உலகத்தின் பழம்பெரும் நாகரிகங்களின் கதைகள் அனைத்திலும் கடவுள்கள் நிரம்பி வழிகிறார்கள். மனிதன் எதையெல்லாம் கண்டு பயம் கொண்டானோ, எவையெல்லாம் அவனின் சிந்தனைக்கு அப்பாற்பட்டவையாக இருந்ததோ அவையனைத்தையும் வணங்கியிருக்கிறான். மனிதனைப் பொறுத்தவரை அவனுக்குக் கீழ்படிந்தவை மற்றும் கீழ்படியாதவை என்று வகைப்படுத்திவிட்டான். அதில் அவனால் கட்டுப்படுத்த முடியாத பெரும் சக்திகளுக்கு உருவம் கொடுத்து கடவுளாக வணங்கினான். கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடிந்த உயிர்களில் பெண்களும் உண்டு. ஏதோ ஒருவகையில் பெண்களைக் கீழ்படிய வைத்ததால், அவனுள் எப்போதும் ஒருவிதமான குற்றவுணர்வு பயமாக இருந்திருக்குமோ? ஏனெனில் அவர்கள் வகுத்த கற்புநெறி, கடமை மற்றும் மென்மை என்னும் கட்டத்திற்குள் வராத பெண்களைக் சூனியக்காரிகளாகவும், பாலியில் உணர்வை தூண்டுபவளாகவும் சித்தரித்து வைத்திருக்கின்றனர். மீண்டும் ஒரு தொன்ம கதையை எனது கற்பனையுடன் சேர்த்து மீளாய்வு செய்யலாம்.
வெளியில் உள்ள தூசு துகள்களைத் திரட்டி உலகத்தைப் படைக்கிறார் கடவுள். அப்போது உலகத்தில் யாருமே இல்லை. உயிர்களே இல்லை என்றும் கூறலாம். தகிக்கும் நட்சத்திரங்களும், சூருளும் நட்சத்திர திரள்களும் எந்தவொரு சுவாரஸ்யத்தையும் கடவுளுக்கு அளிக்கவில்லை. அதனால் அவர் உயிர்களை உருவாக்க முடிவு செய்கிறார். பின் உலகத்தில் ஒவ்வோர் உயிராகப் படைக்கிறார். எதுவுமே அவரின் படைப்புத் தொழிலின் உன்னதமாக அவருக்குத் தோன்றவில்லை. ஒருநாள் ஆதாமை உலகத்தின் மண்துகள் கொண்டு பிடித்து வைக்கிறார். அவன் மனிதனாக நடந்து திரிகிறான் அவரின் உலகத்தில். உலகமே ஏனோ தனித்து இயங்குவதுபோல் இருந்தது அவருக்கு. ஆதாமும் தனியாகவே இயங்கினான். அவன் தனிமையும் அயர்வும் கண்டு லிலித்தையும் உலகத்தின் மண்துகள் கொண்டு பிடித்து உயிர் கொடுக்கிறார். லிலித் பிறந்ததும் உலகம் மிகவும் அழகாக இருப்பதுபோல் உணர்கிறார் கடவுள். ஆதாமும் அப்படியே உணர்கிறான். இத்தனை நாள் மரங்களையும் விலங்குகளையும் பார்த்துப் பார்த்துச் சலித்துப் போயிருந்தவனுக்கு, லிலித் அவன் அயர்வைப் போக்க வந்த தேவதையாகவே தெரிந்தாள். இத்தனை நாள் ஏதோ ஒன்று இல்லாமலிருந்தது. அவள் வந்த பின்பு இல்லாத ஒன்று இல்லாமல் இருந்தது.
இருவரும் ஒருவரின் மேல் ஒருவர் அன்பு கொண்டிருந்தனர். மனிதர்கள் கைபடாத ஆதி உலகத்தில் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். இருவரும் ஒன்றாகச் சிரித்தார்கள்.
பசிக்கும்போது இருவரும் ஒன்றாகவே உணவு தேடினார்கள். அன்றும் அப்படித்தான் அவர்கள் இருவரும் கடலின் கரையில் படுத்திருந்தனர்.
“எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது” என்று ஆதாம் கூற, “ம்ம்ம்… இருவரும் சென்று திராட்சை சாப்பிடலாமா?” என்று அவள் கேட்கிறாள்.
திராட்சை உண்ண வேண்டுமென்றால் காட்டிற்குள் வெகு தூரம் நடக்க வேண்டும். அவ்வளவு தொலைவு நடக்க வேண்டுமா என்று ஆதாமுக்குத் தோன்றியது. அவன் தயக்கத்தைப் பார்த்தவள், “வெகு தூரம் நடந்தால், சுவையான திராட்சைப் பழங்கள் உண்ணலாம்” என்று ஆசை காட்டினாள்.
