அனிதா வெற்றுப் பார்வையுடன் விடியற்காலை வானத்தை வெறித்துக் கொண்டிருந்தாள். நிறமற்ற அந்த வானம், அவளது வாழ்க்கையைப் போலவே தோன்றியது.
ஒரு வருடத்திற்கு முன்பு வரை, அவள் பள்ளியின் பெருமை. பன்னிரண்டாம் வகுப்பில் மாவட்ட முதல் மாணவியாக வேண்டும் என்கிற கனவைக் கண்களில் சுமந்து நடந்த பெண்.
வீட்டின் வறுமை அவளைப் பயமுறுத்தவில்லை.
“இன்னும் கொஞ்ச நாள்தான்… படிச்சுட்டா வாழ்க்கையே மாறிடும்…” என்று தன்னைத் தானே தைரியப்படுத்திக் கொண்டவள்.
இரவு நேரத்தைக் கடன் வாங்கிப் படித்தாள்.
சோர்வை மறந்து உழைத்தாள்.
கனவின் மீது நம்பிக்கை வைத்தாள்.
ஆனால் வாழ்க்கை எல்லா நேரமும் உழைப்புக்கு உடனே பரிசு தருவதில்லை. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும், அரசு மருத்துவக் கல்லூரிக்குப் போதுமான மதிப்பெண் கிடைக்கவில்லை. தனியார் கல்லூரியின் கட்டணத்தை நினைத்தாலே மூச்சு முட்டியது. முடிவுகள் வெளியான நாளில் அவள் கதறி அழுதாள்.
பல ஆண்டுகளாகக் கட்டியிருந்த கனவு, ஒரே நாளில் கைகளில் இருந்து நழுவிப் போனது போல இருந்தது. ஆனால் மறுநாள் காலை எதுவும் நடக்காதது போல அம்மாவுடன் தோட்ட வேலைக்குக் புறபட்டாள்.
“பரவாயில்லை விடு…” “அடுத்து ஏதாவது பார்ப்போம்…” “அதுக்காக வாழ்க்கை நின்னுடாது…” என்று அனைவரும் சொன்னார்கள். ஆனால் அவளது மனம் மட்டும் அங்கேயே நின்று போயிருந்தது.
ஒருநாள் வீட்டில் தனியாக இருந்தபோது, பள்ளியில் பயன்படுத்திய உயிரியல் புத்தகத்தை எடுத்தாள். முதல் பக்கத்தைத் திறந்தாள். அதில் பெரிய எழுத்துகளில் எழுதியிருந்தது:
Dr. Anita M.B.B.S.
சில நொடிகள் அந்த எழுத்துகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பிறகு புத்தகத்தை வேகமாக மூடி அலமாரிக்குள் திணித்தாள்.
யாராவது ’மருத்துவம்’ என்கிற வார்த்தையைச் சொன்னாலே, புதைத்து வைத்திருந்த கனவின் சிதறல்கள் மீண்டும் மனதில் குத்துவது போல இருந்தது.
பள்ளித் தோழிகள் கல்லூரி வாழ்க்கையின் ஒளிப்படங்களை வாட்ஸ்அப்பில் பகிர்ந்தார்கள்.
அவள் ஒவ்வொன்றாக எல்லா ஸ்டேட்டஸ்களையும் மியூட் செய்தாள்.
அம்மா அதைக் கவனித்தார். ஆனால் ஏழை வீட்டுத் தாய்மார்களுக்கு தெரியும்… சில வலிகளைச் சரிசெய்ய முடியாது. அருகில் உட்கார்ந்து தாங்கிக் கொள்ள மட்டும் தான் முடியும் என்று.
அன்று மாலை பக்கத்து வீட்டுப் பெண் வந்து, “அனிதா… ருக்மணி டீச்சர் உன்னை வரச் சொன்னாங்க…” என்றாள்.
எங்கேயும் போக மனமில்லை. யாரிடமும் பேச விருப்பமில்லை. எதையும் பார்க்கவும் வாழவும் மனமில்லை.
ஆனால் அழைத்தது ருக்மணி டீச்சர்.
அவள் வாழ்க்கையில் மதிப்பு வைத்திருக்கும் சில மனிதர்களில் ஒருவர்.
மெதுவாகப் புறப்பட்டாள்.
“வா அனிதா…” என்று அன்புடன் வரவேற்றார் ருக்மணி.
“எப்படி இருக்க?”
“நல்லா இருக்கேன் டீச்சர்…”
உதடுகள் மட்டும் சொன்ன பதில்.
கண்கள் வேறு கதையைச் சொன்னது.
சில நிமிடங்கள் சாதாரணமாகப் பேசிவிட்டு, ருக்மணி கேட்டார்.
“அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்க?”
அந்த ஒரு கேள்வியே போதும்.
இதுவரை அடக்கி வைத்திருந்த ஏமாற்றம் தொண்டையில் வந்து நின்றது.
“நான் முடிஞ்ச அளவுக்குப் படிச்சேன் டீச்சர்… ஆனா போதல…”
அதற்கு மேல் பேச முடியவில்லை.
கண்ணீர் முன்னே பேச ஆரம்பித்துவிட்டது.
ருக்மணி உடனே அறிவுரை சொல்லவில்லை.
அவளை அமைதியாக அழவிட்டார்.
சில வலிகளுக்கு வார்த்தைகள் தேவையில்லை.
ஒரு பாதுகாப்பான இடம் போதும்.
