Site icon Her Stories

‘நேத்து வெச்ச மீன் குழம்பு…’

                                               

மனிதர்கள் எப்போதுமே வெறுத்து ஒதுக்காத ஒரு விஷயம் உலகத்தில் உண்டென்றால் அது உணவு மட்டும்தான். போதும் என்று மறுக்கும் ஒரு விஷயமும் அதுவேதான். உணவுப் பழக்கங்கள் உலகெங்கும் ஒன்றுபோல் இருப்பதில்லை. உலகின் தட்பவெப்ப நிலை, மண்ணின் வளம், அங்கு கிடைக்கும் பொருட்கள் போன்றவற்றின் அடிப்படையில் உணவு வகைகள் அமைகின்றன. ஆதி மனிதர்கள் வேட்டையாடி பச்சை மாமிசத்தையே உண்டார்கள். பச்சைக் காய்கறிகள், பழங்கள், பருப்புகள் போன்றவை அவர்களின் உணவாக இருந்தன. எதேச்சையான காட்டுத் தீயில் வெந்த விலங்குகளும் காய்களும் அவர்களுக்கு உணவின் புது ருசியைத் திறந்து காட்டின. அதன்பின் விவசாயத்தைக் கண்டறிந்து பயிரிட்டு உண்ணத் தொடங்கினர்.

சங்க கால மக்கள் அந்தந்த நிலத்தின் தன்மைக்கேற்ற உணவு வகைகளை உண்டனர். மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நில மக்கள் தினை, காய்கள், பழங்கள், மூங்கில் அரிசி, இறைச்சி, தேன் போன்றவற்றை உணவாகக் கொண்டனர். காடும் காடு சார்ந்த இடமுமான முல்லை நில மக்கள் பால், தயிர்,நெய் ஆகியவற்றோடு வரகு அரிசி, கிழங்கு வகைகள், ஊனுணவு போன்ற பிற உணவுகளையும் உண்டனர். வயலும், வயல் சார்ந்த இடமுமான மருத நில மக்கள் செழிப்பாக இருந்ததால் சோறு, பால், இறைச்சி என்று வளமாக உண்டனர். கடலும் கடல் சார்ந்த இடமுமான நெய்தல் நிலத்தினர் முக்கிய உணவாக மீனையே உண்டனர். உப்பு, மீன் இவற்றைப் பண்டமாற்றாகக் கொண்டு இதர உணவு வகைகளையும் சாப்பிட்டனர். மணலும் மணல் சார்ந்த இடமுமான பாலை நிலத்தினரின் தொழில் வேட்டை எனபதால் வேட்டையாடிக் கிடைத்த விலங்குகளை உண்டு வந்தனர். மேலும் சங்க காலத்து மக்கள் உணவு வகைகளை வேக வைத்தல், அவித்தல், வறுத்தல், பொரித்தல், சுடுதல், வற்றலாக்கிச் சேமித்து உண்ணுதல் என்று பல விதங்களில் ரசித்து, ருசித்து உண்டதாகச் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவர்கள் முதியோர், குழந்தைகள், பிரசவித்த பெண்கள், கணவனை இழந்த பெண்கள், கணவனைப் பொருள் தேடும் நிமித்தம் பிரிந்த பெண்கள், தெய்வத்துக்குப் படைக்கும் உணவு என்று பல்வேறு வகைகளில் பிரித்தனர். இதில் மிகவும் வருத்தமான விஷயம் என்னவென்றால் உணவு வகைகளைச் சமைப்பதும், சில வகை உணவு வகைகளை விளைவிப்பதும் பெண்கள். ஆனால் அவர்களுக்கே விரும்பிய உணவுண்ணும் உரிமை மறுக்கப்பட்டது. இது இன்னும் சில குடும்பங்களில் பாரம்பரியம் என்கிற பெயரில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாகக் கணவனை இழந்த பெண்கள் தங்கள் பாலியல் உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பால், தயிர், நெய், வெங்காயம், மசாலா போன்ற உணவுகளைச் சாப்பிடாமல் தடுக்கப்படுகின்றனர்.

