Site icon Her Stories

சமூக வலைத்தளமும் பெண்களும்

Indian young brother and sister celebrating Raksha Bandhan or Rakhi festival or on Bhai dooj or Bhau-Beej with Poja Thali, sweets, gifts or taking selfie pictures

சமூக வலைத்தளம் எனும் Social network பெண்கள் வாழ்வில் தற்போது பெரும் வரமாகவும் அதே நேரம் பெருஞ்சாபமாகவும் மாறிவருகிறது. வீட்டைவிட்டு அதிகம் வெளியே செல்ல முடியாத சென்ற தலைமுறை பெண்களுக்குக் கிட்டாத வெளியுலகத் தொடர்பு இன்றைய தலைமுறை பெண்களின் கைகளில் தவழத் தொடங்கியுள்ளது. பல பெண்களின் ஆற்றல்களும் திறமைகளும் சமூக வலைத்தளம் வந்தபின் அதிகம் வெளி வரத் தொடங்கியது.

பெண்ணின் உணர்வுகளையும் ஆண்களே பேசி வந்த நிலையில், தற்போது பல பெண்கள் தங்கள் உணர்வுகள் குறித்தும், வாழ்வியல், அரசியல், சமூக நீதி, தொழில், வரலாறு, இலக்கியம், விளையாட்டு, உடல் ஆரோக்கியம் சமையல் குறித்து வெளியே பேசுவது விரிய தொடங்கியதுடன், அது பல பெண்களின் திறமை மீது ஆற்றல் பாய்ச்சவும் செய்தது. சமூக வலைத்தளத்தில் கிடைத்த தொடர்புகள் வழியாக, தொழில் விற்பன்னராக, தொழில் முனைவோராக, எழுத்தாளராக, நியூட்ரிஷியனாக, டயட்டிஷியனாக, ப்யூட்டிஷியனாகப் பல்வேறு சாதனையாளர்களாகப் பலர் அடையாளப்படுத்தபட்டு வெற்றிகரமான வாழ்வை நடத்தி வருகின்றனர்.

எழுத்தைப் பொறுத்த வரை புதிதாக எழுத வரும் பெண் எழுத்தாளர்கள் குறித்துப் பல விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், நிறைய பெண்களால் எழுத்துகள் மூலம் தங்கள் உணர்வுகளை, சிந்தனைகளை, கருத்துகளை, அரசியல் அபிப்ராயங்களை வெளிப்படுத்த முடிகிறது என்பதே சமூக வலைத்தளத்தின் வெற்றிதான். புத்தகங்கள் வாசித்த பலர் சமூக வலைத்தளம் வந்து வாசிப்பது குறைந்து விட்டதாகக் கூறும் அதே நேரத்தில்தான் சமூக வலைத்தளம் மூலம் நிறைய பேர் நல்ல புத்தக வாசிப்பாளராக மாறி வருகின்றனர். நான் சமூக வலைத்தளம் வந்த பின் வாசித்தது அதிகம். புத்தகம் குறித்த பலரின் விமர்சனங்களும் பார்வைகளும் புத்தகம் வாசிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தையும் நல்ல புத்தகங்களுக்கான தேடலையும் ஆழமாக விதைக்கிறது.

இலக்கியக் கூட்டங்களில் பெரும்பாலும் ஆண்களே கலந்து வந்த நிலையில், பல பெண்கள் இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்வதும், புத்தகங்கள் குறித்துப் பேசுவதற்கான வழியையும், சமூக வலைத்தளம்தான் ஏற்படுத்தியது. இப்போது பல பெண்கள் எழுத்தாளர்களாக வலம்வரும் வாய்ப்பையும் சமூக வலைத்தளம்தான் சாத்தியமாக்கியுள்ளது.

ஆனால், இதே சமூக வலைத்தளம் பல பெண்களுக்கு அவர்களின் நிம்மதியை, ஆரோக்கியத்தைப் பறிக்கும் இடமாகவும் உள்ளது. குடும்பத்தினரின் அனுமதியுடன் சமூக வலைத்தளத்தில் பெண்கள் இயங்கும் நிலைதான் இன்றளவும் இருக்கிறது. புதிதாக இங்கு வரும் பெண்கள் சமூக வலைத்தளங்களில் அறிமுகமாகும், தன்னிடம் நட்பு பாராட்டும் சில ஆண்களைச் சரியாக எதிர்கொள்ளத் தெரியாமல் பல்வேறு சிக்கல்களில் சிக்கிக்கொள்கின்றனர்.