அவனுக்குத் திராட்சைப் பழங்களின் சுவை நினைவிலிருந்து நாக்கிற்கு வந்து சென்றது. அது ஒருவகையான அனைத்தும் கலந்த சுவை. உண்மையில் அதை நினைக்கையிலேயே ஒரு பரவசம் உள்ளே தோன்றுவதை அவனால் மறுக்க முடியாது. அவனுக்குத் திராட்சைப் பழங்கள் வேண்டும் என்று தோன்றியது.
இருவரும் கைகோத்து நடக்கத் தொடங்கினார்கள். இளஞ்சூட்டில் நடப்பது கொஞ்சம் எளிதாக இருந்தது. இருவரும் வேகமாக நடந்தார்கள். நடைபாதையில் பல கனிகள் இருந்தன. ஆனாலும் இருவரும் அதை உண்ணும் ஆர்வம் காட்டவில்லை. நேரம் கடக்க கடக்க, இருவருக்கும் அயர்வாக இருந்தது. அவளின் பேச்சைக் கேட்டுக் காட்டிற்குள் நுழைந்தது தவறோ என்று ஆதாமுக்குத் தோன்றியது. ஆனால், லிலித் அவனை ஊக்கப்படுத்தி அழைத்துச் சென்றாள். சற்றுத் தூரத்தில் திராட்சைப் பழங்களைக் கண்டதும் இருவரின் முகங்களும் மலர்ந்தன.
வயிறு நிறைய இருவரும் திராட்சைப் பழங்களை உண்டார்கள். திராட்சைச் சாப்பிடாமல் நடந்துவந்த நெடுநேரமும் நெடுந்தூரமும் அவர்களை ஏக்கத்தில் வைத்திருந்தது. அதனால் திராட்சையைக் கண்ட நொடியிலிருந்து பசிக்கும் மேலே உண்டார்கள்.
உண்டு முடித்த களைப்பில் அந்த இடத்திலேயே படுத்துவிட்டார்கள். உண்ட திராட்சை உடலுக்குள் ஏதேதோ மாற்றங்களை நிகழ்த்த, இருவரும் மயக்க நிலையில் இருந்தார்கள். அவர்களின் பாலுணர்வு தூண்டப்பட, இருவரும் உடல் கேட்டவற்றைச் செய்யத் தொடங்கினார்கள். ஆதாம் அவளை ஆள நினைத்தான். அவளின் மேலே படுக்க முயல, அவளும் அதையே செய்ய முனைந்தாள். இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு வந்தது.
அவளை அடக்க முயன்ற ஆதாம், “நான் சொல்வதை நீ கேட்க வேண்டும்” என்கிறான்.
லிலித் அவனைப் பார்த்தாள்.
“நீயும் நானும் உலகத்தின் மண் துகளிலிருந்து கடவுளால் படைக்கப்பட்டவர்கள். நாம் இருவரும் மண்ணிலிருந்துதான் படைக்கப்பட்டோம். அப்படியிருக்க, நீ எப்படி எனக்கு மேலானவன் ஆக முடியும்? நாம் இருவரும் சமமானவர்கள்.”
ஆதாம் அவளது சமத்துவக் கோரிக்கையை ஏற்க மறுத்தான்.
அவள் தனக்குக் கீழ்ப்படிந்தவளாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தினான்.
அந்த நொடியில்தான் அவர்களுக்கிடையே இருந்த அன்புக்குள் அதிகாரம் நுழைந்தது. நீ என் அதிகாரத்திற்குட்பட்டவள் என்று அவனும், நான் உன் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டவள் என்று அவளும் எதிர்த்திசையில் நின்றனர்.
அதுவரை ஒன்றாகச் சிரித்த இருவரும், இப்போது ஒருவர் மற்றொருவரை ஆள முயன்றனர்.

கோபமடைந்த லிலித், கடவுளின் ரகசியமான, உச்சரிக்கக் கூடாத திருப்பெயரை உச்சரித்தாள். அந்தப் பெயரின் சக்தியால் ஏதேன் தோட்டத்திலிருந்து வான்வழியாகப் பறந்து தப்பிச் சென்றாள்.
இதுதான் கதையின் ஒரு பகுதி.
ஆனால் இங்கேதான் நான் சற்று நின்று யோசிக்கிறேன்.
“நாம் இருவரும் மண்ணிலிருந்து படைக்கப்பட்டவர்கள். எனவே நாம் சமமானவர்கள்.”
இந்த ஒரு வாக்கியம் எவ்வளவு ஆச்சரியமானது?
இன்று நாம் கேட்கும் ஒரு கேள்வியை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஒரு தொன்மக் கதையின் பெண் கேட்டிருக்கிறாள்.
