கோலவிழிக்கு அவளுடைய அம்மாவைப் பிடிக்காது. காரணம், அவளுடைய அம்மா கஸ்தூரிக்குத்  தன்னை பிடிக்காது என அவள் மனப்பூர்வமாக நம்பினாள். அவளுக்குப் புத்தி தெரிய ஆரம்பித்த நாளிலிருந்து அவள் மனதில் பதிந்த பிம்பம் அதுதான். ஆம், சிறு வயது முதலே  கஸ்தூரி நடந்து கொண்ட விதமும் அப்படித்தான். 

அன்பு, பாசம், பரிவு, அக்கறை, தாய்மை உணர்வு எதையுமே அவள் மறந்தும்கூட வெளிப்படுத்தியதில்லை. ‘வேண்டா வெறுப்பா பிள்ளையப் பெத்து காண்டாமிருகம்னு பேர் வெச்ச மாதிரி’ ‘கோலவிழி’  என அவள் வைத்த பெயர்கூட இவளுக்குப் பிடிக்கவில்லை.  அதைவிட அம்மா அவளை அழைக்கும் அடைமொழி இன்னும் கொடூரம் – அது ‘வெஷம்’ 

‘வீடு கூட்டு, சாணி போட்டு மொழுகு, தெருக் கொழாவுல தண்ணி தூக்கிட்டு வா, கடைக்குப் போ, ரேஷனுக்குப் போ, சரசக்கா வீட்டுல பால் வாங்கிட்டு வா, சாக்கடை காவாயைச் சுத்தம் செய்’ என இன்னும் இன்னும் அவள் கோலவிழியை ஏவும் வேலைகள் எக்கச்சக்கம். மறுத்து அவள் கொஞ்சம் சுணங்கினாலும் திட்டு, விஷ வார்த்தைகள். அதனால் என்னவென்றே  புரியாத சிறு சிறு பாலியல் அத்துமீறல்களை அவள் சந்தித்ததெல்லாம் அவள் மனம் மட்டுமே அறிந்த உண்மை.

பள்ளி செல்லும் நேரம் மட்டுமே அவள் ஓய்வாக இருக்கும் நேரம் என்றுகூடச் சொல்லலாம். அதனாலேயே அவள் பள்ளிக்கு விடுப்பு எடுக்க விரும்பவே மாட்டாள். அந்த அளவுக்கு அந்தச் சிறு பெண்ணை ஆட்டிப்படைத்தாள் கஸ்தூரி. 

பெண் பிள்ளைகளை இப்படித்தான் வளர்க்க வேண்டும் என்கிற சில முன்மாதிரிகளைப் பாட்டிகளிலிருந்து அம்மாக்களுக்கும் அம்மாக்களிலிருந்து மகள்களுக்கும் கடத்திக் கொண்டே வருகிறது நம் சமுதாயம்.  அதில் இதுவும் ஒரு வகையோ என்னவோ!

தினம் தினம் தன் எல்லையை விரிவாக்கிக் கொண்டே செல்லும் சென்னை மாநகரத்திலிருந்து சற்றுத் தொலைவில்  இருந்தது அவர்கள் வசித்துவந்த சிறு கிராமம். அம்மா, அப்பா, ஒரே மகள் எனச் சிறு குடிசையில் அவர்களின் வாசம். 

கஸ்தூரியும் முருகனும் விவசாயக் கூலி வேலைக்குச் செல்பவர்கள். கால் வயிறு கஞ்சி குடித்தாலும் அது கஸ்தூரியின் வருமானத்தில்தான். முருகனின் சம்பாத்தியம் மொத்தமும் அரசாங்க மதுபானக் கடைக்குத்தான் போகும். குடித்துக் குடித்து குடல் வெந்து போனவன் அவன்.

