Site icon Her Stories

தாய்வழி வந்த தங்கங்கள்

ஓவியம்: சித்ரா ரங்கராஜன்

இந்தியாவிலும் உலகிலும் உள்ள மிகச் சில தாய்வழி சமூகங்களில் மேகாலயாவின் காசி பழங்குடி ( Khasi Tribe of Meghalaya) ஒன்று. பதிவு செய்யப்பட்ட வரலாறு இல்லாத காரணத்தினால் கடந்த காலத்தில் காசிகள் இந்த மலைகளில் எப்படிக் குடியேறினார்கள் என்பது தெளிவாகப் புலப்படவில்லை. ஆனால், மானுடவியலாளர்கள் இந்தக் காசி பழங்குடியினருக்கும் சீனா, மியான்மர், லாவோஸ், கம்போடியா போன்ற தெற்காசிய மக்களுக்கும் உள்ள ஒற்றுமையைக் கண்டறிந்தனர். 

காசி பழங்குடியினர் மிகத் துடிப்பானவர்கள். காசி பழங்குடிப் பெண்கள் அவர்கள் குலத்தின் பாதுகாவலராக விளங்குகிறார்கள். குடும்பத்தின்  இளைய மகளாக இருந்தால் அவள் வீட்டில் கணவன் வந்து தங்குகிறான். ஆணாதிக்கம் செலுத்தும் உலகில், இந்தத் தனித்துவமான தாய்வழி அமைப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. 

காசி பழங்குடியினர்களின் எண்ணிக்கை 14.1 லட்சம். பெண்களின் விகிதம் ஆண்களைவிட அதிகமாக இருக்கும் அரிதான பழங்குடி காசிகளுடையது. 

காசி பழங்குடிப் பெண்கள், டாக்டர் லிங்டோவின் கருத்தின்படி போர்க்குணம் மிகுந்தவர்களாக, இனத்தைக் காக்க ஆயுதம் ஏந்தியவர்களாக இருந்திருக்கிறார்கள். காசி பழங்குடி மக்களில் பெண்தான் முன்னோடி, பாதுகாப்பவள் என்கிற கருத்து வேரூன்றியுள்ளது. விதைகளைத் தழுவி, அவற்றை முளைக்கச் செய்து, பரவச் செய்யும் மண் போன்று   முக்கியமானவள் பெண் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

எப்படி மண்ணின் பணி  தலைமுறை தலைமுறையாக வாழ்க்கையைத் தொடர்ந்து ஆதரித்து வருகிறதோ அதைப் போல் ஆண்களைவிட பெண்களே தங்கள் இனத்தை முன்னெடுத்துச் செல்லும் உரிமையைப் பெற வேண்டும் என்று முடிவெடுத்தனர் காசி பழங்குடியின் முன்னோர்கள். 

"பூமியில் இருந்துதான் நீராவிகள் பிறந்து மேகங்களாக எழுந்து மழையாக விழுகின்றன, அவை மீண்டும் பூமிக்கு வருகின்றன. எல்லா விலங்குகளின் குட்டிகளும் பசி அல்லது ஆபத்தில் இருக்கும்போது அழுது, தங்கள் தாய்களிடமே  ஓடுகின்றன. எனவே, விதை எங்கிருந்து வந்தாலும், குழந்தைகள் அவளுக்கு உரிமையானவர்கள். குழந்தைகள் அவளுடைய பெயர், மரபு, குலத்தை மரபுரிமையாகப் பெறுவது அவளது உரிமை. அவளுக்கு நாம் அளிக்கும் பெருமை" என்பது காசி பழங்குடி மக்களின் உயரிய கோட்பாடு. 

காசி பழங்குடியினர் ஆழமான நம்பிக்கைகளால் நிறைந்தவர்கள். அவர்கள் இயற்கையை உருவாக்கிய படைப்பாளியை நம்புகிறார்கள். இயற்கையின் வடிவங்களை அவதானிப்பதன் மூலம் அவர்கள் ஒரு பெண்ணுக்கும் பூமிக்கும் இடையே உள்ள ஒற்றுமையைக் கண்டறிந்து, அவளுக்கு உரிய கண்ணியத்தை வழங்குவதே சிறந்தது என்கிற தீவிரமான நம்பிக்கை உடையவர்கள். 
 
