மீரா திரும்பவும் அந்த காபி ஷாப்புக்கு போகவில்லை. அங்கேதான் ஜெய் அவளை முதல் முறையாகக் ’குட்டி’ என்று அழைத்தான். அதே டேபிளில்தான், “நீ இல்லாம என்னால இருக்க முடியாது…”
என்று கண்கள் நிரம்பச் சொன்னான்.
இப்போது அதே டேபிளில் வேறொருவர் அமர்ந்திருக்கிறார். டேபிளில் மட்டுமா? பிரேக்அப் ஆன பிறகு காதல் உடனே செத்துவிடுவதில்லை. அது நம் வாழ்க்கையின் ஒவ்வொரு மூலையிலும் ஒளிந்து கிடக்கும்.
ஒரு பாடல்…
ஒரு வாசனை…
ஒரு தெரு…
ஓர் ஒளிப்படம்…
ஒரு காபி ஷாப்…
ஏதோ ஒரு தூண்டுதலுக்காகக் காத்திருந்து, சட்டென உயிர்பெற்று நெஞ்சை நெருடிவிடும்.
அவன் போன வலியைவிட, அவன் இருந்த எல்லா இடங்களும் இன்னும் உயிரோடு இருப்பதுதான் மீராவை அதிகமாக வதைத்தது.
ஸ்பாட்டிபை பிளேலிஸ்டில்…
மொபைல் கேலரியில்…
அவனுக்குப் பிடித்த காபியின் மணத்தில்…
அவன் பயன்படுத்திய சென்டின் நறுமணத்தில்…
அவன் இன்னும் அவள் அருகிலேயே இருப்பதுபோலத் தோன்றும். போன் கேலரியில் ஒரு பன்னிரண்டு விநாடி வீடியோ இருந்தது. பீச்சில் எடுத்த வீடியோ. அதை நூறு முறையோ… இல்லை… பல நூறு முறையோ பார்த்திருப்பாள். பார்ப்பது என்றால் வெறுமனே பார்ப்பதில்லை. அந்தப் பன்னிரண்டு விநாடிக்குள் மீண்டும் சென்று வாழ்ந்துவிட்டு வருவாள்.
அந்த வீடியோவில் அவள் இழந்த காதல் மட்டும் இல்லை. அவளின் சந்தோஷமான வெர்ஷனும் இருந்தது. இந்த முறை அந்த வீடியோவை நாமும் பார்ப்போம்.
மீரா முன்னால் ஓடிக்கொண்டிருக்கிறாள். கடல் காற்று வேகமாக வீசியதால், அவளது முடி மீண்டும் மீண்டும் முகத்தில் வந்து விழுகிறது.
“ஏய்… நில்லு…” என்று சிரித்துக்கொண்டே பின்னால் ஓடிய ஜெய், அவள் முடியை மெதுவாகக் காதோரம் ஒதுக்குகிறான்.
வீடியோ முடியும் முன்… கேமராவுக்குத் தெரியாமல் அவள் கன்னத்தில் ஒரு முத்தம். வீடியோ அங்கேயே முடிந்துவிடுகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் அதைப் பார்க்கும்போது மீராவின் கண்களில் கண்ணீர் துளிர்க்கும்.
ஏனென்றால் அந்த வீடியோவில் காதல் மட்டும் உயிரோடு இல்லை. அவளே உயிரோடு இருந்தாள். அவனோடு இருந்த அந்த நாட்களில் அவள் எவ்வளவு சிரித்தாள். எவ்வளவு கனவுகள் கண்டாள்… எவ்வளவு பாதுகாப்பாக உணர்ந்தாள்… அதெல்லாம் அந்தப் பன்னிரண்டு விநாடிக்குள் உயிரோடு இருந்தது.
அவன் அவளை அப்படித்தான் பார்த்துக்கொள்வான். மாதவிலக்கு வந்த நாட்களில் யூடியூப் பார்த்து ரசம் செய்ய முயன்றிருக்கிறான். நேர்முகத் தேர்வுக்கு முன் பதட்டத்தில் அழுத இரவு, பேசிப் பேசியே அவளை அமைதிப்படுத்தியிருக்கிறான். ரோட்டைக் கடக்கும்போது, அவள் அவன் கையைத் தேடுவதற்கு முன்பே அவன் கை அவளைத் தேடி வந்திருக்கிறது.
