பெண் நாயன்மார்களில் பெரிதாகப் பேசப்பட்டதும் போற்றப்பட்டதும் காரைக்கால் அம்மையார் மட்டுமே. ஏனெனில் அவரின் உருவ சிற்பங்கள் நிறைய கோயில்களில் பார்த்ததுண்டு. காரைக்கால் அம்மையாரின் புகழ் கடல் கடந்து, கம்பு தேசம்வரை சென்றிருக்கிறது. கம்போடியாவின் பந்தே ஸ்ரேயில் உள்ள இந்து கோயிலில் அவரின் உருவச்சிலை இருக்கிறது. சிவபெருமானே அவரை அம்மை என்றழைத்ததால், சைவ சமயத்தின் அம்மையாகவே அவர் போற்றுவதாக பக்தி நூல்கள் கூறுகின்றன.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் மூன்று பெண் நாயன்மார்கள். மூத்தவர் காரைக்கால் அம்மையார். மற்றவர்கள் இசைஞானியார், மங்கையர்க்கரசியார். இசைஞானியார் சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை. சுந்தரமூர்த்தி நாயனாரைப் பெற்றமைக்காகவும், சைவநெறியில் நின்றமைக்காகவும் அவரின் பெற்றோர் இருவரையுமே நாயன்மார்கள் பட்டியலில் சேக்கிழார் இணைத்துள்ளார்.
சோழ இளவரசியான மங்கையர்க்கரசியார், நின்றசீர்நெடுமாறன் என்கிற பாண்டிய மன்னனை மணந்தார். பாண்டிய நாடு முழுவதும் சமண சமயம் பரவியிருந்த போது, சைவ சமயத்தினைப் பின்பற்றிய இருவர்களில் மங்கையர்க்கரசியாரும் ஒருவர்.
ஞானசம்பந்தர் பாண்டி நாடு வருவதும், பாண்டிய மன்னனின் சுரத்தினை திருஞானசம்பந்தர் தீர்த்து வைப்பதும் பக்தி இலக்கியத்தின் முக்கிய நிகழ்வுகள். மன்னனின் நோயைக் குணப்படுத்த முடியாத சமணர்கள் திருஞானசம்பந்தரை அனல் மற்றும் புனல் வாதத்திற்கு அழைப்பதும், அதில் தோற்றுப்போனால் தங்களைக் கழுவேற்றலாம் என வாக்குறுதி அளிப்பதும் குறிப்பிடத்தக்கது.
சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்ட நிகழ்வு, சைவ சமயத்திற்கும் சமண சமயத்திற்கும் இடையே நடந்த ஒரு மீப்பெரு போராட்டத்தின் குறியீடாக இலக்கியம் கூறுகின்றன. இந்த நிகழ்வு, தமிழ்நாட்டில் சைவ சமயத்தின் எழுச்சிக்கும், சமண சமயத்தின் வீழ்ச்சிக்கும் ஒரு முக்கியக் காரணம். இப்படி ஒரு மாறுதல் நடைபெற காரணமாக மங்கையர்க்கரசியார் இருந்திருக்கலாம் என்பதால் அவரும் நாயன்மார்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கலாம்.
ஆண் நாயன்மார்கள் கொண்ட பக்தி பெண் நாயன்மார்களிடமிருந்து மாறுபட்டிருக்கிறது.
அதில் அந்தணருக்குத் தானமாக மனைவியைக் கொடுத்து, சிவனின் மீதான பக்தியை நிலைநாட்டிய இயற்பகை நாயனாரின் கதையை, எப்படி மீளாய்வு செய்தாலும், பதில் ஒன்றாகத்தான் உள்ளது.
