உலகம் தோன்றிய ஆதி நாட்களில் திருமண உறவுகள் தோன்றியிருக்கவில்லை. கட்டற்ற பாலுறவுகளே வழக்கத்தில் இருந்தன. தாய்வழிச் சமூகமாக இருந்ததால் பெண்ணின் தலைமையே முதன்மையாக இருந்தது. தனக்குரிய ஆணைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்ணுக்கே இருந்தது. அதனால் தன் வலிமையை நிரூபித்து புஜபல பராக்கிரமங்களைக் காட்டி, அவள் உண்ணவும் பருகவும் கொண்டுவந்து தந்து, வேட்டையாடிய விலங்குகளை அவளுக்குப் படைத்து அவளைக் கவர ஆண் ஜெகஜ்ஜால வித்தைகள் காட்ட வேண்டியிருந்தது.
அன்றிரவை யாருடன் கழிப்பது என்கிற முடிவைப் பெண்ணே எடுத்தாள். தனது இனம் பலம் மிகுந்ததாக விருத்தியாக வேண்டும் என்று விரும்பினாள். அதனால் பலசாலி ஆண்களையே தேர்ந்தெடுத்தாள். அது பலவீனமான ஆண்களுக்கு கலக்கத்தைக் கொடுத்தது.
ஆண் உடல் வலு மிகுந்தவனாகையால் காட்டு விலங்குகளை வேட்டையாடினான். சிறிது காலம் கழித்து மக்கள் தொகை பெருகி உணவுப் பற்றாக்குறை ஏற்பட்ட போது விவசாயம் கண்டறியப்பட்டது. அந்த விவசாயத்தை ஆதி நாட்களில் பெண்ணே கண்டுபிடித்தாள். உணவுத் தேவையும் நிவர்த்தி செய்யப்பட்டது. அதற்குள் சமுதாயம் மேம்பட்டு நிலமும், அதில் விவசாயம் செய்யும் பெண்களும் ஆணின் உடமையாகக் கருதப்பட்டனர். அதை நிரூபணம் செய்யும் பொருட்டு திருமணம் தோன்றியிருக்கிறது. அதாவது நாடோடி வாழ்க்கையிலிருந்து குடியேறியாக வாழத் தொடங்கும் போது திருமணங்கள் உண்டாக்கப்பட்டிருக்கலாம்.
ஆண் கருவைக் கொடுப்பவனாகவும், பெண் கருவைச் சுமப்பவளாகவும் ஆனபடியால் பிறக்கும் குழந்தைகள் இன்னாருடையவை என்று சுட்டவியலாமல் இருந்தன. அப்படிச் சுட்டவும் அப்போது தேவைகள் இல்லை. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக மனித நாகரீகம் மேம்படத் தொடங்கியதில் தாய்வழிச் சமூகம் திட்டமிட்டு அதாவது உடல் வலுவில்லாத பலவீனமான ஆண்களால் திட்டமிட்டு தந்தைவழிச் சமூகமாக மாற்றப்பட்டது. அப்படி மாற்றப்பட்ட பட்சத்தில் திருமணம் என்கிற ஒன்றைக் கொண்டுவந்து அந்தப் பெண் ஒருவனுக்கு மட்டும் உடைமையானவள் என்று சமூகத்துக்கு அறிவிக்கப்பட்டாள். அவள் வேறு ஆண்களுடன் உறவு கொள்ளக் கூடாது என்று வற்புறுத்தப்பட்டாள். அதனால் வலுவற்ற ஆண்களுக்கும் குழந்தை பெற்றுக் கொள்ள வழிவகையை உண்டாக்கிக் கொள்ள இந்தத் திருப்பூட்டு (திருமணம்) பயன்பட்டது. அது காலப்போக்கில் பெண்களுக்கு வாய்ப்பூட்டு போடவே முயற்சித்தது.
ஓர் ஆணின் குழந்தைகள் உண்மையில் அவருடைய உயிரியல் வாரிசுகள்தாம் என்று உலகத்துக்கு அறிவித்து அவர்களின் சொத்துகள் மற்றும் இன்ன பிறவற்றில் சட்டபூர்வமான உரிமைகள் பெற வழி செய்தது. “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப…” என்கிறது தொல்காப்பியம். அதாவது பொய்களும் குற்றங்களும் இல்லாத வரையில் திருமணம் என்கிற ஒன்றின் தேவை ஏற்படவில்லை என்பதுதான் உண்மை. (இங்கு ஐயர் என்பது பார்ப்பனர்கள் அல்லர். ஐ என்றால் தலைவன் என்று பொருள் கொள்ள வேண்டும்.)
