“We do not own the land; we belong to the land. Our obligation is to keep it in balance through prayer, humility, and right living.” — Hopi Navoti (Traditional knowledge)
நிலம் நமக்குச் சொந்தமானதல்ல; நாம் நிலத்திற்குச் சொந்தமானவர்கள். பிரார்த்தனை, பணிவு , அறவாழ்வுமூலம் அதன் சமநிலையைப் பேணுவதே நம் கடமை. – ஹோப்பி நவோதி ( மரபுவழி அறவுரைகள் )

நள்ளிரவில் கூட நகராது நிற்கும் வெப்பச்சலனம், பக்கத்தில் நிற்பவரைப் பார்க்க முடியாத கும்மிருட்டு, அதை விரட்ட முயலும் வானத்து விண்மீன்கள், மலைமுகட்டில் சித்திரமாய் தீட்டப்பட்ட தூரத்து நிலவு — இவையனைத்தும் ஹோப்பி பூர்வகுடி மக்களுக்கு இயற்கையின் கொடைகளாகும். அரிசோனாவின் வடகிழக்குப் பகுதியில் பட்டு எதிரொலிக்க, பட்டமரம்கூட இல்லாத பாலைவனப் பகுதியில், ‘திடும்… திடும்’ என அதிரும் கொட்டுச்சத்தமும், சிறுகற்கள் நிரம்பிய மரத்தாலும் மண்ணாலுமான கிலுகிலுப்பை ஒலியும், மனதை உருக்கும் தடித்த புல்லாங்குழலின் ஓசையும் கேட்பவரை திகிலுக்கும் பரவசத்திற்கும் இடையே ஊசலாட வைக்கும். கண்ணுக்கெட்டிய தொலைவுவரை மனித சஞ்சாரமற்ற வெட்டவெளியில் இருளும், ஆன்மாவை வருடும் குழலோசையும் யாரையும் புல்லரிக்கச் செய்யும் வல்லமையுடையவை.
\



அந்த இருளின் அமைதியில்தான், மலையைக் குடைந்து உருவாக்கபட்ட ரகசிய நிலவறைகளான புனிதக் கிவாக்கள் (Kivas) குழலோசையிலும், கொட்டு முழக்கத்திலும் விழித்துக்கொள்கின்றன. வெளியுலகம் உறங்கும் வேளையில், பூமித்தாயின் கருவறை போன்ற அந்த நிலத்தடி அறைகளில் அவர்கள் தங்களின் ஆதி நம்பிக்கைகளிலும் வழிபாட்டுச் சடங்குகளிலும் ஆழ்ந்து கிடக்கிறார்கள். மற்றவரின் கவனத்தை ஈர்ப்பதற்கோ ஆர்ப்பாட்ட விளம்பரத்திற்கோ அன்றி, இந்தப் பேரண்டத்தின் சமநிலையைக் காப்பதற்காக மட்டுமே அவர்களின் ஒவ்வொரு அடியும், ஒவ்வொரு இசைக் குறிப்பும் அந்தப் பாலைவன இரவில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

இயற்கையின் கூறுகளான மழை, வெயில், சூரியன், சந்திரன், பயிர்-பச்சை தொடங்கி மனிதனின் மூச்சுக்காற்று வரையுள்ள சமநிலைதான் சகலமும் என வாழும் ‘அகிலத்தின் அமைதித் தூதுவர்கள்’ – இந்த ஹோப்பி பூர்வகுடி இனத்தவர்கள். ‘ஹோப்பிடு ஷி-நு-மு (Hopituh Shi-nu-mu)’ என்று அழைக்கப்படும் ஹோப்பி பூர்வகுடிகளின் பெயருக்கு ‘நாகரிகமானவர்கள், மென்மையானவர்கள், அமைதி காப்பவர்கள்’ முதலியவை பொருளாகக் கூறப்படுகிறது.