கோலவிழி ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது அவன் மொத்தமாகப் படுத்த படுக்கையாகிப் போனான். சில நாட்கள் அரசு மருத்துவமனையில் வைத்து வைத்தியம் பார்த்தும்  எந்த முன்னேற்றமும் இல்லை.  வீட்டிற்கே கொண்டு போகச் சொல்லிவிட்டார்கள். 

கஸ்தூரி வேலைக்குப் போனால்தான் கால் வயிறு கஞ்சியாவது என்கிற நிலைமையில் வீட்டிலிருந்து அவளால் அவனுக்குப் பணிவிடைகள் செய்ய முடியாமல் போனது. கூடவே இருந்து அவனைக் கவனித்துக் கொள்ளும்படி நச்சரிக்கத் தொடங்கினான். அதை அவள் காதில் வாங்காமலேயே போக உட்கார்ந்த வாக்கிலேயே நகர்ந்து வந்து அங்கே கிடந்த ஒரு துணியை கழுத்தில் போட்டு முறுக்கி, உணர்வுரீதியாக அவளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினான்.

இந்தப் பிரச்னையின் தீர்வாக, வீட்டிலேயே இருந்துகொண்டு அவனுடைய பீ மூத்திரத்தை வாரிக் கொட்ட, கோலவிழியின் படிப்பை நிறுத்தி  அவளைக் கொண்டே அதைச் செய்ய வைத்தாள் கஸ்தூரி. 

இதனால் உண்டான அதிர்ச்சி, அருவருப்பு, ஒவ்வாமை எல்லாம் சேர்ந்து வயதுக்கு மீறிய முதிர்ச்சியை,  இல்லை – இதை முதிர்ச்சி என்பதைக் காட்டிலும் ஒருவித வெம்பல் தன்மை என்றுகூடச் சொல்லலாம், அப்படி ஓர் ஏடாகூட அழுத்தமான மனநிலைக்குள் அவளைத் தள்ளியது.  

அனைத்தையும் சகித்துக் கொண்டு அவளுக்கு வீட்டில் இருக்கவே  பிடிக்கவில்லை.  இதிலிருந்தெல்லாம் தப்பி ஓடி ஒளிய ஏதாவது வழி கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்தாள். அதற்கு ஒரு தீர்வாக அமைந்ததுதான் முருகன் உபயோகப்படுத்திக் கொண்டிருந்த திறன்பேசி. 

கஞ்சிக்குக் காசு இருக்கிறதோ இல்லையோ குறுக்கு வழியில் சுலபமாக  மூளைக்குள்ளே டோபமைனைச் சுரக்க வைக்கும் மதுவுக்கும் இன்னபிற போதைவஸ்துகளுக்கும் இணையதளச் சூதாட்டங்கள் உட்படப் பலவிதமான விளையாட்டுகளை ஊக்குவிக்கப் போதுமான திறன் இருக்கும் இது போன்ற பேசிகளுக்கும், மாதாமாதம் அதை ரீசார்ஜ் செய்வதற்கும் மட்டும் பணம் எப்படியாவது கிடைத்துவிடுகிறது.

அடுத்தாற் போன்று, முருகன் வைத்திருக்கும் இந்தத் திறன் பேசிக்குப் பின்னாலும் கூட ஒரு கதை இருந்தது. 

இரண்டு வருடங்களுக்கு முன்பு, ஒரு நாள் இரவு குடித்துவிட்டு வீடு திரும்பும்போது கையில் விலை உயர்ந்த ஒரு திறன்பேசியுடன் வந்தான். பார்க்க அப்படியே புது மெருகு கலையாமல்  பளபளப்பாகக் கண்ணைப் பறித்தது. ஸ்டைலான ஒரு பேக்-கவர் வேறு. 