பெண்களை உணர்வுப்பூர்வமாக, உடல் ரீதியாக, பாலியல் ரீதியாக, சில நேரம் பொருளாதார ரீதியாகச் சுரண்டுவது அதிகம் நடைபெறுகிறது. நட்பின் பெயரால், காதலின் பெயரால் பெண்களிடம் நடைபெறும் இந்தச் சுரண்டல்களில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் பெண்கள் சிக்கிக்கொள்கின்றனர். ஆண்களும்தாமே என்பவர்களுக்கு ஆண்களில் பலர் தெரிந்தே அல்லது பெண்ணை அடைய வேண்டும் என்றுதான் இதற்குள் வருகின்றனர். ஆனால், பல பெண்கள் போதிய விழிப்புணர்வு இல்லாமல்தான் சுரண்டலில் சிக்கிக்கொள்கின்றனர். சாதாரணமாகப் பழக ஆரம்பித்து, நட்பு, காதல் என்று வளர்ந்து அதனால் உணர்வுப்பூர்வமான உறவுக்குள் சிக்கிக்கொள்பவர்கள் வேறு. ஆனால், இந்தப் பெண்ணை இப்படி அணுகினால், இவள் மூலம் தனக்கு இன்னென்ன லாபம் கிடைக்கும் என்று கணக்கு போட்டு பெண்களுடன் நட்பு பேணி, அவர்களைத் தங்கள் தேவைகளுக்கு உபயோகப்படுத்திக் கொள்பவர்களிடம் பெண் சிக்கிக்கொள்ளும்போதுதான் நிம்மதியையும் சந்தோஷத்தையும் இழக்கின்றனர்.

பாலியல் பிரச்னைகள் ஏன் சமூக வலைத்தளங்களில் இவ்வளவு பூதாகரமாக்கப்படுகிறது? காமம், இயற்கை உணர்வு என்பதை மறந்து சமூக அறங்களுக்குள் சேர்க்கப்பட்ட போதே அது வக்கிரமாக மாறத் தொடங்கிவிட்டது. எதிர்பாலினத்தவருடன் பேசுவதையே மாபெரும் கிளர்ச்சியாக நினைக்கும் ஒரு தலைமுறையே உணர்வு சிக்கலில் நிற்கிறது. பெண் என்பவள் அடையும் பொருளாகப் பல நூற்றாண்டுகளாக மறைமுகமாகக் கற்பிக்கப்பட்டதைத் தன்னையறியாமல் உள்ளுக்குள் ஏற்றி வாழும் பலரும் இதில் உளவியல் ரீதியாகப் பல்முனை தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர்.

சமூக வலைத்தளம் ஆண், பெண் தொடர்புகளை எளிமைப்படுத்தியிருந்தாலும், பெண்ணுடன் பேசுவதே சாதனையாக கருதும் ஆண்களும், ஆண்கள் பேசினாலே காதல் என நினைக்கும் பெண்களும் இன்றும் மறைந்துவிடவில்லை. இதில் ஆணாவது காமம் தன் தேவை எனப் பிறரிடம் கூறவில்லை என்றாலும் ஓரளவு தனக்குள்ளாக உணர்ந்திருப்பான். ஆனால், காதல் தாண்டிய காமத்தைப் பெருங்குற்றமாக நினைக்கும் பெண்களால் தன் தேவை காமம் என ஒரு போதும் பிறரிடமோ, ஏன் தனக்குள்ளாகக்கூட நினைக்க முடியாது. அதனால் காதல் என்ற உணர்வின் போர்வையில் பெரும்பாலோர் தான் எதைத் தேடுகிறோம் என்கிற தெளிவில்லாமல் எதிலோ தொடங்கி, எதிலோ சிக்கி மூச்சு திணறிக் கொண்டிருக்கின்றனர்.