செம்மணல் துகள்களால் செதுக்கப்பட்ட பிரமாண்ட மலைத்தொடர்கள் பல நூறு மைல்கள் தொடரும். அவற்றுக்கு இடையில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஓடி நீர்வழித்தடம் உருவாக்கிய வெகு ஆழமான பள்ளத்தாக்குகளுடன் காட்சியளிக்கும் பிரமிப்புக்குப் பெயர் – கிராண்ட் கேன்யன்(Grand Canyon, Arizona). அரிசோனாவைப் பற்றி பேசும்போது எவ்வாறு கிராண்ட் கேன்யனைப் பற்றி பேசாமல் இருக்க முடியாதோ, அவ்வாறுதான் ஹோப்பி மக்களின் தோற்ற வரலாற்றைப் பற்றி பேசும்போதும் கிராண்ட் கேன்யனை முதல் புள்ளியாகக் கூறாமல் நகர முடியாது. ஹோப்பி பூர்வகுடிகளின் வாய்மொழி மரபின்படி, மனிதகுலம் தன்னுடைய நான்காவது உலகத்திற்குள் நுழைந்த ஆன்மப்பாதையான ‘சிப்பாப்பு’ (Sipapu) இந்த இயற்கைப் பேரமைப்பான கிராண்ட் கேன்யனில்தான் அமைந்துள்ளது. அங்கிருந்துதான் அவர்களின் ஆதிகுலங்கள் (Clans) தங்களின் புனிதப் பயணத்தைத் தொடங்கி, இன்றிருக்கும் அரிசோனாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள செங்குத்தான மணற்பாறை மேசாக்களில் (Mesa) வந்து நிலைபெற்றுள்ளன.

அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியின் இதயத்துடிப்பான அரிசோனாவில் கரடுமுரடான மூன்று உயர்ந்த மலைகள், ஆனால் அதன் மேற்பரப்போ தட்டையான நிலப்பரப்பு. அவை இந்நிலப்பரப்பிற்கே உரிய அதிசயம் எனலாம். அவை மேசா (Mesa) என்று அழைக்கப்படுகின்றன. அதன் மீது பனிரெண்டு கிராமங்களாகப் பிரிந்து பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர்கள் ஹோப்பி தொல்குடிகள். அம்மக்கள், தங்களை உலகின் பாதுகாவலர்களாக கருதினர். அதனால், அவர்களின் அனைத்து வழிபாட்டு முறைகளும் மனிதர்களையும், இயற்கையையும் இணக்கமாக வழிநடத்துவதை மையமாகக் கொண்டிருந்தன.


சோளப் பயிரை விதைத்தல், நீர் சேமித்தல், சூரியனை வாழ்த்துதல் என அன்றாட வாழ்வின் ஒவ்வொரு செயலும் வழிபாடாகக் கருதப்பட்டது. அப்பழங்குடியினர் வாழ்க்கையையும் வழிபாட்டையும் பிரித்தறியத் தெரியாதவர்களாக இருந்தனர். ஒவ்வொன்றையும் இயற்கையின் கொடையாகக் கொண்டாடினர். அரிசோனாவின் மலைவாசிகளான ஹோப்பி மக்கள் அமைதிக்கும் ஆன்மீக வாழ்விற்கும் மட்டும் புகழ் பெற்றவர்கள் அல்ல; உலகிலேயே மிக நீண்ட காலமாக ஒரே இடத்தில் தொடர்ந்து வாழ்ந்து வரும் மக்கள் என்ற பெருமையையும் பெற்றவர்கள்.