காசி பழங்குடி கலாச்சாரத்தில் 'கா லாங்கிந்தே' என்கிற பெண்ணால்தான் பெண்களுக்கு உயர்ந்த மரியாதை உருவாகியிருக்கிறது. காசி பழங்குடி வழக்கத்தில், இளைய மகள் பெற்றோரின் சொத்து அல்லது மரபுக்கு வாரிசு. அவளுடைய வீடு குலத்தின் சடங்கு வீடாகி, மதச் சடங்குகள் உட்பட அனைத்து விழாக்களும் அங்கேயே நடத்தப்படுகின்றன. 

காசி சமூகத்தின் கட்டமைப்பிற்கு அடித்தளமே பெண்கள். குடும்பம், நம்பிக்கை ஆகியவை சமூகத்தை ஒன்றாக இணைக்கும் இரண்டு தூண்கள். இறந்த பிறகு குழந்தைகளின் எலும்புகள் சேகரிக்கப்பட்டு மூதாதையர் பெண்களின் கலசத்தில் வைக்கப்படுகின்றன. 

அவள் சொத்தின் முழுப் பலனையும் வாரிசாகப் பெற்று அனுபவித்தாலும், அவள் உரிமையாளர் அல்ல. மாறாக, அந்தக் குலத்தின் பாரம்பரியத்தின் அறங்காவலர். குலத்தின் காரியங்களைக் கவனிக்கும் முக்கியப் பொறுப்பு அவளுக்கு இருக்கிறது.

பாரம்பரிய காசி பழங்குடி பெண்ணின் வாழ்க்கை இரண்டு முக்கிய வளாகங்களைச் சுற்றி வருகிறது: குடும்பம் மற்றும் குலம். குலத்தின் செழிப்பு ஒரு துடிப்பான சமூகமாக ஒன்றிணைகிறது.

காசி மக்கள் தொகையில் நான்கில் மூன்று பங்கு மக்கள் பண்ணை அமைப்புகளில் வாழ்கின்றனர். பெரும்பாலானோர் விவசாயிகள். எத்தனை ஆண் விவசாயிகள் இருக்கிறார்களோ, அதே அளவு பெண் விவசாயிகளும் இருக்கிறார்கள். பெண்களின் வாழ்க்கை வீடுகளில் மட்டுமல்ல, அவர்களின் வயல்களை உயிருடன் வைத்திருப்பதில் சுழல்கிறது.
காசிப் பெண்கள் பண்ணை வேலைகளில் ஈடுபடுவதற்குப் பின்னால் மறைந்திருக்கும் உந்து சக்தியானது, தங்கள் குடும்பத்தின், குறிப்பாகக் குழந்தைகளின் நல்வாழ்வைக் காண வேண்டும் என்ற உள்ளார்ந்த விருப்பத்தில் இருந்து உருவாகிறது.

பெண்கள், பொதுவாக தாவரங்களுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளனர். எதிர்காலத்திற்கான விதைகளைச் சேகரிக்கின்றனர். மண்ணைப் பற்றிய தீவிர உணர்திறன், புரிதல் அவர்களிடம் உள்ளது. 

வீட்டிற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டாலும், அவர்கள் களத்தில் ஆண்களுக்கு இணையாக இருக்கிறார்கள்.
காசிப் பெண்கள் அமைதியானவர்கள் ஆனால், முன்னேற்ற வாய்ப்புகளைத் தேடிச் செல்லும்போது ஆக்ரோஷமாக இறங்குகிறார்கள். பெண் விவசாயிகள் முன்னோக்கிச் சென்று, நிலையான சந்தை இல்லாமல் இருந்த கிராமத்தின் முக்கியப் பயிரான மஞ்சள் வியாபாரத்தை இரண்டே ஆண்டுகளில் தூக்கி நிறுத்தினார்கள்.
 
தனது கிராமத்தில் உள்ள பெண் விவசாயிகளைப் பற்றி அந்தக் குழுவின் பெண் தலைவர், "ஆண்களால் என்ன செய்ய முடியுமோ அதைப் பெண்களும் செய்கிறார்கள், இன்னும் சிறப்பாக! அவர்கள்  தங்கள் உரிமைகளை உறுதிப்படுத்தி, தங்கள் பொறுப்புகளைத் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள். சில நேரம் கூடுதல் வருமானத்திற்காக வேறு இடங்களில் வேலை செய்கிறோம். பெரும்பாலான பெண்களுக்கு உழைப்பு விடியற்காலையில் தொடங்கி  சூரிய அஸ்தமனத்திற்கு அப்பால் நீண்டுள்ளது. பெண்களின் பாரம்பரியக் களம் வீடுதான். இருப்பினும் வயல் ஆண், பெண் இருவருக்கும் சொந்தமானது!" என்கிறார்.