அழுகை மெதுவாக அடங்கிய பிறகு, மேசையிலிருந்த ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் கொடுத்தார்.
“அன்னைக்கு ஆட்டோகிராப் கொடுத்தியே… அதைத் திருப்பிக் கொடுக்கத்தான் கூப்பிட்டேன்.”
அனிதா திறந்தாள்.
அதில் ருக்மணி எழுதியிருந்தார்:
“உன்னால் இவ்வளவு தூரம் வர முடிந்தால்… இன்னும் கொஞ்சம் தூரமும் போக முடியும். உன் மேல நம்பிக்கை வை.”
அந்த வரிகளைப் பார்த்தவுடன் மீண்டும் கண்கள் கலங்கின.
“டீச்சர்… நான் ரொம்ப களைச்சுப் போயிட்டேன்…”
ருக்மணி அவளை அருகே இழுத்துக் கொண்டார்.
“தோல்வி வந்தா உடைஞ்சு போவது தப்பே இல்ல அனிதா.
ஆனா உடைஞ்சு போனதை மறைக்க முயற்சி பண்ணாத.
ஒண்ணுமே ஆகாத மாதிரி நடிக்கிறது வலிமை இல்ல…
நமக்கு நாமே செய்யுற அநியாயம்.”
அனிதா அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள்.
“வாழ்க்கை எல்லாருக்கும் ஒரு நேரம் இருட்டாகும். அதுக்காக வெளிச்சமே இனி வராதுன்னு அர்த்தம் இல்ல. நீ சின்ன தீபம் ஏத்தணும். அவ்வளவுதான்.”
“ஆனா, நான் என்ன பண்ண முடியும் டீச்சர்? மார்க் வரல… வீட்டில வசதியும் இல்ல…”
“அடுத்த வருஷம் மறுபடியும் முயற்சி பண்ணு.”
அனிதா தலை குனிந்தாள்.
“எனக்குப் பயமா இருக்கு டீச்சர்…”
“பயமா இருக்கும். அழுகை வரும். கோபம்கூட வரும். ஆனா தேங்கிடாத. நின்னுடாத, அவ்வளவுதான்.”
அந்த வார்த்தைகள் அனிதாவின் மனதில் ஆழமாகப் புதைந்தன.
அடுத்த நாள் புத்தகத்தைத் திறந்தாள்.
ஐந்து நிமிடம்கூடப் படிக்க முடியவில்லை.
பழைய தோல்வி நினைவுகள் வந்து மூச்சை அடைத்தன.
சில நாட்கள் படித்தாள்.
சில நாட்கள் அழுதாள்.
சில நாட்கள் ஒன்றுமே செய்யாமல் படுத்திருந்தாள்.
ஆனால் இந்த முறை ஒரு வித்தியாசம் இருந்தது.
வலிக்காக அவள் தன்னை வெறுக்கவில்லை.
பலவீனமாக இருப்பதற்காக தன்னைத் தண்டிக்கவில்லை.
“இன்னும் கொஞ்ச தூரம்…” என்று மெதுவாக தன்னைத் தானே தட்டி எழுப்பிக் கொண்டாள்.
இரண்டாவது முயற்சியிலும் அவளுக்குத் தேவையான மதிப்பெண் கிடைக்கவில்லை.
அன்று இரவு மீண்டும் உடைந்து அழுதாள். ஆனால் இந்த முறை மறுநாள் புத்தகத்தை மீண்டும் திறந்தாள்.
ஏனெனில் தோல்வி அவளை நிறுத்தவில்லை.
சிறிது நேரம் மட்டும் தாமதப்படுத்தியது.
மூன்றாவது முயற்சியில் வெற்றி பெற்றாள்.
இன்று அனிதா அரசாங்க மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறாள்.
ஒருகாலத்தில் கண்ணீரால் மங்கியிருந்த கனவு, இன்று அவளது நிஜமாகி விட்டது.
தோல்வி வந்தால் உடைந்து போவது இயற்கை. ஆனால் நம்முடைய வலியை மறைத்து வைத்து ’நான் ஸ்ட்ராங்’ என்று நடிப்பதுதான் பலர் செய்யும் மிகப்பெரிய தவறு.
அடக்கப்பட்ட உணர்வுகள் உள்ளுக்குள் இருளை உருவாக்கும்.
கலங்கிய நீர் தெளிவில்லாமல் இருப்பது போல, கலங்கிய மனமும் சரியான முடிவுகளை எடுக்க முடியாது.
அதனால் பேசுங்கள் தோழிகளே.
அழ வேண்டும் என்றால் அழுங்கள்.
நம்பிக்கையான மனிதர்களிடம் உங்கள் மனதை பகிர்ந்து கொள்ளுங்கள்.
மனம் தெளிந்த பிறகே ’அடுத்து என்ன?’ என்ற கேள்விக்குப் பதில் கிடைக்கும்.
சில நேரங்களில் நம்மைத் தூக்கிவிட யாரும் அருகில் இருக்க மாட்டார்கள். நாம்தான் நம்மைத் தாங்கிப் பிடித்துத் தூக்கி விட வேண்டும். அதற்குத் தெளிவான மனம் தேவை.
அதுவே படைக்கும்…
அதுவே உடைக்கும்…
மனம்தான் ஒரு குழந்தை!
உடைக்கும் மனதிற்கு…
மீண்டும் படைக்கவும் தெரியும்.
நம்புங்கள் தோழிகளே!
(தொடரும்)
படைப்பாளர்:
யாமினி
வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.