இயற்பகை நாயனார் சோழநாட்டில் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகக் குலத்தில் பிறந்தவர். பெரும் செல்வந்தராக வாழ்ந்தவர். சிவனடியார் எவருக்கும் இல்லை என்று சொல்லாது தானம் வழங்குவதைத் தனது அறமாகக் கொண்டு வாழ்ந்தவர். இதனை ’இல்லையே என்னாத இயற்பகைக்கு அடியேன்’ என்று திருத்தொண்டத் தொகை வர்ணிக்கிறது.
இயற்பகையரது பெருமையை உலகுக்கு உணர்த்த சிவபெருமான் திருவிளையாடல் ஒன்றை நிகழ்த்தினார். சிவனடியார் உருவத்தில் இயற்பகையார் இல்லத்துக்கு சிவன் அந்தணராகச் சென்றார். அந்தணரைப் பணிந்து வரவேற்ற இயற்பகையாரிடம், தனக்கு ஒரு பொருள் வேண்டுமென்றும் உறுதியாக இயற்பகையாரால் அதை நிறைவேற்ற முடியுமென்றால் மட்டுமே அதை யாசிப்பதாக சிவனடியார் வேடத்தில் வந்த சிவபெருமான் கூறினார். சிவனடியார் வேண்டுவது எதுவாயினும் தருவதாக இயற்பகையார் வாக்களித்தார்.
இயற்பகையாரின் மனைவியை சிவனடியார் தானமாக வினவ, சற்றும் மனம் கலங்காத இயற்பகையார் தன்னிடம் இருந்த ஒன்றையே கேட்டதற்கு நன்றி கூறினார். அந்தணரின் தேவையைக் கேட்டு மனம் கலங்கிய மனைவியிடம், இயற்பகையார் தன் மனக்கருத்தைக் கூறினார். அந்த அம்மையாரும் ஒப்புக்கொண்டு அந்தணருடன் செல்லத் தயாரானார். வேறேதும் வேண்டுமா எனக் கேட்ட இயற்பகையாரிடம் அந்தணராகிய சிவனடியார், தனக்கு இயற்பகையாரின் சுற்றத்தார் மற்றும் ஊராரிடம் இருந்து காவலாக அவ்வூர் எல்லை வரை வரவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். அதன்படியே தன் மனைவியை சிவனடியாருடன் முன் செல்ல விட்டு, காவலாக ஆயுதமேந்தி பின் சென்றார் இயற்பகை நாயனார்.
இச்செய்தி அறிந்த ஊரார் அச்செயலைக் கண்டித்து ஆயுதங்களுடன் வழிமறித்தனர். அவர்களுக்கு விளக்க முயன்ற, இயற்பகை நாயனார் செயலை அனைவரும் எதிர்த்து சண்டையிடத் தொடங்கினர். வாளை உருவி அவர்கள் அனைவரையும் வென்று சிவனடியாரைக் காத்தார் இயற்பகையார்.
திருச்சாய்க்காடு என்கிற இடத்தை அடைந்ததும் இனி இயற்பகையார் செல்லலாம் என்று சிவனடியார் கூறினார். அவ்வண்ணமே இயற்பகை நாயனாரும் திரும்பிப் பாராமல் விலகிச் சென்றார். எத்தயக்கமுமின்றி மனைவியைத் தானமளித்துவிட்டுச் செல்லும் இயற்பகையை நோக்கி ‘இயற்பகை முனிவனே அபயம், இவ்விடம் விரைந்து வருக’ என்று கூறினார் சிவனடியார். சிவனடியாரின் சத்தம் கேட்டு விரைந்து வந்த இயற்பகையார் முன் அவர் மனைவி மட்டும் நின்றிருந்தார். அந்தணர் உருவில் வந்த சிவனடியார் மறைந்து, அங்கு உமையுடன் சிவபெருமான் காட்சியளித்தார்.