சமீப காலமாக ஒருவரின் உணவுத் தட்டில் இன்னொருவர் எட்டிப் பார்த்துக் கருத்து சொல்லும் போக்கு அதிகரித்து வருகிறது. சைவமா, அசைவமா என்றெல்லாம் வாதப் பிரதிவாதங்கள் தோன்றுகின்றன.  ஒருவர் என்ன சாப்பிட வேண்டும் என்று இன்னொருவரோ, அரசாங்கமோ முடிவெடுக்கக் கூடாது. என் தட்டில் என்ன இருக்க வேண்டும் என்று நான்தான் தீர்மானிக்க வேண்டும். இந்த நினைப்பு அழுத்தமாக எல்லாருக்கும் தோன்ற வேண்டும். என் தோழியின் கணவர் அசைவம் சாப்பிட மாட்டார். தோழியோ அசைவப் பிரியை. திருமணம் முடிந்த நாளிலிருந்து அவரை வலுக்கட்டாயமாக சைவத்துக்கு அவர் கணவர் மாற்றி விட்டார். ஆனால் தோழியோ வெளியில் வந்தால் அசைவத்தைத் தவிர எதையும் தொட மாட்டார்.  குறிப்பாக ‘நேத்து வெச்ச மீன் குழம்பு’ என்றால் அவருக்கு அவ்வளவு பிடிக்கும். உடன் பணிபுரியும் தோழிகளைக் கொண்டு வந்து தரச் சொல்லி ருசித்துச் சாப்பிடுவார். தனக்குப் பிடித்த உணவைக்கூட நம் இந்தியப் பெண்கள் இப்படி ஒளிந்து மறைந்துதான் சாப்பிட வேண்டியிருக்கிறது. சைவம் சாப்பிட தோழியின் கணவருக்கு இருக்கும் சுதந்திரம் பிடித்த உணவான அசைவம் சாப்பிடத் தோழிக்கு இல்லை என்பது எவ்வளவு கொடுமையான விஷயம். 

சைவ உணவுதான் நல்லது. அசைவம் சாப்பிட்டால் மிருக குணம் வந்து விடும் என்றெல்லாம் விதவிதமான உருட்டுகள். யூதர்களைக் கொன்று குவித்த ஹிட்லர் சைவ உணவுப் பிரியர் தான். இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?. மாட்டிறைச்சி, பன்றிக்கறி என்று எத்தனையோ பிரச்னைகளை மதங்கள் என்கிற பெயரில் செய்து மனிதர்கள் அடித்துக் கொண்டு கிடக்கிறார்கள். வெங்காய விலை ஏறியதைக் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவருக்கு, “நாங்கள் வெங்காயம், பூண்டு சாப்பிடுவதில்லை. எங்கள் குடும்பத்தினரும் பயன்படுத்துவதில்லை. அதனால் விலையேற்றத்தின் பாதிப்பு எங்களுக்கு இல்லை” என்று பொறுப்பாகப் (?) பதிலளித்த மத்திய அமைச்சரை நாம் மறந்திருக்க இயலாது. சாப்பாட்டில்கூட சனாதனம். உணவுப் பொருட்கள் விலையேறினால் அதன் உற்பத்தியை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்காமல், இதுபோல் பதிலளிக்கும் அரசியல்வாதிகள்தாம் இந்த நாட்டின் சாபக்கேடு. போதாக்குறைக்கு எடை குறைக்கும் ஆசையில் இருப்பவர்களை வளைத்துப் போடும் எடை குறைப்பு நிறுவனங்கள் அந்த டயட், இந்த டயட் என்று நம் சோற்றுத் தட்டில்தான் கை வைக்கின்றன. உணவுக்குப் பதில் பவுடர்களைக் கரைத்துக் குடித்து சாப்பாட்டு வகைகள் மீதே எந்நேரமும் நினைப்பெடுத்துக் கிடக்கும் மக்கள் ஏராளம். ஆரோக்கியமான வாழ்க்கைதான் நமக்கு எப்போதுமே தேவை. அதற்கு ஆரோக்கியமான உணவுகள் தேவை.