திருமணம் என்பது இன்று நேற்று தோன்றியது அல்ல. கிட்டத்தட்ட 4,350 ஆண்டுகளுக்கு முன்பே திருமணங்கள் நடந்திருக்கின்றன. கி.மு. 2,350இல் மெசபடோமியாவில் ஒரு பெண்ணும் ஆணும் திருமணம் முடித்துவிட்டு, அதைப் பதிவும் செய்து சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. பண்டைய திருமணங்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே நடந்திருக்கின்றன. கிரேக்கர்களின் திருமணத்தில் பெண்ணின் தந்தை அந்த மணமகனுக்குச் சிறந்த வாரிசுகளை உருவாக்கித் தர மகளைக் குறிப்பிட்டத் தொகையைப் பெற்றுக் கொண்டு மணமுடிப்பதாக ஒப்பந்தம் செய்து கொள்வார். ஒப்பந்தம் செய்தபின் அவர்கள் மீறினால் கடுமையாகத் தண்டிக்கப் படுவார்கள். மெசபடோமியாவில் மணப்பெண் சந்தை நடத்தப்பட்டு அங்கு தன்னை நன்கு அலங்கரித்து, அழகுபடுத்திக் கொண்டு இருக்கும் பெண்களை விலைபேசி வாங்கி, பெண் வீட்டார் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் திருமணம் நடத்தப்பட்டிருக்கிறது. சிந்து சமவெளி நாகரீகம் கொஞ்சம் மேம்பட்டதாக இருந்திருக்கிறது. அதாவது பெண்கள் தனக்குப் பிடித்த ஆணைத் தேர்ந்தெடுத்து மணம் செய்து கொண்டபின் அந்த ஆண்தான் பெண்ணின் வீட்டிற்கு வரவேண்டும். இல்லையென்றால் பெண் வீட்டுக்கு அருகில் குடியேறி வசிக்கலாம். அல்லது இருவரும் அவரவர் வீடுகளில் இருந்து கொண்டு கலவி செய்யும் நேரத்தில் மட்டும் சந்தித்துக் கொள்ளலாம் என்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
பழந்தமிழர் வாழ்வில் கடிமணம் என்கிற ஒன்று வழக்கத்திலேயே இல்லை. களவு மணம், கற்பு மணம் என்கிற இரண்டையே இலக்கியங்கள் கூறுகின்றன. இருவர் மனமொத்து மூன்றாம்பேர் அறியாமல் ஒன்று கலப்பது களவு மணமென்றும், சமூகத்தில் பலர் அறிய பெற்றோரே ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் செய்து வைப்பது கற்பு மணமென்றும் சொல்லப்பட்டிருக்கிறது. தாலி கட்டுதல் என்பது தமிழர் திருமணங்களில் இல்லை. பூக்களும் நெல்லும் தூவி வாழ்த்துச் சொன்னதும் திருமணம் நிறைவுற்றிருக்கிறது. ஆரியர் வருகைக்குப் பின்பே தாலி, நெருப்பை வலம் வருவது, இதர சடங்குகள் என்று ஒவ்வொன்றாக வந்திருக்கும் என்று கருத வேண்டியிருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்பது ஒரு சமூகப் பழக்கமாக மாறி விட்டது. அதாவது எல்லோரும் செய்கிறார்கள் என்பதற்காகக் கட்டாயமாக விருப்பம் இருக்கிறதோ இல்லையோ செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இந்தச் சமுதாயம் தள்ளப்பட்டிருக்கிறது. பொருளாதாரம், பாதுகாப்பு, தற்சார்பு, இனப்பெருக்கம், பாலுறவுத் தேவைகள் என்கிற காரணங்களுக்காகத் திருமணங்கள் நடத்தப்படுகின்றன. அதுவும் நம் இந்தியச் சமூகம் திருமணம் என்பது மிகப் பெரிய பொறுப்பாக, அதுவே வாழ்வின் லட்சியமாகக் கருதும் ஒரு நிலையில்தான் இருக்கிறது.