காதல் என்றால் அது காமம் மட்டுமே என நினைப்பவர்களும், காதல் என்றால் அது மிகப் புனிதமானது என்று நினைப்பவர்களும் காதலின் பெயரால் தாங்கள் எதைத் தேடுகிறோம் என்பதை யோசிக்கத் தொடங்கினாலே தெளிவு பிறந்துவிடும்.

சமூக வலைத்தளத்தில் ஆண், பெண் உரையாடல்கள் தவிர்க்க முடியாது என்பதுடன் தவிர்க்கத் தேவையில்லை என்பதுதான் என் கருத்து. ஒரு பெண் ஆணுடன் நட்பு பாராட்டுவது பெருங்குற்றம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் எதிர்பாலினத்தவருடன் பேச விழைவதும், நட்பு பாராட்ட முனைவதும் இயற்கை உணர்வுதான். யாருக்கு யாருடன் ஒத்திசைவு ஏற்படும், எண்ண அலைகள் ஒத்துப்போகும் என்பது எல்லாம் யாரும் அறுதியிட்டுக் கூற முடியாது. இன்னும் சொல்லப்போனால் பலருக்கு அத்தகைய நட்புகள் வாழ்வின் நல்ல திருப்பு முனையாகக்கூட அமையலாம். யாரோ ஒருவரின் பேச்சு, பாராட்டு, உற்சாகமும் ஊக்கமும் தருவதுடன் நம்மைச் செம்மையாக்கி கொள்ளவும், வளர்ச்சியின் பாதையில் நகர்த்தவும் உதவும் என்றால் அதனை ஏற்றுக்கொள்வது நமக்கு நன்மை பயக்கும்தானே.

இல்லை இப்படிப் பேச ஆரம்பித்துதான் அது உறவாக, காதலாகக் கனிந்து பின் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது என்பவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள், நம் ஆழ்மனம் எதை விரும்புகிறதோ, நம் எண்ணங்கள் எதுவோ அதை நோக்கிதான் நாம் வழி நடத்தப்படுவோம். நாம் சாதாரணமான நட்பாகப் பழக ஆரம்பித்து, நம்பிக்கை ஏற்பட்டு கொஞ்சம் பர்சனலாகப் பேச ஆரம்பிக்கும்போது, அவர்களிடம் என்ன எதிர்பார்க்கிறோம் அல்லது அந்த நட்பில், உறவில் எதுவரை தன்னால் செல்ல முடியும் என்பதைத் தெளிவாக நமக்குள் வரையறுத்துக்கொள்வதுடன், அதைப் பழகிக் கொண்டிருப்பவர்களுடனும் வெளிப்படையாகக் கூறிவிடுவது பல்வேறு சிக்கல்கள் வராமல் தடுக்கும். அதையும் தாண்டி சிக்கல் வந்தால் அதைச் சம்மந்தப்பட்ட இருவரும் பேசித் தீர்த்துக்கொள்ள முனைவது நல்லது.

நம்பிக்கையின் அடிப்படையில்தான் ஒரு நட்பு உருவாகிறது என்றாலும், பின்னாளில் இருவருக்குமிடையில் எதன் காரணமாகவோ கருத்து வேறுபாடோ அல்லது சண்டையோ ஏற்பட்டு, பிரிய நேரிடலாம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இன்னும் சொல்லப்போனால் அது உங்களுக்கு நம்பிக்கை துரோகமாகக்கூட இருக்கலாம். கொஞ்சம் உற்று நோக்கினால் அந்த நம்பிக்கை துரோகத்திற்குப் பின் வேறு ஒன்று ஒளிந்த கொண்டிருக்க கூடும்.

நட்பு, காதல், என்ன உறவு என்றாலும் பிரிவு வலி தரும் ஒன்றுதான். ஆனால், பிரிவுகளை ஏற்கப் பழகுங்கள். ஆரம்பத்தில் மிகக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், ஒரு Toxic உறவில் இருந்து கொண்டு மன உளைச்சலில் இருப்பதைவிட ஓர் உறவில் இருந்து வெளியேறுவது பெரிய வலி இல்லை. காலம் அனைத்தையும் மாற்றும். அதற்கான நேரத்தைத் தந்து நாம் மெளனமாக இருக்கப் பழகிக்கொண்டால் போதும்.