இந்தக் கதையில் முக்கியப் பாத்திரமாக இயற்பகை நாயனாரை முன்நிறுத்தினாலும், அவருடைய அதீத பக்தியினூடே மறைக்கப்பட்டிருப்பது, அவர் மனைவியின் மனக்கலக்கமும் மௌனமும். கணவன் சொல்வதைச் சிறு முனகலுமின்றி செய்து முடிக்க வேண்டுமென்பது, அக்காலப் பெண்களின் முழுமுதல் அறமாகவும், இல்லறமாகவும் பாவிக்கப்பட்டிருக்கிறது. என்னிடம் இருப்பதையே கேட்டதால் மகிழ்ச்சி என்று இயற்பகையார் கூறுவதிலிருந்து, அவரிடமுள்ள பொருளையும், மனைவியையும் ஒன்றாகவே அவர் மதிப்பிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்செயல் தவறென்று திரளும் ஊராருடன் ஆயுதமேந்தி போராடுகிறார். கடவுள் ஒருவரைச் சோதிக்க, இப்படிப் பலரை வதைப்பாரா என்கிற கேள்வி எழாமல் இல்லை.
இந்த ஒரு சம்பவத்தை வைத்து பக்தி இலக்கியம் பெண்களை அடக்குமுறைக்குள்ளாக்கியது என்கிற முடிவுக்கு வர முடியாது என்பது உண்மைதான். பெண்கள் ஆண்களின் உடமைகளாகவே பார்க்கப்பட்டனர் என்பதற்கு இன்னும் சில சான்றுகள் பக்தி இலக்கியத்தில் இருக்கிறது. சிவனின் தீவிர பக்தரான மனகஞ்சார நாயனார், சிவனடியாரின் வாக்கைக் காப்பாற்ற, அவர் பெண்ணின் சிகையைத் திருமண நாளன்று அறுத்துக் கொடுப்பார்.
நம் மனதிற்குள் வேரூன்றி இருக்கும், அவ்வப்பொழுது நமக்கெதிராக வினா எழுப்பும் அறமென்னும் மூலகம், சில பாடல்களின் கருப்பொருள்களில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கிவிடுகிறது.
இலக்கியத்தின் உள்ளார்ந்த பொருளை உணர, கடவுளின் மேல் அலாதி அன்பு வேண்டும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அடக்குமுறையைப் பதுக்கி வைக்கக் கடவுள் என்னும் ஒளியுரு தேவைப்பட்டதோ? ஏனெனில் ஒப்பில்லா இறைவனின் ஒப்புதலுடன் இந்த ஓரவஞ்சனை நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை. உண்மையில் கொஞ்சமேனும் பயபக்தியைத் தள்ளி வைத்து சிந்தித்தால் மட்டுமே இலக்கியத்தின் உள்ளார்ந்த பொருளைப் பிரித்தறியவோ பகுத்தறியவோ முடியும். உள்ளத்தால் இறைவனை உணரலாம். ஆனால், அறிவால் அறிந்து கொள்ள முடியாதோ?
திருவிளையாடல் புராணத்தில் ஒரு வலை வீசின படலம். சிவபெருமான் கைலாய மலையில் உமையம்மைக்கு வேதத்தின் பொருளை விளக்கிக் கொண்டிருந்தார். உமையம்மை அதில் கவனத்தைச் செலுத்தாமல் இருந்தார். வேதத்தின் பொருளை உதாசினப்படுத்திய காரணத்தால் படிப்பறிவு இல்லாத மீனவப் பெண்ணாகப் பிறக்க என்று சாபமிட்டார்.
வேதம் கடவுள்களுக்கு முன்னால் தோன்றியதா என்ன?
வேதங்களில் காணப்படும் ருத்ரன் என்கிற தெய்வக் கருத்திலிருந்தே பின்னாளில் சிவ வழிபாடு விரிவடைந்ததாகச் சில வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். அந்தக் கோணத்தில் பார்க்கும்போது, இந்தப் படலம் வேதத்தின் அதிகாரத்தை உயர்த்திக் காட்டுவதாகத் தோன்றுகிறது.
