை சிந்திக்க வைத்தன. 1886 செப்டம்பர் 4 அன்று, ‘ஸ்கெலிட்டன் கேன்யன்’ (Skeleton Canyon) என்ற இடத்தில் ஜெரோனிமோ தன் ஆயுதங்களைக் கீழே வைக்கும்போது, அமெரிக்க வரலாற்றின் மிக நீண்ட போர் முறைப்படி முடிவுக்கு வந்தது. ஆனால், அதுவே மீண்டும் ஒரு கொடூரமான துரோகத்தின் தொடக்கமாக அமைந்தது.

அரிசோனாவின் ஸ்கெலிட்டன் கணவாயில் (Skeleton Canyon) ஜெனரல் நெல்சன் மைல்ஸிடம் ஜெரோனிமோ சரணடைய ஒப்புக்கொண்டார். அப்போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஜெரோனிமோவும் அவரது 38 தோழர்களும் சரணடைந்த பின் ஃபுளோரிடாவிற்கு (Florida) இரண்டு ஆண்டுகள் மட்டுமே நாடு கடத்தப்படுவார்கள் என்றும், அங்குச் சென்றடைந்ததும் ஏற்கனவே சிறைப்பிடிக்கப்பட்டிருந்த அவர்களின் குடும்பத்தினரோடு இணைக்கப்படுவார்களென கூறப்பட்டது. பிறகு தங்களின் பூர்வீக நிலமான அரிசோனாவிற்கே திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்றும் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், அமெரிக்க அதிபர் குரோவர் கிளீவ்லேண்ட் (Grover Cleveland) நிபந்தனையற்ற சரணடைதலை மட்டுமே வலியுறுத்தியதால், ஜெனரல் மைல்ஸ் அளித்த அனைத்து நிபந்தனைகள் நிராகரிக்கப்பட்டன. மனித சஞ்சாரமற்ற ஃபோர்ட் பிக்கன்ஸ் (Fort Pickens, Florida ) கோட்டைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஜெரோனிமோ இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகத் தன் குடும்பத்தைப் பார்க்க அனுமதிக்கப்படவுமில்லை. அத்துடன் அமெரிக்கா அரசாங்கம் இறுதிவரை அவரைத் தாய்மண்ணாகிய அரிசோனாவிற்கு அனுப்பவேயில்லை. குடும்பத்தோடு சொந்த மண்ணில் விவசாய நிலங்கள் தரப்பட்டு வாழ வைக்கப்படுவார்கள் என்ற வாக்குறுதியும் வழக்கம்போல் மீறப்பட்டது.
அப்பாச்சிப் போர்களின் முடிவு அம்மக்களுக்கு விடிவைத் தரவில்லை; மாறாக ‘சான் கார்லோஸ்’ (San Carlos) முகாமில் பசியும் நோயும் அவர்களை வாட்டின. குழந்தைகள் ‘கார்லைல் தொழில் துறை பள்ளி’ (Carlisle Industrial School) போன்ற தொலைதூர இடங்களுக்கு அனுப்பப்பட்டு, “இந்தியனைக் கொன்று மனிதனைக் காப்பாற்று” (Kill the Indian, Save the man) என்ற கொடுங்கோல் கொள்கையால் தாய்மொழியும் பண்பாட்டு அடையாளங்களும் பலவந்தமாக அழிக்கப்பட்டன; ஆண்கள் விவசாயிகளாக மாற்றப்பட்டனர். போருக்குப் பின் ஜெரோனிமோ உலகக் கண்காட்சிகளில் ஒரு பொருளாகக் காட்சிப்படுத்தப்பட்டார். தாய்மண்ணின் நினைவுகளோடு, “நான் சரணடைந்திருக்கக் கூடாது; களத்திலேயே போரிட்டு மாண்டிருக்க வேண்டும்” என்ற மனக்குமுறலோடு 1909-ல் அவர் உயிர் துறந்தார்.
அப்பாச்சிப் போர்கள் விட்டுச் சென்ற குருதிக்கனல் அழியா வடுக்களாக தலைமுறைகளுக்கு நீடித்தன. நில இழப்பு, வறுமை, பண்பாட்டுச் சுரண்டல் ஆகிய சவால்களை அப்பாச்சிகள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், அத்தனை ஒடுக்குமுறைகளுக்கு மத்தியிலும் அவர்களின் ஆன்மாவை யாராலும் வெல்ல முடியவில்லை. அவர்கள் இரகசியமாகத் தங்கள் சடங்குகளை நடத்தினார்கள்; தாய்மொழியை அடுத்த தலைமுறைக்கு மெல்லிய குரலில் கற்பித்தார்கள்.