அது எப்படித் தன் தகப்பன் கைக்கு வந்திருக்கும் என்கிற  விபரீத யோசனை எல்லாம்கூட இல்லாத அந்தச் சின்னஞ்சிறு பெண்ணுக்கு, அதைப் பார்க்கும்பொழுது எப்படி இருந்திருக்கும்?  ஒரே சந்தோஷம். ஆசையாகப் போய் அவன் கையிலிருந்து அதை அவள் பறிக்கப் பார்க்க, அப்படியே பிடித்துத் தள்ளிவிட்டான். 

கஸ்தூரிக்கோ அந்தத் திறன்பேசி மேல் இருந்த கவனம் மகள் மேல் இல்லை. இது எப்படி அவன் கையில் வந்தது என்கிற கேள்வியுடன் ஆரம்பித்த சண்டை பெரிய கைகலப்பில் போய் முடிந்தது. அவளின் உடம்பு புண்ணானதுதான் மிச்சம். மற்றபடி அவளுக்கு எந்தப் பதிலும்  கிடைக்கவில்லை. ஆனால், அதற்கான பதில் அடுத்த இரண்டு நாட்களில் கிடைத்தது, காவல்துறையினர் வீடு தேடி வந்த பொழுது.

அந்தப் பகுதியில் அரசியல் பிரமுகர்கள் ஒருவரின் திறன்பேசி  அது. டாஸ்மாக் கடையில் அது காணாமல் போய் இருக்க, அவர் காவல்துறையில் புகார் கொடுத்த பிறகு அங்கு இங்கு விசாரித்துச் சரியாக இங்கே  வந்துவிட்டனர். கையும் களவுமாக மாட்டிக் கொண்டாயிற்று, வேறு வழியில்லை ஜெயிலுக்கு போக வேண்டியதுதான். 

கேள்விப்பட்டு அந்த மொத்த  ஊருமே அவர்கள் வசிக்கும் வீதியில் கூடிவிட்டது.  இப்படி யாருக்கும் எந்த உபயோகமும் இல்லாதவன், வீட்டில் இருந்தால்தான் என்ன, இல்லை சிறைக்குச் சென்று தொலைந்தால்தான் என்ன என்று விட்டு விடாமல்,  அவனைக் காப்பாற்றும்படி கோலவிழியைத்தான் பணையம் வைத்தாள் கஸ்தூரி.

அவளைத் தனியாக வீட்டின் பின்புறமாக இழுத்துச் சென்று, “அப்பாவ கூட்டிட்டு வர டாஸ்மாக் கடைக்குப் போயிருந்தேன்.  அப்ப அந்த போனைப் பார்த்ததும்,  அதுல படம் பார்க்கணும்னு ஆசையா இருந்துச்சு.  அதனால வீட்டுக்கு எடுத்துட்டு வந்துட்டேன்’ன்னு சொல்லி மன்னிப்பு கேளுடி.  போனா போகுது சின்ன புள்ளன்னு மன்னிச்சு விட்டாலும் விட்டுடுவாங்க.  இல்லன்னா அப்பாவ பிடிச்சுட்டு போய் ஜெயில்ல  போட்டுடுவாங்க. இருக்கிற பொழப்பை எல்லாம் விட்டுட்டு  அதுக்கும்  நான்தான் அலையணும்” என்று முதலில் கெஞ்சலாகத்தான் கேட்டாள்.

அதற்கு மிரண்டுபோய் கோலவிழி மறுப்பு சொல்ல,  அதன் பிறகு அதட்டி மிரட்டித்தான் காவல்துறையினரிடம் அப்படி ஒரு பொய்யைச்  சொல்ல வைத்தாள்.

அதை வைத்தே அவர்களிடம் உருக்கமாகக் கெஞ்சிக் கூத்தாடி முருகனைக் காப்பாற்றினாள். என்ன அதன்பின் கோலவிழி குறித்த ஊராரின்  பார்வைதான் அப்பட்டமாக மாறிப்போய்விட்டது. அக்கம் பக்கத்து மனிதர்களுக்கு அவள் மேலிருந்த கொஞ்சநஞ்ச கரிசனமும்போய் அவளைச் சந்தேகக் கண்ணுடனே பார்க்கத் தொடங்கிவிட்டனர். அதனாலேயே  அவள் வீட்டை விட்டு வெளியில்  வருவது குறைந்து, விளையாட்டு கேளிக்கைகளும் காணாமல் போயின. 