இன்றைக்குத் திருமணங்கள் எப்படி இருக்கின்றன என்று பார்த்தால் வெறும் வியாபார ஒப்பந்தங்கள்தாம் நடக்கின்றன. தனக்கு ஓர் இணையாகத் துணை வேண்டும் என்று யாரும் பார்ப்பதில்லை. நல்ல வேலை, நிறைவான சம்பளம், கணிசமான வங்கி இருப்பு, சொந்தவீடு, சமூக அந்தஸ்து, முக்கியமாக ஒரே சாதியில் இருப்பவர்கள் திருமணங்கள் சட்டென்று நிச்சயிக்கப்படுகின்றன. படிக்காத மணமகன்களுக்கு பெண்கள் அமைவது குதிரைக் கொம்பாக இருக்கிறது. ஆனாலும் தோட்டம், காடு, வயல், வரப்பு என்பதற்காக திருமணம் செய்து கொள்பவர்களும் இருக்கிறார்கள்.
ஆத்மார்த்தமான அன்பை எதிர்பார்த்து மணம் செய்து கொள்பவர்களும் இல்லாமல் இல்லை. ஆனால் அவர்கள் அத்திப் பூக்களைப் போல அதிசயமானவர்கள். எனக்குத் தெரிந்த ஓர் இளைஞருக்கு அவர் இளைஞராக இருந்த காலத்தில் இருந்து பெண் தேடுகின்றனர். இப்போது அவர் நடுத்தர வயதை எட்டிவிட்டார். இன்னும் பெண் கிடைத்தபாடில்லை. விசாரித்ததில் பெண் பார்த்ததும் பெண்ணிடம் இவர் தனியாகப் பேசியிருக்கிறார். பேச்சின் சாராம்சம் இதுதான், “எங்கப்பா, அம்மாவைப் பாத்துக்கணும்.. வீட்டு வேலைகள் எல்லாம் செய்யணும்.. வீட்டைப் பாத்துக்கணும்.. என்னையும் கவனிச்சுக்கணும்..” இதைக் கேட்டதும் தோன்றியது, “உனக்கு கல்யாணம் ஆகுறது ரொம்ப கஷ்டம் தம்பி.” கல்யாணப் பெண்கள் இதைக் கேட்டதும் ஜெர்க் ஆகி ரிஜெக்ட் பண்ணியதுதான் மிச்சம். இவரைப் பொறுத்தவரை திருமணம் என்பது இதுதான், இவ்வளவுதான் என்று புரிந்து வைத்திருக்கிறார். அது ஓர் அன்புப் பரிமாற்றம், காதல் உணர்வு என்பதெல்லாம் இல்லை.
இன்னோர் குடும்பத்தில் ஒரு பெண். மிகப் பெரிய பணக்காரக் குடும்பத்தில் பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்தார்கள். எல்லாச் செலவும் பெண் வீட்டார்தான். திருமணம் முடிந்து பெண் அங்கே போனதுமே வேலைக்காரப் பெண்ணை நிறுத்தி விட்டார்கள். அந்த வீட்டு வேலைகள் மொத்தமும் சமையல் உட்பட மணப்பெண்ணின் தலையில்தான் விழுந்தது. ஆறு மாதங்கள் தாக்குப் பிடித்தாள். அப்புறம் முடியாமல் தாய்வீடு வந்து விட்டாள். அந்தப் பையன் பெற்றோர் சொல் மட்டுமே கேட்பவனாக இருந்திருக்கிறான். இந்தப் பெண் அம்மா வீட்டுக்கு வந்த பிறகும்கூட அவன் ஒரு போன் செய்துகூட அவளிடம் பேசவில்லை. இதைத்தான் அவளால் தாங்க முடியாமல் போனது. “அவ்வளவுதானா அந்த வீட்டிலும், அவன் மனதிலும் எனக்கான இடம்?” என்று மாய்ந்து போனாள். அந்தப் பையனைப் பொறுத்தவரை அவள் ஒரு சம்பளம் இல்லாத வேலைக்காரியைத் தான் தேடியிருக்கிறான்.
