Site icon Her Stories

கருவறையும் அரசியலும்

மரபணு ஆலோசகராக வேண்டுமென்று அந்தத் துறையின் நுட்பங்களைக் கற்றுக் கொண்டிருந்த போது நிகழ்ந்த சில அனுபவங்கள் சமூகத்தைப் பற்றிய எனது பார்வையை மாற்றின. மரபணு ஆலோசனைக்கும் சமூகத்திற்கும் என்ன தொடர்பு? மரபணு ஆலோசனைக்கும் சமூகத்திற்கும் மட்டுமல்ல சட்டம், அரசியல், மதம் போன்ற பலவற்றோடு அதற்குத் தொடர்பு உண்டு. கருவிலிருக்கும் ஒரு குழந்தைக்கு மரபணுக் குறைபாடு இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக ஊடுகதிர் பரிசோதனையில் தெரிய வருகிறது‌. ஆனால் அது என்ன குறைபாடு என்பதைத் தெரிந்து கொள்ள பிற பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு அந்தக் குழந்தையின் மரபணுக்களைப் பரிசோதிக்க வேண்டும். ஊசி வழியாகப் பனிக்குட நீரை எடுத்து அதிலிருந்து குழந்தையின் மரபணுக்களைப் பரிசோதிப்பது ஒரு முறை. மற்றொரு முறையில் நஞ்சுக் கொடியிலிருந்தும் குழந்தையின் மரபணுக்கள் பரிசோதிக்கப்படும். இது போன்ற பரிசோதனைகளின் போது கருக்கலைவதற்கு ஒரு சதவீதத்துக்கும் குறைவான வாய்ப்புகளே உள்ளன என்றாலும் இந்தப் பரிசோதனை முறைகளை அனைத்து மதத்தினரும் ஏற்றுக் கொள்வதில்லை.

எந்த ஒரு பரிசோதனை முறையோ அல்லது சிகிச்சை முறையோ சம்மந்தப்பட்டவர்களின் அனுமதியோடு மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது மரபணு ஆலோசனை விதிகளில் மிக முக்கியமான ஒன்று. ஒருவேளை அந்த நபருக்கு குறிப்பிட்ட பரிசோதனையை மேற்கொள்ள விருப்பமில்லை என்றால் அவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது‌‌. ஆனால், பிறக்கப் போகும் குழந்தைக்கு மரபணுக் குறைபாடு உறுதியாக இருக்கும் பட்சத்தில் அதற்கான முழு பொறுப்பையும் சம்மந்தப்பட்டவர்கள்தான் ஏற்க வேண்டும். சில தம்பதியர் தங்கள் குழந்தைக்கு மரபணுக் குறைபாடு இருப்பது தெரிய வந்ததும், அரசால் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் அந்தக் கரு இருக்கும் பட்சத்தில் அதைத் தொடராமல் கருக்கலைப்பு செய்யும் முடிவை எடுப்பர். இந்த நிலையில் அவர்களின் முடிவை மதித்து மருத்துவர்கள் அதற்கான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

சமீபத்தில் வெளிவந்த ஒரு படத்தில் கருக்கலைப்பு செய்வதைப் பூடாகரமாகக் காட்டியிருப்பார்கள். பல வருடங்களாகத் தமிழ் சினிமாவில் கருக்கலைப்பு செய்வதை ஒரு குற்றமாகவும், கருக்கலைப்பு செய்யும் பெண்ணை ஒரு குற்றவாளியாகவும் சித்தரித்து வருகிறார்கள். அந்தக் குழந்தை எப்படி உருவாகி இருந்தாலும் பரவாயில்லை அதைப் பெற்றெடுத்து வளர்ப்பது அந்தப் பெண்ணின் கடமை என்பது போல பல கற்பிதங்கள் வலம் வருகின்றன. அதுவும் கருக்கலைப்புச் செய்வதை மிக ரகசியமாக யாருக்கும் தெரியாமல் ஏழு கடல், ஏழு மலை தாண்டிச் சென்று செய்ய வேண்டும் என்பது போல காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் கருக்கலைப்பு என்பது இந்திய மருத்துவமனைகளில் தினசரி நடக்கும் ஒரு நிகழ்வு. கருக்கலைப்பிற்கான காரணம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கருக்கலைப்பு செய்வதற்குச் சம்மந்தப்பட்ட பெண்ணின் சம்மதமே போதுமானது‌. ஒருவேளை அந்தப் பெண் 18 வயதிற்குட்பட்டவராக இருக்கும் பட்சத்தில் அந்தப் பெண்ணின் பாதுகாவலரின் ஒப்புதல் தேவை என்று சட்டம் சொல்கிறது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரையில் கருக்கலைப்பு என்பது சாதாரணமான ஒன்று. அதென்ன இந்தியாவைப் பொறுத்தவரை என்று கேட்பவர்களுக்கு, ஆம் கருக்கலைப்பு என்பது இந்தியா உட்பட சில நாடுகளில் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட ஒரு மருத்துவச் செயல்முறை.