உமையம்மை கவனத்தைச் செலுத்தவில்லை என்பதால், வேதத்திற்குறிய மரியாதையை அவள் புறக்கணிப்பு செய்தாள் என்று அவளுக்குச் சாபமும் கொடுக்கப்படுகிறது. உமையம்மை மற்றும் ஈசனைவிட வேதங்களுக்கு அதிக மதிப்பிருக்கிறதா? இதெல்லாம் கடவுளின் திருவிளையாடல் என்று கூறலாம். ஏனெனில் மீனவக் குடும்பத்தில் உமையம்மை பிறப்பெடுக்கவே இந்தத் திருவிளையாடல் என்று பக்தனின் அன்பை முன்னிறுத்தி எழுதப்பட்டதால், இந்தப் பாடலில் எடுத்தாளப்பட்ட கருத்தை நாம் புறக்கணித்துவிடுகிறோம். கடவுளே என்றாலும், வேதங்களை அவமதிப்பு செய்தால், தண்டிக்கப்படுவாய் என்பதுதான் உள்ளார்ந்த கருத்து. ஒரே பாடலில் பல கருத்துகள் அடுக்குகளாக இருக்கின்றன. வேதங்களைப் பழித்துரைத்தலாகாது, பழித்தால் கீழ் நிலையிறங்குவாய் என்பது உள்ளடுக்கு. மகப்பேறு வேண்டி சிவபெருமானைத் துதித்த பரதவ தலைவருக்கு உமையம்மையே மகளாகப் பிறந்தார். கடவுள் பாகுபாடு பார்ப்பதில்லை என்பது வெளியடுக்கு. இரண்டு கருத்துகளும் முரணாக இருப்பதுதான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சிவன் உமையம்மையை மீனவப் பெண்ணாகப் பிற என்று ஏன் சபிக்க வேண்டும்? மீனவக் குலத்தில் பிறப்பது சாபமா என்ன? படிப்பறிவு இல்லாத புலைமகனான (இழிஞர்) மீனவக் குலத்தில் பிற என்று எம்பெருமான் கூறுவதாகப் பாடல் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒருவனை இழிசாதி என்று மற்றொருவன் சொன்னால் புரட்சி வெடிக்கும். கடவுளே சொன்னார் என்று கூறிவிட்டால், அங்கு மனிதனுக்கு விளக்கமளிக்கும் பொறுப்பு இல்லாமல் போகிறது.
திருவிளையாடல் புராணம் பாடல் 57
//விரதமும் அறனும் இன்றி மீன் படுத்து இழிஞர் ஆன
பரதவர் மகளா கென்று பணித்தனன்//
திருவிளையாடல் புராணத்தில் மற்றொரு படலமான மாபாதம் தீர்த்த படலத்தில் எவ்வகை தவறுக்கும் கடவுள் மோட்சம் அளிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
குலோத்துங்க பாண்டியன் ஆண்டுகொண்டிருந்தான்.
அவந்தி நகரில் ஒரு வேதியன் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தான். அவனுடைய மகன் கொடியவன். தாசி வீடே கதியென்று கிடப்பவன். அவனுடைய தகாத நடத்தையால், செல்வத்தையெல்லாம் இழந்தனர். அவனுடைய தாய் ஒப்பில்லா அழகி. இறுதியில் தாயைப் புணர்கிறான். அவளும் அவனுக்கு இசைந்து கொடுக்கிறாள். இது தெரிந்த அந்தணன், மகனைக் கண்டிக்கிறான். அதில் கோபம் கொண்ட மகன் தந்தையைக் கொல்லத் துணிகிறான். தாய் தடுத்தும் பயனில்லை. தந்தையைக் கொன்றுவிட்டு, வீட்டில் இருந்த பொருளையெல்லாம் எடுத்துக் கொண்டு ஊரைவிட்டு தாயும் மகனும் ஓடினார்கள். வழியில் கொள்ளைக்கூட்டம் ஒன்று அவனுடைய தாயைக் கொன்றுவிட்டு பொருட்களையெல்லாம் அபகரித்துக் கொண்டு ஓடுகின்றனர்.