உலக உணவு தினம் வருடம் தோறும் அக்டோபர் 16 அன்று உலகம் முழுவதும் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. அனைவருக்கும் சத்தான, பாதுகாப்பான, விலை குறைவான உணவு வகைகள் கிடைக்கவும், பசி இல்லாத உலகை உருவாக்கவும் அனைவரையும் பங்கேற்க அழைக்க இந்தத் தினம் உண்டாக்கப்பட்டது. உலக உணவு தினம் 1979இல் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பால் (FAO) உருவாக்கப்பட்டது. 1945இல் FAO நிறுவப்பட்ட தேதியைக் குறிக்கும் வகையில் அக்டோபர் 16ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தத் தினம் உலகில் 80% உணவு உற்பத்தி செய்யும் சிறு விவசாயிகளின் முக்கியத்துவத்தை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. உலக உணவு தினம் 2024ஆம் வருடத்தின் கருப்பொருள், ’சிறந்த வாழ்க்கை மற்றும் எதிர்காலத்திற்கான உணவுக்கான உரிமை’. உணவுக்கான உரிமை என்பது ஒவ்வொரு மனிதருக்கும் உண்டு. ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, உலகில் 10 பேரில் ஒருவர் ஊட்டச்சத்துக் குறைபாடு பிரச்னையை எதிர்கொள்கிறார்.  அந்த வகையில் உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுவது மிகவும் தேவையான ஒன்று. 

இந்திய தேசிய குடும்பச் சுகாதார ஆய்வின்படி, தனிநபர் மற்றும் சமூக அளவில் பெண்களின் நிலை, குழந்தைகளின் ஊட்டச்சத்துப் பங்கீட்டில் பாலின வேறுபாடு எந்த அளவில் இருக்கிறது என்று ஆராய்ந்ததில், ஆண்களைவிடப் பெண் குழந்தைகள் கூடுதல் உணவைப் பெறுவது குறைவு என்றும், ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. உலகில் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள  குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியக் குழந்தைகள். வறுமை நிலை, பொருளாதார ஏற்றத் தாழ்வு, கல்வி அறிவின்மை, வேலையில்லாத் திண்டாட்டம், பெண்கள் கர்ப்ப காலத்தில் ஆரோக்கியம் பேணத் தவறுவது போன்ற பல்வேறு காரணங்களால் குழந்தைகள் ஊட்டச்சத்தை இழக்கின்றனர். இந்தியாவில் இன்றுமே வீட்டில் ஆண்பிள்ளைகள் சாப்பிட்ட பின்னரே பெண்கள் சாப்பிடும் வழக்கம் நடந்து வருகிறது. இதனால் ஊட்டச்சத்துப் பங்கீடு சரியான முறையில் நடப்பதில்லை. இதனால் பெண்கள்தான் மிக அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களது வேலைக்கு அங்கீகாரம் எதுவும் வழங்கப்படுவது இல்லை. போதாக்குறைக்குச் சமையலறையில் நாள் முழுவதும் அடைபட்டுக் கிடந்து மூன்று வேளையும் விதவிதமான உணவு வகைகளைச் சமைத்துப் பரிமாறி, பாத்திரங்களை அடுத்த வேளைக்குச் சுத்தம் செய்து, தங்கள் பசி மறக்க வெறும் நீரையோ, ஏடு படிந்த தேநீரையோ மட்டும் அருந்தி வாழ்க்கையை அடுப்படியிலேயே கழித்து விடும் இந்தியப் பெண்களைப் பற்றி இந்த ஆணாதிக்கச் சமூகம் என்றாவது சிந்தித்திருக்கிறதா?. பணிக்குச் சென்றாலும் வீட்டு வேலை அவள் தலையில்தான் என்னும் நிலைமை எப்போது மாறப்போகிறது?. பொதுச் சமையலறை முறையைப் பின்பற்ற நாம் ஏன் இன்னும் தயங்குகிறோம்?. 1931-32 ஆம் ஆண்டுகளிலேயே சோவியத் நாட்டில் பொதுச் சமையலறை முறை வந்துவிட்டது. கிட்டத்தட்ட நூறு வருடங்களாகப் போகிறது, இன்னும் நாம் முதலடியை எடுத்து வைக்கத் தயங்கிக் கொண்டே இருக்கிறோம். ‘பெண்கள் கையிலிருக்கும் கரண்டியைப் பிடுங்கிவிட்டுப் புத்தகம் கொடுத்தால் போதும்’ என்று சொன்ன பெரியார் ‘ஒரு குறிப்பிட்ட பாலினம் ஒருவருடைய வீட்டையும் சமையலையும் பார்த்துக் கொள்வதென்பது வருணாசிரம முறையைக் காட்டிலும் மோசமானது’ என்று குடியரசு இதழில் எழுதினார். ஒரு நூற்றாண்டுக்குப் பிறகும் இந்த வாதத்தின் தேவை இன்னும் இருக்கிறது என்பது எவ்வளவு மோசமான ஒன்று. பொதுச் சமையலறையால்  ஜாதி, மதம், இனம், வர்க்க பேதங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து விடும். இதனால் சமையலறையில் வீணடிக்கப்படும் மனித ஆற்றல் சேமிக்கப்படுகிறது. சில குடும்பங்களில் மூன்றுவேளையும் புதிதாகத்தான் சமைத்துச் சாப்பிடுவார்கள். ஒருவேளை சமைத்த உணவை மறுவேளை உண்ண மாட்டார்கள். அந்தக் குடும்பங்களில் பெண்கள் சமையலறையைத் தாண்டிய ஓர் உலகத்தையே கண்டிருக்க மாட்டார்கள். இது எத்தனை பெரிய கொடுமை!