சமமாகப் படைக்கப்பட்ட இருவரில், ஒருவர் மட்டும் ஏன் மற்றொருவருக்கு மேலானவனாக இருக்க வேண்டும்?
லிலித்தின் எதிர்ப்பு உண்மையில் எதற்கு எதிரானது?
ஆதாமுக்கு எதிரானதா? அல்லது, தன்னை உருவாக்கிய உலகமே தன் மீது விதிக்க முயன்ற முதல் அதிகாரத்துக்கு எதிரானதா?
இன்றைய பெண்ணிய வாசிப்பில் லிலித்தை மீண்டும் பார்க்கும்போது, அவள் ஒரு அரக்கியாக நிச்சயம் தெரியவில்லை.
தன்னுடைய உடலின் மீதும், விருப்பத்தின் மீதும், உறவின் மீதும் தனக்கே உரிமை வேண்டும் என்று கேட்கும் ஒரு பெண்ணாகத் தெரிகிறாள்.
வீட்டு வேலைகளிலும் குழந்தைகளை வளர்ப்பதிலும் இருவரும் சமமாகப் பங்கெடுக்க வேண்டும் என்று போராடும் இன்றைய பெண்ணையும், தன் உடல் மற்றும் பாலுறவிலும் சமத்துவத்தை மறுக்க முடியாது என்று கூறும் லிலித்தையும் அருகருகே வைத்து வாசிக்கும்போது, பல கேள்விகள் மனதில் எழாமல் இல்லை.
சமத்துவம் என்கிற கேள்வி இவ்வளவு பழமையானதா?
பெண்ணிடம் கீழ்ப்படிதலை எதிர்பார்த்த உலகம், அவள் மறுத்தபோது அவளுக்கு என்ன பெயர் கொடுத்தது?
மீண்டும் எனது பார்வையில் கதை.
ஆதாம் கடவுளிடம் முறையிட்ட பிறகு, கடவுள் செனோய் (Senoy), சான்செனோய் (Sansenoy), மற்றும் செமஞ்செலோஃப் (Semangelof) ஆகிய மூன்று தேவதூதர்களை லிலித்தை மீண்டும் அழைத்து வர அனுப்பினார். அவர்கள் மூவரும் செங்கடலில் லிலித்தைச் சந்தித்தனர். ஆதாமுடன் வாழ வற்புறுதினார்கள். ஆனால் அவள் வர மறுத்துவிட்டாள். ஆதாமைப் பிரிந்த கணிதத்திலிருந்து அவள் அரக்கியாகவே கதையில் வலம் வருகிறாள். மூன்று தேவதூதர்களும் அவளின் அரக்கக் குழந்தைகளைக் கொன்று விடுவதாக மிரட்டுகிறார்கள். ஆதாமிற்குக் கீழ்படிந்து வாழ்வதைவிட, எந்தத் தண்டனையாக இருந்தாலும் ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறி மறுத்துவிடுகிறாள்.
பின் உலகத்தில் பிறக்கும் குழந்தைகளின் மீது அவளின் ஆதிக்கம் இருப்பதாகவும், எட்டாம் நாள்வரை ஆண் குழந்தைகளும், பன்னிரண்டாம் நாள்வரை பெண் குழந்தைகளும் அவளின் ஆதிக்கத்தின்கீழ் இருப்பதாகக் கூறினாள். தேவதூதர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட தாயத்துகளைக் குழந்தைகள் காணும்போது, அவர்களை விட்டுவிடுவதாகக் கூறினாள். அதனால் தேவதூதர்களும் அவளை ஆதாமுடன் வாழ வேண்டும் என்று கட்டாயப்படுத்த மாட்டோம் என்று கூறிவிட்டுச் சென்றனர்.
லிலித் திரும்பி வர மறுத்ததால், கடவுள் ஆதாமின் விலா எலும்பிலிருந்து ஏவாளைப் படைத்தார். இப்படித்தான் ஆல்ஃபபெட் ஆஃப் பென் சிரா என்னும் யூத நூலில் லிலித்தின் கதை தொடர்கிறது.
இந்தக் கதை பல சுவாரசியமான கேள்விகளை நம் முன் வைக்கிறது
பைபிளின் ஆதியாகமம் (Genesis) முதல் அதிகாரம், கடவுள் ஆணைப் போலவே பெண்ணையும் ஒரே நேரத்தில் மண்ணிலிருந்து படைத்தார் என்று கூறுகிறது (ஆதியாகமம் 1:27). ஆனால் இரண்டாம் அதிகாரத்தில், ஆதாமின் விலா எலும்பிலிருந்து ஏவாள் படைக்கப்பட்டதாகக் கூறுகிறது (ஆதியாகமம் 2:22). இந்த இரண்டு வெவ்வேறு படைப்புக் கதைகளை இணைக்கவே, யூத அறிஞர்கள் பல கதைகளை எழுதியிருக்கலாம்.