இன்றைய இந்தியச் சமூகத்தில் இத்தகைய இளையோர்கள்தாம் நிறைந்து கிடக்கிறார்கள். படித்து வேலைக்குச் செல்லும் பெண் வேண்டும். அவள் பணியோடு குடும்பத்தையும் அனுசரித்துச் செல்ல வேண்டும். அவள் தன்னைச் சார்ந்தே இருக்காமல் தன்னிச்சையாகச் செயல்படும் திறன் கொண்டவளாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் தன்னை மிஞ்சாமல் அடங்கி நடந்து கொள்ள வேண்டும். எப்போதும் தன்னுடைய வேலைகளுக்கு மட்டுமே முதலிடம் கொடுக்க வேண்டும். அவள் வேலைகள் எல்லாம் இரண்டாம்பட்சம்தான். தான் போகும் இடத்திற்கு உடன் வர வேண்டும் என்றெல்லாம் ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தனிமனித வாழ்வில் திருமணம் என்பது முக்கியமான ஒன்று. ஒவ்வொருவரும் அவரவர் பொருளாதார நிலைமையை மீறியாவது செலவு செய்து திருமணம் செய்துகொள்கிறார்கள். நம் இந்தியச் சமூகங்களில் திருமணம் என்பது அந்தஸ்துக்குரிய ஒரு விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இங்கு ஒரு விஷயம் சரியாகப் புரிந்து கொள்ளப்படுவதில்லை. அதாவது திருமணம் செய்து கொள்வது மட்டுமே முக்கியம் இல்லை. அதன் பின் இருவரும் ஒற்றுமையாகச் சேர்ந்து வாழ வேண்டும் என்கிற விஷயம் அவ்வளவு முக்கியத்துவம் பெறாமல் இருக்கிறது. திருமணம் செய்து கொடுத்ததோடு கடமையும், பொறுப்பும் முடிந்து விட்டது என்று நிறையப் பெற்றோர் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிடுகின்றனர். அதன் பின்னர் ஏதாவது பிரச்சினை என்று அந்தப் பெண் வந்து நிற்கும்போது, அவளது பிரச்சினையின் ஆணிவேரைக் கண்டறிந்து தீர்க்க முயலாமல் குடும்ப கவுரவம் பாழாகிவிடும், சமூகத்தில் அந்தஸ்து போய்விடும் என்கிற அற்பக் காரணங்களால் அவளை மீண்டும் விருப்பமில்லாத திருமண வாழ்விற்குள் தள்ளுவதிலேயே குறியாக இருக்கின்றனர். இதனால் பிரச்சினைகள் இன்னும் பெரிதுதான் ஆகின்றன.
திருமணம் முடிந்த பின் தலை தீபாவளியில் ஆரம்பித்து ஒவ்வொரு சீராகப் பெண் வீட்டார் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பது இங்கு எழுதப்படாத நியதி. திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினகளில் இன்னமும் பெண்கள்தாம் பலிகடா ஆக்கப்படுகின்றனர். ஒரு திருமணம் தோல்வியில் முடியும்போது அத்துடன் வாழ்க்கையே முடிந்து போய்விட்டது என்று புலம்பி தவறான முடிவை எடுக்கும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். கோவையில் கேக்கில் விஷம் தடவி அப்பா, அம்மா, மகள் என ஒரு குடும்பமே மரணித்திருக்கிறது. அந்தப் பெண்ணுக்கு கடந்த 2023 செப்டம்பரில் திருமணம் நடந்திருக்கிறது. அப்புறம் தான் கணவனுக்கு இல்லற வாழ்வில் நாட்டமில்லை என்று அந்தப் பெண்ணுக்குத் தெரிந்திருக்கிறது. அந்தப் பையனின் பெற்றோரிடம் சொன்னதற்கு அவளுக்குச் சமாதானம் சொல்லியிருக்கிறார்கள். ஒரே மாதத்தில் மீண்டும் அம்மா வீட்டுக்கு வந்துவிட்டாள். ஒரே பெண்ணின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று வருந்தி இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
இதற்கு முக்கியக் காரணம் சமூக அழுத்தம்தான். விசாரிக்காமலே தீர்ப்பு வழங்குவதில் அதுவும் பெண்ணுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்குவதில் நம் சமூகத்தினர் சமர்த்தர்கள். அதனால் பயந்து இந்த முடிவுக்கு வந்துவிட்டார்கள். அந்தப் பையனுக்கு இப்படி ஒரு பிரச்சினை இருப்பது அவனுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். அவன் திருமணம் வேண்டாம் என்று முடிவெடுத்திருக்க வேண்டும். அதனால் முதல் குற்றவாளி அவன்தான். அப்புறம் அவன் பெற்றோருக்குத் தெரிந்திருக்கலாம். அல்லது தெரியாமலும் இருக்கலாம். தெரிந்திருந்து கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாம் சரியாகிவிடும் என்று இருந்திருக்கலாம். அல்லது அந்தப் பெண் சொன்ன பிறகு அவளது பெற்றோர் இடத்தில் இருந்து இந்தப் பிரச்சினையைப் பார்த்திருக்க வேண்டும். அதனால் அவர்களும் குற்றவாளிகளே.