நம் இந்தியத் திருமணங்களில் விருந்தோம்பல் என்கிற பெயரில் எக்கச்சக்க உணவு வகைகள் வீணடிக்கப்படுகின்ற அதே வேளையில் எத்தனை பசித்த வயிறுகள் ஒரு கவளம் சோற்றுக்கு ஏங்கிக் கிடக்கின்றன என்று நாம் எப்போதாவது எண்ணியிருக்கிறோமா?. ஒருங்கி‌ணைந்த தேசிய மேம்பாட்டுத்திட்ட அமைப்பின் ஆய்வின்படி இந்தியாவில் தயாரிக்கப்படும் உணவு பொருட்களில் 40% குப்பைகளில் கொட்டப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே உணவை வீணாக்குவதில் இந்தியர்கள்தாம் முதலிடம் வகிக்கின்றனர். இந்தியாவில் வீணடிக்கப்படும் உணவின் அளவு என்பது ஒட்டு மொத்த இங்கிலாந்து நாட்டின் உணவு அளவுக்குச் சமமானது என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. சரியான பராமரிப்பு இல்லாததால் ஆண்டு தோறும் 21 மில்லியன் டன் கோதுமை இந்தியாவில் வீணாகிறது என்றும், உணவு வீணடிப்பால் அரசுக்கு ஆண்டு தோறும் 96 ஆயிரம் கோடி ரூபாய் வீணாகிறது எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உணவு வீணடிக்கப்படுவதால் 300 மில்லியன் பேரல் எண்ணெய் காரணமே இல்லாமல் வீணாகிறது. உணவு வீணடித்தல் என்பது தண்ணீர், இயற்கை, சமூக சீரழிவுகளுக்கும் வழிவகுக்கும். பசி என்பது யாராலும் தாங்கிக் கொள்ள இயலாத விஷயம். பசியின் கொடுமையை அனுபவித்தவர்களே புரிந்து கொள்ள இயலும். 2018ஆம் ஆண்டு கேரள மாநிலம் அட்டப்பாடியில் வசித்து வந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட மது என்கிற இளைஞர் பசிக்கு அனுமதியின்றி உணவை எடுத்துச் சாப்பிட்டதாகச் சொல்லி சிலபேர் அவரை அடித்தே கொன்றனர். ஒரு பசித்த வயிற்றின் அவலக் குரல் அன்று தேசமெங்கும் ஒலித்தது. 