பண்ணை வேலைகளில் நெல் வயல்களில் ஈரமான, நீர் நிறைந்த மண்ணை வெட்டுவது போன்ற சிரமமான வேலைகள் தவிர, ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் எல்லா வேலைகளையும் செய்கிறார்கள். 

இவ்வளவு நாகரிகப் பாலின சமத்துவத்தை, சமுதாயத்தை காசிகள் எப்படி உருவாக்கினார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது. அனைவரும் பின்பற்றும் வகையில் பிரமிக்க வைக்கும் உலகளாவிய நடத்தை விதிமுறைகளை வடிவமைத்த முன்னோர்களுக்கு நன்றி கூறுகிறார்கள். 

காசி பெண்கள் தற்போது கிராம விவகாரங்களிலும்  ஈடுபடுகிறார்கள். சபாய் கிராமம் ஒழுக்கத்தில்  ஒரு முன்மாதிரி கிராமமாக மாறியுள்ளது. உதாரணமாக, இரவு எட்டு  மணிக்கு மேல் இளைஞர்கள் வேலை தவிர்த்து தெருக்களில் அலைய மாட்டார்கள். குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடுமையான  நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குழந்தைகள் வீட்டு வேலைகள், விவசாய வேலைகளை மதிக்கக் கற்றுக்கொடுக்கிறார்கள்.  

காசி பெண்களின் தீர்க்கமான சிந்தனை, சமூக மட்டங்களிலும் அவர்கள் தங்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்திலும் அவர்களது குடும்பங்களைப் பராமரிக்கும் விதத்திலும் பிரதிபலிக்கிறது. பெண்கள்  குடும்பம் மற்றும் பரம்பரையின் எஜமானியாக இருக்கலாம். ஆனால், அரசியல் மற்றும் அரச தொழில் விஷயங்களில் காசி ஆண்கள் பிரத்யேக அதிகாரத்தை வைத்திருக்கிறார்கள். உள்ளாட்சி மன்றங்களில் பெண்கள் வாக்களிக்கும் உரிமையைத்  தீர்ப்பாக அளித்த மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு பெண்கள் நன்றி கூறுகிறார்கள். குலத்தைச் சார்ந்த முக்கிய முடிவுகளில்கூட, உதாரணமாக திருமணங்களில் பெண் தரப்பில் இருந்து மூத்த சகோதரர் அல்லது மாமாதான் அந்தப் பெண் யாரை மணம் செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கிறார்.

காசி சமூகப் பாரம்பரியம் இரண்டாவது திருத்த மசோதாவில் தெரிவித்தது என்னவென்றால், "எந்த ஒரு காசிப் பெண்ணும் காசி அல்லாத ஒருவரைத் திருமணம் செய்யும்போது, அவளும் அதே போல் அத்தகைய திருமணங்களில் இருந்து பிறந்த அவளது சந்ததியினரும் காசி சமூகம் அல்லாதவராகக் கருதப்படுவார்கள். அவர் காசி அந்தஸ்தை இழக்க நேரிடும் மற்றும் காசி பழங்குடியின் உறுப்பினராக இருக்கும் அனைத்துச் சலுகைகள் மற்றும் நன்மைகளையும் இழக்க வேண்டியிருக்கும்" என்று உத்தரவிட்டுள்ளது. இதற்கு காசி பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். 

காசி பழங்குடி போன்ற பெண்களை மையமாகக் கொண்ட சமூகத்திலும் பெண்களின் முழு விடுதலைக்காகப் போராட இன்னும் நிறையவே  இருக்கிறது.
(தொடரும்)

படைப்பாளர்:


சித்ரா ரங்கராஜன்

கட்டிடக் கலை மற்றும் உட்புற வடிவமைப்பாளராக சென்னையில் தன் கணவருடன் நிறுவனத்தை நடத்திவருகிறார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதுவதை ஆர்வமாகக் கொண்டுள்ளவர். புத்தகங்களுக்குப் படங்கள் வரைவதிலும் நாட்டம் கொண்டவர். பெண்ணியச் சிந்தனையில் மிகுந்த ஆர்வமுள்ளவர். ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஓர் எழுத்தாளருக்கு முக்கியப் பங்குண்டு என்பது இவருடைய வலுவான கருத்து.
Exit mobile version