20-ஆம் நூற்றாண்டில், அவர்கள் அமெரிக்க நீதிமன்றங்கள் வாயிலாக தங்கள் நிலம், நீர் போன்ற உரிமைகளுக்காகப் போராடத் தொடங்கினார்கள். கல்வி, அரசியல், கலை ஆகிய துறைகளில் சிறந்து விளங்கி, தங்களின் ஆதி அடையாளத்தைப் பாதுகாத்துக்கொண்டனர். இரு உலகப் போர்களிலும் அமெரிக்க ராணுவத்தில் இணைந்து களமாடித் தங்களின் வீரத்தை மீண்டும் நிலைநாட்டியுள்ளனர்.
அப்பாச்சிப் போர்கள் என்பது அதிகார விரிவாக்கத்திற்கும், ஆதிகுடிகளுக்கும் இடையிலான நித்தியப் போராட்டத்தின் சாட்சியமாக நிற்கிறது. இன்று, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகியும், தென்மேற்குப் பாலைவனங்களின் கணவாய்களில் வீசும் காற்றில் அப்பழங்குடியினரின் மூச்சுக்காற்று இன்னும் உறைந்திருக்கிறது. நிலமும், பண்பாடும், மனித உணர்வுகளும் எந்தப் பேரரசின் அதிகார போக்கிற்கும் அடங்கியதல்ல என்பதற்கு இன்றும் வாழும் அப்பாச்சி மக்கள்தான் சாட்சி!
பெட்டிச் செய்தி
முப்பதாண்டு காலப் போராளி வாழ்க்கையில் ஜெரோனிமோவைப் பிடிப்பதும், காற்றை வலையில் அடைப்பதும் ஒன்றென்பதை அமெரிக்க அரசு உணர்ந்தது. பாறை இடுக்குகளில் பக்கத்திற்கு ஒருவராகச் சிதறியோடித் தப்பிக்கும் உத்தியால் பல ஆண்டுகள் அமெரிக்க இராணுவத்தை அலறடித்துக்கொண்டிருந்தார். வெறும் 37பேர் (அதில் 20 பேர்தான் வீரர்கள், மற்றவர்கள் பெண்களும் குழந்தைகளும்) கொண்ட அவரது குழுவைக் கண்டுபிடித்துக் கைது செய்ய, அமெரிக்க இராணுவத்தின் மொத்தப் படையில் கால் பங்கான 5,000 வீரர்களும், 3,000 மெக்சிகன் வீரர்களும், 1,000 உள்ளூர் ஆயுதக் குழுவென (vigilantes) 9,000வீரர்கள் 37 பேரைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
படைப்பாளர்

ராஜி வாஞ்சி ( ராஜஶ்ரீ வாஞ்சிநாதன்)
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், ஹூஸ்டனில் வசிக்கும் ராஜி, கட்டுரையாளர், கவிஞர். இவரது ‘நீளிடைக் கங்குல்’ 2020ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறை வழங்கும் சிறந்த நூலுக்கான விருது வென்றுள்ளது. கவிஞர் அமிர்தகணேசனுடன் இணைந்து, ‘ஏன் விரட்டினீர்கள், எங்களை?’ என்கிற அமெரிக்கப் பூர்வகுடிகள் பற்றிய வரலாற்றுக் கவிதை மற்றும் கட்டுரைத் தொகுப்பை எழுதியுள்ளார். ‘குறிஞ்சி பூத்த வேலி’, ‘ஜன்னல் உரசும் வண்ணத்துப்பூச்சி’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். குழுவாக இணைந்து பல படைப்புகளைத் தந்துள்ளார். இவரது பல படைப்புகள் தொகுப்பு நூல்களில் வெளியாகியுள்ளன. இவரது ஹைக்கூ, சிவகாசி அய்யாநாடார் ஜானகிஅம்மாள் கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. வட அமெரிக்கப் பேரவையின் FeTNA கவியரங்கங்களில் இடம் பெற்றுள்ளார்; கவியரங்க ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். மகாகவி ஈரோடு தமிழன்பன் 80 விருது, Women Achievement Award 2022 for exemplary service to the community, வெளிநாடு வாழ் பெண் கல்பனா சாவ்லா விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளார்.
ஹூஸ்டன் பாரதி கலை மன்றத்தின் இலக்கிய இயக்குநராகப் பணியாற்றியவர், அதன் ‘தமிழ்ச்சாரல்’ இதழ் ஆசிரியராகவும் செயல்பட்டுள்ளார். ஹூஸ்டன் பாரதி கலைமன்றத்தின் ‘நாளைய பாரதி’ என்கிற வடஅமெரிக்க அளவிலான, அனைத்து வயதினருக்குமான இலக்கியப் பேச்சுப் போட்டியின் ஒருங்கிணைப்பாளராகவும், நிகழ்ச்சி வடிவமைப்பில் முக்கிய பங்கும் வகித்துவருகிறார். இவரின் படைப்புகள் பல இதழ்களில் வெளியாகியுள்ளன.