ஸ்பானியர்களின் படையெடுப்புகளையும், மதமாற்ற முயற்சிகளையும் தாண்டித் தங்கள் நிலத்தின் ஆன்மீகத்தையும் மரபுகளையும் அவர்கள் காத்து நின்ற விதம் வரலாற்று ஆய்வாளர்களை இன்றும் வியக்க வைக்கிறது. ஹோப்பி மக்களின் உலர்ந்த நில விவசாய முறையும் (Dry-farming), அவர்களின் நுண்கலை மரபுகளும் அவர்களின் வாழ்வியலின் மற்றுமொரு உன்னதமான பரிமாணங்களாகும்.
சொட்டுநீர்ப்பாசனமோ நவீன நீர்ப்பாசன வசதிகளோ இல்லாத அந்த வறண்ட பாலைவனப் பகுதியில், வானம் பார்த்த பூமியையும் சொற்ப மழையையும் மட்டுமே நம்பி ஆழ வேர்விடும் சோளப் பயிர்களை வளர்க்கும் அவர்களின் உத்தி அறிவியலாளர்களை இன்றும் வியக்க வைக்கிறது. மேசா என்றழைக்கப்படும் உயர் பாலைவன பீடபூமியில் (High Desert Plateau) வேட்டையாடுவதற்கு மிகக் குறைந்த விலங்குகளே இருந்ததால், இயல்பாகவே ஹோப்பி மக்கள் விவசாயிகளாக வாழ வேண்டியதாயிற்று; அந்நிலத்தின் வறட்சிக்கும் சவால்களுக்கும் இடையே அவர்கள் தங்களை ஒரு முழுமையான தற்சார்புச் சமூகமாக (Self-Sustaining Community) உருவாக்கிக் கொண்டனர்.


அதேபோல், அவர்களின் கலை மரபுகளும் உலகப் புகழ்பெற்றவை. குறிப்பாக, ‘கச்சினா’(Kachina dolls) எனப்படும் ஆன்மீக மரபுப் பொம்மைகளை மரத்தால் செதுக்கி, இயற்கை வண்ணங்களைக் கொண்டு துல்லியமாகத் தீட்டுவதிலும், அழகிய வடிவிலான களிமண் பாண்டங்களை (Pottery) உருவாக்குவதிலும், ‘ஹோப்பி ஓவர்லே’ (Hopi overlay) எனப்படும் வெள்ளி நகைத் தயாரிப்புத் கலையிலும் அவர்கள் நிகரற்ற கைவினைஞர்களாகத் திகழ்கிறார்கள். ஒவ்வொரு கைவினைப் பொருளும் வெறும் அலங்காரப் பொருள் அல்ல; அது அவர்களின் தொன்மக் கதைகளையும் ஆன்மீக நம்பிக்கைகளையும் தலைமுறை தலைமுறையாகக் கடத்தும் வரலாற்று ஆவணங்களாகும்.



ஹோப்பி மக்களின் வாழ்வியலில் மிக முக்கியமான அடித்தளமே அவர்களின் தாய்வழிச் சமூகமென்ற அமைப்பாகும் (Matrilineal Society). ஒரு குடும்பத்தின் பரம்பரையையும், நில உரிமையையும் தாய்வழி மரபே தீர்மானிக்கிறது. மேசாக்களில் (Mesa) உள்ள வீடுகள், விவசாய நிலங்கள், சடங்கு சார்ந்த உரிமைகள் அனைத்தும் பெண்களுக்கே சொந்தமானவை. ஒரு ஆண் திருமணமாகும்போது மனைவியின் குடும்பத்திற்கே குடிபெயர்கிறான். சடங்குகளை ஆண்கள் வழிநடத்தினாலும், குலத்தின் தலைவியாகவும் (Clan Mother), நில, வளங்களின் உண்மையான பாதுகாவலராகவும் வயதான மூத்தப் பெண்களே திகழ்கிறார்கள்.
ஸ்பானிஷ் மொழியில் ‘பியூப்லோ’ (Pueblo) என்றால் ‘கிராமம்’ என்று பொருள். அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில், குறிப்பாக அரிசோனா, நியூ மெக்ஸிகோ முதலிய மாநிலங்களில், நிரந்தரமாகக் கற்களாலும் களிமண்ணாலும் (Adobe) கட்டப்பட்ட வீடுகளில் ஒன்றுகூடி வாழ்ந்து வந்த பூர்வகுடி சமூகங்களைக் குறிக்கவே ஸ்பானியர்கள் இச்சொல்லை முதன்முதலில் பயன்படுத்தினர். நாடோடி வாழ்க்கையை மேற்கொள்ளாமல், ஒரே இடத்தில் நிரந்தரமாகக் குடியேறி விவசாயம் செய்தல், பல அடுக்குக் களிமண் வீடுகளைக் கட்டுதல், கூட்டுச் சமூக வாழ்வை நெறிப்படுத்துதல் ஆகியவை இவர்களின் முக்கிய அடையாளங்களாகும். ஹோப்பி மக்களும் இத்தகைய பியூப்லோ பண்பாட்டைச் சார்ந்தவர்களேயாவர்.