மத்திய கிழக்கு நாடுகளான சௌதி அரேபியா போன்ற நாடுகளில் கருக்கலைப்பு என்பது தடை செய்யப்பட்ட ஒன்று. அங்கு குடும்பக்கட்டுப்பாடு என்பதும் சட்டத்திற்கு எதிரானது. இதற்கான கடுமையான சட்டங்களும் அங்கு நடைமுறையில் உள்ளன. அதாவது மதச்சார்புடைய நாடுகளில் கருக்கலைப்பு என்பது ஒரு பாவச் செயல். அதுவும் ஓர் உயிரைக் கொல்வதற்குச் சமம் என்று சில மதங்கள் போதிக்கின்றன.

இஸ்லாமிய மற்றும் கிறித்துவ மதம் அதிகமாக பின்பற்றப்படும் நாடுகளில் இன்றும் கருக்கலைப்பு ஒரு பெருங்குற்றமாகக் கருதப்படுகிறது. தொழில் வளர்ச்சியில் முன்னோடியாக இருக்கும் நாடுகள்கூட இந்த விஷயத்தில் பிற்போக்குத்தனமாக இருக்கிறது என்பது நிதர்சனம். இதன் விளைவு அயர்லாந்தில் வசித்த இந்திய வம்சாவளியான பல் மருத்துவர் சவிதா ஹலப்பனவரின் இறப்பு. செப்ஸிஸ் (sepsis) என்னும் நோயால் பாதிக்கப்பட்டவர் 2012இல் முதன்முதலில் முதுகு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் வயிற்றில் 17 வாரக் கரு இருந்தது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் அவருக்கு செப்ஸிஸ் இருந்தது கண்டறியப்படவில்லை. பிறகு ரத்த அழுத்தம் குறைவாக இருப்பதாக மீண்டும் ஒருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அப்போதும் அவருக்கு செப்ஸிஸ் இருப்பதை மருத்துவர்கள் கண்டறியவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஓர் இரவில் சவிதாவின் பனிக்குடம் உடைந்து நீர் வெளியே வந்துவிட்டது. ஆனால் குழந்தை வெளியே வரவில்லை. இதைத் தொடர்ந்து தனது நிலை மோசமாவதை உணர்ந்து தனக்குக் கருக்கலைப்பு செய்யுமாறு மருத்துவர்களிடம் கூறிய போது, குழந்தைக்கு இதயத்துடிப்பு இருக்கிறது என்றும் சட்டத்தில் கருக்கலைப்பிற்கு இடமில்லை என்றும் சொல்லி அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளனர். இதன் காரணமாக அடுத்த ஐந்தாவது நாள் சவிதா உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு பெரும் மக்கள் போராட்டம் வெடித்தது. பலதரப்பட்ட விசாரணைக்கு பிறகு சவிதாவின் மருத்துவப் பரிசோதனையில் தவறு நடந்ததும், செப்ஸிஸ் இருந்ததைக் கண்டறியாததும், கருக்கலைப்புக்குச் சட்டத்திற்கு இடமில்லாததும்தான் மரணத்திற்குக் காரணம் என்னும் அறிக்கை வெளியானது. இதனைத் தொடர்ந்து  மக்களிடம் கருக்கலைப்பு வேண்டுமா, வேண்டாமா என்கிற வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, கருக்கலைப்புக்கான சட்டம் 2018இல் அயர்லாந்தில் இயற்றப்பட்டது. இச்சட்டம் நடைமுறைக்கு வருவதற்குச் சவிதாவின் உயிர் காணிக்கையாக்கப்பட்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

இன்னும் பல நாடுகளில் கருக்கலைப்பிற்கான சட்டம் இது போன்ற சில துயரமான சம்பவத்திற்குப் பிறகுதான் அமலாக்கப்பட்டிருக்கிறது என்பது வேதனைக்குரியது. 2021இல் வெளியான இந்தியக் கருக்கலைப்பு சட்டத்தின் திருத்தத்தில் கருக்கலைப்பு செய்வதற்கான கால வரையறை 20 வாரங்களிலிருந்து 24 வாரங்களாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது.‌ சில குறைபாடுகளை 20 வாரங்களுக்குள் கண்டறிய முடியாது என்பதால் இச்சட்டம் திருத்தப்பட்டிருக்கிறது. அது மட்டுமன்றி தாயின் உயிருக்கு ஆபத்திருக்கும் நிலையில் எப்போது வேண்டுமானாலும் கருக்கலைப்புச் செய்யலாம். இங்கு தாயா, சேயா என்று பார்த்தால் தாயின் நலத்திற்குதான் முதலுரிமை.