அப்புறம் அவளது பெற்றோர். நடந்தது நடந்து விட்டது என்று அந்தப் பிரச்சினையைத் தீர்க்க வழி பார்க்காமல் சாவைத் தேர்ந்தெடுத்தது மிகப் பெரிய குற்றம். அடுத்து அவள். பிரச்சினையை எதிர்கொள்ளத் துணிவின்றி சாவைத் தேடியது. கடைசியில் சமூகமும் குற்றவாளிதான். ஒரு பெண்ணின் வாழ்வில் நுழைந்து தீர்ப்புச் சொல்லி சொல்லியே அவளைச் சாகடித்தது. இதில் யாரைத் தண்டிப்பது? போன உயிர் போனதுதானே? இத்தனை சிரமப்பட்டு அத்தகைய பந்தத்தில் சிக்கித் தவிக்க வேண்டுமா என்ன?. இத்தகைய விவாகங்கள் விவாதத்தில்தான் போய் முடிகின்றன. இரண்டு நாள் கூத்துக்கு கிட்டத்தட்ட இருபது வருட சேமிப்பைக் கரைப்பதோடு மேற்கொண்டு கடனையும் வாழ்நாள் முழுவதும் சுமந்து அலைபவர்கள்தாம் நம் சமூகத்தில் அதிகம்.
எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் அந்தப் பையனுக்குப் பெண் பார்த்திருக்கிறார்கள். பையனுடன் பெண் தனியாகப் பேச வேண்டும் என்றிருக்கிறாள். ஒரு காபி ஷாப்பில் சந்தித்திருக்கிறார்கள். அப்புறம் அந்தப் பெண்ணை அவன் வேண்டாம் என்று சொல்லிவிட்டான். காரணம் கேட்டபோது, “அந்தப் பொண்ணு வேலையை விட மாட்டேங்குறாக்கா.. சமைக்க மாட்டாளாம்.. சனி, ஞாயிறு வெளில போகணும்.. அப்பப்போ ஹோட்டல்ல சாப்பிடணும்னு ஏகப்பட்ட கண்டிஷன் போடுறா.. இது குடும்பத்துக்கு ஒத்து வராதுன்னு வேணாம்னுட்டேன்..” என்றான். நான் அவனை ஆழமாகப் பார்த்து, “நீ எதுவும் நிபந்தனைகள் சொல்லலியா?” என்றேன். வழக்கமான நிபந்தனைகள்தாம் அவன் சொல்லியிருக்கிறான். அப்பா, அம்மா கவனிப்பு, வீட்டு வேலை ப்ளா ப்ளா.. நான் அவனிடம் கேட்டேன், “ஏன் தம்பி இத்தனை வருடங்கள் ஆண்கள் வீட்டில் எப்படியெல்லாம் கண்டிஷன்கள் போட்டீர்கள்? பெண் வீட்டாரை எப்படி எல்லாம் கசக்கிப் பிழிந்தீர்கள்? இன்னும் பிழிகிறீர்கள்.. அந்தப் பெண் இதேபோல் உன்னிடம் சொன்னால் நீ வேலையை விட்டுவிட்டு அவளுடைய பெற்றோரைக் கவனித்துக் கொண்டு வீட்டிலேயே இருப்பாயா? இப்போது ஓரிரண்டு நிபந்தனைகளைச் சொன்னதற்கே அந்தப் பெண் குடும்பத்துக்கு ஆகாது என்கிறாயே… குடும்பம் என்றால் என்ன?” என்றேன். அவன் பேசாமல் இருந்தான்.
“வீட்டு வேலைகளை முழுவதும் பெண்ணின் தலையிலேயே கட்டாமல்.. இருவரும் பொறுப்புகளைச் சமமாகப் பகிர்ந்து கொண்டு.. பொருளாதாரச் சிக்கல்களை இருவரும் சேர்ந்து சமாளித்து.. ஒருவரை இன்னொருவர் அடக்கி வைக்க முயற்சிக்காமல்.. பரஸ்பர அன்பு செலுத்தி.. மனைவியையும் சக பெண்ணாக நடத்த வேண்டும்.. அதுதான் குடும்பம்.. அப்படியில்லாமல் உனக்கு வேலை செய்யவும், உன்னுடைய கடமைகளை வேறொருவர் தலையில் கட்டவும் ஆள் தேடினால் எப்படி அமையும்?” என்றேன். ஒன்றும் பேசாமல் எழுந்து போய் விட்டான். அவன் மட்டுமல்ல. இன்றைய இளைஞர்கள் கிட்டத்தட்ட முக்கால் சதவீதம் பேர் அடங்குவர்.