அதனால்தான்…
இந்தப் பிரிவை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.
“இவ்வளவு அன்பா இருந்த ஒருத்தன்… எப்படி ஒரே நாள்ல யாரோ மாதிரி மாறிட்டான்?”
அந்தக் கேள்விக்குப் பதில் கிடைக்காமல் அவள் இன்னும் வாழ்ந்துகொண்டிருந்தாள்.
அந்தக் கடைசி சந்திப்பு மட்டும்… இன்றும் அவள் மனதில் தெளிவாக ஓடிக்கொண்டே இருந்தது. எப்போதும் செல்லும் அந்த உணவகம். வெளியே மழை. வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் மழை அவளுடன் இருந்தது.
முதல் காதல்…
முதல் முத்தம்…
இப்போது…
முதல் பிரிவும்.
ஜெய் அன்று வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்தான். அந்த அமைதியே மீராவைப் பயமுறுத்தியது. சிறிது நேரம் தலையைக் குனிந்தபடியே இருந்தவன், மெதுவாகப் பேச ஆரம்பித்தான்.
“நாம… பிரேக்அப் பண்ணிக்கலாமா?”
அந்த நொடி…
அவள் கையில் இருந்த ஸ்பூன் கீழே விழுந்த சத்தம் இன்னும் அவள் காதில் ஒலிக்கிறது.
சில நொடிகள்…
உலகமே சத்தமில்லாமல் நின்றுவிட்டதுபோல இருந்தது. சாக்லேட்டைப் பறிகொடுத்த குழந்தையைப்போல அவள் அவனைப் பார்த்தாள்.
“என்ன ஆச்சு?” என்று குரல் நடுங்கக் கேட்டாள்.
ஜெய் அவளை நேராகப் பார்க்க முடியவில்லை. அவன் கண்களில் காதல் இருந்தது. ஆனால்… அந்தக் காதலை காப்பாற்றும் தைரியம் இல்லை.
“ஏன்?” என்கிற ஒரே கேள்வியை மட்டுமே அவளால் கேட்க முடிந்தது.
நீண்ட மௌனத்திற்குப் பிறகு அவன் மெதுவாகச் சொன்னான். “எங்க வீட்டுல…தற்கொலை பண்ணிக்குவேன்னு மிரட்டுறாங்க…”
அதற்கு மேல் அவளால் எதுவும் கேட்க முடியவில்லை.
ஒரு வார்த்தையும் பேசாமல் எழுந்தாள்.
மழை இன்னும் பெய்துகொண்டே இருந்தது.
உணவகத்தின் கதவைத் திறந்து வெளியே வந்தாள்.
ஒரு காதல் வாழ வேண்டும் என்பதற்காக… யாராவது உயிரை இழக்க வேண்டும் என்று அவள் விரும்பவில்லை. அந்த மழையில் நனைந்தபடியே நடந்தாள்.
அன்றோடு… மீராவின் வாழ்க்கையில் ஓர் அத்தியாயம் முடிந்தது. அதன் பிறகான வாழ்க்கையில்… மீரா என்கிற பட்டாம்பூச்சி சிறகிழந்தது. காலம் நகர்ந்தது. ஆனால் அவள் மட்டும் அந்த மழை பெய்த மாலையிலேயே நின்றுகொண்டிருந்தாள்.
பஸ்ஸில் ஜன்னல் சீட்டில் அமர்ந்தால் அவன் நினைவு. இரவு வந்தாலே… ‘சாப்பிட்டியா?’ ‘குட்நைட்..’ என்று வரவேண்டிய மெசேஜ் வராத வெறுமை.
பிறந்தநாள் அன்று… பன்னிரண்டு மணியைக் கடந்தும் அமைதியாக இருந்த மொபைல். அந்த அமைதி எந்தச் சண்டையையும்விட அதிகமாக வலித்தது.