மகன் தனித்துவிடப்படுகிறான். பைத்தியம் போல் ஊர் ஊராகத் திரிகிறான். கூடல் நகருக்கு வருகிறான். தவறுகளை உணர்கிறான். சிவனும் உமையும் வேடனாகவும் வேட்டுவச்சியாகவும் அருள் புரிகின்றனர்.
கள் உண்டால் காமம் முதலான அனைத்துத் குற்றங்களும் செய்யத் தூண்டும். காமமே கொலைக்குக் காரணம். காமமே களவுக்குக் காரணம். காமமே உன் இன்னல்கள் அனைத்திற்கும் காரணம் என்று கூறி, அவனுக்குச் சாப விமோசனம் தருகிறார் ஈசன். ஒரு பொழுது மட்டும் உண்டு சிவனடியார்க்கு ஏவல் செய் என்றும், அருகம் புல் அறுத்து வந்து பசுக்களுக்கு உணவு தந்து, கோயிலின் புறத்தொட்டியில் நீராடி, 108 முறை கோயிலை வலம் வந்தால், பாவம் தீரும் என்றும் கூறுகிறார்.
வேட்டுவச்சியாக இருந்த உமையம்மை வேடனாக இருந்த ஈசனிடம், ‘இவன் தாய் நரகில் கிடக்க, இவனுக்கு மட்டும் எப்படிப் பழி நீங்க வழிவகை செய்யலாம்?’ என்று வினவினாள்.
நீசராயினும் என்னை நினைத்தால், காப்பது என் கடமை என்றுரைத்தார் எம்பெருமான். வேட்டுவச்சி வடிவில் இருந்த உமையன்னை, இவையனைத்தும் உன் திருவிளையாடல் என்று கூறினாள்.
தாயைப் புணர்ந்து, தந்தையைக் கொன்ற பாவிக்கே, கூடல்நகர் வீடு பேறு தந்தது என்றால், குஷ்டம், ஈழை முதலான நோய்கள் மதுரையில் தீந்துபோகும் என்று படலம் முடிகிறது.
இந்தக் கதை முன்பு கூறியதுபோல் பல அடுக்குகளைக் கொண்டது. எவ்வளவு பெரிய தவறைச் செய்திருந்தாலும், மனம் வருந்தி திருந்திவிட்டால் போதும் கடவுள் மன்னித்து அருள் புரிவார். கடவுளின் கருணையில் பாவங்கள் எல்லாம் கரைந்தோடும். இது பெரும்பாலானோருக்கான கருத்து. இறுதியில் மாபாதகத்தைக் கடவுள் மன்னித்துவிட்டார். மகிழ்ச்சியான முடிவு. இப்பொழுது கதைகளிலும் படங்களிலும் வரும் எதிர்நாயகனாக, இந்த நாயகனைச் சித்தரிக்கலாமா? மனித மனம் வேண்டுவது என்ன? தவறிழைத்தவன் திருந்திவிட்டால் தண்டனை வேண்டாமோ? தண்டனைதான் அவனுக்குக் கிடைத்ததே என்று வாதிட்டால், மோட்சமும் கிடைத்துவிட்டதே அவனுக்கு. ஆனால் அவனுடைய அன்னைக்கு ஏன் நகரம்? ஏன் கொல்லப்பட்டாள் அவள்? ஆண்களின் ஒழுக்கமின்மையைப் பொருத்தருளும் கடவுள் என்றுமே பெண்களின் ஒழுக்கமின்மையைப் பொறுப்பதில்லையோ?