ஹோப்பி பூர்வகுடிகளை நாகரிகமற்ற காட்டுமிராண்டிகள் எனக் கருதுபவர்கள் தென்மேற்குப் பூமியின் இதயத்திற்குப் பயணம் செய்ய வேண்டும்; அப்பகுதியில் பியூப்லோ (Pueblo) குடிகளாய் வாழும் உறுதியான, தற்சார்புமிக்க ஹோப்பி மக்களின் வாழ்க்கைமுறை அவர்களுக்கு மிகப்பெரிய மனமாற்றத்தைத் தரும். ஹோப்பி மக்களும், அவர்களின் வாழ்க்கைமுறையும் ஆளுமையும் காண்பவரை வசியப்படுத்தி ஆட்கொள்ளத்தக்கவை.



1540ஆம் ஆண்டில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பிரான்சிஸ்கோ வாஸ்குவெஸ் டி கொரொனாடோவின் (Francisco Vázquez de Coronado) படையெடுப்பின் மூலமாக ஸ்பானியர்கள் ஹோப்பி, பியூப்லோ நிலங்களில்காலடி வைத்தனர். தொல்லியல் சான்றுகளும் வாய்மொழி வரலாறும் கி.பி.1540-இல் ஸ்பானியர்கள் வருவதற்கு முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஹோப்பி மக்கள் அரிசோனாவின் அதே உயர் பாலைவன மேசா நிலப்பரப்பில் வாழ்ந்து வந்துள்ளனர். அதற்கும் முந்தைய காலப்பகுதியிலும் (கி.மு. காலத்திலிருந்தே) அந்தப் பிராந்தியத்தில் பூர்வகுடிச் சமூகங்களின் தொடர்ச்சியான வாழ்வியல் தடங்கள் இருந்துள்ளதை அங்குள்ள தொல்பொருள் எச்சங்கள் உறுதிப்படுத்துகின்றன.
தங்கம், வெள்ளி, வாசனைப் பொருட்கள் விற்பனை வழித்தடம், நில பறிப்பு, மனித உழைப்புச் சுரண்டல் முதலியவை ஸ்பானியர்களின் படையெடுப்பின் நோக்கங்களாக அமைந்தன. அமெரிக்காவின் தென்மேற்குப்பகுதியான பியூப்லோ நிலங்களில் அவர்கள் தேடி வந்த திரவியங்கள் கிடைக்காதபோதும் உணவுக்காக ஹோப்பி மக்களின் பல அண்டை பூர்வகுடி கிராமங்களைத் தாக்கி கொடூரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதுவே ஹோப்பி மக்கள் முதல்முறையாக கண்ட வன்முறை வரலாற்றுக் காட்சியானது.


ஆனால், பியூப்லோ மக்களின் தீரமான எதிர் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஸ்பானியப்படை பின்வாங்கியது. அடுத்த ஐம்பது ஆண்டுகள் அமைதியாக வாழ்ந்த பூர்வகுடிகளின் வாழ்வில் அடுத்த பிரமாண்டமான புயல் 1598-இல் மையம் கொண்டது. அந்தப் புயலின் மையம் – ஸ்பானியப்படைத் தளபதி யுவான் டி ஒனே (Juan de Oñate y Salazar). கொடூரமான கோட்பாடுகளுடன் கட்டவிழ்க்கப்பட்ட அவரின் மத அரசியலால் 17-ஆம் நூற்றாண்டில் ஹோப்பி வாழ்விடங்களிலும் பிற பியூப்லோ கிராமங்களிலும் பிரான்சிஸ்கன் பாதிரியார்கள் காலூன்றத் தொடங்கினர். கத்தோலிக்க மதத்தைப் பலவந்தமாகத் திணித்த அவர்கள், பூர்வகுடி மக்களின் புனிதமான ‘கிவா’’ (Kivas) அறைகளை இடித்தனர். கச்சினா (Kachinas) வழிபாடுகளும் பாரம்பரியச் சடங்குகளும் தடை செய்யப்பட்டு பழங்குடியினர் கடுமையாக உடல்ரீதியாகவும் உளவியல் அடக்குமுறைகளுக்கும் உள்ளாயினர்.