பெண் திருமணம் முடித்த பின் வேலைக்கு போகக் கூடாது என்று சொல்கிறார்கள். பிறக்கப் போகும் குழந்தையைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்கிற காரணத்தால். குழந்தை வளர்ப்பு என்கிற பெரும் பொறுப்பு எப்போதும் பெண்களிடம்தான் விடப்படுகிறது. அதில் ஆண்கள் எப்போதும் பங்கு பெறுவதே கிடையாது. லேசுபாசாக ஆண்கள் உதவினாலும் முழுக்க முழுக்க பொறுப்பெடுத்துக் கொள்வது கிடையாது. அவ்வாறின்றி எல்லாப் பொறுப்புகளிலும் இருவரும் பங்கெடுத்துக் கொள்ளுதல் வேண்டும். அப்போதுதான் கல்யாணம் என்பது கால்கட்டு என்று சொல்வது மறையும். சின்ன சின்ன பிரச்சினைகள் வரத்தான் செய்யும். அதைக் கூடுமானவரைப் பெரிதுபடுத்தாமல் இருப்பது நல்லது. முக்கியமாகத் தம்பதிகளுக்குள் எழும் பிரச்சினைகளுக்கு மூன்றாவது நபரை பஞ்சாயத்து பண்ண அழைக்கவே கூடாது. ஏனெனில் எந்தவொரு குடும்பப் பிரச்சினையும் முழுக்க முழுக்க மற்றவர்களிடம் சொல்லப்படுவதில்லை. சிலவற்றைப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். சிலவற்றைப் பேசாமலே தீர்த்துக் கொள்ள வேண்டும். குற்றம் குறைகளோடு இருப்பவர்கள்தாம் மனிதர்கள். அவர்களை அவர்களது குறை, நிறைகளோடு ஏற்றுக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். எல்லாவற்றையும் எப்போதும் சகித்துக்கொள்ள இயலாது. எந்த உறவு மூச்சு முட்ட வைக்கிறதோ அதிலிருந்து சிலகாலம் விலகி இருத்தல் நல்லது. அந்தச் சிறிய கால அவகாசம் நிறைய விஷயங்களை நமக்குப் புரிய வைக்கும். அதன்பின் அந்த உறவைத் தொடர்வதும், பிரிவை நிரந்தரமாக்குவதும் அவரவர் விருப்பம்.
அதேபோல் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் பெண்களையோ, ஆண்களையோ ஏன் திருமணம் செய்யாமல் இருக்கிறீர்கள் என்று கேட்பதும், அவர்களாகச் சொல்லாமல் நாமாக வரன் பார்க்க முயல்வதும் அநாகரீகம் என்று புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வாழ்வும், திருமணம் செய்யாமலிருக்க பல்வேறு விதமான காரணங்களும் இருக்கும். அனைத்தையும் தெரிந்து கொண்டு நாம் தீர்வு சொல்லியே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்காதீர்கள். அவரவர் வாழ்க்கை அவரவர் கையில் என்பதை ஏற்றுக் கொள்வோம். ஜாதகக் கட்டங்களை ஆராய்ந்து, பத்துப் பொருத்தமும் பக்காவாக இருந்து, நாள், நட்சத்திரம் பார்த்து, அம்மி மிதித்து, அருந்ததி நோக்கி, காசி யாத்திரை எல்லாம் போய் செய்யும் திருமணங்கள் மனப் பொருத்தம் இல்லாமல் பிரிந்து போயிருக்கின்றன. நல்ல நேரம் கூடப் பார்க்காமல் செய்து கொண்ட திருமணங்கள் மனப் பொருத்தம் அம்சமாக அமைந்து மகிழ்ச்சியாகத் தொடர்கின்றன. கூடுமானவரை விவாகங்களை விவாதமாக்காமல் இருப்பதும், அவரவர் வேலையை அவரவர் பார்ப்பதும் மன நிம்மதிக்கும், மகிழ்ச்சிக்கும் வழிவகுக்கும்.
படைப்பாளர்:
கனலி என்ற சுப்பு
‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ என்கிற நூல்களாக வெளிவந்திருக்கிறது.