தாயைப் புணர்ந்து தந்தையைக் கொன்ற மாபாவிக்கே கூடல்நகர் வீடு பேறு தந்தது என்று கதை முடிகிறது. ஆனால் அதில் ஒழுக்கம் தவறிய அவனுடைய அன்னை அடக்கமில்லையா? இல்லை அவள் பெண் என்பதால் அவளுடைய தவறுக்கு மன்னிப்பில்லையா?
இன்னும் இதே மனநிலை நம் சமுதாயத்தில் புரையோடியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
இங்கு நாம் பார்த்த கதைகளில் இன்னுமொன்றையும் கவனிக்க வேண்டும். ஒழுக்கமென்பதும் கணவனின் வார்த்தைகளிலே இருக்கிறது. மனைவியை வேண்டிய சிவனடியாருக்கு மனைவியைத் தானமளிக்கத் துணிந்த நாயன்மார், தன் மனைவியின் ஒழுக்கம் மற்றும் இதர விஷயங்களைக் கருத்தில் கொள்ளவில்லை. அவன் மனைவியும் கேள்வி கேட்காது செல்ல வேண்டும் என்பதே விதி.
குலத்தில் கடைசி ஆண்மகன் இறைவனடி சேர்ந்துவிட்டால், அந்தணன் ஒருவனுடன் புணர்ந்து, குலத்தை விருத்தி செய்வது பெண்களின் கடமையாக இருந்தது. நீதிநூல்களைப் பொறுத்தவரை, கற்பெனப்படுவது, பெண்களுக்கான கடமைகளையும் அறத்தையும் போற்றிப் பாதுகாப்பதாகும்.
பக்தி இலக்கியத்தில் பெண், பக்தியின் வழியாகத் தெய்வத்துக்கு அருகே செல்லலாம். ஆனால், அதிகாரத்தின் வழியாக மனிதராக உயர முடியாது. பக்தி இலக்கியத்திற்கு முன்பு நிலவிய சங்ககாலம் பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தது. ஆனால், பக்தி இலக்கியம் பெண்களுக்குக் கட்டுபாடுகள் இருந்ததாகச் சித்தரிக்கிறது. வேதம், வர்ணம், கற்புக் கருத்தியல் போன்ற வடமரபுச் சிந்தனைகள் பக்தி இலக்கியத்தில் வலுவாகப் பிரதிபலிக்கின்றன என்று தோன்றுகிறது.
நாயன்மார்களின் காலம் பெரும்பாலும் 6 முதல் 8ஆம் நூற்றாண்டுவரை. பெரிய புராணம் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. திருவிளையாடல் புராணம் தொகுக்கப்பட்ட காலம் 16ஆம் நூற்றாண்டு. பல நூற்றாண்டுகள் இடைவெளி இருந்தாலும் பாடல்களில் சொல்லப்பட்ட கருத்தில் பெண்ணிற்கு எதிரான கருத்துக்கள் இருக்கிறது. அந்தந்தக் காலக்கட்டத்தில் இருந்த சமூக மரபுகளையும், பெண்களின் சமூகநிலைகளையும் இலக்கியங்களில் தேட வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
(தொடரும்)
படைப்பாளர்:

மீனாட்சி அடைக்கப்பன். மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். அறிவியலிலும் வரலாற்றிலும் மிகுந்த ஆர்வம் உண்டு. ஒவ்வொருவரின் மனதிலும் விடைதெரியாத பல கேள்விகள் சுழன்று கொண்டிருக்கின்றன. இவர் மனதின் சுவர்களை அரிக்கும் இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களைத் தேடும் ஒரு பயணமே இவர் எழுத்து. சமூகத்தில் நடக்கும் தவறுகளைக் கண்டும் காணாமல் கடந்து செல்லும் ஒரு சாதாரணப் பெண்ணாக இருந்தாலும், அவற்றால் ஏற்படும் மனப் போராட்டத்தை எழுத்தின் மூலம் வெளிப்படுத்த முயல்கிறார்.