1660-களில் வறட்சியும் ஸ்பானிய அடக்குமுறையும் அயல் பழங்குடியினர் தாக்குதல்களும் பியூப்லோக்களை சுழற்றியடித்தன. ஸ்பானியர்களின் அராஜகப்போக்கினைப் பொறுக்க முடியாத பியூப்லோ மக்கள் 1680-இல் போ’பய் (Po’pay) என்ற ஆன்மீகத்தலைவர் தலைமையில் மிகப்பெரிய அணியாக ஒன்றுபட்டனர். பியூப்லோ கிளர்ச்சி முழுவீச்சில் தொடங்கியது (The Pueblo Revolt,1680) பலவிதங்களில் பாதிக்கப்பட்ட ஹோப்பி பழங்குடியினரும் அக்கிளர்ச்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர். பூர்வகுடிகளின் கடுமையான தாக்குதலை எதிர்கொள்ளமுடியாத ஸ்பானியர்கள் பின்னடைந்தனர்.
1692-இல் ஸ்பானியர் மீண்டும் அப்பகுதிகளை கைப்பற்றியபோதும் ஹோப்பி மக்கள் தங்களின் ஆன்மீகச் சுதந்திரத்தைப் பாதுகாக்க, கத்தோலிக்க மதப்பரப்பாளர்களைத் தங்களது நிலத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றினர். ஹோப்பி மக்கள் 18-ஆம் நூற்றாண்டு முழுவதும் ஸ்பானியர்கள் மேற்கொண்ட தொடர் ராணுவ முயற்சிகளையும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளையும் வெற்றிகரமாக முறியடித்தனர். இதன் விளைவாக, 19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அமெரிக்கா அந்த நிலப்பகுதியை உரிமை கோரும் வரை, ஹோப்பி மக்கள் ஐரோப்பியக் கட்டுப்பாடின்றி சுதந்திரமாக வாழ்ந்தனர்.
ஸ்பானிய காலனித்துவத்தை ஹோப்பி மக்கள் தீவிரமாக எதிர்த்தபோதிலும், அவர்களின் அன்றாட வாழ்வில் ஸ்பானியர்கள் அறிமுகப்படுத்திய குதிரைகள், ஆடுகள், பீச் மரங்கள் போன்றவை முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தின. குறிப்பாக, கோதுமை விவசாயமும் ஹோப்பி வாழ்வியலில் இணைந்ததுடன், மேசா வீடுகளில் அமைக்கப்பட்ட புகைபோக்கிகள் அவர்களின் கட்டிடக்கலையில் புதுவரவானது.

1848-இல் அமெரிக்காவின் ஆதிக்கத்தின் கீழ் வந்த ஹோப்பி மக்கள், எந்தவொரு போரிலும் ஈடுபடாமலும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடாமலும் அமைதி வழியைக் கடைப்பிடித்தனர். இருப்பினும், 1882-இல் அமெரிக்க அரசு உருவாக்கிய ஒதுக்கீட்டுப் பகுதியில் (Reservation) வசித்த ஹோப்பிக் குழந்தைகளை வலுக்கட்டாயமாகக் கார்லைல் (Carlisle), கீம்ஸ் கேன்யான் (Keams Canyon) போன்ற உறைவிடப் பள்ளிகளுக்கு (Boarding schools) அனுப்பி, அவர்களின் மொழியையும் பண்பாட்டையும் அழிக்கும் ‘நாகரிகமயமாக்கல்’ (Assimilation) சூழ்ச்சி தீவிரமடைந்தது.