அடுத்து சமூக வலைத்தளங்களில் ஸ்க்ரீன் ஷாட் வெளியிடுவதாக இருவர் பேசிய அந்தரங்க உரையாடல்களை அம்பலப்படுத்துவது, அல்லது சம்மந்தப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கு, பணியிடங்களுக்கு அனுப்பி பணம் பறிக்க முயற்சிப்பது அல்லது பழிவாங்க நினைப்பது. இதன் மூலம் என்ன கிடைக்கும் என யோசித்தால் நம்மைச் சுற்றி இருப்போருக்கு மெல்வதற்கு அவல் கொடுப்பது தவிர வேறு ஒன்றும் இல்லை.

இங்கு ஆண், பெண் நட்பு அல்லது நட்பு தாண்டிய உறவாகட்டும் பிறரின் கட்டாயத்தின் பேரில் நாம் ஏற்படுத்திக் கொள்வதில்லை. நம் சுயநினைவில்தான் நட்பில் இணைக்கிறோம். எந்த எல்லை வரை பழக வேண்டும் என்பதையும் நாம் தீர்மானித்துக்கொள்வதுதானே சரியாக இருக்கும். இருவர் சம்மந்தப்பட்ட விஷயத்தில் மூன்றாமவருக்கு என்ன வேலை இருக்க முடியும்?

காதலின் பெயரால் ஏமாற்றினார்கள் என்று புலம்பும் ஆண்கள் ஆகட்டும், பெண்கள் ஆகட்டும் அவர்களுடன் உறவில், நட்பில் சம்மந்தப்பட்டவரிடம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்துதானே நம்மையோ பணத்தையோ இழக்கிறோம். அப்படி இருக்கும்போது நான் அப்பாவி, என்னை ஏமாற்றிவிட்டார்கள் என்று சொல்வது எத்தனை முரணானது. நாம் எதிர்பார்த்து கொடுத்த ஒன்று நமக்குக் கிடைக்காத போது, அந்த ஏமாற்றம்தான் பிரச்னையாக மாறுகிறது. அது வரை இருவருக்குள்ளும் இருக்கும் நெருக்கமோ, கொடுக்கல் வாங்கலோ யாருக்கும் தெரியாது. ஆனால், பிரச்னையாக மாறிய பின் அதைப் பொதுவெளியில் அம்பலப்படுத்துவதன் மூலம் என்ன கிடைக்க போகிறது?

இப்படி ஆண்களும் பெண்களும் தங்களுக்குள்ளாக பேசிக்கொண்ட அந்தரங்க உரையாடல்கள்களை வெளியிடுவது ஒருவித நோய்க்கூறுதான். ஒரு பெண் தன்னிடம் இப்படி இப்படி எல்லாம் பேசினாள் என்பதன் மூலமும், ஓர் ஆண் இவ்வாறெல்லாம் பேசினான் என்பதன் மூலமும் மற்றவர்களுக்கு என்ன சொல்ல வருகிறார்கள் என்று தெரியவில்லை. இதைவிட அத்தகைய ஸ்க்ரீன் ஷாட் அல்லது வீடியோ வெளியாகும் போதெல்லாம் புள்ளி வைத்து அடுத்தவர் அந்தரங்கத்தைத் தெரிந்துகொள்ளக் காட்டும் ஆர்வமெல்லாம் பார்த்தால் நாம் எவ்வளவு நோய்க்கூறுகளைக் கொண்டிருக்கிறோம் என்பது தெரிகிறது.

நாம் என்ன விஷயங்களைப் பகிர்ந்தாலும், நம்பிக்கையானவர்களிடம் சுயநினைவோடுதான் கூறுகிறோமா என்பதை நமக்குள்ளாக உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். சில நேரம் ஏதோ ஒரு நெகிழ்ச்சியான தருணத்தில், உணர்வு வயப்பட்ட நிலையில் நெருக்கமாக உரையாடி இருக்கலாம், அல்லது பொதுவில் பகிர முடியாத சொந்த விஷயங்களைப் பகிர்ந்து இருக்கலாம். பின்னர் அந்த நபருடன் பிணக்கு ஏற்பட்டு பிரிந்து இருக்கலாம், அல்லது அந்த நபரின் செயல் ஏதோ ஒன்றின் காரணமாக அவரைப் பிடிக்காமல்கூடப் போகலாம். அப்படிப்பட்ட நேரத்தில் நேர்மையாக அவர்களிடம் கூறி விலகிவிடுவது நல்லது. விலகிய பின் அவர்களைப் பற்றிப் பேசாமலும், அவர்களைப் பின்தொடராமலும் இருப்பது அதைவிட நல்லது.