ஒருநாள்… சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தாள். திடீரென்று அவனுக்குப் பிடித்த பாடல் ஒலித்தது. அவ்வளவுதான். எங்கே நிற்கிறோம் என்பதைக்கூட மறந்து, அங்கேயே நின்று அழ ஆரம்பித்தாள்.
மற்றவர்களுக்கு அது ஒரு பாடல். அவளுக்கு அது ஒரு முழு வாழ்க்கை. அந்தப் பாடலை இருவரும் பீச்சில் நின்று சேர்ந்து பாடிய மாலை… அவன் சிரிப்பு… அவன் குரல்… அனைத்தும் ஒரு நொடியில் மனதுக்குள் உயிர்பெற்றன.
சில நினைவுகள் மறைவதில்லை. அவை நம்மைத் தேடிவரும் நேரத்தை மட்டும் தேர்ந்தெடுக்கின்றன.
ஒரு நாள் கண்ணாடி முன் நின்றபோது… எதிரே தெரிந்த பெண்ணை அவளுக்கே அடையாளம் தெரியவில்லை. கண்களில் இருந்த பிரகாசம் எங்கே? எப்போதும் காரணமில்லாமல் சிரித்த அந்தப் பெண் எங்கே?
‘நான் எப்படி இப்படி மாறிட்டேன்?’ என்று தன்னையே கேட்டுக்கொண்டாள். அப்போது தான் அவளுக்குப் புரிந்தது. ஜெய் அவளை விட்டுச் சென்றது காதலை மட்டுமல்ல.
அவளுக்குள் வாழ்ந்திருந்த உற்சாகமான மீராவையும் அவன் பிரிவோடு எங்கோ புதைத்துவிட்டிருந்தது.
“இல்லை… இப்படியே என்னால இருக்க முடியாது” என்று ஒரு நாள் முடிவு செய்தாள். ஆனால்… எப்படி மீண்டு வருவது என்று மட்டும் தெரியவில்லை.
மாதங்கள் கடந்தன. வலி மட்டும் அவளை விட்டு நகர மறுத்தது. அவன் நினைவில்லாத நாள் இல்லை. அந்த நாட்களில் ஒருநாள்…
அலுவலக அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டிருந்த ஒரு சிறிய அறிவிப்பு அவள் கவனத்தை ஈர்த்தது.
‘வார இறுதிகளில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தர தன்னார்வலர்கள் தேவை.’
படித்துவிட்டு அமைதியாக நடந்துசென்றாள்.
மாலை வீட்டிற்கு வந்தாள். வழக்கம்போல் மொபைலை எடுத்தாள். சமூக வலைத்தளங்களை ஸ்க்ரோல் செய்தாள். கேலரியை திறந்தாள். மீண்டும் அதே நினைவுகள்.
அப்போது…
காலை பார்த்த அந்த அறிவிப்பு நினைவுக்கு வந்தது. ‘வீட்டிலேயே இருந்து இதே நினைவுகளைத்தான் சுற்றிக்கொண்டிருக்கப் போறேனே… ஒரு முறை போய்தான் பார்ப்போமே…’ என்று தோன்றியது.
அடுத்த நாளே… தன்னுடைய பெயரைப் பதிவு செய்தாள்.
முதல் நாள்… அவள் கொஞ்சம் பதட்டமாகவே அந்த வகுப்பறைக்குள் நுழைந்தாள். ஆனால் குழந்தைகளுக்கு அவள் யார் என்பது முக்கியமில்லை. அவர்களுக்குப் புதிய ‘அக்கா’ வந்திருந்தாள்.
ஒரு குட்டிப்பெண் ஓடிவந்து…
“அக்கா… இந்தக் கணக்கு வரல…” என்று நோட்டை நீட்டினாள். மற்றொரு சிறுவன்… “நான் வரைஞ்ச படம் பாருங்க…” என்று பெருமையாகத் தனது ஓவியத்தைக் காட்டினான்.