இந்தச் சூழலில், ஹோப்பி மக்களிடையே சமூகத்தின் பாரம்பரிய வழிமுறைகளைக் காக்க விரும்பியவர்களுக்கும், நவீன கால மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் வலுத்தன. இதன் விளைவாக ஒராய்பி (Oraibi) கிராமம் பிரிவினையைச் சந்தித்தது; இது ஹோப்பி மக்களின் வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனையாகும். அத்துடன் நவாஹோ ஒதுக்கீட்டுப் பகுதியால் (Reservation) சூழப்பட்ட நில அமைப்பு, தொழில்துறை நிறுவனங்களின் தலையீடு போன்ற நிலம் சார்ந்த சர்ச்சைகள் ஹோப்பி பழங்குடியினருக்கு பலகாலம் நீடித்தன. இதன்காரணமாக, 1992-ஆம் ஆண்டுதான் இவர்களின் எல்லைகள் முழுமையாக நிர்ணயிக்கப்பட்டன.
நவீன சூழலிலும் ஹோப்பி மக்கள் தங்களின் புனிதச் சடங்குகளை வெளிமனிதர்களின் பார்வைக்கு அப்பாற்பட்டு இரகசியமாக நடத்தி, மரபுசார் ஆன்மீகக் கடமைகள் மூலம் உலகச் சமநிலையைப் பேணி வருகின்றனர். போர்கள், காலனித்துவ மாற்றங்களைக் கடந்தும் எளிமையான வாழ்வியலையும், பூமி மீதான மரியாதையையும் தங்களின் ஆன்ம உறுதிப்பாடாகத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர்.
தன்னாட்சி அதிகாரம் கொண்ட கூட்டாட்சிப் பழங்குடி தேசமாக, இவர்கள் தங்களது சொந்த அரசையும், பொருளாதாரத்தையும் நிர்வகிக்கின்றனர். கலைப்பொருட்கள் விற்பனை, விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவற்றுடன், நிலக்கரிச் சுரங்கங்கள் மூடப்பட்டதைத் தொடர்ந்து சுற்றுலா, பண்ணைத் தொழில் மூலம் பெறப்படும் வருவாயைக் கொண்டு தங்களது மக்களுக்குச் சுகாதாரம், கல்வி, குழந்தைப் பராமரிப்பு, முதியோர் நலச் சேவைகள் போன்றவற்றை வழங்கி வருகின்றனர்.
நிலப்பறிப்பு, அரசு அடக்குமுறைகள் போன்ற கடுமையான சவால்களையும் தாண்டி, ஹோப்பி மக்கள் தங்கள் தாய்வழிச் சமூக அமைப்பு, பழங்குடி மரபுகள், குல அமைப்புகள், ஆன்மீகச் சடங்குகள் ஆகியவற்றை எத்தகைய சிதைவுமின்றிப் பாதுகாத்து இன்றைய நவீன காலம் வரை கொண்டுவந்து சேர்த்துள்ளனர். பியூப்லோ பண்பாட்டின் உயிர்ப்பான சாட்சியாகவும், பூர்வகுடி மக்களின் ஒப்பிட முடியாத உறுதியின் அடையாளமாகவும் ஹோப்பி வரலாறு திகழ்கிறது.
பெட்டிச் செய்தி
பூமி என்பது ஒரு மூலப்பொருள் அல்ல—அது ஒரு உறவு. அத்துடன் சமநிலை என்பது, ஒருமுறை இழக்கப்பட்டுவிட்டால், பொறுமை, நன்றியுணர்வு, மரியாதை ஆகியவற்றின் மூலம் கவனமாக மீட்டெடுக்கப்பட வேண்டும். கட்சினா சடங்குகளுக்கும் (Katsina ceremonies) பூமிக்கும் இயற்கைக்கும் இடையிலான சமநிலையைப் பேணுவதற்கும் நேரடியான தொடர்பு உண்டு.
ஹோப்பி மக்களின் நம்பிக்கையின்படி, கட்சினாக்கள் என்பவை வெறும் ஆன்மாக்கள் மட்டுமல்ல; அவை மழை, சோளம், செழிப்பு என அனைத்து உயிர்களையும் காக்கும் இறை ஆற்றலின் தூதுவர்கள். இந்தச் சடங்குகளும் நடனங்களும் வெறுமனே நிகழ்த்தப்படும் கலை நிகழ்ச்சிகள் அல்ல—அவை மனிதகுலத்திற்கும் இயற்கைக்கும் இடையே இருக்கும் பந்தத்தைப் புதுப்பித்து, பூமியின் சமநிலையை (Balance) மீட்டெடுக்கும் உன்னத ஆன்மீகச் செயல்களாகக் கருதப்படுகின்றன.
சடங்குகளின் போது கலைஞர்கள் முகமூடி அணிந்து கட்சினா ஆன்மாக்களாக மாறும்போது, மனிதர்களும் இயற்கையும் ஒன்றாக இணைந்து இணக்கமாக வாழ்வதை அது உலகிற்கு உணர்த்துகிறது. இந்தச் சடங்குகளின் மூலமாகவும், இயற்கை மீதான மிகுந்த நன்றியுணர்வு மதிப்பு இவை மூலமுமே மனிதர்கள் பூமியின் சமநிலையைக் காப்பாற்றமுடியும் என்பது ஹோப்பி மக்களின் ஆழமான நம்பிக்கையாகும்.
படைப்பாளர்