ஆதாமைப் போலவே மண்ணிலிருந்து படைக்கப்பட்டவள் லிலித். அவள் சமத்துவத்தைக் கோரினாள்.
ஏவாள் ஆதாமின் விலா எலும்பால் செய்யப்பட்டவள். ஆதாமிற்குக் கட்டுப்பட்டவள். சமத்துவத்தை மறுத்த ஆண் ஆதிக்க சமுதாயம் லிலித்தை மறுத்து ஏவாளை ஏற்றுக் கொண்டதோ?
கி.பி. 3 – 6 நூற்றாண்டாடிற்குள் தொகுக்கப்பட்ட யூத நூலான தால்முத் லிலித்தில் ஓர் அபாயகரமான அரக்கியாக சித்தரிக்கப்படுகிறாள்.
தால்முத் அவளை நீண்ட கூந்தலும், பறவையைப் போன்ற இறக்கைகளும் கொண்ட ஒரு பெண்ணின அரக்கியாக விவரிக்கிறது. ஆண்கள் இரவில் தனியாக ஒரு வீட்டில் தூங்கக் கூடாது என்று தால்முத் எச்சரிக்கிறது. ஏனெனில், தனியாகத் தூங்கும் ஆண்களை லிலித் தனது அழகால் மயக்கி, அவர்களைக் கட்டுப்படுத்தி, அவர்களின் மூலம் புதிய அரக்கக் குழந்தைகளைப் பெற்றெடுப்பாள் என்கிற நம்பிக்கை நிலவியது.
லிலித் பற்றிய குறிப்புகள் முதன்முதலில் மெசபதோமியா நாகரிகத்தின் கில்காமேஷ் காவியத்தில் வருகிறது. சுமேரியர்களின் பெண் தெய்வமான இன்னானா, யூப்ரெட்ஸ் நதிக்கரையில், ஹூலுப்பு மரத்தடியித் அரியணை அமைத்ததாகவும், அந்த மரத்தின் வேரில் லிலித் வந்து தாக்கியதாகவும் கில்காமேஷ் காவியத்தில் வருகிறது. பின்பு வந்த காலங்களில் லிலித் பல கதைப் படிமங்களாக வலம் வந்தாள். சுமேரிய நாகரிகத்தில் வந்த லிலித்தையும் பென் சிரா நூலில் வரும் லிலித்தையும் வரலாற்று தொடர்ச்சியாக கருத முடியாது.
ஆனால் காலவோட்டத்தில் லிலித்தும் பல முகங்கள் பெற்றாள்.
ஆனால் பென் சிராவின் கதையில் அவளின் குற்றமென்ன?
நான் ஏன் உனக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்கிற கேள்வியுடன் அவளால் அந்த உலகத்தில் வாழ முடியவில்லை. அதனால் அரக்க உலகத்திற்குள் தள்ளப்பட்டாள்.
ஆணுக்கு அடங்காமல் சமத்துவம் கோரும் பெண்ணை, கால நதியோட்டம் தடம் புரளாமல் அரக்கியாகவே வைத்திருக்கிறது. ஆணுக்குக் கீழ்படிந்து வாழ முடியாத பெண்களை, சமுதாயம் பெண்ணாக ஏற்றுக் கொள்ள மறுத்ததன் அடையாளமாக, அவள் அரக்கியாக உருவெடுத்தாள்.
காலம் மாறவிட்டதா, கடந்துவிட்டதா? ஏனெனில் கேள்விகள் இன்றளவும் அப்படியே இருக்கின்றன. இன்றும் ஆணுக்குக் கீழ்ப்படிய மறுக்கும் பெண்களுக்குச் சமுதாயம் கொடுக்கும் பெயர் அரக்கியே!
(தொடரும்)
படைப்பாளர்:

மீனாட்சி அடைக்கப்பன். மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். அறிவியலிலும் வரலாற்றிலும் மிகுந்த ஆர்வம் உண்டு. ஒவ்வொருவரின் மனதிலும் விடைதெரியாத பல கேள்விகள் சுழன்று கொண்டிருக்கின்றன. இவர் மனதின் சுவர்களை அரிக்கும் இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களைத் தேடும் ஒரு பயணமே இவர் எழுத்து. சமூகத்தில் நடக்கும் தவறுகளைக் கண்டும் காணாமல் கடந்து செல்லும் ஒரு சாதாரணப் பெண்ணாக இருந்தாலும், அவற்றால் ஏற்படும் மனப் போராட்டத்தை எழுத்தின் மூலம் வெளிப்படுத்த முயல்கிறார்.