இன்னொரு சிறுமி… அவள் கையைப் பிடித்தபடியே கதை சொல்ல ஆரம்பித்தாள். அவர்களோடு இருந்த அந்த இரண்டு மணி நேரத்தில்… பல மாதங்களாக மனதில் சுமந்த வலியை மீரா முதல் முறையாக மறந்தாள்.
வகுப்பு முடிந்து வெளியே வந்தபோது… எத்தனை நாட்களுக்குப் பிறகு என்று தெரியவில்லை. அவள் முகத்தில் ஒரு சிறிய புன்னகை இருந்தது. அது இன்னும் முழுமையாக மலரவில்லை.
ஆனால்… அது மீண்டும் மலர ஆரம்பித்திருந்தது. அடுத்த வாரமும் சென்றாள். அதற்கு அடுத்த வாரமும். மெல்ல… அந்த இடம் அவளுடைய வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியது.
வாரம் முழுவதும் வேலை செய்தாலும், வார இறுதிக்காக காத்திருக்க ஆரம்பித்தாள். குழந்தைகளின் சிரிப்பு… அவர்களின் குறும்பு… சின்ன சின்ன சண்டைகள்…
ஒவ்வொரு நாளும் அவர்கள் கற்றுக்கொள்ளும் புதிய விஷயங்கள்… இவை எல்லாம் அவள் மனதில் படிந்திருந்த வலியைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கழுவ ஆரம்பித்தன.
ஒருநாள்…
ஒரு சிறுவன் தமிழைப் படிக்கத் தடுமாறினான். அவள் பொறுமையாக அவனுக்குச் சொல்லிக் கொடுத்தாள். பலமுறை முயற்சித்த பிறகு, அவன் சரியாக வாசித்தான்.
“அக்கா… படிச்சுட்டேன்!” என்று மகிழ்ச்சியாகச் சிரித்தான்.
அந்த ஒரு சிரிப்புக்காகவே அந்த நாள் முழுவதும் காத்திருந்தது போல இருந்தது. மற்றொரு நாள்… ஒரு குட்டிப் பெண் ஓடிவந்து அவளைக் கட்டிப்பிடித்தாள்.
“அக்கா… நீங்க வரலன்னு நினைச்சேன்…” என்று சொன்னாள்.
அந்த அணைப்பு… பல மாதங்களாக யாராலும் நிரப்ப முடியாத வெறுமையை மெதுவாக நிரப்ப ஆரம்பித்தது.
அன்று வீட்டிற்குப் போன பிறகும் அந்த குழந்தைகளின் முகங்களே அவள் மனதில் இருந்தன. பல மாதங்களுக்குப் பிறகு… தூங்குவதற்கு முன் ஜெய்யின் ஒளிப்படத்தை அல்ல… அந்தக் குழந்தைகள் வரைந்த ஓவியங்களைப் பார்த்து சிரித்தாள்.
தொலைந்து போனதாக நினைத்த உற்சாகம்… மெல்ல மெல்ல மீண்டும் அவளுக்குள் துளிர்விட்டது.
ஒரு வகுப்பின் நடுவில்… திடீரென்று அன்று ஜெய்யின் பிறந்த நாள் என்று நினைவுக்கு வந்தது. ஒரு கணம்… மனம் பழைய பாதையை நோக்கி ஓட ஆரம்பித்தது.
‘இந்நேரம் என்ன பண்ணிக்கிட்டு இருப்பான்?’
‘என்னை நினைச்சிருப்பானா?’ என்கிற கேள்விகள் மீண்டும் மனதை ஆக்கிரமித்தன.
அதே நேரத்தில்… “அக்கா… இந்த சம் வரல…” என்று ஒரு சிறுவன் அவள் கையைத் தொட்டான்.
அந்த ஒரு தொடுதலே… அவளை மீண்டும் நிகழ்காலத்திற்குக் கொண்டு வந்தது.
அவள் புன்னகைத்தாள்.