எனக்குத் தெரிந்த ஒருவர் வீட்டுக்கு ஒருமுறை சென்றிருந்த போது, தாயுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த அவரது குழந்தை பாதி சாப்பாட்டில் தட்டிலேயே கை கழுவியது. இது வழக்கமாக நடப்பதுதான் என்று அவர் கூறினார். அதனால்தான் சாப்பிடும்போது குழந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது இல்லையென்றும் அவர் சொன்னார். நான் குழந்தையை அழைத்து தட்டிலேயே கை கழுவியதன் காரணத்தைக் கேட்டேன். அந்தக் குழந்தை பார்த்த சினிமாவில் கோபத்துடன் இருப்பவர்கள் தட்டைச் சோற்றுடன் வீசியெறிவதையும், தட்டிலேயே கை கழுவுவதையும் பார்த்ததன் பாதிப்புதான் இது என்று புரிந்தது. என்னால் இயன்ற அளவு உணவின் முக்கியத்துவத்தையும், உணவை வீணாக்கக் கூடாதென்றும், பட்டினி கிடக்கும் குழந்தைகள் குறித்தும் அந்தக் குழந்தைக்குச் சொல்லி வந்தேன். 

இப்போதெல்லாம் திருமண விருந்தை எளிமையாகச் செய்பவர்களை யாரும் மதிப்பதில்லை. ஆடம்பரத்துக்காக ஏராளமான உணவு வகைகளைச் சமைத்து, சாப்பிடுபவர்கள் அங்கலாய்ப்புக்கென்று எல்லாவற்றையும் வாங்கி, சாப்பிடவும் முடியாமல் அப்படியே குப்பையில் எறிந்து வீணாக்குகின்றனர். அல்லது சாப்பிட்டு விட்டு உடல்நலனைக் கெடுத்துக் கொள்கின்றனர். உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு மட்டுமல்ல, ஆடவர்க்கும் அழகுதான். 

பகிர்ந்துண்டு பல்லுயிர் ஓம்புதலை இன்று முறையாகப் பின்பற்றாததால்தான் ஓர் இடத்தில் மிதமிஞ்சிய உணவு நிறைந்து வழிகிறது. இன்னோர் இடத்தில் பஞ்சம் நிலவுகிறது. நாளொன்றுக்கு இருபத்தி இரண்டாயிரம் குழந்தைகள் பட்டினியால் இறந்து போகின்றார்கள் என்கிறது யுனிசெப் புள்ளிவிபரம். 

ஆரோக்கியமான உணவு முறை என்பது மறைந்து வண்ணமயமான உணவு வகைகள் முன்னிலை வகிக்கின்றன. ஒரு சிறு அரிசியானது எவ்வளவு தடைகளைத் தாண்டி வெந்து சோறாகி நம் தட்டில் விழுகிறது. அதைக் கீழே சிந்தாமல் சாப்பிட வேண்டும். அதுதான் அந்த உணவுக்கு நாம் கொடுக்கும் மரியாதை. ஒரே நாளில் அனைவரின் பசிக்கொடுமையையும் நாம் போக்கிவிட இயலாது. நாம் ஒவ்வொரு நாளும் சாப்பிடும்போதும் பசியால் இருக்கும் ஒரு உயிருக்காவது உணவளிப்போம்.

உணவை வீணாக்காமல் இருக்க குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்போம். தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திட வேண்டாம். அவர்களது பசியைப் போக்கிட உடனடி உதவியும், இயன்றால் நிரந்தர உதவியும் செய்தல் ஒவ்வொருவரின் கடமையும் கூட. 

படைப்பாளர்:

கனலி என்கிற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ , ’இளமை திரும்புதே’ ஆகிய நூல்களாக வெளிவந்திருக்கின்றன.

Exit mobile version