வளர்ந்த நாடான அமெரிக்காவில்கூடச் சமீபத்தில் கருக்கலைப்புக்கான சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக அமெரிக்காவின் சில மாநிலங்களில் கருக்கலைப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது போல இன்னும் பல நாடுகளில் கருக்கலைப்பு ஒரு மாபெரும் குற்றமாகவே கருதப்படுகிறது.‌ இதற்கு அடிப்படையாக இருப்பது கொல்லாமை என்னும் மதச்சார்புடைய கொள்கை என்றாலும் ஆணாதிக்கமும் பெண்ணடிமைத்தனமும் இந்த முகமூடிக்குப் பின்னால் ஒளிந்திருப்பதைச்‌ சுட்டிக்காட்டதான் வேண்டும். பெண்ணின் கருவறை வரை இந்த ஆணாதிக்க அரசியல் புரையோடி இருப்பதை நினைத்தால் கவலையாக இருக்கிறது. இதன் உச்சம்தான் குடும்பக் கட்டுப்பாட்டிற்கான சிகிச்சைகளைப் பெண்களே மேற்கொள்ள வேண்டும் என்கிற கற்பிதம். வாசக்டோமி (vasectomy) என்கிற சிகிச்சை ஆணுக்கு இருக்கும் பட்சத்தில் ஏன் பெண்கள் டியூபக்டோமியை (tubectomy) செய்து கொள்ள வேண்டும்? இதில் வாசக்டோமியை விட டியூபக்டோமி சிக்கலானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போதனைகள் அனைத்தும் கிறித்துவ, இஸ்லாமிய மதங்களோடு மட்டும் நின்று விடவில்லை. உலகில் நடைமுறையில் இருக்கும் இந்து மதம் உட்பட அத்தனை மதங்களும் பெண்ணுடல் மற்றும் குழந்தைப்பேறு சார்ந்த அனைத்திலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தலையிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

குழந்தை வேண்டும், வேண்டாம் என்கிற கணவன், மனைவி இருவருக்குமான தனிப்பட்ட முடிவைப் பொது வெளியில் சட்டமாக்கிப் பெண்ணுடல் மீது இந்தச் சமுதாயம் காட்டும் அடக்குமுறை ஏற்புடையதல்ல. ஒரு நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதால், ஒரு பெண் எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்று அந்நாட்டுச் சட்டம் சொல்கிறது. இன்னொரு நாட்டில் ஜனத்தொகை கூடிக் கொண்டே போவதால் ஓரிரு குழந்தையோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்நாட்டுச் சட்டம் சொல்கிறது.‌ மற்றொரு நாட்டில் ஆண், பெண் விகிதம் குறைவதால் ஓர் ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அந்நாட்டுச் சட்டம் சொல்கிறது. அந்தந்த சூழ்நிலைக்கேற்ப இயற்றப்படும் சட்டங்களால் பாதிக்கப்படுவது என்னவோ பெண்கள்தாம். இந்தச் சட்டங்கள் இயற்றப்படும் போது அங்கு பெண்ணுக்கான பிரதிநிதித்துவம் இருந்ததா என்பதும் கேள்விக்குறிதான். பெண்ணுடல் மீது திணிக்கப்படும் அனைத்து வகையான கற்பிதங்களும் நிறுத்தப்பட வேண்டும். தன்னுடல் சார்ந்த முடிவெடுக்கும் உரிமை பெண்ணுக்கானது.

(தொடரும்)

படைப்பாளர்:

வைஷ்ணவி என்கிற வாசகியாக இருந்து வெண்பா எனும் எழுத்தாளராக, ‘அவளொரு பட்டாம்பூச்சி’ வழியாக எழுத்துலகிற்கு அறிமுகமானவர். SRM கல்லூரியில், மரபணு‌ பொறியியலில் இளநிலை தொழில்நுட்பம் (B.Tech Genetic Engineering) பயின்று, தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு உயிரியலில் முதுநிலை தொழில்நுட்பம் (M.Tech Computational Biology) பயின்று வருகிறார். ஹெர்ஸ்டோரிஸ் இணையதளத்தில் வெளிவந்த ‘தாயனை’ தொடர், ஹெர்ஸ்டோரிஸ் வெளியீடாக வந்திருக்கிறாது.

Exit mobile version