அன்று மாலை வீட்டிற்குத் திரும்பும் வழியில் அவள் ஒரு விஷயத்தை உணர்ந்தாள். ஜெய்யை மறந்துவிட்டதால் அல்ல… வாழ்க்கை அவளுக்குப் புதிய காரணங்களைத் தந்ததால்தான் அவன் நினைவுகள் கொஞ்சம் பின்னால் நகர ஆரம்பித்திருந்தன.
அவள் இன்னும் அவனை நேசித்தாள். அவன் நினைவுகள் இன்னும் இருந்தன. ஆனால்… அந்த நினைவுகள் மட்டும் அவள் வாழ்க்கை இல்லை.
ஒரு நாள் வகுப்பு முடிந்து கிளம்பும்போது…
ஒரு சிறுமி ஓடிவந்து அவள் கையைப் பிடித்தாள்.
“அக்கா… அடுத்த வாரம் எனக்குப் பிறந்தநாள். நீங்க கண்டிப்பா வரணும்…” என்றாள்.
மீரா அவள் கன்னத்தை மெதுவாக வருடினாள்.
“கண்டிப்பா வருவேன்” என்றாள்.
அந்தச் சிறுமி ஓடிச் சென்ற பிறகும்… அவள் கைப்பிடியின் வெப்பம் மீராவின் மனதில் இருந்தது. பல மாதங்களாக வெறுமையாக இருந்த மனதில்… “நான் இன்னும் யாருக்கோ முக்கியமானவள்” என்கிற உணர்வு மீண்டும் முளைத்தது.
அந்த ஒரு உணர்வே… அவளது ஹீலிங்கின் உண்மையான தொடக்கமாக இருந்தது. வாழ்க்கை மெதுவாக அதன் இயல்பான ஓட்டத்திற்குத் திரும்ப ஆரம்பித்தது.
நண்பர்களோடு மீண்டும் சிரித்தாள்.
அம்மாவோடு நீண்ட நேரம் பேசினாள்.
வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.
ஒருநாள்… மீண்டும் அதே பீச்சுக்குச் சென்றாள்.
அதே கடல், அதே அலை, அதே மாலை காற்று. ஆனால்… இந்த முறை அவள் முகத்தில் விழுந்த முடியைக் காதோரம் ஒதுக்கிவிட யாரும் இல்லை. சில நிமிடங்கள் அமைதியாகக் கடலைப் பார்த்துக்கொண்டிருந்தாள். கண்ணீர் வழிந்தது. அந்தக் கண்ணீரில் இழப்பு இருந்தது. அதே நேரத்தில்… நன்றியும் இருந்தது.
ஜெய்யை நினைத்தாள், அவன் சிரிப்பை நினைத்தாள், அவன் குறும்புகளை நினைத்தாள். அவனோடு கழித்த அந்த அழகான நாட்களை நினைத்தாள். அந்தக் காதல் முடிந்துவிட்டது. அந்த நினைவுகள் அவளுடைய வாழ்க்கையின் அழகான ஒரு பகுதி.
அவற்றை வெறுக்க வேண்டிய அவசியமும் இல்லை. மறக்க வேண்டிய அவசியமும் இல்லை. அமைதியாக மனதிற்குள் சொன்னாள். “நன்றி… என் வாழ்க்கையில் வந்து… காதல் என்றால் என்ன என்று எனக்குக் கற்றுக்கொடுத்ததற்கு நன்றி. சில அழகான நினைவுகளைத் தந்ததற்கு நன்றி.”
சில காதல்கள் நம்மோடு இறுதிவரை வராது. ஆனால் அந்தக் காதல் நமக்குக் கற்றுக்கொடுத்த வாழ்க்கை… நம்மோடு என்றும் பயணிக்கும்.
கடல் அலைகள் தொடர்ந்து கரையைத் தொட்டுக்கொண்டே இருந்தன.
வாழ்க்கையும் அப்படித்தான்.
ஓர் அலை விலகினாலும்…
அடுத்த அலை வந்து சேரும்.
இதுவும் கடந்து போகும்…
எதுவும் கடந்து போகும்…
காதலும் கடந்து போகும்.
(தொடரும்)
படைப்பாளர்:
யாமினி
வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.