உறவில் நட்பில் இருந்து விலகிய பின்னும் தொந்தரவு செய்தால், பணம் கேட்டோ அல்லது அந்தரங்க உரையாடல்களை அம்பலமாக்குவேன் என்றோ ப்ளாக்மெயில் செய்தால் முதலில் பதட்டப்படாமல் அதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து யோசியுங்கள். உங்கள் நெருங்கிய வேறு நண்பர்களிடம், அல்லது நீங்கள் நம்பகமானவர்கள் என நினைப்பவர்களிடம் உதவி கேளுங்கள். அவர்கள் உதவியுடன் முடிந்தால் சைபர் க்ரைமில் புகார் கொடுங்கள். வெளியே தெரியாமல் சைபர் க்ரைம் உதவியால் பல பிரச்னைகள் தீர்க்கப்பட்டு, பெண்களுக்கு நிம்மதியைப் பெற்று தந்திருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக நாம் ஒன்றும் புத்தரோ சீதையோ இல்லை. மனிதர்கள் அனைவரும் ஏதோ ஒரு நேரம் இடறத்தான் செய்வார்கள். இதில் அவமானப்பட எதுவும் இல்லை. எல்லாருக்கும் எல்லாமும் மிகச் சரியாக நடக்காது. தவறாகவே இருந்தாலும், ஏமாந்தே போயிருந்தாலும் அது மன்னிக்க முடியாத குற்றம் இல்லை. அதனால் முதலில் உங்களை நீங்களே மன்னியுங்கள், பின் தைரியமாகப் பிரச்னையை எதிர்கொள்ளுங்கள்.

நீங்கள் நம்பிக்கையானவர் என்று நினைத்து ஒருவரிடம் பகிர்ந்த தனிப்பட்ட விஷயம் எது வெளியானாலும், ஆம் உன் மீதான நம்பிக்கையில்தான் பகிர்ந்தேன். அதைக் கொண்டு என்னை அசிங்கப்படுத்த முயல்பவர்கள்தாம் வெட்கப்பட வேண்டுமே தவிர, நான் வெட்கப்பட ஏதும் இல்லை. நான் செய்த தவறு ஒருவர் மேல் நம்பிக்கை வைத்தது மட்டுமே. இந்தச் சம்பவம் மூலம் தன்னை வெளிப்படுத்தி, தான் யார் என்பதை அவர் உலகுக்கு அறிமுகப்படுத்திக்கொள்கிறார், நானும் அதன் மூலம் பாடம் கற்றுக்கொண்டேன் என உங்கள் கவனத்தை வேறு பக்கம் திருப்புங்கள். புள்ளி வைத்த நாலு பேராகட்டும், புத்திமதி கூறும் நாலு பேர் ஆகட்டும் அவர்களால் உங்களுக்கு ஆகப்போவது ஒன்றும் இல்லை. உங்கள் ஆற்றலை ஆரோக்கியமாக மடைமாற்ற கிடைத்த சந்தர்ப்பமாக நினைத்து இதில் இருந்து மீண்டு புது வாழ்க்கையத் தொடங்குங்கள்.

ஆண், பெண் பரஸ்பர நட்பு, உறவு துரோகம் ஆகியவற்றில் சிக்கிக்கொள்பவர்களுக்குதான் மேலே கூறியவை. இதைத் தவிர தனது அதிகாரத்தின் மூலம் பெண்ணை உளவியலாக, உடல் ரீதியாகச் சிதைக்க முயலுபவர்கள் வேறு வகை. Me Too வின் கீழ் வருவார்கள். அதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

(தொடரும்)

படைப்பாளர்:

கமலி பன்னீர்செல்வம். எழுத்தாளர். ‘கேட் சோபின் சிறுகதைகள்’ என்ற நூல் இவர் மொழிபெயர்ப்பில் வெளிவந்து, பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

Exit mobile version