ராஜி வாஞ்சி ( ராஜஶ்ரீ வாஞ்சிநாதன்)
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், ஹூஸ்டனில் வசிக்கும் ராஜி, கட்டுரையாளர், கவிஞர். இவரது ‘நீளிடைக் கங்குல்’ 2020ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறை வழங்கும் சிறந்த நூலுக்கான விருது வென்றுள்ளது. கவிஞர் அமிர்தகணேசனுடன் இணைந்து, ‘ஏன் விரட்டினீர்கள், எங்களை?’ என்கிற அமெரிக்கப் பூர்வகுடிகள் பற்றிய வரலாற்றுக் கவிதை மற்றும் கட்டுரைத் தொகுப்பை எழுதியுள்ளார். ‘குறிஞ்சி பூத்த வேலி’, ‘ஜன்னல் உரசும் வண்ணத்துப்பூச்சி’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். குழுவாக இணைந்து பல படைப்புகளைத் தந்துள்ளார். இவரது பல படைப்புகள் தொகுப்பு நூல்களில் வெளியாகியுள்ளன. இவரது ஹைக்கூ, சிவகாசி அய்யாநாடார் ஜானகிஅம்மாள் கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. வட அமெரிக்கப் பேரவையின் FeTNA கவியரங்கங்களில் இடம் பெற்றுள்ளார்; கவியரங்க ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். மகாகவி ஈரோடு தமிழன்பன் 80 விருது, Women Achievement Award 2022 for exemplary service to the community, வெளிநாடு வாழ் பெண் கல்பனா சாவ்லா விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளார்.
ஹூஸ்டன் பாரதி கலை மன்றத்தின் இலக்கிய இயக்குநராகப் பணியாற்றியவர், அதன் ‘தமிழ்ச்சாரல்’ இதழ் ஆசிரியராகவும் செயல்பட்டுள்ளார். ஹூஸ்டன் பாரதி கலைமன்றத்தின் ‘நாளைய பாரதி’ என்கிற வடஅமெரிக்க அளவிலான, அனைத்து வயதினருக்குமான இலக்கியப் பேச்சுப் போட்டியின் ஒருங்கிணைப்பாளராகவும், நிகழ்ச்சி வடிவமைப்பில் முக்கிய பங்கும் வகித்துவருகிறார். இவரின் படைப்புகள் பல இதழ்களில் வெளியாகியுள்ளன.