இந்தச் சம்பவம் நடந்த சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு பழைய திறன்பேசியைக் கொண்டு வந்தான் முருகன். ஆனால், இந்த முறை களவாடி வரவில்லை கடன் வாங்கி  செகண்ட் ஹேண்டில் அதை வாங்கி வந்திருந்தான். அந்தக் கடனை அடைக்க, ஒரு கொத்தடிமை கணக்காகக் கோலவிழிதான், காலையும் மாலையும் ஒரு கோழிப் பண்ணையில் ஏழெட்டு மாதங்கள் வேலை செய்ய  வேண்டியதாகிப் போனது. சரியாக அது முடிந்து மூச்சு விடுவதற்குள் இப்பொழுது இப்படிப் படுத்த படுக்கையாகக் கிடக்கிறான். 

இப்பொழுது அவளுடைய மொத்த உணர்வுகளுக்கும் அந்தத் திறன்பேசி மட்டுமே வடிகாலாகக் கையில் கிடைத்தது. மாத்திரை மருந்தின் தயவால் முருகன் ஆழ்ந்த உறக்கத்தில் கிடக்க, அவனுக்குத் தெரியாமல் அந்தத் திறன்பேசியை எடுத்து இயக்கிப்  பார்த்தாள். ஆரம்பத்தில் ஒன்றுமே பிடிபடவில்லை. பள்ளிக்கூடத்தில் உடன்படித்த பிள்ளைகள் பேச்சின் ஊடே

கொடுத்த தகவல்களை எல்லாம் நினைவுபடுத்திப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக அதன் உள்ளே நுழைய, மெல்ல அது அவளுக்கு வசப்பட்டது.  யூடியூபில் காணொளிகளைப் பார்க்கத் தொடங்கினாள். கேமராவை எடுத்து செல்பி  மோடில்  வைத்து கிளிக் செய்தாள். கொஞ்சமும் பொலிவில்லாமல் அழுது வடிந்து அவளுடைய முகம்  அவளுக்கு ஏமாற்றத்தைக்  கொடுத்தாலும் அந்தத் திறன்பேசியின் திரை தன்னிடம் சவால் விடுவதாகக் கருதினாள். 

நேராகப் போய் சோப்பு போட்டு முகத்தைக் கழுவிக் கொஞ்சம் பவுடரைப் பூசி,  பொட்டு வைத்து, குங்குமத்தைக்  குழைத்து லேசாக உதட்டில் பூசி  மீண்டும் ஒரு செல்பி எடுக்க, இந்த முறை அந்தத் திரை அவளிடம்  தோற்றுப் போனது. தான் இவ்வளவு அழகா என அவளுக்கே  வியப்பாக இருந்தது. முகத்தை அப்படி இப்படித் திருப்பி செல்பிகளாக சுட்டுத் தள்ளிக் கொண்டிருந்தாள். கிளிக், கிளிக்,  கிளிக் என்கிற சத்தமே அந்தக் குடிசையில் கேட்கும் புதிய சங்கீதமாகிப் போனது. 

(தொடரும்)

படைப்பாளர்

எழுத்தாளர் கிருஷ்ணப்பிரியா நாராயணன். தமிழ் நாவலாசிரியர் மற்றும் பதிப்பாளர். சென்னையில் வசிக்கிறார். சென்னை வானொலி நிலைய நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர். இவரது பதினாறு நாவல்கள் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. ஹெர் ஸ்டோரிஸ் வலைதளத்தில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். சிறாருக்கும்
நூல்கள் எழுதிவருகிறார்.